என் மலர்tooltip icon

    இந்தியா

    • மத்திய அரசின் ரெயில்வே திட்டங்களுக்கு தமிழக அரசு ஒத்தழைப்பு தரவில்லை.
    • ரெயில்வே திட்டங்களை செயல்படுத்த மாநில அரசின் ஒத்துழைப்பு தேவை.






    ------------------

    ரெயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ரூ.7,611 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,"தமிழகத்திற்கு 2 புல்லட் ரெயில்கள் இயக்கப்படும்.

    சென்னை-பெங்களூரு, சென்னை- ஐதராபாத் வழித்தடத்தில் மணிக்கு 350 கி.மீ., வேகத்தில் புல்லட் ரெயில் இயக்கம்.

    சென்னை-ஐதராபாத் இடையே 2.55 மணி நேரம், சென்னை- பெங்களூரு இடையே 1.13 மணி நேரத்திலும் புல்லட் ரெயில் இயக்கம்.

    தமிழகத்தில் 77 ரெயில் நிலையங்கள் புனரமைப்பட்டுள்ளது. மேலும், 95 சதவீதம் ரெயில் தடங்கள் மின் மயமாக்கப்பட்டுள்ளது.

    ரூ.35,700 கோடி மதிப்பிலான ரெயில்வே திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    மத்திய அரசின் ரெயில்வே திட்டங்களுக்கு தமிழக அரசு ஒத்தழைப்பு தரவில்லை.

    ரெயில்வே திட்டங்களை செயல்படுத்த மாநில அரசின் ஒத்துழைப்பு தேவை.

    பெரும்பாலான ரெயில் திட்டங்களுக்கான மேம்பாட்டு பணிக்கு நிலம் கையகப்படுத்துவதில் ஒத்துழைப்பு இல்லை.

    மன்னார்குடி- பட்டுக்கோட்டை, தஞ்சை-மன்னார்குடி ரெயில் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு நிலம் கையகப்படுத்தி தரவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அஜித் பவார் மரணத்துக்கு பிறகு பவார் குடும்பத்துக்கும், மராட்டிய அரசியலுக்கும் சிக்கல்கள் அதிகரித்து உள்ளன.
    • சுனேத்ரா பவார் கப்பலை செலுத்தினாலும் அதன் எந்திரமும், கட்டுப்பாடும் பா.ஜனதா முதல்-மந்திரி தேவேந்திர ஃபட்னாவிஸிடம் உள்ளது.

    மராட்டிய துணை முதல்-மந்திரியும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித் பவார் கடந்த 28-ந்தேதி விமான விபத்தில் பலியானார். இதைத் தொடர்ந்து பா.ஜ.க., சிவசேனா கூட்டணியில் தேசியவாத காங்கிரசை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியாக சுனேத்ரா பவாருக்கு துணை முதல்-மந்திரி பதவியை வழங்கியது. அவர் கடந்த 31-ந்தேதி மராட்டிய முதல் பெண் துணை மந்திரியாக பதவியேற்றார்.

    இதைத்தொடர்ந்து சரத்பவார் கட்சியுடன் இணையும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டது. துணை முதல்-மந்திரியாக அஜித் பவார் மனைவி சுனேத்ரா பவார் பதவியேற்பது பற்றி தங்கள் குடும்பத்தினரிடம் அவர் கலந்து ஆலோசிக்கவில்லை என்றும், இது பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் சரத்பவார் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் சுனேத்ரா பவார் துணை முதல் மந்திரியாக நியமிக்கப்பட்டதற்கு பா.ஜனதா சூத்திரதாரியாக செயல்பட்டதாகவும், பவார் கட்சிகள் இணைவதை விரும்பவில்லை என்றும் பா.ஜனதா மீது உத்தவ் தாக்கரேவின் சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து அந்த கட்சியின் பத்திரிகையான சாம்னாவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    பா.ஜனதா தலைமை மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்.சி.பி.) தலைவர்களான சுனில் தட்கரே, பிரபுல் படேல் ஆகியோர் தேசியவாத காங்கிரசின் 2 பிரிவுகளும் இணைவதை விரும்பவில்லை. அஜித்பவார் மரணத்துக்கு பிறகு என்.சி.பி.யில் சிலர் அதிக லட்சியம் கொண்டவர்களாக மாறினர். துணை முதல்-மந்திரி பதவியை ஏற்க கட்சிக்குள் போட்டி ஏற்பட்டது. தட்கரே, படேல் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தன. கட்சி படேலிடம் சென்று விடக்கூடாது என்பதற்காகவே சுனேத்ரா பவார் துணை முதல்-மந்திரியாக நியமிக்கப்பட்டார்.

