search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coimbatore govt hospital"

    • கோவை அரசு ஆஸ்பத்திரியில் பச்சிளம் குழந்தையை தூக்கி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • ஆரோக்கியமேரியை அவரது தாயாரிடம் ஒப்படைத்து, இனி இவ்வாறு நடக்காமல் பார்த்து கொள்ளும்படி அறிவுரை கூறி போலீசார் அனுப்பி வைத்தனர்.

    கோவை:

    கோவை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பிரசவ வார்டு உள்ளது. இங்கு பிரசவத்திற்காக கோவை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

    கோவையை அடுத்த அன்னூரை சேர்ந்த பெண்ணிற்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோவை அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது. நேற்று மதியம் அந்த ஆண் குழந்தையை தொட்டிலில் வைத்து விட்டு அந்த பெண் வெளியே சென்றார்.

    அப்போது அங்கு வந்த பெண் ஒருவர் திடீரென்று அந்த பச்சிளம் ஆண் குழந்தையை தூக்கிக் கொண்டு வேகமாக வெளியே செல்ல முயன்றார். இதை பார்த்து சந்தேகம் அடைந்த ஆஸ்பத்திரி காவலாளிகள், அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

    அவர்களிடம் அந்த பெண், அந்த குழந்தை தன்னுடையது என கூறியுள்ளார். இதனிடையே வெளியே சென்ற குழந்தையின் தாய் திரும்பி வந்தார். அவர், தொட்டிலில் குழந்தை இல்லாததால் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார்.

    மேலும் அங்கிருந்த மருத்துவ பணியாளர்களிடம் தனது குழந்தையை காணவில்லை என்று கூறினார். இதை அறிந்த காவலாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் விரைந்து செயல்பட்டு தீவிரமாக தேடி குழந்தையை தூக்கி சென்ற அந்த பெண்ணை மடக்கி பிடித்தனர். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர். போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண் முன்னுக்குப்பின் முரணாக தகவலை தெரிவித்தார். சந்தேகம் அடைந்த போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரித்தனர். அதில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது.

    அந்த பெண்ணை சுற்றி போலீசார் மற்றும் பொதுமக்கள் நிற்பதை பார்த்து ஒரு மூதாட்டி ஓடி வந்தார். அவர் போலீசாரிடம் அந்த பெண் எனது மகள் எனவும் தாங்கள் கோவை உடையாம்பாளையத்தை சேர்ந்தவர்கள், எனது மகள் பெயர் ஆரோக்கியமேரி (வயது 32) என்றும், அவர் கடந்த 15 வருடமாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார்.

    மேலும் அவர் நேற்று ஆஸ்பத்திரியில் ஒரு தாய் தனது குழந்தைக்கு பால் கொடுத்து கொண்டு இருந்த போது அவரிடம் சென்று அந்த குழந்தை தன்னுடையது என கூறி அவரிடம் இருந்து குழந்தையை பிடுங்க முயற்சி செய்து உள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் ஆரோக்கியமேரி துரத்தி விட்டுள்ளனர்.

    அதன்பின்னர் தான் அவர் பிரசவ வார்டில் உள்ள குழந்தையை தூக்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஆரோக்கியமேரியை அவரது தாயாரிடம் ஒப்படைத்து, இனி இவ்வாறு நடக்காமல் பார்த்து கொள்ளும்படி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் பச்சிளம் குழந்தையை தூக்கி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற 5 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
    கோவை:

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கே. முத்துகவுண்டனூரை சேர்ந்தவர் சேகர். கூலித்தொழிலாளி. இவரது மனைவி மாலதி. இவர்களது மகள் மதுஸ்ரீ (வயது 5).

    இவர் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவரை அவரது பெற்றோர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை.

    நேற்று மாலை வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்த சிறுமியின் உடல் நிலை திடீரென மோசமானது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் சிறுமியை சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.

    அங்கு சிறுமியை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு மதுஸ்ரீ பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோவை அரசு ஆஸ்பத்திரியில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த ஆயுள் தண்டனை கைதி சிகிச்சை பலனின்றி உயிழந்தார்.
    கோவை:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள சானைபட்டியை சேர்ந்தவர் நாகப்பன் (வயது 84). இவர் கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாகப்பனுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது.

    இதற்காக அவரை ஜெயில் அதிகாரிகள் கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள சிறை கைதிகள் வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    2 வயது குழந்தைக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது தொடர்பாக 1 வாரத்துக்குள் விரிவான அறிக்கை தருமாறு கோவை அரசு ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு, சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். #CoimbatoreGovtHospital
    கோவை:

    திருச்சி மணப்பாறையை சேர்ந்த தம்பதியினர் திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

    இவர்களது 2 வயது மகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். குழந்தைக்கு ரத்தம் ஏற்றி சிகிச்சை அளித்தனர்.

