என் மலர்
தலைப்புச்செய்திகள்
- ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே போஸ் மற்றும் ரீனா ஆகிய இருவரும் இறந்தனர்.
- விபத்தில் கணவருடன் பலியாகி இருக்கும் ரீனா, கேரளாவை சேர்ந்த பிரபல தடகள வீராங்கனையான பீனாமோலின் சகோதரி ஆவார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் இடுக்கி அடிமாலி அருகே உள்ள பன்னியர்குட்டி பகுதியை சேர்ந்தவர் போஸ்(55). இவரது மனைவி ரீனா (வயது48). இவர்கள் இருவரும் நேற்று முள்ளக்காணம் பகுதியில் உள்ள உறவினரின் வீட்டுக்கு ஜீப்பில் சென்றனர்.
பின்பு இரவில் அங்கிருந்து தங்களின் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். ஜீப்பை ஆபிரகாம் (50) என்பவர் ஓட்டி வந்தார். பன்னியர்குட்டியில் உள்ள மசூதி அருகே வந்தபோது அவர்களது ஜீப், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 100 அடி பள்ளத்தில் விழுந்தது.
இதனை அந்த பகுதியை சேர்ந்த மக்கள் பார்த்தனர். அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் பொதுமக்களின் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து நடந்த இடம் செங்குத்தான பள்ளத்தாக்கு பகுதி ஆகும்.
இதனால் அவர்கள் கடும் சிரமத்துக்கு மத்தியில் ஜீப் விழுந்து கிடந்த பகுதிக்கு சென்றனர். ஜீப்புக்குள் சிக்கி படுகாயங்களுடன் கிடந்த போஸ், ரீனா, ஆபிரகாம் ஆகிய 3 பேரையும் மீட்டு பள்ளத்தாக்கில் இருந்து மேலே கொண்டு வந்தனர். பின்பு ஆம்புலன்சு மூலமாக 3 பேரும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே போஸ் மற்றும் ரீனா ஆகிய இருவரும் இறந்தனர். எர்ணாகுளத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆபிரகாம் இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். விபத்தில் பலியான 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அடிமாலி தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் கணவருடன் பலியாகி இருக்கும் ரீனா, கேரளாவை சேர்ந்த பிரபல தடகள வீராங்கனையான பீனாமோலின் சகோதரி ஆவார். பல ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ள அவர், 3 ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்த விபத்தில் ஒலிம்பிக் வீராங்கனையின் சகோதரி உள்பட 3 பேர் பலியான சம்பவம் இடுக்கியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
- சிறைத்துறை அதிகாரிகள் திரிவேணி சங்கமத்தின் புனித நீரை லக்னோ, அயோத்தி மற்றும் அலிகார் சிறைக்கு கொண்டு வந்தனர்.
- திரிவேணி சங்கமம் தண்ணீர் வழக்கமான நீரில் கலந்து சிறிய தொட்டிகளில் சேமிக்கப்பட்டது.
உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் 3 நதிகள் சங்கமிக்கும் 'திரிவேணி சங்கமம்' என்ற இடத்தில் ஜனவரி 13-ந்தேதி கோலாகலமாகத் தொடங்கியது. மகா சிவராத்திரி நாளான வருகிற 26-ந்தேதி வரை 45 நாட்களுக்கு இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
மகா கும்பமேளாவில் உலகம் முழுவதிலும் இருந்து நாள்தோறும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து புனித நீராடி வருகின்றனர். இதுவரை 56 கோடிக்கும் அதிகமான மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.
இந்நிலையில் உத்தரபிரதேச மாநில சிறைத்துறை அதிகாரிகள் திரிவேணி சங்கமத்தின் புனித நீரை லக்னோ, அயோத்தி மற்றும் அலிகார் சிறைக்கு கொண்டு வந்தனர். உ.பி. முழுவதும் உள்ள 75 சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள சுமார் 90 ஆயிரம் கைதிகள் மகா கும்பமேளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரில் நீராடினர்.
இதுதொடர்பாக அதிகாரிகளின் கூறுகையில், திரிவேணி சங்கமம் தண்ணீர் வழக்கமான நீரில் கலந்து சிறிய தொட்டிகளில் சேமிக்கப்பட்டது. கைதிகள் புனித நீராடவும், ஜெயிலிலேயே பிரார்த்தனை செய்யவும் அனுமதிக்கப்பட்டனர் என்று கூறினார்.
லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிறைத்துறை அமைச்சர் தாரா சிங் சவுகான் கூறுகையில், சுமார் 90 ஆயிரம் கைதிகளுக்கு புனித நீராடினர். கைதிகள் கோரிக்கை விடுத்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறினார்.
மேலும் சிறைக் கண்காணிப்பாளர் உதய் பிரதாப் மிஸ்ரா கூறும்போது, சிறையில் 757 கைதிகள் உள்ளனர். சிறையில் உள்ள கைதிகள் அனைவரும் மகா கும்பமேளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட தண்ணீரைக் கொண்டு புனித நீராடினர். அனைவரும் கருத்து வேறுபாடு இல்லாமல் புனித நீராடியதாக அவர் கூறினார்.
- இன்றைய முக்கியச் செய்திகள்
- இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..
- நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து சவரன் ரூ.64,200-க்கு விற்பனையானது.
- வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை 4 நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் நேற்று சவரனுக்கு ரூ.360 குறைந்து சவரன் ரூ.64,200-க்கு விற்பனையானது.
இதனைத் தொடர்ந்து வார இறுதி நாளான இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,045-க்கும் சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,360-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 108 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
21-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,200
20-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,560
19-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,280
18-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,760
17-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
21-02-2025- ஒரு கிராம் ரூ.109
20-02-2025- ஒரு கிராம் ரூ.109
19-02-2025- ஒரு கிராம் ரூ.108
18-02-2025- ஒரு கிராம் ரூ.108
17-02-2025- ஒரு கிராம் ரூ.108
- பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் பொதுமக்கள் புனித நீராடி வருகின்றனர்.
- திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ள பக்தர்களின் எண்ணிக்கை 56 கோடியைத் தாண்டியுள்ளது
உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ம் தேதி வரை 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெறுகிறது.
உலகம் முழுவதும் உள்ள இந்து மதத்தினர் பிரயாக்ராஜில் திரண்டு அங்குள்ள உள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.
இந்நிலையில், கும்பமேளாவிற்கு வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ள பக்தர்களின் எண்ணிக்கை 56 கோடியைத் தாண்டியுள்ளது என உத்தர பிரதேச அரசு தெரிவித்தது.
இந்நிலையில், கும்பமேளாவில் டிஜிட்டல் நீராட ஒரு கும்பல் ரூ.1100 கட்டணம் வசூலித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
கும்பமேளாவில் நீராட நேரில் வரமுடியாதவர்கள் தங்களது புகைப்படங்களை வாட்சப்பில் அனுப்பினால் அப்புகைப்படங்களை திரிவேணி சங்கமம் நீரில் மூழ்கி எடுப்போம் என்று ஒருவர் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இதனை 'மூட நம்பிக்கை' என்றும் மோசடி என்றும் விமர்சித்து வருகின்றனர்.
- சரத் பவார் நார்காலியில் அமர்வதற்கு பிரதமர் மோடி உதவி செய்தார்.
- இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
தலைநகர் டெல்லியில் 98வது அகில பாரதிய மராத்தி சாகித்ய சம்மேளனத்தின் தொடக்க விழா நடைபெற்றது.
மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிசுடன் சேர்ந்து, சரத் பவார் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, சரத் பவார் நார்காலியில் அமர்வதற்கு உதவி செய்தார். பின்னர் சரத் பவாருக்கு மோடி கொடுப்பதற்கு தண்ணீர் கொடுத்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
98வது அகில பாரதிய மராத்தி சாகித்ய சம்மேளனத்தில் பேசிய பிரதமர் மோடி, "மகாராஷ்டிரா மராத்தி மற்றும் இந்தி சினிமாவுக்கு ஒரு புதிய உச்சத்தை அளித்திருக்கிறது. சத்ரபதி சம்பாஜி மகாராஜின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட 'சாவா' திரைப்படம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது" என்று தெரிவித்தார்.
