என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஜாஸ் இங்கிலீஸ் கேட்சை விராட் கோலி பிடித்தார்.
    • சர்வதேச கிரிக்கெட்டில் 335 கேட்சுகள் பிடித்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

    இதில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது.

    45.1 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் அடித்து ஆடி வருகிறது. இப்போட்டியில் ஜாஸ் இங்கிலீஸ் கேட்சை விராட் கோலி பிடித்தார்.

    இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 335 கேட்சுகள் பிடித்து அதிக கேட்ச் பிடித்த இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார்.

    விராட் கோலிக்கு அடுத்தபடியாக ராகுல் டிராவிட் 334 கேட்சுகளும் அசாருதின் 261 கேட்சுகளும் சச்சின் 256 கேட்சுகளும் பிடித்துள்ளனர்.

    மேலும், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக கேட்ச் பிடித்தவர்களின் பட்டியலில் ஜெயவர்த்தனே (440), ராஸ் டெய்லர் (351), ரிக்கி பாண்டிங் (364) ஆகியோருக்கு அடுத்து 4 ஆவது இடத்தில விராட் கோலி உள்ளார்.

    • 1954 ஆம் ஆண்டில் தனது 18 ஆவது வயதில் ஹாரிசன் ரத்த தானம் கொடுக்க தொடங்கினார்.
    • தனது 81 ஆவது வயது வரை 1,173 முறை ரத்த தானம் கொடுத்து ஹாரிசன் சாதனை படைத்துள்ளார்.

    ரத்த தானத்தின் மூலம் சுமார் 2.4 மில்லியன்(24லட்சம்) குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜேம்ஸ் ஹாரிசன் (88) காலமானார். Man with the golden arm என அறியப்படும் ஹாரிசன் கடந்த பிப்ரவரி 17 அன்று நியூ சவுத் வேல்ஸ்சில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    1954 ஆம் ஆண்டில் தனது 18 ஆவது வயதில் ஹாரிசன் ரத்த தானம் கொடுக்க தொடங்கினார். அன்று தொடங்கி கடந்த 2018 இல் தனது 81 ஆவது வயது வரை 1,173 முறை ரத்த தானம் கொடுத்து ஹாரிசன் சாதனை படைத்துள்ளார்.

     

    அவரது ரத்த தானம் மூலம் உலகம் முழுவதிலும் 2.4 மில்லியன் குழந்தைகளின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. ஹாரிசன் உடைய ரத்தத்தின் பிளாஸ்மாவில் ஆன்டி -டி (Anti-D) என்ற அரியவகை Antibody உள்ளது.

    இது பிரசவத்தின்போது தாயிடம் இருந்து குழந்தைக்குப் பரவும் தீங்கு விளைவிக்கும் Antibody களை தடுக்கும் வல்லமை கொண்டது. 2005 முதல் கடந்த 2022 வரை அதிக ரத்த பிளாஸ்மா தானம் கொடுத்ததற்கான உலக சாதனையை ஹாரிசன் தன்வசம் வைத்திருந்தார்.

    அதன் பின் அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் அந்த சாதனையை முறியடித்தார். ஜேம்ஸ் ஹாரிசன் மறைவுக்கு உலகெங்கிலும் உள்ள சமூக ஆர்வலர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    • ஆழ்துளை எரிவாயுக் கிணறு அமைக்கும் நடவடிக்கை முழு கடலோரப் பகுதியை பாதிக்கப்படைய செய்யும்.
    • இது கடலோர சமூகங்களிடையே பெருத்த அச்சத்தை உருவாக்கியுள்ளது என்றார்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

    தமிழ்நாட்டின் கடற்கரையோரத்தில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ஒன்றிய அரசு மேற்கொண்டிருக்கும் கடல்சார் ஆழ்துளை எரிவாயுக் கிணறுகள் அமைக்கும் நடவடிக்கை குறித்து ஆழ்ந்த கவலையைத் தெரிவிக்கிறேன்.

