என் மலர்
தலைப்புச்செய்திகள்
- விண்ணப்பங்கள் இணையவழி வாயிலாக பெறப்பட்டு வருகிறது.
- விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதி 03.03.2025 லிருந்து 18.03.2025 வரை நீட்டிக்கப்படுகிறது.
அரசு சட்டக் கல்லூரிகளில் இணை, உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வரும் 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்தாவது:-
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசு சட்டக் கல்லூரி இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் (சட்ட முன்படிப்பு) பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிக்கை எண். 01 / 2025, நாள். 24.01.2025 வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் இணையவழி வாயிலாக பெறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில் இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் (சட்ட முன்படிப்பு) பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதி 03.03.2025 லிருந்து 18.03.2025 மாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்படுகிறது என அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- நியூயார்க்கில் அணுஆயுத தடை ஒப்பந்த மாநாடு நடைபெற்று வருகிறது.
- பார்வையாளராக கலந்து கொண்டு ஜப்பானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அமெரிக்காவின் அணுசக்தி தடுப்பு எங்கள் நாட்டின் பாதுகாப்பிற்கு மிகமிக முக்கியமானது. இதனால் ஐ.நா. அணுஆயுத தடை ஒப்பந்த மாநாட்டில் பார்வையாளராக கலந்து கொள்ள மாட்டோம் என ஜப்பான் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த மாநாட்டில் கலந்து கொண்டால் அது ஜப்பானின் அணுசக்தி தடுப்பு கொள்கை தொடர்பாக அமெரிக்காவுக்கு தவறான தகவலை அனுப்புவதாகிவிடும் எனத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஜப்பான் அமைச்சரவையின் தலைமை செயலாளர் யோஷிமசா ஹயாஷி கூறுகையில் "ஜப்பானின் தேசிய பாதுகாப்புதான் இந்த முடிவு எடுக்க முக்கிய காரணம்" எனத் தெரிவித்துள்ளார்.
"கடுமையான பாதுகாப்பு சூழலின் கீழ் மக்களின் உயிர்களையும் சொத்துக்களையும் பாதுகாக்கவும், ஜப்பானின் இறையாண்மை மற்றும் அமைதியைப் பாதுகாக்கவும் அணுசக்தித் தடுப்பு இன்றியமையாதது" எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த மாநாடு அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் இன்று தொடங்கியது.
ஐ.நா.வின் 2017-ம் ஆண்டு அணுஆயுத தடை ஒப்பந்தத்திற்கு கடந்த 2017-ம் ஆண்டு ஒப்புதல் கிடைத்தது. இது 2021-ம் ஆண்டு நடைமுறைக்கு கொணடு வரப்பட்டது. இரண்டாம் உலகப்போரில் ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது. இதேபோன்று மீண்டும் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக ஐ.நா. இந்த நடவடிக்கையை கொண்டு வந்தது.
அணுகுண்டு தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஜப்பான் மட்டும் இன்னும் ஐ.நா.வின் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. அணு ஆயுதங்கள் வைத்துள்ள நாடுகளின் பங்களிப்பு இல்லாமல் இது சாத்தியமில்லை எனக் கூறி ஜப்பான் கையெழுத்திட மறுத்துவிட்டது.
- மேத்யூ ஷார்ட் காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகி உள்ளார்.
- ஷார்ட்க்கு பதிலாக கூப்பர் கோனாலி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
துபாய்:
8 நாடுகள் பங்கேற்ற ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி கடந்த 19-ந் தேதி தொடங்கியது. பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்ற இந்த போட்டி தொடரின் லீக் ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்தது.
இன்று ஓய்வு நாளாகும். முதல் அரை இறுதி ஆட்டம் துபாயில் நாளை (4-ந் தேதி) நடக்கிறது. இதில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. 2-வது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றனர். இந்த போட்டி வருகிற 5-ந் தேதி நடக்கிறது. இறுதிப்போட்டி 4 நாட்கள் ஓய்வுக்கு பிறகு 9-ந் தேதி நடக்கிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க அதிரடி ஆட்டக்காரர் மேத்யூ ஷார்ட் காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகி உள்ளார். இவருக்கு பதிலாக கூப்பர் கோனாலி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
- கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமாவில் ராஷ்மிகா மந்தனா சினிமாவில் அறிமுகமானார்.
- கர்நாடகா எங்கே இருக்கிறது என தெரியாது என்று ராஷ்மிகா கூறியதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
2016 ஆம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமாவில் ராஷ்மிகா மந்தனா சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில் ரக்ஷித் ஷெட்டிக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்திருந்தார். அப்போது இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளனர் என்றும் தகவல் பரவியது.
