என் மலர்
தலைப்புச்செய்திகள்
- 40 வயதான ரொனால்டோ ஒட்டு மொத்தமாக 943 கோல்கள் அடித்துள்ளார்.
- மெஸ்சி 114 கோல்களுடன் (194 ஆட்டம்) 2-வது இடத்தில் இருக்கிறார்.
புடாபெஸ்ட்:
உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் 11-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன. 2022-ம் ஆண்டு போட்டியை விட 16 அணிகள் கூடுதலாகும்.
போட்டியை நடத்தும் 3 நாடுகள் நேரடியாக விளையாடும். மற்றவை தகுதி சுற்று மூலம் தேர்வாகும். இதுவரை 18 அணிகள் தகுதி பெற்றுள்ளன.
ஐரோப்பிய கண்டத்துக்கான எப் பிரிவு தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் போர்ச்சுக்கல்-அங்கேரி அணிகள் மோதின. இதில் போர்ச்சுக்கல் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் போர்ச்சுக்கல் அணியை சேர்ந்த நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். 58-வது நிமிடத்தில் பெனால்டி மூலம் இந்த கோலை அடித்தார்.
இதன்மூலம் உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையை ரொனால்டோ சமன் செய்தார். அவரும், கவுத மாலா நாட்டை சேர்ந்த கார்லோஸ் ரூயிசும் தலா 39 கோல்கள் அடித்துள்ளனர். மற்றொரு நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்சி (அர்ஜென்டினா) 36 கோல்கள் அடித்துள்ளார்.
40 வயதான ரொனால்டோ ஒட்டு மொத்தமாக 943 கோல்கள் அடித்துள்ளார். அவர் ஆயிரம் கோல்களை அடிப்பதை இலக்காக கொண்டுள்ளார்.
போர்ச்சுக்கல் நாட்டுக்காக 223 போட்டியில் 141 கோல்கள் அடித்துள்ளார். சர்வதேச போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த வீரர்களில் ரொனால்டோ தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். மெஸ்சி 114 கோல்களுடன் (194 ஆட்டம்) 2-வது இடத்தில் இருக்கிறார்.
- ரவி மோகன் இயக்கும் படத்திற்கு Ordinary Man என்ற தலைப்பு வைத்துள்ளனர்.
- இப்படத்தை ரவி மோகன் தயாரிக்கிறார்.
சமீபத்தில் ரவி மோகன் அவரது தயாரிப்பு நிறுவனமான ரவி மோகன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தை தொடங்கினார். அதில் ப்ரோ கோட் திரைப்படத்தை முதலில் தயாரித்துள்ளார்.
மேலும் அடுத்ததாக ரவி மோகன் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். அவர் இயக்கும் படத்தில் யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை அவரே தயாரித்து இயக்குகிறார். மேலும் இப்படத்திற்கு Ordinary Man என்ற தலைப்பு வைத்துள்ளனர்.
இந்த படத்தின் ப்ரோமோ வீடியோவை ரவி மோகன் பிறந்தநாளை முன்னிட்டு இன்று படக்குழு வெளியிட உள்ளது. இது தொடர்பான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
- இத்தாலி அணி முதல் முறையாக இந்த தொடருக்கு தகுதி பெற்றுள்ளது.
- இந்தியாவில் குறைந்தது 5 நகரங்களிலும், இலங்கையில் இரு இடங்களிலும் நடைபெறும் என்று தெரிகிறது.
புதுடெல்லி:
10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2026) இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. 20 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிக்கு இதுவரை நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் உள்பட 15 அணிகள் தகுதி பெற்றுள்ளன.
இதில் இத்தாலி முதல் முறையாக தகுதி பெற்றுள்ளது. முந்தைய உலகக் கோப்பை போன்றே அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதும். ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடத்தை பிடிக்கும் அணிகள் சூப்பர்-8 சுற்றை எட்டும். போட்டிக்கான அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில் இந்த உலகக் கோப்பை போட்டியை அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) முடிவு செய்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. மொத்தமுள்ள 55 ஆட்டங்கள் இந்தியாவில் குறைந்தது 5 நகரங்களிலும், இலங்கையில் இரு இடங்களிலும் நடைபெறும் என்று தெரிகிறது.
இறுதிப்போட்டி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு வேளை பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் பட்சத்தில், இறுதி ஆட்டத்தை கொழும்புக்கு மாற்றவும் இந்திய கிரிக்கெட் வாரியம் ஒப்புக் கொண்டுள்ளது.
