என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • இந்த ஏவுகணை நாட்டில் இருப்பதிலேயே சக்திவாய்ந்தது என அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்தது.
    • நீண்ட தூர பயண ஏவுகணைகள், டிரோன் ஏவுதள வாகனங்கள் மற்றும் பிற தரையிலிருந்து வான் மற்றும் தரையிலிருந்து தரைக்கு ஏவுகணைகளும் அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்பட்டன.

    வடகொரியத் அதிபர் கிம் ஜாங் உன், தனது ஆயுதக் களஞ்சியத்தில் உள்ள மிகவும் சக்திவாய்ந்த ஆயுதத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.

    ஆளும் தொழிலாளர் கட்சியின் 80வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் நேற்று இரவு பியோங்யாங்கில் நடைபெற்ற பெரிய அளவிலான இராணுவ அணிவகுப்பின் போது இந்த ஆயுதக் காட்சி நடந்தது.

    இந்த நிகழ்வில் சீனா பிரதமர் லி கெகியாங், ரஷிய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவர் டிமிட்ரி மெட்வெடேவ், மற்றும் வியட்நாமியத் தலைவர் டோ லாம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    இந்த இராணுவ அணிவகுப்பில் வடகொரியா 'ஹ்வாசொங்-20' எனப்படும் அதன் சமீபத்திய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை காட்சிப்படுத்தியது. இந்த ஏவுகணை நாட்டில் இருப்பதிலேயே சக்திவாய்ந்தது என அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்தது. 

    இந்த ஏவுகணையுடன், நீண்ட தூர பயண ஏவுகணைகள், டிரோன் ஏவுதள வாகனங்கள் மற்றும் பிற தரையிலிருந்து வான் மற்றும் தரையிலிருந்து தரைக்கு ஏவுகணைகளும் அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்பட்டன.

    நிகழ்வில் பேசிய கிம் ஜாங் உன், உக்ரைனில் ரஷியாவின் பக்கம் போராடும் வட கொரிய வீரர்களை மறைமுகமாகப் பாராட்டும் வகையில், சர்வதேச நீதிக்காக வெளிநாட்டுப் போர்க்களங்களில் தனது படைகளின் வீரமிக்க போராட்ட உணர்வு அற்புதமானது என்று கூறினார்.

    ரஷியாவுக்காக போராடி சுமார் 600 வட கொரிய வீரர்கள் இறந்துள்ளதாகவும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் தென் கொரியா அண்மையில் மதிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.    

    • கலைமாமணி விருது பெற்ற அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
    • நலிந்த கலைஞர்களுக்கு மாந்தோறும் ரூ.3000 உதவித் தொகை வழங்கி வருகிறோம்.

    சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் கலைமாமணி விருது வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தலைசிறந்த காலைஞர்களுக்கு விருது வழங்கி பாராட்டக்கூடிய வாய்ப்பு பெற்றமைக்கு மகிழ்ச்சி அடைகிறேன்.

    3 ஆண்டுகளுக்கும் சேர்த்து கலைமாமணி விருது வழங்கியதில் எனக்கும் பெருமை. கலைமாமணி விருது பெற்ற அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    கலைமாமணி விருது பெற்ற நலிந்த கலைஞர்களுக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கப்படும். நலிந்த கலைஞர்களுக்கு மாந்தோறும் ரூ.3000 உதவித் தொகை வழங்கி வருகிறோம்.

    ராக்கெட் வேகத்தில் ஒரே நாளில் 2 முறை ஏறுகிறது தங்கம் விலை. தங்கப் பதக்கத்தை விட கலைமாமணி என புகழ் சேர்க்கும் பட்டத்திற்குதான் மதிப்பு அதிகம். ஏனென்றால் இது தமிழ்நாடு தருகிற பட்டம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அவரது தனிப்பட்ட மருத்துவர் டாக்டர் சீன் பார்பபெல்லா, வெள்ளை மாளிகைக்கு அறிக்கை சமர்ப்பித்தார்.
    • இதய வயது, அவரது உண்மையான வயதை விட 14 வயது இளமையானது

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் உடல்நிலை குறித்து வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.

