என் மலர்
தலைப்புச்செய்திகள்
- அதானி குழுமம் பங்குச் சந்தையில் முறைகேடு செய்ததாக ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டி இருந்தது.
- செபி முன்னாள் தலைவர் மாதபி புரி புச் மீது வழக்கு பதிவு செய்ய மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
அதானி குழுமம் பங்குச் சந்தையில் முறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி தலைவர் மாதபி பூரி புச்-க்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டி இருந்தது.இந்த விவகாரத்தில் மாதபி பூரி புச் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் தொடர்ச்சியாக வலியுறுத்தினார்
அதன்படி, செபி முன்னாள் தலைவர் மாதபி புரி புச் மற்றும் 5 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மும்பை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. செபி முன்னாள் தலைவர் மாதபி புரி புச் மற்றும் 5 பேர் மீது மீது பங்குச் சந்தை மோசடி மற்றும் ஒழுங்குமுறை மீறல்கள் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி சஷிகாந்த் ஏக்நாத் ராவ் உத்தரவிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி 30 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று பத்திரிகையாளர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் செபி மேல்முறையீடு செய்தது.
இந்நிலையில், பங்குச் சந்தை முறைகேடு மற்றும் ஒழுங்குமுறை மீறல் புகாரில் செபி முன்னாள் தலைவர் மாதவி பூரி புச் உள்பட 6 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு நடவடிக்கை எடுக்க 4 வாரம் தடை விதித்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
- ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 105 ரன்கள் எடுத்தது.
- ஸ்டீவ் ஸ்மித் அரை சதம் கடந்து ஆடி வருகிறார்.
துபாய்:
சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி துபாயில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது.
ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட், கூப்பர் கோனோலி களமிறங்கினர். கோனோலி ஷமி பந்து வீச்சில் டக் அவுட்டானார்.
அடுத்து டிராவிஸ் ஹெட்டுடன் கேப்டன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 50 ரன்கள் சேர்த்த நிலையில் டிராவிஸ் ஹெட் 39 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து லபுசேன் களமிறங்கினார். ஸ்மித்-லபுசேன் ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்தது.
3வது விக்கெட்டுக்கு 106 ரன்கள் சேர்த்த நிலையில் லபுசேன் 29 ரன்னில் அவுட்டானார். நிதானமாக ஆடிய ஸ்டீவ் ஸ்மித் அரை சதம் கடந்தார். இங்கிலீஸ் 11 ரன்னில் வெளியேறினார்.
ஆஸ்திரேலிய அணி 27 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்துள்ளது.
- எந்த காலத்திலும் மும்மொழி கொள்கையை தமிழ்நாடு ஏற்காது.
- ஏற்கனவே இந்தி தான் தேசிய மொழி என்று கூறி முப்பது மொழிகளை அழித்து விட்டார்கள்.
மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ. 2400 கோடி நிதியை அளிக்கும் என்று மத்திய அமைச்சர் கூறியிருந்தார். இவரது கருத்து தமிழ்நாடு அரசியல் களத்தில் பூதாகாரமாக வெடித்துள்ளது. மத்திய அமைச்சர் கருத்துக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
தமிழ்நாடு பா.ஜ.க. மட்டும் மும்மொழி கொள்கை இந்தி திணிப்பு இல்லை என்றும் மாணவர்கள் விரும்பிய மொழியை கற்றுக் கொள்வது அவசியம் என்றும் தொடர்ச்சியாக கூறி வருகிறது. மேலும், தி.மு.க.வினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி மொழி பயிற்றுவிக்கப்படும் நிலையில், அரசு பள்ளி மாணவர்கள் இந்தி கற்பதை தி.மு.க. திட்டமிட்டு தடுப்பதாகவும் குற்றம்சாட்டி வருகிறது.
இந்த நிலையில், மத்திய அமைச்சர் கருத்துக்கு தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக கரண் தப்பார் மேற்கொண்ட நேர்காணலில் பேசிய அமைச்சர் பி.டி.ஆர். அவரது கேள்விகளுக்கு அதிரடி பதில் அளித்ததோடு, பதில் கேள்விகளையும் அடுக்கினார்.
