என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • திருச்சி மரக்கடை பகுதியில் விஜய் பிரசாரம் செய்து பேசுவதற்கு போலீசார் அனுமதி அளித்தனர்.
    • பேசும் இடங்களை தவிர மற்ற இடங்களில் விஜய் பிரசார வாகனத்தின் வெளியே வரக்கூடாது.

    தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். வருகிற 13-ந் தேதி திருச்சி மாவட்டத்தில் இருந்து அவர் தனது பிரசார பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார். இதில் 13-ந்தேதி காலை 10.30 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சிக்கு வரும் விஜய் முதலில் டி.வி.எஸ். டோல்கேட், தலைமை தபால் நிலையம், மேலப்புதூர், பாலக்கரை, மார்க்கெட் வழியாக வந்து திருச்சி காந்தி மார்க்கெட் பகுதி மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகில் உரையாற்றுவார் என்று கூறப்படுகிறது.

    இது தொடர்பாக கடந்த 6-ந் தேதி த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், போலீஸ் கமிஷனர் காமினியை சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில், டி.வி.எஸ். டோல்கேட், தலைமை தபால் நிலையம், மேலப்புதூர், பாலக்கரை, மார்க்கெட் வழியாக வந்து சத்திரம் பஸ் நிலையம் அருகே உரையாற்ற அனுமதி அளிக்குமாறு கூறப்பட்டிருந்தது. ஆனால் போலீசார், பொதுக்கூட்டத்திற்கு மட்டுமே அனுமதி, 'ரோடு ஷோ' நடத்த அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளனர். மேலும் திருச்சி காந்தி மார்க்கெட் மரக்கடை பகுதியில் மக்கள் சந்திப்பு பயணத்தை நடத்தி கொள்ளுமாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து நேற்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு, த.வெ.க. திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் குடமுருட்டி கரிகாலன் தலைமையில் நிர்வாகிகள் ஒரு மனு அளிக்க போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தனர். ஆனால் த.வெ.க.வினர் அனுமதி கேட்கும் கடிதத்துடன் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரை சந்திக்க போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர்.

    மேலும் திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனரை சந்தித்து, பிரசார பயணத்திற்கு அனுமதி கடிதம் கொடுக்குமாறு போலீசார் அறிவுறுத்தினர். இருப்பினும் நீண்ட நேரமாக த.வெ.க.வினர் கமிஷனர் அலுவலகம் முன்பு காத்திருந்தனர். இதனால் போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் துணை கமிஷனரை சந்திக்க புறப்பட்டனர்.

    அதன்படி அவர்கள் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் எஸ்.ஆர்.சி. கல்லூரி அருகில் உள்ள திருச்சி மாநகர வடக்கு போலீஸ் துணை கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு வடக்கு போலீஸ் துணை கமிஷனர் சிபினை சந்தித்து, விஜய் பிரசாரத்திற்கு அனுமதி கோரி மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து திருச்சி மரக்கடை பகுதியில் விஜய் பிரசாரம் செய்து பேசுவதற்கு போலீசார் அனுமதி அளித்தனர். ஆனால் ஊர்வலம் நடத்த அனுமதி இல்லை என்று தெரிவித்தனர். இதையடுத்து திருச்சி மரக்கடை பகுதியில் த.வெ.க. தலைவர் பிரசாரம் செய்வது உறுதியாகி உள்ளது.

    இந்நிலையில் விஜய் சுற்றுப்பயணத்திற்காக போலீசார் விதித்த நிபந்தனைகள் ஏற்க முடியாதது என த.வெ.க.வினர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பொதுமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு, 'ரோடு ஷோ' நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விஜய் வாகனத்தின் பின்னால் அதிக அளவில் வாகனங்கள் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பேசும் இடங்களை தவிர மற்ற இடங்களில் விஜய் பிரசார வாகனத்தின் வெளியே வரக்கூடாது எனவும் போலீசார் நிபந்தனை விதித்தனர்.