    டிரம்ப் மேரிலாந்தில் உள்ள வால்டர் ரீட் தேசிய இராணுவ மருத்துவ மையத்தில் சுகாதார பரிசோதனை செய்து கொண்டார்.

    இந்த பரிசோதனைகளுக்குப் பிறகு, அவரது தனிப்பட்ட மருத்துவர் டாக்டர் சீன் பார்பபெல்லா, வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட்டிடம் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தார்.

    அந்த அறிக்கையில், "அதிபர் டிரம்ப் சிறந்த ஆரோக்கியத்துடன் இருக்கிறார். அவரது இதயம், நுரையீரல், நரம்பு மண்டலம் மற்றும் உடல் செயல்பாடு மிகவும் வலுவாக உள்ளன. ECG சோதனைகளின் அடிப்படையில் மதிப்பிடப்பட்ட இதய வயது, அவரது உண்மையான வயதை விட 14 வயது இளமையானது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதாவது டிரம்ப்பின் உண்மையான வயது 79, ஆனால் அவரது இதயத்தின் வயது 65 என கூறப்பட்டுள்ளது.

    அமெரிக்க அதிபர் பதவியை ஏற்ற வயதான நபர் என்ற சாதனையையும் டிரம்ப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    கடந்த ஆண்டு ஜூலை மாதம், டிரம்பின் கால்கள் வீங்கி, கைகளில் காயங்களுடன் காணப்பட்டபோது அவரது உடல்நிலை குறித்து சில கவலைகள் இருந்தன. இருப்பினும், 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பொதுவாகக் காணப்படும் நாள்பட்ட பிரச்சனையால் கால்கள் வீங்கியிருப்பதாக அப்போது மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.    

    • எனது பயிற்சி காலத்தில் அதை ஒருபோதும் மறக்க முடியாது .
    • அதை நான் மறந்துவிடக் கூடாது. இதை நான் வீரர்களிடமும் சொல்லியிருக்கிறேன்.

    இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் கவுதம் கம்பிர், நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 0-3 எனத் தொடரை இழந்ததை ஒருபோதும் மறக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

    12 வருடத்திற்குப் பிறகு சொந்த மண்ணில் இந்தியா படுதோல்வி அடைந்தது. கம்பிர் தலைமையில் இந்தியா விளையாடிய முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும்.

    இது தொடர்பாக கவுதம் கம்பிர் கூறியதாவது:-

    நான் நேர்மையாகவும் மனதாரவும் பேச வேண்டுமென்றால், எனது பயிற்சி காலத்தில் அதை ஒருபோதும் மறக்க முடியாது என்று நான் நினைக்கிறேன். அதை நான் மறந்துவிடக் கூடாது. இதை நான் வீரர்களிடமும் சொல்லியிருக்கிறேன். முன்னோனக்கி செல்வதற்கு இது முக்கியம், அதேவேளையில் சில சமயங்களில் கடந்த காலத்தையும் நினைவில் கொள்வது முக்கியம்.

    எல்லோரும் நியூசிலாந்தை வீழ்த்துவோம் என்று நினைத்தார்கள். அந்த டிரஸ்ஸிங் அறையில், நியூசிலாந்து நம்மை தோற்கடித்தது என்பதை தொடர்ந்து நினைவூட்ட வேண்டும்.

    இவ்வாறு கம்பிர் தெரிவித்துள்ளார்.

    • வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஒரு லாரியைப் பயிற்சிப் பள்ளியின் பிரதான வாயிலில் மோதச் செய்து குண்டுவெடிப்பை ஏற்படுத்தியது.
    • ஐந்து மணி நேர சண்டைக்குப் பிறகு, ஆறு பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் காவல் பயிற்சிப் பள்ளியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

    அங்கு, டேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் உள்ள ரட்டா குலாச்சி காவல் பயிற்சிப் பள்ளியில் நேற்று நள்ளிரவு ஒரு பயங்கரவாதிகள் குழு, வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஒரு லாரியைப் பயிற்சிப் பள்ளியின் பிரதான வாயிலில் மோதச் செய்து குண்டுவெடிப்பை ஏற்படுத்தியது.

