என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "film"

    • மிருகங்கள் எல்லாம் சேர்ந்து மனிதர்களை போல வீடு வாசல், வேலை என ஒரு நகரத்தில் வாழந்தால் எப்படி இருக்கும்.
    • உலகிலேயே மிக சோம்பேறியான ஸ்லோத் மிருகங்கள் ஜூடோபியாவில் அரசு அதிகாரிகளாக வேலை செய்கின்றன.

    மிருகங்கள் எல்லாம் சேர்ந்து மனிதர்களை போல வீடு வாசல், வேலை என ஒரு நகரத்தில் வாழந்தால் எப்படி இருக்கும். அந்த நகரம் தான் 'ஜூடோபியா'

    2016இல் வெளியான முதல் பாகத்தில் கிராமத்தில் இருந்து நகரத்திற்கு காவல்துறை வேளையில் சேர முயல் குடும்பத்தை சேர்ந்த ஜூடி ஹாப்ஸ் செல்கிறாள்.

    அங்கு ஒரு திருட்டு நரி (நிக் வைல்ட்) உதவியுடன் ஒரு வழக்கின் மர்மங்களை ஜூடி ஹாப்ஸ் கண்டுபிடிப்பதே கதை. இறுதியில் நிக் வைல்டும் காவல் அதிகாரி ஆகிவிடுகிறான்.

    இந்நிலையில் 'ஜூடோபியா 2' படத்தின் கதை முதல் பாகத்திலிருந்து தொடர்கிறது. காவல் துறையில் பார்ட்னர்களாக இருந்து வரும் ஜூடி ஹாப்ஸ் மற்றும் நிக் வைல்ட் இருவரிடையே பிரிவு ஏற்படுகிறது.

    ஜூடி ஒரு பாம்பு ஜூடோபியாவில் ஊடுருவியதாக சந்தேகிக்கிறாள். ஜூடோபியா ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட பாம்புகள் அங்கு வந்தது என அவள் கூறியதை யாரும் நம்பவில்லை.

    ஆனால் ஜூடி நிக்கை சம்மதிக்க வைத்து அவனுடன் சேர்ந்த இதுகுறித்து விசாரணையை தொடங்குகிறாள்.

    இதற்கிடையில், ஜூடோபியாவின் நிறுவனர்களான லிங்க்ஸ்லி என்ற சிங்கக் குடும்பம் ஒரு விருந்து வைக்கிறது. இந்த விருந்தின்போது ஒரு திருட்டு நடக்கிறது. பாம்பு ஏன் ஊருக்குள் வந்தது, அதற்கும் இந்த திருட்டுக்கும் என்ன தொடர்பு, ஜூடியும், நிக்கும் ஒற்றுமையாக இந்த மர்மத்தை அவிழ்த்தார்களா என்பதே மீதிக்கதை.

    நடிகர்கள்: படம் அனிமேஷன் என்பதால் டப்பிங் கலைஞர்கள் கையில் தான் கதாபாத்திரங்களின் உயிர் உள்ளது. மேலும் முதல் படத்தை போல காமெடி வசனங்கள், சம்பவங்களுக்கு பஞ்சமில்லை.

    இயக்கம்: அனிமேஷன் காட்சியமைப்புகள் ஜூட்டோபியாவுக்குள் நம்மை அழைத்துச் செல்கின்றன.கதை மீதான பார்வையாளரின் நம்பிக்கையை நிறுவுகின்றன. ஒவ்வொரு சிறிய காட்சியும் மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆக்ஷன் காட்சிகளும் படத்தில் அமர்க்களப்படுகிறது.

    நகரில் மனிதர்களை போல வெவ்வேறு பணிகளை செய்யும் வெவ்வேறு விலங்குகளை காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். குறிப்பாக உலகிலேயே மிக சோம்பேறியான ஸ்லோத் மிருகங்கள் ஜூடோபியாவில் அரசு அதிகாரிகளாக வேலை செய்வது அங்கு கள எதார்த்தம் போலும். மேலும் மிருகங்களுக்கு இடையே இருக்கும் முரண்களை வைத்து நகைச்சுவை, சமூக கட்டமைப்பு, வர்க்க பேதங்கள் என அசல் நவநாகரீக மனித நகரங்களை கண் முன் கொண்டு வந்ததற்கு பாராட்டுகள்.

    நிக், ஜூடி இடையே ஏற்படும் சச்சரவுகள், சண்டை என இருந்தாலும், இருவருக்கும் உள்ள கெமிஸ்ரிக்கு 100 மார்க் கொடுக்கலாம்.

