என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • வேளச்சேரியில் தொழில் அதிபர் அமித் பிஸ்நாத் என்பவரது வீட்டில் சோதனை நடைபெற்றது.
    • மேற்கு மாம்பலத்தில் சுப்பிரமணி என்பவரது வீட்டில் சோதனை நடைபெற்றது.

    சென்னை:

    சென்னையில் இன்று 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

    அடையாறு காந்தி நகர் 3-வது தெருவில் வசித்து வரும் இந்திரா என்ற டாக்டர் வீட்டில் இன்று காலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினார்கள்.

    இதே போன்று வேளச்சேரியில் தொழில் அதிபர் அமித் பிஸ்நாத் என்பவரது வீட்டிலும், மேற்கு மாம்பலத்தில் சுப்பிரமணி என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்றது.

    சட்ட விரோத பணப் பரிமாற்ற புகாரின் பேரில் சோதனையை மேற்கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் எது தொடர்பாக சோதனை நடைபெற்று உள்ளது என்பது பற்றிய தகவல்களை வெளியிடவில்லை.

    சோதனை முடிவில்தான் அது பற்றிய தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அவர்களுடன் கலந்துரையாடுகிறார்.
    • புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைக்கிறார்.

    கிருஷ்ணகிரி:

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாளை (வியாழக்கிழமை) கிருஷ்ணகரி மாவட்டத்திற்கு வருகிறார். காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் ஓசூர் பேளகொண்டப்பள்ளியில் உள்ள தனேஜா விமான ஓடு தளத்தை வந்தடைகிறார்.

    அங்கு அவருக்கு கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளிக்கிறார்கள். தொடர்ந்து ஓசூரில் தளி சாலையில் உள்ள ஆனந்த் கிராண்ட் பேலஸ் சென்றடைகிறார். அங்கு 11.30 மணிக்கு நடைபெற கூடிய தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

    பின்னர் அங்கிருந்து 12.50 மணிக்கு எல்காட் தொழில்நுட்ப பூங்காவிற்கு செல்கிறார். அங்கு அமைய உள்ள நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் மதிய உணவை தொடர்ந்து மாலை 4 மணிக்கு ஓசூரில் இருந்து புறப்படுகிறார். மாலை 4.30 மணி அளவில் சூளகிரி பஸ் நிலையத்தை அடைகிறார்.

    அங்கு பஸ் நிலையம் முதல் தேசிய நெடுஞ்சாலை வரை ரோடு ஷோவில் பங்கேற்கிறார். மாலை 4.35 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு குருபரப்பள்ளி டெல்டா நிறுவனத்தை வந்தடைகிறார். அங்கு 5 மணிக்கு புதிய தொழிற்சாலை தொடங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். மாலை 6 மணிக்கு கிருஷ்ணகிரியை வந்தடைகிறார். அங்கு சுங்கச்சாவடி அருகில் கட்சியினர் முதலமைச்சருக்கு வரவேற்பு அளிக்கிறார்கள். தொடர்ந்து ரோடு ஷோவில் பங்கேற்கும் அவர் இரவு கிருஷ்ணகிரியில் தங்குகிறார்.

    12-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.15 மணிக்கு கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் நடைபெறும் அரசு விழாவில் முதலமைச்சர் பங்கேற்கிறார். அங்கு காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்ளும் அவர், விழா மேடை அருகில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கண்காட்சி அரங்குகளை பார்வையிடுகிறார்.

    பின்னர் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அவர்களுடன் கலந்துரையாடுகிறார். தொடர்ந்து விழா மேடைக்கு வரும் முதலமைச்சர் கல்லில் உறைந்த வரலாறு கிருஷ்ணகிரியின் தொன்மையும் வரலாறும் என்ற தலைப்பில் உருவாக்கப்பட்ட புத்தகத்தை வெளியிடுகிறார்.

    பின்னர் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைக்கிறார். தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தின் திட்டப்பணிகள் குறித்த குறும்படத்தை திரையிடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழா பேருரையாற்றி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

    பின்னர் கார் மூலமாக ஓசூர் புறப்பட்டு சென்று அங்கிருந்து விமானம் மூலம் முதலமைச்சர் சென்னை செல்கிறார்.

