என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • காஷ் படேல் எப்.பி.ஐ. இயக்குநராக நியமனம் செய்யப்பட்டதை அமெரிக்க செனட் சபை உறுதிசெய்தது.
    • அதன்படி 51-49 என்ற வாக்குகளின் அடிப்படையில் அவரின் நியமனம் அங்கீகரிக்கப்பட்டது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.யின் புதிய இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேலை ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நியமனம் செய்திருந்தார்.

    காஷ் படேல் நியமனம் செய்யப்பட்டதை அமெரிக்க செனட் சபை நேற்று உறுதிசெய்தது. அதன்படி 51-49 என்ற வாக்குகளின் அடிப்படையில் அவரின் நியமனம் அங்கீகரிக்கப்பட்டது.

    இந்நிலையில், இந்துக்களின் புனித நூலான பகவத்கீதை மீது சத்தியம் செய்தபடி காஷ் படேல் எப்.பி.ஐ. இயக்குனராக பதவியேற்றுக் கொண்டார்.

    அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய காஷ் படேல், நான் அமெரிக்கக் கனவில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அமெரிக்க கனவு இறந்துவிட்டதாக நினைக்கும் எவரும், இங்கே பாருங்கள். உலகின் மிகப் பெரிய தேசத்தின் சட்ட அமலாக்க முகமைக்கு தலைமை தாங்கவிருக்கும் முதல் தலைமுறை இந்தியருடன் நீங்கள் பேசுகிறீர்கள். அது வேறெங்கும் நடக்காது. எப்.பி.ஐ-க்குள்ளும் அதற்கு வெளியேயும் பொறுப்பு இருக்கும் என உறுதியளிக்கிறேன் என தெரிவித்தார்.

    • இரவு 9 மணி முதல் 10 மணி வரை 7 நிமிட இடைவெளியில் இயங்கும்.
    • இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயங்கும்.

    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    விம்கோ நகர் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, இன்று (சனிக்கிழமை) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை நீல வழித்தடத்தில் விம்கோ நகர் பணிமனை வரும் மெட்ரோ ரெயில் சேவைகள் நிறுத்தப்படுகிறது.

    இன்று காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை விமான நிலையம் முதல் சுங்கச்சாவடி மெட்ரோ வரை ரெயில்கள் வழக்கம்போல் இயங்கும்.

    இரவு 9 மணி முதல் 10 மணி வரை 7 நிமிட இடைவெளியிலும், இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் ரெயில்கள் இயங்கும்.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 5 மணி முதல் 6 மணி வரை விமான நிலையம் முதல் சுங்கச்சாவடி வரை 10 நிமிட இடைவெளியிலும், விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை (நேரடியாக செல்லும் மெட்ரோ ரெயில்கள்) 20 நிமிட இடைவெளியிலும் இயக்கப்படும். 6 மணிக்கு பின்னர் வழக்கமான சேவை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே இடையே கடந்த சில நாட்களாக கருத்து மோதல் நிலவுகிறது.
    • பட்னாவிஸ் உடனான சந்திப்புகளையும் ஷிண்டே தொடர்ந்து தவிர்த்து வருவதாகக் கூறப்படுகிறது.

    மும்பை:

    மகாராஷ்டிரா முதல் மந்திரி பட்னாவிசுக்கும், துணை முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டேவுக்கும் இடையே கடந்த சில நாட்களாக கருத்து மோதல் நிலவுவதாக தகவல்கள் வெளியானது. பட்னாவிஸ் உடனான சந்திப்புகளையும் ஷிண்டே தொடர்ந்து தவிர்த்து வருவதாகக் கூறப்படுகிறது.

    இதற்கிடையே, ஏக்நாத் ஷிண்டே முதல் மந்திரியாக இருந்தபோது ஜல்னா நகரில் ரூ.900 கோடி ரூபாய்க்கான திட்டத்துக்கு ஒப்புதல் அளித்திருந்தார். அந்தத் திட்டத்தை பட்னாவிஸ் அரசு தற்போது நிறுத்திவைத்துள்ளது.

    இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பையில் துணை முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    நான் ஒரு சாதாரண கட்சி தொண்டன். ஆனால் நான் பால் தாக்கரேவின் விசுவாசியும் கூட. இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். 2022-ல் என்னை சிலர் இலகுவாக எடுத்துக் கொண்டனர். நான் அந்த அரசாங்கத்தையே கவிழ்த்துவிட்டேன்.

    சட்டசபையில் எனது முதல் உரையிலேயே தேவேந்திர பட்னாவிஸ் 200-க்கும் மேற்பட்ட இடங்களைப் பெறுவார் என கூறினேன். ஆனால் எங்களுக்கு 232 இடங்கள் கிடைத்தன. அதனால்தான் என்னை இலகுவாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என கூறுகிறேன் என்றார்.

    • உத்தர பிரதேசத்தில் இரட்டை என்ஜின் அரசு அல்ல, என்ஜினே இல்லாத அரசாகும்.
    • அதானி விவகாரமானது தனிப்பட்ட பிரச்சனை இல்லை என்றார்.

    லக்னோ:

    சமீபத்தில் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடியிடம், அதானி மீதான குற்றச்சாட்டு குறித்து அதிபர் டிரம்புடன் விவாதிப்பீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அப்போது பதிலளித்த பிரதமர் மோடி, தனிப்பட்ட பிரச்சனைகளை இருநாட்டு தலைவர்களும் விவாதிக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்தார்.

    இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி 2 நாள் பயணமாக உத்தரப் பிரதேசம் வந்துள்ளார். லால்கஞ்சில் நடந்த கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

    அமெரிக்காவில் அதானி குறித்த கேள்விக்கு அது தனிப்பட்ட பிரச்சனை என்றும், இரண்டு தலைவர்கள் சந்திக்கும்போது இதுபோன்ற பிரச்சனைகள் விவாதிக்கப்படுவதில்லை என்றும் பிரதமர் மோடி கூறியிருந்தார்.

    நரேந்திர மோடிஜி, இது தனிப்பட்ட விஷயம் இல்லை. இது நாட்டின் விஷயமாகும்.

    உத்தர பிரதேச அரசானது வேலையின்மை மற்றும் பணவீக்கத்தை நிவர்த்தி செய்வதற்கு தவறிவிட்டது. மத்திய அரசு தனியார் மயமாக்கலை நாடுகின்றது.

    உத்தர பிரதேசத்தில் இரட்டை என்ஜின் அரசு அல்ல, என்ஜினே இல்லாத அரசாகும் என தெரிவித்தார்.

    • ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • இதில் கஜகஸ்தான் வீராங்கனை ரிபாகினா அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.

    துபாய்:

    ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.

    இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் நம்பர் 6 வீராங்கனையும், கஜகஸ்தானைச் சேர்ந்தவருமான எலினா ரிபாகினா, ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரிவா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ஆண்ட்ரிவா 6-4, 4-6, 6-3 என வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் ரிபாகினா தொடரில் இருந்து வெளியேறினார்.

    இறுதிப்போட்டியில் ஆண்ட்ரிவா, டென்மார்க் வீராங்கனை கிளாரா டாசனுடன் மோதுகிறார்.

    • டி.கே.சிவகுமாரின் கருத்து சமூக ஊடகங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
    • சித்தராமையா தலைமையிலான கர்நாடக காங்கிரஸ் அரசு திறமையற்றது என்றது பாஜக.

    பெங்களூரு:

    கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. உலக அளவில் அதிக போக்குவரத்து நெரிசல் காணப்படும் நகரங்களில் ஒன்றாக பெங்களூரு உள்ளது.

    இதற்கிடையே, பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கர்நாடக துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார், பெங்களூருவை 2 அல்லது 3 ஆண்டுகளில் மாற்ற முடியாது.கடவுளால் கூட அதைச் செய்யமுடியாது. சரியான திட்டமிடல் மூலம் செயல்கள் நடைபெற்றால் மட்டுமே பிரச்சனைகளை சரிசெய்ய முடியும் என தெரிவித்தார்.