    சுனேத்ரா பவார் யாருடைய விருப்பத்தின் பேரில் துணை முதல் மந்திரியாக பொறுப்பேற்று உள்ளார் என்பதுதான் மராட்டிய மாநிலம் முன்புள்ள கேள்வியாகும். ஏனென்றால் சரத்பவார், சுப்ரியா சுலே அல்லது பவார் குடும்பத்தினர் யாருக்கும் இது பற்றி தெரியாது. இந்த அரசியலுக்கு பின்னால் பா.ஜனதா தலைமைதான் சூத்திரதாரி.

    அஜித் பவார் மரணத்துக்கு பிறகு பவார் குடும்பத்துக்கும், மராட்டிய அரசியலுக்கும் சிக்கல்கள் அதிகரித்து உள்ளன. இந்த சிக்கல்கள் தீர்க்கப்படக் கூடாது என்று பலர் விரும்புகிறார்கள். சுனேத்ரா பவார் கப்பலை செலுத்தினாலும் அதன் எந்திரமும், கட்டுப்பாடும் பா.ஜனதா முதல்-மந்திரி தேவேந்திர ஃபட்னாவிஸிடம் உள்ளது. அவரது கருணையின் பேரில்தான் சுனேத்ரா பவாரும், ஏக்நாத் ஷிண்டேவும் தங்கள் பதவியில் இருக்க முடியும்.

    சுனேத்ரா பவார் அலங்கார பொருளாக இருக்கக் கூடாது. பொம்மையாக இல்லாமல் திறமையாக செயல்பட வேண்டும். சுனேத்ரா பவார் தனது கணவரின் இறுதி சடங்குகளுக்கு பிந்தைய சடங்குகள் முடிவடைவதற்கு முன்பே பதவியேற்றது இந்துக்களின் நம்பிக்கைகளுக்கு பொருந்தவில்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

    • கணவர் மற்றும் மாமியாருடன் தகராறு ஏற்பட்டு சண்டையாக மாறியுள்ளது.
    • இதனால் விரக்தியான பெண், 3 குழந்தைகளையும் கொலை செய்துள்ளார்.

    கர்நாடக மாநிலம் பாகல்கோட்டில் 28 வயது பெண், தனது 3 குழந்தைகளையும் தூக்கிலிட்டு கொலை செய்து தானும் விசம் அருந்து தற்கொலைக்கு முயன்ற சோக சம்பவம் நடைபெற்றுள்ளது.

    கர்நாடக மாநிலம் பாகல்கோட் பதாமி தாலுகாவில் உள்ள கிராமம் ஹிரேமுச்சல்குட்டா கிராமம். இந்த கிராமத்தில் ரூபா ஹனுமன்த் கவுடர் (வயது 28) என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கு 5, 4, மற்றும் 2 இரண்டு வயதில் மூன்று குழந்கைள் இருந்தன.

    இவருக்கும் இவரது கணவர் மற்றும் மாமியாருக்கும் இடையில் அடிக்கடி சண்டை நடைபெறு வழக்கம். சம்பவத்தன்று இந்த சண்டை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இந்த சண்டையால் விரக்தியான ரூபா தனது குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    அதன்படி மூன்று குழந்தைகளையும் ஒன்றன்பின் ஒன்றாக தூக்கில் போட்டு கொன்றுள்ளார். அதன்பின் தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து விசம் அருந்தியுள்ளார். ஆனால், ரூபா உயிர்ப்போகவில்லை.

