என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • ஆக்ராவின் ஹிரியா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தது.
    • உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் பயணித்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலத்தின் முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் யோகி ஆதித்யநாத்.

    இதற்கிடையே, மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைந்து 8 ஆண்டு நிறைவடைந்த நிலையில், நேற்று அரசு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    ஆக்ராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று மாலை விமானம் மூலம் லக்னோ புறப்பட்டார்.

    ஆக்ராவின் ஹிரியா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தது. அப்போது விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானம் உடனடியாக ஹிரியா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

    அதன்பின், கோளாறு சரிசெய்யப்பட்டு சுமார் 2 மணிநேர தாமதத்திற்குபின் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அதே விமானத்தில் லக்னோ புறப்பட்டுச் சென்றார்.

    விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டபோது முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உள்பட யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மும்பையில் ஐஸ்வர்யா ராய் பச்சன் கார் மீது பேருந்து ஒன்று மோதியது.
    • இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    மும்பை:

    பிரபல பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சனின் மருமகள் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன்.

    மும்பையில் நேற்று ஐஸ்வர்யா ராய் பச்சனின் கார் மீது பேருந்து ஒன்று மோதியது. அவரது மெய்க்காப்பாளர்கள் நிலைமையை கண்டு காரை விட்டு வெளியே வந்தனர். இந்தச் சம்பவத்தால் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.


    இதுகுறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது. ஐஸ்வர்யா ராய்க்கு என்ன ஆச்சு என ரசிகர்கள் கருத்துகளை பதிவிட்டனர். இந்தச் சம்பவத்தின்போது நடிகை ஐஸ்வர்யா ராய் காரில் இல்லை என அறிந்து ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    நடிகை ஐஸ்வர்யா ராயின் கார் மீது பேருந்து மோதியது மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடந்து வருகிறது.
    • இதில் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    புளோரிடா:

    மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் நாம்பர் 2 வீராங்கனையும், போலந்தைச் சேர்ந்தவருமான இகா ஸ்வியாடெக். பிலிப்பைன்சின் அலெக்சாண்ட்ரா ஈலா உடன் மோதினார்.

    இதில் இகா ஸ்வியாடெக் 2-6, 5-7 என அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். இதன்மூலம் 19 வயதான பிலிப்பைன்ஸ் வீராங்கனை ஈலா அரையிறுதிக்கு முன்னேறி அசத்தினார்.

    • இது மீண்டும் ஒரு சார்புடைய மற்றும் அரசியல் நோக்கம் கொண்ட அறிக்கை.
    • இந்தியாவின் நிலையை குறை கூறும் அமெரிக்க அமைப்பின் முயற்சிகள் வெற்றி பெறாது என்றார்.

    புதுடெல்லி:

    சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் (யு.எஸ்.சி.ஐ.ஆர்.எப்) என்பது 1998-ம் ஆண்டு சர்வதேச மத சுதந்திர சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டது.

    இந்த அமைப்பின் ஆணையர்கள் அதிபராலும் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையில் இரு அரசியல் கட்சிகளின் தலைமையாலும் நியமிக்கப்படுகின்றனர்.

    சர்வதேச அளவில் மத சுதந்திர மீறல்கள் குறித்து இந்த அமைப்பு ஆண்டுதோறும் அறிக்கை வெளியிடும். ஒவ்வொரு ஆண்டும், இந்த அமைப்பு இந்தியாவில் நடக்கும் சம்பவங்களைப் பட்டியலிட்டு, இந்தியாவில் மத சுதந்திரம் பற்றி விமர்சனங்களை முன் வைக்கும். அதேபோல இந்தாண்டும் குறை கூறி அறிக்கை வெளியிட்டுள்ளது.

    மக்களவை தேர்தலின்போது இஸ்லாமியர்களுக்கு எதிராக பா.ஜ.க. வெறுப்பு பிரசாரம் செய்தது என்றும், சீக்கிய பயங்கரவாதி பன்னூனை கொலை செய்ய சதி செய்த இந்திய உளவு அமைப்பை தடைசெய்ய வேண்டும் என பரிந்துரை செய்தும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்த அறிக்கையை நிராகரித்த மத்திய அரசு, அமெரிக்க அமைப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:

    சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் சார்பில் சமீபத்தில் வெளியிடப்பட்ட 2025-ம் ஆண்டு அறிக்கையை நாங்கள் பார்த்தோம். இது மீண்டும் ஒரு சார்புடைய மற்றும் அரசியல் நோக்கம் கொண்ட அறிக்கை.

