என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடந்து வருகிறது.
    • இதில் பல்கேரியாவின் டிமித்ரோவ் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    புளோரிடா:

    மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இத்தாலியின் லாரன்சோ முசெட்டி உடன் மோதினார்.

    இதில் ஜோகோவிச் 6-2, 6-4 என எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் பல்கேரியாவின் கிரிகோர் டிமித்ரோவ் 6-4, 7-5 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் பிரண்டன் நகஷிமாவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • தனக்கு கிடைத்த 2.5 கோடி பரிசுத் தொகையை துணைப் பயிற்சியாளர்களுக்கு டிராவிட் பகிர்ந்து கொடுத்தார்.
    • சாம்பியன்ஸ் ட்ராபியை வென்றதற்காக கவுதம் கம்பீருக்கு பிசிசிஐ 3 கோடி பரிசு தொகை அறிவித்துள்ளது.

    பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது.

    சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ ரூ.58 கோடியை பரிசுத்தொகையாக அறிவித்துள்ளது. வீரர்கள் மற்றும் பயிற்சியாளருக்கு 3 கோடியும் துணை பயிற்சி ஊழியர்களுக்கு தலா ரூ.50 லட்சமும் பகிர்ந்து அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தனது துணை ஊழியர்களை விட அதிக பரிசு தொகை வேண்டாம் என்று கூறிய ராகுல் டிராவிட்டின் முன்மாதிரியை கவுதம் கம்பீர் பின்பற்றுவாரா என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    ஸ்போர்ட்ஸ்டார் இதழில் சுனில் கவாஸ்கர் எழுதிய கட்டுரையில், "2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு அப்போதைய பயிற்சியாளர் ராகுல் டிராவிட், தனது சக துணை ஊழியர்களை விட அதிகமான பரிசுத்தொகை வேண்டாம் என்று மறுத்துவிட்டார். மேலும், தனக்கு கிடைத்த 2.5 கோடி பரிசுத் தொகையை துணைப் பயிற்சியாளர்களுக்கு டிராவிட் பகிர்ந்து கொடுத்தார்.

    2025 சாம்பியன்ஸ் ட்ராபியை வென்றதற்காக தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு பிசிசிஐ 3 கோடி பரிசு தொகை அறிவித்துள்ளது. ஆனால் மோர்னே மோர்கெல், திலிப் உள்ளிட்ட துணைப் பயிற்சியாளர்களுக்கு 50 லட்சம் மட்டுமே பரிசாகக் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் கவுதம் கம்பீர், ராகுல் டிராவிட் போல எந்த அறிவிப்பும் வெளியிட்டதாக தெரியவில்லை. அப்படியானால் ராகுல் டிராவிட் நல்ல ரோல் மாடலாக இல்லையா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    • மசோதாவை ஒன்றிய அரசு கைவிடக் கோரும் தீர்மானத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை முன்மொழிகிறார்.
    • வக்பு சட்ட திருத்த மசோதா மக்களவையில் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.

    மத்திய அரசின் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக சட்டப்பேரவையில் நாளை தமிழ்நாடு அரசு தீர்மானம் கொண்டு வருகிறது. மசோதாவை ஒன்றிய அரசு கைவிடக் கோரும் தீர்மானத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை முன்மொழிய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    வக்பு சட்ட திருத்த மசோதா மக்களவையில் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் தமிழக அரசு அதற்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வருகிறது.

    நாடு முழுவதும் உள்ள வக்பு வாரிய சொத்துகளை பதிவு செய்து வெளிப்படைத்தன்மையுடன் நிர்வகிக்க வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டு, மக்களவையில் கடந்தாண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.

    இது சிறுபான்மையினருக்கு எதிராக உள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியதால், பாராளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு சட்ட திருத்த மசோதா அனுப்பப்பட்டது.



    மசோதாவில் எதிர்கட்சி உறுப்பினர்கள் பரிந்துரைத்த பல்வேறு நிறுத்தங்களில் 14 திருத்தங்களுக்கு கூட்டுக்குழு ஒப்புதல் அளித்தது. அதன்பின் 655 பக்க அறிக்கை தயாரானது.