    ஒன்றிய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் ஹைட்ரோகார்பன் இயக்குநரகம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு தொகுதிகளை ஏலம் விடுவதற்கான திறந்தவெளி பரப்புரிமை கொள்கை (Open Acreage Licensing Policy-Bid Round-X) அறிவிப்பினை 11.02.2025 அன்று தொடங்கியிருக்கிறது. அந்த அறிவிப்பில் காவிரிப் படுகையில் CY-DWHP-2024/1 என்ற தொகுதி பெயரில் 9990.96 சதுர கி.மீ. பரப்பளவும் அடங்கும். இது மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகத்திற்குள்ளும், பாக் விரிகுடா மற்றும் வாட்ஜ் கரைக்கு அருகில் உள்ளது.

    மன்னார் வளைகுடா கடல் தேசியப் பூங்காவை உள்ளடக்கிய மன்னார் வளைகுடா கடற்பகுதி, உயிர்க்கோளக் காப்பகமாக ஒன்றிய அரசால் 18.02.1989 அன்று அறிவிக்கப்பட்டது. இது பவளப்பாறைகள், கடல் புல் படுகைகள், சதுப்பு நிலங்கள், கழிமுகங்கள், சேற்றுப் படுகைகள், தீவுகள் மற்றும் காடுகள் போன்ற பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளை உள்ளடக்கிய வளமான பல்லுயிர் பெருக்கத்தைக் கொண்டுள்ளது.

    இந்த உயிர்க்கோளக் காப்பகம், இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் கடற்கரையிலிருந்து 560 சதுர கி.மீ பரப்பளவில், பரந்து விரிந்து கிடக்கும் 21 தீவுகள் மற்றும் அருகிலுள்ள பவளப்பாறைகளின் சங்கிலியைக் கொண்டுள்ளது. இது பல்வேறு வகையான கடல் விலங்கினங்களின் புகலிடமாக விளங்கி வருகிறது.

    தமிழ்நாடு அரசு செப்டம்பர் 2021-ல் பாக் விரிகுடாவில் மிக அரிதான கடற்பசு (Dugong) இனத்தைப் பாதுகாக்கும் வகையில், இந்தியாவின் முதல் கடற்பசு பாதுகாப்பகத்தை அறிவித்துள்ளது. இது தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் கடலோரப் பகுதியில் 448 சதுர கி.மீ. பரப்பளவை உள்ளடக்கியது.

    இந்தப் பகுதியில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுவிற்கான ஆழ்துளை எரிவாயுக் கிணறுகள், இந்தப் பகுதிகளில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய சுற்றுச்சூழல் அமைப்பு, அவற்றின் வளமான பல்லுயிர் பெருக்கம் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தக்கூடும் மற்றும் கடலின் ஒட்டுமொத்த பாதுகாப்பினையும் சீர்குலைக்கக்கூடும்.

    வண்டல் படிவுகள், நச்சுக் கழிவுகள் வெளியேற்றம் மற்றும் கடல்வாழ் உயிரினங்களின் அழிவு போன்ற அபாயங்கள் மட்டுமின்றி, மன்னார் வளைகுடாவை தங்கள் வாழ்வாதாரத்திற்காக நம்பியுள்ள லட்சக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும்.

    ஒன்றிய அரசின் ஆழ்துளை எரிவாயுக் கிணறுகள் அமைக்கும் நடவடிக்கைகளால் ஏற்படும் இதுபோன்ற எந்தவொரு இடையூறும், முழு கடலோரப் பகுதியையும் பாதிக்கப்படையச் செய்யும். இது கடலோர சமூகங்களிடையே பெருத்த அச்சத்தை உருவாக்கியுள்ளது.

    துரதிர்ஷ்டவசமாக, இந்த ஏல அறிவிப்புக்கு முன்பாக ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசிடம் கருத்து எதையும் கேட்கவில்லை. உரிய ஆலோசனை கேட்கப்பட்டிருந்தால், மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பிரச்சனைகள் குறித்தும் தமிழ்நாடு அரசின் சார்பில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டிருக்கும்.

