என் மலர்
வழிபாடு

நாளை தேய்பிறை சஷ்டி -விரத முறையும் பலனும்..!
- மாதம்தோறும் வரும் வளர்பிறை மற்றும் தேய்பிறை ஆகிய இரு சஷ்டி திதிகளிலும் விரதம் இருக்கலாம்.
- வீட்டில் வேல் இருந்தால் முருக வேலுக்கு பால் அபிஷேகம் அல்லது திருநீறு அபிஷேகம் செய்து மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.
முருகப்பெருமானின் அருளைப் பெற அனைவரும் கடைபிடிக்கும் விரதம் தான் சஷ்டி விரதம். பெரும்பாலான முருக பக்தர்கள் கந்தசஷ்டி காலத்தில் மட்டுமின்றி மாதம்தோறும் வரும் சஷ்டியிலும் மனதார விரதமிருந்து முருகனுடைய அருளைப் பெறுவார்கள்.
சஷ்டி விரதம் என்றாலே குழந்தை வரம் வேண்டுபவர்கள் தான் இருப்பார்கள் என சொல்வார்கள். ஆனால் அது உண்மையல்ல. உடல்நல பாதிப்பு, தொழில் பாதிப்பு, திருமணத் தடை என எந்தவித பிரச்சனையாக இருந்தாலும் சரி, சஷ்டி விரதமிருந்து மனமுருகி அந்த வேலவனை நினைத்தாலே எல்லாவற்றையும் அவன் தீர்த்து வைப்பான் என்பது பக்தர்களின் அனுபவப்பூர்வமான உண்மை.
மாதம்தோறும் வரும் சஷ்டி விரதம் எவ்வாறு மேற்கொள்ளலாம் என பார்க்கலாம்.
* மாதம்தோறும் வரும் வளர்பிறை மற்றும் தேய்பிறை ஆகிய இரு சஷ்டி திதிகளிலும் விரதம் இருக்கலாம்.
* நாளை தேய்பிறை சஷ்டி விரதம். அதிகாலையில் எழுந்து நீராடி, ஐயன் முருகப்பெருமானின் திருவுருவப் படத்தை மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.
* வீட்டில் வேல் இருந்தால் முருக வேலுக்கு பால் அபிஷேகம் அல்லது திருநீறு அபிஷேகம் செய்து மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.
* கந்த சஸ்டி கவசம், முருகப் பெருமானுக்குரிய மந்திரங்கள், கந்தபுராணத்தை கேட்பது அல்லது முருகனைப் போற்றும் பாடல்களைப்பாடி, விளக்கேற்றி மனமுருகி வழிபட வேண்டும்.
* விரதம் இருக்க முடிந்தவர்கள் நாள் முழுவதும் உண்ணாமல் விரதம் இருக்கலாம். முடியாதவர்கள் பால், பழம் மட்டும் சாப்பிடலாம்.
* சஷ்டி விரதம் இருக்கும் போது அன்றைய நாள் முழுவதும் முருகப்பெருமானின் பக்திப் பாடல்களைப் பாடுவதும், கேட்பதும் மனநிறைவைத் தரும்.
* சஷ்டி நாட்களில் முடிந்தவர்கள் அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று முருகனை வழிபட்டு, அன்னதானம் அல்லது தங்களால் முடிந்த உதவியை மற்றவர்களுக்கு செய்யலாம்.
குறிப்பாக முருகப்பெருமானின் அருள் வேண்டி நிற்கும் அனைத்து பக்தர்களும் சஷ்டி விரதம் மேற்கொள்ளலாம்.
இப்படி மாதம்தோறும் வரும் சஷ்டி நாட்களில் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் நிச்சயமாக வாழ்வில் அமைதியும், வளமும் நிலைத்து நிற்கும்.