    இதற்கு கூட்டுக்குழுவில் இடம்பெற்ற எதிர்க்கட்சியைச் சேர்ந்த 11 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பெரும்பான்மை வாக்குகள் அடிப்படையில் அந்த அறிக்கையை கூட்டுக் குழு ஏற்றுக்கொண்டது.

    கூட்டுக் குழுவின் அறிக்கையை அதன் உறுப்பினரான பாஜக எம்.பி. மேதா விஷ்ராம் குல்கர்னி மாநிலங்களவையில் கடந்த மாதம் 13-ம் தேதி தாக்கல் செய்தார்.

    இதனைத்தொடர்ந்து வக்பு சட்ட திருத்த மசோதா மக்களவையில் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மசோதா சிறுபான்மையினரின் மத உரிமைகளை பறிக்கிறது என்பது எதிர்க்கட்சிகளின் வாதம். 

    • தாஜ் மகாலை சுற்றிய பாதுகாக்கப்பட்ட தாஜ் ட்ரேபீசியம் மண்டலத்தில் 454 மரங்களை வெட்டினார்.
    • இதை எதிர்த்தே அவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    மரங்களை வெட்டுவது மனிதர்களைக் கொல்வதை விட மோசமானது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

    தாஜ் மகாலை சுற்றிய பாதுகாக்கப்பட்ட தாஜ் ட்ரேபீசியம் மண்டலத்தில் 454 மரங்களை வெட்டிய சிவசங்கர் அகர்வால் என்பவரின் மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரித்தது. சுற்றுச்சூழல் ஒத்துழைப்பு ஆணையம் (CEC) சிவசங்கர் அகர்வால் வெட்டிய ஒவ்வொரு மரத்துக்கும் அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்க பரிந்துரைத்திருந்தது. இதை எதிர்த்தே அவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    இந்நிலையில் மனு மீதான விசாரணையின்போது பேசிய நீதிபதிகள், சுற்றுச்சூழல் விஷயத்தில் கருணை காட்டக்கூடாது. அதிக எண்ணிக்கையிலான மரங்களை வெட்டுவது ஒரு மனிதனைக் கொல்வதை விட மோசமானது.

    அனுமதியின்றி வெட்டப்பட்ட 454 மரங்கள் வழங்கி வந்த பசுமையை மீண்டும் உருவாக்க குறைந்தபட்சம் 100 ஆண்டுகள் ஆகும் என்று கூறி, வெட்டப்பட்ட ஒவ்வொரு மரத்துக்கும் அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கும் CEC பரிந்துரையை உறுதி செய்து தீர்ப்பளித்தனர்.

    • ஜுரெல் 33 ரன்களும், ஜெய்ஸ்வால் 29 ரன்களும் சேர்த்தனர்.
    • வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, மொயீன் அலி, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    ஐபிஎல் 2025 சீசனின் 6-வது போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் டைரஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சஞ்சு சாம்சன் 13 ரன்னிலும், ஜெய்ஸ்வால் 29 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    கொல்கத்தா சுழற்பந்து வீச்சாளர்களான வருண் சக்ரவர்த்தி, மொயீன் அலி ஆகியோர் சிறப்பாக பந்து வீச ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர்.

    ரியான் பராக் 25 ரன்னிலும், நிதிஷ் ராணா 8 ரன்னிலும், ஹசரங்கா 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஷுபம் துபே 9 ரன்னிலும், ஹெட்மையர் 7 ரன்னிலும் வெளியேறினர்.

    துருவ் ஜுரேல் 28 பந்தில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜாஃப்ரா ஆர்ச்சர் அதரடியாக இரண்டு சிக்சர்கள் விளாச ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்துள்ளது. ஆர்ச்சர் 7 பந்தில் 16 ரன்கள் அடித்தார்.

