என் மலர்
தலைப்புச்செய்திகள்
- ஒவ்வொருவரும் ஒவ்வொரு கலரில் பஸ் எடுத்து செல்கின்றனர்.
- ஒருவர் பச்சை கலர் பஸ்சிலும், ஒருவர் மஞ்சள் கலர் பஸ்சிலும் செல்கின்றனர்.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் மாநிலத்தில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களின் வங்கி கடன் இணைப்பு மற்றும் அடையாள அட்டைகள் வழங்கும் விழா சேலம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், எம்.பி.க்கள் டி.எம்.செல்வகணபதி, பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் தலைமை செயலாளர் ககன்தீப் சிங் பேடி வரவேற்றார்.
விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3,500 கோடி வங்கிக் கடன் இணைப்புகளையும், மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளையும் வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
நாம் தொலைக்காட்சிகளை பார்க்கிறோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கலரில் பஸ் எடுத்து செல்கின்றனர். ஒருவர் பச்சை கலர் பஸ்சிலும், ஒருவர் மஞ்சள் கலர் பஸ்சிலும் செல்கின்றனர். நான் கூறுகிறேன், கடைசியாக எல்லாத்தையும் 'ஓவர்டேக்' செய்து வெற்றி பெறுவது பிங்க் கலர் பஸ்தான். இது மகளிர்களான நீங்கள் பயன்படுத்தும் முதலமைச்சரின் அந்த 'பிங்க் கலர்' பஸ் தான் மற்ற எல்லா பஸ்களையும் ஓரம் கட்டிவிட்டு வெற்றி பெறும் என்றார்.
- தந்தை, மகனுக்கு இடையே ஏற்பட்ட கருத்து மோதலால் இரு அணிகளாக சென்று இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
- தைலாபுரம் தோட்டம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திண்டிவனம்:
வன்னியர்களுக்காக தொடங்கப்பட்ட பா.ம.க.வில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 தியாகிகளுக்கு அவரது நினைவிடங்களில் ஆண்டுதோறும் செப்டம்பர் 17-ந் தேதி டாக்டர் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் ஒன்றாக சேர்ந்து அஞ்சலி செலுத்துவது வழக்கம்.
தற்போது தந்தை, மகனுக்கு இடையே ஏற்பட்ட கருத்து மோதலால் இரு அணிகளாக சென்று இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
இதன் ஒரு பகுதியாக தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் தலைவர் டாக்டர் ராமதாஸ் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 தியாகிகளுக்கு அங்குள்ள அரசியல் பயிலரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள 21 பேரின் உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.
முன்னதாக பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு தைலாபுரம் தோட்டம் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையொட்டி தைலாபுரம் தோட்டம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே. மணி, ராமதாஸ் மூத்த மகள் ஸ்ரீகாந்தி, பேராசிரியர் தீரன், பு.தா அருள்மொழி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.
அதனைத் தொடர்ந்து சித்தணி, பாப்பம்பட்டு, பனையபுரம் , கோலியனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவு தூண்களில் டாக்டர் ராமதாஸ் அஞ்சலி செலுத்துகிறார்.
- விதிகளை, கடந்த 2-ந்தேதி, ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர்கள் நலத்துறை அரசிதழில் வெளியிட்டது.
- பணியாற்றிய ஆண்டுகளை விகிதாச்சார அடிப்படையில் கணக்கிட்டு, உறுதியளிக்கப்பட்ட ஊதியம் சந்தாதாரருக்கு வழங்கப்படும்.
புதுடெல்லி:
25 ஆண்டுகள் பணி முடித்த மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டுமே ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின்கீழ் (யு.பி.எஸ்.), முழுமையான உறுதியளிக்கப்பட்ட ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, தேசிய ஓய்வூதிய முறையின்கீழ் (என்.பி.எஸ்.), ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை தேர்வு செய்யும் மத்திய அரசு ஊழியர்களுக்கான சலுகைகள் தொடர்பான விஷயங்களை ஒழுங்குபடுத்துவதற்காக சமீபத்தில் 'மத்திய சிவில் சர்வீசஸ் (தேசிய ஓய்வூதிய முறையின்கீழ் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துதல்) விதிகளை மத்திய அரசு கொண்டு வந்தது. அந்த விதிகளை, கடந்த 2-ந்தேதி, ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர்கள் நலத்துறை அரசிதழில் வெளியிட்டது.
