search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 year old girl"

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் ரத்தம் ஏற்றியதால் 2 வயது பெண் குழந்தைக்கு எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பெற்றோர் புகார் அளித்துள்ளனர். #HIVBlood #CoimbatoreGovtHospital
    கோவை:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடந்த 9 வருடமாக திருப்பூரில் தங்கி அங்குள்ள தறிப்பட்டறையில் வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின் அந்த வாலிபர் தனது மனைவியுடன் திருப்பூரில் வசித்து வருகிறார்.

    இந்த தம்பதிக்கு கடந்த 6.2.17 அன்று திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. இரு குழந்தைகளும் எடை குறைவாக இருந்ததால் 32 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.

    பின்னர் வீட்டில் வைத்து பராமரித்து வந்துள்ளனர். கடந்த 11.7.18 அன்று பெண் குழந்தைக்கு சளி மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது. உடனே குழந்தையை திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர்.

    குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஆபத்தாக உள்ளது என கூறி ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் இருதயத்தில் ஓட்டை இருப்பதாக கூறி உள்ளனர். மேலும் ரத்தம் ஏற்றி உள்ளனர்.

    தற்போது அக்குழந்தைக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பதாக கோவை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். இது குறித்து குழந்தையின் தந்தை கூறியதாவது-

    எனது பெண் குழந்தைக்கு இருதயத்தில் ஓட்டை இருப்பதாக கூறி கோவை அரசு ஆஸ்பத்திரியில் ரத்தம் ஏற்றினார்கள். அப்போது நான் மட்டும் தான் குழந்தையுடன் இருந்தேன். எனது மனைவி வெளியே சென்று இருந்தார்.

    அந்த சமயத்தில் ரத்தம் ஏற்றிய ஒரு டாக்டர் வெளியே சென்று விட்டார். அங்கு வந்த மற்றொரு டாக்டர் ரத்த பாட்டிலை எடுத்து விட்டார்.

    இது குறித்து நான் கேட்ட போது இது வயதானவர்களுக்கு உரிய ரத்தம். அதனை மாற்றி ஏற்றி விட்டனர் என கூறினார். குழந்தையை ஆஸ்பத்திரியில் அனுமதித்த 3 நாட்களில் டிஸ்சார்ஜ் செய்தனர்.

    குழந்தையின் இருதயத்தில் ஓட்டை இருப்பதாக கூறினீர்கள். ஆனால் 3 நாளில் டிஸ்சார்ஜ் செய்து விட்டீர்களே என நான் கேட்டேன். பின்னர் நாங்கள் ஒரு வாரம் புறநோயாளியாக குழந்தைக்கு சிகிச்சை பெற்றோம்.

    கடந்த 3 மாதத்துக்கு முன் குழந்தையின் காது, உடம்பில் கட்டி வந்தது. அம்மை நோய் தாக்கி இருக்கலாம் என கருதி மருந்து கொடுத்தோம். ஆனால் குணமாகவில்லை. இதனை தொடர்ந்து கடந்த மாதம் 6-ந் தேதி குழந்தையை கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தோம்.

    குழந்தையின் ரத்தத்தை பரிசோதனை செய்த டாக்டர்கள் எச்.ஐ.வி. தொற்று இருப்பதாக தெரிவித்தனர். எனவே எங்கள் 3 பேருக்கும் எச்.ஐ.வி. தொற்று இருக்கிறதா? என பரிசோதனை செய்தனர்.



    ஆனால் எங்களுக்கு தொற்று இல்லை என தெரிவித்தனர். ஆனால் அதற்கான சான்றிதழை கொடுக்கவில்லை. இதனால் சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் நாங்கள் 3 பேரும் தனியாக பரிசோதனை செய்தோம்.

    அதில் எங்களுக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்தது. எங்களுக்கு இல்லாதபோது குழந்தைக்கு மட்டும் இந்த தொற்று எப்படி ஏற்பட்டது?

    குழந்தை பிறந்த திருச்சி அரசு ஆஸ்பத்திரி தவிர மற்றபடி நாங்கள் கோவை அரசு ஆஸ்பத்திரியில் தான் சிகிச்சை அளித்துள்ளோம். குழந்தைக்கு அங்கன் வாடி மையத்தில் தடுப்பூசி மட்டும் தான் போட்டு உள்ளோம்.

    இது தொடர்பாக கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் கொடுக்க சென்ற போது புகாரை வாங்க மறுத்து விட்டனர். இதனால் மனித உரிமை அமைப்பு, மக்கள் கண்காணிப்பகத்தை நாடினேன்.

    குழந்தைக்கு எச்.ஐ.வி. பாதிப்பு எப்படி ஏற்பட்டது என்பது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். தவறு செய்த டாக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைக்கு உயர் ரக சிகிச்சை அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மக்கள் கண்காணிப்பக ஒருங்கிணைப்பாளர் ஆசீர் வாதம், நிக்கோலஸ், வக்கீல் சாரதி ஆகியோர் உடன் இருந்தனர்.

    இது குறித்து கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் அசோகன் கூறியதாவது-

    குழந்தைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் ரத்தம் ஏற்றப்பட்டது உண்மைதான். ரத்த சிகப்பணு மட்டுமே ஏற்றப்பட்டது. இதனால் எச்.ஐ.வி. பரவாது.

    குழந்தைக்கு ரத்தம் ஏற்றப்பட்ட ஆவணங்களை சரி பார்த்த போது எந்த வித தொற்றும் இல்லை என்பது தெரிய வந்தது.

    தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரி டாக்டர் தான் குழந்தையின் ரத்தத்தை பரிசோதனை செய்து எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பதை கண்டறிந்து பெற்றோரிடம் தெரிவித்து உள்ளார்.

    குழந்தைக்கு வேறு எங்காவது சிகிச்சை அளிக்கப்பட்டதா? என்பதை விசாரித்தால் தான் உண்மை தெரிய வரும்.

    இவ்வாறு அவர் கூறினார். #HIVBlood #CoimbatoreGovtHospital
    ×