    மொத்தத்தில் கத்தி, துப்பாக்கி, சிவப்பு பெயிண்ட் (ரத்தம்) என கண்களை புண்ணாக்கும் படங்களுக்கு மத்தியில் குழந்தைகளை அழைத்துக்கொண்டு பெற்றோர்கள் செல்ல ஏதுவான டிசம்பர் ட்ரீட் இந்த 'ஜூடோபியா 2' 

    மாலைமலர் ரேட்டிங் : 3.5 / 5

    • இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த 1946 காலகட்டத்தில் நடக்கிறது.
    • துப்பாக்கிச்சூடு, குண்டுவெடிப்பு, ரத்தம் என ஒரே சண்டை மையமாக கிராபிக் வலயன்ஸ் காட்சிகளுடன் படம் நகர்கிறது.

    2022 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற பின்லாந்து திரைப்படம் "SISU". இப்படம் இரண்டாம் உலகப் போரில் முடியும் தருவாயில் 1944 காலகட்டத்தில் நடக்கும் கதையாகும். பின்லாந்தில் வாழும் முன்னாள் கமாண்டோ அட்டாமி கோர்பி பின்லாந்தின் வடக்கு சமவெளியில் தனியே தோண்டுதல் பணி நடத்தி தங்கத்தை கண்டுபிடித்து எடுத்துச் செல்லும்போது ஹிட்லரின் நாஜி படை அதிகாரிகள் அவரின் தங்கத்தை பரித்துச் செல்கின்றனர்.

    அட்டாமி கோர்பி அவர்களை துரத்திச் சென்று தனது தங்கத்தை மீட்பதே கதை. சாதராண முதியவர் என்ற பிம்பத்துக்கு பின்னால் அட்டாமி கோர்பியின் மிகவும் ஆக்ரோஷமான முன்னாள் கமாண்டோ என்ற பிம்பம் வெளிப்படும். இதுவே படத்தின் உயிர்நாடி. அட்டாமி கோர்பியை, "SISU"என்ற பின்னாலாந்தின் அர்பேன் லெஜண்ட் ஆக அவ்வூர் மக்கள் கருதுவார்கள். படம் முழு அட்டாமி கோர்பி ஒரு வார்த்தை கூட பேச மாட்டார் என்பதை கவனிக்க வேண்டும்.

    இந்த பிம்பத்தோடு அவர் எதிர்கொள்ளப் போகும் புதிய சவால் என்ன?. அதுவே தற்போது வெளியாகி உள்ள 'SISU - தி ரோட் டு ரிவெஞ்ச்' என்ற இரண்டாம் பாகம்.

    இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த 1946 காலகட்டத்தில் SISU இரண்டாம் பாக கதை நகர்கிறது. இரண்டாம் உலகப் போரில் தனது குடும்பத்தை இழந்த பிறகு, அட்டாமி கோர்பி அவர்களுடன் வாழ்ந்த மர வீட்டை பிரித்து மூட்டை கட்டி அமைதியான ஒரு இடத்தில் வீட்டை மீண்டும் உருவாக்கி வாழலாம் என புறப்படுகிறார். இதன்போது அவர் சோவியத் யூனியன் எல்லைக்குள் நுழையவே இதை அறிந்த சோவியத் யூனியனின் செம்படைத் தலைவர் இகோர் அட்டாமியைக் கொல்ல தனது படைகளுடன் செல்கிறார்.

    அவர்களே தனது குடும்பத்தை கொன்றவர்கள் எனவும் அட்டாமி கோர்பி அறிகிறார். அவர்களிடம் இருந்து தான் பெரிதாக கருதும் வீட்டின் மர பாகங்களை எப்படி அட்டாமி காற்றினார், தனது குடும்பத்துக்காக அவர்களை பழிவாங்கினாரா, அமைதியாக இடத்தில் மீண்டும் வீட்டை கட்டும் தனது கனவை நிறைவேற்றினாரா என்பதுதான் மீதிக் கதை.

    இயக்கம்:

    இந்த முழு படத்திலும் பத்து பக்க வசனங்கள் கூட இல்லை. படம் முழுவதும் ஆக்ஷனால் நிரம்பியுள்ளது. துப்பாக்கிச்சூடு, குண்டுவெடிப்பு, ரத்தம் என ஒரே சண்டை மையமாக கிராபிக் வலயன்ஸ் காட்சிகளுடன் படம் நகர்கிறது. எனவே ஆக்ஷன் ரசிகர்களுக்கு படம் நல்ல தீனியாக அமைந்துள்ளது.