    அவரது இந்தக் கருத்து சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது.

    இந்நிலையில், கர்நாடக மாநிலத்தின் எதிர்க்கட்சியான பா.ஜ.க.வும் துணை முதல் மந்திரி சிவகுமாரின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    சித்த ராமையா தலைமையிலான கர்நாடக காங்கிரஸ் அரசு திறமையற்றது.

    துணை முதல் மந்திரி சிவகுமார் போலல்லாமல் பொது வாழ்வில் உள்ள தலைவர்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

    அவர் தனது தனிப்பட்ட லட்சியங்களுக்கு நிதியளிப்பதற்காக பெங்களூரை பணப் பசுவாக மட்டுமே கருதுகிறார்.

    பெங்களூருவின் குடிமைப் பிரச்சனைகளைச் சரிசெய்யும் பொறுப்பை டி.கே.சிவகுமார் ஏற்கவில்லை என்றால் அவர் பதவி விலக வேண்டும். திறமையான ஒருவருக்கு அவர் வழிவிட வேண்டும் என தெரிவித்தது.

    • முதலில் ஆடிய பெங்களூரு 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    பெங்களூரு:

    மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 7-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் எல்லீஸ் பெரி அதிரடியாக ஆடி 43 பந்தில் 2 சிக்சர், 11 பவுண்டரி உள்பட 81 ரன் எடுத்து அவுட்டானார்.

    ரிச்சா கோஷ் 28 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 26 ரன்னும் எடுத்தனர்.

    மும்பை சார்பில் அமன்ஜோத் கவுர் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அரை சதமடித்து ஆட்டமிழந்தார். நாட் சீவர் பிரண்ட் 21 பந்தில் 42 ரன்கள் குவித்தார்.

    கடைசி கட்டத்தில் அமன்ஜோத் கவுர் போராடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

    இறுதியில், மும்பை அணி 19.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இது மும்பை அணி பெற்ற 2வது வெற்றி ஆகும். அமன்ஜோத் கவுர் 34 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
    • இதில் ரஷியாவின் ரூப்லெவ் காலிறுதி சுற்றில் வெற்றி பெற்றார்.

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், அமெரிக்காவின் அலெக்ஸ் டி மினார் உடன் மோதினார்.

    இதில் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய ரூப்லெவ் 6-1, 3-6, 7-6 (10-8) என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் பிரிட்டனின் ஜாக் டிராபர் 4-6, 6-4, 6-3 என இத்தாலி வீரர் மேட்டியோ பிரேட்டேனியை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன.
    • இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய்யின் வித்தியாசமான நடிப்பில் வெளியானது வணங்கான்

    திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் ஓ.டி.டி. தளங்கள் அதிக பிரபலம் அடைந்துள்ளதை அடுத்து, பல படங்கள் ஓ.டி.டி.-யில் வெளியிடப்பட்டு வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களும் வாரயிறுதி நாட்களை குறிவைத்து பல படங்களை தங்களது தளங்களில் வெளியிட்டு வருகின்றன.

    அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.

    வணங்கான்'

    இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய்யின் வித்தியாசமான நடிப்பில் கடந்த ஜனவரி 10-ந் தேதி வெளியான திரைப்படம் 'வணங்கான்'. இதில் அருண் விஜய்யுடன் இணைந்து ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஸ்கின், சாயா தேவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் அருண் விஜய் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம்  டென்ட்கொட்டா ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

    'டாகு மகாராஜ்'

    பிரபல இயக்குனரான பாபி கொல்லி இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்துள்ள படம் 'டாகு மகாராஜ்' . இப்படத்தில் பாபி தியோல், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஊர்வசி ரவுத்தேலா மற்றும் சாந்தினி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். எஸ் தமன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம்  நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

    பாட்டல் ராதா'

    இயக்குனர் பா.ரஞ்சித் நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரித்துள்ள திரைப்படம் 'பாட்டல் ராதா'. இந்த படத்தை பா.ரஞ்சித்தின் உதவி இயக்குனர் தினகரன் சிவலிங்கம் இயக்கியுள்ளார். இந்த படத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் மதுவால் ஏற்படும் பாதிப்புகளை உணர்த்தும் படமாக அமைந்துள்ளது. இந்தநிலையில் இப்படம்  ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

