என் மலர்
இந்தியா
- தந்தையிடமிருந்து மதச்சார்பற்றவராக இருக்கக் கற்றுக்கொண்டேன்.
- சுப்ரீம் கோர்ட், தலைமை நீதிபதியை மையமாகக் கொண்டிருக்கக்கூடாது.
இந்தியாவின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் கடந்த மே மாதம் 14-ந்தேதி பதவி ஏற்றுக்கொண்டார். ஜனாதிபதி திரவுபதி முர்மு அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் இன்றுடன் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். விடுமுறை தினமான நவ.23-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அவர் ஓய்வு பெற உள்ளதால் இன்று அவர் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக கடைசி நாள் விசாரணையை மேற்கொள்கிறார்.
டெல்லியில் நடந்த பிரிவு உபச்சார விழாவில் பி.ஆர்.கவாய் கூறியதாவது:
புத்த மதத்தை பின்பற்றினாலும், இந்து மதம், சீக்கியம், இஸ்லாம் மற்றும் பிற மதங்கள் உட்பட அனைத்து மதத்தையும் நம்பும் உண்மையான மதச்சார்பற்ற நபர்.
தந்தையிடமிருந்து மதச்சார்பற்றவராக இருக்கக் கற்றுக்கொண்டேன். அவர் உண்மையிலேயே மதச்சார்பற்றவராகவும், டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரின் சிறந்த சீடராகவும் இருந்தார்.
நான் சுப்ரீம் கோர்ட்டில் என்னவாக இருக்கிறேனோ, அதற்கு எப்போதும் நன்றி உள்ளவனாக இருப்பேன். டாக்டர் அம்பேத்கர், அரசியலமைப்புச் சட்டத்தால்தான் நான் இந்த நிலையை அடைந்தேன்.
தலைமை நீதிபதியாக தனது ஆறு மாத காலப் பணிக்கும், சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக ஆறரை ஆண்டுகள் பணிக்கும் நிறுவனத்தின் கூட்டு வலிமையே காரணம். கடந்த ஆறரை ஆண்டுகளில் என்னால் என்ன செய்ய முடிந்ததோ அதை செய்தேன்.
சுப்ரீம் கோர்ட், தலைமை நீதிபதியை மையமாகக் கொண்டிருக்கக்கூடாது. மாறாக அனைத்து நீதிபதிகளையும் மையமாகக் கொண்டிருக்க வேண்டும் என்று நான் எப்போதும் நம்பினேன். முடிவுகள் என்னால் தனிப்பட்ட முறையில் எடுக்கப்படவில்லை, ஆனால் முழு நீதிமன்றத்திற்கும், விசாரணைகளுக்கும் முன்பாக வைக்கப்பட்டன.
சுப்ரீம் கோர்ட், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பதிவாளர்கள், ஊழியர்கள் போன்ற அனைவரின் பங்களிப்போடு சிறப்பாக செயல்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உச்சி மாநாட்டின் 3 அமர்வுகளிலும் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார்.
- பல்வேறு உலக தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளையும் நடத்துகிறார்.
ஜி20 நாட்டு தலைவர்களின் 20-வது உச்சி மாநாடு தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நாளை மற்றும் நாளை மறுநாள் என இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று தென்னாப்பிரிக்கா புறப்பட்டு சென்றார்.
உச்சி மாநாட்டின் 3 அமர்வுகளிலும் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். குறிப்பாக ஜி20 நிகழ்ச்சி நிரலில் இந்தியாவின் கருத்துகளை பிரதமர் மோடி முன்வைப்பார் என வெளியுறவு அமைச்சகம் செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்து உள்ளது.
மேலும் இந்த மாநாட்டுக்கு இடையே பல்வேறு உலக தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளையும் நடத்துகிறார்.
அத்துடன் இந்தியா-பிரேசில்-தென்னாப்பிரிக்கா தலைவர்களின் கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்பார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
- சாம்ராஜ் நகருக்கு வந்தால் அதிகாரம் போய்விடும் என்பது மூட நம்பிக்கை.
- முதல் மந்திரி மாற்றம் குறித்த கேள்விக்கு நான் பதிலளிக்க மாட்டேன் என்றார்.
பெங்களூரு:
கர்நாடக மாநில முதல் மந்திரி சித்தராமையா சாம்ராஜ் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நான் மூட நம்பிக்கைகளை நம்புவது இல்லை.
சாம்ராஜ் நகருக்கு வந்தால் அதிகாரம் போய்விடும் என்பது மூட நம்பிக்கை.