- மஹிந்திரா தார் சாலையில் தலைப்புற கவிழ்ந்து கிடக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
நாம் விருப்பப்பட்ட மாடலில் புதிய காரை வாங்கி பயணிக்க வேண்டும் என்பது பலரது கனவாக உள்ளது. அவ்வாறு காரை வாங்கி முதலில் கோவிலுக்கு கொண்டு சென்று பூஜை செய்ய வேண்டும் என நினைப்போம். அப்படி நினைத்த ஒருவருக்கு நிகழ்ந்த அனுபவத்தை குறித்து பார்ப்போம்.
டெல்லியின் நிர்மன் விஹாரில் உள்ள மஹிந்திரா ஷோரூமில், மாணி பவார் என்ற பெண் புதிதாக மஹிந்திரா தாரை முன்பதிவு செய்து இருந்தார். இதனை நேற்று முன்தினம் மாலை பூஜை செய்து எடுத்து செல்ல ஷோரூமுக்கு வந்திருந்தார். அப்போது, அங்கு பூஜைகளும் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து மாணி பவார் காரின் 4 பக்க சக்கரத்தின் அடியிலும் எலுமிச்சை பழத்தை வைத்துள்ளார். இதையடுத்து காரில் அமர்ந்து லேசாக தள்ளி எலுமிச்சை பழத்தை நசுக்கினார். அப்போது அவருடன் ஷோரூம் ஊழியரான விகாஸ் என்பவரும் காரில் அமர்ந்திருந்தார். இதையடுத்து எலுமிச்சை பழத்தை நசுக்கியதும் தவறுதலாக ஆக்ஸிலேட்டரை அழுத்திவிட்டார்.
அவ்வளவுதான், கார் ஷோரூமின் முதல் மாடியின் கண்ணாடியை உடைத்து வெளியே பறந்து வந்து விழுந்தது. இதையடுத்து, ஷோரூமில் இருந்தவர்கள், பொதுமக்கள் என அனைவரும் சேர்ந்த காரில் இருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்கள் முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பினர்.
இதனிடையே மஹிந்திரா தார் சாலையில் தலைப்புற கவிழ்ந்து கிடக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
- ஆண்டு தோறும் சுமார் 7 லட்சத்து 20 ஆயிரம் மக்கள் உலகம் முழுவதும் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
- ஒருவர் தற்கொலை செய்து கொள்வதினால் அவர் குடும்பமும் சமுதாயமும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிறது.
புதுச்சேரி:
ஆண்டு தோறும் செப்டம் பர் 10-ந்தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இதனையொட்டி புதுச்சேரி சுகாதாரத்துறையின் தேசிய தொலை தொடர்பு மனநல திட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆண்டு தோறும் சுமார் 7 லட்சத்து 20 ஆயிரம் மக்கள் உலகம் முழுவதும் தற்கொலை செய்து கொள்கின்றனர். தேசிய குற்றப் பிரிவு அறிக்கைபடி இந்தியாவில் 2017-ல் இருந்து 2022-ல் தற்கொலை விகிதம் அதிகமாகியுள்ளது. இதில் புதுச்சேரி 26.3 சதவீதத்துடன் 3-வது இடத்தில் உள்ளது.
இதற்குப் போதைப்பொருள் பழக்கம், மன அழுத்தம், காதல் தோல்வி, குடும்ப பிரச்சனை போன்ற பல காரணங்கள் உள்ளன. ஒருவர் தற்கொலை செய்து கொள்வதினால் அவர் குடும்பமும் சமுதாயமும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிறது.
தற்கொலை தடுப்பு நம் ஒவ்வொருவரிடம் இருந்து ஆரம்பமாகிறது. யாராவது அவர்களது மன கவலைகளையும், விரக்தியையும் நம்மிடையே பகிரும்போது அதற்கு நாம் கவனம் அளித்து அவர்களுக்குச் சரியான ஆலோசனை மற்றும் மருத்துவ உதவிக்கு உட்படுத்தினாலே போதும்.
யாருக்காவது மனசோர்வு, பதற்றம், பயம், நம்பிக்கையின்மை, விரக்தி, தற்கொலை சிந்தனைகள் இருந்தால் அவர்கள் 24 மணி நேர இலவச மனநல ஆலோசனை தொலைபேசி எண் 14416 அல்லது 18008914416 என்ற எண்ணை தொடர்பு கொண்டு மனநல ஆலோசனை மற்றும் மருத்துவ உதவிகள் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- த.வெ.க. தலைவர் விஜய் திருச்சியில் புதிய பாதையில் தனது பிரசாரத்தை மேற்கொள்ள உள்ளார்.