    உயிருக்கு ஆபத்தான நிலையில், மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • கடந்தாண்டு அந்த சிறுவனுக்கு 18 வயது ஆனநிலையில் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்ற காவல்துறையின் கோரிக்கையை சிறுவர் நீதி வாரியம் நிராகரித்தது.
    • விபத்து நடந்த சிலமணி நேரங்களிலேயே சிறுவனுக்கு ஜாமின்

    கடந்த 2024ஆம் ஆண்டு இந்தியாவையே உலுக்கிய புனே போர்ஷே கார் விபத்து வழக்கில் மூன்று குற்றவாளிகளுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. மகாராஷ்டிராவின் புனேயின் கல்யாணி நகர் பகுதியில், மது போதையில் 17 வயது சிறுவன் ஓட்டிய அதிவேக போர்ஷே கார் மோதியதில், பைக்கில் சென்ற அனீஷ் அவாதியா மற்றும் அஸ்வினி கோஷ்டா ஆகிய இரண்டு இளம் ஐடி ஊழியர்கள் உயிரிழந்தனர்.

    விபத்து நடந்த சிலமணி நேரங்களிலேயே விபத்திற்கு முக்கிய காரணமான 17 வயது சிறுவனுக்கு நீதி வாரியம் ஜாமினும் வழங்கியது. இது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 15 நாட்கள் காவல்துறையில் பணிபுரியவும், சாலை விபத்துகள் குறித்து 300 வார்த்தைகள் கொண்ட கட்டுரை எழுதவும், குடிப்பழக்கத்திற்கு சிகிச்சை பெறவும், ஆலோசனை அமர்வுகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டது.

    தொடர்ந்து சிறுவனின் இரத்தத்தில் மது இருப்பதை மறைக்க, அரசு மருத்துவமனை மருத்துவர்கள் உதவியுடன் அவனது தாயின் இரத்த மாதிரியை மாற்றி வைத்தது விசாரணையில் அம்பலமானது. இதற்காக ரூ.3 லட்சம் லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்தது. இதில் அச்சிறுவனின் தாயும், தந்தையும் கைது செய்யப்பட்டனர்.

    கடந்தாண்டு அந்த சிறுவனுக்கு 18 வயது ஆனநிலையில் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்ற காவல்துறையின் கோரிக்கையை சிறுவர் நீதி வாரியம் நிராகரித்தது. தற்போது வரை இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட  ஆதித்யா அவினாஷ் சூட், ஆஷிஷ் சதீஷ் மிட்டல் மற்றும் அமர் சந்தோஷ் கெய்க்வாட் என்ற மூன்று பேருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. 

    நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு ஜாமின் வழங்கியது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் 18 மாதங்கள் சிறையில் இருந்ததை குறிப்பிட்ட நீதிபதிகள், "தண்டனைக்கு முன்பே சிறைவாசம் இருக்கக் கூடாது" என்று குறிப்பிட்டு இந்த ஜாமினை வழங்கியுள்ளனர். 

    இந்த மூன்றுபேரும் காருக்குள் இருந்த முக்கிய குற்றவாளிகளின் இரத்த மாதிரிகளை அவர்களது இரத்த மாதிரிகளுடன் மாற்றிக்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர். 

    • பலவீனமான தலைமைத்துவம்- சிறந்த தலைமைத்துவம் இதுதான் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜக-வுக்கும் இடையிலான வித்தியாசம்.
    • பல துறைகளில் காங்கிரஸ் தலைமையிலான UPA ஆட்சியின் தோல்விக்காக சமாளிப்புகள் கதையை ஜனாதிபதி உரை எதிரொலிக்கிறது.

    நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. மக்களவையில் நடைபெற்ற இந்த விவாதத்தில் பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா பேசியதாவது:-

    பலவீனமான தலைமைத்துவம்- சிறந்த தலைமைத்துவம் இதுதான் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜக-வுக்கும் இடையிலான வித்தியாசம்.