சரத் பவாரும் பிரதமர் மோடியும் ஒரே மேடையில் அமர்ந்துள்ளது, இந்தியா கூட்டணியில் விரிசலா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
- அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் ஏன் இந்த உரிமை மறுக்கப்பட வேண்டும்.
- இளைஞர்களின் முன்னேற்றத்தில் அரசியல் செய்வதை தி.மு.க.வும், உதயநிதி ஸ்டாலினும் நிறுத்த வேண்டும்.
சென்னையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்தியை ஒரு மொழியாக சேர்க்க வேண்டும் என்று நாங்கள் எந்த இடத்திலும் சொல்லவில்லை.
3-வதாக ஒரு மொழியை மாணவர்கள் படிக்க வேண்டும் என்பது தான் புதிய கல்விக்கொள்கையின் நோக்கமாக இருக்கிறது.
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுதி உள்ள 3 பக்க கடிதத்தில் விளக்கமாக சொல்லி இருக்கிறார்கள். நாம் தமிழகத்திற்கும் தமிழ் மொழிக்கும் எந்த அளவுக்கு பெருமை சேர்த்துக்கொண்டிருக்கிறோம் என்று தெளிவாக சொல்லி இருக்கிறார்கள்.
உலகத்திலேயே தொன்மையான மொழி, பழமையான மொழி தமிழ் மொழி என்று பிரதமர் மோடி உலக நாடுகளிடம் போய் சொல்லிக் கொண்டு இருக்கிறார்.
பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு நாட்டிலும் திருவள்ளுவருக்கு கலாச்சார மையம் அமைக்கப்படும் என்று சொல்லி இருந்தோம். ஆட்சிக்கு வந்த 5 மாதங்களிலேயே 5 இடங்களில் ஆரம்பித்து உள்ளோம். கடந்த செப்டம்பர் மாதம் பிரதமர் மோடி சிங்கப்பூரில் கலாச்சார மையத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் கல்வி திட்டங்களுக்கு மத்திய அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்காததால் கிட்டத்தட்ட 5 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது,
இதற்கு முழுமுதற்காரணம் ஸ்டாலின் அவர்களும், உதயநிதி ஸ்டாலின் அவர்களும் தான்.
தமிழக மக்கள், தமிழக மாணவர்கள் குறிப்பாக அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களை வஞ்சிக்கும் செயல்களை செய்துகொண்டிருப்பது முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் தான்.
துணை முதலமைச்சரின் பிள்ளைகள் எங்கே படிக்கிறார்கள். முதலமைச்சரின் பேரன்கள் எங்கே படிக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளிலும் 3-வதாக ஒரு மொழி இந்தி கற்றுக்கொடுக்கப்படுகிறது. மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் 3-வதாக ஒரு மொழி கற்றுக்கொடுக்கப்படுகிறது.
அப்படி இருக்கும்போது அரசு பள்ளியில் படிக்கக்கூடிய ஏழை எளிய மக்கள், பட்டியலின மக்கள், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு மட்டும் தான் 3-வதாக ஒரு மொழியை கற்பிக்க மறுக்கப்படுகிறது. இது நவீன தீண்டாமையின் உச்சமாக இருக்கிறது.
உன்னை திட்டினால் கூட தெரியாது. சிரித்துக்கொண்டே திட்டுவான். ஒரு மொழியை கற்றுக்கொள்ளும்போது அந்த மொழி மீது பற்றுதல் வரும். எப்படி தமிழ் மொழியை அதிகம் பேர் விரும்புகிறார்களோ அதே போல் இன்னொரு மொழியை கற்றுக்கொள்வதில் என்ன தவறு இருக்கிறது. ஒரு மொழியை கூடுதலாக கற்றுக்கொள்வதில் என்ன தவறு இருக்கிறது.
ஏன் சிபிஎஸ்இ, மெட்ரிகுலேஷன் பள்ளியில் கொடுக்கிறீர்கள். அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் ஏன் இந்த உரிமை மறுக்கப்பட வேண்டும்.