    • தாமிரபரணி ஆற்றில், கழிவுநீரைக் கலக்கவிட்டு, அதன் தன்மையையும் மக்களின் அடிப்படைத் தேவையையும் முற்றிலுமாக அழித்துவிட்டது.
    • தி.மு.க. ஆட்சியில் தெற்கு தேய்கிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?

    பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    "தமிழ் கண்டதோர் வையை, பொருநை நதி" என மகாகவி பாரதியார் பாட்டெடுத்த தாமிரபரணி ஆறு, @arivalayam அரசின் அலட்சியத்தால் இன்று முற்றிலுமாக சீரழிந்து போயுள்ளது. நெல்லையின் வற்றாத ஜீவநதியாகவும், சுற்றியுள்ள 5 மாவட்ட மக்களின் குடிநீர் தேவையின் உயிர்நாடியாகவும் பெருக்கெடுத்த தாமிரபரணி ஆற்றில், கழிவுநீரைக் கலக்கவிட்டு, அதன் தன்மையையும் மக்களின் அடிப்படைத் தேவையையும் முற்றிலுமாக அழித்துவிட்டது ஆளும் அரசு.

    தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளைத் தூர்வாருவது, அவற்றின் கரைகளைப் பலப்படுத்துவது, கால்வாய்களை மறுசீரமைப்பது, நீர்நிலைகளில் கலக்கப்படும் கழிவுநீரை சுத்திகரிப்பது உள்ளிட்ட நீர் மேலாண்மையின் அடிப்படை வேலைகளைக் கூட செய்ய முடியாத தி.மு.க. அரசு, எதற்காக நீர்வளத்துறை என்ற தனித்துறையை உருவாக்கியது? அனைத்து உயிர்களின் வாழ்வாதாரமான நீராதாரத்தைத் தி.மு.க. அரசு எதற்கு இத்தனை அலட்சியமாகக் கையாள்கிறது என்பது தான் புரியாத புதிராக உள்ளது.

    தென் தமிழக மக்களின் அடிப்படைத் தேவை இப்படி அந்தரத்தில் ஊசலாடுவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எந்தக் கவலையுமில்லையா? ஒருவேளை, தண்ணீருக்காக தென் மாவட்ட மக்களைத் திக்குமுக்காட வைப்பதும் திராவிட மாடல் கொள்கைகளில் ஒன்றாக இருக்குமோ? தி.மு.க. ஆட்சியில் தெற்கு தேய்கிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஹாங் காங்குக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் 94 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • ஹாங் காங்குக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் உமர்சாய் 20 பந்துகளில் அரைசதம் விளாசினார்.

    அபுதாபி:

    8 அணிகள் இடையிலான 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நேற்று தொடங்கியது. இதன் முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - ஹாங்காங் அணிகள் மோதின.

    இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் குவித்தது.

    பின்னர் களமிறங்கிய ஹாங்காங் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 94 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் ஆப்கானிஸ்தான் 94 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் அஸ்மதுல்லா உமர்சாய் 20 பந்துகளில் அரைசதம் விளாசினார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் அரைசதம் விளாசிய ஆப்கானிஸ்தான் வீரர் என்ற மாபெரும் சாதனையை அஸ்மதுல்லா உமர்சாய் படைத்துள்ளார்.

    மேலும் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட்டில் அதிகவேக அரை சதம் விளாசிய இந்தியாவின் சூர்யகுமார் மற்றும் ஆப்கானிஸ்தானின் குர்பாஸ் சாதனையையும் உமர்சாய் முறியடித்துள்ளார். 2022-ம் ஆண்டு ஹாங் காங்குக்கு எதிராக சூர்யகுமார் 22 பந்திலும் இலங்கைக்கு எதிராக குர்பாஸ் 22 பந்திலும் அரை சதம் அடித்திருந்தனர். அவர்களின் சாதனைகளை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார் உமர்சாய்.

    • நேற்று கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,150-க்கும் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.81,200-க்கு விற்பனையானது.
    • ஒரு கிராம் வெள்ளி 140 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

    சென்னை:

    உலக நாடுகள் இடையிலான போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை, டாலருக்கு எதிரான ரூபாய் வீழ்ச்சி போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்தது.

    இந்தநிலையில் அமெரிக்காவின் வர்த்தக போரால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது. பங்குச்சந்தைகளில் முதலீடு குறைந்து, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது.

