என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • உவரி போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கினர்.
    • கடந்த ஆண்டு மே மாதம் 23-ந்தேதி அன்று இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைச்சுத்து புதூரை சேர்ந்தவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங். நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த இவர் கடந்த ஆண்டு மே மாதம் 2-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மாயமானார்.

    தொடர்ந்து அவர் அதே மாதத்தில் 4-ந்தேதி அவரது பண்ணை வீட்டில் பின்புறம் உள்ள தோட்டத்தில் உடல் எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். ஜெயக்குமாரின் உடல் இரும்பு கம்பி மூலம் கட்டப்பட்டிருந்ததாகவும், உடலில் சிமெண்ட் கல் கட்டப்பட்டிருந்ததாகவும், வாயில் ஸ்டீல் ஸ்க்ரப்பர் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

    இந்த கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக உவரி போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கினர்.

    ஜெயக்குமார் தனசிங் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, தனக்கு பணம் தர வேண்டிய நபர்களால் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி ஒரு 'மரண வாக்குமூலம்' மற்றும் கடிதம் ஒன்றை எழுதியிருந்ததார்.

    அந்த கடிதத்தில் பல அரசியல்வாதிகள் மற்றும் நண்பர்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டிருந்தன. அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    ஆனால் விசாரணையில் முன்னேற்றம் இல்லாததால், கடந்த ஆண்டு மே மாதம் 23-ந்தேதி அன்று இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. கூடுதல் சூப்பிரண்டு சங்கர் மற்றும் விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் உலகராணி தலைமையிலான குழு இந்த வழக்கில் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

    ஆனால் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் பலமுறை சம்பவ இடங்களை ஆய்வு செய்தும், பல்வேறு கோணங்களில் விசாரித்தும் எவ்வித முடிவுக்கும் இதுவரை போலீசாரால் வர முடியவில்லை. அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகள் எவ்வித பயனுள்ள தடயங்களையும் அளிக்கவில்லை. இதனால், விசாரணை அதிகாரிகள் சாட்சிகளின் வாக்குமூலங்கள் மற்றும் பிற மறைமுக ஆதாரங்களை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    விசாரணை நீடித்து வரும் நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால் ஜெயக்குமார் மரணத்தை சுற்றியுள்ள மர்மம் நீடிக்கிறது. அவரது குடும்பத்தினரும், கட்சித் தொண்டர்களும் இந்த சம்பவத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்த தெளிவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    இதுகுறித்து காங்கிரசார் கூறுகையில், ஜெயக்குமாரின் கொலை வழக்கை விரைந்து முடிக்க சி.பி.சி.ஐ.டி. மீது எங்கள் கட்சி தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. குற்றவாளியை கண்டுபிடிக்க கோரி தீர்மானமும் நிறைவேற்றியுள்ளோம் என்று தெரிவித்தனர்.

    சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் கூறுகையில், ஜெயக்குமார் கொலை வழக்கில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று சுருக்கமாக தெரிவித்து முடித்து விடுகின்றனர்.

    காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மரணத்தின் மர்மம் சுமார் 500 நாட்களாகியும் இதுவரை விலகாமல் உள்ளது.

    • ஐபோன் 17 ப்ரோ மாடலில் 120 ஹெர்ட்ஸ் ப்ரோமோஷன் 6.3 இன்ச் சூப்பர் ரெடினா XDR டிஸ்ப்ளே கொண்டுள்ளது.
    • ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடலில் 6.9 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.

    ஆப்பிள் நிறுவனம் தனது 'Awe Dropping' நிகழ்வில், புத்தம் புதிய ஐபோன் 17, ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்களை வெளியிட்டது. புதிய ஐபோன் மாடல்கள் கடந்த ஆண்டு வெளியான A18 சிப்செட்டின் மேம்பட்ட வெர்ஷன் மற்றும் ஐஓஎஸ் 26 கொண்டிருக்கிறது. இத்துடன் ஆப்பிள் நிறுவனத்தின் தனியுரிம செயற்கை நுண்ணறிவு (AI) சேவையான ஆப்பிள் இன்டெலிஜன்ஸ் (Apple Intelligence) ஆதரவையும் கொண்டுள்ளது.