    பல துறைகளில் காங்கிரஸ் தலைமையிலான UPA ஆட்சியின் தோல்விக்காக சமாளிப்புகள் கதையை ஜனாதிபதி உரை எதிரொலிக்கிறது. UPA ஆட்சி நடைபெற்ற 10 ஆண்டுகள் இழக்கப்பட்ட வாய்ப்புகளின் தசாப்தம்.

    உலகில் செழிப்பான ஜனநாயகத்தில் தலைவர்கள் வருவார்கள். செல்வார்கள். ஆனால் மெஜாரிட்டியுடன் பிரதமர் மோடி 3-வது முறையாக அதிகாரத்திற்கு வந்துள்ளார்.

    இவ்வாறு தேஜஸ்வி சூர்யா தெரிவித்தார்.

    மேலும் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பயங்கரவாதம், நக்சலைட்டுகளுக்கு எதிராக எடுத்த நிலைப்பாடு குறித்து பேசினார். அப்போது பாஜக எம்.பி.க்களுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    காங்கிரஸ் ஆட்சி பயங்கரவாதத்திற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிரதமர் மோடி ராணுவ தாக்குதல் மூலம் பதிலடி கொடுத்தார் என்றார்.

    • பாஜக உறுப்பினர்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.
    • புத்தகத்தில் உள்ள தகவல்கள் குறித்து பேச முயன்றார்.

    மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இன்று பராளுமன்றத்தில் உரையாற்ற தொடங்கியபோது, முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம். நரவணே எழுதியதாக கூறப்படும், இன்னும் வெளியிடப்படாத ஒரு புத்தகத்தை சார்ந்த இதழ் கட்டுரையை கையில் ஏந்தி பேச தொடங்கினார். இது, ஆளும் பாஜக உறுப்பினர்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.

    2020ஆம் ஆண்டு இந்தியா–-சீனா இடையே லடாக் எல்லை பகுதியில் ஏற்பட்ட மோதல் குறித்து எழுதப்பட்டுள்ள குறிப்புகள் அடங்கிய ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி (Four Stars of Destiny) என்ற வெளியிடப்படாத புத்தகத்தை ராகுல் காந்தி மேற்கோள் காட்டியதும், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உடனடியாக தலையிட்டு எதிர்ப்பு தெரிவித்தார்.

    "வெளியிடப்படாத புத்தகத்தை மேற்கோள் காட்டுவது அவை விதிகளுக்கு எதிரானது" என்று அவர் கூறினார்.

    கிழக்கு லடாக் எல்லை பகுதியில் பதற்றம், 2020 மே 5ஆம் தேதி, பாங்காங் ஏரி பகுதியில் இந்திய மற்றும் சீன படைகள் இடையே ஏற்பட்ட வன்முறை மோதலுக்கு பிறகு தீவிரமடைந்தது. இந்த சம்பவம் குறித்து, ஜெனரல் நரவணே தனது வெளியிடப்படாத நினைவு குறிப்புகளில் எழுதியுள்ளதாகவும், அந்த புத்தகத்தை அடிப்படையாக கொண்டு ஒரு பிரபல இதழில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    அந்த இதழின் அச்சு பிரதியை கையில் வைத்திருந்த ராகுல் காந்தி, புத்தகத்தில் உள்ள தகவல்கள் குறித்து பேச முயன்றார். ஆனால் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மட்டுமல்லாமல், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாராளுமன்ற விவகார துறை அமைச்சர் கீரன் ரிஜிஜு ஆகியோரும் அவரை கடுமையாக எதிர்த்தனர்.

    தொடர்ச்சியான இடையூறுகளுக்கிடையே, ராகுல் காந்தி, "இதில் என்ன இருக்கிறது, அவர்களை இவ்வளவு பயமுறுத்துகிறது? அவர்கள் பயப்படவில்லை என்றால், நான் தொடர்ந்து வாசிக்க அனுமதிக்கப்பட வேண்டும்," என்றார். தான் மேற்கோள் காட்டிய கட்டுரையும் புத்தகமும் "100 சதவீதம் உண்மையானவை" என ராகுல் காந்தி வலியுறுத்தினார்.

