என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • பள்ளி மற்றும் கல்லூரி கட்டணங்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
    • போட்டித் தேர்வு, நுழைவுத் தேர்வு பயிற்சி நிறுவன கட்டணங்களுக்கு 18% வரி விதிக்கப்பட்டுள்ளது.

    56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 5%, 12%, 18%, 28% என்ற நான்கு அடுக்கு வரி முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, 5% மற்றும் 18% என்ற இரண்டு அடுக்கு வரி முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

    வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் சிகரெட், பான்மசாலா, குளிர்பானங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு மட்டும் 40% வரி விதிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி கட்டங்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் போட்டித் தேர்வு, நுழைவுத் தேர்வு பயிற்சி நிறுவன கட்டணங்களுக்கு 18% வரி விதிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பேசிய நிர்மலா சீதாராமன், "போட்டித் தேர்வு, நுழைவுத் தேர்வு பயிற்சி நிறுவனங்களை கல்வி நிறுவனங்களாக ஏற்க முடியாது. அதனால், 18% ஜி.எஸ்.டி. அவர்களுக்குப் பொருந்தும்" என்று விளக்கம் அளித்தார்.

    அதாவது JEE அல்லது NEET தேர்வுகளுக்கான பயிற்சி நிறுவன கட்டணம் ரூ.50,000 ஆக இருந்தால் இனிமேல் அதன் கட்டணம் ரூ.59,000 ஆக உயரும்.

    இந்த 18% வரி பயிற்சி மையங்களுக்கு மட்டுமல்ல, கல்வி தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தனியார் ஆசிரியர்களின் ஆன்லைன் வகுப்புகளுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜி.எஸ்.டி. வரியால் பயிற்சி நிறுவனங்களின் கட்டணங்கள் உயர்த்தப்படுவது பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

    • சந்திரமுகி பட காட்சிகளை நீக்க கோரியும், 5 கோடி ரூபாய் இழப்பீடு கோரியும் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
    • ஆவண படத்தின் மூலம் ஈட்டிய லாபக் கணக்கை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டது.

    நடிகை நயன்தாரா ஆவணப்படத்தில் அனுமதி இன்றி 'சந்திரமுகி' பட காட்சிகளை பயன்படுத்த தடை கோரி பதிப்புரிமை பெற்றுள்ள ஏபி இண்டர்நேஷனல் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

    சந்திரமுகி பட காட்சிகளை நீக்க கோரியும், 5 கோடி ரூபாய் இழப்பீடு கோரியும் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    மேலும், ஆவண படத்தின் மூலம் ஈட்டிய லாபக் கணக்கை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டது.

    இவ்வழக்கு தொடர்பாக ஆவண பட தயாரிப்பு நிறுவனம், நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் 2 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

    இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அக்டோபர் 6-ந் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய நயன்தாரா ஆவண பட தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் ஆகியவையும் நிறுத்தப்பட்டுள்ளன.
    • ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகியவை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

    ஆப்பிள் நிறுவனம் தனது 'Awe Dropping' நிகழ்வில், புத்தம் புதிய ஐபோன் 17, ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்களை வெளியிட்டது. ஒவ்வொரு ஆண்டும் புதிய ஐபோன்கள் வெளியீட்டைத் தொடர்ந்து பழைய ஐபோன் சீரிஸ் விலைகள் குறைக்கப்படுவது இயல்பான ஒன்றுதான்.

    அந்த வரிசையில் நேற்றைய நிகழ்வு முடிந்த கையோடு ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16 பிளஸ் ஆகிய மாடல்களின் விலையை குறைப்பதாக ஆப்பிள் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து இந்தியாவிலும் இரு மாடல்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

    வழக்கம் போல், இந்த போன்கள் அதன் அறிமுக விலையில் இருந்து ரூ.10,000 விலைக் குறைப்பைப் பெற்றுள்ளன. ஆனால் ஐபோன் 16 இப்போது 128 ஜிபி மாடலில் கிடைக்கிறது. ஐபோன் 16 பிளஸ் 128 ஜிபி மற்றும் 256 ஜிபி மாடல்களில் மட்டுமே வருகிறது.

    ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகியவை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. ஏனெனில் அவை ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடல்களால் மாற்றப்பட்டுள்ளன. ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் ஆகியவையும் நிறுத்தப்பட்டுள்ளன.

    128 ஜிபி கொண்ட ஐபோன் 16 ரூ.69,900, 128 ஜிபி கொண்ட ஐபோன் 16 பிளஸ் ரூ.79,900, 256 ஜிபி கொண்ட ஐபோன் 16 பிளஸ் ரூ.89,900-ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஐபோன் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் இதனை ஆன்லைன் தளங்களில் இன்னும் விலை மலிவாக பெற்றுக்கொள்ளலாம். வருகிற 23-ந்தேதி தொடங்கும் பிக் பில்லியன் டேஸ் விற்பனை மற்றும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போதும் விலை மலிவாகக் கிடைக்கும்.

    • ‘பிச்சைக்காரன்’ படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி பல படங்களில் நடித்துள்ளார்.
    • இப்படம் அடுத்தாண்டு மே மாதம் 1-ந்தேதி வெளியாக உள்ளது.

    தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக வலம் வந்த விஜய் ஆண்டனிக்கு கதாநாயகனாக மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்த படம் 'பிச்சைக்காரன்'. இயக்குநர் சசி இயக்கிய இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் வசூலையும் குவித்தது.

    'பிச்சைக்காரன்' படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் அவர் இயக்குநர் சசியுடன் மீண்டும் இணையவில்லை. இவர்களின் கூட்டணி மீண்டும் இணையுமா? என எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

    இந்த நிலையில், இயக்குநர் சசியுடன் விஜய் ஆண்டனி மீண்டும் இணைந்துள்ளார். இருவரும் இணைந்துள்ள இப்படத்திற்கு 'நூறு சாமி' என தலைப்பிடப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. விஜய் ஆண்டனி நிறுவனம் தயாரிப்பில் இப்படம் அடுத்தாண்டு மே மாதம் 1-ந்தேதி வெளியாக உள்ளது.

    படத்தின் தலைப்பிற்கு ஏற்ப கதைகளும் வித்தியாசமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். 

    • லோகா திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
    • சாண்டியின் வில்லத்தனம் படத்திற்கு ஒரு புதிய சாயலை கொடுத்துள்ளது.

    பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் லோகா.

    இவர்களுடன் சாண்டி, சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தை டொமினிக் அருண் இயக்கியுள்ளார். சாண்டியின் வில்லத்தனம் படத்திற்கு ஒரு புதிய சாயலை கொடுத்துள்ளது.

    திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள் பலரும் படத்தை பாராட்டி இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். கல்யாணியின் நடிப்பு பலரால் பாராட்டப்படுகிறது.

    தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழியின் வெற்றியை தொடர்ந்து படக்குழு இப்படத்தை இந்தி மொழியில் கடந்த 5 ஆம் தேதி வெளியிட்டனர்.

    இந்நிலையில், லோகா திரைப்படம் உலகளவில் 202 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. வேகமாக ரூ.200 கோடி வசூல் செய்த 2 ஆவது மலையாள சினிமா என்ற சாதனையை லோகா திரைப்படம் படைத்துள்ளது. .

    • இதயதெய்வம் புரட்சித்தலைவர், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் அன்பை பெற்றவர் சி.பி.ராதாகிருஷ்ணன்.
    • இந்திய தேசத்தை உயரத்திற்கு எடுத்து செல்ல மனம்கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    இன்றைய உலக தலைவர்களில் முதன்மையானவராக திகழும் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களாலும், இந்திய திருநாட்டின் இன்றைய இரும்பு மனிதராக திகழும் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களாலும் முன்மொழியபட்டவரும், இதயதெய்வம் புரட்சித்தலைவர், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் அன்பை பெற்றவரும், நம் தமிழ்தேசத்தின் தனிபெரும் தலைவர் மேதகு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்கள் வேற்றுமையில் ஒற்றுமை காணும் பாரத திருநாட்டின் துணை குடியரசு தலைவராக தேர்வு பெற்று உள்ளது இந்நாட்டின் பொன்னேட்டில் எழுதப்படும் திருநாள் ஆகும்.

