என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • ஹரிஷ் கல்யாண் தற்போது டீசல் என்ற படத்தில் நடித்துள்ளார்.
    • இந்தப் படத்தின் முதல் பாடல் 'பீர் சாங்' ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

    'பார்க்கிங்', 'லப்பர் பந்து' என தனது அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வருபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். துவக்கம் முதலே வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வரும் ஹரிஷ் கல்யாண் தற்போது டீசல் என்ற படத்தில் நடித்துள்ளார்.

    இந்தப் படத்தின் முதல் பாடல் 'பீர் சாங்' ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், இந்தப் பாடல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. ஹரிஷ் கல்யாண் திரைப்பயணத்தில் அதிக பட்ஜெட்டில் உருவான படம் 'டீசல்' என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தப் படத்தின் முதல் பாடலை தொடர்ந்து இரண்டாவது பாடலான தில்லுபரு ஆஜா படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. இப்பாடலை நடிகர் சிலம்பரசன் மற்றும் ஸ்வேதா மோகன் பாடியுள்ளார். இப்பாடல் மிகவும் வைபாகவும் குத்து பாடலாக அமைந்துள்ளது. இப்பாடலின் வரிகளை ரோகேஷ் மற்றும் ஜிகேபி எழுதியுள்ளனர்.

    டீசல் திரைப்படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ளார். சான் லோகேஷ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தமிழ்நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும் கஞ்சா வணிகம் தடையின்றி நடைபெறுகிறது.
    • நாளுக்கு நாள் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை.

    கோவையில் தனியார் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் 7 பேர் சேர்ந்து 17 வயது சிறுமியை விடுதி அறைக்கு வரவழைத்து, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் பெருகி வருவதும், அதைத் தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்காததும் கடுமையாக கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    கோவையில் தனியார் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் 7 பேர் சேர்ந்து 17 வயது சிறுமியை விடுதி அறைக்கு வரவழைத்து, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர் என்று வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் பெருகி வருவதும், அதைத் தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்காததும் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும் கஞ்சா வணிகம் தடையின்றி நடைபெறுகிறது. கஞ்சா உள்ளிட்ட அனைத்துப் போதைப் பொருட்களுக்கும் அடிமையாகிவிட்ட இளைய சமுதாயம், கொடூரமான குற்றங்களைக்கூட எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் மிகவும் சாதாரணமாக செய்யும் மனநிலைக்கு வந்திருக்கிறது. இன்னொருபுறம் தமிழ்நாட்டில் எந்தக் குற்றங்களை வேண்டுமானாலும் செய்துவிட்டு, தண்டனையில்லாமல் தப்பித்துக்கொள்ளலாம் என்ற நிலை உருவாகியிருக்கிறது. இந்தச் சூழல் தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகுவதற்குக் காரணமாகும். தமிழக அரசு, காவல்துறை ஆகியவற்றின் தோல்வியையே இக்கொடிய நிகழ்வு காட்டுகிறது.

    தமிழ்நாட்டில் குற்றங்கள் பெருகுவதற்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம்தான் காரணம் என்பதால், அதன் புழக்கத்தைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக நான் வலியுறுத்தி வருகிறேன். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நான் நேரில் சந்தித்தும் இதை வலியுறுத்தியுள்ளேன். ஆனால், நாளுக்கு நாள் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை.

    தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகிவரும் வேகத்தைப் பார்த்தால், பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியுமா? பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் குழந்தைகளை அச்சமின்றி அனுப்பி வைக்க முடியுமா? என்ற ஐயம் எழுகிறது. மக்கள் மத்தியில் நிலவும் இந்த ஐயமும், அச்சமும் போக்கப்படவில்லை என்றால், பெண் கல்வி பாதிக்கப்படுவது உட்பட மோசமான விளைவுகள் ஏற்படும். அத்தகைய விளைவுகள் ஏற்படுவதை தடுக்க வேண்டியது காவல்துறையின் கடமை ஆகும்.

    கோவையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் கஞ்சா விற்பனை நடைபெறவில்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். காவல்துறையில் உள்ள போதைப் பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவை வலுப்படுத்தி, போதைப் பொருள் நடமாட்டத்தை ஒழிக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அறிக்கையில் அன்புமணி தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • எல் சால்வடோர், பனாமா, குவாத்தமாலா, ஆகிய மத்திய அமெரிக்க நாடுகள் அறிவித்துள்ளன.
    • அமெரிக்க அரசாங்கம் முழுமையாக ஏற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவில் ஆவணமில்லாமல் தங்கியிருக்கும் பிற நாட்டவர்களை வெளியேற்றும் பணியில் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். நாடு கடத்தல் உத்தரவை ஏற்க அடிபணியாத நாடுகள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    இதற்கிடையில் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படுபவர்கள் எந்த நாட்டவராக இருந்தாலும் தாங்கள் ஏற்றுக்கொள்வதாக லத்தீன் அமெரிக்க நாடான எல் சால்வடோர், பனாமா, குவாத்தமாலா, ஆகிய மத்திய அமெரிக்க நாடுகள் அறிவித்துள்ளன.

    இதனைத் தொடர்ந்து மற்றொரு மத்திய அமெரிக்க நாடான கோஸ்டா ரிகா, நாடு கடத்தப்படும் எந்த நாட்டை சேர்ந்தவர்களையும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக அந்நாட்டு அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டவிரோதமாக குடியேறியவைகளை நாடு கடத்துவதில் அமெரிக்காவுடன் ஒத்துழைக்க கோஸ்டாரிகா அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.

    இவர்கள் மத்திய ஆசியா மற்றும் இந்தியாவிலிருந்து வருபவர்கள் நாடுகடத்தப்பட்டவர்களின் முதல் குழு புதன்கிழமை கோஸ்டாரிகாவில் ஒரு வணிக விமானத்தில் வந்து சேரும். அங்கு அவர்கள் பனாமா எல்லைக்கு அருகிலுள்ள ஒரு தற்காலிக புலம்பெயர்ந்தோர் பராமரிப்பு மையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

    பின்னர் புலம்பெயர்ந்தோர் தங்கள் சொந்த நாடுகளுக்கு நாங்கள் அனுப்பி வைப்போம். இந்த செயல்முறைக்கான செலவுகளை சர்வதேச புலம்பெயர்வு அமைப்பின் (IOM) மேற்பார்வையின் கீழ் அமெரிக்க அரசாங்கம் முழுமையாக ஏற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் மற்றும் சாலையில் சென்ற ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
    • நல்வாய்ப்பாக பூங்காவில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்த மணல் லாரி, திடீரென ஏற்பட்ட ப்ரேக் செயலிழப்பால் தடுப்புச் சுவரை இடித்துக்கொண்டு சிறுவர் பூங்காவில் பாய்ந்தது.

    இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் மற்றும் சாலையில் சென்ற ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. நல்வாய்ப்பாக பூங்காவில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .

    இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. 

    • இயக்குநர் சுகுமார் மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் 'புஷ்பா 2 தி ரூல்'.
    • 'புஷ்பா 2' முதல் நாள் வசூலாக 294 கோடி ரூபாய் வசூல் செய்தது,

    இயக்குநர் சுகுமார் மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் 'புஷ்பா 2 தி ரூல்'. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை சாம் சி.எஸ். உருவாக்கி இருக்கிறார்.

    பான் இந்தியா வெளியீடாகத் தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 'புஷ்பா 2' முதல் நாள் வசூலாக 294 கோடி ரூபாய் வசூல் செய்தது, இதுவரை இந்திய சினிமாவில் முதல் நாள் வசூலித்தது இப்படத்தின் வசூலே அதிகமாகும்.

     

    இந்தியாவில் வெளியான படங்களில் மிக குறுகிய காலக்கட்டத்தில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படமாக புஷ்பா 2 உருவெடுத்தது. இந்த நிலையில், படம் வெளியாகி 2 மாதங்கள் முடிவடைந்த நிலையில் திரைப்படம் ரூ. 1871 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

     

    • சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) பாகிஸ்தான் மற்றும் துபாயில் நாளை முதல் மார்ச் 9-ந்தேதி வரை நடைபெறுகிறது.
    • இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது.

    9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) பாகிஸ்தான் மற்றும் துபாயில் நாளை முதல் மார்ச் 9-ந்தேதி வரை நடைபெறுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது. நாளை பிற்பகல் 2.30 மணிக்கு கராச்சியில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    இந்த தொடரில் இறுதிவரை சென்று கோப்பையை வெல்லப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு பலரது மத்தியிலும் அதிகரித்துள்ளது. மேலும் இந்த தொடரின் அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் குறித்த விவாதங்களும் சமூகவலைதளத்தில் அதிகளவு நிலவி வருகின்றன.

