என் மலர்
தலைப்புச்செய்திகள்
- பல்கலைக்கழகங்களுக்கான நிதி அதிகரிப்பு குறித்த வாக்கெடுப்பு இன்று நடைபெற இருந்தது.
- ஆளுங்கட்சி உறுப்பினரான ஜாஸ்மினா ஒப்ராடோவிக் என்பவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது.
செர்பியா நாட்டு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கண்ணீர் குண்டுகள், புகைகுண்டுகளை வீசியதால் 3 எம்பிக்கள் காயமடைந்தனர்.
இன்று (மார்ச் 04) கூடிய மக்களவை கூட்டத்தின்போது சேர்பியன் ப்ராக்ரசிவ் கட்சி தலைமயிலான ஆளும் கூட்டணி (SNS) யை எதிர்த்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
பல்கலைக்கழகங்களுக்கான நிதி அதிகரிப்பு குறித்த வாக்கெடுப்பு இன்று நடைபெற இருந்தது. ஆனால் இந்த அவை சட்டவிரோதமானது என்றும் அந்நாட்டு பிரதமர் மிலோஸ் உசெவிகின் ராஜினாமாவை முதலில் உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
ஒரு கட்டத்தில் எதிர் கட்சி எம்பிக்கள் சிலர் தங்களது இருக்கைகளை விட்டு இறங்கி மக்களவை சபாநாயகரை நோக்கி ஓடினர். அவர்களுக்கும் அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதற்கிடையே மற்ற சில எதிர்கட்சி உறுப்பினர்கள் கருப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிற புகைக்குண்டுகளை மக்களவைக்குள் வீசி, அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் சுமார் 3 எம்பிக்கள் காயமடைந்துள்ளனர் என்றும் ஆளுங்கட்சி உறுப்பினரான ஜாஸ்மினா ஒப்ராடோவிக் என்பவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் சபாநாயகர் உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த 4 மாதங்களுக்கு முன் ரெயில் நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து 15 பேர் பலியான விபத்தின் பின்னணியில் உள்ள ஊழலை எதிர்த்து மக்கள் போராட்டம் வெடித்தது.
இதன் தொடர்ச்சியாக கடந்த ஜனவரி மாதம் அந்நாட்டு பிரதமர் உசெவிக் தனது பதவியை ராஜிநாமா செய்தார். ஆனால் அவரது ராஜிநாமா மக்களவையில் உறுதி செய்யப்படாமல் மற்ற வேலைகளில் ஈடுபட்டதினால் எதிர் கட்சியினர் தற்போது அமளியில் ஈடுபட்டுள்ளனர்.
- ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.
- உதயநிதி ஸ்டாலின் நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் ஒருங்கிணைப்பில் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கும் விழா மற்றும் இஃப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். விழாவில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். மேலும், ஏழை, எளிய மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கினார்.
இந்த விழாவில் மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, தயாநிதி மாறன், கலந்து கொண்டனர்.
- பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
- இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மார்ச் 16-ம் தேதி நடக்கிறது.
லாகூர்:
பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மார்ச் 16-ம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்குன் பாகிஸ்தான் அணி இன்று தேர்வு செய்யப்பட்டது. இதில் கேப்டன் முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் அணி கேப்டனாக சல்மான் அலி ஆகாவும், துணை கேப்டனாக ஷதாப் கானும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சொந்த மண்ணில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்த நிலையில் முக்கிய வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் தொடருக்கான அணியில் முகமது ரிஸ்வான், பாபர் அசாம் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
- இயக்குநர் விஜய் ‘D Studios Post’ என்ற பெயரில் புதிய போஸ்ட் புரொடக்ஷன் ஸ்டுடியோவினை தொடங்கியுள்ளார்.
- பல திரைப்பிரபலங்கள் இந்த விழாவில் கலந்துக் கொண்டனர்.
