என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • மத்திய அரசு இரு சக்கர வாகனங்களுக்கு புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அறிவித்துள்ளது.
    • 350 சிசிக்கு கீழ் உள்ள அனைத்து மாடல்களும் இப்போது 28 சதவீதத்திற்கு பதிலாக 18 சதவீத வரி வசூலிக்கப்பட உள்ளன.

    ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்தியாவில் உள்ள தனது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் முழு ஜிஎஸ்டி குறைப்பு பலனை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த புதிய ஜிஎஸ்டி விலைகள் ஹண்டர் 350, புல்லட் 350, கிளாசிக் 350 மற்றும் கோவான் கிளாசிக் 350 ஆகியவற்றுக்கு பொருந்தும்.

    இருப்பினும், நிறுவனம் புதிய விலைகளை வெளியிடவில்லை, ஆனால் இந்த புதிய ஜிஎஸ்டி விகிதங்கள் நடைமுறைக்கு வரும் 22-ந்தேதி அன்று வெளியிடப்படும் என்று குறிப்பிட்டுள்ளது. மத்திய அரசு இரு சக்கர வாகனங்களுக்கு புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அறிவித்துள்ளது. அதன்படி 350 சிசிக்கு கீழ் உள்ள அனைத்து மாடல்களும் இப்போது 28 சதவீதத்திற்கு பதிலாக 18 சதவீத வரி வசூலிக்கப்பட உள்ளன.

    350cc க்கும் அதிகமான பைக்குகளின் விலை அதிகரிக்கும் என்றும், ஜிஎஸ்டி விகிதங்கள் முந்தைய 28 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதால், கூடுதலாக மூன்று சதவீத செஸ் வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும் ராயல் என்ஃபீல்ட் தெரிவித்துள்ளது.

    இதன் விளைவாக, ஹிமாலயன் 450, கெரில்லா 450 மற்றும் முழு 650cc வகை பைக்குகளின் விலையும் கடுமையாக உயரும்.

    • ஜனவரி மாதத்துக்கு முன்பாக அனைத்து கட்சிகளும் தெளிவான முடிவை எடுக்கும்.
    • முறைகேட்டை தடுக்க வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்திற்கு இருக்கிறது.

    தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    கடலூரில் ஜனவரி 9-ந் தேதி நடைபெறும் மாநாட்டில் கூட்டணி குறித்து மிகத்தெளிவான அறிவிப்பு வரும். அதுவரை யாருடைய ஊகங்களுக்கும், கேள்விகளுக்கும் இது தான் பதில்.

    ஒரு பக்கம் கூட்டணி வலுவாக இருப்பதாகவும், இன்னொரு பக்கம் வலுவில்லை என சிலர் கூறினாலும், அது போன்ற நிலைமை கிடையாது. தேர்தலுக்கு இன்னும் 7, 8 மாதங்கள் உள்ள நிலையில், அதற்குள் அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். பிரிந்தவர்கள் கூடுவதும், கூடியவர்கள் பிரிவதும் நிகழலாம்.

    தமிழகத்தில் இதுபோல எத்தனை ஆண்டுகள் பார்த்து வருகிறோம். அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை. ஜனவரி மாதத்துக்கு முன்பாக அனைத்து கட்சிகளும் தெளிவான முடிவை எடுக்கும்.

    வாக்கு திருட்டு பீகாரில் மட்டும் நடைபெறவில்லை. தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் வாக்கு திருட்டு நடைபெறுகிறது. எனவே, இந்த முறைகேட்டை தடுக்க வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்திற்கு இருக்கிறது. இதற்கு நீதிபதிகள் துணையாக இருக்க வேண்டும்.

    ஜனநாயக ரீதியாக நடைபெறும் தேர்தல் நியாயமானதாக, மக்களுக்கான உண்மையான தேர்தலாக இருப்பது அவசியம். வரும் தேர்தலாவது நியாயமான தேர்தலாக நடைபெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2019-ஆம் ஆண்டு வெளியான 'கைதி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது
    • 'கைதி' திரைப்படம் இந்தியில் 'போலா' என்ற பெயரில் ரீமேக் ஆகி வெளியானது.

    மாநகரம், மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான 'கைதி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    'கைதி' திரைப்படம் இந்தியில் 'போலா' என்ற பெயரில் ரீமேக் ஆகி வெளியானது. தற்போது மலாய் மொழியில் கைதி படம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், லாய் மொழியில் ரீமேக் செய்யப்பட்டுள்ள கைதி படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசர் நன்றாக வந்துள்ளதாக தமிழ் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    • உக்ரைன் மீது தாக்குதல் நடத்திய சில டிரோன்கள் போலந்து நாட்டுக்குள் ஊடுருவின.
    • டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக போலந்து ராணுவம் தெரிவித்தது.