- திருச்சி மரக்கடை பகுதியில் நடைபெற உள்ள விஜய் பிரசாரத்திற்காக காவல்துறை விதித்த நிபந்தனைகளை த.வெ.க. ஏற்றுக்கொண்டது.
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். வருகிற 13-ந் தேதி திருச்சி மாவட்டத்தில் இருந்து அவர் தனது பிரசார பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார். இதில் 13-ந்தேதி காலை 10.30 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சிக்கு வரும் விஜய் முதலில் டி.வி.எஸ். டோல்கேட், தலைமை தபால் நிலையம், மேலப்புதூர், பாலக்கரை, மார்க்கெட் வழியாக வந்து திருச்சி காந்தி மார்க்கெட் பகுதி மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகில் உரையாற்றுவார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் திருச்சியில் புதிய பாதையில் தனது பிரசாரத்தை மேற்கொள்ள உள்ளார்.
முதலில் டி.வி.எஸ் டோல்கேட் தொடங்கி தலைமை தபால் நிலையம், பாரதியார் சாலை, மரக்கடை வழியாக சத்திரம் செல்ல திட்டமிடப்பட்டு இருந்தது.
சத்திரம் பேருந்து நிலையத்தில் அனுமதி மறுக்கப்பட்டதால் தற்போது பிரசார பயண பாதையை மாற்றி உள்ள விஜய், டி.வி.எஸ் டோல்கேட்டில் பிரசாரத்தை தொடங்கி மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே பேச உள்ளார். சத்திரம் பேருந்து நிலையம் செல்லாமல் காந்தி மார்க்கெட் வழியாக தேசிய நெடுஞ்சாலையை அடைந்து விஜய் அரியலூர் செல்கிறார்.
திருச்சி மரக்கடை பகுதியில் நடைபெற உள்ள விஜய் பிரசாரத்திற்காக காவல்துறை விதித்த நிபந்தனைகளை த.வெ.க. ஏற்றுக்கொண்டது. ஸ்டார் தியேட்டர், தமிழ்ச்சங்கம் மற்றும் காந்தி மார்க்கெட் ஆகிய 3 இடங்களில் தற்காலிக பார்க்கிங் அமைக்க த.வெ.க. ஒப்புக்கொண்டது.
- அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
- 2001 க்கு பிறகு இந்த எண்ணிக்கையில் இந்த அளவு சரிவு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான விசா நடைமுறைகள், வெளிநாட்டவர் மீதான அடக்குமுறை ஆகியவை நாளுக்கு நாள் மோசமடைந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025 ஜூன் வரை அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
2001 க்கு பிறகு கடந்த 24 ஆண்டுகளுக்கு பிறகு இந்த எண்ணிக்கையில் இந்த அளவு சரிவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க வர்த்தக துறையின் தேசிய சுற்றுலா நிர்வாகத்தின் (NTTO) தரவுகள் மூலம் இது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவுக்கு செல்ல விசா பெறும் முறைக்கு அந்நாட்டு அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் காரணமாக, வெளிநாடு வாழ் இந்தியர்கள் விசா பெற பல மாதங்கள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
உதாரணமாக, ஜெர்மனியில் வசிக்கும் இந்தியர் ஒருவர் விசா பெற வேண்டும் எனில் தங்களது சொந்த நாடான இந்தியாவில் இருந்தே விண்ணப்பிக்க வேண்டும் என அமெரிக்கா கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு வெளிநாடு வாழ் இந்தியர்கள் அவர்கள் தங்கியிருக்கும் நாட்டில் இருந்தே விசா பெற்று அமெரிக்கவுக்கு சென்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆசிய கோப்பை அறிமுக நிகழ்ச்சியில் 8 அணிகளின் கேப்டன்களும் பங்கேற்றனர்.
- சூர்ய குமார் யாதவ் மற்ற அணிகளின் கேப்டன்களுடன் கை குலுக்கி கட்டி பிடித்தார்.
அபுதாபி:
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் உள்பட 8 நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நேற்று தொடங்கியது.
தொடக்க ஆட்டத்தில் 'பி' பிரிவில் உள்ள ஆப்கானிஸ்தான் 94 ரன் வித்தியாசத்தில் ஆங்காங்கை வீழ்த்தியது.
முன்னதாக இந்தப் போட்டிக்கான கோப்பை அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 8 அணிகளின் கேப்டன்களும் பங்கேற்றனர்.