    'செல்பி'

    இயக்குனர் வெற்றி மாறனின் உதவி இயக்குனர்களில் ஒருவரான மதிமாறன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள ஆக்சன் திரில்லர் வகை திரைப்படம் 'செல்பி'. இந்தப் படத்தில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிகில் திரைப்படத்தில் நடித்திருந்த வர்ஷா பொல்லம்மா இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். கலைப்புலி எஸ்.தாணு தன்னுடைய 'வி கிரியேசன்ஸ்' மூலம் தயாரித்துள்ளார். இப்படம்  சிம்பிலி சவுத் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

    ஆபீஸ்'

    ஆபிஸ் என்பது கபீஸ் இயக்கிய ஒரு நகைச்சுவை வெப் தொடராகும் . இதில் நட்சத்திர நடிகர்களான குரு லட்சுமணன் , சரித்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மேலும் ஸ்மேகா, கீர்த்திவேல், கெமி, பரந்தாமன், தமிழ்வாணி, சிவா ஆகியோருடன் அரவிந்த், பிராங்க்ஸ்டர் ராகுல் மற்றும் டி.எஸ்.ஆர் ஆகியோரும் இதில் நடித்துள்ளனர். கிராமம் ஒன்றில் அமைந்துள்ள ஒரு தாசில்தார் அலுவலகத்தில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளைச் சுற்றி இத்தொடர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் ஜியோ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

    'முபாசா தி லயன் கிங்'

    காட்டுக்கே ராஜாவான சிங்கத்தை வைத்து பேரி ஜென்கின்ஸ் இயக்கத்தில் பிரம்மாண்டமான பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் முபாசா : தி லயன் கிங் . இப்படம் கடந்த டிசம்பர் 20-ந் தேதி உலக அளவில் திரையரங்குகளில் வெளியானது. இப்படம் உலக அளவில் ரூ.3,200 கோடி வசூல் செய்துள்ளது. இப்படத்தில் காட்டு விலங்களுக்கு இடையே உள்ள பொறாமை, வஞ்சம், சூழ்ச்சி, போராட்டம், பந்தம் , காதல், தலைமை என அனைத்து குணாதிசயங்களை காட்டப்பட்டுள்ளது. இப்படம் கடந்த18-ந் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

    தி ஒயிட் லோட்டஸ்'

    சீசன் 3தி ஒயிட் லோட்டஸ் என்பது டார்க் காமெடி கதைக்களத்தில் உருவாகி இருக்கும் படமாகும். இதனை மைக் ஒயிட் எழுதி இயக்கியுள்ளார். இதன் முதல் இரண்டு சீசன்களும் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து சீசன் 3 உருவாகப்பட்டுள்ளது. இந்த நிலையில் இப்படம் கடந்த 17-ந் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

    'சாட்சி பெருமாள்'

    உண்மை சம்பவ பின்னணியில் இயக்குனர் வி.பி.வினு இயக்கியுள்ள படம் 'சாட்சி பெருமாள்'. இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் அசோக் ரங்கராஜன் நடித்துள்ளார். மேலும் வி.பி.ராஜசேகர், பாண்டியம்மாள், எம்.ஆர்.கே., வீரா உட்பட பலர் நடித்துள்ளனர். மஸ்தான் இசையமைத்துள்ளார். இப்படம் பத்திரப்பதிவு அலுவலகங்களில் சாட்சி கையெழுத்துப் போடுபவரின் கதையை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் இப்படம் கடந்த 17-ந் தேதி டென்ட்கொட்டா ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 315 ரன்கள் குவித்தது.
    • சிறப்பாக ஆடிய ரியான் ரிக்கல்டன் சதமடித்து 103 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    கராச்சி:

    சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கராச்சியில் இன்று நடைபெற்ற போட்டியில் தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 315 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய ரிக்கல்டன் சதமடித்து 103 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    கேப்டன் பவுமா 58 ரன்னும், வேன் டெர் டூசென் 52 ரன்னும், எய்டன் மார்க்ரம் 52 ரன்னும் எடுத்தனர்.