அந்த விதியின்படி, 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியர்கள், விகிதாச்சார அடிப்படையில் உறுதியளிக்கப்பட்ட ஊதியம் பெற தகுதி உடையவர்கள் என்று மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த விதிகள், 20 ஆண்டுகள் பணிக்கு பிறகு விருப்ப ஓய்வுபெற ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்ட சந்தாதாரர்களுக்கு வாய்ப்பு அளிக்கிறது.
பணியாற்றிய ஆண்டுகளை விகிதாச்சார அடிப்படையில் கணக்கிட்டு, உறுதியளிக்கப்பட்ட ஊதியம் சந்தாதாரருக்கு வழங்கப்படும். அவர் ஓய்வு பெறும் நாளில் இருந்து இத்தொகை வழங்கப்படும்.
தனிப்பட்ட தொகுப்பில் 60 சதவீதத்தை இறுதியாக திரும்பப்பெறுதல், ஒவ்வொரு 6 மாத பணிக்கும் அகவிலைப்படி, ஓய்வு பணிக்கொடை, விடுப்பை பணமாக்குதல், மத்திய அரசு ஊழியர்கள் குழு காப்பீட்டு திட்டம் போன்ற இதர சலுகைகளையும் ஓய்வு பெறும்போது பெறலாம்.
ஒருவேளை, விருப்ப ஓய்வு பெற்றுவிட்டு, உறுதியளிக்கப்பட்ட ஊதியம் பெறுவதற்கு முன்பே சந்தாதாரர் இறந்து விட்டால், சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்ட அவரது கணவர்/மனைவிக்கு குடும்ப ஊதியம் வழங்கப்படும். இத்தகவல்களை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தார்.
- பக்தர்களை பார்த்து புன்னகையுடன் கையசைத்தவாறு அங்கிருந்து சென்றார்.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா, நேற்று மாலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தார்.
அவர் கோவிலுக்குள் சென்று மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள், சத்ரு சம்ஹார மூர்த்தி ஆகிய தெய்வங்களை வணங்கி சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர் வெளியே வந்த அவர் பேட்டரி காரில் ஏறி அங்கிருந்து பக்தர்களை பார்த்து புன்னகையுடன் கையசைத்தவாறு அங்கிருந்து சென்றார்.
- 5 இடங்களை அடையாளம் காணப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு அந்த அறிக்கை டிட்கோவுக்கு சமர்பிக்கப்பட்டது.
- மாஸ்டர் பிளான் தயாரிக்க டிட்கோ நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது.
பொதுமக்களின் அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்திடும் வகையில் ஒருங்கிணைந்த புதிய நகரங்கள் உருவாக்கப்படும் என்று தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, அனைத்து வசதிகளையும் உள்ளடக்கி 2000 ஏக்கரில் சர்வதேச நகரம் உருவாக்க காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் 5 இடங்களை அடையாளம் காணப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு அந்த அறிக்கை டிட்கோவுக்கு சமர்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 2,000 ஏக்கர் பரப்பளவில் புதிய சர்வதேச நகரம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான மாஸ்டர் பிளான் தயாரிக்க டிட்கோ நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது.
- பிரதமர் மோடிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- நமது அன்பான தேசத்தை வழிநடத்தும் நித்திய பலம் கிடைக்க வாழ்த்துகிறேன்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மிகவும் மரியாதைக்குரிய பிரதமர் நரேந்திர மோடி ஜி, உங்கள் பிறந்தநாளில் மனமார்ந்த வாழ்த்துகள். உங்களுக்கு நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், மன அமைதி மற்றும் நமது அன்பான தேசத்தை வழிநடத்தும் நித்திய பலம் கிடைக்க வாழ்த்துகிறேன். ஜெய் ஹிந்த் என்று கூறியுள்ளார்.