    ரஷியா- உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் உக்ரைன் மீது தாக்குதல் நடத்திய சில டிரோன்கள் போலந்து நாட்டுக்குள் ஊடுருவின.

    இதையடுத்து அந்த டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக போலந்து ராணுவம் தெரிவித்தது. நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் போலந்து உறுப்பினராக உள்ளது.

    இந்தக் கூட்டமைப்பில் ஒரு நாட்டுக்கு எதிரான தாக்குதல் அல்லது போர் செயல்பாடு ஒட்டுமொத்த கூட்டமைப்புக்கும் எதிரான செயலாக கருதப்படும்.

    அந்த நாட்டுக்கு ஆதரவாக, அனைத்து நாடுகளும் போரில் களம் இறங்கலாம். இதையடுத்து ரஷியாவுக்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என்று நேட்டோ அமைப்பை உக்ரைன், போலந்து வலியுறுத்தி உள்ளன.

    • கராத்தே பாபு படத்தை 'டாடா' பட இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்குகிறார்.
    • இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.

    ரவி மோகன் அவரது 34-வது படமாக கராத்தே பாபு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை 'டாடா' பட இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்குகிறார். ஸ்க்ரீன் ஸீன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

    இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். இந்தப் படத்தில் ரவி மோகன் அரசியல்வாதி மற்றும் கராத்தே மாஸ்டராகவும் நடித்துள்ளார்.

    இந்நிலையில், ரவி மோகனின் பிறந்தநாளை முன்னிட்டு 'கராத்தே பாபு' படக்குழு!சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.  

    • வருகிற 13-ந்தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மாலை 5.30 மணிக்கு பாராட்டு விழா.
    • வெளிநாட்டு இசைக்கலைஞர்களுடன் இசைக்கச்சேரி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா கடந்த மார்ச் மாதம் 8-ந்தேதி லண்டனில் சிம்பொனி இசை நிகழ்ச்சியை வெற்றிக்கரமாக நடத்தினார். அவருக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

    சிம்பொனி இசை நிகழ்ச்சியை முடித்துவிட்டு சென்னை திரும்பிய இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இசைஞானி இளையராஜாவின் அரை நூற்றாண்டு இசைப்பயணத்தை கொண்டாடும் விதமாக தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என அறிவித்து இருந்தார்.

    இந்த நிலையில், இசைஞானி இளையராஜாவின் அரை நூற்றாண்டு இசைப்பயணத்தை சிறப்பிக்கும் விதமாக வருகிற 13-ந்தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மாலை 5.30 மணிக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது.

    இந்த விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பங்கேற்கின்றனர். மேலும் வெளிநாட்டு இசைக்கலைஞர்களுடன் இசைக்கச்சேரி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து இசைஞானி இளையராஜா கூறுகையில் "அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படுவது இது முதல்முறை. உங்களுக்கு எவ்வளவு சந்தோஷமோ, அதே அளவுக்கு எனக்கு சந்தோஷம்" என்றார்.

    இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    "ராஜாவைத் தாலாட்டும் தென்றல்" - நம் பாராட்டு விழா!

    இது இசையின் அரசனுக்கு மட்டுமல்ல; அவரை வியக்கும் உலகில் உள்ள அத்தனை இசை இரசிகர்களுக்குமான பாராட்டு விழா!

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆட்சியில் உள்ளவர்களால் நிதி ஆதாரத்தை உருவாக்க முடியவில்லை.
    • அ.தி.மு.க ஆட்சியில் விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடன் 2 முறை தள்ளுபடி செய்துள்ளோம்.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் கைத்தறி நெசவாளர்கள், தென்னை விவசாயிகள், கல்குவாரி, கிரஷ் உரிமையாளர்கள் சங்கத்தினர், டிப்பர் லாரி டிரைவர்கள் சங்கத்தினர் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. அவர்களுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    மாவட்டத்திற்கு ஒரு இடத்தில் தான் ஆலோசனை கூட்டம் நடத்துகிறேன். ஆனால் கோவை மாவட்டத்தில் மட்டும் தான் தொகுதிக்கு ஒரு கூட்டம் நடத்தி வருகிறோம்.