    ஐபோன் 17 அம்சங்கள்:

    முற்றிலும் புதிய ஐபோன் 17 மாடல் ஐஒஎஸ் கொண்டிருக்கிறது. இந்த ஐபோன் மாடல் டூயல் சிம் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட 6.3-இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

    கேமராவை பொறுத்தவரை, ஐபோன் 17 மாடலில் இரட்டை பின்புற சென்சார்களுடன் வருகிறது. இதில் f/1.6, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) கொண்ட 48MP பியூஷன் பிரைமரி கேமரா உள்ளது. இந்த 2X டெலிஃபோட்டோ கேமராவாகவும் செயல்படும். இதனுடன் f/2.2, மேக்ரோ ஆப்ஷன் கொண்ட 48MP பியூஷன் அல்ட்ரா-வைடு கேமராவும் உள்ளது. முன்பக்கத்தில், முற்றிலும் புதிய 18MP சென்டர் ஸ்டேஜ் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.



    ஐபோன் 17 மாடல் A19 சிப்செட் மற்றும் iOS 26 இல் இயங்குகிறது. இது 16-கோர் நியூரல் எஞ்சினைக் கொண்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் ஆப்பிள் ஸ்டோரேஜையும் அதிகரித்துள்ளது. அதன்படி ஐபோன் 17 பேஸ் மாடலில் 256 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது. இது ப்ரோ மாடல்களைப் போலவே அதே ஆப்பிள் இண்டெலிஜன்ஸ் அம்சங்களுடன் வருகிறது.

    ஐபோன் 17 ப்ரோ, 17 ப்ரோ மேக்ஸ் அம்சங்கள்:

    ஐபோன் 17 ப்ரோ மாடல்கள் அலுமினிய கட்டமைப்பை கொண்டுள்ளன. அதாவது இந்த ஆண்டு மாடல்களில் ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மாடல்களில் காணப்படும் டைட்டானியம் பாடி இருக்காது. ஐபோன் 17 ப்ரோ மாடலில் 120 ஹெர்ட்ஸ் ப்ரோமோஷன் 6.3 இன்ச் சூப்பர் ரெடினா XDR டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

    ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடலில் 6.9 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. ப்ரோ சீரிசில் இரண்டு மாடல்களும் 3,000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டுள்ளன. ஐபோன் 17 ப்ரோ மாடல்கள் புதிய A19 ப்ரோ சிப்செட் கொண்டுள்ளன. இது 6-கோர் CPU மற்றும் 6-கோர் GPU கட்டமைப்போடு வருகிறது, ஒவ்வொரு GPU கோர் நியூரல் ஆக்சிலரேட்டர்களை கொண்டுள்ளது.

    கேமராக்களைப் பொறுத்தவரை, ஐபோன் 17 ப்ரோ மாடல்களில் 48MP பிரைமரி கேமரா, 48MP அல்ட்ராவைடு சென்சார் மற்றும் 48MP டெலிஃபோட்டோ லென்ஸ் கொண்டுள்ளது. முன்புறம் 18MP கேமராவுடன் வருகிறது. ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஐஓஎஸ் 26 கொண்டிருக்கின்றன.

    விலை விவரம்:

    இந்திய சந்தையில் புதிய ஐபோன் 17 மாடல் ரூ. 82,900 என துவங்குகிறது. ஐபோன் 17 ப்ரோ சீரிஸ் விலை ரூ. 1,34,990 என துவங்குகிறது.

    • எடப்பாடி பழனிசாமி செய்யும் சமூக விரோத நடவடிக்கைகளை மக்கள் உறுதியாக ஏற்ப மாட்டார்கள்.
    • சகோதரராக வாழ்கின்ற பூமியில் பசும்பொன் ஐயாவுக்கு இழுக்கு ஏற்படும்விதமாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

    பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்ட வேண்டும் என மத்திய அரசுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருந்தார். இதற்கு ஜான் பாண்டியன், கிருஷ்ணசாமி உள்ளிட்ட தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறுகையில்,

    அமைதிப் பூங்காவாக இருக்கின்ற தென் தமிழ்நாட்டில் தேவையற்ற வசனங்களை பேசிவிட்டு, பசும்பொன் தேவர் திருமகனார் பெயரில் எடப்பாடி பழனிசாமி செய்யும் சமூக விரோத நடவடிக்கைகளை மக்கள் உறுதியாக ஏற்ப மாட்டார்கள்.

    எல்லா சமுதாக மக்களும் தேவரை மதிக்கின்ற பூமியில், சகோதரராக வாழ்கின்ற பூமியில் பசும்பொன் ஐயாவுக்கு இழுக்கு ஏற்படும்விதமாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அடுத்த மாதம் 2-ந்தேதி இப்படம் வெளியாக உள்ளது.
    • சுமார் ரூ.33 கோடிக்கு படத்தின் விநியோகம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

    2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் 'காந்தாரா'. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்தது.

    இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக 'காந்தாரா சாப்டர்1' உருவாகி உள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் 2-ந்தேதி இப்படம் வெளியாக உள்ளது.

    இப்படத்தின் தமிழக தியேட்டர் வியாபார உரிமம் சுமார் ரூ.33 கோடிக்கு படத்தின் விநியோகம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், 'காந்தாரா சாப்டர் 1' படத்தை 30 நாடுகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியோ, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

    காந்தாராவின் முதல் பாகம் மற்றும் கேஜிஎஃப் 2, சலார் ஆகிய படங்களை தயாரித்த ஹோம்பலே ஃபிலிம்ஸ் நிறுவனமே காந்தாரா சாப்டர் 1-ஐயும் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • துணை ஜனாதிபதி பதவி ஏற்பு பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளது.
    • துணை ஜனாதிபதிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணமும், அரசியல் காப்பு உறுதிமொழியும் செய்து வைப்பார்.

    புதுடெல்லி:

    துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று இருக்கும் சி.பி.ராதாகிருஷ்ணன் பா.ஜ.க. தலைவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

    இன்று காலையிலும் அவர் பா.ஜ.க. எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து நன்றி கூறினார். இதற்கிடையே அவருக்கு வாழ்த்து செய்திகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.

    சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக பதவி ஏற்கும் விழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடைபெறும் என்று தெரிய வந்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பாராளுமன்ற அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

    துணை ஜனாதிபதி பதவி ஏற்பு பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளது. பதவி ஏற்பு நேரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதும் அதற்கு ஏற்ப அழைப்பிதழ் வெளியிடப்படும்.

    துணை ஜனாதிபதிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணமும், அரசியல் காப்பு உறுதிமொழியும் செய்து வைப்பார். இதைத் தொடர்ந்து சி.பி.ராதாகிருஷ்ணன் பாராளுமன்றத்தில் துணை ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறைக்கு சென்று பொறுப்புகளை ஏற்றுக் கொள்வார்.

    தற்போது சி.பி.ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிரா மாநில கவர்னராக பதவி வகித்து வருகிறார். அந்த பதவியை அவர் ராஜினாமா செய்து கடிதம் அனுப்புவார்.

    • நேபாளத்தில் அரசியல் நெருக்கடி உச்சத்தை எட்டியுள்ளது.
    • பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் (73) கம்யூனிஸ்ட் அரசு கவிழ்ந்தது.

    அண்டை நாடான நேபாளத்தில் 2008 இல் மன்னராட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு தற்போது வரை கம்யூனிஸ்ட் அரசு ஆட்சியில் இருந்தது.

    இந்நிலையில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடை விவகாரத்தால் நேபாளத்தில் அரசியல் நெருக்கடி உச்சத்தை எட்டியுள்ளது.

    ஜென் Z இளைஞர்கள் மேற்கொண்ட தீவிர போராட்டங்களால் பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் (73) கம்யூனிஸ்ட் அரசு செவ்வாய்க்கிழமை சரிந்தது.

    அவருடன் சேர்ந்து, நாட்டின் ஜனாதிபதி ராம்சந்திர பவுடேலும் ராஜினாமா செய்தார். இதனால் நாடு நிச்சயமற்ற நிலையில் உள்ளது.

    இந்நிலையில், நேபாளில் பிரதமர், ஜனாதிபதி பதவி விலகியதை அடுத்து போராட்டம் தணிந்தது.

    நாடு முழுவதும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு நாட்டின் பாதுகாப்பை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததால் நேபாளத்தில் மெல்ல மெல்ல அமைதி திரும்பி வருகிறது. 

    • அடுத்த ஆண்டு ஜனவரியில் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என தெரிவித்துள்ளார்.
    • இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் தாமதமாகலாம் என கூறப்படுகிறது.

    '96' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி பிரபலமானவர் இயக்குநர் பிரேம்குமார். '96' படத்தை தொடர்ந்து இவரது இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி நடித்து வெளிவந்த 'மெய்யழகன்' படமும் மிகுந்த வரவேற்பை பெற்றது.

    இந்த நிலையில், இயக்குநர் பிரேம்குமார் அடுத்ததாக ஃபஹத் பாசிலுடன் இணைய உள்ளார். இது ஒரு த்ரில்லர் ஆக்ஷன் படமாக இருக்கும் என கூறியுள்ள பிரேம்குமார், கதை தொடர்பாக ஃபஹத் பாசிலிடம் சுமார் 45 நிமிடங்கள் வரை பேசியதாகவும், இந்த கதை ஃபஹத் பாசிலுக்கு ரொம்ப பிடித்துள்ளதாகவும் கூறியுள்ளார் .

