என் மலர்
இந்தியா
- வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பகல் இரவாக பணி பார்ப்பதால் மனஅழுத்தம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு.
- மனஅழுத்தம் காரணமாக அலுவலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், புறக்கணிக்கும் முடிவு.
தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் அரசு பணி ஊழியர்கள் உள்ளிட்டோர் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
ஒரு மாதத்திற்குள் அனைத்து வாக்காளர்களுக்கும் படிவம் வினியோகம் செய்து, அது நிரப்பப்பட்டு சரிபார்க்கப்பட வேண்டும்.
சரியாக ஒரு மாதத்திற்குள் இந்த பணியை முடிக்க வேண்டும் என்பதால் பகல் இரவாக பணியில் ஈடுபட வற்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கண்ணூர் பய்யனூரைச் சேர்ந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர் அனீஷ் ஜார்ஜ் (44) SIR பணியால் மனஅழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கு உடனடியாக தீர்வு காணப்படவில்லை என்றால் அடுத்தக்கட்ட போராட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் செயல் மன்றம், ஆசிரியர் சேவை அமைப்புகளின் கூட்டுக் குழு மற்றும் கேரள அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் சங்கம் நாளை புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளன.
கேரள மாநில தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி போராட்ட பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளன.
ஏற்கனவே உள்ளாட்சி தேர்தலுக்கான பணி நடைபெற்று வருகிறது. தற்போது இந்த SIR பணியால் வாக்குசாவடி அளவிலான அதிகாரிகள் மிகுந்த அழுத்தத்திற்கு உள்ளாகி வருவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
- அரசியலை விட்டு விலகுவதாகவும் குடும்பத்துடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துக் கொள்வதாகவும் அறிவித்தார்.
- லாலுவின் மற்ற மூன்று மகள்களும் வீட்டை விட்டு வெளியேறி டெல்லி சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பீகார் தேர்தலில் ஏற்பட்ட பெரும் பின்னடைவைத் தொடர்ந்து, ஆர்ஜேடி நிறுவனர் லாலு பிரசாத் யாதவின் குடும்பத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
லாலுவின் மகன் ரோஹிணி ஆச்சார்யா நேற்று, அரசியலை விட்டு விலகுவதாகவும் குடும்பத்துடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துக் கொள்வதாகவும் அறிவித்தார்.
இதன் பின்ணணியில் தேஜஸ்வி யாதவ் இருப்பதாக கூறப்படுகிறது. தேர்தல் தோல்விக்கு பிறகு வீட்டில் ஏற்பட்ட சண்டையில், தேஜஸ்வி, மூத்த சகோதரி ரோகிணியை குடும்பத்தின் சாபம் என்றும் அவரின் சாபத்தால் தான் தேர்தல் தோல்வி ஏற்பட்டதாகவும் திட்டியுள்ளார் என்றும் ரோஹிணி மீது தேஜஸ்வி செருப்பை எடுத்து வீசியுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ரோஹிணி தந்தை லாலுவுக்கு சிறுநீரக தானம் செய்திருந்த நிலையில் அதையும் தேஜஸ்வி குறை சொன்னதாக கூறப்படுகிறது.
இதைத்த்தொடர்ந்தே ரோஹிணி அறிக்கை விட்டுள்ளார். அதில், "நேற்று, யாரோ ஒருவர் என்னை சபித்து, நான் என் தந்தைக்கு மிகவும் அழுக்கான சிறுநீரகத்தைக் கொடுத்து, கோடிக்கணக்கான ரூபாய்களைப் பெற்று, மக்களவை டிக்கெட் வாங்கினேன் என்று சொன்னார்கள்.
இப்போது என் மூன்று குழந்தைகள் மற்றும் கணவர் உட்பட என் குடும்பத்தினரின் அனுமதியைப் பெறாமல் என் சிறுநீரகத்தை தானம் செய்தது ஒரு பெரிய தவறு என்பதை நான் புரிந்துகொள்கிறேன். நான் கடவுளாகக் கருதும் என் தந்தையைக் காப்பாற்ற இதைச் செய்தேன்.