- வெள்ளி விலையும் குறைந்துள்ளது.
- பார் வெள்ளி ஒரு லட்சத்து 42 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.
சென்னை:
சென்னையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
கடந்த வாரம் முழுவதும் உயர்ந்த தங்கம் விலை வார தொடக்க நாளான திங்கட்கிழமை சற்று குறைந்தது. இதனை தொடர்ந்து நேற்று சவரனுக்கு 580 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.82,240-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,270-க்கும் சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ. 82,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு இரண்டு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 142 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 42 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
16-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.82,240
15-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.81,680
14-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.81,760
13-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.81,760
12-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 81,920
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
16-09-2025- ஒரு கிராம் ரூ.144
15-09-2025- ஒரு கிராம் ரூ.143
14-09-2025- ஒரு கிராம் ரூ.143
13-09-2025- ஒரு கிராம் ரூ.143
12-09-2025- ஒரு கிராம் ரூ.142
- மோடி இன்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
- உங்கள் அர்ப்பணிப்பு இந்தியாவை பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி தொடர்ந்து வழிநடத்துகிறது.
பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இசையமைப்பாளரும் மாநிலங்களவை எம்.பி.யுமான இளையராஜாவும் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
"நமது மதிப்பிற்குரிய பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள் எழுச்சியூட்டும் தலைமைத்துவமும் அர்ப்பணிப்பும் இந்தியாவை பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி தொடர்ந்து வழிநடத்துகிறது. வலுவான மற்றும் சிறந்த இந்தியாவை உருவாக்குவதற்கான உங்கள் பயணத்தில் உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் அதிக வெற்றிகளைப் பெற வாழ்த்துகிறேன்"
என்று தெரிவித்துள்ளார்.
- இந்தியாவில் இந்துக்கள் - இஸ்லாமியர்கள் என்று பேசிதான் அதிகாரத்தில் தொடர்கின்றனர்.
- அவர்கள் ஆட்சியில் இருக்கும் வரை இது தொடரும்.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்ற கடும் எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தானுடன் விளையாடி இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது.
டாசின்போது இரு அணி கேப்டன்களும் கை கொடுத்துக் கொள்ளவில்லை. போட்டி முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் கை குலுக்கிக் கொள்வது வழக்கம். அந்த நிகழ்வும் நடைபெறவில்லை. இந்திய வீரர்கள் கை குலுக்க மறுத்து விட்டனர். கை குலுக்காமல் சென்றதால் பாகிஸ்தான் அணி கடும் அதிருப்தி அடைந்தது.
இந்த விவகாரம் குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி, ராகுல்காந்தியை புகழ்ந்து பேசினார்.
நிகழ்ச்சியில் பேசிய அப்ரிடி, "இந்தியாவில் இந்துக்கள் - இஸ்லாமியர்கள் என்று பேசிதான் அதிகாரத்தில் தொடர்கின்றனர். இது தவறான போக்கு. அவர்கள் ஆட்சியில் இருக்கும் வரை இது தொடரும். ஆனால், இந்தியாவில் சில நல்லவர்கள் உள்ளனர். உதாரணமாக, ராகுல் காந்தி நல்ல மனம் கொண்டவர். அவர் பேச்சுவார்த்தையில் நம்பிக்கை உள்ளவர். எல்லோரையும் சேர்த்துக் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைக்கிறார்" என்று தெரிவித்தார்.
பாஜக ஆட்சியை விமர்சித்த அப்ரிடி, ராகுல் காந்தியை பாராட்டியது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது.
இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, "ராகுல் பாகிஸ்தானின் செல்லப்பிள்ளை. அப்ரிடியும் பாகிஸ்தான் மக்களும் ராகுலைத் தங்கள் தலைவராக்க முடியும்" என்று விமர்சித்தார்.
- உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் மேகங்கள் திரண்டு மழை பெய்தது.
- சிறிய கட்டிடங்கள் பல மண்ணோடு புதைந்தன.
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் இந்தியாவின் வட மாநிலங்களில் மேக வெடிப்பால் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் திடீரென கொட்டும் அதி கனமழையால் நிலச்சரிவு, வெள்ளம் ஏற்பட்டு கடுமையான பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இன்று அதிகாலை உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் மேகங்கள் திரண்டு மழை பெய்தது. அப்போது திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டு சஹஸ்த்ரதாராவில் மிக கனமழை கொட்டியது.
இதனால் சாலைகளில் கடும் வெள்ளம் ஓடியது. அப்போது சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. அங்குள்ள கடைகளில் வெள்ளம் புகுந்து அடித்துச் செல்லப்பட்டன. சிறிய கட்டிடங்கள் பல மண்ணோடு புதைந்தன.
டேராடூன் நகரையே புரட்டிப்போட்ட மேகவெடிப்பில் சிக்கி குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், காணாமல் போன 16 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு ஏப்ரல் முதல் உத்தரகாண்டில் ஏற்பட்ட இயற்கை பேரழிவுகளால் இதுவரை 85 பேர் உயிரிழந்துள்ளனர். 128 பேர் காயமடைந்துள்ளனர். 94 பேர் காணாமல் போயுள்ளனர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு ரூ.1200 கோடி நிவாரணத் தொகையை அளித்துள்ளது. வெள்ள சேதத்தினை பார்வையிட்ட அமைச்சர்கள் குழுவின் பரிந்துரையின் பேரில் மேலும் நிதி ஒதுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இயற்கை பேரிடர்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடும் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
மழை தொடர்ந்து வரும் நிலையில் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், மழை நின்ற பிறகே உண்மையான பாதிப்புகள் கணக்கெடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- அயராத அர்ப்பணிப்பு மற்றும் தேசத்திற்கான உறுதிபாடு தொடர்ந்து மில்லியன் கணக்கானவர்களுக்கு ஊக்கமளிக்கிறது.
- நமது மகத்தான தேசத்தை வழிநடத்த தொடர்ந்து பலம் கிடைக்க வாழ்த்துகிறேன்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
நமது மாண்புமிகு பிரதமருக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் தொலைநோக்கு பார்வையுடைய தலைமை பண்பு, அயராத அர்ப்பணிப்பு மற்றும் தேசத்திற்கான உறுதிபாடு தொடர்ந்து மில்லியன் கணக்கானவர்களுக்கு ஊக்கமளிக்கிறது.
உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள், மற்றும் நமது மகத்தான தேசத்தை வழிநடத்த தொடர்ந்து பலம் கிடைக்க வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.
- பா.ம.க. நினைத்திருந்தால் போராட்டங்களை நடத்தி, வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை எப்போதோ வென்றெடுத்திருக்கலாம்.
- திமுக அரசு இட ஒதுக்கீட்டை வழங்கும் என்று நம்பி தான் ஏமாந்தோம்.
சென்னை :
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க உச்ச நீதிமன்றம் ஆணையிட்டு இன்றுடன் 1267 நாள்களாகும் நிலையில், வன்னியர்களுக்கு சமூகநீதி வழங்க திமுக அரசு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. தமிழகத்தின் பெரும்பான்மை சமூகமான வன்னியர்கள் வாழவே கூடாது; முன்னேறவே கூடாது என்று வன்மம் கொண்டு திமுக அரசு செயல்படுவது கண்டிக்கத்தக்கது.