    மேலும், "நாளை பாஜக உறுப்பினர்களும் வெளியிடப்படாத புத்தகங்களை சுட்டிக்காட்டி கற்பனை தகவல்களை முன்வைக்கலாம். ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் போலி செய்திகளை பரப்பும் தொழிற்சாலையாக மாறியுள்ளார்," என்றும் அரசு வட்டாரங்கள் குற்றம்சாட்டின. இதனால் அவையில் ஏற்பட்ட கடும் அமளி மற்றும் சலசலப்பு ஏற்பட்டது. 

    • மேம்பாலம் மேலே ஏறி இன்ஸ்டா ரீல்ஸ் எடுக்க முயன்ற நபர் தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார்.
    • இந்த ரீல்ஸ் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இன்றைய இளைய தலைமுறையினர் சமூகவலைத்தளத்தில் லைக்குகளை அள்ளும் ஆசையில் சாகச வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். இதில் சில சமயம் உயிருக்கு ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுத்து உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

    அவ்வகையில் உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் மேலே ஏறி இன்ஸ்டா ரீல்ஸ் எடுக்க முயன்ற நபர் தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார்.

    மேம்பாலத்தின் மேலே கான்க்ரீட் Slabs மீது ஏறி நடனமாடியபோது, Slabs சரிந்து முகமது ஃபைசான் (22) என்ற இளைஞர் தலை மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

    இந்த ரீல்ஸ் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • தண்ணீர் கசிந்து பின்னர் உடனடியாக தண்ணீர் பீறிட்டு வெளியே வந்தது.
    • வீட்டின் உரிமையாளர் நல்வாய்ப்பாக உயிர்தப்பினார்

    சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் அதிக அழுத்தம் காரணமாக ஆழ்துளை குழாய் திடீரென உடைந்த சம்பவத்தில் வீட்டின் உரிமையாளர் நல்வாய்ப்பாக உயிர்தப்பிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    அந்த வீடியோவில் தரையில் இருந்து மெதுவாக தண்ணீர் கசிந்து பின்னர் உடனடியாக தண்ணீர் பீறிட்டு வெளியே வந்த நிலையில், வீட்டின் உரிமையாளர் நூலிழையில் உயிர் தப்பினார்.

    இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • தங்கம் விலை வரலாறு காணாத உச்சம் தொட்டது
    • கடந்த சில நாட்களாக தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.

    தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு, தினமும் வரலாறு காணாத உச்சம் என்ற பட்டத்துடனேயே பயணித்து வந்தது. இப்படியாக விலை உயர்ந்து கடந்த மாதம் (ஜனவரி) 29-ந் தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 400 என்ற இமாலய உச்சத்தை எட்டியது. இந்த விலை உயர்வு மேலும் இருக்கும் என பரபரப்பாக பேசப்பட்டது.

    இந்நிலையில், தங்கம் விலை குறைய வேண்டும் என பக்தர் ஒருவர் வாழைப்பழத்தில் எழுதி வேண்டுதல் செய்தது இணையத்தில் வைரலாகியுள்ளது.

    கர்நாடகா மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள சிம்னாலி துர்க்கம்மா தேவி தேர் திருவிழாவின் போது பக்தர் ஒருவர் "ஏழைகளும் வாங்கும் அளவிற்கு தங்கம் விலை குறைய வேண்டும்" என வாழைப்பழத்தில் எழுதி வேண்டுதல் செய்த புகைப்படம் வைரலானது.

    இதையடுத்து கடந்த சில நாட்களாக தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.7,600 குறைந்து ரூ.1,11,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.950 குறைந்து ரூ.13,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    • நிலநடுக்கம் பூமியின் மேற்பரப்பிலிருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளது.
    • உலகிலேயே மிக அதிக நிலநடுக்கச் செயல்பாடுகள் காணப்படும் பகுதி.

    அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இன்று (பிப். 2) அதிகாலை சுமார் 3.30 மணியளவில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் (National Center of Seismology -– NCS) தெரிவித்துள்ளது.