    இதன்பின் பயங்கரவாதிகள் வளாகத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஐந்து மணி நேர சண்டைக்குப் பிறகு, ஆறு பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    இந்தத் தாக்குதலில் ஏழு காவல் துறையினரும் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்தனர் என அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

    மேலும் பயிற்சி மையத்தில் இருந்த சுமார் 200 பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.   

    • இந்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தமிழக வெற்றிக்கழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
    • இந்த விவகாரம் தொடர்பாக தவெக, பாஜக வழக்கறிஞர் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மனுதாக்கல் செய்தனர்.

    கரூரில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

    இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தமிழக வெற்றிக்கழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி, கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை குழு அமைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மேலும் சிபிஐ விசாரணை கோரியும் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தவெக, பாஜக வழக்கறிஞர் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்த மனுக்கள் மீது திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. திங்கள்கிழமை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.    

    • மாதம்தோறும் வரும் வளர்பிறை மற்றும் தேய்பிறை ஆகிய இரு சஷ்டி திதிகளிலும் விரதம் இருக்கலாம்.
    • வீட்டில் வேல் இருந்தால் முருக வேலுக்கு பால் அபிஷேகம் அல்லது திருநீறு அபிஷேகம் செய்து மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.

    முருகப்பெருமானின் அருளைப் பெற அனைவரும் கடைபிடிக்கும் விரதம் தான் சஷ்டி விரதம். பெரும்பாலான முருக பக்தர்கள் கந்தசஷ்டி காலத்தில் மட்டுமின்றி மாதம்தோறும் வரும் சஷ்டியிலும் மனதார விரதமிருந்து முருகனுடைய அருளைப் பெறுவார்கள்.

    சஷ்டி விரதம் என்றாலே குழந்தை வரம் வேண்டுபவர்கள் தான் இருப்பார்கள் என சொல்வார்கள். ஆனால் அது உண்மையல்ல. உடல்நல பாதிப்பு, தொழில் பாதிப்பு, திருமணத் தடை என எந்தவித பிரச்சனையாக இருந்தாலும் சரி, சஷ்டி விரதமிருந்து மனமுருகி அந்த வேலவனை நினைத்தாலே எல்லாவற்றையும் அவன் தீர்த்து வைப்பான் என்பது பக்தர்களின் அனுபவப்பூர்வமான உண்மை.

    மாதம்தோறும் வரும் சஷ்டி விரதம் எவ்வாறு மேற்கொள்ளலாம் என பார்க்கலாம்.

    * மாதம்தோறும் வரும் வளர்பிறை மற்றும் தேய்பிறை ஆகிய இரு சஷ்டி திதிகளிலும் விரதம் இருக்கலாம்.

    * நாளை தேய்பிறை சஷ்டி விரதம். அதிகாலையில் எழுந்து நீராடி, ஐயன் முருகப்பெருமானின் திருவுருவப் படத்தை மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.

    * வீட்டில் வேல் இருந்தால் முருக வேலுக்கு பால் அபிஷேகம் அல்லது திருநீறு அபிஷேகம் செய்து மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.

    * கந்த சஸ்டி கவசம், முருகப் பெருமானுக்குரிய மந்திரங்கள், கந்தபுராணத்தை கேட்பது அல்லது முருகனைப் போற்றும் பாடல்களைப்பாடி, விளக்கேற்றி மனமுருகி வழிபட  வேண்டும்.

    * விரதம் இருக்க முடிந்தவர்கள் நாள் முழுவதும் உண்ணாமல் விரதம் இருக்கலாம். முடியாதவர்கள் பால், பழம் மட்டும் சாப்பிடலாம்.