    இந்நிலையில் இந்த தொடரின் அரையிறுதிக்கு முன்னேறும் 4 அணிகள் குறித்த தங்களது கணிப்புகளை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில் முன்னாள் இங்கிலாந்து அணி வீரர் கெவின் பீட்டர்சன் அரையிறுதிக்கு தகுதி பெறும் 4 அணிகள் குறித்து கணித்துள்ளார். அந்த வகையில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் தகுதி பெறும் என தெரிவித்துள்ளார்.

    இதே போல முன்னாள் இந்திய வீரர்களான முரளி விஜய், அஸ்வின், சஞ்சய் பங்கர், தீப் தாஸ்குப்தா, ஆகாஷ் சோப்ரா ஆகியோரும் அரையிறுதிக்கு தகுதி பெறு அணிகள் குறித்து கணித்துள்ளனர்.

    இந்திய வீரர்கள் கணித்துள்ள அணிகள்:-

    முரளி விஜய்- இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா

    ஆகாஷ் சோப்ரா- இந்தியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா

    சஞ்சய் பங்கர் - இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா

    தீப் தாஸ்குப்தா- இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து

    அஸ்வின் - இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து 

    • தமிழ்நாட்டில் அனைத்து நலத்திட்டங்களும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • பங்குத்தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் விடுவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி அன்னபூர்ணா தேவிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறியுள்ளதாவது:

    தமிழ்நாட்டில் அனைத்து நலத் திட்டங்களும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசு நிதியுதவி வழங்கும் திட்டங்களுக்கு மாநில அரசின் பங்களிப்பு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முறையாக வழங்கப்பட்டு வருகிறது.

    பெரும்பாலான நேர்வுகளில், ஒன்றிய அரசின் நிதிப்பங்கு காலாண்டின் இறுதியிலோ அல்லது அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டிலோ மட்டுமே வழங்கப்படுகிறது.

    நிதியாண்டின் முடிவிற்குள் ஒன்றிய அரசு ஒதுக்கும் தொகையை மேற்குறிப்பிட்ட திட்டங்களுக்குக் குறுகிய காலத்திற்குள் பயன்படுத்த இயலாத நிலை உள்ளது.

    பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) என்னும் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 304 கோடி ரூபாயில், ஒன்றிய அரசின் பங்குத் தொகையான 184 கோடி ரூபாய் இதுநாள் வரை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இதனால் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் உரிய காலத்தில் வரவு வைக்க இயலாமல் உள்ளது.

    இன்றைய தேதியில், ஒற்றை ஒருங்கிணைப்பு முகமை (Single Nodal Agency) கணக்குகளில் உள்ள 576.22 கோடி ரூபாயில் இந்த நிதியாண்டு முடிவதற்குள் ரூ.482.80 கோடி பயன்படுத்தப்படும் என்றும், மீதமுள்ள தொகை ஒன்றிய அரசின் பங்காக அடுத்த நிதியாண்டுக்குக் கொண்டு செல்லப்படும்.

    இந்நிலையில், தமிழ்நாடு அரசின் நலத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்திட ஏதுவாக, ஒன்றிய அரசின் திட்டங்களுக்கான பங்குத்தொகையை, குறிப்பிட்ட காலத்திற்குள் அதாவது அந்தந்த நிதியாண்டுக்குள்ளேயே விடுவித்திட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • உக்ரைன் தனது பங்கேற்பு இல்லாமல் செய்யப்படும் எந்த அமைதி ஒப்பந்தங்களையும் அங்கீகரிக்காது
    • ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் இணைவது தொடர்பாக ரஷியாவிற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

    உக்ரைன்-ரஷியா இடையே போர் தொடங்கி 3 ஆண்டுகளை தாண்டி விட்டது. ஆனாலும் இன்னும் இந்த சண்டை முடிவுக்கு வராமல் நீடித்து வருகிறது. போர் நிறுத்தத்தை ஏற்படுத்த டிரம்ப் தலைமையான அமெரிக்க அரசு முயற்சித்து வருகிறது.

    அதன்படி ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மற்றும் ஜனாதிபதி விளாடிமிர் புடினின் வெளியுறவு ஆலோசகர் யூரி உஷாகோவ் ஆகியோரும், டொனால்டு டிரம்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் ஆகியோரும் இன்று சவுதியில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஆனால் இதில் உக்ரைன் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவில்லை. எனவே உக்ரைன் தனது பங்கேற்பு இல்லாமல் செய்யப்படும் எந்த அமைதி ஒப்பந்தங்களையும் அங்கீகரிக்காது என்று ஜெலென்ஸ்கி கூறியிருந்தார்.