    முதல் பாகத்தை போலவே மிகவும் ஆக்ரோஷமான காட்சிகளுடன் படம் நகர்கிறது. இருப்பினும் காட்சிகளிலும் கதையிலும் முதல் பாகத்தில் இருந்த வலு குறைந்துள்ளதாக தெரிகிறது. முதல் பாகத்திற்கு எதிர்பார்ப்பு இல்லாதபோது வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாம் பாகம் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானதால் அவ்வாறு தோன்றலாம்.

    நடிகர்கள்:

    அட்டாமி கோர்பி கதாபாத்திரத்தில் பின்லாந்து நடிகர் ஜோர்ம டோம்மிலா நடித்துள்ளார். படம் முழுவதும் அவர் பேசாமல், தனது முதிர்ந்த மற்றும் ஆக்ரோஷமான உடல் மொழியால் கதாபாத்திரத்தை பிரதிபலித்திருக்கிறார்.

    சோவியத் செம்படைகளின் தலைவராக இகோர் கதாபாத்திரத்தில் ஜாக் டூல்டன் நடித்துள்ளார். அட்டாமி கோர்பியை மையமாக வைத்தே கதை நகர்வதால் மற்ற பாத்திரங்கள் பெரிதும் வெளித்தெரியவில்லை.

    ஒளிப்பதிவு:

    படத்தின் ஒளிப்பதிவை மிகா ஒராசமா கையாண்டுள்ளார். இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் அடர்ந்த காடுகளின் பின்னணியில் நடக்கும் கதையை நம்பும்படியாக படம்பிடித்துள்ளார்.

    சண்டைக் காட்சிகளுக்கு ஒராசமாவின் மெனக்கிடல் படத்தில் பிரதிபலிக்கிறது. அதிகப்படியான ரத்தம் மற்றும் கிராஃபிக் வன்முறை காட்சிகளை காத்திரம் குறையாமல் காட்டியிருக்கிறார்.

    பின்னணி இசை

    அட்டாமி கோர்பி ஒரு வார்த்தை கூட பேசாததால், கதைப் பின்னணியின் தீவிரத்தையும், அவரது உணர்ச்சியையும் பார்வையாளருக்கு யாரிட் கிளிஞ்சர் உடைய அழுத்தமான பின்னணி இசை வெற்றிகரமாக கடத்தியுள்ளது.

    ரேட்டிங் : 3.5 / 5 

    • அதன் பின்னரே ரஜினிக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
    • திரைப்பட விமர்சகராகவும் இருந்துள்ளார்.

    இயக்குனர் கே. பாலச்சந்தர் ரஜினியை சினிமாவில் அறிமுகப்படுத்தியதை அனைவரும் அறிவர். ஆனால் ரஜினியை ஒரு நடிகராக மெருகேற்றியவர் கோபாலி.

    தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சார்பாக நடத்தப்பட்ட, திரைப்படப் பயிற்சி கல்லூரியில் ரஜினி படித்த சமயம், அங்கு நடிப்பு பயிற்சி கற்றுக்கொடுக்கின்ற ஆசிரியராக கோபாலி பணியாற்றினார்.

    கே.பாலச்சந்தர் திரைப்பட பயிற்சிக் கல்லூரிக்கு வந்த போது தனது மாணவர் ரஜினியை கோபாலி அவருக்கு அறிமுகப்படுத்தினார். அதன் பின்னரே ரஜினிக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

    கோபாலி, இந்தியன் எக்ஸ்பிரஸ், தூர்தர்ஷன் ஆகியவற்றிலும் பணியாற்றி உள்ளார். மேலும் திரைப்பட விமர்சகராகவும் இருந்துள்ளார்.

    இந்நிலையில் வயது மூப்பு காரணமாக கோபாலி சென்னையில் இன்று காலை காலமானார். ரஜினிகாந்த் நேரில் சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து இறுதிமதியாதை செலுத்தினார். 

    • காலிஸை வேட்டையாட பூமியிலிருந்து மற்றொரு ரோபோ குழுவும் வந்து சேர்ந்துள்ளது.
    • வில்லனாக இருந்த பிரிடேட்டர் இனத்தவனைக் கதாநாயகனாக வைத்து மாறுபட்ட கோணத்தில் படம் உருவாகி இருப்பது இயக்குனரின் புதிய பாய்ச்சல்.

    வளிமண்டலத்தில் ப்ரிடேட்டர் இனத்திற்கென்று தனியான ஒரு கிரகம் இருக்கிறது. இந்தக் கிரகத்தின் பெயர் யாட்ஜா பிரைம். இதில் வசிக்கும் ப்ரிடேட்டர்கள் யாட்ஜா என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் மற்ற கிரகங்களில் உள்ள உயிரினங்களை வேட்டையாடுவதைத் தொழிலாகக் கொண்டுள்ளனர்.

