என் மலர்
இந்தியா

பிரதமர் மோடியை விமர்சித்து, ராகுல் காந்தியை பாராட்டிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடி
- இந்தியாவில் இந்துக்கள் - இஸ்லாமியர்கள் என்று பேசிதான் அதிகாரத்தில் தொடர்கின்றனர்.
- அவர்கள் ஆட்சியில் இருக்கும் வரை இது தொடரும்.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்ற கடும் எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தானுடன் விளையாடி இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது.
டாசின்போது இரு அணி கேப்டன்களும் கை கொடுத்துக் கொள்ளவில்லை. போட்டி முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் கை குலுக்கிக் கொள்வது வழக்கம். அந்த நிகழ்வும் நடைபெறவில்லை. இந்திய வீரர்கள் கை குலுக்க மறுத்து விட்டனர். கை குலுக்காமல் சென்றதால் பாகிஸ்தான் அணி கடும் அதிருப்தி அடைந்தது.
இந்த விவகாரம் குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி, ராகுல்காந்தியை புகழ்ந்து பேசினார்.
நிகழ்ச்சியில் பேசிய அப்ரிடி, "இந்தியாவில் இந்துக்கள் - இஸ்லாமியர்கள் என்று பேசிதான் அதிகாரத்தில் தொடர்கின்றனர். இது தவறான போக்கு. அவர்கள் ஆட்சியில் இருக்கும் வரை இது தொடரும். ஆனால், இந்தியாவில் சில நல்லவர்கள் உள்ளனர். உதாரணமாக, ராகுல் காந்தி நல்ல மனம் கொண்டவர். அவர் பேச்சுவார்த்தையில் நம்பிக்கை உள்ளவர். எல்லோரையும் சேர்த்துக் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைக்கிறார்" என்று தெரிவித்தார்.
பாஜக ஆட்சியை விமர்சித்த அப்ரிடி, ராகுல் காந்தியை பாராட்டியது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது.
இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, "ராகுல் பாகிஸ்தானின் செல்லப்பிள்ளை. அப்ரிடியும் பாகிஸ்தான் மக்களும் ராகுலைத் தங்கள் தலைவராக்க முடியும்" என்று விமர்சித்தார்.