    காவல்துறையின் குறிப்பிட்ட நிபந்தனைகளை ஏற்க த.வெ.க.வினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து இன்று காலை 11 மணிக்கு மீண்டும் காவல் துணை கமிஷனர் அலுலவகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

    • இயர்பட்களில் ஸ்வைப் வால்யூம் கண்ட்ரோல்களை சேர்க்கப்படும் என்று தெரிகிறது.
    • வரும் வாரங்களில் இந்த மாடல் குறித்த கூடுதல் விவரங்கள் வெளியாகலாம்.

    நத்திங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் இயர்பட் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதன்படி வருகிற 18ஆம் தேதி நத்திங் இயர் (3) ட்ரூ வயர்லெஸ் (TWS) இயர்பட்கள் அறிமுகம் செய்வதாக நத்திங் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்காக நத்திங் வெளியிட்டுள்ள டீசரில் புதிய இயர்பட்கள் வளைந்த வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்பதை காட்டுகிறது.

    முன்னதாக இயர் (1) மற்றும் இயர் (2) மாடல்களுக்குப் பிறகு நத்திங் நிறுவனம் இயர் என்று பெயரிடும் திட்டத்திற்கு மாறியது, இப்போது நிறுவனம் பழைய படி பெயர்சூட்ட முடிவு செய்துள்ளது.

    "இயர்(4)-க்கு என்ற பெயருக்கு மாறுவது குழப்பத்தை மட்டுமே உருவாக்கும், குறிப்பாக புதிய வாடிக்கையாளர்களுக்கு. எனவே மிகவும் தெளிவு மற்றும் நிலைத்தன்மையைக் கொண்டுவரும் தீர்வைக் கண்டறிந்தோம்," என்கிறார் குளோபல் ஸ்மார்ட் தயாரிப்புகள் சந்தைப்படுத்தல் தலைவர் ஆண்ட்ரூ.

    இயர் (3) பல உயர்நிலை ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ (TWS) இயர்பட்களில் காணப்படும் தொழில்நுட்பமான டூயல்-டிரைவர் சிஸ்டம் வழங்கப்படுகிறது. மேம்பட்ட பேட்டரி ஆயுளுடன், மேம்படுத்தப்பட்ட ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC) மற்றும் மிகவும் இயற்கையான சவுண்ட் டிரான்ஸ்பேரன்ஸி மோட், உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

    கேஸ் மற்றும் இயர்பட்ஸ் இரண்டிற்கும் அதன் தனித்துவமான வெளிப்படையான வடிவமைப்பை எதுவும் பராமரிக்கும் என்று எதிர்பார்க்கப்படவில்லை. இயர்பட்களில் ஸ்வைப் வால்யூம் கண்ட்ரோல்களை சேர்க்கப்படும் என்று தெரிகிறது.

    புதிய இயர் (3) மாடல் செப்டம்பர் பிற்பகுதியில் அல்லது அக்டோபர் 2025 தொடக்கத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் வாரங்களில் இந்த மாடல் குறித்த கூடுதல் விவரங்கள் வெளியாகலாம்.

    • தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
    • சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    • 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது.
    • 11, 12 ஆம் வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு தொடர்ந்து நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

    6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடைபெறும் நிலையில் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்வு நடைபெறும் பள்ளுகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளி பள்ளி தலைமை ஆசிரியர் முடிவெடுக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    11, 12 ஆம் வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு தொடர்ந்து நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • அமெரிக்காவும், இந்தியாவும் நட்புறவு நாடுகள்.
    • இரு நாட்டு மக்களுக்கும் பிரகாசமான, வளமான எதிர்காலத்தைப் பெற நாங்கள் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம்.

    புதுடெல்லி:

    இந்தியா- அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை தொடர்வதாகவும், எனது மிகவும் நல்ல நண்பர் பிரதமர் மோடியுடன் வரும் வாரங்களில் பேச ஆவலுடன் காத்திருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து இருந்தார்.

    இதனை தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டிரம்புடன் பேச ஆவலாக உள்ளதாக பிரதமர் மோடி எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் மோடி கூறுகையில், அமெரிக்காவும், இந்தியாவும் நட்புறவு நாடுகள். எங்கள் வர்த்தக பேச்சுவார்த்தைகள் என்பது இந்தியா-அமெரிக்க கூட்டாண்மையின் வரம்பற்ற திறனைத் திறக்க வழி வகுக்கும் என நான் நம்புகிறேன். இந்த விவாதங்களை விரைவில் முடிக்க தங்களது குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.