ரசிகர்கள் விரும்பும்படியான பல வெற்றிப்படங்களைக் கொடுத்த இயக்குநர் விஜய் 'D Studios Post' என்ற பெயரில் புதிய போஸ்ட் புரொடக்ஷன் ஸ்டுடியோவினை மார்ச் 2 அன்று தொடங்கியுள்ளார். இந்த ஸ்டுடியோவை இயக்குநர் பிரியதர்ஷன், ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம், வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் & வேந்தர் டாக்டர் ஐசரி கே கணேஷ் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் பாலாஜி ஆகிய பிரபலங்கள் தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்வு சென்னையின் மிகப்பெரிய போஸ்ட் புரொடக்ஷன் ஸ்டுடியோவின் பிரமாண்டமான தொடக்க விழா என்பது குறிப்பிடத்தக்கது. டிஐ, டால்பி அட்மாஸ் சவுண்ட் மிக்ஸ், டப்பிங், டிசிபி (DCP), ஓடிடி மாஸ்டரிங், விஎஃப்எக்ஸ் மற்றும் டிஐடி (DIT) ஸ்டோரேஜ் ஆகியவற்றிற்கான ஒரே இடமாக இந்த போஸ்ட் புரொடக்ஷன் ஸ்டுடியோ உருவாகியுள்ளது.
இந்த நிகழ்வில் அரசியல்வாதிகள், திரைப்பட பிரபலங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

நிகழ்வுக்கு வந்த விருந்தினர்களை தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பன் வரவேற்றார். இந்த ஸ்டுடியோவின் நிறுவனர் மற்றும் தலைவர் இயக்குநர் விஜய்.
ஹெட் ஆஃப் சவுண்ட் - ராஜகிருஷ்ணன், ராஜசேகரன் விஷுவல் பிரிவின் தலைவராகவும், முத்துகிருஷ்ணன் குரல் பிரிவின் தலைவராகவும் உள்ளனர்.

'டி ஸ்டுடியோஸ் போஸ்ட்' அமைந்துள்ள இடம்: எண். 87/4, பிளாட் எண். 1A, 1B & 1D, சம்பு பிரசாத் அவென்யூ, சாலிகிராமம், சென்னை, தமிழ்நாடு - 600 093
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்தி எதிர்ப்புப் போர்வையில், வளையலைத் திருடும் திமுக கவுன்சிலர்.
- திருட்டையும் திமுகவையும் எப்போதும் பிரிக்கவே முடியாது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
மேலும், "இந்தி எதிர்ப்புப் போர்வையில், வளையலைத் திருடும் குன்னூர் நகர்மன்ற 25-வது வார்டு திமுக கவுன்சிலர் ஜாகிர் உசேன்.
திருட்டையும் திமுகவையும் எப்போதும் பிரிக்கவே முடியாது!" எனக் குறிப்பிட்டுள்ளார்.
- முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 264 ரன்கள் எடுத்தது.
- ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி ஆகியோர் அரை சதம் அடித்தனர்.
துபாய்:
சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி துபாயில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 264 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் கேப்டன் ஸ்மித் 73 ரன்னிலும், அலெக்ஸ் கேரி 61 ரன்னிலும் அவுட்டாகினர்.
டிராவிஸ் ஹெட் 39 ரன்னும், லபுசேன் 29 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இந்தியா சார்பில் ஷமி 3 விக்கெட்டும், ஜடேஜா, வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டும், அக்சர் படேல், பாண்ட்யா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஜாஸ் இங்கிலீஸ் கேட்சை விராட் கோலி பிடித்தார்.
- சர்வதேச கிரிக்கெட்டில் 335 கேட்சுகள் பிடித்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
இதில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது.
45.1 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் அடித்து ஆடி வருகிறது. இப்போட்டியில் ஜாஸ் இங்கிலீஸ் கேட்சை விராட் கோலி பிடித்தார்.
இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 335 கேட்சுகள் பிடித்து அதிக கேட்ச் பிடித்த இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார்.