நிருபர்கள் சந்திப்புக்கு பிறகு ஒவ்வொரு அணிகளின் கேப்டன்கள் கை குலுக்கி கொள்ள வேண்டும். பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா கை குலுக்கல் வரை காத்திருக்காமல் வெளியேறினார். அவர் பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்த பிறகு இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவிடம் கை குலுக்காமல் சென்ற வீடியோ வெளியானது.
இந்தப் போட்டித் தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகள் மோதும் ஆட்டம் துபாயில் வருகிற 14-ந்தேதி நடக்கிறது. எல்லையில் இரு நாடுகள் இடையே ஏற்பட்ட பதற்றத்துக்கு பிறகு இந்த ஆட்டம் நடைபெறுகிறது. இந்த நிலையில் தான் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா கை குலுக்காமல் சென்றது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலானது.
அதே நேரத்தில் சூர்ய குமார் யாதவ் ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத்கான் உள்ளிட்ட மற்ற அணிகளின் கேப்டன்களுடன் கை குலுக்கி கட்டி பிடித்தார்.

பின்னர் தான் சல்மான் ஆகா கை குலுக்காமல் சென்ற தவறை உணர்ந்தார். இதை தொடர்ந்து அவர் சூர்யகுமார் யாதவிடம் சென்று கை குலுக்கி கொண்டார். இந்த புதிய வீடியோவும் வெளியானது. இதேபோல சூர்யகுமார் யாதவ் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரும், அந்நாட்டு மந்திரியுமான மோஷின் நக்வியுடன் கை குலுக்கி கொண்டார்.
- இந்தியாவுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை அதிபர் டிரம்ப் நிர்வாகம் முன்வைத்தது.
- அமெரிக்காவின் வரி விதிப்பால் இந்தியாவில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்ததை அடுத்து இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது.
மேலும் இந்தியாவுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை அதிபர் டிரம்ப் நிர்வாகம் முன்வைத்தது. அமெரிக்காவின் வரி விதிப்பால் இந்தியாவில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை தொடர்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்க, அந்நாட்டுடன் எண்ணெய் வர்த்தகத்தில் உள்ள இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கு 100% வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அதிபர் டிரம்ப் வலியுறுத்தியதாக ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளிடம் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் இதை செயல்படுத்தினால், அதே நடவடிக்கையை அமெரிக்காவும் நடைமுறைப்படுத்தும் என டிரம்ப் உத்தரவாதம் அளித்ததாகவும் கூறப்படுகிறது.
டிரம்பின் இந்த முடிவால் இந்தியாவில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்கள் கலக்கமடைந்துள்ளன.
- வேளச்சேரியில் தொழில் அதிபர் அமித் பிஸ்நாத் என்பவரது வீட்டில் சோதனை நடைபெற்றது.
- மேற்கு மாம்பலத்தில் சுப்பிரமணி என்பவரது வீட்டில் சோதனை நடைபெற்றது.
சென்னை:
சென்னையில் இன்று 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
அடையாறு காந்தி நகர் 3-வது தெருவில் வசித்து வரும் இந்திரா என்ற டாக்டர் வீட்டில் இன்று காலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினார்கள்.
இதே போன்று வேளச்சேரியில் தொழில் அதிபர் அமித் பிஸ்நாத் என்பவரது வீட்டிலும், மேற்கு மாம்பலத்தில் சுப்பிரமணி என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்றது.
சட்ட விரோத பணப் பரிமாற்ற புகாரின் பேரில் சோதனையை மேற்கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் எது தொடர்பாக சோதனை நடைபெற்று உள்ளது என்பது பற்றிய தகவல்களை வெளியிடவில்லை.
சோதனை முடிவில்தான் அது பற்றிய தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அவர்களுடன் கலந்துரையாடுகிறார்.
- புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைக்கிறார்.
கிருஷ்ணகிரி:
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாளை (வியாழக்கிழமை) கிருஷ்ணகரி மாவட்டத்திற்கு வருகிறார். காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் ஓசூர் பேளகொண்டப்பள்ளியில் உள்ள தனேஜா விமான ஓடு தளத்தை வந்தடைகிறார்.
அங்கு அவருக்கு கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளிக்கிறார்கள். தொடர்ந்து ஓசூரில் தளி சாலையில் உள்ள ஆனந்த் கிராண்ட் பேலஸ் சென்றடைகிறார். அங்கு 11.30 மணிக்கு நடைபெற கூடிய தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
பின்னர் அங்கிருந்து 12.50 மணிக்கு எல்காட் தொழில்நுட்ப பூங்காவிற்கு செல்கிறார். அங்கு அமைய உள்ள நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் மதிய உணவை தொடர்ந்து மாலை 4 மணிக்கு ஓசூரில் இருந்து புறப்படுகிறார். மாலை 4.30 மணி அளவில் சூளகிரி பஸ் நிலையத்தை அடைகிறார்.