    இந்நிலையில் குழந்தையை மீண்டும் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பரிசோதனையில் குழந்தைக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. கோவை அரசு ஆஸ்பத்திரியில் குழந்தைக்கு தவறுதலாக ஏற்றப்பட்ட ரத்தத்தால் தான் குழந்தைக்கு எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பெற்றோர் குற்றம் சாட்டினர்.

    இந்த குற்றச்சாட்டை அரசு ஆஸ்பத்திரி டீன் அசோகன் மறுத்துள்ளார்.

    சிறுமிக்கு வேறு எங்காவது சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கலாம், அப்போது தவறு நடந்திருக்கலாம் என அவர் கூறினார். இந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து 1 வாரத்துக்குள் விரிவான அறிக்கை தருமாறு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு நிர்வாகத்துக்கு, சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார்.

    அதன் பேரில் ஆஸ்பத்திரியில் ரத்த பரிசோதனை நிலைய அதிகாரிகள், நர்சுகள் உள்பட பலரிடமும் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். #CoimbatoreGovtHospital
    கோவை அரசு ஆஸ்பத்திரியில் ரத்தம் ஏற்றியதால் 2 வயது பெண் குழந்தைக்கு எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பெற்றோர் புகார் அளித்துள்ளனர். #HIVBlood #CoimbatoreGovtHospital
    கோவை:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடந்த 9 வருடமாக திருப்பூரில் தங்கி அங்குள்ள தறிப்பட்டறையில் வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின் அந்த வாலிபர் தனது மனைவியுடன் திருப்பூரில் வசித்து வருகிறார்.

    இந்த தம்பதிக்கு கடந்த 6.2.17 அன்று திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. இரு குழந்தைகளும் எடை குறைவாக இருந்ததால் 32 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.

    பின்னர் வீட்டில் வைத்து பராமரித்து வந்துள்ளனர். கடந்த 11.7.18 அன்று பெண் குழந்தைக்கு சளி மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது. உடனே குழந்தையை திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர்.

    குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஆபத்தாக உள்ளது என கூறி ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் இருதயத்தில் ஓட்டை இருப்பதாக கூறி உள்ளனர். மேலும் ரத்தம் ஏற்றி உள்ளனர்.

    தற்போது அக்குழந்தைக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பதாக கோவை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். இது குறித்து குழந்தையின் தந்தை கூறியதாவது-

    எனது பெண் குழந்தைக்கு இருதயத்தில் ஓட்டை இருப்பதாக கூறி கோவை அரசு ஆஸ்பத்திரியில் ரத்தம் ஏற்றினார்கள். அப்போது நான் மட்டும் தான் குழந்தையுடன் இருந்தேன். எனது மனைவி வெளியே சென்று இருந்தார்.

    அந்த சமயத்தில் ரத்தம் ஏற்றிய ஒரு டாக்டர் வெளியே சென்று விட்டார். அங்கு வந்த மற்றொரு டாக்டர் ரத்த பாட்டிலை எடுத்து விட்டார்.

    இது குறித்து நான் கேட்ட போது இது வயதானவர்களுக்கு உரிய ரத்தம். அதனை மாற்றி ஏற்றி விட்டனர் என கூறினார். குழந்தையை ஆஸ்பத்திரியில் அனுமதித்த 3 நாட்களில் டிஸ்சார்ஜ் செய்தனர்.

    குழந்தையின் இருதயத்தில் ஓட்டை இருப்பதாக கூறினீர்கள். ஆனால் 3 நாளில் டிஸ்சார்ஜ் செய்து விட்டீர்களே என நான் கேட்டேன். பின்னர் நாங்கள் ஒரு வாரம் புறநோயாளியாக குழந்தைக்கு சிகிச்சை பெற்றோம்.

    கடந்த 3 மாதத்துக்கு முன் குழந்தையின் காது, உடம்பில் கட்டி வந்தது. அம்மை நோய் தாக்கி இருக்கலாம் என கருதி மருந்து கொடுத்தோம். ஆனால் குணமாகவில்லை. இதனை தொடர்ந்து கடந்த மாதம் 6-ந் தேதி குழந்தையை கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தோம்.

    குழந்தையின் ரத்தத்தை பரிசோதனை செய்த டாக்டர்கள் எச்.ஐ.வி. தொற்று இருப்பதாக தெரிவித்தனர். எனவே எங்கள் 3 பேருக்கும் எச்.ஐ.வி. தொற்று இருக்கிறதா? என பரிசோதனை செய்தனர்.