    எனவே, இந்தச் சூழ்நிலையில், ஒன்றிய அரசின் இந்த ஆழ்துளை எரிவாயுக் கிணறுகள் அமைப்பதற்கான ஏல முடிவினை மறுபரிசீலனை செய்யுமாறும், ஆழ்துளை எரிவாயுக் கிணறுகள் அமைப்பதற்காக அறிவிக்கப்பட்ட அனைத்து பல்லுயிர் நிறைந்த பகுதிகளையும் OALP-இலிருந்து நீக்குமாறும் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளோம்.

    எளிதில் பாதிக்கப்படக்கூடிய, பாதுகாக்கப்பட்ட இந்தச் சுற்றுச்சூழல் அமைப்புகளின் எதிர்காலம் ஆபத்தில் இருப்பதைக் கருத்தில் கொண்டு, இந்த முக்கியமான பிரச்சனையில் பிரதமர் தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 20 நாட்கள் போராட்டம் நடத்த விவசாயிகள் அனுமதி கோரி மனு.
    • இரண்டு நாட்கள் போராட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி.

    விவசாய நிலங்களை கோவில் நிலங்கள் எனக்கூறி, இந்து அறநிலைய துறை விவசாயிகளை வாடகைத்தாரர்களாக மாற்றுவதை கண்டித்து 20 நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்து அறநிலைய துறைக்கு எதிராக 2 நாட்கள் போராட்டம் நடத்த விவசாயிகளுக்கு அனுமதி அளித்துள்ளது.

    • சூர்யாவின் 44வது படமான 'ரெட்ரோ' திரைப்படத்தை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார்.
    • ரெட்ரோ படம் வரும் மே 1 வெளியாகவுள்ளது.

    சூர்யாவின் 44வது படமான 'ரெட்ரோ' திரைப்படத்தை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

    இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடிகை ஸ்ரேயா சிறப்பு நடனம் ஆடியுள்ளார். ரெட்ரோ படம் வரும் மே 1 வெளியாகவுள்ளது.

    படத்தின் ஆடியோ உரிமையை டி சீரிஸ் பெற்றுள்ளது. படத்தின் முதல் பாடலான கண்ணாடி பூவே பாடல் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    படத்தின் படப்பிடிப்பு காட்சியை படக்குழு காமிக் வடிவத்தில் வாரவாரம் வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் காமிக்கின் 4-வது அத்தியாயத்தை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. அதில் கண்ணாடி பூவே பாடல் உருவான விதத்தை பற்றி கூறியுள்ளனர்.

    சென்னையில் BSNL ஆபிசில் தத்ரூபமான மதுரை சிறைச்சாலை செட் அமைத்துள்ளனர். அதில் கண்ணாடி பூவே பாடலை படமாக்கியுள்ளனர். இந்த செட்டை பார்த்து சூர்யா மிகவும் ஆச்சர்யப்பட்டதாக அதில் கூறியுள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் கொடுக்க வேண்டும் என பிரேமலதா தெரிவித்திருந்தார்.
    • தே.மு.தி.க.விற்கு ராஜ்யசபா சீட் கொடுப்பதாக யார் சொன்னது? என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

    சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, "எங்களுக்கு ஒரே எதிரி தி.மு.க. மட்டும் தான். தி.மு.க.வை தவிர வேறு எந்த கட்சியும் எதிரி கிடையாது. பா.ஜ.க.வுடன் கூட்டணியா என்பது குறித்து தேர்தல் சமயத்தில் தெரிவிக்கப்படும். எங்களுடைய ஒரே இலக்கு தி.மு.க.வை வீழ்த்துவது மட்டும் தான்" என்று தெரிவித்தார்.

    அப்போது தே.மு.தி.க.விற்கு ராஜ்யசபா சீட் வழங்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, "தே.மு.தி.க.விற்கு ராஜ்யசபா சீட் கொடுப்பதாக யார் சொன்னது? என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

    அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது கண்டிப்பாக கொடுத்தே ஆக வேண்டும் என பிரேமலதா கூறி வந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தெரிவித்த பதிலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், ராஜ்யசபா சீட் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கூறியது தொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் அக்கேள்விக்கு பதில் அளிக்காமல் பிரேமலதா கடந்து சென்றார்.