அந்த மூட நம்பிக்கையை போக்க நான் இங்கு வருகிறேன்.
எனது அதிகாரம் (பதவி) இப்போதும் சரி, வரும் காலத்திலும் சரி பாதுகாப்பாக உள்ளது.
முதல் மந்திரி மாற்றம் குறித்த கேள்விக்கு நான் பதிலளிக்க மாட்டேன்.
எங்களுக்கு மக்கள் 5 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்ய ஆதரவு வழங்கியுள்ளனர்.
மக்களின் ஆசைப்படி நாங்கள் 5 ஆண்டுகள் ஆட்சி செய்வோம். அதன் பிறகும் காங்கிரசே மீண்டும் ஆட்சிக்கு வரும்.
மக்கள் எதுவரை விரும்புகிறார்களோ அதுவரை நானே பட்ஜெட் தாக்கல் செய்வேன் என தெரிவித்தார்.
- தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகள் நடந்து வருகின்றன.
- போதுமான திட்டமிடல், தகவல் தொடர்பு இல்லாதது எஸ்ஐஆர் செயல்முறையை சீர்குலைத்துவிட்டது.
கொல்கத்தா:
தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகளை எதிர்த்து போராட்டங்கள் வெடித்துள்ளன.
இந்நிலையில் எஸ்ஐஆர் குளறுபடி குறித்து தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாருக்கு, மேற்குவங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள எஸ்ஐஆர் குழப்பமானது, வற்புறுத்தும் வகையில் உள்ளது.
இது மிகவும் ஆபத்தானது. இதை உடனே நிறுத்த வேண்டும். போதுமான திட்டமிடல் , தகவல் தொடர்பு இல்லாதது எஸ்ஐஆர் செயல்முறையை சீர்குலைத்துவிட்டது.
பெரும்பாலான பிஎல்ஓக்கள் உரிய பயிற்சி இல்லாமை, சர்வர் செயலிழப்புகள், மீண்டும் மீண்டும் தரவு பொருந்தாத தன்மை காரணமாக ஆன்லைன் படிவங்களுடன் போராடுகிறார்கள்.
இந்த வேகத்தில் டிசம்பர் 4-ம் தேதிக்குள் பல தொகுதிகளில் உள்ள வாக்காளர் தரவை தேவையான துல்லியத்துடன் பதிவேற்ற முடியாது என்பது கிட்டத்தட்ட உறுதி.
ஆனால் தேர்தல் ஆணையத்தின் தீவிர அழுத்தம் மற்றும் தண்டனை நடவடிக்கை குறித்த பயத்தின் காரணமாக பலர் தவறான அல்லது முழுமையற்ற உள்ளீடுகளைச் செய்யத் தள்ளப்பட்டனர்.
இது உண்மையான வாக்காளர்களின் வாக்குரிமையை பறிக்கும். வாக்காளர் பட்டியலின் நேர்மையை பாதிக்கும்.
இந்த செயல்முறை தொடங்கியதிலிருந்து பல அதிகாரிகள் தங்கள் உயிரை இழந்துள்ளனர். டிசம்பர் 4-ம் தேதிக்குள் இந்தப் பணிகளை முடிக்க முடியாது. எனவே அதை நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
- திருவனந்தபுரத்தில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் பத்மகுமார் 2 முறை ஆஜரானார்.
- சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்த சில மணி நேரங்களுக்கு பிறகு பத்மகுமார் கைது செய்யப்பட்டார்
திருவனந்தபுரம்:
சபரிமலை கோவிலில் உள்ள காவல் தெய்வத்தின் சிலைக்கு தங்க முலாம் பூசுவதற்கான தங்கம் மாயமானது தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக்குழு அமைத்துள்ளது. இந்த குழுவின் விசாரணையை கேரள மாநில உயர்நீதிமன்றம் கண்காணித்து வருகிறது.
இதைத் தொடர்ந்து,எஸ்ஐடிஎனப்படும் சிறப்பு புலனாய்வு குழு, பெங்களூரு தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி, தேவசம்போர்டு முன்னாள் தலைவர் வாசு உள்ளிட்ட 5 பேரை ஏற்கனவே கைது செய்தது.
மேலும், குற்றம்சாட்டப்பட்ட முராரி பாபு, வாசு ஆகியோர் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் பத்மகுமாருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த மாத தொடக்கத்தில் இரண்டு முறை திருவனந்தபுரத்தில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் அவர் ஆஜரானார்.