    இந்நிலையில் தேவைப்பட்டால் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிபர் விளாடிமிர் புடின் தயாராக இருப்பதாக ரஷியா தெரிவித்துள்ளது.

    ரஷிய அதிபர் மாளிகையான கிரம்லின் செய்தித்தொடர்பாளர் இன்று டிமிட்ரி பெஸ்கோவ் ஊடகங்களுக்கு இன்று பேட்டியளித்தார். அவர் கூறியதாவது, தேவைப்பட்டால் ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக புதினே கூறினார். இருப்பினும் ஜெலன்ஸ்கி வகிக்கும் அதிபர் பதவியின் சட்டப்பூர்வமான தன்மை கேள்விக்குறிதான்.

    ஜெலன்ஸ்கியின் ஐந்தாண்டு ஜனாதிபதி பதவிக்காலம் கடந்த ஆண்டு முடிவடைந்தது. இருப்பினும், உக்ரைன் சட்டத்தின்படி, ராணுவச் சட்டம் அமலில் இருக்கும்போது ஜனாதிபதித் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டிய அவசியமில்லை. ரஷ்யா பல சந்தர்ப்பங்களில் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் ரஷியா அவரை ஒரு சட்டப்பூர்வமான ஜனாதிபதியாகக் கருதவில்லை.

    உக்ரைன் நேட்டோவின் அங்கமாக மாறுவதைத் தொடர்ந்து எதிர்ப்போம். ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் இணைவது தொடர்பாக ரஷியாவிற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. இது அந்த நாட்டின் இறையாண்மை உரிமை. யாரும் மற்றொரு நாட்டிற்கு ஆணையிட முடியாது. நாங்கள் அவ்வாறு செய்யத் திட்டமிடவில்லை. ஆனால் பாதுகாப்பு பிரச்சனைகள் மற்றும் ராணுவ கூட்டணி என்று வரும்போது நிலைமை மாறலாம் என்று தெரிவித்தார். 

    • பிங்க் ஆட்டோவில் ஜிபிஎஸ் மற்றும் VItd எனப்படும் வாகன கண்காணிப்பு சாதனம் பொறுத்தப்படவுள்ளது.
    • மார்ச் இறுதிக்குள் பிங்க் ஆட்டோ சென்னையில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழ் நாடு அரசு பெண்களின் நலனை உறுதி செய்யும் விதமாக விடியல் பயணத்திட்டம். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, தோழி விடுதிகள் போன்ற பல திட்டங்களை செய்லபடுத்தி வருகிறது.

    இந்நிலையில், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு புதிய முன்னெடுப்பாக 'பிங்க்' ஆட்டோக்களை தமிழ் நாடு அரசு அறிமுகப்படுத்த உள்ளது.

    இத்திட்டத்தின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக பயணிக்க, பெண் ஓட்டுநர்கள் மூலம் பிங்க் ஆட்டோக்கள் சென்னை மாநகரில் இயக்கப்பட உள்ளன.

    பெண்கள் சுய தொழிலில் சிறந்து விளங்க ஊக்கப்படுத்தவும். ஓட்டுநர் உரிமம் பெற்ற பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் இத்திட்டம் வழிவகை செய்யும்.

    இந்நிலையில், பெண்களுக்கான ஆட்டோ முழுவதும் பிங்க் நிறத்தில் இருக்கும்படி மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

    அவசரக் காலங்களில் புகார் பெறப்பட்டவுடன், காவல் துறையின் மூலம் விரைவான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யும் நோக்கத்தோடு ஒவ்வொரு பிங்க் ஆட்டோவிலும், ஜிபிஎஸ் மற்றும் VItd எனப்படும் வாகன கண்காணிப்பு சாதனம் பொறுத்தப்படவுள்ளது.

    மார்ச் இறுதிக்குள் பிங்க் ஆட்டோ சென்னையில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    • மகா கும்பமேளாவை மதிக்கிறேன். கும்பமேளாவில் சரியான திட்டமிடல் இல்லை.
    • ஏழைகளுக்கு, கும்பமேளாவில் எந்த ஏற்பாடுகளும் இல்லை என்றார்.

    கொல்கத்தா:

    மேற்குவங்க சட்டசபை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    மகா கும்பமேளா விழா மரண விழாவாக மாறிவிட்டது.

    நான் மகா கும்பமேளாவை மதிக்கிறேன். புனிதமான கங்கா மாவை மதிக்கிறேன். கும்பமேளாவில் சரியான திட்டமிடல் இல்லை.

    எத்தனை பேர் மீட்கப்பட்டுள்ளனர்?.