    அ.தி.மு.க ஆட்சியில் கைத்தறி நெசவாளர்களுக்கு பசுமை வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டதாக கைத்தறி நெசவாளர் சங்கத்தினர் தெரிவித்தனர். மீண்டும் அ.தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் பசுமை வீடுகள் கட்டி தரப்படும். இதற்கு என்று கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து நல்ல தரமான முறையில் கான்கிரீட் முறையில் பசுமை வீடுகள் கட்டி கொடுக்கப்படும். அத்துடன் திருமண உதவி திட்டத்தின் கீழ் கைத்தறி நெசவாளர்களுக்கு பட்டு சேலை, பட்டு வேட்டி வழங்கப்படும்.

    அ.தி.மு.க ஆட்சியில் கைத்தறி நெசவாளர்களுக்கு என எண்ணற்ற திட்டங்களை செய்துள்ளோம். குறிப்பாக துணி நெய்யப்பட்டு, அதிகளவில் தேக்கம் அடைந்த போது, கைத்தறி நெசவாளர்கள் என்னை சந்தித்து கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று சுமார் 350 கோடி ரூபாய் மானியம் கொடுக்கப்பட்டது. இதுதவிர ஒருங்கிணைந்த ஜவுளி கொள்கையும் கொண்டு வந்தோம். கொரோனா காலத்தில் 1 லட்சத்து 57 ஆயிரத்து 930 கைத்தறி நெசவாளர்களுக்கு பேருக்கு ரூ.2 லட்சம் உதவித்தொகை கொடுத்துள்ளோம். இதற்காக ரூ.32 கோடி ஒதுக்கீடு செய்தோம்.

    அ.தி.மு.க ஆட்சியில் வழங்கப்பட்ட திட்டங்கள் தற்போது தி.மு.க. ஆட்சியில், அ.தி.மு.க ஆட்சியில் தொடர்ந்த அனைத்து திட்டங்களும் மீண்டும் செயல்படுத்தப்படும்.

    ஒரு மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்றால் ரூ.500 கோடி வேண்டும். இந்த ஆட்சியில் பணம் இல்லை. அதனால் தான் இதுவரை எந்த மாவட்டத்தையும் அவர்களால் அறிவிக்க முடியவில்லை. நான் முதலமைச்சராக இருக்கும் போது 6 மாவட்டங்களை அறிவித்தேன். இப்போது ஆட்சியில் உள்ளவர்களால் நிதி ஆதாரத்தை உருவாக்க முடியவில்லை.

    அ.தி.மு.க ஆட்சியில் எல்லா துறைகளுக்கும் சரிசமமாக நிதி பகிர்ந்து கொடுக்கப்பட்டது. இதனால் எல்லா துறைகளும் வளர்ச்சியடைந்தது. இந்த ஆட்சியில் என்ன செய்கிறார்கள் என்றே தெரியவில்லை. இவ்வளவு கடன் வாங்கியுள்ளனர். இதனை எப்படி திருப்பி கட்டுவது. பெரிய ஒரு போராட்டமாக தான் இருக்கிறது.

    குறிப்பிட்ட அளவுக்கு கடன் வாங்கினால் தான் ஒரு அரசால் திருப்பி செலுத்த முடியும். அளவுக்கு மீறி கடன் வாங்கினால் அதனை திருப்பி செலுத்துதவற்கே புதிய வரிகள் போட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதனை தான் இந்த தி.மு.க அரசு புதிது புதிதாக வரி போட்டு வைத்துள்ளது. இவ்வளவு வரி போட்டும், இந்த ஆட்சியில் எந்த ஒரு திட்டமும் கொண்டு வரப்படவில்லை.

    அ.தி.மு.க ஆட்சியில் சாலை வசதிகள், மேம்பாலங்கள், தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. கால்வாய்களை கூட கான்கிரீட் கால்வாய்களாக மாற்றியுள்ளோம்.

    அ.தி.மு.க. ஆட்சியில் ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்திற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக கேரள முதலமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். 2, 3 தடவை இந்த பேச்சுவார்த்தை நடந்தது. எல்லாம் கூடி வந்த வேளையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது. தி.மு.க ஆட்சியில் இதற்கான நடவடிக்கைகள் அப்படியே நின்று போய்விட்டது.