இந்நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு பத்மகுமார் கைது செய்யப்பட்டார்
- ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் மாநில புலனாய்வு அமைப்பு சோதனை நடத்தியது.
- காஷ்மீர் டைம்ஸ், ஜம்மு-காஷ்மீரின் பழமையான ஆங்கில நாளிதழாகும்.
ஜம்முவில் உள்ள பழமை வாய்ந்த 'காஷ்மீர் டைம்ஸ்' பத்திரிகை அலுவலகத்தில் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் மாநில புலனாய்வு அமைப்பு (SIA) குழு இன்று சோதனை நடத்தியது.
சமீபத்திய டெல்லி பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகவும், தேசத்தின் நலன்களுக்கு விரோதமான நடவடிக்கைகளை ஊக்குவித்ததற்காகப் பத்திரிகையின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் சில கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே நேரம் அங்கே ஏ.கே ரக துப்பாக்கி குண்டுகள், மற்றும் கையெறி குண்டு பாகங்கள் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சோதனை பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்கும் செயல் என காஷ்மீர் டைம்ஸ் ஆசிரியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளது.
பத்திரிகை ஆசிரியர்களான அனுராதா பாசின் மற்றும் பிரபோத் ஆகியோர் இந்தச் சோதனை, "அரசாங்கத்தை விமர்சிப்பது அரசுக்கு விரோதமாக இருப்பதாக பொருள் அல்ல. எங்களுக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் மிரட்டுவதற்கும், சட்டப் பூர்வ அங்கீகாரத்தைப் பறிப்பதற்கும், இறுதியில் அமைதியாக்குவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளன. நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்" என்று கூறியுள்ளனர்.
1954 ஆம் ஆண்டு மூத்த பத்திரிகையாளர் வேத் பாசினால் தொடங்கப்பட்ட காஷ்மீர் டைம்ஸ், ஜம்மு-காஷ்மீரின் பழமையான ஆங்கில நாளிதழாகும். 2023 முதல் அச்சுப் பதிப்பை நிறுத்தி இணையத்தில் மட்டும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- நகரங்களின் பட்டியலை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது.
- ஒரு சதுர கிலோமீட்டருக்கு சுமார் 27,000 பேர் வசிக்கின்றனர்.
2025 இல் உலகின் மிக அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட நகரங்களின் பட்டியலை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது.
பட்டியலில் முதல் பத்து நகரங்களில் 4 இந்திய நகரங்களும் இடம்பெற்றுள்ளன.
டாப் 10 நகரங்கள் பட்டியலில், 4 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி ஒரு சதுர கிலோமீட்டருக்கு சுமார் 27,000 பேர் வசிக்கும் மும்பை நகரம் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
அடுத்தடுத்த இடங்களில் காங்கோவின் Kasai-Oriental, Beni, பாகிஸ்தான் தலைநகர் கராச்சி, சூரத், ஹாங்காங்கின் Tamar, காங்கோவின் Kinshasa, சோமாலியா தலைநகர் Muqdisho அகமதாபாத், பெங்களூரு ஆகிய நகரங்கள் உள்ளன.
அதேநேரம் இந்திய அளவில் அதிக மக்கள்தொகை கொண்ட 10 நகரங்களின் பட்டியலில் முறையே, மும்பை, சூரத், அகமதாபாத், பெங்களூரு, கல்யாண், அலிகார், பிரயாக்ராஜ், ஸ்ரீநகர், புது டெல்லி, கான்பூர் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டின் நகரங்கள் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை. 146 கோடி பேருடன் இந்தியா உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
- இன்று பீகார் முதல்வராக 10 வது முறையாக நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்றார்.
- சட்டமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக இருக்க குறைந்தது 10% தொகுதிகளைக் கைப்பற்றியிருக்க வேண்டும்.
பீகார் தேர்தல் தோல்விக்குப் பிறகு முதல் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், 10வது முறையாக முதலமைச்சராக பதவியேற்ற ஜேடியு தலைவர் நிதீஷ் குமாருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 202 இடங்களை கைப்பற்றி பாஜக- ஜெடியு-வின் என்டிஏ கூட்டணி அபார வெற்றி பெற்றது. எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ்-ஆஜேடி-யின் மகாபந்தன் கூட்டணி 35 இடங்களோடு மட்டுப்பட்டது. இன்று பீகார் முதல்வராக 10 வது முறையாக நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்றார்.