    தன் பணிகாலத்தில் இந்திய தேசத்தை உயரத்திற்கு எடுத்து செல்ல மனம்கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • துபாயில் நடக்கும் 2-வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் இன்று மோதுகிறது.
    • இந்தியாவுக்கு எதிரான இந்த போட்டியை ஒரு பெரிய போட்டியா நாங்க கருத மாட்டோம்.

    துபாய்:

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெறும்.

    போட்டியின் 2-வது நாளான இன்று துபாயில் நடக்கும் 2-வது லீக்கில் 8 முறை சாம்பியனான இந்திய அணி, ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொள்கிறது.

    இவ்விரு அணிகள் சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 4 முறை (ஒரு 20 ஓவர் போட்டி மற்றும் மூன்று ஒரு நாள் போட்டி) சந்தித்துள்ளது. அனைத்திலும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது.

    இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான இந்த போட்டியை ஒரு பெரிய போட்டியா நாங்க கருத மாட்டோம் என ஐக்கிய அரபு அமீரக அணியின் கேப்டன் முகமது வசீம் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    எல்லா அணிகளும் சிறப்பாக இருப்பதால், இந்தியாவுக்கு எதிரான இந்த போட்டியை ஒரு பெரிய போட்டியா நாங்க கருத மாட்டோம். அதனால எல்லா போட்டிகளும் ஒரே மாதிரிதான் இருக்கும்.

    ஆனால் எங்கள் திட்டப்படி கடின உழைப்பை செலுத்துவோம். நாம் என்ன கற்றுக்கொண்டோமோ அதன்படி செல்வோம். முடிவு ஆட்டத்தைப் பொறுத்தது.

    நாங்க இங்க நிறைய கிரிக்கெட் விளையாடுகிறோம். இந்தியாவும் பாகிஸ்தானும் இங்க நிறைய விளையாடுதுன்னு சொல்லலாம். ஆனா இது எங்க சொந்த மைதானம். அதனால நாங்க முடிந்தவரை நல்ல கிரிக்கெட் விளையாட முயற்சிப்போம்.

    என கூறினார்.

    • பராசக்தி படம் சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.
    • பராசக்தி படத்தில் ரவி மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அவரது 25-வது படமாக பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரிக்கிறது.

    இந்த படத்தில் அதர்வா, ரவி மோகன் மற்றும் பசில் ஜோசஃப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி வருகிறது.

    இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் ரவி மோகனுக்கு வாழ்த்து தெரிவித்து படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

    மேலும் பராசக்தி படத்தின் இயக்குனர் சுதா கொங்கராவும் தனது எக்ஸ் பக்கத்தில் ரவி மோகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    • இந்தியாவில் கோடிக்கணக்கானோர் UPI பணபரிவர்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
    • இன்று துபாயில் நடைபெற்ற 28வது உலகளாவிய போஸ்டல் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது.

    இந்தியாவில் கோடிக்கணக்கானோர் UPI பணபரிவர்த்தனைகளை தினந்தோறும் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில், இந்தியாவில் பயன்படுத்தும் UPI பணபரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.

    இன்று துபாயில் நடைபெற்ற 28வது உலகளாவிய போஸ்டல் காங்கிரஸ் மாநாட்டில், மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா UPI–UPU ஒருங்கிணைப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

    இதன்மூலம் 192 நாடுகளில் UPI பணபரிவர்த்தனைகளை மேற்கொள்ளமுடியும். விரைவில் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • உவரி போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கினர்.
    • கடந்த ஆண்டு மே மாதம் 23-ந்தேதி அன்று இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைச்சுத்து புதூரை சேர்ந்தவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங். நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த இவர் கடந்த ஆண்டு மே மாதம் 2-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மாயமானார்.

    தொடர்ந்து அவர் அதே மாதத்தில் 4-ந்தேதி அவரது பண்ணை வீட்டில் பின்புறம் உள்ள தோட்டத்தில் உடல் எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். ஜெயக்குமாரின் உடல் இரும்பு கம்பி மூலம் கட்டப்பட்டிருந்ததாகவும், உடலில் சிமெண்ட் கல் கட்டப்பட்டிருந்ததாகவும், வாயில் ஸ்டீல் ஸ்க்ரப்பர் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

    இந்த கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக உவரி போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கினர்.