    அ.தி.மு.க ஆட்சியில் விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடன் 2 முறை தள்ளுபடி செய்துள்ளோம். அதேபோன்று விவசாயிகளுக்கு அ.தி.மு.க ஆட்சியில் மும்முனை மின்சாரம் கொடுத்தோம். அ.தி.மு.க ஆட்சி அமைந்ததும் விவசாயிகளுக்கு என்னென்ன பிரச்சனை என்பதை முழுமையாக ஆய்வு செய்து, அவர்களை அந்த பிரச்சனையில் இருந்து விடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு முதலமைச்சர் அரசு முறை பயணம் மேற்கொண்டார்.
    • கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை நூலகத்தை மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டபோது, ஜெர்மனி நாட்டின், கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையால் வழங்கப்பட்ட பழங்கால ஓலைச்சுவடிகளை, பாதுகாத்திட ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக அறக்கட்டளையின் அறங்காவலர் ஆர்.பாலகிருஷ்ணன், (ஓய்வு), இயக்குநர்கள் பிரகாஷ் மற்றும் சுந்தர் ஆகியோரிடம் வழங்கினார்.

    பழந்தமிழ் இலக்கியச் சுவடிகள், பல முதற்பதிப்புகள் என 40 ஆயிரத்திற்கும் அரிய தமிழ் நூல்களைக் கொண்ட கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 1.9.2025 அன்று நேரில் சென்று பார்வையிட்டார்.

    ஐரோப்பாவில் தமிழியல் ஆய்வுகளுக்கான முக்கிய மையமான ஜெர்மனி நாட்டிலுள்ள கொலோன் பல்கலைக்கழக தமிழ்த்துறை தொடர்ந்து, தொய்வின்றி, இயங்கிட தமிழ்நாடு அரசின் சார்பில் 1 கோடியே 25 லட்சம் ரூபாய் உடனடியாக கொலோன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைக்கு வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் 7.7.2021 அன்று உத்தரவிடப்பட்டு, வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • பா.ஜ.க. கூட்டணியில் எடப்பாடி முதல்வர் வேட்பாளரை மாற்ற வேண்டும் என்பது நல்ல கருத்து தான்.
    • தர்மயுத்தத்தின் அடிப்படையில் கோர்ட்டில் 6 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    மதுரை:

    மதுரை விமான நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும் என்ற தத்துவத்தை எந்த ரூபத்தில் எப்படி வந்தாலும் வரவேற்கிறேன். அதற்கான முழு ஒத்துழைப்பை தருவேன். அ.தி.மு.க. ஒன்றிணையாவிட்டால் அது தி.மு.க.வுக்கு சாதகமாகி விடும். எனவே அனைவரும் ஒன்றிணைந்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா எண்ணத்தை நிறைவேற்ற வேண்டும். என்னை கட்சியில் சேர்ப்பதற்கு எந்த டிமாண்ட்டும் வைக்கவில்லை. அரசியலில் எதிரிகளும் இல்லை. நண்பர்களும் இல்லை. எதிர்காலத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

    பா.ஜ.க. கூட்டணியில் எடப்பாடி முதல்வர் வேட்பாளரை மாற்ற வேண்டும் என்பது நல்ல கருத்து தான். தர்மயுத்தத்தின் அடிப்படையில் கோர்ட்டில் 6 வழக்குகள் நிலுவையில் உள்ளது. எனவே ஒன்றிணைவதற்கு முன் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேச வேண்டி உள்ளது. செங்கோட்டையன் அனைவரும் இணைய வேண்டும் என எடுத்த முயற்சி வெற்றி பெறும். என்.டி.ஐ. கூட்டணி தொடர்பாக எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. தொடர்ந்து நாங்கள் மக்களை சந்தித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வார்டில் இருந்து வாகன நிறுத்துமிடம் நீண்ட தூரம் இருந்ததால் அவர் நடக்க முடியாது என்று கூறினார்.
    • ஒரு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்தும் சக்கர நாற்காலி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    கோவை:

    கோவை அரசு தலைமை ஆஸ்பத்திரியில் தினமும் 5000 வெளி நோயாளிகள் வந்து சிகிச்சை பெறுகிறார்கள். 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட நோயாளிகள், உள் நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஒவ்வொரு சிகிச்சை பிரிவுக்கும் சென்று நோயாளிகள் சிகிச்சை பெறவும், சிகிச்சை முடிந்த நோயாளிகள் வார்டுக்கு அழைத்துச் செல்லவும் அங்கு ஸ்ட்ரக்சர் மற்றும் சக்கர நாற்காலிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் 70 வயதான தனது தந்தைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை அளிக்க வந்த அவரது மகன், தந்தைக்கு காலில் சிகிச்சை அளிக்கப்பட்டு கட்டு போடப்பட்டிருந்த நிலையில் அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தார். வார்டில் இருந்து வாகன நிறுத்துமிடம் நீண்ட தூரம் இருந்ததால் அவர் நடக்க முடியாது என்று கூறினார்.