    ஆனால் எங்களுக்கு தொற்று இல்லை என தெரிவித்தனர். ஆனால் அதற்கான சான்றிதழை கொடுக்கவில்லை. இதனால் சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் நாங்கள் 3 பேரும் தனியாக பரிசோதனை செய்தோம்.

    அதில் எங்களுக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்தது. எங்களுக்கு இல்லாதபோது குழந்தைக்கு மட்டும் இந்த தொற்று எப்படி ஏற்பட்டது?

    குழந்தை பிறந்த திருச்சி அரசு ஆஸ்பத்திரி தவிர மற்றபடி நாங்கள் கோவை அரசு ஆஸ்பத்திரியில் தான் சிகிச்சை அளித்துள்ளோம். குழந்தைக்கு அங்கன் வாடி மையத்தில் தடுப்பூசி மட்டும் தான் போட்டு உள்ளோம்.

    இது தொடர்பாக கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் கொடுக்க சென்ற போது புகாரை வாங்க மறுத்து விட்டனர். இதனால் மனித உரிமை அமைப்பு, மக்கள் கண்காணிப்பகத்தை நாடினேன்.

    குழந்தைக்கு எச்.ஐ.வி. பாதிப்பு எப்படி ஏற்பட்டது என்பது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். தவறு செய்த டாக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைக்கு உயர் ரக சிகிச்சை அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மக்கள் கண்காணிப்பக ஒருங்கிணைப்பாளர் ஆசீர் வாதம், நிக்கோலஸ், வக்கீல் சாரதி ஆகியோர் உடன் இருந்தனர்.

    இது குறித்து கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் அசோகன் கூறியதாவது-

    குழந்தைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் ரத்தம் ஏற்றப்பட்டது உண்மைதான். ரத்த சிகப்பணு மட்டுமே ஏற்றப்பட்டது. இதனால் எச்.ஐ.வி. பரவாது.

    குழந்தைக்கு ரத்தம் ஏற்றப்பட்ட ஆவணங்களை சரி பார்த்த போது எந்த வித தொற்றும் இல்லை என்பது தெரிய வந்தது.

    தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரி டாக்டர் தான் குழந்தையின் ரத்தத்தை பரிசோதனை செய்து எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பதை கண்டறிந்து பெற்றோரிடம் தெரிவித்து உள்ளார்.

    குழந்தைக்கு வேறு எங்காவது சிகிச்சை அளிக்கப்பட்டதா? என்பதை விசாரித்தால் தான் உண்மை தெரிய வரும்.

    இவ்வாறு அவர் கூறினார். #HIVBlood #CoimbatoreGovtHospital
    கோவை அரசு ஆஸ்பத்திரியில் இறந்த பெண்ணின் உடலை பூனை கடிக்கும் காட்சி சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #CoimbatoreGovtHospital
    கோவை:

    கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினசரி 7 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வெளிநோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    மேலும் 1600 மேற்பட்டோர் உள் நோயாளிகளாக தங்கி இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு ஆதரவற்ற நிலையில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை வெளியே தூக்கி வீசும் சம்பவமும் அடிக்கடி நடந்து வருகிறது.

    இந்தநிலையில் கடந்த 16-ந்தேதி 45 வயது மதிக்கதக்க பெண் ஆதரவற்ற நிலையில் உடல் நிலை பாதிப்பட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

    அவரை டாக்டர்கள் வார்டு எண் 85 பெண்கள் பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு 9 மணியளவில் அந்த பெண் பரிதாபமாக இறந்தார்.

    அந்த பெண்ணின் உறவினர்கள் யாரும் வராததாலும் பெயர், ஊர் போன்ற தகவல்கள் தெரியாததால் அந்த பெண்ணின் உடலை பிணவறைக்கு கொண்டு செல்லாமல் வார்டிலேயே வைத்தனர்.

    அப்போது அங்கு சுற்றித்திரிந்த பூனை ஒன்று தரையில் வைக்கப்பட்டு இருந்த பெண்ணின் காலை கடித்து கொண்டு இருந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற நோயாளிகளின் உறவினர்கள் பணியில் இருந்த டாக்டர்கள் மற்றும் ஊழியர்களிடம் கூறினர். அவர்கள் இதனை கண்டு கொள்ளவில்லை.