    இந்தியாவின் துடிப்பான பன்முக கலாசார சமூகத்தின்மீது அவதூறுகளை சுமத்தும் யு.எஸ்.சி.ஐ.ஆர்.எப்.பின் தொடர்ச்சியான முயற்சிகள் கண்டிக்கப்பட வேண்டியவை.

    அந்த அறிக்கையில் மத சுதந்திரத்திற்கான உண்மையான அக்கறையை விட , திட்டமிட்ட உள்நோக்கமே அதில் வெளிப்படையாக தெரிகிறது.

    ஜனநாயகம் மற்றும் சகிப்புத்தன்மையின் கலங்கரை விளக்கமாக இருக்கும் இந்தியாவின் நிலையை குறைகூறும் இத்தகைய முயற்சிகள் வெற்றிபெறாது. உண்மையில் யு.எஸ்.சி.ஐ.ஆர்.எப். அமைப்பு தான் சர்ச்சைக்குரிய அமைப்பாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

    • மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடந்து வருகிறது.
    • இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி ஜோடி காலிறுதியில் தோல்வி அடைந்தது.

    புளோரிடா:

    மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-போர்ச்சுக்கலின் நுனோ போர்ஜஸ் ஜோடி, பிரிட்டனின் லாய்ட் கிளாஸ்போல்-ஜூலியன் காஷ் ஜோடியுடன் மோதியது.

    இதில் முதல் செட்டை 6-7 (1-7) என இழந்த யூகி பாம்ப்ரி ஜோடி, அடுத்த செட்டை 6-3 என வென்றது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை பிரிட்டன் ஜோடி 10-8 என கைப்பற்றியது. இதன்மூலம் யூகி பாம்ப்ரி ஜோடி காலிறுதியில் தோற்று தொடரில் இருந்து வெளியேறியது.

    • கடந்த 2023-24ம் ஆண்டில் டிக்கெட் இல்லாமல் பயணித்த 2.16 கோடி பயணிகள் பிடிபட்டுள்ளனர்.
    • அவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் மூலம் ரெயில்வே ரூ.562 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் 2023-24-ம் ஆண்டில் டிக்கெட் இன்றி பிடிபட்ட பயணிகள் எண்ணிக்கை மற்றும் பிற தொடர்புடைய பிரச்சனைகள் குறித்து சில உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு மக்களவையில் ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது:

    கடந்த 2023-24-ம் ஆண்டில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த சுமார் 2.16 கோடி பயணிகளை இந்திய ரெயில்வே கண்டறிந்தது. அந்தப் பயணிகளிடம் இருந்து அபராதமாக ரூ.562.40 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

    ஸ்மார்ட் கேமராக்கள், ஏ.ஐ. அடிப்படையிலான கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கை மூலம் டிக்கெட் இல்லாத பயணிகளைக் கண்டறியும் விகிதம் உயர்ந்துள்ளது.

    முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அபராத வருமானம் கணிசமாக அதிகரித்துள்ளது.

    மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான டிக்கெட் எடுக்காத பயணிகள் பதிவாகியுள்ளனர். டிக்கெட் இல்லாத பயணம் ரெயில்வேக்கு ஏராளமான நிதி இழப்பை ஏற்படுத்துகிறது.

    உள்ளூர் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு அல்லது ரெயில்வே அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்களின்படி, மண்டல ரயில்வேக்களால் அவ்வப்போது சிறப்பு டிக்கெட் சரிபார்ப்பு பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

    டிக்கெட் சரிபார்ப்பு செயல்பாடு மற்றும் சிறப்பு டிக்கெட் சரிபார்ப்பு பிரசாரங்களை நடத்துவது இந்திய ரெயில்வேயில் தொடர்ச்சியான பயிற்சியாகும். இந்த நடவடிக்கைகள் முறைகேடுகளைக் குறைக்கவும், ரெயில்வே வருவாயை மேம்படுத்தவும் உதவுகின்றன என தெரிவித்தார்.

    • முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 151 ரன்கள் எடுத்தது.
    • டி காக் அதிரடியில் கொல்கத்தா 153 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

    கவுகாத்தி:

    ஐ.பி.எல். 2025 சீசனின் 6-வது போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் டைரஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது.