    இந்நிலையில், மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் எக்ஸ் பக்கத்தில், "சத்தியம் வெல்லும் நாளை நமதே" என்று பதிவிடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • ஆஸ்திரேலிய அணி 28 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்தது.
    • ஸ்டீவ் ஸ்மித் அரை சதம் அடித்து 73 ரன்னில் அவுட்டானார்.

    துபாய்:

    சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி துபாயில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது.

    ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட், கூப்பர் கோனோலி களமிறங்கினர். கோனோலி ஷமி பந்து வீச்சில் டக் அவுட்டானார்.

    அடுத்து டிராவிஸ் ஹெட்டுடன் கேப்டன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 50 ரன்கள் சேர்த்த நிலையில் டிராவிஸ் ஹெட் 39 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து லபுசேன் களமிறங்கினார். ஸ்மித்-லபுசேன் ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்தது.

    3வது விக்கெட்டுக்கு 106 ரன்கள் சேர்த்த நிலையில் லபுசேன் 29 ரன்னில் அவுட்டானார். நிதானமாக ஆடிய ஸ்டீவ் ஸ்மித் அரை சதம் கடந்தார். இங்கிலீஸ் 11 ரன்னில் வெளியேறினார். ஆஸ்திரேலிய அணி 27 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்துள்ளது.

    5வது விக்கெட்டுக்கு இணைந்த ஸ்மித்-அலெக்ஸ் கேரி ஜோடி 54 ரன்கள் சேர்த்த நிலையில், சிறப்பாக ஆடிய ஸ்மித் 73 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் 7 ரன்னில் அவுட்டானார்.

    ஆஸ்திரேலியா 40 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 213 ரன்கள் எடுத்துள்ளது.

    இந்தியா சார்பில் ஷமி 2 விக்கெட், ஜடேஜா 2 விக்கெட், வருண் சக்கரவர்த்தி, அக்சர் படேல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • ஜம்மு காஷ்மீர் சட்டசபை கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது.
    • கடந்த 2 ஆண்டில் 4.40 கோடி சுற்றுலாப் பயணிகள் ஜம்மு காஷ்மீருக்கு வந்துள்ளனர்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் சட்டசபை கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. இதில் தேசிய மாநாட்டு உறுப்பினர் முபாரக் குலின் சுற்றுலா பயணிகள் வருகை குறித்து கேள்வி எழுப்பினார். அவரது கேள்விக்கு முதல் மந்திரி உமர் அப்துல்லா பேசியதாவது:

    கடந்த இரண்டு ஆண்டுகளில் 1.20 லட்சம் வெளிநாட்டினர் உட்பட 4.40 கோடி சுற்றுலாப் பயணிகள் ஜம்மு காஷ்மீருக்கு வந்துள்ளனர்.

    2023-ம் ஆண்டில் ஜம்மு காஷ்மீருக்கு 2,11,24,674 சுற்றுலாப் பயணிகளும், 2024-ம் ஆண்டில் 2,35,24,629 பேரும் வருகை தந்துள்ளனர்.

    இவர்களில் 2023ல் 55,337 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், 2024ல் 65,452 பேரும் வருகை தந்துள்ளனர்.

    கடந்த இரண்டு நிதியாண்டுகளில் சுற்றுலாத் துறையில் விளம்பரம் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளுக்காக ரூ.35.08 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    2023-24-ம் நிதியாண்டில் ரூ.12.54 கோடியும், 2024-25-ம் நிதியாண்டில் ரூ.22.54 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீர் மக்களுக்கு சுற்றுலாத் துறை விரிவான வேலைவாய்ப்புகளை கொண்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் சுற்றுலாத் துறையின் 59 சொத்துக்கள் அவுட்சோர்சிங் செய்யப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

    முதல் மந்திரி அப்துல்லா சுற்றுலாத் துறையின் பொறுப்பாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உணவு, சிவில் சப்ளை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் தனஞ்சே முண்டேயின் ஆதரவாளர் வால்மிக் கராட் கைது செய்யப்பட்டார்.
    • குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் ரத்த வெள்ளத்தில் உள்ள சந்தோஷ் தேஷ்முக் மீது சிறுநீர் கழிப்பதும் பதிவாகியுள்ளது.