வன்னியர்களுக்கு இன்று வரை முழுமையான சமூகநீதி கிடைக்காததற்கான காரணம் திமுக அரசு தான். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி 1980-ஆம் ஆண்டு தொடங்கி 1989-ஆம் ஆண்டு வரை நூற்றுக்கணக்கான அறப் போராட்டங்களை மருத்துவர் அய்யா அவர்கள் முன்னெடுத்தார். அந்தப் போராட்டங்களின் ஒரு கட்டமாக 1987-ஆம் ஆண்டு இதே நாளில் ஒரு வார தொடர் சாலைமறியல் போராட்டத்தை மருத்துவர் அய்யா அவர்கள் தொடங்கினார். இந்தப் போராட்டத்திற்கு மக்கள் மத்தியில் வரலாறு காணாத ஆதரவு பெருகியதை தாங்கிக் கொள்ள முடியாத அன்றைய அரசு காவல்துறையை ஏவி நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டாந்தடி தாக்குதலில் அப்பாவி வன்னியர்கள் 21 பேர் கொல்லப்பட்டனர். சமூகத்தின் முன்னேற்றத்திற்காக தங்களின் இன்னுயிரையே ஈந்த அவர்களின் தியாகம் மிகப்பெரியது. அவர்களை நான் வணங்குகிறேன்.
அதன்பிறகும் நீடித்த போராட்டத்தின் ஓர் அங்கமாக 1989-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தல் புறக்கணிப்பின் காரணமாகவே 13 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. அதற்காக நன்றிக்கடன் செலுத்த வேண்டிய திமுக, ஆட்சிக்கு வந்த இரு வாரங்களிலேயே, தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ஆட்சியின் போது 12.12.1988ஆம் நாள் ஆளுனரால் பிறப்பிக்கப்பட்டிருந்த அரசாணையை ரத்து செய்தது. அதைத் தொடர்ந்து வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து மருத்துவர் அய்யா அவர்களை அழைத்துப் பேசிய அன்றைய முதலமைச்சர் கலைஞர், வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்க ஒப்புக்கொண்டார். அது மட்டும் செயல்வடிவம் பெற்றிருந்தால், கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வன்னிய மக்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு பிரதிநிதித்துவம் பெற்றிருப்பார்கள். ஆனால், வேறு சிலரின் ஆலோசனைப்படி, இரவோடு இரவாக தமது முடிவை மாற்றிக் கொண்ட அன்றைய முதலமைச்சர் கலைஞர், வன்னியர்களுடன் மேலும் 107 சாதிகளைச் சேர்ந்து மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற புதிய பிரிவை உருவாக்கி அதற்கு 20% இட ஒதுக்கீடு வழங்கினார். அன்றைக்கு அழுக வைத்துக் கொடுக்கப்பட்ட கனி தான் இன்று வரை வன்னிய மக்களுக்கு முழுமையான சமூகநீதி கிடைக்காததற்கு காரணமாகும்.
இட ஒதுக்கீடு பெற்று 32 ஆண்டுகளாகியும் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வன்னிய மக்களுக்கு முன்னேற்றம் கிடைக்காததால் தான் 2020-21ஆம் ஆண்டில் மீண்டும் போராட்டங்களை முன்னெடுத்து, அதிமுக ஆட்சியில் 10.50% உள் இட ஒதுக்கீடு பெறப்பட்டது. ஆனால், சமூகநீதி பகைவர்கள் சிலர் அதை எதிர்த்து தொடர்ந்த வழக்கால் வன்னியர் ஒட ஒதுக்கீடு செல்லாமல் போனது. எனினும், வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு பெற எல்லா உரிமைகளும் உள்ளது என்று கூறி, உரிய தரவுகளைத் திரட்டி அவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று 2022 மார்ச் 31-ஆம் நாள் உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.
தமிழக அரசு நினைத்திருந்தால், அதிகபட்சமாக ஒரு மாதத்தில் தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியிருக்கலாம். ஆனால், உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து 1267 நாள்களாகியும் இன்று வரை வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கவில்லை. இதற்கான காரணம் இயலாமை அல்ல... வன்னியர்களுக்கு எந்தக் காலத்தில் இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது; அவர்கள் கல்வியும், வேலைவாய்ப்பும் பெறாமல் சமூகத்தின் அடிமட்டத்திலேயே கிடக்க வேண்டும் என்ற வன்மம் தான் இதற்கு காரணமாகும்.