    ஜெயக்குமார் தனசிங் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, தனக்கு பணம் தர வேண்டிய நபர்களால் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி ஒரு 'மரண வாக்குமூலம்' மற்றும் கடிதம் ஒன்றை எழுதியிருந்ததார்.

    அந்த கடிதத்தில் பல அரசியல்வாதிகள் மற்றும் நண்பர்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டிருந்தன. அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    ஆனால் விசாரணையில் முன்னேற்றம் இல்லாததால், கடந்த ஆண்டு மே மாதம் 23-ந்தேதி அன்று இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. கூடுதல் சூப்பிரண்டு சங்கர் மற்றும் விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் உலகராணி தலைமையிலான குழு இந்த வழக்கில் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

    ஆனால் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் பலமுறை சம்பவ இடங்களை ஆய்வு செய்தும், பல்வேறு கோணங்களில் விசாரித்தும் எவ்வித முடிவுக்கும் இதுவரை போலீசாரால் வர முடியவில்லை. அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகள் எவ்வித பயனுள்ள தடயங்களையும் அளிக்கவில்லை. இதனால், விசாரணை அதிகாரிகள் சாட்சிகளின் வாக்குமூலங்கள் மற்றும் பிற மறைமுக ஆதாரங்களை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    விசாரணை நீடித்து வரும் நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால் ஜெயக்குமார் மரணத்தை சுற்றியுள்ள மர்மம் நீடிக்கிறது. அவரது குடும்பத்தினரும், கட்சித் தொண்டர்களும் இந்த சம்பவத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்த தெளிவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    இதுகுறித்து காங்கிரசார் கூறுகையில், ஜெயக்குமாரின் கொலை வழக்கை விரைந்து முடிக்க சி.பி.சி.ஐ.டி. மீது எங்கள் கட்சி தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. குற்றவாளியை கண்டுபிடிக்க கோரி தீர்மானமும் நிறைவேற்றியுள்ளோம் என்று தெரிவித்தனர்.

    சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் கூறுகையில், ஜெயக்குமார் கொலை வழக்கில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று சுருக்கமாக தெரிவித்து முடித்து விடுகின்றனர்.

    காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மரணத்தின் மர்மம் சுமார் 500 நாட்களாகியும் இதுவரை விலகாமல் உள்ளது.

    • ஐபோன் 17 ப்ரோ மாடலில் 120 ஹெர்ட்ஸ் ப்ரோமோஷன் 6.3 இன்ச் சூப்பர் ரெடினா XDR டிஸ்ப்ளே கொண்டுள்ளது.
    • ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடலில் 6.9 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.

    ஆப்பிள் நிறுவனம் தனது 'Awe Dropping' நிகழ்வில், புத்தம் புதிய ஐபோன் 17, ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்களை வெளியிட்டது. புதிய ஐபோன் மாடல்கள் கடந்த ஆண்டு வெளியான A18 சிப்செட்டின் மேம்பட்ட வெர்ஷன் மற்றும் ஐஓஎஸ் 26 கொண்டிருக்கிறது. இத்துடன் ஆப்பிள் நிறுவனத்தின் தனியுரிம செயற்கை நுண்ணறிவு (AI) சேவையான ஆப்பிள் இன்டெலிஜன்ஸ் (Apple Intelligence) ஆதரவையும் கொண்டுள்ளது.

    ஐபோன் 17 அம்சங்கள்:

    முற்றிலும் புதிய ஐபோன் 17 மாடல் ஐஒஎஸ் கொண்டிருக்கிறது. இந்த ஐபோன் மாடல் டூயல் சிம் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட 6.3-இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

    கேமராவை பொறுத்தவரை, ஐபோன் 17 மாடலில் இரட்டை பின்புற சென்சார்களுடன் வருகிறது. இதில் f/1.6, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) கொண்ட 48MP பியூஷன் பிரைமரி கேமரா உள்ளது. இந்த 2X டெலிஃபோட்டோ கேமராவாகவும் செயல்படும். இதனுடன் f/2.2, மேக்ரோ ஆப்ஷன் கொண்ட 48MP பியூஷன் அல்ட்ரா-வைடு கேமராவும் உள்ளது. முன்பக்கத்தில், முற்றிலும் புதிய 18MP சென்டர் ஸ்டேஜ் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.