    கொலை 

    மகாராஷ்டிரா மாநிலம், பீட் மாவட்டத்தில் உள்ள மசோஜோக் கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் (சார்பாஞ்ச்) ஆக இருந்தவர் சந்தோஷ் தேஷ்முக். இவர் கடந்த டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி ஆறு பேரால் காரில் கடத்தப்பட்டு, அன்று இரவே கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார்.

    இந்த கொலை மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த படுகொலையில் தொடர்புடைய உணவு, சிவில் சப்ளை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் தனஞ்சே முண்டேயின் ஆதரவாளர் வால்மிக் கராட் கைது செய்யப்பட்டார்.

    தனஞ்சே முண்டே

     

    பின்னணி

    மசோஜோக் கிரமத்தைச் சுற்றி அமைந்த காற்றாலை கம்பெனிகளை மிரட்டி வால்மிக் கராட், கோடிக்கணக்கில் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதை அந்த கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் என்ற முறையில் சந்தோஷ் தேஷ்முக் எதிர்த்து வந்தார்.

    இதன் பின்னணியிலேயே அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. வால்மிக் கராட் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் தனஞ்சே முண்டே பதவி விலக வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வந்தன.

    ஆளும் பாஜக கூட்டணியில் இடம்பெற்ற அஜித் பவாரின் தேசியவாத காங்கிரசில் முக்கிய தலைவராக இருப்பவர் தனஞ்சே முண்டே. எனவே அஜித் பவார் அவருக்கு ஆதரவு அளித்து வந்தார். முதல்வர் தேவேந்திர பட்நாவிஸும் பொறுமை காத்தார்.

    குற்றப்பத்திரிகை

    ஆனால் சந்தோஷ் தேஷ்முக் கொலை தொடர்பான 15 வீடியோக்கள் மற்றும் 8 புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகின. போலீஸ் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்ட வீடியோ ஒன்றில், அரை நிர்வாணமாக இருக்கும் சந்தோஷ் தேஷ்முக்கை குற்றம்சாட்டப்பட்டவர்கள் கியாஸ் குழாய், மரக்கட்டைகள், கூர்மையான ஆயுதங்கள் கொண்டு தாக்குவது பதிவாகியுள்ளது.

    மற்றொரு வீடியோவில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் ரத்த வெள்ளத்தில் உள்ள சந்தோஷ் தேஷ்முக் மீது சிறுநீர் கழிப்பதும் பதிவாகியுள்ளது. குற்றப்பத்திரிகை வெளியான நிலையில் இந்த கொலை மக்களிடையே மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தனஞ்சே முண்டே பதவி விலக வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்தது.

     

     

    பதவி விலகல்

    எனவே இவ்விவகாரம் குறித்து முடிவு செய்ய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உயர் மட்ட கூட்டத்தைக் கூட்டினார். இதில் அஜித்பவார், சுனில் தட்கரே, தனஞ்சே முண்டே ஆகியோர் கலந்து கொண்டனர். நிலைமை குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    தொடர்ந்து அமைச்சர் பதவியிலிருந்து விலகும்படி தனஞ்சே முண்டேயிடம் பட்நாவிஸ் கேட்டுக்கொண்டார். இதையடுத்து முண்டே தனது அமைச்சர் பதவியை இன்று (மார்ச் 04) ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

    பதவி விலகல் குறித்து தனஞ்சே முண்டே வெளியிட்டுள்ள அறிக்கை "நான் மிகவும் நான் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன், மருத்துவ காரணங்களுக்காக ராஜினாமா செய்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார். 