    எனவே ஆஸ்பத்திரியில் சக்கர நாற்காலி வழங்கும்படி அவரது மகன் கேட்டுள்ளார். அப்போது ஊழியர்கள் அவரை காத்திருக்கும் படி கூறியுள்ளனர். ஆனால் ஒரு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்தும் சக்கர நாற்காலி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் அவரது மகன் தந்தையை தனது உடலில் சாய்த்துக் கொண்டு மேல் தளத்திலிருந்து இறங்கி கீழே வந்தார். பிறகு அவரை இழுத்தபடியே ஆஸ்பத்திரி வாசலில் நின்ற வாகனத்திற்கு கொண்டு சென்றார்.

    ஆஸ்பத்திரியில் சக்கர நாற்காலி வழங்கப்படாததால் தந்தையை மகன் தோளில் சாய்த்துக் கொண்டு இழுத்து சென்ற காட்சியை அங்கிருந்த சிலர் செல்போனில் படம் பிடித்தனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக அரசு மருத்துவக்கல்லூரி டீன் விசாரணை மேற்கொண்டார்.

    அதன்பேரில் ஊழியர்கள் எஸ்தர்ராணி, மணிவாசகம் ஆகிய 2 பேரை சஸ்பெண்டு செய்து அவர் உத்தரவிட்டுள்ளார். அவர்கள் 5 நாட்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

    • பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே பரிதாப நிலையில் இருக்கிறது.
    • தி.மு.க.வின் விளம்பர நிகழ்ச்சிகள் நடத்தும் அளவுக்கு, அதிகார துஷ்பிரயோகம் நடைபெறுகிறது.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    திருச்சி மாவட்டம், உப்பிலியாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆலத்துடையான்பட்டி ஊராட்சியில், நூற்றாண்டு விழா கண்ட ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு விடுமுறை அளித்து, நேற்றைய தினம், தி.மு.க. அரசின் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றிருக்கிறது. தி.மு.க.வின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகள் கூட பலிகடா ஆக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

    பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே பரிதாப நிலையில் இருக்கிறது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே, சுமார் நூறுக்கும் அதிகமான மாணவர்கள் பயிலும் பள்ளிக்கு விடுமுறை அளித்து, தி.மு.க.வின் விளம்பர நிகழ்ச்சிகள் நடத்தும் அளவுக்கு, அதிகார துஷ்பிரயோகம் நடைபெறுகிறது.

    தி.மு.க.வினருக்கு சொந்தமாக திருச்சியில் வேறு இடங்களா இல்லை? ஏழை, எளிய மாணவர்கள் பயிலும் அரசுப் பள்ளிதானே என்ற அலட்சியப் போக்கு. தி.மு.க.வின் இந்த மக்கள் விரோதப் போக்குக்கு, வரும் 2026 தேர்தலில் தமிழக மக்கள் முடிவு கட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    • பள்ளி மற்றும் கல்லூரி கட்டணங்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
    • போட்டித் தேர்வு, நுழைவுத் தேர்வு பயிற்சி நிறுவன கட்டணங்களுக்கு 18% வரி விதிக்கப்பட்டுள்ளது.

    56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 5%, 12%, 18%, 28% என்ற நான்கு அடுக்கு வரி முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, 5% மற்றும் 18% என்ற இரண்டு அடுக்கு வரி முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

    வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் சிகரெட், பான்மசாலா, குளிர்பானங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு மட்டும் 40% வரி விதிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி கட்டங்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் போட்டித் தேர்வு, நுழைவுத் தேர்வு பயிற்சி நிறுவன கட்டணங்களுக்கு 18% வரி விதிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பேசிய நிர்மலா சீதாராமன், "போட்டித் தேர்வு, நுழைவுத் தேர்வு பயிற்சி நிறுவனங்களை கல்வி நிறுவனங்களாக ஏற்க முடியாது. அதனால், 18% ஜி.எஸ்.டி. அவர்களுக்குப் பொருந்தும்" என்று விளக்கம் அளித்தார்.

    அதாவது JEE அல்லது NEET தேர்வுகளுக்கான பயிற்சி நிறுவன கட்டணம் ரூ.50,000 ஆக இருந்தால் இனிமேல் அதன் கட்டணம் ரூ.59,000 ஆக உயரும்.

    இந்த 18% வரி பயிற்சி மையங்களுக்கு மட்டுமல்ல, கல்வி தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தனியார் ஆசிரியர்களின் ஆன்லைன் வகுப்புகளுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜி.எஸ்.டி. வரியால் பயிற்சி நிறுவனங்களின் கட்டணங்கள் உயர்த்தப்படுவது பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

    ×