அங்கு பஸ் நிலையம் முதல் தேசிய நெடுஞ்சாலை வரை ரோடு ஷோவில் பங்கேற்கிறார். மாலை 4.35 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு குருபரப்பள்ளி டெல்டா நிறுவனத்தை வந்தடைகிறார். அங்கு 5 மணிக்கு புதிய தொழிற்சாலை தொடங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். மாலை 6 மணிக்கு கிருஷ்ணகிரியை வந்தடைகிறார். அங்கு சுங்கச்சாவடி அருகில் கட்சியினர் முதலமைச்சருக்கு வரவேற்பு அளிக்கிறார்கள். தொடர்ந்து ரோடு ஷோவில் பங்கேற்கும் அவர் இரவு கிருஷ்ணகிரியில் தங்குகிறார்.
12-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.15 மணிக்கு கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் நடைபெறும் அரசு விழாவில் முதலமைச்சர் பங்கேற்கிறார். அங்கு காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்ளும் அவர், விழா மேடை அருகில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கண்காட்சி அரங்குகளை பார்வையிடுகிறார்.
பின்னர் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அவர்களுடன் கலந்துரையாடுகிறார். தொடர்ந்து விழா மேடைக்கு வரும் முதலமைச்சர் கல்லில் உறைந்த வரலாறு கிருஷ்ணகிரியின் தொன்மையும் வரலாறும் என்ற தலைப்பில் உருவாக்கப்பட்ட புத்தகத்தை வெளியிடுகிறார்.
பின்னர் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைக்கிறார். தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தின் திட்டப்பணிகள் குறித்த குறும்படத்தை திரையிடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழா பேருரையாற்றி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
பின்னர் கார் மூலமாக ஓசூர் புறப்பட்டு சென்று அங்கிருந்து விமானம் மூலம் முதலமைச்சர் சென்னை செல்கிறார்.
- தாமிரபரணி ஆற்றில், கழிவுநீரைக் கலக்கவிட்டு, அதன் தன்மையையும் மக்களின் அடிப்படைத் தேவையையும் முற்றிலுமாக அழித்துவிட்டது.
- தி.மு.க. ஆட்சியில் தெற்கு தேய்கிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"தமிழ் கண்டதோர் வையை, பொருநை நதி" என மகாகவி பாரதியார் பாட்டெடுத்த தாமிரபரணி ஆறு, @arivalayam அரசின் அலட்சியத்தால் இன்று முற்றிலுமாக சீரழிந்து போயுள்ளது. நெல்லையின் வற்றாத ஜீவநதியாகவும், சுற்றியுள்ள 5 மாவட்ட மக்களின் குடிநீர் தேவையின் உயிர்நாடியாகவும் பெருக்கெடுத்த தாமிரபரணி ஆற்றில், கழிவுநீரைக் கலக்கவிட்டு, அதன் தன்மையையும் மக்களின் அடிப்படைத் தேவையையும் முற்றிலுமாக அழித்துவிட்டது ஆளும் அரசு.
தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளைத் தூர்வாருவது, அவற்றின் கரைகளைப் பலப்படுத்துவது, கால்வாய்களை மறுசீரமைப்பது, நீர்நிலைகளில் கலக்கப்படும் கழிவுநீரை சுத்திகரிப்பது உள்ளிட்ட நீர் மேலாண்மையின் அடிப்படை வேலைகளைக் கூட செய்ய முடியாத தி.மு.க. அரசு, எதற்காக நீர்வளத்துறை என்ற தனித்துறையை உருவாக்கியது? அனைத்து உயிர்களின் வாழ்வாதாரமான நீராதாரத்தைத் தி.மு.க. அரசு எதற்கு இத்தனை அலட்சியமாகக் கையாள்கிறது என்பது தான் புரியாத புதிராக உள்ளது.
தென் தமிழக மக்களின் அடிப்படைத் தேவை இப்படி அந்தரத்தில் ஊசலாடுவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எந்தக் கவலையுமில்லையா? ஒருவேளை, தண்ணீருக்காக தென் மாவட்ட மக்களைத் திக்குமுக்காட வைப்பதும் திராவிட மாடல் கொள்கைகளில் ஒன்றாக இருக்குமோ? தி.மு.க. ஆட்சியில் தெற்கு தேய்கிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