பின்னர் ராஷ்மிகா தெலுங்கு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறிய பிறகு இந்த திருமணத்தை நிறுத்தியதாக கூறப்படுகிறது. தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய அளவில் முன்னணி நடிகையாக ராஷ்மிகா மந்தனா வலம்வருகிறார்.
இந்நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனா கன்னடத்தை புறக்கணிப்பதாக கர்நாடகா மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரவிக்குமார் கவுடா குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக பேட்டி அளித்த ரவி, "கன்னட மொழி படத்தின் மூலம் திரையுலகில் வாழ்க்கையை தொடங்கிய நடிகை ராஷ்மிகா தற்போது கன்னடத்தை புறக்கணிக்கிறார். கடந்த ஆண்டு சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க நாங்கள் அழைத்தபோது ராஷ்மிகா மறுத்து விட்டார்
என் வீடு ஹைதராபாத்தில் உள்ளது. கர்நாடகா எங்கே இருக்கிறது என தெரியாது, என்னால் வர முடியாது என்று ராஷ்மிகா கூறிவிட்டார் கன்னடத்தை புறக்கணித்த ராஷ்மிகாவுக்கு பாடம் கற்பிக்க வேண்டாமா?" என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ரோகித் சர்மா தனது உடல் எடையை குறைக்க வேண்டும் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கூறினார்.
- இதுபோன்ற விமர்சனங்களை புறந்தள்ளிவிட்டு வீரர்கள் தங்கள் விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும்.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்கி விளையாடி வருகிறது. இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று நியூசிலாந்தை எதிர்கொண்டு விளையாடியது. இதில் இந்திய அணி வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது. நாளை நடைபெறும் அரையிறுதி சுற்று போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
இந்த நிலையில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவின் உடல் பருமன் குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷமா முகமது கடுமையாக விமர்சனம் செய்தார். அதில், "ரோகித் சர்மா உடல் பருமனான விளையாட்டு வீரர். அவர் தனது உடல் எடையை குறைக்க வேண்டும். நிச்சயமாக இந்தியா இதுவரை கண்டிராத மிகவும் ஈர்க்க முடியாத கேப்டன்," என்று குறிப்பிட்டு இருந்தார்.
இவரது கருத்து சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரரது கருத்துக்கு பாஜக முதல் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். தனது கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதை அடுத்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷமா முகமது, ரோகித் சர்மா குறித்த பதிவை தனது எக்ஸ் தள பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார்.
இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முழு உடற்தகுதியுடன் இருப்பதாக பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
அதில், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முழு உடற்தகுதியுடன் இருக்கிறார். விளையாட்டு வீரர்கள் குறித்த தனிப்பட்ட நபர்களின் கருத்துகளுக்கு மதிப்பு கொடுக்கத்தேவையில்லை. இதுபோன்ற விமர்சனங்களை புறந்தள்ளிவிட்டு வீரர்கள் தங்கள் விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும்.
- கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்பதை கவர்னர் ஆர்.என். ரவி விளக்குவாரா ?
- பா.ஜ.க.வின் இரட்டை வேடம் மட்டுமல்ல, பிரதமர் மோடியின் இரட்டை வேடமும் அம்பலமாகியுள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ராமேஸ்வரம் சென்ற கவர்னர் ஆர்.என். ரவி, மீனவர்களை சந்தித்து நீலிக் கண்ணீர் வடிக்கிறார்.
இதே ராமநாதபுரத்தில் கடல் தாமரை மாநாடு நடத்திய போது, பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும், மீனவர்கள் கைதும், படகுகள் பறிமுதலும் இருக்காது என்று அன்றைய எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் 2014 தேர்தலுக்கு முன்பு வாக்குறுதி கொடுத்தார்.
அதை நிறைவேற்றுவதற்கு கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்பதை கவர்னர் ஆர்.என். ரவி விளக்குவாரா ?
சமீபத்தில் இலங்கை அதிபராக தேர்வு செய்யப்பட்ட அநுரகுமார திசாநாயக்க தலைநகர் புதுடெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த போது இலங்கை அரசுக்கு 4 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்கியதையும், இலங்கை அரசின் கடனை சீரமைக்க இந்தியா மேலும் ஆதரவளிக்கும் என்றும் பிரதமர் மோடி உறுதி கூறினார்.