    ஆப்கானிஸ்தான் சார்பில் முகமது நபி 2 விக்கெட்டும், ஃபரூக்கி, ஹஷ்மதுல்லா ஒமர்சாய், நூர் அகமது தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 316 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது. முன்னணி வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை.

    ரஹ்மத் ஷா கடைசி வரை போராடினார். அரை சதம் கடந்த அவர் 90 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், ஆப்கானிஸ்தான் 43.3 ஓவரில் 208 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 107 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 3 விக்கெட்டும், நிகிடி, முல்டர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கை 4ல் இருந்து 2ஆக மத்திய அரசு குறைப்பு.
    • 26 ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளை குறைத்து, அதற்கு பதிலாக ஏசி 3 டையர் பெட்டிகளை இணைக்க திட்டம்.

    நாடு முழுவதும் இயக்கப்படும் ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கை 4ல் இருந்து 2ஆக மத்திய அரசு குறைத்துள்ளது.

    26 ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளை குறைத்து, அதற்கு பதிலாக ஏசி 3 டையர் பெட்டிகளை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

    இதேபோல், சென்னையில் இருந்து அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாகச் செல்லும் ரெயில்களின் முன்பதிவில்லாப் பெட்டிகள் இன்று முதல் குறைக்கப்படுவதாக அறிவித்தது.

    இந்நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில் இது குறித்து ரெயில்வே தகவல் தெரிவித்துள்ளது. அதில் முன்பதிவு செய்யப்படாத ரெயில் பெட்டிகள் எண்ணிக்கை குறைப்பு என்ற தகவல் ஆதாரமற்றது என ரெயில்வே துறை விளக்கம் தெரிவித்துள்ளது.

    • விஷுவல் எஃபெக்ட்ஸ் வேலைகள் தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
    • கே. மாணிக்கம் இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.

    தமிழ் மொழியில் உருவாகி இருக்கும் சைன்ஸ் ஃபிக்ஷன் ஆக்ஷன் திரைப்படம் 'ரெட் ஃப்ளவர்.' ரூ. 30 கோடி பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்திற்கான இறுதிக்கட்ட விஷுவல் எஃபெக்ட்ஸ் வேலைகள் தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.

    ரெட் ஃப்ளவர் திரைப்படத்தின் விஷுவல் எஃபெக்ட்ஸ் இயக்குநர் என். பிரபாகரின் வழிகாட்டுதலின் கீழ், புகழ்பெற்ற ஹாலிவுட் VFX நிபுணர்களான டேவிட் டோசெரோட்ஸ் மற்றும் டாம் கிளார்க் ஆகியோரால் VFX பணிகள் கண்காணிக்கப்படுகிறது.

    ஸ்ரீ காளிகாம்பாள் பிச்சர்ஸ் சார்பில் கே. மாணிக்கம் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். "ரெட் ஃப்ளவர் பார்வையாளர்களுக்கு இதுவரை கண்டிராத சர்வதேச தொழில்நுட்பம் சார்ந்த சினிமா அனுபவத்தை, ஆழமான உணர்ச்சிகள் மற்றும் உயர் ஆக்ஷனுடன் கலந்திருக்கும்," என்று இப்படத்தின் தயாரிப்பாளர் கூறினார். இந்த படத்தை ஆண்ட்ரூ பாண்டியன் எழுதி இயக்கியுள்ளார். 

    இந்தப் படத்தில் விக்னேஷ் மற்றும் மனிஷா ஜஷ்னானி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் நாசர், தலைவாசல் விஜய், ஜான் விஜய், ஒய்.ஜி. மகேந்திரன், லீலா சாம்சன், யோக் ஜேபி, நிழல்கள் ரவி, டி.எம். கார்த்திக், மோகன் ராம், சுரேஷ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ரெட் ஃப்ளவர் திரைப்படம் வருகிற ஏப்ரல் 2025 இல் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இது குறித்து அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    ×