அதனால் 3 மொழி கல்வி என்பது வேண்டும். தமிழ்நாட்டு மாணவர்கள் பெற்றோர்கள் வரவேற்கிறார்கள். ஒவ்வொரு வீட்டிலும் கோலம்போட்டு 3-வது மொழி வேண்டும் என்று கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். புதிய தேசிய கல்விக்கொள்கை வேண்டும் என்று மக்கள் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
கல்வியில் விளையாடாதீர்கள். கல்வியில் அரசியல் செய்யாதீர்கள். இளைஞர்களின் முன்னேற்றத்தில் அரசியல் செய்வதை தி.மு.க.வும், உதயநிதி ஸ்டாலினும் நிறுத்த வேண்டும் என்று கூறினார்.
- அசாம் மாநிலத்தில் பொது இடங்களில் மாட்டிறைச்சி விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- இறைச்சியை பார்த்த உடனே அது என்ன இறைச்சி என்று எப்படி அவரால் கூற முடியும்?
மாட்டிறைச்சி கடத்தியதாக ஒருவர் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இதுபோன்ற விஷயங்களுக்கு பின்னால் செல்வதை விட்டுவிட்டு மக்களின் நலனில் அக்கறை செலுத்த அரசு முயற்சிக்கலாம் என்று அசாம் மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அசாம் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் கால்நடை பாதுகாப்புச் சட்டம் 2021ன் படி இந்துக்கள், ஜைனர்கள், சீக்கியர்கள் பெரும்பான்மையாக வசிக்கக் கூடிய இடங்கள் மற்றும் கோவில்களை சுற்றி 5 கி.மீ. சுற்றளவில் கால்நடைகளை அறுப்பதும், இறைச்சியை விற்பதும் குற்றமாகும். அதன்படி அசாம் மாநிலத்தில் உணவகங்கள், விடுதிகள், பொது இடங்களிலும் மாட்டிறைச்சி சமைப்பதற்கும் உண்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாட்டிறைச்சி கடத்தியதாக இளைஞர் ஒருவர் மீது அசாம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனை எதிர்த்து அந்த இளைஞர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் ஏ.எஸ். ஓகா மற்றும் உஜ்ஜல் பூயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அசாம் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "போலீசார் வாகன சோதனையில் குற்றம்சாட்டப்பட்ட நபரை பிடித்தனர். அப்போது அவரது வாகனத்தில் இருந்த இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. அது என்ன இறைச்சி என்பதை அவர் கூற மறுத்துள்ளார். இறைச்சி தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது" என்று தெரிவித்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், எனது தரப்பு நபர், ஒரு கிடங்கின் உரிமையாளர். இறைச்சியை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு சேர்ப்பதுதான் இவருடைய வேலை. இவருக்கு அது என்ன இறைச்சி என்று கூட தெரியாது" என்று தெரிவித்தார்.
2 தரப்பு வாதங்களும் கேட்ட உச்ச நீதிமன்றம், "அசாம் மாநில அரசு இதுபோன்று மாட்டிறைச்சி பிரச்சனைகளுக்கு பின்னால் செல்வதை விட்டுவிட்டு, மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். குற்றம்சாட்டப்பட்ட நபர், பேக்கிங் செய்யப்பட்ட இறைச்சியை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார். இறைச்சியை பார்த்த உடனே அது என்ன இறைச்சி என்று எப்படி அவரால் கூற முடியும்?
அசாம் கால்நடை பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 8-இன் படி விற்கப்படும் இறைச்சி மாட்டிறைச்சி என்று குற்றம் சாட்டப்பட்டவருக்குத் தெரிந்திருந்தால் மட்டுமே இந்த விதியைப் பயன்படுத்த முடியும் என்று கூறிய உச்சநீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு எதிரான கிரிமினல் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்து ஏப்ரல் 16 ஆம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்திவைத்தது.
- வில்லா டைப் வீடுகளை குறிவைத்து கார்களில் வந்து கொள்ளையடித்ததை போலீசாரிடம் ஞானசேகரன் வாக்குமூலம்.
- ஞானசேகரனை கைது செய்து 3 நாட்கள் காவலில் எடுத்து பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
சென்னை:
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2022-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை பள்ளிக்கரணை பகுதிகளில் உள்ள வில்லா டைப் வீடுகளை குறிவைத்து கார்களில் வந்து கொள்ளையடித்ததை போலீசாரிடம் ஞானசேகரன் வாக்குமூலம் அளித்துள்ளான்.