இலங்கைக்கு நிதியுதவி செய்கிற பிரதமர் மோடி, கச்சத்தீவை திரும்ப ஒப்படைக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தாரா? ஏன் வைக்கவில்லை?
2024 தேர்தல் பிரச்சாரத்தில் கச்சத்தீவை பற்றி பிரதமர் மோடி பேசியதற்கு பிறகு இதுவரை அதனை மீட்பதற்கு என்ன நடவடிக்கை எடுத்தார்? இதன்மூலம் பா.ஜ.க.வின் இரட்டை வேடம் மட்டுமல்ல, பிரதமர் மோடியின் இரட்டை வேடமும் அம்பலமாகியுள்ளது.
எனவே, தமிழக மீனவர் பிரச்சினையை தீர்க்க வேண்டுமென்று தமிழக கவர்னருக்கோ, மத்திய பா.ஜ.க. அரசுக்கோ அக்கறை இருக்குமேயானால் அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அதுகுறித்து நடவடிக்கை எடுக்க கையாலாகவில்லை எனில் கச்சத்தீவை பற்றி கவர்னர் ஆர்.என். ரவியும், பா.ஜ.க.வினரும் பொதுவெளியில் பிதற்றாமல் இருப்பது நல்லது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் இடையே வர்த்தக எல்லையாக டோர்காம் உள்ளது.
- இருதரப்பு பிரச்சனையால் 11 நாட்களுக்கு மேலாக இந்த எல்லை மூடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள டோர்காம் முக்கிய எல்லைப் பகுதியாக திகழ்ந்து வருகிறது. இரு நாட்டு வர்த்தகத்திற்கும் இது முக்கிய எல்லையாகும். இரு பக்கங்களில் இருந்தும் தினந்தோறும் நூற்றுக்கணக்கான சரக்கு லாரிகள் மற்றும் வாகனங்கள் செல்லும்.
இரண்டு பக்கங்களிலும் அந்தந்த நாட்டின் பாதுகாப்புப்படை வீரர்கள் எல்லை பாதுகாப்பு நிலையம் (border post) அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர் டோர்காம் எல்லையில் புதிய எல்லை நிலையம் கட்டி வருகிறது. இதற்கு பாகிஸ்தான் ஆட்சேபனை தெரிவித்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 11 நாட்களாக டோர்காம், சமான் எல்லைகள் மூடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று அதிகாலை ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப்படையினர் டோர்காம் எல்லையில் பாகிஸ்தான் எல்லை நிலையங்கள்களை (Border Post) குறிவைத்து தானியங்கி துப்பாக்கி மூலம் தாக்குதல் நடத்தினர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர் என பாகிஸ்தான் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசிடம் இருந்து உடனடியாக பதில் ஏதும் வரவில்லை.
டோர்காம் எல்லையின் இரு பக்கங்களிலும் ஆயிரக்கணக்கான லாரிகள் மற்றும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டுள்ளனர். கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் கடுமையாக வெப்பத்தில் மக்கள் எல்லையை கடக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
- இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட பழக்கத்தை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர்.
- நுசைபா புகாரின் பேரில் அவரது கணவர் அப்துல் ரசாக் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் காசர் கோடு மாவட்டம் நெல்லிக் கட்டை பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரசாக்(வயது26). இவர் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் கல்லூராவி பகுதியை சேர்ந்த நுசைபா (21) என்பவருக்கும் கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.
இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட பழக்கத்தை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு அப்துல் ரசாக் மீண்டும் சவுதி அரேபியாவுக்கு சென்றுவிட்டார். இந்தநிலையில் அவர் தனது மனைவியின் தந்தைக்கு கடந்த மாதம் 'வாட்ஸ்அப்' மூலமாக தகவல் ஒன்றை அனுப்பியிருக்கிறார்.
அதில் அவர் உங்களின் மகளை "முத்தலாக்" செய்வதாக அவர் கூறியிருக்கிறார். அப்துல் ரசாக் மூன்று முறை வாட்ஸ்அப்பில் குரல் பதிவை அனுப்பியிருக்கிறார். அதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த நுசைபா, தனது கணவரின் மீது காசர்கோடு ஹோஸ்துர்க் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
முத்தலாக் தடைச்சட்டம் அமலுக்கு வந்தபிறகு ஒருவர் முத்தலாக் செய்ததாக கேரளாவில் வந்த முதல் குற்றச்சாட்டு இதுதான். ஆகவே நுசைபா புகாரின் பேரில் அவரது கணவர் அப்துல் ரசாக் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
இந்த வழக்கில் அப்துல் ரசாக்கின் தாயை இரண்டாவது குற்றவாளியாகவும், சகோதரியை மூன்றாவது குற்றவாளியாகவும் போலீசார் சேர்த்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கி இருக்கின்றனர்.