    கொல்கத்தா அணி சார்பில் வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, மொயீன் அலி, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    பின்னர் 152 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பேட்டிங் செய்து வருகிறது.

    • நகரங்களில் அன்றாட வாழ்வின் அங்கமாகவே யுபிஐ பரிவர்த்தனைகள் மாறிவருகின்றன.
    • UPI சேவை முடங்கியதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    இந்தியாவில் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு நாடு முழுவதும் கூகுள் பே, போன் பே உள்ளிட்டவற்றின் மூலம் யுபிஐ [யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ்] டிஜிட்டல் பண பரிவர்த்தனை பரவலாக மேற்கொள்ளப்படுகிறது.

    நகரங்களில் அன்றாட வாழ்வின் அங்கமாகவே யுபிஐ பரிவர்த்தனைகள் மாறிவருகின்றன.

    இந்நிலையில், இந்தியா முழுவதும் பல இடங்களில் பணப் பரிவர்த்தனைக்கான UPI சேவை முடங்கியதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    கூகுள் பே, போன் பே உள்ளிட்ட யூபிஐ செயலிகள் மூலம் பணம் செலுத்த முடியாததால் UPI Down என பயனர்கள் பலரும் தங்களது சமூகவலைத் தளங்களில் வேகமாக பதிவிட்டு வருகின்றனர்.

    • இரண்டு விமானிகளும் பாராசூட்டுடன் கீழே குதித்து உயிர்தப்பினர்.
    • இரண்டும் விழுந்து வெடித்ததில் அருகில் இருந்த தொழிற்சாலையிலும் தீவிபத்து ஏற்பட்டது.

    பிரான்ஸ் விமானப்படையின் 2 ஜெட் ரக விமானங்கள் நேற்றைய தினம் பயிற்சியின்போது நடுவானில் மோதி விபத்துக்குள்ளானது. இதுதொடர்பாக வீடியோ வெளியாகி உள்ளது.

    கிழக்கு பிரான்சின் ஹாட்-மார்னேவில் உள்ள செயிண்ட்-டிசியர் அருகே நேற்று பயிற்சியின்போது  பிரான்ஸ் விமானப்படை ஆல்பா ஜெட் விமானங்கள் இரன்டு நடுவானில் மோதிக்கொண்டன.

    மோதலுக்கு முன்னர் இரண்டு விமானிகளும் பாராசூட்டுடன் கீழே குதித்து உயிர்தப்பினர். அவர்கள் நலமுடன் இருப்பதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

    விபத்துக்கு பின் விமானங்கள் இரண்டும் விழுந்து வெடித்ததில் அருகில் இருந்த தொழிற்சாலையிலும் தீவிபத்து ஏற்பட்டது. எனினும் பெரிய சேதங்கள் ஏதுமில்லை என்று கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

     

    • எடப்பாடி பழனிசாமி டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • அண்ணாமலை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய எடப்பாடி பழனிச்சாமி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறீர்களா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தேர்தல் கூட்டணியை பொறுத்தவரை எந்த கட்சியும் நிலையாக இருந்தது இல்லை என்று கூறினார்.

    இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

    எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை நேற்று (மார்ச் 25) சந்தித்த நிலையில் அண்ணாமலை நாளை (மார்ச் 27) காலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    • பிரிட்டிஷ்-இந்திய திரைப்பட இயக்குநர் சந்தியா சூரி இயக்கிய திரைப்படம் 'சந்தோஷ்'
    • ஆசிய திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகைக்கான பட்டத்தையும் ஷஹானா கோஸ்வாமி பெற்றார்.

    பிரிட்டிஷ்-இந்திய திரைப்பட இயக்குநர் சந்தியா சூரி இயக்கிய திரைப்படம் 'சந்தோஷ்' . கடந்த ஆண்டு இந்த படம் வெளிநாடுகளில் வெளியானது. 'சந்தோஷ்' படம் இங்கிலாந்து சார்பாக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்ட்டது.