    NCS வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இந்த நிலநடுக்கம் பூமியின் மேற்பரப்பிலிருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தின் அகலம் (Latitude) 9.03 டிகிரி வடக்காகவும், தீர்க்கரேகை (Longitude) 92.78 டிகிரி கிழக்காகவும் பதிவாகியுள்ளது.

    இது தொடர்பாக சமூக வலைதளமான X தளத்தில் NCS வெளியிட்டுள்ள பதிவில், "02.02.2026 அன்று காலை 03:31:12 மணிக்கு, நிக்கோபார் தீவுகள் பகுதியில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் ஆழம் 10 கிலோமீட்டர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த தீவுகள், இந்தியாவின் நிலநடுக்க மண்டல வரைபடத்தின் படி 'சீஸ்மிக் மண்டலம் – V' ஆக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இது உலகிலேயே மிக அதிக நிலநடுக்கச் செயல்பாடுகள் காணப்படும் பகுதிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடி தகவல்கள் வெளியாகவில்லை.

    • பா.ஜ.க. சார்பில் சர்பானந்த சோனோவால் விவாதத்தை தொடங்கி பேசவுள்ளார்.
    • இந்த விவாதத்திற்காக மொத்தமாக 18 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த வாரம் (ஜன. 28) குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இரு அவைகளிலும் உரையாற்றினார்.

    2026-27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நேற்று (பிப். 1) தாக்கல் செய்யப்பட்ட நிலையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குறித்த விவாதம் இன்று (பிப். 2) மக்களவையில் தொடங்குகிறது. இந்த விவாதம் பாராளுமன்றத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

     


    பா.ஜ.க. சார்பில் மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால், இந்த விவாதத்தை தொடங்கி பேசவுள்ளார். அவரை தொடர்ந்து, தேஜஸ்வி சூர்யா இந்த நன்றி தீர்மானத்தை ஆதரித்து உரையாற்ற உள்ளார்.

    இந்த விவாதத்திற்காக மொத்தமாக 18 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக மக்களவைச் செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை முன்வைக்கவுள்ளனர்.

    குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகிற பிப்ரவரி 4ஆம் தேதி பதிலளிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • ஜனாதிபதி மாளிகையைச் சுற்றிலும் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
    • முன்பதிவு அடிப்படையில் பொதுமக்கள் மாளிகையைச் சுற்றிப் பார்க்கலாம்.

    புதுடெல்லி:

    ஜனாதிபதி மாளிகையை சுற்றிலும் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தோட்டத்தில் பல்வேறு வகையிலான மரங்கள், பூச்செடிகள், அழகு தாவரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது.

    ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே உள்ள இந்த தோட்டத்தில் வளர்க்கப்படும் செடிகளில் பூக்கள் பூத்துக்குலுங்கும் மிகவும் ரம்மியமான காட்சியை அளிக்கும். இது அமிர்த தோட்டம் என அழைக்கப்படுகிறது.

    இந்நிலையில், டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையை நாளை (பிப்ரவரி 3) முதல் மார்ச் 31-ம் தேதி வரை பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு அடிப்படையில் பொதுமக்கள் மாளிகையைச் சுற்றிப் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, ஜனாதிபதி மாளிகையின் செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜனாதிபதி மாளிகையில் உள்ள அமிர்த தோட்டம் பிப்ரவரி 3 முதல் மார்ச் 31 வரை பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்படுகிறது. வாரத்தில் 6 நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இந்தத் தோட்டத்தைப் பார்வையிடலாம்.

    பராமரிப்புப் பணிகளுக்காக ஒவ்வொரு திங்கட்கிழமையும், ஹோலி பண்டிகையை முன்னிட்டு மார்ச் 4-ம் தேதியும் தோட்டம் மூடப்படும்.

    தோட்டத்துக்கு அனுமதி இலவசம். https://visit.rashtrapatibhavan.gov.in/ என்ற இணைய தளத்தில் முன்பதிவு செய்யலாம். நேரடியாக வருபவர்களுக்காக நுழைவாயிலுக்கு அருகில் பதிவு மையங்கள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×