நேர்காணலில் மும்மொழிக் கொள்கை குறித்த கேள்விக்கு பதில் அளித்த பி.டி.ஆர். "மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் ரூ. 2400 கோடி நிதி வழங்க முடியும் என மத்திய அமைச்சர் கூறுவது லஞ்சம் கொடுத்தாதால் தான் தொழிலை நடத்த விடுவேன் என ரவுடி துப்பாக்கியை எடுத்து எனது நெற்றி பொட்டில் வைத்து மிரட்டி கேட்பது போல இருக்கிறது," என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "எப்பொழுதும் தமிழ்நாடு மும்மொழிக் கொள்கையை குறிப்பாக இந்தியை எதிர்ப்பதாக பேசி வருகின்றீர்கள். கல்வி மிக நுட்பமானது என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்தி குறிப்பாக எங்களுக்கு தேவையில்லை என்பதை நீதிக்கட்சி காலத்தில் இருந்தே நாங்கள் கூறி வருகிறோம். ஏற்கனவே இந்தியை திணிக்க நினைத்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதை நாடறியும்."
"எந்த காலத்திலும் மும்மொழி கொள்கையை தமிழ்நாடு ஏற்காது. ஏற்கனவே இந்தி தான் தேசிய மொழி என்று கூறி முப்பது மொழிகளை அழித்து விட்டார்கள். எங்கள் குழந்தைகளுக்கு எந்த மொழி தேவையோ அதனை கற்று கொள்ளட்டும். நாங்கள் தடுக்க மாட்டோம். இந்தி கற்றுத் தரும் பள்ளிகளை நாங்கள் அழிக்கவில்லை. ஆனால் தமிழ்நாடு அரசு தமிழ் மொழியை தான் கற்றுக் கொடுக்கும். கூடுதலாக ஆங்கிலம் மட்டும் தான் கற்பிக்கப்படும்."
"நான் ஒரு தொழிலை ஆரம்பிக்கிறேன். அந்த தொழிலுக்கு பாதுகாப்பு தர வேண்டிய நபர் ஒரு ரவுடி போல துப்பாக்கி எடுத்துக்கொண்டு எனது நெற்றியில் வைத்து மாமுல் தர வேண்டும். அப்போதுதான் தொழிலை நடத்த முடியும் என சட்ட விரோதமாக கேட்கிறார். அவர் மிரட்டுவதற்காக நான் மாமூல் தர வேண்டுமா? நியாயப்படி நீங்கள் துப்பாக்கி எடுத்து என் தலையில் வைத்து மிரட்டுபவரிடம் தான் பேச வேண்டும். என்னிடம் பேசக்கூடாது" என்றார்.
இந்நிலையில், இந்த நேர்காணலின் வீடியோ சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி தேசிய அளவில் பேசுபொருளானது. இந்நிலையில், அந்த விடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.
அவரது பதிவில், "இருமொழிக் கொள்கை குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெள்ளத் தெளிவாக விளக்கி உள்ளார். தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்கும் நிலையில், ஏகாதிபத்திய மனோபாவம் கொண்ட சிலரது வசதிக்காக தமிழ்நாட்டின் மீது மொழிக் திணிப்பு ஏன்" என்று பதிவிட்டுள்ளார்.
- தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் விண்ணப்பித்திருந்த நபர் ஒருவருக்கு தகவலை அளிக்கும் பொருட்டு கிளார்க் சென்றுள்ளார்
- இந்திய தண்டனை சட்டம், பிரிவு 298 (மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசுதல்) இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஜார்கண்டில் காஸ் (Chas) பகுதியில் துணை கொட்ட அலுவலகத்தில் உருது மொழிபெயர்ப்பாளராகவும் தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுக்களை நிர்வகிக்கும் கிளார்க்காக இஸ்லாமியர் ஒருவர் பணியாற்றி வந்தார்.
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் விண்ணப்பித்திருந்த நபர் ஒருவருக்கு தகவலை அளிக்கும் பொருட்டு கிளார்க் சென்றுள்ளார். முதலில் போஸ்ட் மூலம் தகவல் அனுப்பப்பட்டபோது, அதில் குளறுபடிகள் நடந்தாக மனுதாரர் மேல் முறையீடு செய்ததால் கிளார்க்கை நேராக சென்று ஆவணங்களை வழங்கும்படி நிர்வாகம் பணித்தது.
எனவே மேலதிகாரிகள் உத்தரவின் பேரில் கடந்த 2020 நவம்பரில் மனுதாரரை நேரடியாக கிளார்க் சந்தித்து ஆவணங்களை அளித்துள்ளார். ஆனால் அதை ஏற்க மறுத்து கிளார்க் உடன் அவர் வாக்குவாதம் செய்துள்ளார்.
அப்போது இஸ்லாமியரான கிளார்க்கை அந்த நபர் மத அடையாளத்தைக் குறிப்பிட்டு 'மியான் - தியான்' என்றும் 'பாகிஸ்தானி' என்றும் கூறியுள்ளார். இது தனது மத உணர்வுகளை புண்படுத்தி தன்னை அவமதிக்கும் வகையில் இருந்ததாக கூறி கிளார்க் மேலதிகாரிகளிடம் முறையிட்டார்.