    யாட்ஜா என்றால் பலசாலியாகவும், கருணையே அற்ற வேட்டைக்காரனாகவும் இருக்க வேண்டும். ஆனால், கதையின் நாயகனான யாட்ஜா இனத்தைச் சேர்ந்த டெக், மற்ற யாட்ஜா-களை விட பலவீனமாக இருக்கிறான். இதனால் டெக்கை வெறுக்கும் அவனது தந்தை, அவனைக் கொல்ல உத்தரவிடுகிறார். ஆனால், டெக்கின் அண்ணன், தன் தம்பிக்குத் தன்னை நிரூபிக்க ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கூறி அவனைக் கொல்ல மறுக்கிறான்.

    தந்தையே டெக்கைக் கொல்ல முயலும்போது, அண்ணன் தம்பியைப் பாதுகாக்கும் முயற்சியில் தந்தையின் கையால் இறக்கிறான். இறப்பதற்கு முன், தம்பி டெக்கை ஒரு விண்கலத்தில் ஏற்றி கென்னா என்ற கிரகத்திற்கு அனுப்பி வைக்கிறான். கென்னா கிரகத்தில் யாராலும் அழிக்க முடியாத காலிஸ்க் என்ற மிருகம் உள்ளது. அதைக் கொன்று வேட்டையாடினால், தன்னைத் தனது கிரகத்தில் அங்கீகரிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் டெக், அந்தக் காலிஸ்க்கைத் தேடிப் பல வினோத உயிரினங்கள் உள்ள அந்தக் கிரகத்தில் தனது பயணத்தைத் தொடர்கிறான்.

    வழியில், பூமியிலிருந்து அந்தக் கிரகத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட தியா என்ற மனித வடிவிலான ரோபோவை டெக் சந்திக்கிறான். தியா ஏற்கனவே காலிஸுடன் சண்டையிட்டு தனது உடலின் ஒரு பாதியை இழந்தவள். எனவே, காலிஸ் இருக்கும் இடத்தைத் தான் காட்டுவதாக டெக்குடன் ஒரு ஒப்பந்தம் செய்து பயணத்தைத் தொடர்கிறாள்.

    இதற்கிடையே, காலிஸை வேட்டையாட பூமியிலிருந்து மற்றொரு ரோபோ குழுவும் வந்து சேர்ந்துள்ளது. டெக், தியா காலிஸைக் கண்டுபிடித்தார்களா? இறுதியில் காலிஸ் வேட்டையாடப்பட்டதா? என்பதுதான் மீதிக்கதை.

    நடிகர்கள்:

    டெக் கதாபாத்திரத்தில் டிமிட்ரியஸ் ஷுஸ்டர்-கோலோமதாங்கி மற்றும் தியா கதாபாத்திரத்தில் எல்லே பன்னிங் சிறப்பாக நடித்துள்ளனர். படம் முழுவதும் முகம் மறைக்கப்பட்டிருந்தாலும், டெக் கதாபாத்திரத்திற்கு டிமிட்ரியஸ் ஷுஸ்டர் நியாயம் செய்திருக்கிறார். நகைச்சுவை உணர்வு கொண்ட தியா கதாபாத்திரத்திற்கு எல்லே பன்னிங் வலு சேர்த்துள்ளார். அதிக ஆக்ஷன் காட்சிகளைக் கொண்ட படத்தில், இருவரின் கெமிஸ்ட்ரி காண்போருக்கு இதமளிக்கிறது.

    இயக்கம்:

    மனிதனே அல்லாத, அதிக CGI உடன் வேற்றுகிரகவாசிகள், மிருகங்கள், ரோபோக்கள் என நகரும் படத்தில், குடும்ப உறவு, அண்ணன் தம்பி பாசம், நட்பு, விரோதம், பலவீனம், நிராகரிப்பு போன்ற உணர்ச்சிகளை இயக்குநர் டான் ட்ராக்டென்பெர்க் தொட்டுக் காட்டி இருக்கிறார். முந்தைய படங்களில் வில்லனாக இருந்த பிரிடேட்டர் இனத்தவனைக் கதாநாயகனாக வைத்து மாறுபட்ட கோணத்தில் படம் உருவாகி இருப்பது இயக்குனரின் புதிய பாய்ச்சல்.