இந்நிலையில் தேர்தலுக்கு பின் முதல் முறையாக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் பொதுவெளியில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,"பீகார் முதல்வராக பதவியேற்ற நிதிஷ் குமாருக்கும், அமைச்சரவை உறுப்பினர்களாக பதவியேற்ற பீகார் அரசின் அனைத்து அமைச்சர்களுக்கும் வாழ்த்துக்கள்.
புதிய அரசாங்கம் தனது வாக்குறுதிகளையும் அறிவிப்புகளையும் பொறுப்புடன் நிறைவேற்றும் என்றும் மக்களின் நம்பிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்பட்டு பீகார் மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவரும் என்றும் நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே பீகார் சட்டமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சட்டமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக இருக்க குறைந்தது 10% தொகுதிகளைக் கைப்பற்றியிருக்க வேண்டும். நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் வெறும் 6 தொகுதியில் வெற்றிபெற்றிந்தபோதும் ஆர்ஜேடி 25 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த எண்ணிக்கை மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 10 சதவீததிற்கும் சிறிது அதிகம் ஆகும்.
எனவே கடந்த ஆட்சிக்காலத்தை போலாவே தேஜஸ்வி யாதவ் எதிர்கட்சித் தலைவராக தொடர உள்ளார். இந்த தேர்தலில் தேஜஸ்வி யாதவ் ரஹோபூர் தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக மீண்டும் தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
- டெல்லி பயங்கரவாத தாக்குதலில் இந்த 4 பேருக்கும் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.
- இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
டெல்லி செங்கோட்டை அருகே உள்ள மெட்ரோ நிலையத்தின் அருகில் கடந்த 10 ஆம் தேதி நடந்த கார் குண்டு தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். இது தற்கொலை படை தாக்குதல் என என்ஐஏ உறுதி செய்துள்ளது. தாக்குதலில் ஈடுபட்டவர் காஷ்மீரின் புல்வாமாவை சேர்ந்த மருத்துவர் உமர் என கண்டறியப்பட்டது.
அரியானாவின் பரிதாபாத்தில் உள்ள அல் பலாஹ் பல்கலைக்கழகத்தில் டாக்டராக பணியாற்றி அவர் பணியாற்றி வந்த நிலையில் அவருடன் தொடர்பில் இருந்த மற்ற மருத்துவர்கள், மற்றும் வியாபாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 4 பேரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) இன்று கைது செய்துள்ளது.
புல்வாமாவைச் சேர்ந்த டாக்டர் முஸாமில் ஷகீல், அனந்த்நாக் பகுதியைச் சேர்ந்த டாக்டர் அதீல் அகமது ராதர், லக்னோவை சேர்ந்த டாக்டர் ஷாஹீன் சயீத், ஷோபியான் பகுதியைச் சேர்ந்த முஃப்தி இர்பான் அகமது வாகே என 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாட்டியாலா நீதிமன்றத்தின் மாவட்ட அமர்வு நீதிபதி உத்தரவின் பேரில் ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள தேசிய புலனாய்வுத் துறையால் 4 பேரும் விசாரணைக்காக காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி பயங்கரவாத தாக்குதலில் இந்த 4 பேருக்கும் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.
இதில் மருத்துவர்கள் 3 பேரை ஏற்கெனவே ஜம்மு காஷ்மீர் காவல்துறை கைது செய்து வைத்திருந்த நிலையில் அவர்கள் என்ஐஏ காவலுக்கு மாற்றப்பட்டனர்.
முன்னதாக டெல்லியில் வெடித்த காரின் உரிமையாளர் அமீர் ரஷித் அலி மற்றும் தொழில்நுட்ப உதவி வழங்கிய ஜஸிர் பிலால் என்பவர்கள் ஏற்கெனவே என்ஐஏவால் கைதுசெய்யப்பட்டனர். V
- இளைஞர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாத அமைப்பில் இணைக்கும் பணியை செய்துவந்ததாக கூறப்படுகிறது.
- 2008ல் அகமதாபாத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 56 பேரும், டெல்லியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 20 பேரும் கொல்லப்பட்டனர்.
டெல்லி செங்கோட்டை அருகே உள்ள மெட்ரோ நிலையத்தின் அருகில் கடந்த 10 ஆம் தேதி நடந்த கார் குண்டு தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். இது தற்கொலை படை தாக்குதல் என என்ஐஏ உறுதி செய்துள்ளது. தாக்குதலில் ஈடுபட்டவர் காஷ்மீரின் புல்வாமாவை சேர்ந்த மருத்துவர் உமர் என கண்டறியப்பட்டது.