தொடர்ந்து அதிகாரியை அவமதித்த மனுதாரர் மீது போலீசில் எப்ஐஆர் பதிவுசெய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்திய தண்டனை சட்டம், பிரிவு 298 (மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசுதல்), பிரிவு 504 (அமைதியைக் குலைக்கும் உள்நோக்கத்துடன் ஒருவரை அவமானப்படுத்துதல்) பிரிவு 353 (அரசு அதிகாரியிடம் அத்துமீறல்) ஆகியவற்றின்கீழ் அந்த நபர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இதை விசாரித்த மாஜிஸ்திரேட் நீதிமன்றம் சம்மந்தப்பட்ட நபருக்கு சம்மன் அனுப்பியது. ஆனால் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கும்படி அந்த நபர் ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். அனால் 2023இல் உயர்நீதிமன்றம் அவரின் மனுவை நிராகரித்தது.
தொடர்ந்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு இன்று (செவ்வாய்க்கிழமை) உச்சநீதிமன்ற நீதிபதிகள், பி.வி.நாகரத்னா, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், ஒருவரை 'மியான் - தியான்', 'பாகிஸ்தானி' என்று அழைப்பது ரசிக்கக்கூடியதாக இல்லாமல் (poor taste) இருக்கலாம்.
ஆனால் அது மத உணர்வுகளை புண்படுத்தும் சட்டப்பிரிவு 298 கீழ்வரும் குற்றமாகாது என்று கூறி கிளார்க்கிடம் மத ரீதியாக பேசிய நபரின் மீதான குற்ற வழக்கை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.
- டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.
- ஆஸ்திரேலிய அணி 4 ரன்னில் முதல் விக்கெட்டை இழந்தது.
துபாய்:
சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி துபாயில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது.
இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை. ஆஸ்திரேலிய அணியில் கூப்பர் கோனோலி, தன்வீர் சங்கா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட், கூப்பர் கோனோலி களமிறங்கினர். அணியின் ஸ்கோர் 4 ரன்னாக இருக்கும்போது ஷமி பந்து வீச்சில் கோனோலி டக் அவுட்டானார்.
அடுத்து டிராவிஸ் ஹெட்டுடன் கேப்டன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். முதலில் நிதானமாக ஆடிய டிராவிஸ் ஹெட் அதிரடியாக ஆடினார்.
அவர் 32 பந்தில் 2 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 39 ரன்கள் எடுத்து வருண் சக்கரவர்த்தி பந்தில் ஆட்டமிழந்தார்.
அடுத்து லபுசேன் களமிறங்கினார். ஸ்மித்-லபுசேன் ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தது.
இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்துள்ளது.
- அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.
- வீர தீர சூரன்' படம் மார்ச் 27 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார். இரு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் 2-ம் பாகத்தை முதலில் வெளியிட உள்ளனர்.
இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விவேக் வரிகளில் ஹரிசரண் மற்றும் ஷ்வேதா மோகன் இணைந்து பாடிய படத்தின் முதல் பாடலான கல்லூரும் பாடலின் லிரிக் வீடியோ சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், 'வீர தீர சூரன்' படம் மார்ச் 27 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் இரண்டாம் பாடலான "ஆத்தி அடி ஆத்தி" பாடல் நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். போஸ்டரின் விக்ரம் மற்றும் துஷரா விஜயன் திருமண உடையில் இருக்கிறார்கள்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஆழ்கடல் கனிம சுரங்கத்தை தொடங்குவதற்கான மையங்களை அனுமதிக்க முடியாது என கேரள அரசு தெரிவித்தது.
- இது தொடர்பாக மாநில மீனவர்களின் கவலையை மத்திய அரசுக்கு ஏற்கனவே தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் ஆழ்கடல் கனிமச் சுரங்கத்தை அனுமதிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என கேரள சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முதல் மந்திரி பினராயி விஜயன் ஆளும் முன்னணியின் ஏஜெண்டாக செயல்படுவதாக குற்றம்சாட்டி சபாநாயகர் முன் எதிர்க்கட்சியான யுடிஎப் எம்எல்ஏக்கள் போராட்டம் நடத்திய நிலையில், முதல் மந்திரி கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசனை தனது உரையை முடிக்க அனுமதிக்காததாலும், ஆஷா தொழிலாளர்கள் போராட்டம் குறித்து விவாதிக்க அவையை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படாததாலும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தால் ஆழ்கடல் சுரங்கத் தீர்மானம் விவாதம் இன்றி நிறைவேற்றப்பட்டது.