    காட்சிகள் - ஒளிப்பதிவு:

    கென்னா கிரகம் மிக பிரம்மாண்டமாக CGI வேலைப்பாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. டெக் - தியா தங்கள் சாகசப் பயணத்தில் எதிர்கொள்ளும் டிராகன்கள், யானை போன்ற மிருகங்கள், விசித்திரத் தாவரங்கள் சுவாரஸ்யமூட்டுகின்றன. டெக் மற்றும் காலிஸ்க் இடையே நடக்கும் சண்டை மிரட்டலாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பொருந்தக்கூடிய பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளது.

    மொத்தத்தில், ஒரு சைன்ஸ் ஃபிக்ஷன் சாகசப் படமாக, அதிரடிகளுடன் கூடிய த்ரில்லிங் அனுபவத்தை 'ப்ரிடேட்டர்: பேட்லேன்ட்ஸ்' அளிக்கிறது. 

    ரேட்டிங்: 3.5/5

    • ஃபவாத் கான் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக வாணி கபூர் நடிக்கிறார்.
    • பஹல்காம் தாக்குதலுக்கு நடிகர் ஃபவாத் கான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    26 பேரின் உயிரைக் குடித்த காஷ்மீர் பஹல்காம் தாக்குதல் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.

    இந்நிலையில் பாகிஸ்தான் நடிகர் ஃபவாத் கான் மற்றும் இந்தி வாணி கபூர் நடிக்கும் 'அபிர் குலால்' படத்தை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்ற குரல் வலுத்துள்ளது.

    இந்தப் படம்  மே 9, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. 'அபிர் குலால்' இரண்டு நாடுகளின் எல்லைகளைக் கடக்கும் ஒரு காதல் கதையை மையமிட்டு எடுக்கப்பட்ட படம்.

    இந்தப் படத்தில் ஃபவாத் கான் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக வாணி கபூர் நடிக்கிறார். இது தவிர, சோனி ரஸ்தான், ஃபரிதா ஜலால், லிசா ஹேடன் மற்றும் ராகுல் வோஹ்ரா ஆகியோரும் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ஆர்த்தி எஸ். பக்ரி இயக்கியுள்ளார்.

    இந்நிலையில் பாகிஸ்தான் நடிகர் ஃபவாத் கான் மற்றும் அவரின் 'அபிர் குலால்' படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் குரல்கள் எழுந்துள்ளன.

    மேற்கு இந்திய திரைப்பட ஊழியர் கூட்டமைப்பு மற்றும் இந்திய மற்றும் தொலைக்காட்சி இயக்குநர்கள் சங்கமும் இந்த படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இதற்கிடையே பஹல்காம் தாக்குதலுக்கு நடிகர் ஃபவாத் கான் கண்டனம் தெரிவித்துள்ளார்.  

    • பிரிட்டிஷ்-இந்திய திரைப்பட இயக்குநர் சந்தியா சூரி இயக்கிய திரைப்படம் 'சந்தோஷ்'
    • ஆசிய திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகைக்கான பட்டத்தையும் ஷஹானா கோஸ்வாமி பெற்றார்.

    பிரிட்டிஷ்-இந்திய திரைப்பட இயக்குநர் சந்தியா சூரி இயக்கிய திரைப்படம் 'சந்தோஷ்' . கடந்த ஆண்டு இந்த படம் வெளிநாடுகளில் வெளியானது. 'சந்தோஷ்' படம் இங்கிலாந்து சார்பாக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்ட்டது.

    இந்நிலையில் இந்த படத்தை இந்தியாவில் வெளியிட தணிக்கை வாரியம் (CBFC) தடை விதித்துள்ளது.

    கதை என்ன?

    வட இந்தியாவில் நடக்கும் கதையான இந்தப் படம், கணவன் இறந்த பிறகு அவருக்குப் பதிலாக காவல் பணியில் சேரும் ஒரு பெண்ணின் கதையைச் சொல்கிறது. பின்னர் அந்தப் பெண் போலீசிடம் ஒரு தலித் பெண்ணின் கொலை வழக்கு ஒப்படைக்கப்படுகிறது. வட இந்தியாவில் நிலவும் சாதிய பாகுபாடு, இஸ்லாமிய வெறுப்பு, பாலியல் வன்முறை ஆகியவற்றை பற்றி இப்படம் பேசுகிறது.

    என்ன பிரச்சனை?

    இந்நிலையில் படத்தில் உள்ள கருத்துக்கள் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறி பல பகுதிகளை வெட்ட தணிக்கை வாரியம் கோரியுள்ளது. ஆனால் அதற்கு படக்குழு மறுத்துள்ளதால் படத்தை வெளியிட தடை ஏற்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக பேசிய படத்தின் ஹீரோயின் (பெண் போலீஸ் கதாபாத்திரம்) ஷஹானா கோஸ்வாமி. "படத்தை வெளியிடுவதற்குத் தேவையான சில மாற்றங்களின் பட்டியலை சென்சார் வழங்கியுள்ளது.