இப்போது நான் தொடர்ந்து கேட்கும் குற்றச்சாட்டு என்னவென்றால், அது ஒரு மோசமான வேலை. உங்களில் யாரும் மீண்டும் இதுபோன்ற தவறைச் செய்யக்கூடாது. ரோகிணியைப் போன்ற ஒரு மகள் மீண்டும் எந்த குடும்பத்திலும் பிறக்கக்கூடாது" என்று தெரிவித்துள்ளார். தனது குடும்பம் தன்னை ஒதுக்கிவிட்டதாக அவர் விரக்தியுடன் தெரிவித்தார். மேலும் தேஜஸ்வியின் நெருங்கிய கூட்டாளிகள் இருவர் தனக்கு எதிராக சதி செய்வதாகவும் ரோகிணி குற்றம்சாட்டியுள்ளார்.
ஏற்கனவே மனைவியை விட்டு வேறொரு இளம்பெண்ணுடம் தொடர்பில் இருந்ததால் வெளியேற்றப்பட்ட லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப், தன்னை போலவே குடும்பத்தால் சகோதரி ரோஹணி அவமதிக்கப்பட்டதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே லாலுவின் மற்ற மூன்று மகள்களும் பாட்டனாவில் உள்ள வீட்டை விட்டு வெளியேறி டெல்லி சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லாலு மற்றும் ராபிரி தேவி தம்பதிக்கு லாலு மற்றும் ராப்ரிக்கு ஏழு மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- தொடர்ந்து சோனியின் தலையை சுவரில் மோதினார்.
- கடுமையான இரத்தப்போக்கு காரணமாக சோனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
குஜராத் மாநிலம் பாவ்நகர் பாவ்நகரைச் சேர்ந்த சாஜன் பரையா (25) மற்றும் சோனி ரத்தோட் (23) ஆகியோர் கடந்த ஒரு வருடமாக ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.
இதற்கிடையே அவர்களது திருமணம் நேற்று நடைபெறுவதாக இருந்தது. திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், திருமண முகூர்த்தத்திற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பு இரவு 9 மணிக்கு, சாஜன், சோனிக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. திருமண சேலை பிடிக்காதது தொடர்பாக வெடித்த வாக்குவாதம் திருமண செலவுகள் மற்றும் பணம் குறித்து நீண்டது.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சாஜன், இரும்பு கம்பியால் சோனியின் கைகளிலும் கால்களிலும் அடித்துள்ளார். தொடர்ந்து சோனியின் தலையை சுவரில் மோதினார். கடுமையான இரத்தப்போக்கு காரணமாக சோனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து சாஜன் அங்கிருந்து தப்பியோடினார்.
தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். சாஜன் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவரை சிறப்பு குழுக்கள் அமைத்து தேடி வருவதாக ராஜேஷ் படேல் தெரிவித்தார்.
- தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களில் வெற்றி பெற்றது.
- நிதிஷ் குமார் கட்சி 101 இடங்களில் போட்டியிட்டு 85 இடங்களில் வெற்றி பெற்றது.
பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி- இந்தியா கூட்டணி இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி 243 இடங்களில் 202-ல் வெற்றி பெற்றது. பீகார் தேர்தலில் அக்கூட்டணிக்கு அமோக வெற்றி கிடைத்தது. பாஜக 89 இடங்களிலும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 85 இடங்களிலும் வெற்றி பெற்றன.