மாநில கடற்கரையோரத்தில் ஆழ்கடல் சுரங்கத்தைத் தொடங்குவதற்கான மையங்களை அனுமதிக்க முடியாது என கேரள அரசு ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக மாநில மீனவர்களின் கவலையை மத்திய அரசுக்கு ஏற்கனவே தெரிவித்துள்ளது.
- கொரோனா காலத்தில் வங்கி கடனை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
- தனியார் வங்கிகள் அதிக வட்டி விதித்ததாக பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.
கொரோனா காலத்தில் பலர் வேலையை இழந்தனர். இதனால் வங்கிகளில் பெற்ற கடன் மற்றும் இ.எம்.ஐ-யை கட்ட முடியாத நிலை ஏற்பட்டது. வேலை இழப்பு, சம்பளம் குறைப்பு, வேலையின்மை ஆகியவற்றின் காரணமாக வாங்கிய கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
ஆனால் வட்டியை தள்ளுபடி செய்ய வங்கிகள் மறுத்துவிட்டன. இ.எம்.ஐ. கட்ட காலஅவகாசம் வழங்கப்பட்டது. சில வங்கிகளில் வட்டிக்கு வட்டி என அதிக வட்டி வசூலித்தாக கூறப்பட்டது.
இந்த நிலையில் சாந்திகுமாரி என்பவர் கொரோனா காலத்தில் அதிக வட்டி விதித்ததாக தனியார் வங்கிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றதில் புகார் அளித்தார். இந்த புகார் மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது கொரோனா காலத்தில் அதிக வட்டி விகித்த தனியார் வங்கிக்கு எதிரான புகாரை 4 வாரங்களில் பரிசீலிக்க வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கிக்கு சென்னை உயர்நீதிமன்றம உத்தரவிட்டுள்ளது.
- முகமது ஷமி பந்துவீச்சில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான கானலி டக் அவுட்டாகி வெளியேறினார்.
- போட்டியின் 8 ஆவது ஓவரை வீசிய வருண் சக்கரவர்த்தி முதல் பந்திலேயே ஹெட் விக்கெட்டை தூக்கினார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
இதில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது.
முகமது ஷமி பந்துவீச்சில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கானலி டக் அவுட்டாகி வெளியேறினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஹெட் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து வந்தார்.
போட்டியின் 8 ஆவது ஓவரை வீசிய வருண் சக்கரவர்த்தி முதல் பந்திலேயே ஹெட் விக்கெட்டை தூக்கினார். இதனால இந்திய அணி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
முன்னதாக ஆஸ்திரேலிய வீரர் ஹெட் விக்கெட்டை வருண் சக்கரவர்த்தி வீழ்த்துவார் என்று முன்னாள் இந்திய வீரர் அஸ்வின் தெரிவித்திருந்தார்..
இது குறித்து பேசிய அஸ்வின், "இப்போட்டியில் டிராவிஸ் ஹெட் அற்புதமாக செயல்பட்டால் மட்டுமே ஆஸ்திரேலிய அணியால் அரையிறுதியில் வெல்ல முடியும்.அதனால் டிராவிஸ் ஹெட்டை ஆரம்பத்திலேயே வீழ்த்துவதற்கு நான் வருண் சக்ரவர்த்திக்கு புதிய பந்தில் பந்துவீச வாய்ப்பு தருவேன். அதிலும் குறிப்பாக ஹெட்க்கு வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளும் வாய்ப்பை கூட கொடுக்க வேண்டாம். உடனடியாக வருணிடம் பந்தை கொடுங்கள். முதல் 10 ஓவர்களில் சுழற்பந்து வீச்சை சமாளிக்க ஹெட்டிற்கு சவால் விடுவேன். இதுவே எனது உத்தியாக இருக்கும்" என்று தெரிவித்திருந்தார்.
- மேலும் பல்லாண்டுகள் தமிழ்ச் சமூகத்துக்கு அருந்தொண்டாற்றவிருந்த அவர் மறைந்துவிட்டார் என்பது வேதனையளிக்கிறது.
- அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கவிஞரும், பட்டிமன்ற பேச்சாளருமான நந்தலாலா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நந்தலாலா மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர் சங்கத்தின் துணைத் தலைவரும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினருமான கவிஞர் நந்தலாலா மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
தமிழ்நாட்டின் புத்தகத் திருவிழாக்கள், முற்போக்கு மேடைகள், தொலைக்காட்சி விவாதங்கள், பட்டிமன்றங்கள் எனக் கவிஞர் நந்தலாலாவின் குரல் ஒலிக்காத மேடையே இல்லை எனும் அளவுக்கு அனைத்து உணர்ச்சிகளையும், அரிய தகவல்களையும் தமது பேச்சில் வெளிப்படுத்தும் திறம் பெற்றவர் அவர்.