    இது நேரடி தமிழ் படமாக வெளியாக உள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரியில் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என இயக்குநர் பிரேம்குமார் கூறியுள்ளார்.

    இதனிடையே, இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் தாமதமாகலாம் என கூறப்படுகிறது. 

    • அ.தி.மு.க. ஆம்புலன்சில் செல்லும் நிலையில் உள்ளதாகவே பேசினேன்.
    • இ.பி.எஸ்.-ஆல் பா.ஜ.க.விடமிருந்து அ.தி.மு.க.வை காப்பாற்ற முடியவில்லை.

    சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார். தேர்தல் பயணத்தை காஞ்சிபுரத்தில் நேற்று தொடங்கிய உதயநிதி, செங்கல்பட்டு சட்டசபை தொகுதி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

    இதையடுத்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:

    * இ.பி.எஸ். ஆம்புலன்சில் செல்வார் என பேசவில்லை. மனிதாபிமானம் உள்ள ஒரு மனிதர் அப்படி பேசுவானா?

    * அ.தி.மு.க. ஆம்புலன்சில் செல்லும் நிலையில் உள்ளதாகவே பேசினேன்.

    * அ.தி.மு.க. கட்சி ஐ.சி.யூ.வில் அனுமதிக்கப்படும்போது காப்பாற்றும் மருத்துவராக முதல்வர் வருவார் என்று கூறினேன்.

    * எந்தக் கட்சித் தலைவர் கூட்டம் போட்டாலும் அவசரத் தேவைக்காக ஆம்புலன்ஸ் வாகனம் வரத்தான் செய்யும்.

    * இ.பி.எஸ்.-ஆல் பா.ஜ.க.விடமிருந்து அ.தி.மு.க.வை காப்பாற்ற முடியவில்லை.

    * அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச்செயலாளராக இ.பி.எஸ்.தான் தொடர வேண்டும். அதுதான் தமிழ்நாட்டு மக்களுக்கு நீங்கள் செய்யும் ஒரே நல்ல காரியம். அப்போதுதான் எங்கள் வேலையும் சுலபமாக இருக்கும்.

    * அ.தி.மு.க.வினர் இதை ஒத்துக்கொள்வார்களா என தெரியாது. ஆனால் நான் முன்மொழிகிறேன். நீங்கள்தான் நிரந்தர பொதுச்செயலாளர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 40 வயதான ரொனால்டோ ஒட்டு மொத்தமாக 943 கோல்கள் அடித்துள்ளார்.
    • மெஸ்சி 114 கோல்களுடன் (194 ஆட்டம்) 2-வது இடத்தில் இருக்கிறார்.

    புடாபெஸ்ட்:

    உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் 11-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன. 2022-ம் ஆண்டு போட்டியை விட 16 அணிகள் கூடுதலாகும்.

    போட்டியை நடத்தும் 3 நாடுகள் நேரடியாக விளையாடும். மற்றவை தகுதி சுற்று மூலம் தேர்வாகும். இதுவரை 18 அணிகள் தகுதி பெற்றுள்ளன.

    ஐரோப்பிய கண்டத்துக்கான எப் பிரிவு தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் போர்ச்சுக்கல்-அங்கேரி அணிகள் மோதின. இதில் போர்ச்சுக்கல் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    இந்த ஆட்டத்தில் போர்ச்சுக்கல் அணியை சேர்ந்த நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். 58-வது நிமிடத்தில் பெனால்டி மூலம் இந்த கோலை அடித்தார்.

    இதன்மூலம் உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையை ரொனால்டோ சமன் செய்தார். அவரும், கவுத மாலா நாட்டை சேர்ந்த கார்லோஸ் ரூயிசும் தலா 39 கோல்கள் அடித்துள்ளனர். மற்றொரு நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்சி (அர்ஜென்டினா) 36 கோல்கள் அடித்துள்ளார்.

    40 வயதான ரொனால்டோ ஒட்டு மொத்தமாக 943 கோல்கள் அடித்துள்ளார். அவர் ஆயிரம் கோல்களை அடிப்பதை இலக்காக கொண்டுள்ளார்.

    போர்ச்சுக்கல் நாட்டுக்காக 223 போட்டியில் 141 கோல்கள் அடித்துள்ளார். சர்வதேச போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த வீரர்களில் ரொனால்டோ தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். மெஸ்சி 114 கோல்களுடன் (194 ஆட்டம்) 2-வது இடத்தில் இருக்கிறார்.