இந்த நிலையில் நிதிஷ் குமார் குமார் மகன் நிஷாந்த் "நாங்கள் தீர்க்கமான வெற்றி கிடைக்கும் என உறுதியாக இருந்தோம். ஆனால் இறுதி முடிவு நாங்கள் எதிர்பார்த்ததைவிட மகத்தானது. மிகப்பெரிய வெற்றியை அளித்த பீகார் மக்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். தந்தையின் சாதனைப் பதிவு மற்றும் மாநிலத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வதற்கான அவரது தொலைநோக்குப் பார்வையைப் பார்த்த பிறகு மக்கள் எங்களுக்கு மிகப்பெரிய பெரும்பான்மையை வழங்கியுள்ளனர்" என்றார்.
- சித்தராமையா டெல்லி சென்று ராகுல் காந்தியை சந்தித்து பேசினார்.
- அமைச்சரவை மாற்றம் குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியானது.
கர்நாடகாவில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அப்போது முதல்-மந்திரி பதவியை பெற சித்தராமையா, டி.கே. சிவகுமார் இடையே கடுமையான போட்டி நிலவியது. இதில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை சித்தராமையாவை முதல்-மந்திரியாகவும், டி.கே. சிவகுமாரை துணை முதல்-மந்திரியாவும் அறிவித்தது.
இதையடுத்து சித்தராமையா முதல் 2½ ஆண்டுகள் முதல்-மந்திரி பதவி வகிப்பார் என்றும் அடுத்த 2½ ஆண்டுகள் டி.கே. சிவகுமார் முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்பார் என்று கூறப்பட்டது. இந்த மாதத்துடன் சித்தராமையாவின் இரண்டரை ஆண்டு முதலமைச்சர் பதவிக்காலம் முடிவடைகிறது.
இதனால் டி.கே. சிவக்குமார் கர்நாடக முதலமைச்சராவார் என சில காங்கிரஸ் தலைவர்கள் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், தொடர்ந்து நான்தான் முதல்வராக இருப்பேன். மாற்றம் செய்வது குறித்து அகில இந்திய தலைமைதான் முடிவு செய்ய வேண்டும் என சித்தராமையா தெரிவித்தார்.
நேற்று சித்தராமையா டெல்லி சென்று ராகுல் காந்தியை சந்தித்தார். பீகார் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அதேவேளையில் அமைச்சரவையை மாற்றம் செய்து கொள்ள அனுமதி அளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் மாற்றம் தொடர்பாக கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் பரமேஷ்வரா கூறியதாவது:-
அமைச்சரவை மாற்றம் குறித்து சித்தராமையா மற்றும் அகில இந்திய தலைமை முடிவு செய்யும். அகில இந்திய தலைமை அமைச்சரவையை மாற்றி அமைக்க அனுமதி அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஊடகங்கள் இதைத்தான் சொல்கின்றன, இந்த விஷயம் இப்போது வெளிப்படையாகி வருகிறது. பொதுவாக, அமைச்சரவை மாற்றம் நடைபெறும் போது தலைமை மாற்றங்கள் ஏற்படாது.
அமைச்சரவை மாற்றத்திற்கான அனுமதி பெற்ற பிறகு சித்தராமையா மற்றும் உயர்மட்டக்குழு முடிவு செய்யும். இதில் எனக்கு மிகப்பெரிய பிரச்சினை ஏதும் இல்லை.
இவ்வாறு பரமேஷ்வரா தெரிவித்துள்ளார்.
- புதிதாக களம் கண்ட அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் எந்த இடத்திலும் வெற்றி பெறாமல் டெபாசிட் இழக்கும் நிலைக்கு ஆளானது.
- பீகாரின் பொதுக் கடன் தற்போது ரூ.4.06 லட்சம் கோடியாக உள்ளது. தினசரி வட்டி சுமை ரூ.63 கோடியாக உள்ளது.
நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் 243 இல் 202 தொகுதிகளை கைப்பற்றி பாஜகவின் -ஜேடியுவின் என்டிஏ கூட்டணி பெரு வெற்றி பெற்றுள்ளது. எதிர்த்து போட்டியிட்ட இந்தியா கூட்டணி 35 இடங்கள் மட்டுமே பெற்று படுதோல்வியை சந்தித்தது.