விராட் கோலிக்கு அடுத்தபடியாக ராகுல் டிராவிட் 334 கேட்சுகளும் அசாருதின் 261 கேட்சுகளும் சச்சின் 256 கேட்சுகளும் பிடித்துள்ளனர்.
மேலும், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக கேட்ச் பிடித்தவர்களின் பட்டியலில் ஜெயவர்த்தனே (440), ராஸ் டெய்லர் (351), ரிக்கி பாண்டிங் (364) ஆகியோருக்கு அடுத்து 4 ஆவது இடத்தில விராட் கோலி உள்ளார்.
- 1954 ஆம் ஆண்டில் தனது 18 ஆவது வயதில் ஹாரிசன் ரத்த தானம் கொடுக்க தொடங்கினார்.
- தனது 81 ஆவது வயது வரை 1,173 முறை ரத்த தானம் கொடுத்து ஹாரிசன் சாதனை படைத்துள்ளார்.
ரத்த தானத்தின் மூலம் சுமார் 2.4 மில்லியன்(24லட்சம்) குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜேம்ஸ் ஹாரிசன் (88) காலமானார். Man with the golden arm என அறியப்படும் ஹாரிசன் கடந்த பிப்ரவரி 17 அன்று நியூ சவுத் வேல்ஸ்சில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1954 ஆம் ஆண்டில் தனது 18 ஆவது வயதில் ஹாரிசன் ரத்த தானம் கொடுக்க தொடங்கினார். அன்று தொடங்கி கடந்த 2018 இல் தனது 81 ஆவது வயது வரை 1,173 முறை ரத்த தானம் கொடுத்து ஹாரிசன் சாதனை படைத்துள்ளார்.

அவரது ரத்த தானம் மூலம் உலகம் முழுவதிலும் 2.4 மில்லியன் குழந்தைகளின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. ஹாரிசன் உடைய ரத்தத்தின் பிளாஸ்மாவில் ஆன்டி -டி (Anti-D) என்ற அரியவகை Antibody உள்ளது.
இது பிரசவத்தின்போது தாயிடம் இருந்து குழந்தைக்குப் பரவும் தீங்கு விளைவிக்கும் Antibody களை தடுக்கும் வல்லமை கொண்டது. 2005 முதல் கடந்த 2022 வரை அதிக ரத்த பிளாஸ்மா தானம் கொடுத்ததற்கான உலக சாதனையை ஹாரிசன் தன்வசம் வைத்திருந்தார்.

அதன் பின் அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் அந்த சாதனையை முறியடித்தார். ஜேம்ஸ் ஹாரிசன் மறைவுக்கு உலகெங்கிலும் உள்ள சமூக ஆர்வலர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- ஆழ்துளை எரிவாயுக் கிணறு அமைக்கும் நடவடிக்கை முழு கடலோரப் பகுதியை பாதிக்கப்படைய செய்யும்.
- இது கடலோர சமூகங்களிடையே பெருத்த அச்சத்தை உருவாக்கியுள்ளது என்றார்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
தமிழ்நாட்டின் கடற்கரையோரத்தில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ஒன்றிய அரசு மேற்கொண்டிருக்கும் கடல்சார் ஆழ்துளை எரிவாயுக் கிணறுகள் அமைக்கும் நடவடிக்கை குறித்து ஆழ்ந்த கவலையைத் தெரிவிக்கிறேன்.
ஒன்றிய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் ஹைட்ரோகார்பன் இயக்குநரகம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு தொகுதிகளை ஏலம் விடுவதற்கான திறந்தவெளி பரப்புரிமை கொள்கை (Open Acreage Licensing Policy-Bid Round-X) அறிவிப்பினை 11.02.2025 அன்று தொடங்கியிருக்கிறது. அந்த அறிவிப்பில் காவிரிப் படுகையில் CY-DWHP-2024/1 என்ற தொகுதி பெயரில் 9990.96 சதுர கி.மீ. பரப்பளவும் அடங்கும். இது மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகத்திற்குள்ளும், பாக் விரிகுடா மற்றும் வாட்ஜ் கரைக்கு அருகில் உள்ளது.