    பணக்காரர்கள், வி.ஐ.பி. கூடாரங்கள் ₹1 லட்சம் வரை பெற அமைப்புகள் உள்ளன.

    ஏழைகளுக்கு, கும்பமேளாவில் எந்த ஏற்பாடுகளும் இல்லை.

    ஒரு கும்பமேளாவில் நெரிசல் ஏற்படுவது பொதுவானது. ஆனால் ஏற்பாடுகளைச் செய்வது முக்கியம். என்ன திட்டமிடல் செய்தீர்கள் என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

    • 2 நாள் பயணமாக அதிபர் டிரம்பின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி கடந்த வாரம் அமெரிக்கா சென்றார்.
    • கார்கள் மீதான சுங்கவரியை 110 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக மத்திய அரசு குறைத்தது.

    இந்தியாவில் நுழைய மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா சமீப காலமாக ஆர்வம் காட்டி வருகிறது.

    ஆனால் வரி விகிதம் காரணமாக டெஸ்லா பின்வாங்கியது. எனவே சமீபத்தில் கார்கள் மீதான சுங்கவரியை 110 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக மத்திய அரசு குறைத்தது.

    இதற்கிடையில் 2 நாள் பயணமாக அதிபர் டிரம்பின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி கடந்த வாரம் அமெரிக்கா சென்றார். அங்கு எக்ஸ், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க்குடன் மோடி சந்திப்பு நிகழ்ந்தது.

    இந்நிலையில் இந்தியாவில் நுழைவதற்கான ஆரம்பக் கட்ட பணிகளை டெஸ்லா நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்தியாவில் 13 வகையான பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை டெஸ்லா நிறுவனம் 'லிங்க்ட் இன்' தளத்தில் வெளியிட்டுள்ளது.

    அதில் ஐந்து வகையான பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் டெல்லி மற்றும் மும்பையிலும், எஞ்சிய பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் மும்பையில் பணியாற்ற வேண்டும் என அந்த விளம்பரத்தில் கூறப்பட்டு உள்ளது.

    இதன்மூலம் டெஸ்லா நிறுவனம் விரைவில் இந்தியாவில் வர்த்தகத்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • ஆங்கில வர்ணையாளர்கள் பட்டியலில் 3 முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
    • ஜியோஹாட்ஸ்டாரில் டிஜிட்டல் ஒளிபரப்பில் ஒன்பது மொழிகளில் இந்த தொடர் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) பாகிஸ்தான் மற்றும் துபாயில் நாளை முதல் மார்ச் 9-ந்தேதி வரை நடைபெறுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது.

    இதில் களம் காணும் அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

    நாளை (புதன்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு கராச்சியில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக்கில் வங்காளதேசத்தை 20-ந்தேதி சந்திக்கிறது. 8 முன்னணி அணிகள் வரிந்து கட்டுவதால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறி கொண்டே போகிறது.

    இந்நிலையில் இந்த தொடருக்கான வர்ணனையாளர்களை அறிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசி போட்டி வரலாற்றில் முதல் முறையாக, ஜியோஹாட்ஸ்டாரில் டிஜிட்டல் ஒளிபரப்பில் ஒன்பது மொழிகளில் இந்த தொடர் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த போட்டியை 16 கோணங்களில் ரசிகர்கள் பார்த்து ரசிக்கலாம்.

    இந்த தொடரின் ஆங்கில வர்ணையாளர்கள் பட்டியலில் 3 முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி, மற்றும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    இவர்களை தவிர பிஷப், ரமிஸ், ஸ்டெய்ன், ஹைடன், ஃபின்ச், நாசர், டவுல், இயன் ஸ்மித், அதர்டன், மங்வா, பொல்லாக், அக்ரம், வார்டு, அதர், நைடூ, மெல் ஜோன்ஸ், கேட்டி மார்ட்டின் மற்றும் பாசித் ஆகியோரும் இதில் இடம் பெற்றுள்ளனர்.

    ஆங்கில வர்ணனையாளர் குழு

    ஹிந்தி வர்ணனையாளர் குழு

    மராத்தி வர்ணனையாளர் குழு: 

    பெங்காலி வர்ணனையாளர் குழு:

    போஜ்புரி வர்ணனையாளர் குழு:

    ஹரியான்வி வர்ணனையாளர் குழு:

    தமிழ் வர்ணனையாளர் குழு:


    தெலுங்கு வர்ணனையாளர் குழு:


    கன்னடம் வர்ணனையாளர் குழு:



     


     


     


     

     

    ×