    துருவ் ஜுரேல் 28 பந்தில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜெய்ஸ்வால் 29 ரன்னும், ரியான் பராக் 25 ரன்னும், சஞ்சு சாம்சன் 13 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    கொல்கத்தா அணி சார்பில் வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, மொயீன் அலி, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 152 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மொயீன் அலி 5 ரன்னிலும், கேப்டன் ரகானே 18 ரன்னிலும் அவுட்டாகினர்.

    3வது விக்கெட்டுக்கு டி காக், ரகுவன்ஷி ஜோடி சேர்ந்தது. டி காக் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.

    இறுதியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 17.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 153 ரன்களை எடுத்து வென்றது. இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. டி காக் 97 ரன்னும், ரகுவன்ஷி 22 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    ராஜஸ்தான் அணி தான் விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது.

    • மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடந்து வருகிறது.
    • இதில் பல்கேரியாவின் டிமித்ரோவ் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    புளோரிடா:

    மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இத்தாலியின் லாரன்சோ முசெட்டி உடன் மோதினார்.

    இதில் ஜோகோவிச் 6-2, 6-4 என எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் பல்கேரியாவின் கிரிகோர் டிமித்ரோவ் 6-4, 7-5 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் பிரண்டன் நகஷிமாவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • தனக்கு கிடைத்த 2.5 கோடி பரிசுத் தொகையை துணைப் பயிற்சியாளர்களுக்கு டிராவிட் பகிர்ந்து கொடுத்தார்.
    • சாம்பியன்ஸ் ட்ராபியை வென்றதற்காக கவுதம் கம்பீருக்கு பிசிசிஐ 3 கோடி பரிசு தொகை அறிவித்துள்ளது.

    பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது.

    சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ ரூ.58 கோடியை பரிசுத்தொகையாக அறிவித்துள்ளது. வீரர்கள் மற்றும் பயிற்சியாளருக்கு 3 கோடியும் துணை பயிற்சி ஊழியர்களுக்கு தலா ரூ.50 லட்சமும் பகிர்ந்து அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தனது துணை ஊழியர்களை விட அதிக பரிசு தொகை வேண்டாம் என்று கூறிய ராகுல் டிராவிட்டின் முன்மாதிரியை கவுதம் கம்பீர் பின்பற்றுவாரா என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    ஸ்போர்ட்ஸ்டார் இதழில் சுனில் கவாஸ்கர் எழுதிய கட்டுரையில், "2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு அப்போதைய பயிற்சியாளர் ராகுல் டிராவிட், தனது சக துணை ஊழியர்களை விட அதிகமான பரிசுத்தொகை வேண்டாம் என்று மறுத்துவிட்டார். மேலும், தனக்கு கிடைத்த 2.5 கோடி பரிசுத் தொகையை துணைப் பயிற்சியாளர்களுக்கு டிராவிட் பகிர்ந்து கொடுத்தார்.

    2025 சாம்பியன்ஸ் ட்ராபியை வென்றதற்காக தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு பிசிசிஐ 3 கோடி பரிசு தொகை அறிவித்துள்ளது. ஆனால் மோர்னே மோர்கெல், திலிப் உள்ளிட்ட துணைப் பயிற்சியாளர்களுக்கு 50 லட்சம் மட்டுமே பரிசாகக் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் கவுதம் கம்பீர், ராகுல் டிராவிட் போல எந்த அறிவிப்பும் வெளியிட்டதாக தெரியவில்லை. அப்படியானால் ராகுல் டிராவிட் நல்ல ரோல் மாடலாக இல்லையா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    • மசோதாவை ஒன்றிய அரசு கைவிடக் கோரும் தீர்மானத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை முன்மொழிகிறார்.
    • வக்பு சட்ட திருத்த மசோதா மக்களவையில் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.

    மத்திய அரசின் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக சட்டப்பேரவையில் நாளை தமிழ்நாடு அரசு தீர்மானம் கொண்டு வருகிறது. மசோதாவை ஒன்றிய அரசு கைவிடக் கோரும் தீர்மானத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை முன்மொழிய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    வக்பு சட்ட திருத்த மசோதா மக்களவையில் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் தமிழக அரசு அதற்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வருகிறது.

    நாடு முழுவதும் உள்ள வக்பு வாரிய சொத்துகளை பதிவு செய்து வெளிப்படைத்தன்மையுடன் நிர்வகிக்க வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டு, மக்களவையில் கடந்தாண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.