    எங்கள் முழு குழுவும் அதனுடன் உடன்படவில்லை, ஏனென்றால் அவர்கள் படத்தில் நிறைய மாற்றங்களைச் செய்ய விரும்புகிறார்கள், எனவே, இந்திய திரையரங்குகளில் வெளியிட முடியவில்லை.

    இந்தியாவில் வெளியிட இவ்வளவு வெட்டுக்களும் மாற்றங்களும் தேவைப்படுவது மிகவும் வருத்தமளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார். இந்த படத்திற்காக ஆசிய திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை அவர் பெற்றிருந்தார்.

    படத்தின் எழுத்தாளரும் இயக்குநருமான சந்தியா சூரி, சென்சார் குழுவின் முடிவை ஏமாற்றமளிப்பதாகவும் மனதை உடைப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

    அவர் கூறியதாவது, "இது எங்கள் அனைவருக்கும் ஆச்சரியமான முடிவு, ஏனென்றால் இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ள பிரச்சினைகள் இந்திய சினிமாவுக்குப் புதியவை என்றோ அல்லது இதற்கு முன்பு வேறு படங்களில் எழுப்பப்பட்டதில்லை என்றோ நான் நினைக்கவில்லை. சென்சார் வாரியம் வழங்கிய வெட்டுக்களின் பட்டியலை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று கூறினார்.

    • நீர் தேர்வு அனிதா இறப்பின் போது போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கில் சினிமா இயக்குனர் கவுதமனுக்கு பிடிவாரண்ட் பிறபபிக்கப்பட்டு உள்ளது
    • பலமுறை வழக்கில் ஆஜராகாததால் நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்தார்

    செந்துறை,

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அனிதா. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நீட் தேர்வு காரணமாக மருத்துவர் ஆக முடியாத மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் குழுமூர் கிராமத்திற்கு வந்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அனிதாவின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு சுடுகாடு வரை சென்று அஞ்சலி செலுத்தினார். இதனால் இந்த நீட் எதிர்ப்பு போராட்டம் தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவில் எதிரொளித்தது.

    போராட்டத்தில் ஈடுபட்ட சினிமா இயக்குனர் கவுதமன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மீது வழக்கு பதியப்பட்டது. அந்த வழக்குகள் தற்போது செந்துறை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கவுதமன் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி ஏக்னஸ் ஜெப கிருபா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    • விஜய் சேதுபதி நடித்து வெற்றிகரமாக ஓடிய படங்களும் தற்போது 'ரீ ரிலீஸ்' செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன
    • நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்', "இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" 2 படங்களும் 'ரீ ரிலீஸ்' செய்யப்பட உள்ளன.

    தமிழ் சினிமாவில் தற்போது "ரீ-ரிலீஸ்" படங்கள் தியேட்டர்களில் நன்றாக ஓடி கொண்டிருக்கிறது. 'வாரணம் ஆயிரம்', 'வேட்டையாடு விளையாடு', '3', 'விண்ணைத் தாண்டி வருவாயா' உள்ளிட்ட படங்கள் வெற்றிகரமாக ஓடி வருகின்றன.





    இந்நிலையில் சமீபத்தில் தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ் நடிப்பில் உருவான 'கில்லி' படம் "ரீ ரிலீஸ்" செய்யப்பட்டு மிகப்பெரும் வசூல் சாதனை செய்தது. இதையடுத்து, மே 1 - ந்தேதி அஜித்தின் பிறந்தநாளை யொட்டி "பில்லா" ,மற்றும் "தீனா" ஆகிய படங்கள் 'ரீ ரிலீஸ்' செய்யப்பட் உள்ளன.



    இந்நிலையில் விஜய் சேதுபதி நடித்து வெற்றிகரமாக ஓடிய படங்களும் தற்போது 'ரீ ரிலீஸ்' செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. கடந்த 2012 -ம் ஆண்டு விஜய் சேதுபதி நடித்த 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்', "இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" ஆகிய 2 படங்களும் விரைவில் 'ரீ ரிலீஸ்' செய்யப்பட உள்ளன.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கல்லறையில் திரையரங்கில் உள்ளது போல் காலி நாற்காலிகள் போடப்பட்டிருந்தது.
    • நிறைவேறாத ஆசைகளால் ஆவிகள் மனித உலகில் தங்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

    தாய்லாந்தில் உள்ள ஒரு சீன கல்லறையில் இறந்தவர்களுக்காக திரைப்பட காட்சிகளை நடத்துவதன் மூலம் திரைப்பட அனுபவத்தை ஒரு புதிய நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.