    இதனையடுத்து அவர்கள் பெண்ணின் உடலை பூனை கடிக்கும் காட்சியை தங்களது செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். மேலும் அங்கு இருந்த டாக்டர்கள் மற்றும் ஊழியர்களிடம் பெண்ணின் உடலை உடனடியாக பிணவறைக்கு கெண்டு செல்லுமாறு தகராறு செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மருத்துவ ஊழியர்கள் இறந்த பெண்ணின் உடலை அவசர அவசரமாக பிணவறைக்கு கொண்டு சென்றனர்.

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் இறந்த பெண்ணின் உடலை பூனை கடிக்கும் காட்சி சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #CoimbatoreGovtHospital
    கோவையில் பன்றி காய்ச்சலால் ஒரே நாளில் 2 பெண்கள் பலியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #SwineFlu
    கோவை:

    கோவை,திருப்பூர் மாவட்டங்களில் பன்றி, டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கு கடந்த 2 மாதத்தில் 35-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். மேலும் காய்ச்சல் பாதிப்புடன் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 300-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கோவை சூலூர் அருகே உள்ள ராவுத்தூரை சேர்ந்தவர் மணிகண்டன். டிரைவர். இவரது மனைவி புஷ்பா (வயது 38). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    புஷ்பா கடந்த 1 வாரமாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக தினசரி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவருக்கு மாத்திரையை மட்டும் கொடுத்து அனுப்பி உள்ளனர்.

    நேற்று காலை வீட்டில் இருந்த புஷ்பாவின் உடலை நிலை மோசமானது. இதனையடுத்து அவரை உறவினர்கள் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு இருந்து பீளமேட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். டாக்டர்கள் புஷ்பாவின் ரத்தத்தை பரிசோதனை செய்த போது அவருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

    பின்னர் டாக்டர்கள் புஷ்பாவை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    பீளமேடு அருகே உள்ள காந்திமாநகரை சேர்ந்தவர் சிவசக்தி. இவரது மனைவி காயத்திரி (வயது 28). இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

    அங்கு காயத்திரியின் ரத்தத்தை டாக்டர்கள் சோதனை செய்த போது அவருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை தனி வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை.

    மேலும் அவரது உடல் நிலை மிகவும் மோசமானது. இதனையடுத்து உறவினர்கள் காயத்திரியை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சென்ற சில மணி நேரத்தில் காயத்திரி சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

    பன்றி காய்ச்சலால் ஒரே நாளில் 2 பெண்கள் பலியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு 9 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 4 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 84 பேரும் என மொத்தம் 97 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.   #SwineFlu
    கோவை அரசு ஆஸ்பத்திரியில் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் எலி காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. #RatFever
    கோவை:

    கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை தொடர்ந்து அங்கு தற்போது எலி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. எலி காய்ச்சலுக்கு இதுவரை 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    எனவே கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள நீலகிரி, கோவை மாவட்டங்களில் எலி காய்ச்சல் பரவுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. எலி காய்ச்சல் பரவாமல் தடுக்க சுகாதார துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    கேரள மாநிலத்தில் இருந்து எலி காய்ச்சல் பாதிப்புடன் கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு யாராவது வருகிறார்களா? என்பதை கண்காணிக்க மாவட்ட எல்லைகளில் சுகாதாரதுறை சார்பில் முகாம் அமைந்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கொண்டாம்பட்டியை சேர்ந்த சதீஸ்மோகன் (வயது 29) என்பவர் காய்ச்சல் பாதிப்புடன் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவரை டாக்டர்கள் சோதனை செய்த போது அவருக்கும் எலி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

    இதனையடுத்து சதீஸ்மோகன் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை சதீஸ்மோகன் பரிதாபமாக இறந்தார்.

    ஏற்கனவே திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்த காந்திமதி சிகிச்சை பலன் அளிக்காமல் எலி காய்ச்சலுக்கு பலியானார்.

    எனவே கோவை அரசு ஆஸ்பத்திரியில் எலி காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கோழிப்பாலத்தை சேர்ந்த கார்த்திக் (வயது 29). சுமை தூக்கும் தொழிலாளியான இவர் வேலை சம்பந்தமாக அடிக்கடி கேரள மாநிலத்துக்கு சென்று வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கார்த்திக் காய்ச்சல் பாதிப்புடன் அவிதிப்பட்டு வந்தார். இதனையடுத்து அவர் கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில சிகிச்சைக்காக சேர்ந்தார்.

    இங்கு கார்த்திக்கை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது எலி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. பின்னர் கார்த்திக்கை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இதே போல கடந்த 2 நாட்களாக எலி காய்ச்சல் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த வால்பாறையை சேர்ந்த பொன்னையா குணமடைந்து வீட்டுக்கு திரும்பினார். மேலும் டெங்கு, வைரஸ் காய்ச்சலுக்கு 22 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். #RatFever
    ×