    அதிபர் டிரம்புடன் பேசவும் நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். நமது இரு நாட்டு மக்களுக்கும் பிரகாசமான, வளமான எதிர்காலத்தைப் பெற நாங்கள் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம் என்று கூறியுள்ளார். 



    • இந்தியாவுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை அதிபர் டிரம்ப் நிர்வாகம் முன்வைத்தது.
    • இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை தொடர்கிறது.

    இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்ததை அடுத்து இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது. மேலும் இந்தியாவுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை அதிபர் டிரம்ப் நிர்வாகம் முன்வைத்தது. அமெரிக்காவின் வரி விதிப்பால் இந்தியாவில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில், இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை தொடர்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக டிரம்ப் ட்ரூத் சமூக வலைத்தளத்தில், 'எனது மிகவும் நல்ல நண்பர் பிரதமர் மோடியுடன் வரும் வாரங்களில் பேச ஆவலுடன் காத்திருக்கிறேன். நமது இரு பெரிய நாடுகளுக்கும் வெற்றிகரமான முடிவுக்கு வருவதில் எந்த சிரமமும் இருக்காது என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று கூறியுள்ளார். 



    • பெண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் நிகாத் ஜரீன், ஜப்பானின் யுனா நிஷினகாவை எதிர்கொண்டார்.
    • நிகாத் ஜரீன் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறினார்.

    லிவர்பூல்:

    உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவில் 2 முறை உலக சாம்பியனான இந்தியாவின் நிகாத் ஜரீன், ஜப்பானின் யுனா நிஷினகாவை எதிர்கொண்டார். இருவரும் ஆவேசமாக மோதிக் கொண்ட போதிலும் முதல் ரவுண்டில் நிஷினகாவின் கையே சற்று ஓங்கியது.

    அடுத்த ரவுண்டில் நிகாத் ஜரீன் எதிராளிக்கு சில குத்துகளை விட்டு அதை புள்ளியாக மாற்றினார். கடைசி ரவுண்டில் ஜரீனின் தாக்குதலில் இருந்து தப்பிக்கும் விதமாக நிஷினகா அடிக்கடி அவரை கட்டிப்பிடித்ததால் போட்டி நடுவரின் எச்சரிக்கைக்குள்ளானதுடன், ஒரு புள்ளியை அபராதமாக இழந்தார். இது ஜரீனுக்கு சாதகமாக அமைந்தது. முடிவில் நிகாத் ஜரீன் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் மீனாக்ஷி (48 கிலோ) 5-0 என்ற கணக்கில் சீனாவின் வாங் கிபிங்கை வீழ்த்தி கால்இறுதியை எட்டினார். முன்னதாக லக்ஷயா சாஹர் (80 கிலோ), சுமித் குண்டு (75 கிலோ), சச்சின் சிவாச் (60 கிலோ), நரேந்தர் பெர்வால் (90 கிலோவுக்கு மேல்) ஆகிய இந்திய வீரர்கள் தோற்று நடையை கட்டினர்.

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முன்வருவீர்கள். அலைபேசி வழியில் வரும் தகவல் ஆச்சரியப்பட வைக்கும்.

    ரிஷபம்

    விரயங்கள் கூடும் நாள். வீடுமாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும். அரைகுறையாக நின்ற பணியை தொடருவீர்கள். புதிய உத்தியோகத்தில் சேர எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

    மிதுனம்

    நன்மைகள் நடைபெறும் நாள். திட்டமிட்ட சில காரியங்களில் திடீர் மாற்றம் ஏற்படும். குடும்பத்தார்களின் குறைகளை தீர்க்க முன்வருவீர்கள். வியாபார விரோதம் விலகும்.

    கடகம்

    மங்கலத் தகவல் மனை தேடி வரும் நாள். வீட்டு பராமரிப்புச் செலவு கூடும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். பால்ய நண்பர்களின் சந்திப்பால் பரவசமடைவீர்கள்.

    சிம்மம்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். பிறரிடம் ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல் போகலாம். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்ல வேண்டாம். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

    கன்னி

    மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர். புதுமனைகட்டி குடியேறும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

    துலாம்

    நினைத்தது நிறைவேறும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தினர்களின் குறைகளைத் தீர்க்க முன்வருவீர்கள். பணவரவு திருப்தி தரும்.