    இதனால் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் கடந்த 6-ந்தேதி ஒரு கிராம் ரூ.10,005 என்ற புதிய உச்சத்தை அடைந்தது. அதாவது ஒரு சவரன் தங்கம் விலை ரூ.80 ஆயிரத்து 40-க்கு விற்பனையானது. இது இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய வைத்தது.

    வார தொடக்க நாளான திங்கட்கிழமை காலையில் தங்கம் விலை சற்று குறைந்தது. அதாவது கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.9,970-க்கும், சவரனுக்கு ரூ.280 குறைந்து சவரன் ரூ.79 ஆயிரத்து 760-க்கு விற்பனை செய்யப்பட்டது. அன்று மாலையே தங்கம் விலை மீண்டும் புதிய உச்சத்தை தொட்டது. கிராமுக்கு ரூ.90-ம், சவரனுக்கு ரூ.720-ம் அதிகரித்தது. அதன்படி ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 60-க்கும், சவரன் ரூ.80 ஆயிரத்து 480-க்கும் விற்பனையானது.இதனை தொடர்ந்து நேற்றும் தங்கம் விலை உயர்ந்தது. கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,150-க்கும் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.81,200-க்கு விற்பனையானது.

    இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விலையில் மாற்றம் ஏற்படவில்லை. ஒரு கிராம் தங்கம் ரூ.10,150-க்கும் சவரன் ரூ.81,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.



    தங்கத்தை போலவே உயர்ந்து வரும் வெள்ளி விலையிலும் மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 140 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    09-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 81,200

    08-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 80,480

    07-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 80,040

    06-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 80,040

    05-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.78,920

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    09-09-2025- ஒரு கிராம் ரூ.140

    08-09-2025- ஒரு கிராம் ரூ.140

    07-09-2025- ஒரு கிராம் ரூ.138

    06-09-2025- ஒரு கிராம் ரூ.138

    05-09-2025- ஒரு கிராம் ரூ.136

    • அண்ணாமலை கட்சியை அரவணைத்து செல்கிறார்.
    • நண்பராக நயினார் நாகேந்திரன் எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம்.

    விருதுநகரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றது தமிழ்நாட்டிற்கு பெருமையும் மகிழ்ச்சியும் சேர்க்கின்ற விஷயம். அவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் மட்டும் அல்ல, அவர் ஒரு நேர்மையான நல்ல மனிதர். அவர் வெற்றி பெற்றது உண்மையிலேயே மகிழ்ச்சி.

    தனிப்பட்ட முறையில் எனக்கு நல்ல நண்பர் நயினார் நாகேந்திரன். கூட்டணியில் இருந்து நான் வெளியேறும்போது எல்லா காரணங்களையும் சொன்னேன். தனிப்பட்ட முறையில் எனக்கும் அவருக்கும் எந்தவிதமான மனவருத்தமும் கோபமும் கிடையாது. ஒரு நண்பராக அவர் எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம்.

    அண்ணாமலை கட்சியை அரவணைத்து செல்கிறார். செங்கோட்டையனின் நல்ல முயற்சி வெற்றி பெற வேண்டும் என்பது அம்மாவின் தொண்டர்கள் அனைவரின் விருப்பம். அவரது முயற்சி கண்டிப்பாக வெற்றி அடையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருச்சி மரக்கடை பகுதியில் விஜய் பிரசாரம் செய்து பேசுவதற்கு போலீசார் அனுமதி அளித்தனர்.
    • பேசும் இடங்களை தவிர மற்ற இடங்களில் விஜய் பிரசார வாகனத்தின் வெளியே வரக்கூடாது.

    தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். வருகிற 13-ந் தேதி திருச்சி மாவட்டத்தில் இருந்து அவர் தனது பிரசார பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார். இதில் 13-ந்தேதி காலை 10.30 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சிக்கு வரும் விஜய் முதலில் டி.வி.எஸ். டோல்கேட், தலைமை தபால் நிலையம், மேலப்புதூர், பாலக்கரை, மார்க்கெட் வழியாக வந்து திருச்சி காந்தி மார்க்கெட் பகுதி மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகில் உரையாற்றுவார் என்று கூறப்படுகிறது.