    • 2022-ம் ஆண்டு மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
    • மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வற்புறுத்தக்கூடாது எனக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

    மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்தது. மேலும், இது தொடர்பாக 2022-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வற்புறுத்தக் கூடாது. இதனால் தமிழக அரசாணைக்கு தடைவிதிக்கக் கோரி உச்சநிதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது. மேலும், இந்த மனுவில் எந்த பொதுநலனும் இல்லை எனத் தெரிவித்தது.

    தமிழகத்தில் உள்ள மின் இணைப்புகளுடன், அந்த இணைப்பு வைத்திருப்பவர்கள் தங்களது ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மின்சார மானியம் பெறுவதற்கு, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியமாகிறது.

    இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின்படி, மக்கள் 100 யூனிட் மின்சார மானியத்தை பெற, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது அவசியம் என்று அறிவித்திருந்தது. அதே வேளையில் ஆதார் எண் இணைக்காதவர்களுக்கு மானியம் நிறுத்தப்படாது என்றும் அறிவித்திருந்தது.

    அதாவது மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, யார் யாருக்கு மானியம் சென்றடைகிறது என்பது குறித்த தரவுகளைப் பராமரிக்கவே ஆதார் எண் இணைக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த மூக்குத்தி அம்மன் படம் வெளியானது
    • இப்படத்தில் நயன்தாரா மீண்டும் மூக்குத்தி அம்மனாக நடிக்கவுள்ளார்.

    2020 ஆம் ஆண்டு ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த மூக்குத்தி அம்மன் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம் இயக்குநராகத் தமிழ் சினிமாவில் ஆர்.ஜே பாலாஜி அறிமுகமானார்.

    படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தை எடுக்கப்போவதாக சில மாதங்களுக்கு முன் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர். இப்படத்தில் நயன்தாரா மீண்டும் மூக்குத்தி அம்மனாக நடிக்கவுள்ளார்.

    இத்திரைப்படத்தை பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கவுள்ளார். படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளனர். படத்தின் தொடக்க பூஜை விழாவை பெரியளவில் நடத்த திட்டமிட்டுள்ளனர். வரும் மார்ச் 6 ஆம் தேதி பூஜை விழா சென்னையில் நடைப்பெற இருக்கிறது. திரைப்படம் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகவுள்ளது.

    சுந்தர் சி இயக்கத்தில் அண்மையில் வெளியான மத கஜ ராஜா திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து வடிவேலு நடிப்பில் கேங்கர்ஸ் திரைப்படம் வெளிவர இருக்கிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அதானி குழுமம் பங்குச் சந்தையில் முறைகேடு செய்ததாக ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டி இருந்தது.
    • செபி முன்னாள் தலைவர் மாதபி புரி புச் மீது வழக்கு பதிவு செய்ய மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

    அதானி குழுமம் பங்குச் சந்தையில் முறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி தலைவர் மாதபி பூரி புச்-க்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டி இருந்தது.இந்த விவகாரத்தில் மாதபி பூரி புச் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் தொடர்ச்சியாக வலியுறுத்தினார்

    அதன்படி, செபி முன்னாள் தலைவர் மாதபி புரி புச் மற்றும் 5 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மும்பை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. செபி முன்னாள் தலைவர் மாதபி புரி புச் மற்றும் 5 பேர் மீது மீது பங்குச் சந்தை மோசடி மற்றும் ஒழுங்குமுறை மீறல்கள் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி சஷிகாந்த் ஏக்நாத் ராவ் உத்தரவிட்டுள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி 30 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று பத்திரிகையாளர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

    இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் செபி மேல்முறையீடு செய்தது.

    இந்நிலையில், பங்குச் சந்தை முறைகேடு மற்றும் ஒழுங்குமுறை மீறல் புகாரில் செபி முன்னாள் தலைவர் மாதவி பூரி புச் உள்பட 6 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு நடவடிக்கை எடுக்க 4 வாரம் தடை விதித்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    ×