- 30% வழக்குகளில் அதாவது 6110 வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் போதிய ஆதாரங்கள் இல்லை.
- பல வழக்குகள் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளன.
10% போக்சோ வழக்குகளில் கூட குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை, 12,170 வழக்குகள் நிலுவை- பெண் குழந்தைகளுக்கு நீதி வழங்கும் அழகு இது தானா? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான, குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதற்கு, அத்தகைய குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு குறித்த காலத்தில் நீதி வழங்கப்படாதது தான் காரணம் என்று பாட்டாளி மக்கள் கட்சி குற்றஞ்சாட்டி வந்த நிலையில், அந்தக் குற்றச்சாட்டு உண்மை தான் என்று நிரூபிக்கும் வகையில் புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன.
பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைச் செய்தவர்களுக்கு தண்டனை பெற்றுத் தரும் விவகாரத்தில் தமிழக அரசு இந்த அளவுக்கு அலட்சியம் காட்டுவது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரை மொத்தம் 21,672 வழக்குகள் போக்சோ சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்டு, 20,303 வழக்குகள் நீதிமன்றங்களுக்கு வந்த நிலையில், அவற்றில் 2023 வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.
30% வழக்குகளில் அதாவது 6110 வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் போதிய ஆதாரங்கள் இல்லை என்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் தவிர 12 ஆயிரத்து 170 வழக்குகள், அதாவது 60% வழக்குகள் இன்னும் விசாரிக்கப்படாமல் நீதிமன்றங்களில் முடங்கிக் கிடக்கின்றன. இவற்றில் பல வழக்குகள் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளன.
போக்சோ சட்டத்தின்படி பதிவு செய்யப்படும் வழக்குகளில் ஓராண்டுக்குள் அனைத்து நடைமுறைகளும் முடிவடைந்து தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.
ஆனால், தமிழ்நாட்டில் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக வழக்குகள் தேங்கிக் கிடப்பதற்கு காரணம் போதிய எண்ணிக்கையில் போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படாததும், புலன் விசாரணைகள் சரியாக மேற்கொள்ளப்படாததும் தான். இதற்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
எந்தெந்த மாவட்டங்களில் எல்லாம் 100-க்கும் கூடுதலான போக்சோ வழக்குகள் நிலுவையில் உள்ளனவோ, அங்கெல்லாம் ஒரு போக்சோ சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும்; 300-க்கும் கூடுதலான போக்சோ வழக்குகள் நிலுவையில் இருந்தால், அங்கு இரு சிறப்பு போக்சோ நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன; 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 300-க்கும் கூடுதலான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதன்படி பார்த்தால் தமிழ்நாட்டில் குறைந்தது 53 போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், தமிழ்நாட்டில் இன்று வரை 20 போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் மட்டும் தான் அமைக்கப்பட்டுள்ளன. இது தேவையான நீதிமன்றங்களில் மூன்றில் ஒரு பங்கு மட்டும் தான்.
தென்காசி மாவட்டத்தில் புதிய போக்சோ சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் இன்று வரை அங்கு நீதிமன்றம் அமைக்கப்படவில்லை.
திருவள்ளூர் மாவட்டத்திற்கான போக்சோ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2021-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. ஆனால், நான்காண்டுகள் கழித்து கடந்த பிப்ரவரி மாதம் தான் நீதிமன்றம் திறக்கப்பட்டது. பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நீதி வழங்கும் விவகாரத்தில் தமிழக அரசு இந்த அளவுக்குத் தான் அக்கறை காட்டுகிறது.
பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளில் ஓராண்டுக்குள் தீர்ப்பு வழங்கப்படும் வழக்குகளில் மட்டும் தான் குற்றவாளிகள் தண்டிக்கப்படுகின்றனர்.
அதன்பின் அந்த வழக்கு விசாரணையில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பத்தினர் ஆர்வம் காட்டுவதில்லை என்பதால், குற்றவாளிகள் எளிதாக தப்பி விடுகின்றனர் என்று சட்ட வல்லுனர்கள் கூறுகின்றனர்.
அவ்வாறு குற்றவாளிகள் தப்பி விடுவதால் தான் குற்றவாளிகள் மத்தியில் அச்சம் குறைந்து குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கின்றன.
பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்வோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நீதி வழங்குவதில் அக்கறை காட்டும் அழகு இது தானா?
பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் என்றால், அத்தகைய குற்றங்களில் ஈடுபட்டால் தண்டிக்கப்படுவோம் என்ற அச்சம் நிலவ வேண்டும்.
அதை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாட்டில் தேவையான எண்ணிக்கையில் போக்சோ சிறப்பு நீதிமன்றங்களைத் திறந்து நிலுவையில் உள்ள வழக்குகள் அனைத்தையும் ஓராண்டுக்குள் முடித்து தீர்ப்பு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பெண்களை சீமான் இழிவாக பேசி வருகிறார் என்று பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர்.
- சீமான் மீதான வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை வைத்துள்ளது.
சீமான் தன்னை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக விஜயலட்சுமி அளித்த புகார் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சீமானுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் இருந்து சீமானை விடுவிக்க முடியாது என்றும்
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கின் விசாரணையை 12 வாரத்திற்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த வழக்கின் விசாரணைக்கு இடையே விஜயலட்சுமி குறித்து சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. பெண்களை சீமான் இழிவாக பேசி வருகிறார் என்று பலரும் சீமானுக்கு கண்டனம் தெரிவித்தனர்.பெண்களை சீமான் இழிவாக பேசி வருகிறார் என்று பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், உயர்நீதிமன்றத்திரன் இந்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை வைத்துள்ளது.
இதனிடையே, சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டின் வெளிப்பக்க கதவில் மீண்டும் சம்மன் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. போலீசார் சம்மன் நோட்டீசை ஒட்டிவிட்டு சென்ற சிறிது நேரத்தில் அந்த சம்மனை சீமான் வீட்டு பணியாளர் ஒருவர் கிழித்தெறிந்தார்.
அதன்பேரில் சம்மனை கிழித்த சீமான் வீட்டு பணியாளரை கைது செய்வதற்காக நீலாங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவீன்ராஜேஷ் சீமான் வீட்டுக்கு சென்றார்.
அங்கு காவலாளிகளுக்கும், போலீசாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சம்மனை கிழித்தவர் மற்றும் சீமான் வீடு காவலாளியை போலீசார் கைது செய்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியை விட்டு அண்மையில் வெளியேறிய காளியம்மாளிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அவர், சம்மனை வீட்டில் கொடுத்திருக்கலாம். அதை இவ்வளவு பெரிய விஷயமாக மாறியிருக்க தேவையில்லை.நேர்மையான முறையில் அரசு அதிகாரி இவ்விஷயத்தை கையாண்டிருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
சில நாட்களாக பெண்கள் குறித்து சீமான் இழிவாக பேசியது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, "சீமான் பெண்கள் பற்றி பேசிய வீடியோவை இன்னும் சரியா பாக்கல" என்று காளியம்மாள் பதில் அளித்தார்.
- பெண்களுக்கு மாதற்தோறும் 2500 ரூபாய், மானிய விலை சிலிண்டர் அறிவிப்பு பட்ஜெட்டில் இடம் பெற வேண்டும்.
- 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்க வேண்டும்.
பீகார் மாநிலத்தில் பாஜக ஆதரவுடன் ஐக்கிய ஜனதா தளம் (JDU) ஆட்சி அமைத்துள்ளது. ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் நிதிஷ் குமார் முதல்வராக இருந்து வருகிறார்.
பீகார் மாநில சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், ராஷ்டிரிய கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் மனைவியும், முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி (தற்போது எதிர்க்கட்சி தலைவர்), கட்சித் தலைவர்களுடன் சட்டமன்றத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது "ஏழை பெண்களுக்கு மாதம் 2500 ரூபாய் வழங்க வேண்டும். சமையல் எரிவாயு சிலிண்டர் 500 ரூபாய்க்கு வழங்க வேண்டும். பெண்களுக்கு சமூக பாதுாப்பு வழங்க வேண்டும்" போன்றவை பட்ஜெட்டில் இடம் பெற வேண்டும் என வலியுறுத்தினார்.
அத்துடன் "நிதிஷ் குமார் அரசு மாதந்தோறும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி நாங்கள் அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம்" என்றார்.
இதற்கிடையே அவரது மகனும், பீகார் மாநில முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், "என்.டி.ஏ. அரசு இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற தவறினால், இந்த வருடம் இறுதியில் நடைபெறும் தேர்தல் அவர்களுக்கு அரசுக்கு கடைசியாக இருக்கும். தேர்தலுக்குப் பிறகு நாங்கள் மக்களுக்கு தேவையானதை செய்வோம்" எனக் கூறியிருந்தார்.