    * சஷ்டி விரதம் இருக்கும் போது அன்றைய நாள் முழுவதும் முருகப்பெருமானின் பக்திப் பாடல்களைப் பாடுவதும், கேட்பதும் மனநிறைவைத் தரும்.

    * சஷ்டி நாட்களில் முடிந்தவர்கள் அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று முருகனை வழிபட்டு, அன்னதானம் அல்லது தங்களால் முடிந்த உதவியை மற்றவர்களுக்கு செய்யலாம்.



    குறிப்பாக முருகப்பெருமானின் அருள் வேண்டி நிற்கும் அனைத்து பக்தர்களும் சஷ்டி விரதம் மேற்கொள்ளலாம்.

    இப்படி மாதம்தோறும் வரும் சஷ்டி நாட்களில் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் நிச்சயமாக வாழ்வில் அமைதியும், வளமும் நிலைத்து நிற்கும். 

    • கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் சேதமடைந்தன.
    • மருத்துவமனைகளும் கடுமையான சேதம் அடைந்துள்ளன.

    மெக்சிகோவின் மத்திய மற்றும் தென்கிழக்கு மாநிலங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் வீடுகள் மற்றும் மருத்துவமனைகள் கடுமையான சேதம் அடைந்தன. இந்த கனமழைக்கு 28 பேர் உயிரிழந்தனர்.

    மக்கள் வசிக்கும் தெருக்கள் ஆறாக மாறி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. வீடுகள் மூழ்கின.

    மத்திய மாநிலமான ஹிடால்கோ கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. இந்த மாநிலத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவால் குறைந்தது ஆயிரம் வீடுகள், 59 மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள், 308 பள்ளிகள் சேதம் அடைந்தன். 17 மாநிலங்களைச் சேர்ந்த 84 நகராட்சிகள் மின்சாரம் இல்லாமல் இருட்டில் மூழ்கின.

    பியூப்லா மாநிலத்தில் 9 பேர் உயிரிழந்த நிலையில், 13 பேரை காணவில்லை. கனமழையால் சுமார் 80 ஆயிரம் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவு காரணமாக கியாஸ் பைப்லைன் உடைந்து சேதம் ஏற்பட்டது.

    மீட்புப் பணிக்கான 8700 ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

    வெனிசுலாவில் இரண்டு பேர் உயிரிழந்தனர். 5 ஆயிரம் வீடுகள் சேதடைந்துள்ளது. கடற்படை 900 மக்களை வெளியேற்றி, முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    • இதற்கு ஈடாக இஸ்ரேல் 250 பாலஸ்தீனக் கைதிகளையும், காசாவிலிருந்து சிறை பிடிக்கப்பட்ட சுமார் 1,700 பேரையும் விடுவிக்கத் திட்டமிட்டுள்ளது.
    • ஃபதா (Fatah) என்ற இயக்கத்தை நடத்தி வந்த பர்குத்தி பாலஸ்தீனத்தில் அதிபர் மஹ்மூத் அப்பாஸுக்குப் பிறகு தலைமை ஏற்கத் தகுதி வாய்ந்தவராக கருதப்படுகிறார்.

    காசாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததையடுத்து, ஹமாஸ் அமைப்பு சுமார் 20 இஸ்ரேலியப் பணயக்கைதிகளை விடுவிக்க உள்ளது. இதற்கு ஈடாக இஸ்ரேல் 250 பாலஸ்தீனக் கைதிகளையும், காசாவிலிருந்து சிறை பிடிக்கப்பட்ட சுமார் 1,700 பேரையும் விடுவிக்கத் திட்டமிட்டுள்ளது. வரும் திங்கள்கிழமை இந்த செயல்முறை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் பாலஸ்தீனர்களிடையே அதிக செல்வாக்கு கொண்ட தலைவராக கருதப்படும் மர்வான் பர்கௌதி (Marwan Barghouti), இஸ்ரேல் விடுவிக்கவுள்ள கைதிகள் பட்டியலில் இடம்பெறாதது பேசுபொருளாகி உள்ளது.