காவிரிக்கரையின் மைந்தனான கவிஞர் நந்தலாலா தமது ஊரான திருச்சியின் மீது கொண்ட தீராக்காதலுக்கு, "திருச்சிராப்பள்ளி: ஊறும் வரலாறு" நூலே சான்றாகும்.
அவரது ஆற்றல் தமிழ்ச் சமூகத்துக்கு மேலும் பயனளிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினராகவும் அவரை நியமித்திருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.
தந்தை பெரியார் மீது பெரும் பற்றும், பேரறிஞர் அண்ணா மீது பெருமதிப்பும், தலைவர் கலைஞர் மீது மிகுந்த அன்பும் கொண்டிருந்தவர் கவிஞர் நந்தலாலா. தலைவர் கலைஞர் குறித்து, "தாம் வாழ்ந்த காலம் முழுதும், மானமும் அறிவும்; துணிச்சலும் செயலுமாக வாழ்ந்தவர் கலைஞர். உரிமை மீட்புப் போரில் அவரே நமக்கு என்றும் போர்வாள்" என்று உண்மை இதழில் அவர் எழுதிய சொற்களை மறக்க முடியாது.
என் மீதும் மிகுந்த மரியாதையும் பாசமும் கொண்டிருந்தார். எனது பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பரந்த மனத்தோடும் அன்போடும் வாழ்த்திப் பேசியதையும் இவ்வேளையில் நினைவுகூர்கிறேன்.
மேலும் பல்லாண்டுகள் தமிழ்ச் சமூகத்துக்கு அருந்தொண்டாற்றவிருந்த அவர் மறைந்துவிட்டார் என்பது வேதனையளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர் சங்கத்தின் தோழர்களுக்கும், தமிழன்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு மு.க. ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
- இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் 'டிராகன்'.
- லியோன் ஜேம்ஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் 'டிராகன்'. ஏ.ஜி.எஸ். நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. லியோன் ஜேம்ஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ் புல் ஷோக்கள் ஓடிக்கொண்டு இருக்கிறது.
திரைப்படம் வெளியாகி 10 நாட்களில் 100 கோடி ரூபாயை உலகளவில் வசூலித்துள்ளது. இன்னும் வரும் நாட்களில் 150 கோடி ரூபாயை எட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டடித்துள்ளது. குறிப்பாக வழித்துணையே மற்றும் ஏன் டி விட்டுப் போன பாடல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் வழித்துணையே பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை விக்னேஷ் சிவன் வரிகளில் சித் ஸ்ரீராம் மற்றும் சஞ்சனா இணைந்து பாடியுள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- முறையான மருத்துவ சேவையை உறுதி செய்வது மாநில அரசுகளின் கடமை.
- நியாயமான விலையில் அத்தியாவசிய மருந்துகளை வழங்குவதில் மாநிலங்கள் தோல்வியடைந்துள்ளது.
மருத்துவமனை மருந்தகங்களில் இருந்து மட்டுமே மருந்துகளை வாங்குமாறு நோயாளிகளை கட்டாயப்படுத்த வேண்டாம் என்று தனியார் மருத்துவமனைகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் என்று பொதுநல வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் என்.கே. சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது.
அப்போது, முறையான மருத்துவ சேவையை உறுதி செய்வது மாநில அரசுகளின் கடமை. ஆனால் மலிவு விலையில் மருத்துவ சேவை மற்றும் உள்கட்டமைப்பை உறுதி செய்ய மாநில அரசுகள் தவறிவிட்டன. ஏழை மக்களுக்கு நியாயமான விலையில் மருந்துகளை, குறிப்பாக அத்தியாவசிய மருந்துகளை வழங்குவதில் மாநிலங்கள் தோல்வியடைந்துள்ளன. இந்த தோல்வி, தனியார் மருத்துவமனைகளுக்கு வசதி செய்து கொடுத்து ஊக்குவித்துள்ளது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
மேலும், தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் பொதுமக்களை சுரண்டுவதைத் தடுக்க வழிகாட்டுதல்களை வகுக்குமாறு மத்திய அரசுக்கு அறிவுறுத்திய உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக கட்டாய உத்தரவுகளை பிறப்பிப்பது நல்லதல்ல, ஆனால் இந்த விஷயத்தில் மாநில அரசுகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் என்று தெரிவித்தது.