அரியானாவின் பரிதாபாத்தில் உள்ள அல் பலாஹ் பல்கலைக்கழகத்தில் டாக்டராக பணியாற்றி அவர் பணியாற்றி வந்த நிலையில் அவருடன் தொடர்பில் இருந்த மற்ற மருத்துவர்கள், மற்றும் வியாபாரிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையே அல் பலாஹ் பல்கலைக்கழக குழும தலைவர் ஜாவத் அகமது அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 13 நாள் நீதிமன்ற காவலில் உள்ளார்.
யுஜிசி அங்கீகாரத்தை பொய்யாக கோரியதாகவும், பல்கலைக்கழக அறக்கட்டளை மூலம் திரட்டப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிதி அவரது குடும்பத்திற்குச் சொந்தமான நிறுவனங்களுக்குத் திருப்பி விடப்பட்டதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்தது.
இந்த சூழலில் அல் பலாஹ் பல்கலைக்கழகத்தில் மற்றொரு பயங்கரவாதி பட்டம் பெற்றதும் தெரியவந்துள்ளது.
2008ல் அகமதாபாத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 56 பேரும், டெல்லியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 20 பேரும் கொல்லப்பட்ட தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி மிர்சா ஷதாப் பெய்க், அல் பலாஹ் பல்கலைக்கழகத்தில் 2007ஆம் ஆண்டு பொறியியல் பட்டம் பெற்றார்.
உத்தரபிரதேசத்தில் அசாம்ஹர் மாவட்டம் பரிடி கிராமத்தை சேர்ந்த இவர் முஜாஹிதீன் அமைப்பின் அசாம்ஹர் பகுதிக்கு தலைமை தாங்கியவர் என்பதும் 2008ஆம் ஆண்டு முதல் பல சதித் திட்டங்களைத் தீட்டி, இளைஞர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாத அமைப்பில் இணைக்கும் பணியை செய்துவந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் அசாம்ஹர் பகுதிக்கு தலைமை தாங்கிய மிர்சா ஷதாப் பெய்க், தற்போது பாகிஸ்தானில் தங்கியிருப்பதாக நம்பப்படுகிறது.
மேலும் ஜெய்ப்பூர் குண்டுவெடிப்புக்கு தேவையான வெடிபொருட்களை உருவாக்க ஐஎம் பயங்கரவாதிகள் ரியாஸ் மற்றும் யாஸின் பட்கலுக்கு பெய்க் உதவியதும், புனே ஜெர்மன் பேக்கரியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு சதித்திட்டம் தீட்டியதும் தெரியவந்துள்ளது.
டெல்லியில் ஜாகிர் நகரில் பெய்க் வசித்து வந்த வீட்டில் போலீசார் நடத்திய சோதனையின் போது, அடையாள அட்டைகள் உள்பட பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
பட்லா ஹவுசில் நடத்தப்பட்ட என்கவுன்டரின் போது, 2008 தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய ஐஎம் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் மிர்சா ஷதாப் பெய்க் மற்றும் முகமது காலித் ஆகியோர் மட்டும் தலைமறைவாக உள்ளனர்.
இந்த சூழலில் பாகிஸ்தானில் தலைமறைவாக உள்ள பெய்க் பயின்ற பல்கலைக்கழகத்தை சேர்ந்த மற்றொரு மருத்துவர் உமர் தற்போது டெல்லி குண்டுவெடிப்பை நடத்தியுள்ளது சம்பவத்தின் பின்னால் இருக்கும் மிகப்பெரிய நெட்வொர்க்கை அம்பலப்படுத்தி உள்ளது.
- இன்று பீகார் முதல்வராக நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்றார்.
- 4 தொகுதிகளைத் தவிர, மற்ற இடங்களில் டெபாசிட்டை இழந்து படுதோல்வியைச் சந்தித்தது.
நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 202 இடங்களை கைப்பற்றி பாஜக- ஜெடியு-வின் என்டிஏ கூட்டணி அபார வெற்றி பெற்றது. எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ்-ஆஜேடி-யின் மகாபந்தன் கூட்டணி 35 இடங்களோடு மட்டுப்பட்டது. இன்று பீகார் முதல்வராக 10 வது முறையாக நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்றார்.
இதற்கிடையே கடந்த ஆண்டு காந்தி ஜெயந்தி நாளில் ஜன் சுராஜ் என்ற கட்சியை பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தொடங்கினார்.