    இந்த பயமுறுத்தும் திரைப்படம் போட்டு காட்டும் நிகழ்வை சவாங் மெட்டா தம்மசாதன் அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்தது.

    ஜூன் 2 முதல் ஜூன் 6 வரை, 2,800 கல்லறைகளைக் கொண்ட வடகிழக்கு தாய்லாந்தில் உள்ள நகோன் ராட்சசிமா மாகாணத்தில் கல்லறையில் திரையரங்கில் உள்ளது போல் காலி நாற்காலிகள் போடப்பட்டிருந்தது.

    இந்த கல்லறையில் பெரும்பாலும் தாய்லாந்தில் வசிக்கச் சென்ற சீனாவைச் சேர்ந்த மக்களின் சந்ததியினருக்கு சொந்தமானது, மேலும் அவர்களின் ஆவிகளை நினைவுகூரும் வகையில் திரைப்பட காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    திறந்தவெளி திரைப்பட காட்சிகளின் போது, நான்கு பணியாளர்கள் மட்டுமே இருந்தனர், மேலும் ஒவ்வொரு நாளும் இரவு 7 மணி முதல் நள்ளிரவு வரை படங்கள் காட்டப்பட்டன.

    அந்த பணியாளர்கள் ஆவிகளுக்கு விருந்து வைக்கும் விதமான காகிதங்களை எரித்தும், உணவு, உடை, மாதிரி வீடு, வாகனங்கள் என இறந்தவர்களில் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் என அனைத்தையும் விருந்து வைத்தனர்.

    ஆவிகளை அமைதிப்படுத்தும் முயற்சியாகவும், நிறைவேறாத ஆசைகளால் ஆவிகள் மனித உலகில் தங்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

    • அலங்கு திரைப்படத்தை S.P. சக்திவேல் இயக்கி இருக்கிறார்.
    • இவர் ஏற்கனவே 'உறுமீன்', 'பயணிகள் கவனிக்கவும்' என்ற இரு திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

    தமிழக - கேரள எல்லைப் பகுதியில் மருத்துவ கழிவுகளில் ஆரம்பித்து விலங்குகள் எச்சம் கழிவுகள் வரை கொட்டப்பட்டு வருவதை தினசரி செய்தியாக பார்த்துக் கொண்டு வருகிறோம். இந்த கழிவுகளால் என்னென்ன ஆபத்து ஏற்படுகிறது என்ற உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து 'அலங்கு' என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.

    புலம்பெயர்ந்து தொழில் செய்யும் பழங்குடியினரின் வாழ்க்கையை பதிவு செய்யும் இத்திரைப்படத்தை S.P. சக்திவேல் இயக்கி இருக்கிறார். இவர் ஏற்கனவே 'உறுமீன்', 'பயணிகள் கவனிக்கவும்' என்ற இரு திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

    ஆக்சன் த்ரில்லர் டிராமாவாக உருவாகி இருக்கும் இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் கதை நாயகனாக குணாநிதி நடிக்கிறார். அவர்களுடன் மலையாள நடிகர் செம்பன் வினோத் , காளிவெங்கட், சரத் அப்பானி, ஸ்ரீரேகா ஆகியோரும் நடித்துள்ளனர். இவர்களுடன் நாய் ஒன்றும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறது.

    இத்திரைப்படத்தை பற்றி இயக்குநர் S.P.சக்திவேல் கூறுகையில், "நாய்களை நேசிப்போர் சமூகம் இன்று மிகப்பெரியது. அப்படி மனிதர்களுக்கும், நாய்களுக்கும் இருக்கும் பாசம், உறவு எப்படி ஒரு சம்பவத்தின் மூலம் ஒரு பகையாக, மோதலாக மாறுகிறது. அதன் தொடர்ச்சியாக நடைபெறும் சம்பவங்களின் விறுவிறுப்பே திரைக்கதையின் பிரதானம். படத்தின் 95% காட்சிகள் அடர் வனப்பகுதிகளில் படமாக்கி இருக்கிறோம். அதுவே படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கும்" என்று தெரிவித்தார்.