    இது சிறுபான்மையினருக்கு எதிராக உள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியதால், பாராளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு சட்ட திருத்த மசோதா அனுப்பப்பட்டது.



    மசோதாவில் எதிர்கட்சி உறுப்பினர்கள் பரிந்துரைத்த பல்வேறு நிறுத்தங்களில் 14 திருத்தங்களுக்கு கூட்டுக்குழு ஒப்புதல் அளித்தது. அதன்பின் 655 பக்க அறிக்கை தயாரானது.

    இதற்கு கூட்டுக்குழுவில் இடம்பெற்ற எதிர்க்கட்சியைச் சேர்ந்த 11 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பெரும்பான்மை வாக்குகள் அடிப்படையில் அந்த அறிக்கையை கூட்டுக் குழு ஏற்றுக்கொண்டது.

    கூட்டுக் குழுவின் அறிக்கையை அதன் உறுப்பினரான பாஜக எம்.பி. மேதா விஷ்ராம் குல்கர்னி மாநிலங்களவையில் கடந்த மாதம் 13-ம் தேதி தாக்கல் செய்தார்.

    இதனைத்தொடர்ந்து வக்பு சட்ட திருத்த மசோதா மக்களவையில் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மசோதா சிறுபான்மையினரின் மத உரிமைகளை பறிக்கிறது என்பது எதிர்க்கட்சிகளின் வாதம். 

    • தாஜ் மகாலை சுற்றிய பாதுகாக்கப்பட்ட தாஜ் ட்ரேபீசியம் மண்டலத்தில் 454 மரங்களை வெட்டினார்.
    • இதை எதிர்த்தே அவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    மரங்களை வெட்டுவது மனிதர்களைக் கொல்வதை விட மோசமானது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

    தாஜ் மகாலை சுற்றிய பாதுகாக்கப்பட்ட தாஜ் ட்ரேபீசியம் மண்டலத்தில் 454 மரங்களை வெட்டிய சிவசங்கர் அகர்வால் என்பவரின் மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரித்தது. சுற்றுச்சூழல் ஒத்துழைப்பு ஆணையம் (CEC) சிவசங்கர் அகர்வால் வெட்டிய ஒவ்வொரு மரத்துக்கும் அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்க பரிந்துரைத்திருந்தது. இதை எதிர்த்தே அவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    இந்நிலையில் மனு மீதான விசாரணையின்போது பேசிய நீதிபதிகள், சுற்றுச்சூழல் விஷயத்தில் கருணை காட்டக்கூடாது. அதிக எண்ணிக்கையிலான மரங்களை வெட்டுவது ஒரு மனிதனைக் கொல்வதை விட மோசமானது.

    அனுமதியின்றி வெட்டப்பட்ட 454 மரங்கள் வழங்கி வந்த பசுமையை மீண்டும் உருவாக்க குறைந்தபட்சம் 100 ஆண்டுகள் ஆகும் என்று கூறி, வெட்டப்பட்ட ஒவ்வொரு மரத்துக்கும் அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கும் CEC பரிந்துரையை உறுதி செய்து தீர்ப்பளித்தனர்.

    • ஜுரெல் 33 ரன்களும், ஜெய்ஸ்வால் 29 ரன்களும் சேர்த்தனர்.
    • வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, மொயீன் அலி, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    ஐபிஎல் 2025 சீசனின் 6-வது போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் டைரஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சஞ்சு சாம்சன் 13 ரன்னிலும், ஜெய்ஸ்வால் 29 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    கொல்கத்தா சுழற்பந்து வீச்சாளர்களான வருண் சக்ரவர்த்தி, மொயீன் அலி ஆகியோர் சிறப்பாக பந்து வீச ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர்.

    ரியான் பராக் 25 ரன்னிலும், நிதிஷ் ராணா 8 ரன்னிலும், ஹசரங்கா 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஷுபம் துபே 9 ரன்னிலும், ஹெட்மையர் 7 ரன்னிலும் வெளியேறினர்.

    துருவ் ஜுரேல் 28 பந்தில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜாஃப்ரா ஆர்ச்சர் அதரடியாக இரண்டு சிக்சர்கள் விளாச ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்துள்ளது. ஆர்ச்சர் 7 பந்தில் 16 ரன்கள் அடித்தார்.

    கொல்கத்தா அணி சார்பில் வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, மொயீன் அலி, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    பின்னர் 152 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பேட்டிங் செய்து வருகிறது.

    ×