    இந்நிலையில் இந்த படத்தை இந்தியாவில் வெளியிட தணிக்கை வாரியம் (CBFC) தடை விதித்துள்ளது.

    கதை என்ன?

    வட இந்தியாவில் நடக்கும் கதையான இந்தப் படம், கணவன் இறந்த பிறகு அவருக்குப் பதிலாக காவல் பணியில் சேரும் ஒரு பெண்ணின் கதையைச் சொல்கிறது. பின்னர் அந்தப் பெண் போலீசிடம் ஒரு தலித் பெண்ணின் கொலை வழக்கு ஒப்படைக்கப்படுகிறது. வட இந்தியாவில் நிலவும் சாதிய பாகுபாடு, இஸ்லாமிய வெறுப்பு, பாலியல் வன்முறை ஆகியவற்றை பற்றி இப்படம் பேசுகிறது.

    என்ன பிரச்சனை?

    இந்நிலையில் படத்தில் உள்ள கருத்துக்கள் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறி பல பகுதிகளை வெட்ட தணிக்கை வாரியம் கோரியுள்ளது. ஆனால் அதற்கு படக்குழு மறுத்துள்ளதால் படத்தை வெளியிட தடை ஏற்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக பேசிய படத்தின் ஹீரோயின் (பெண் போலீஸ் கதாபாத்திரம்) ஷஹானா கோஸ்வாமி. "படத்தை வெளியிடுவதற்குத் தேவையான சில மாற்றங்களின் பட்டியலை சென்சார் வழங்கியுள்ளது.

    எங்கள் முழு குழுவும் அதனுடன் உடன்படவில்லை, ஏனென்றால் அவர்கள் படத்தில் நிறைய மாற்றங்களைச் செய்ய விரும்புகிறார்கள், எனவே, இந்திய திரையரங்குகளில் வெளியிட முடியவில்லை.

    இந்தியாவில் வெளியிட இவ்வளவு வெட்டுக்களும் மாற்றங்களும் தேவைப்படுவது மிகவும் வருத்தமளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார். இந்த படத்திற்காக ஆசிய திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை அவர் பெற்றிருந்தார்.

    படத்தின் எழுத்தாளரும் இயக்குநருமான சந்தியா சூரி, சென்சார் குழுவின் முடிவை ஏமாற்றமளிப்பதாகவும் மனதை உடைப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

    அவர் கூறியதாவது, "இது எங்கள் அனைவருக்கும் ஆச்சரியமான முடிவு, ஏனென்றால் இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ள பிரச்சினைகள் இந்திய சினிமாவுக்குப் புதியவை என்றோ அல்லது இதற்கு முன்பு வேறு படங்களில் எழுப்பப்பட்டதில்லை என்றோ நான் நினைக்கவில்லை. சென்சார் வாரியம் வழங்கிய வெட்டுக்களின் பட்டியலை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று கூறினார்.

    • 2024ஆம் அண்டு 21,404 செய்திகள் தொடர்பாக புகார் கிடைக்கப் பெற்றன.
    • இதில் 583 போலிச் செய்திகள் என கண்டறியப்பட்டது.

    பிஐபி-யின் (Press Information Bureau) உண்மை கண்டறியும் பிரிவு கடந்த 2025ஆம் ஆண்டில் இருந்து மார்ச் 19ஆம் தேதி வரை போலி செய்திகள் மற்றும் மத்திய அரசுக்கு எதிராக தவறான தகவலை வெளியிடுதல் தொடர்பாக 1575 செய்திகளை கண்டறிந்துள்ளதாக மக்களவையில் மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்புத்துறை மந்திரி அஷ்வினி விஷ்ணவ் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

    2022ஆம் ஆண்டு 25,626 செய்திகள் தொடர்பாக புகார் கிடைக்கப் பெற்றன. இதில் 8,107 செய்திகள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடியது என கண்டறியப்பட்டது. இதில் 338 செய்திகள் போலியானது என கண்டறியப்பட்டது.