    • ரவி மோகன் இயக்கும் படத்திற்கு Ordinary Man என்ற தலைப்பு வைத்துள்ளனர்.
    • இப்படத்தை ரவி மோகன் தயாரிக்கிறார்.

    சமீபத்தில் ரவி மோகன் அவரது தயாரிப்பு நிறுவனமான ரவி மோகன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தை தொடங்கினார். அதில் ப்ரோ கோட் திரைப்படத்தை முதலில் தயாரித்துள்ளார்.

    மேலும் அடுத்ததாக ரவி மோகன் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். அவர் இயக்கும் படத்தில் யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை அவரே தயாரித்து இயக்குகிறார். மேலும் இப்படத்திற்கு Ordinary Man என்ற தலைப்பு வைத்துள்ளனர்.

    இந்த படத்தின் ப்ரோமோ வீடியோவை ரவி மோகன் பிறந்தநாளை முன்னிட்டு இன்று படக்குழு வெளியிட உள்ளது. இது தொடர்பான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    • இத்தாலி அணி முதல் முறையாக இந்த தொடருக்கு தகுதி பெற்றுள்ளது.
    • இந்தியாவில் குறைந்தது 5 நகரங்களிலும், இலங்கையில் இரு இடங்களிலும் நடைபெறும் என்று தெரிகிறது.

    புதுடெல்லி:

    10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2026) இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. 20 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிக்கு இதுவரை நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் உள்பட 15 அணிகள் தகுதி பெற்றுள்ளன.

    இதில் இத்தாலி முதல் முறையாக தகுதி பெற்றுள்ளது. முந்தைய உலகக் கோப்பை போன்றே அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதும். ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடத்தை பிடிக்கும் அணிகள் சூப்பர்-8 சுற்றை எட்டும். போட்டிக்கான அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை.

    இந்த நிலையில் இந்த உலகக் கோப்பை போட்டியை அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) முடிவு செய்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. மொத்தமுள்ள 55 ஆட்டங்கள் இந்தியாவில் குறைந்தது 5 நகரங்களிலும், இலங்கையில் இரு இடங்களிலும் நடைபெறும் என்று தெரிகிறது.

    இறுதிப்போட்டி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு வேளை பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் பட்சத்தில், இறுதி ஆட்டத்தை கொழும்புக்கு மாற்றவும் இந்திய கிரிக்கெட் வாரியம் ஒப்புக் கொண்டுள்ளது.

    • மஹிந்திரா தார் சாலையில் தலைப்புற கவிழ்ந்து கிடக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
    • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    நாம் விருப்பப்பட்ட மாடலில் புதிய காரை வாங்கி பயணிக்க வேண்டும் என்பது பலரது கனவாக உள்ளது. அவ்வாறு காரை வாங்கி முதலில் கோவிலுக்கு கொண்டு சென்று பூஜை செய்ய வேண்டும் என நினைப்போம். அப்படி நினைத்த ஒருவருக்கு நிகழ்ந்த அனுபவத்தை குறித்து பார்ப்போம்.

    டெல்லியின் நிர்மன் விஹாரில் உள்ள மஹிந்திரா ஷோரூமில், மாணி பவார் என்ற பெண் புதிதாக மஹிந்திரா தாரை முன்பதிவு செய்து இருந்தார். இதனை நேற்று முன்தினம் மாலை பூஜை செய்து எடுத்து செல்ல ஷோரூமுக்கு வந்திருந்தார். அப்போது, அங்கு பூஜைகளும் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து மாணி பவார் காரின் 4 பக்க சக்கரத்தின் அடியிலும் எலுமிச்சை பழத்தை வைத்துள்ளார். இதையடுத்து காரில் அமர்ந்து லேசாக தள்ளி எலுமிச்சை பழத்தை நசுக்கினார். அப்போது அவருடன் ஷோரூம் ஊழியரான விகாஸ் என்பவரும் காரில் அமர்ந்திருந்தார். இதையடுத்து எலுமிச்சை பழத்தை நசுக்கியதும் தவறுதலாக ஆக்ஸிலேட்டரை அழுத்திவிட்டார்.

    அவ்வளவுதான், கார் ஷோரூமின் முதல் மாடியின் கண்ணாடியை உடைத்து வெளியே பறந்து வந்து விழுந்தது. இதையடுத்து, ஷோரூமில் இருந்தவர்கள், பொதுமக்கள் என அனைவரும் சேர்ந்த காரில் இருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்கள் முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பினர்.

    இதனிடையே மஹிந்திரா தார் சாலையில் தலைப்புற கவிழ்ந்து கிடக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.


    ×