    விருச்சிகம்

    புகழ் கூடும் நாள். செல்வந்தர்களின் சந்திப்பால் சிந்தை மகிழ்வீர்கள். தன்னம்பிக்கையோடும், தைரியத்தோடும் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரும்.

    தனுசு

    மனக்குழப்பம் அகலும் நாள். அன்பு நண்பர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவர். ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே வந்து சேரும். உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கலாம்.

    மகரம்

    பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும் நாள். ஆதாயம் தரும் வேலையொன்றில் அக்கறை காட்டுவீர்கள். இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறிகள் தோன்றும்.

    கும்பம்

    பயணத்தால் பலன் கிட்டும் நாள். பக்கத்திலுள்ளவர்கள் பக்கபலமாக இருப்பர். கல்யாண முயற்சி கைகூடும். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும்.

    மீனம்

    மனக்குழப்பம் ஏற்படும் நாள். நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்றுமாக இருக்கும். உடல்நலத்தில் கவனம் தேவை. விரயங்களை சமாளிக்க கைமாற்று வாங்கும் சூழ்நிலை ஏற்படும்.

    • இப்படம் அக்டோபர் 1-ந்தேதி வெளியாக உள்ளது.
    • நடிகர் பார்த்திபன், அறிவு என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.

    தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் 1-ந்தேதி வெளியாக உள்ளது.

    இதனால் கடந்த சில தினங்களாக 'இட்லி கடை' படத்தின் கதாப்பாத்திர அறிமுக போஸ்டர்கள் வெளியாகின. நேற்று 'இட்லி கடை' படத்தில் நடிகர் பார்த்திபன், அறிவு என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.

    இந்த நிலையில், தனுஷுன் 'இட்லி கடை' படத்தில் பணியாற்றியது குறித்து நடிகர் பார்த்திபன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    'Mischievous' பார்த்திபன்

    Missssschivous Mr தனுஷிடமிருந்து ஒரு பட்டம்!

    குறும்பு அரும்புவதே விரும்பும் போதும், or விரும்பப்படும் போதும்! இன்னமும் நான் ரசிகர்களால் விரும்பப்பட, படாத பாடுபடுகிறேன்.

    'இட்லி கடை'யில் நானொரு மினி இட்லியாக சுவைக்கப்பட்டால் மகிழ்வேன். Mr தனுஷுடன் பணியாற்றும் முதல் அனுபவம். கிடைத்த மிகக் குறுகிய அவகாசத்தில் முற்றிலும் ரசித்தேன் அவரை ஒரு முழுமையான கலைஞனாக. அது பற்றி 14-ல் நேருக்கு நேர் நேரும்! குழிக்குழியான பாத்திரத்தில் நிரப்பப்படும் மாவே இட்லி. ஆர்.அறிவு என்ற கௌரவப் பாத்திரத்தில் இட்டு நிரப்பப்பட்டிருக்கிறேன் நான். இந்த ஆர் அறிவை ரசிகர்கள் தங்கள் பேரரறிவை கொண்டு கமெண்ட்டில் கொண்டாடுவது மகிழ்ச்சி.

    இட்லி கடையின் கதைக்கு இணையாக இங்கிலீஷில் சொல்வதானால்….

    It tally with a tale of

    'Italy shop' by Danish

    இவ்வாறு பார்த்திபன் கூறியுள்ளார். 



    • சீனாவில் இருந்து கடத்திவரப்பட்ட 108 கிலோ தங்கக்கட்டிகளை இந்தோ-திபெத்திய எல்லை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • தங்கம் கடத்தல் தொடர்பாக உள்ளூரை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    புதுடெல்லி:

    கடந்த ஆண்டு ஜூலை மாதம், லடாக்கில் சீனாவில் இருந்து கடத்திவரப்பட்ட 108 கிலோ தங்கக்கட்டிகளை இந்தோ-திபெத்திய எல்லை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக உள்ளூரை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இதுதொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. அதில் கடந்த 2023 மற்றும் 2024-ம் ஆண்டுகளில் சீனாவில் இருந்து அசல் எல்லைக்கோடு வழியாக இந்தியாவுக்கு 1,064 கிலோ எடையுள்ள தங்கம் கடத்திவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதன் மதிப்பு ரூ.800 கோடி ஆகும். இதுதொடர்பாக 'காபிபோசா' சட்டத்தின்கீழ் வருவாய் புலனாய்வு இயக்குனரகம் 10 பேரை கைது செய்துள்ளது.