    2023ஆம் அண்டு 20,684 செய்திகள் தொடர்பாக புகார் கிடைக்கப் பெற்றன. இதில் 6,623 செய்திகள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடியது என கண்டறியப்பட்டது. இதில் 557 போலிச் செய்திகள் என கண்டறியப்பட்டது.

    2024ஆம் அண்டு 21,404 செய்திகள் தொடர்பாக புகார் கிடைக்கப் பெற்றன. இதில் 6,320 செய்திகள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடியது என கண்டறியப்பட்டது. இதில் 583 போலிச் செய்திகள் என கண்டறியப்பட்டது.

    தற்போது மார்ச் 19ஆம் தேதி வரை 6,320 செய்திகள் தொடர்பாக புகார் கிடைக்கப் பெற்றன இதில் 1,811 செய்திகள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடியது என கண்டறியப்பட்டது. இதில் 97 போலிச் செய்திகள் என கண்டறியப்பட்டது.

    • ஈரான் தனது அணுசக்தி அணுசக்தி திட்டத்தை கைவிட வேண்டும் என்று சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு எச்சரித்திருந்தார்.
    • அடுத்த 2 ஆண்டுகளுக்கு, வாரத்திற்கு ஒரு ஏவுகணை நகரை உலகிற்கு அறிமுகப்படுத்துவோம் என ஈரான் தெரிவித்துள்ளது.

    அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஈரான் தனது வலிமையை நிரூபிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

    ஆயிரக்கணக்கான நவீன ரக ஏவுகணைகளை பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சுரங்கத்தில் ஈரான் ராணுவம் சேமித்து வைத்துள்ளது. இந்த 'ஏவுகணை நகரம்' தொடர்பான வீடியோவை ஈரான் அரசு வெளியிட்டுள்ளது.

    ஈரான் தனது அணுசக்தி அணுசக்தி திட்டத்தை கைவிட வேண்டும் என்று சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு எச்சரித்திருந்தார்.

    ஆனால் நேர்மாக ஈரான் அரசு தற்போது தங்கள் ராணுவ பலத்தை வெளிக்காட்டும் 85 வினாடிகள் கொண்ட வீடியோவை வெளியிட்டுள்ளது.

    இன்று தொடங்கி அடுத்த 2 ஆண்டுகளுக்கு, வாரத்திற்கு ஒரு ஏவுகணை நகரை உலகிற்கு அறிமுகப்படுத்துவோம் என ஈரான் தெரிவித்துள்ளது. இதனால் மத்திய கிழக்கை ஆட்டிப்படைக்க நினைக்கும் மேற்கு நாடுகள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளது. 

    • பைனல் டெஸ்டினேஷன் படத்தின்முதல் பாகம் கடந்த 2000-ம் ஆண்டு வெளியானது.
    • இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து 5 பாகங்கள் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றன.

    பிரபல ஹாலிவுட் திரைப்படமான பைனல் டெஸ்டினேஷன் படத்தின் 6ஆம் பாகத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

    பைனல் டெஸ்டினேஷன் படத்தின்முதல் பாகம் கடந்த 2000-ம் ஆண்டு வெளியானது. ஒரு சிறிய நிகழ்வு ஒருவரின் மரணத்துக்கு எப்படி காரணமாகிறது என்பதுதான் படத்தின் ஒன்லைன். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து 5 பாகங்கள் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றன. இதன் 5-ம் பாகம் கடைசியாக 2011-ம் ஆண்டு வெளியானது.

    தற்போது 'பைனல் டெஸ்டினேஷன் பிளட்லைன்ஸ்' என்ற 6-வது பாகம் உருவாகி உள்ளது. கிட்டத்தட்ட 14 வருடங்களுக்குப் பிறகு இப்படத்தின் 6-வது பாகம் வெளியாக உள்ளது.

    இப்படம் வரும் மே மாதம் 16-ம் தேதி வெளியாக உள்ளநிலையில், இப்படத்தின் டிரெய்லர் இணையத்தில் வைரலாகி வருகிறது.


    ×