- கம்யூனிஸ்டு கட்சியில் செயல்படாத தலைவர்கள் உள்ளனர்.
- அண்ணா பல்கலைக்கழக பாலியல் சம்பவம், பொள்ளாச்சி சம்பவம் உள்ளிட்ட 26-க்கும் மேற்பட்ட பாலியல் சம்பவங்கள் நடந்துள்ளன.
மதுரை:
மதுரையில் இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
என் மீது ஆதாரமில்லாத, அவதூறான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆதாரமற்ற வழக்கை தடை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன். எப்படி இவ்வழக்கு விசாரித்தாலும் அவதூறு வழக்காகத்தான் தெரியவரும். இந்த வழக்கை நான் சட்டப்படி எதிர்கொள்வேன்.
சென்னையில் பெரியார் திராவிடர் கழகத்தினர் என்னை பற்றி அவதூறு சுவரொட்டிகளை ஒட்டி உள்ளனர். அவ்வளவுதான் அவர்களது நாகரீகம். திருமணம் செய்யாதே, கற்பு இல்லை என்பது பெரியாரின் கோட்பாடு. ஆனால் அவர்களாலேயே அதை கடைபிடிக்க முடியவில்லை. அதனால்தான் இதுபோன்ற கேவலமான செயல்ளை பெரியார் திராவிடர் கழகத்தினர் செய்து வருகின்றனர். என்னையும், என்னை பற்றியும் பேச தி.மு.க.விற்கும், திராவிடர் கழகத்திற்கும் தகுதி இல்லை.
பாலியல் வழக்கு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்திருப்பதை வரவேற்கிறேன். எந்த விசாரணைக்கும் தயாராக உள்ளேன். எனக்கு ஏற்பட்ட நிலைமை வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது.
இந்த வழக்கில் பேச தகுதியற்றவர்கள் கம்யூனிஸ்டு கட்சியினர். காம்ரேட்டில் இருந்து கார்ப்பரேட்டாக மாறி உள்ளனர். பாலியல் குற்றவாளி என நீதிமன்றம் கூறாத நிலையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சண்முகம் என்னை எப்படி பாலியல் குற்றவாளி என கூறுகிறார்?. கம்யூனிஸ்டு கட்சியில் செயல்படாத தலைவர்கள் உள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழக பாலியல் சம்பவம், பொள்ளாச்சி சம்பவம் உள்ளிட்ட 26-க்கும் மேற்பட்ட பாலியல் சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் அதை பற்றி கம்யூனிஸ்டு கட்சியினர் வாய் திறக்கவில்லை.
கம்யூனிஸ்டு கட்சியில் உண்மையான தலைவராக நல்லக்கண்ணு மட்டுமே உள்ளார். நல்லக்கண்ணுக்கு ஏன் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு கொண்டாடவில்லை? மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு 90 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில் தற்போது 6 சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று உள்ளது.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி ஆட்சி காலத்தில் 12 சீட்கள் பெற்ற நிலையில் தற்போது அவர்களது நிலைமை மோசமாக உள்ளது. எந்த பிரச்சனைகளுக்கும் கம்யூனிஸ்டு கட்சி போராட முன்வரவில்லை. மும்மொழி கொள்கை, கச்சத்தீவு, காவிரி பிரச்சனை உள்ளிட்ட வற்றில் கம்யூனிஸ்டு கட்சியின் நிலைபாடு தெரியவில்லை. திராவிடர் கழகத்தினர் எனக்கு அவப்பெயரை ஏற்படுத்தி இழிவுபடுத்த வேண்டுமென செயல்படுகின்றனர்.
கடந்த 15 ஆண்டுகளாக பாலியல் புகார் தொடர்பான பிரச்சனை உள்ளது. தற்போது தீவிரம் அடைந்துள்ள இந்த பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும். இதுதொடர்பாக என்னையும், என் குடும்பத்தையும் தொடர்ந்து அவதூறாக பேசி வருகின்றனர். அதனை எல்லாம் பொறுத்து கண்ணியம் காத்து வருகிறேன்.
இந்த பிரச்சனை முடிவுக்கு வரவேண்டும். தி.மு.க. தலைவர்களும், வாடகை தலைவர்களை அமர்த்தி இந்த பிரச்சனையை பேசி வருகின்றனர். இந்த பிரச்சனைக்கு விரைவில் முடிவு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.