    இது தொடர்பாக கடந்த 6-ந் தேதி த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், போலீஸ் கமிஷனர் காமினியை சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில், டி.வி.எஸ். டோல்கேட், தலைமை தபால் நிலையம், மேலப்புதூர், பாலக்கரை, மார்க்கெட் வழியாக வந்து சத்திரம் பஸ் நிலையம் அருகே உரையாற்ற அனுமதி அளிக்குமாறு கூறப்பட்டிருந்தது. ஆனால் போலீசார், பொதுக்கூட்டத்திற்கு மட்டுமே அனுமதி, 'ரோடு ஷோ' நடத்த அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளனர். மேலும் திருச்சி காந்தி மார்க்கெட் மரக்கடை பகுதியில் மக்கள் சந்திப்பு பயணத்தை நடத்தி கொள்ளுமாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து நேற்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு, த.வெ.க. திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் குடமுருட்டி கரிகாலன் தலைமையில் நிர்வாகிகள் ஒரு மனு அளிக்க போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தனர். ஆனால் த.வெ.க.வினர் அனுமதி கேட்கும் கடிதத்துடன் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரை சந்திக்க போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர்.

    மேலும் திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனரை சந்தித்து, பிரசார பயணத்திற்கு அனுமதி கடிதம் கொடுக்குமாறு போலீசார் அறிவுறுத்தினர். இருப்பினும் நீண்ட நேரமாக த.வெ.க.வினர் கமிஷனர் அலுவலகம் முன்பு காத்திருந்தனர். இதனால் போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் துணை கமிஷனரை சந்திக்க புறப்பட்டனர்.

    அதன்படி அவர்கள் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் எஸ்.ஆர்.சி. கல்லூரி அருகில் உள்ள திருச்சி மாநகர வடக்கு போலீஸ் துணை கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு வடக்கு போலீஸ் துணை கமிஷனர் சிபினை சந்தித்து, விஜய் பிரசாரத்திற்கு அனுமதி கோரி மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து திருச்சி மரக்கடை பகுதியில் விஜய் பிரசாரம் செய்து பேசுவதற்கு போலீசார் அனுமதி அளித்தனர். ஆனால் ஊர்வலம் நடத்த அனுமதி இல்லை என்று தெரிவித்தனர். இதையடுத்து திருச்சி மரக்கடை பகுதியில் த.வெ.க. தலைவர் பிரசாரம் செய்வது உறுதியாகி உள்ளது.

    இந்நிலையில் விஜய் சுற்றுப்பயணத்திற்காக போலீசார் விதித்த நிபந்தனைகள் ஏற்க முடியாதது என த.வெ.க.வினர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பொதுமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு, 'ரோடு ஷோ' நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விஜய் வாகனத்தின் பின்னால் அதிக அளவில் வாகனங்கள் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பேசும் இடங்களை தவிர மற்ற இடங்களில் விஜய் பிரசார வாகனத்தின் வெளியே வரக்கூடாது எனவும் போலீசார் நிபந்தனை விதித்தனர்.

    காவல்துறையின் குறிப்பிட்ட நிபந்தனைகளை ஏற்க த.வெ.க.வினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து இன்று காலை 11 மணிக்கு மீண்டும் காவல் துணை கமிஷனர் அலுலவகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

    • இயர்பட்களில் ஸ்வைப் வால்யூம் கண்ட்ரோல்களை சேர்க்கப்படும் என்று தெரிகிறது.
    • வரும் வாரங்களில் இந்த மாடல் குறித்த கூடுதல் விவரங்கள் வெளியாகலாம்.

    நத்திங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் இயர்பட் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதன்படி வருகிற 18ஆம் தேதி நத்திங் இயர் (3) ட்ரூ வயர்லெஸ் (TWS) இயர்பட்கள் அறிமுகம் செய்வதாக நத்திங் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்காக நத்திங் வெளியிட்டுள்ள டீசரில் புதிய இயர்பட்கள் வளைந்த வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்பதை காட்டுகிறது.

    முன்னதாக இயர் (1) மற்றும் இயர் (2) மாடல்களுக்குப் பிறகு நத்திங் நிறுவனம் இயர் என்று பெயரிடும் திட்டத்திற்கு மாறியது, இப்போது நிறுவனம் பழைய படி பெயர்சூட்ட முடிவு செய்துள்ளது.