மன்னார் வளைகுடா கடல் தேசியப் பூங்காவை உள்ளடக்கிய மன்னார் வளைகுடா கடற்பகுதி, உயிர்க்கோளக் காப்பகமாக ஒன்றிய அரசால் 18.02.1989 அன்று அறிவிக்கப்பட்டது. இது பவளப்பாறைகள், கடல் புல் படுகைகள், சதுப்பு நிலங்கள், கழிமுகங்கள், சேற்றுப் படுகைகள், தீவுகள் மற்றும் காடுகள் போன்ற பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளை உள்ளடக்கிய வளமான பல்லுயிர் பெருக்கத்தைக் கொண்டுள்ளது.
இந்த உயிர்க்கோளக் காப்பகம், இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் கடற்கரையிலிருந்து 560 சதுர கி.மீ பரப்பளவில், பரந்து விரிந்து கிடக்கும் 21 தீவுகள் மற்றும் அருகிலுள்ள பவளப்பாறைகளின் சங்கிலியைக் கொண்டுள்ளது. இது பல்வேறு வகையான கடல் விலங்கினங்களின் புகலிடமாக விளங்கி வருகிறது.
தமிழ்நாடு அரசு செப்டம்பர் 2021-ல் பாக் விரிகுடாவில் மிக அரிதான கடற்பசு (Dugong) இனத்தைப் பாதுகாக்கும் வகையில், இந்தியாவின் முதல் கடற்பசு பாதுகாப்பகத்தை அறிவித்துள்ளது. இது தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் கடலோரப் பகுதியில் 448 சதுர கி.மீ. பரப்பளவை உள்ளடக்கியது.
இந்தப் பகுதியில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுவிற்கான ஆழ்துளை எரிவாயுக் கிணறுகள், இந்தப் பகுதிகளில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய சுற்றுச்சூழல் அமைப்பு, அவற்றின் வளமான பல்லுயிர் பெருக்கம் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தக்கூடும் மற்றும் கடலின் ஒட்டுமொத்த பாதுகாப்பினையும் சீர்குலைக்கக்கூடும்.
வண்டல் படிவுகள், நச்சுக் கழிவுகள் வெளியேற்றம் மற்றும் கடல்வாழ் உயிரினங்களின் அழிவு போன்ற அபாயங்கள் மட்டுமின்றி, மன்னார் வளைகுடாவை தங்கள் வாழ்வாதாரத்திற்காக நம்பியுள்ள லட்சக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும்.
ஒன்றிய அரசின் ஆழ்துளை எரிவாயுக் கிணறுகள் அமைக்கும் நடவடிக்கைகளால் ஏற்படும் இதுபோன்ற எந்தவொரு இடையூறும், முழு கடலோரப் பகுதியையும் பாதிக்கப்படையச் செய்யும். இது கடலோர சமூகங்களிடையே பெருத்த அச்சத்தை உருவாக்கியுள்ளது.
துரதிர்ஷ்டவசமாக, இந்த ஏல அறிவிப்புக்கு முன்பாக ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசிடம் கருத்து எதையும் கேட்கவில்லை. உரிய ஆலோசனை கேட்கப்பட்டிருந்தால், மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பிரச்சனைகள் குறித்தும் தமிழ்நாடு அரசின் சார்பில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டிருக்கும்.
எனவே, இந்தச் சூழ்நிலையில், ஒன்றிய அரசின் இந்த ஆழ்துளை எரிவாயுக் கிணறுகள் அமைப்பதற்கான ஏல முடிவினை மறுபரிசீலனை செய்யுமாறும், ஆழ்துளை எரிவாயுக் கிணறுகள் அமைப்பதற்காக அறிவிக்கப்பட்ட அனைத்து பல்லுயிர் நிறைந்த பகுதிகளையும் OALP-இலிருந்து நீக்குமாறும் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளோம்.