    இத்திரைப்படத்தை D.சபரிஷ் , S.A.சங்கமித்ரா இருவரும் முறையே இணைந்து தயாரித்து இருக்கின்றனர். இதற்கு முன் இந்நிறுவனம் GV.பிரகாஷ் ,கவுதம் மேனன் நடித்த "செல்ஃபி" திரைப்படத்தை தயாரித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    DG FILM COMPANY & MAGNAS PRODUCTIONS இணைந்து தயாரித்துள்ள அலங்கு திரைப்படம் கூடிய விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தின் முதல் பிரதியை பார்த்து ரசித்த சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் உலகம் முழுவதும் இத்திரைப்படத்தை வெளியிடும் உரிமைகளை வாங்கி உள்ளார்.

    • தீ கிட் என்று சார்லி சாப்ளின் திரைப்படம் திரையிடப்பட்டு இத்திரைப்படத்தை மாணவர்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.
    • மாணவர்களுக்கு இம்மன்றங்கள் மூலம் சிறார் திரைப்படங்கள் திரையிட்டு நல்ல கருத்தினையும் நல்ல பண்பினையும் எடுத்துரைக்க வழிகாட்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறார் திரைப்படத் திருவிழாவினை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசு தலைமை கொறடா கோவி. செழியன், பள்ளிக்கல்வித்துறை அரசு முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர் சுதன் ஆகியோர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் தொடங்கி வைத்தனர்.

    பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:- தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் சிறார் திரைப்பட திருவிழா இன்று தொடங்கப்பட்டு. "தீ கிட்" என்று சார்லி சாப்ளின் திரைப்படம் திரையிடப்பட்டு இத்திரைப்படத்தை மாணவ -மாணவிகள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர் .

    மேலும் தஞ்சாவூர் மாவட்டத்திற்காக தஞ்சை திரைப்படம் மன்றம், பட்டீஸ்வரம் அண்ணா அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் சார்லி சாப்ளின் திரைப்பட மன்றம், கும்பகோணம் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் சத்யஜித்ரே திரைப்பட மன்றம், தாராசுரம் வை.கோவிந்தசாமி நினைவு அரசு மேல்நிலைப் பள்ளியில் கே.பாலச்சந்தர் திரைப்பட மன்றம், திப்பிராஜபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பாலு மகேந்திரா திரைப்படம் மன்றம், உடையாளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மணிரத்தினம் திரைப்படம் மன்றம் ஆகிய திரைப்படம் மன்றங்கள் தொடங்கப்பட்டு உள்ளது. மேலும் மாணவ -மாணவிகளுக்கு இம்மன்றங்கள் மூலம் சிறார் திரைப்படங்கள் திரையிட்டு நல்ல கருத்தினையும் நல்ல பண்பினையும் எடுத்துரைக்க வழிகாட்டும்.இஇவ்வாறு அவர் பேசினார்.இந்நிகழ்ச்சியில் எம்.பி.க்கள் கல்யாணசுந்தரம், ராமலிங்கம், அன்பழகன் எம்.எல்.ஏ, முதன்மை கல்வி அலுவலர்சிவக்குமார், தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவொளி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நெஞ்சுக்கு நீதி படம் பார்த்த ரசிகருக்கு குலுக்கல் முறையில் மோட்டார் சைக்கிள் பரிசு வழங்கப்பட்டன.
    • தாயார்தோப்பு கிராமத்தை சேர்ந்த டான்ஆசிர் என்ற வாலிபருக்கு கிடைத்தது.

    வீ. கே.புதூர்:

    தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. நடித்து சமீபத்தில் வெளிவந்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படம் முதல் காட்சியை கண்டு களித்த ரசிகர்களில் ஒரு நபருக்கு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு மோட்டார் சைக்கிளை வழங்க தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

    இதனை முன்னிட்டு குலுக்கல் முறையில் தேர்வு பெற்ற தாயார்தோப்பு கிராமத்தை சேர்ந்த டான்ஆசிர் என்ற வாலிபருக்கு குற்றாலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது மோட்டார் சைக்கிள் சாவியை தி.மு.க. தேர்தல் நடத்தும் பொறுப்பாளர் பிடிசி.செல்வராஜ், தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் முன்னிலையில் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் உதயநிதி நற்பணி மன்ற நெல்லை ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் ஈஸ்வரன்,செயலாளர் செல்லத்துரை, துணை செயலாளர் அருணன் சிவபத்மநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வேலுச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் அழகுசுந்தரம், சீனிதுரை மற்றும் விவசாய அணி துணை அமைப்பாளர் சீவநல்லூர் சாமிதுரை,குற்றாலம் பேரூர் கழக செயலாளர் சங்கர் என்ற குட்டி, வல்லம் செல்வம், வீட்டுவசதி தலைவர் குற்றாலம் சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×