பீகாரில் நிதிஷ் குமாரின் ஜெடியுவிக்கு தனது கட்சி தான் மாற்று என்று பிரசாரம் செய்த ஜன்சுராஜ் கட்சி நடந்து முடிந்த சட்டமன்றத் தெரிதலில் 238 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. 4 தொகுதிகளைத் தவிர, மற்ற இடங்களில் டெபாசிட்டை இழந்து படுதோல்வியைச் சந்தித்தது.
தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்ட பின் என்டிஏ கூட்டணி பீகாரில் ஒன்றரை கோடி பெண்களுக்கு தொழில் தொடங்க நிதியுதவி என்ற பெயரில் ரூ.10,000 டெபாசிட் செய்ததே அதன் வெற்றிக்கு காரணம் என்றும் உலக வங்கி வழங்கிய ரூ.12,000 கோடி நிதியை தேர்தலில் வெல்ல என்டிஏ தவறாக பயன்படுத்தியதாகவும் பிரசாந்த் கிஷோர் குற்றம்சாட்டினார்.
அதேநேரம் ஜன் சுராஜ் தேர்தல் தோல்விக்கு முழு பொறுப்பேற்பதாகவும், பீகாரில் வெற்றி பெறும் வரை ஓயமாட்டேன் எனவும் பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.
இந்த சூழலில் தோல்விக்கு பிராயச்சித்தமாக பிரசாந்த் கிஷோர் ஒருநாள் மெளன விரதம் மேற்கொண்டுள்ளார்.
பீகாரின் மேற்கு சம்பாரன் மாவட்டத்தில் உள்ள பிதிஹர்வா காந்தி ஆசிரமத்தில் மெளன விரதம் இருக்கும் அவருடன் ஜன் சுராஜ் லத் தலைவர் மனோஜ் பாரதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர்.
பிரசாந்த் கிஷோர் இன்று மெளன விரதம் இருக்கும் இதே இடத்தில்தான், நூற்றாண்டுகளுக்கு முன் மகாத்மா காந்தி மெளன விரதம் மேற்கொண்டார். முன்னதாக ஜன் சுராஜ் கட்சியை தொடங்கும் முன் இதே இடத்தில் இருந்து 3,500 கி.மீ நடைப்பயணத்தை பிரசாத் கிஷோர் தொடங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- சிஎஸ்சி மாநாடு கடைசியாக 2023-ல் நடைபெற்றது.
- சிஎஸ்சி மாநாட்டில் வங்கதேச என்எஸ்ஏ கலீலுர் ரஹ்மான் கலந்துகொண்டார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் 7வது மாநாடு தலைநகர் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்தியாவின் அண்டை நாடுகளான மாலத்தீவு, மொரிஷியஸ், இலங்கை மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட உறுப்பு நாடுகள் கலந்துகொண்டன.
இந்த மாநாட்டில் பேசிய இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், "இந்தியப் பெருங்கடல் நம்மால் பகிர்ந்துக்கொள்ளக்கூடிய மிகப்பெரிய பாரம்பரியமாகும். கடல்சார் புவியியலால் இணைக்கப்பட்ட நாம்தான் அதன் ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு, நிலைத்தன்மையை உறுதிசெய்ய வேண்டும். அது நம் கடமையாகும்" எனப் பேசினார்.
இந்தியாவின் ஒன்பது எல்லை நாடுகளைத் தாண்டி இப்பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில் சீஷெல்ஸ் மற்றும் மலேசியா போன்ற நாடுகளும் பங்கேற்றன. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், உறுப்பு நாடுகளிடையே கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கும் சிஸ்சி அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் 6வது தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாடு கடந்த 2023 டிசம்பரில் மொரிசியஸில் நடைபெற்றது. இந்நிலையில் இம்முறை இந்தியாவில் நடைபெற்றுள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாடுபோல துணை பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாடும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இம்மாநாடு கடந்தாண்டு காணொலி வாயிலாக நடைபெற்றது.
இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT) மரண தண்டனை விதித்துள்ள நிலையில், வங்கசேத பாதுகாப்பு ஆலோசகர் கலீலுர் ரஹ்மான் இந்தியா வந்து இந்த கூட்டத்தில் பங்கேற்றது கவனம் ஈர்த்துள்ளது. முன்னதாக நேற்று அஜித் தோவலும், ரஹ்மான் பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.