எளிதில் பாதிக்கப்படக்கூடிய, பாதுகாக்கப்பட்ட இந்தச் சுற்றுச்சூழல் அமைப்புகளின் எதிர்காலம் ஆபத்தில் இருப்பதைக் கருத்தில் கொண்டு, இந்த முக்கியமான பிரச்சனையில் பிரதமர் தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 20 நாட்கள் போராட்டம் நடத்த விவசாயிகள் அனுமதி கோரி மனு.
- இரண்டு நாட்கள் போராட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி.
விவசாய நிலங்களை கோவில் நிலங்கள் எனக்கூறி, இந்து அறநிலைய துறை விவசாயிகளை வாடகைத்தாரர்களாக மாற்றுவதை கண்டித்து 20 நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்து அறநிலைய துறைக்கு எதிராக 2 நாட்கள் போராட்டம் நடத்த விவசாயிகளுக்கு அனுமதி அளித்துள்ளது.
- சூர்யாவின் 44வது படமான 'ரெட்ரோ' திரைப்படத்தை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார்.
- ரெட்ரோ படம் வரும் மே 1 வெளியாகவுள்ளது.
சூர்யாவின் 44வது படமான 'ரெட்ரோ' திரைப்படத்தை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடிகை ஸ்ரேயா சிறப்பு நடனம் ஆடியுள்ளார். ரெட்ரோ படம் வரும் மே 1 வெளியாகவுள்ளது.
படத்தின் ஆடியோ உரிமையை டி சீரிஸ் பெற்றுள்ளது. படத்தின் முதல் பாடலான கண்ணாடி பூவே பாடல் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
படத்தின் படப்பிடிப்பு காட்சியை படக்குழு காமிக் வடிவத்தில் வாரவாரம் வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் காமிக்கின் 4-வது அத்தியாயத்தை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. அதில் கண்ணாடி பூவே பாடல் உருவான விதத்தை பற்றி கூறியுள்ளனர்.
சென்னையில் BSNL ஆபிசில் தத்ரூபமான மதுரை சிறைச்சாலை செட் அமைத்துள்ளனர். அதில் கண்ணாடி பூவே பாடலை படமாக்கியுள்ளனர். இந்த செட்டை பார்த்து சூர்யா மிகவும் ஆச்சர்யப்பட்டதாக அதில் கூறியுள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் கொடுக்க வேண்டும் என பிரேமலதா தெரிவித்திருந்தார்.
- தே.மு.தி.க.விற்கு ராஜ்யசபா சீட் கொடுப்பதாக யார் சொன்னது? என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, "எங்களுக்கு ஒரே எதிரி தி.மு.க. மட்டும் தான். தி.மு.க.வை தவிர வேறு எந்த கட்சியும் எதிரி கிடையாது. பா.ஜ.க.வுடன் கூட்டணியா என்பது குறித்து தேர்தல் சமயத்தில் தெரிவிக்கப்படும். எங்களுடைய ஒரே இலக்கு தி.மு.க.வை வீழ்த்துவது மட்டும் தான்" என்று தெரிவித்தார்.
அப்போது தே.மு.தி.க.விற்கு ராஜ்யசபா சீட் வழங்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, "தே.மு.தி.க.விற்கு ராஜ்யசபா சீட் கொடுப்பதாக யார் சொன்னது? என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது கண்டிப்பாக கொடுத்தே ஆக வேண்டும் என பிரேமலதா கூறி வந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தெரிவித்த பதிலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ராஜ்யசபா சீட் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கூறியது தொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் அக்கேள்விக்கு பதில் அளிக்காமல் பிரேமலதா கடந்து சென்றார்.
இந்நிலையில், மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் எக்ஸ் பக்கத்தில், "சத்தியம் வெல்லும் நாளை நமதே" என்று பதிவிடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