    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
    • மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீகோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆவணி-25 (புதன்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : திருதியை மாலை 6.44 மணி வரை பிறகு சதுர்த்தி

    நட்சத்திரம் : ரேவதி இரவு 7.42 மணி வரை பிறகு அசுவினி

    யோகம் : மரணயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று சங்கடஹர சதுர்த்தி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்

    இன்று சங்கடஹர சதுர்த்தி. பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர், திருநாரையூர் ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையார், திருவலஞ்சுழி ஸ்ரீ சுவேத விநாயகர், திருச்சி உச்சிப் பிள்ளையார் ஸ்ரீ மாணிக்க விநாயகர், மதுரை ஸ்ரீ முக்குறுணி பிள்ளையார், உப்பூர் ஸ்ரீ வெயிலுகந்த விநாயகர் கோவில்களில் ஹோமம், அபிஷேகம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.

    திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்மருக்குத் திருமஞ்சனம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீகோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சனம். விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலை அபிஷேகம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் திருமஞ்சனம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீபுளியங்குடி வள்ளியம்மை கோவில்களில் அலங்கார திருமஞ்சனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-லாபம்

    ரிஷபம்-ஆர்வம்

    மிதுனம்-வரவு

    கடகம்-உதவி

    சிம்மம்-உண்மை

    கன்னி-தாமதம்

    துலாம்- சிரமம்

    விருச்சிகம்-பெருமை

    தனுசு- நற்செயல்

    மகரம்-சிந்தனை

    கும்பம்-பாராட்டு

    மீனம்-நம்பிக்கை

    • இஸ்ரோ அடுத்த 3 ஆண்டுகளுக்குள் செயற்கைக்கோள் ஏவுதல்களை 3 மடங்காக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
    • ஆயுத மோதல்களில் விண்வெளித் துறையின் பங்கு, ஆபரேஷன் சிந்தூரின்போது கூர்மையாக கவனிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    டெல்லியில் அகில இந்திய மேலாண்மை சங்கத்தின் 52-வது தேசிய மேலாண்மை மாநாடு நடந்தது. அதில் கலந்து கொண்ட இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியதாவது:-

    காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் பாகிஸ்தானுக்குள் துல்லியமாக முப்படைகளின் மூலம் பதிலடி கொடுக்கப்பட்டது.

    அப்போது, தேசிய பாதுகாப்பு தேவைகளுக்காக பூமி கண்காணிப்பு மற்றும் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை பயன்படுத்தி, 400-க்கும் மேற்பட்ட இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைத்து செயற்கைக்கோள்களின் செயல்பாடுகள் மூலம் 24 மணி நேரமும் தரவுகளை வழங்கினர்.

    ஆயுத மோதல்களில் விண்வெளித் துறையின் பங்கு, ஆபரேஷன் சிந்தூரின்போது கூர்மையாக கவனிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையில் டிரோன்கள் மற்றும் சுற்றித்திரியும் வெடிமருந்துகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 'ஆகாஷ் தீர்' போன்ற வான் பாதுகாப்பு அமைப்புகளின் திறன்களையும் சோதிக்கப்பட்டன.

    இஸ்ரோ அடுத்த 3 ஆண்டுகளுக்குள் செயற்கைக்கோள் ஏவுதல்களை 3 மடங்காக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. கூடுதல் செலவுகள் இல்லாமல் மார்க்-3 ராக்கெட் சுமந்து செல்லும் திறன் 4 ஆயிரம் கிலோவில் இருந்து 5 ஆயிரத்து 100 கிலோவாக மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். அதேபோல், அடுத்த தலைமுறை ஏவுதளம், பிரதமரால் அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய ஏவுதளம் இந்தியாவின் விரிவடைந்து வரும் விண்வெளி லட்சியங்களை நிறைவேற்ற உதவிகரமாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×