    பர்கௌதி உட்பட முக்கியமான உயர்நிலைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் வலியுறுத்தி வருவதாகவும், இதுதொடர்பாக மத்தியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை தொடர்வதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

     ஃபதா (Fatah) என்ற இயக்கத்தை நடத்தி வந்த பர்கௌதி பாலஸ்தீனத்தில் அதிபர் மஹ்மூத் அப்பாஸுக்குப் பிறகு தலைமை ஏற்கத் தகுதி வாய்ந்தவராக கருதப்படுகிறார். இவர் பால்ஸ்தீனத்தின் நெல்சன் மண்டேலா என்று கருதப்படுகிறார். 

    தென்னாப்பிரிக்க இனவெறி ஆட்சிக்கு எதிராகப் போராடிய நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறையில் இருந்தார்.

    இதேபோல், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடிய மர்வான் பர்கௌதி 2002 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, கடந்த 23 ஆண்டுகளாக ஐந்து ஆயுள் தண்டனைகளுடன் இஸ்ரேலியச் சிறையில் உள்ளார்.

    பாலஸ்தீனக் குழுக்களின் அரசியல் பிளவுகளைத் தாண்டி, அனைத்துத் தரப்பு மக்களிடமும் மிகப்பெரிய செல்வாக்கையும் ஆதரவையும் பர்கௌதி பெற்றுள்ளார்

    பர்கௌதியை விடுதலை செய்தால் பாலஸ்தீனத்தில் குறிப்பிடத்தக்க தலைமையாக அவர் மாறக்கூடும் என்று இஸ்ரேல் அஞ்சுகிறது என்றும் கூறப்படுகிறது. 

    • வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக அதனேஸ் 41 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
    • இந்திய தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டும் குல்தீப் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    புதுடெல்லி:

    இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று தொடங்கியது.

    முதலில் விளையாடிய இந்தியா நேற்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 318 ரன் எடுத்து இருந்தது. ஜெய்ஸ்வால் 173 ரன்னுடனும், கேப்டன் சுப்மன் கில் 20 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை இழந்து 518 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 175, கில் 129 ரன்கள் குவித்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜோமல் வாரிக்கன் 3 விக்கெட்டுகளையும் ரோஸ்டன் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

    இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. அணியின் தொடக்க வீரர்களாக ஜான் கேம்பல் மற்றும் சந்தர்பால் களமிறங்கினார். இவர்கள் இருவரும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு விளையாடினர்.

    இதனை தொடர்ந்து 7-வது ஓவரில் சுழற்பந்து வீச்சை களமிறக்கினார் சுப்மன் கில். அந்த ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விளாசிய கேம்பல் 2-வது பந்தில் சாய் சுதர்சனின் அருமையான கேட்ச் மூலம் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 21 ரன்கள் சேர்த்தது.

    அடுத்து வந்த அலிக் அதனேஸ் மற்றும் சந்தர்பால் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய அணி திணறியது. 7-வது ஓவரில் முதல் விக்கெட்டை வீழ்த்திய இந்திய அணி, 2-வது விக்கெட்டை 28-வது ஓவரில் வீழ்த்தியது.

    ஜடேஜா பந்து வீச்சில் சந்தர்பால் 37 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதனை தொடர்ந்து அதனேஸ் 41 ரன்னில் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ரோஸ்டன் வந்த வேகத்தில் டக் அவுட் முறையில் வெளியேறினார்.

    இதனையடுத்து ஜோடி சேர்ந்த சாய் ஹோப்- டெவின் இம்லாக் விக்கெட் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தினர். இதனால் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டும் குல்தீப் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • சில அதிமுக தொண்டர்கள் த.வெ.க. கொடியை பிடித்திருந்தனர் எனச் சொன்னது மற்றும் சரியானது.
    • விஜய் முதல்வராக விரும்புகிறார் என்பதால் த.வெ.க. தொண்டர்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள்.