    "இயர்(4)-க்கு என்ற பெயருக்கு மாறுவது குழப்பத்தை மட்டுமே உருவாக்கும், குறிப்பாக புதிய வாடிக்கையாளர்களுக்கு. எனவே மிகவும் தெளிவு மற்றும் நிலைத்தன்மையைக் கொண்டுவரும் தீர்வைக் கண்டறிந்தோம்," என்கிறார் குளோபல் ஸ்மார்ட் தயாரிப்புகள் சந்தைப்படுத்தல் தலைவர் ஆண்ட்ரூ.

    இயர் (3) பல உயர்நிலை ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ (TWS) இயர்பட்களில் காணப்படும் தொழில்நுட்பமான டூயல்-டிரைவர் சிஸ்டம் வழங்கப்படுகிறது. மேம்பட்ட பேட்டரி ஆயுளுடன், மேம்படுத்தப்பட்ட ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC) மற்றும் மிகவும் இயற்கையான சவுண்ட் டிரான்ஸ்பேரன்ஸி மோட், உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

    கேஸ் மற்றும் இயர்பட்ஸ் இரண்டிற்கும் அதன் தனித்துவமான வெளிப்படையான வடிவமைப்பை எதுவும் பராமரிக்கும் என்று எதிர்பார்க்கப்படவில்லை. இயர்பட்களில் ஸ்வைப் வால்யூம் கண்ட்ரோல்களை சேர்க்கப்படும் என்று தெரிகிறது.

    புதிய இயர் (3) மாடல் செப்டம்பர் பிற்பகுதியில் அல்லது அக்டோபர் 2025 தொடக்கத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் வாரங்களில் இந்த மாடல் குறித்த கூடுதல் விவரங்கள் வெளியாகலாம்.

    • தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
    • சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    • 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது.
    • 11, 12 ஆம் வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு தொடர்ந்து நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

    6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடைபெறும் நிலையில் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்வு நடைபெறும் பள்ளுகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளி பள்ளி தலைமை ஆசிரியர் முடிவெடுக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    11, 12 ஆம் வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு தொடர்ந்து நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • அமெரிக்காவும், இந்தியாவும் நட்புறவு நாடுகள்.
    • இரு நாட்டு மக்களுக்கும் பிரகாசமான, வளமான எதிர்காலத்தைப் பெற நாங்கள் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம்.

    புதுடெல்லி:

    இந்தியா- அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை தொடர்வதாகவும், எனது மிகவும் நல்ல நண்பர் பிரதமர் மோடியுடன் வரும் வாரங்களில் பேச ஆவலுடன் காத்திருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து இருந்தார்.

    இதனை தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டிரம்புடன் பேச ஆவலாக உள்ளதாக பிரதமர் மோடி எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் மோடி கூறுகையில், அமெரிக்காவும், இந்தியாவும் நட்புறவு நாடுகள். எங்கள் வர்த்தக பேச்சுவார்த்தைகள் என்பது இந்தியா-அமெரிக்க கூட்டாண்மையின் வரம்பற்ற திறனைத் திறக்க வழி வகுக்கும் என நான் நம்புகிறேன். இந்த விவாதங்களை விரைவில் முடிக்க தங்களது குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.

    அதிபர் டிரம்புடன் பேசவும் நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். நமது இரு நாட்டு மக்களுக்கும் பிரகாசமான, வளமான எதிர்காலத்தைப் பெற நாங்கள் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம் என்று கூறியுள்ளார். 



    • இந்தியாவுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை அதிபர் டிரம்ப் நிர்வாகம் முன்வைத்தது.
    • இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை தொடர்கிறது.

    இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்ததை அடுத்து இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது. மேலும் இந்தியாவுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை அதிபர் டிரம்ப் நிர்வாகம் முன்வைத்தது. அமெரிக்காவின் வரி விதிப்பால் இந்தியாவில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில், இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை தொடர்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக டிரம்ப் ட்ரூத் சமூக வலைத்தளத்தில், 'எனது மிகவும் நல்ல நண்பர் பிரதமர் மோடியுடன் வரும் வாரங்களில் பேச ஆவலுடன் காத்திருக்கிறேன். நமது இரு பெரிய நாடுகளுக்கும் வெற்றிகரமான முடிவுக்கு வருவதில் எந்த சிரமமும் இருக்காது என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று கூறியுள்ளார். 



    ×