இதனை தொடர்ந்து, 7 திருட்டு வழக்குகள் தொடர்பாக சிறையில் உள்ள ஞானசேகரனை கைது செய்து 3 நாட்கள் காவலில் எடுத்து பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
- ராஜஸ்தானில் 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பட்ஜெட் கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
- காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்திற்குள் போர்வைகள் கொண்டுவந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜஸ்தானில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்திற்கு போர்வைகள், மெத்தைகள் கொண்டுவந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜஸ்தான் அரசாங்கத்தின் 'லக்பதி தீதி' திட்டம் குறித்த விவாதத்தின் போது பாஜக அமைச்சர் அவினாஷ் கெலாட், "முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை "ஆப்கி தாதி" (உங்கள் பாட்டி) என்று கூறினார்.
இதற்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, இதற்காக பாஜக அமைச்சர் அவினாஷ் கெலாட் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.இதனையடுத்து ஆறு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பட்ஜெட் கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதனையடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நேற்று இரவு சட்டமன்றத்திற்குள் போர்வைகள், மெத்தைகள் கொண்டுவந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை.
- வேதாரண்யம் ஸ்ரீ சிவபெருமான் உற்சவம் ஆரம்பம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு மாசி-10 (சனிக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: நவமி காலை 10.46 மணி வரை பிறகு தசமி
நட்சத்திரம்: கேட்டை பிற்பகல் 3.22 மணி வரை பிறகு மூலம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. ஸ்ரீ காளஹஸ்தி, ஸ்ரீ சைலம் கோவில்களில் ஸ்ரீ சிவபெருமான் பவனி. வேதாரண்யம் ஸ்ரீ சிவபெருமான் உற்சவம் ஆரம்பம். ராமநாதபுரம் செட்டித் தெரு ஸ்ரீ முத்தாலம்மன் புறப்பாடு. ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகர், திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள், திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவர் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை. திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரெங்கராஜர், திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் கோவில்களில் காலை சிறப்பு திருமஞ்சன சேவை. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-மகிழ்ச்சி
ரிஷபம்-கடமை
மிதுனம்-கட்டுப்பாடு
கடகம்-உவகை
சிம்மம்-உண்மை
கன்னி-ஆதரவு
துலாம்- பயணம்
விருச்சிகம்-செலவு
தனுசு- வரவு
மகரம்-மகிழ்ச்சி
கும்பம்-கீர்த்தி
மீனம்-வெற்றி
- அரசு பேருந்தில் ஏறிய பெண் ஒருவர் பேருந்து நடத்துநரிடம் மராத்தியில் பேசினார்.
- மராத்தியில் பேசிய பெண்ணிடம் கன்னடத்தில் பேசுங்கள் என்று நடத்துநர் கூறியுள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெலகாவி மாவட்டத்தில் மராத்தி பேச தெரியாது எனக்கூறிய பேருந்து நடத்துநர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பேசிய பாதிக்கப்பட்ட நடத்துநர், அரசு பேருந்தில் ஏறிய பெண் ஒருவர் என்னிடம் மராத்தியில் பேசினார். அதற்கு தனக்கு மராத்தி தெரியாது, கன்னடத்தில் பேசுங்கள் என்று அவரிடம் கூறினேன். அதற்கு அந்தப் பெண் மராத்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறி என்னைத் திட்டினார். அப்போது திடீரென்று ஏராளமான மக்கள் ஒன்றுகூடி என்னை தாக்கினர்" என்று தெரிவித்தார்.
இந்த தாக்குதலில் நடத்துநருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
நடத்துநர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யவேண்டும் என்று கன்னட அமைப்பினர் வலியுறுத்தினர்.
பெலகாவி மாவட்டம் மகாராஷ்டிரா மாநிலத்தில் எல்லையில் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் மராத்தி பேசக்கூடிய மக்கள் கணிசமானோர் வாழ்கின்றனர். இம்மாதிரியான சம்பவங்கள் அவ்வப்போது அங்கு எல்லைப் பிரச்சினையைத் தூண்டி விடுகின்றன. இந்த மாவட்டத்தை மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டுமென மராத்தி பேசக்கூடிய மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையை கன்னட மக்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.