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் த.வெ.க. கொடி பறந்ததை சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டு உள்ளதாக பேசினார்.

    இதையடுத்து கூட்டத்தில் த.வெ.க. கொடிகளை வைத்திருந்தவர்கள் த.வெ.க.வினர் இல்லை. அ.தி.மு.க. இளைஞர்கள் என தெரியவந்தது. எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் அ.தி.மு.க. டி-ஷர்ட் அணிந்தபடி த.வெ.க. கொடியை இளைஞர்கள் அசைத்துள்ளனர்.

    அந்த இளைஞர்களைப் பார்த்து "கொடி பறக்குது பாருங்க.. பிள்ளையார் சுழி போட்டுட்டாங்க" என இ.பி.எஸ். பேசினார் என்பது தெரிய வந்தது.

    இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் "தன் கட்சி தொண்டர்களை வைத்தே த.வெ.க. கொடியை தூக்கிப் பிடிக்க வைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. இதில் இருந்தே தெரிகிறது விஜயின் தலைமையை ஏற்று கூட்டணிக்கு செல்ல எடப்பாடி பழனிசாமி தயாராகி விட்டார். அந்த அளவிற்கு அ.தி.மு.க. பலவீனமாகி விட்டது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறார். த.வெ.க. தலைவர் விஜய் கூட்டணி வருவார் என்றால் பா.ஜ.க.வை எடப்பாடி பழனிசாமி கழற்றி விடுவார். எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கவா விஜய் கட்சி தொடங்கி உள்ளார். அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி தற்போது பலமிழந்து காணப்படுகிறது. இந்த கூட்டணி வரும் தேர்தலில் 15 சதவீத வாக்குகளை மட்டுமே பெறும்" என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

    இந்த நிலையில் த.வெ.க. கொடி, எடப்பாடி பழனிசாமி பிரசார கூட்டத்தில் பறந்து தொடர்பாக டி.டி.வி. தினகரன் விமர்சித்தது குறித்து திமுக nசய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு இளங்கோவன் பதில் அளிக்கையில் "அவர் என்ன நினைக்கிறார் என்று எனக்குத் தெரியாது. ஆனால், சில அதிமுக தொண்டர்கள் த.வெ.க. கொடியை பிடித்திருந்தனர் எனச் சொன்னது மற்றும் சரியானது. அவர்கள் தவெக தொண்டர்கள் இல்லை.

    அவர்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள். ஏனென்றால், விஜய் முதல்வராக விரும்புகிறார் என்று சொல்கிறார். ஆகவே, எடப்பாடி பழனிசாமி இந்த கண்டிசனை ஏற்பாரா?. அவர் விஜயை முதலமைச்சராக்குவாரா?" என்றார்.

    • தங்கம் விலை காலை, மாலை என இரு வேளையும் உயர்ந்து வருகிறது.
    • காலை சவரனுக்கு 680 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.91,400-க்கும் விற்பனையானது.

    தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற-இறக்கத்தில் காணப்படுகிறது. அதிலும் கடந்த சில நாட்களாக தினமும் காலை மற்றும் பிற்பகலில் தங்கம் விலையில் மாற்றம் இருந்து வருகிறது. இதனால் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வந்தது. கடந்த 2 நாட்களாக விலை அதிகரித்து ஒரு சவரன் ரூ.91 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சியை கொடுத்து இருந்தது.

    இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.92,000க்கு விற்பனையாகிறது.

    இன்று காலை கிராமுக்கு 85 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 11,425 ரூபாய்க்கும் சவரனுக்கு 680 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.91,400-க்கும் விற்பனையானது.

    இந்நிலையில், இன்று மாலை ஒரு கிராம் தங்கம் விலை ரூ.75 அதிகரித்து, கிராம் ரூ.11,500க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.600 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.92,000க்கு விற்பனையாகிறது.

    இன்று காலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்த நிலையில் தற்போது மேலும், ரூ.600 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×