    ஐபோன் 17 மாடல் A19 சிப்செட் மற்றும் iOS 26 இல் இயங்குகிறது. இது 16-கோர் நியூரல் எஞ்சினைக் கொண்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் ஆப்பிள் ஸ்டோரேஜையும் அதிகரித்துள்ளது. அதன்படி ஐபோன் 17 பேஸ் மாடலில் 256 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது. இது ப்ரோ மாடல்களைப் போலவே அதே ஆப்பிள் இண்டெலிஜன்ஸ் அம்சங்களுடன் வருகிறது.

    ஐபோன் 17 ப்ரோ, 17 ப்ரோ மேக்ஸ் அம்சங்கள்:

    ஐபோன் 17 ப்ரோ மாடல்கள் அலுமினிய கட்டமைப்பை கொண்டுள்ளன. அதாவது இந்த ஆண்டு மாடல்களில் ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மாடல்களில் காணப்படும் டைட்டானியம் பாடி இருக்காது. ஐபோன் 17 ப்ரோ மாடலில் 120 ஹெர்ட்ஸ் ப்ரோமோஷன் 6.3 இன்ச் சூப்பர் ரெடினா XDR டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

    ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடலில் 6.9 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. ப்ரோ சீரிசில் இரண்டு மாடல்களும் 3,000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டுள்ளன. ஐபோன் 17 ப்ரோ மாடல்கள் புதிய A19 ப்ரோ சிப்செட் கொண்டுள்ளன. இது 6-கோர் CPU மற்றும் 6-கோர் GPU கட்டமைப்போடு வருகிறது, ஒவ்வொரு GPU கோர் நியூரல் ஆக்சிலரேட்டர்களை கொண்டுள்ளது.

    கேமராக்களைப் பொறுத்தவரை, ஐபோன் 17 ப்ரோ மாடல்களில் 48MP பிரைமரி கேமரா, 48MP அல்ட்ராவைடு சென்சார் மற்றும் 48MP டெலிஃபோட்டோ லென்ஸ் கொண்டுள்ளது. முன்புறம் 18MP கேமராவுடன் வருகிறது. ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஐஓஎஸ் 26 கொண்டிருக்கின்றன.

    விலை விவரம்:

    இந்திய சந்தையில் புதிய ஐபோன் 17 மாடல் ரூ. 82,900 என துவங்குகிறது. ஐபோன் 17 ப்ரோ சீரிஸ் விலை ரூ. 1,34,990 என துவங்குகிறது.

    • எடப்பாடி பழனிசாமி செய்யும் சமூக விரோத நடவடிக்கைகளை மக்கள் உறுதியாக ஏற்ப மாட்டார்கள்.
    • சகோதரராக வாழ்கின்ற பூமியில் பசும்பொன் ஐயாவுக்கு இழுக்கு ஏற்படும்விதமாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

    பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்ட வேண்டும் என மத்திய அரசுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருந்தார். இதற்கு ஜான் பாண்டியன், கிருஷ்ணசாமி உள்ளிட்ட தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறுகையில்,

    அமைதிப் பூங்காவாக இருக்கின்ற தென் தமிழ்நாட்டில் தேவையற்ற வசனங்களை பேசிவிட்டு, பசும்பொன் தேவர் திருமகனார் பெயரில் எடப்பாடி பழனிசாமி செய்யும் சமூக விரோத நடவடிக்கைகளை மக்கள் உறுதியாக ஏற்ப மாட்டார்கள்.

    எல்லா சமுதாக மக்களும் தேவரை மதிக்கின்ற பூமியில், சகோதரராக வாழ்கின்ற பூமியில் பசும்பொன் ஐயாவுக்கு இழுக்கு ஏற்படும்விதமாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×