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்பதை திமுக பல தருணங்களில் வெளிப்படையாக உணர்த்தியிருக்கிறது. 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி 26-ஆம் நாள் தமிழக சட்டப்பேரவையில் வன்னியர் இடஓதுக்கீட்டுச் சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்ட போது, அதை திட்டமிட்டே திமுக புறக்கணித்தது. அதுமட்டுமின்றி, 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வன்னியர் அல்லாத பிற சமூகங்களின் வாக்குகளை வாங்க வேண்டும் என்பதற்காக வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக திமுக பரப்புரை செய்தது. வன்னியர் மீதான அந்த வன்மத்தின் தொடர்ச்சியாகவே மூன்றரை ஆண்டுகளாகியும் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க திராவிட மாடல் அரசு மறுத்து வருகிறது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்த நாள் முதல் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதாக வாக்குறுதி அளித்து வந்த திமுக அரசு, இப்போது சாதிவாரி மக்கள்தொகை விவரம் இல்லாததால் தான் இடஒதுக்கீடு வழங்க முடியவில்லை என்று கூறுகிறது. வன்னியர்களுக்கு இடஓதுக்கீடு வழங்க சாதிவாரி மக்கள் தொகை விவரங்களைத் திரட்ட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதன் தீர்ப்பில் கூறவில்லை. ஒருவேளை மக்கள்தொகை விவரங்கள் தேவை என்றாலும் கூட அதை சேகரிப்பது தான் தமிழக அரசு மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் கடமை ஆகும். அண்டை மாநிலமான கர்நாடகத்தில் பட்டியலின மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க போதிய சாதிவாரி விவரங்கள் இல்லாத நிலையில், அதற்காக அமைக்கப்பட்டிருந்த நீதியரசர் நாகமோகன்தாஸ் ஆணையம் 63 நாள்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, 165 நாள்களில் ஒட்டுமொத்த அறிக்கையையும் தாக்கல் செய்திருக்கிறது. தமிழகத்தை ஆளும் திமுக அரசு நினைத்திருந்தால் அதை விட குறைவாக காலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கு இட வழங்கியிருக்க முடியும். ஆனால், வன்னியர் மீதான வெறுப்புணர்வு தான் அதை தடுத்து விட்டது.
பா.ம.க. நினைத்திருந்தால் போராட்டங்களை நடத்தி, வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை எப்போதோ வென்றெடுத்திருக்கலாம். ஆனால், திமுக அரசு இட ஒதுக்கீட்டை வழங்கும் என்று நம்பி தான் ஏமாந்தோம். இனியும் பொறுக்க முடியாது என்ற நிலையில் தான் இப்போது சிறை நிரப்பும் போராட்டம் என்ற ஆயுதத்தை நாம் கைகளில் எடுத்திருக்கிறோம். இனி இட ஒதுக்கீட்டை வென்றெடுக்காமல் ஒருபோதும் பாமக ஓயாது.
உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து 1267 நாள்கள் ஆகியும் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மறுக்கும் திமுக அரசைக் கண்டித்தும், இனியாவது சமூகநீதி துரோகத்தைக் கைவிட்டு வன்னியர்களுக்கு 15% இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று வலியுறுத்தியும் வரும் டிசம்பர் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 11.00 மணிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் அமைப்புரீதியிலான அனைத்து மாவட்டங்களிலும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும். நான் உள்ளிட்ட பாம..க. மூத்த தலைவர்கள் போராட்டத்தில் பங்கேற்கும் இடங்களின் விவரம் விரைவில் அறிவிக்கப்படும். குறைந்தது 5 லட்சம் பேராவது இந்தப்போராட்டத்தில் பங்கேற்று சிறை செல்லத் தயாராக இருக்க வேண்டும். எனவே, பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளும் சிறை நிரப்பும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
பாட்டாளி சொந்தங்களே.... வாருங்கள் களம் காணுவோம், வன்னியர் சமூகநீதியை வென்றெடுப்போம்! என்று கூறியுள்ளார்.