இதற்கிடையே புதிதாக களம் கண்ட அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் எந்த இடத்திலும் வெற்றி பெறாமல் டெபாசிட் இழக்கும் நிலைக்கு ஆளானது.
இதற்கிடையே தேர்தலுக்கு முன் என்டிஏ அரசு சுமார் ஒன்றரை கோடி பீகார் பெண்களின் வங்கிக்கணக்கில் தொழில் தொடங்கும் நிதிக்கான முன்பணம் என்ற பெயரில் ரூ.10,000 டெபாசிட் செய்ததே அக்கூட்டணியில் வெற்றிக்கு காரணம் என ஜன் சுராஜ் குற்றம்சாட்டியது.
இந்நிலையில் இன்று, ஜன் சுராஜ் கட்சியின் தேசியத் செய்தி தொடர்பாளர் உதய் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
பீகாரின் பொதுக் கடன் தற்போது ரூ.4.06 லட்சம் கோடியாக உள்ளது. தினசரி வட்டி சுமை ரூ.63 கோடியாக உள்ளது. அரசு கஜானா காலியாக இருக்கிறது. பொதுப் பணத்தைப் பயன்படுத்தி, அவர்கள் மக்களின் ஓட்டுக்களை வாங்கினார்கள்.
ஜூன் மாதம் முதல் தேர்தல் அறிவிப்பு வரையில் மக்களின் வாக்குகளை வாங்குவதற்காக நிதிஷ் குமார் அரசால் ரூ.40 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது.
மாநிலத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்ட ரூ.10 ஆயிரம் பணம், உலக வங்கியிலிருந்து வேறு சில திட்டங்களுக்காக வந்த ரூ.21,000 கோடியிலிருந்து வழங்கப்பட்டது.
தேர்தல் ஒழுக்க நெறிகள் அமலுக்கு வருவதற்கு ஒரு மணிநேரத்துக்கு முன்பாகத்தான் ரூ. 21,000 கோடியில் ரூ.14,000 கோடி எடுக்கப்பட்டு, 1.25 கோடி பெண்களுக்கு ரூ. 10,000 தொகை விநியோகிக்கப்பட்டது. அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பொது நலனுக்காக செலவிட இப்போது பணம் இல்லை" என்று கூறினார்.
- மீட்புப் படையினர் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- மற்றவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
உத்தரபிரதேசத்தில் கல் குவாரி இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். 8 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.
சோன்பத்ரா மாவட்டத்தில் ஓப்ராவில் உள்ள கிராமத்தில் உள்ள ஒரு கல் குவாரியில் இன்று இந்த விபத்து நடந்துள்ளது.
தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இடிபாடுகளுக்கு அடியில் ஒரு தொழிலாளியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. மற்றவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
- உங்களைப் போன்ற திறமையற்ற ஆளுநர், பாஜகவின் ஊழியர், தொடரும் வரை, மேற்கு வங்கத்தில் எந்த நல்லதும் நடக்கப்போவதில்லை.
- ஆளுநரிடம் ராஜ்பவனில் பாஜக குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டாம் என்று சொல்லுங்கள்.
மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து வரும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை அம்மாநில ஆளுநர் ஆனந்தா போஸ் அண்மையில் ஆதரித்து பேசியிருந்தார்.
இது முறைகேடுகளை நீக்கி, தேர்தல் முறையில் பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், பீகார் தேர்தல்கள் SIR-க்கு பரந்த அளவிலான மக்கள் அங்கீகாரத்தை வெளிப்படுத்தியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து ஆளுநர் ஆனந்தா போஸை விமர்சித்த ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் பாராளுமன்ற எம்.பி கல்யாண் பானர்ஜி, "முதலில், ஆளுநரிடம் ராஜ்பவனில் பாஜக குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டாம் என்று சொல்லுங்கள். அவர் குற்றவாளிகளை அங்கேயே வைத்திருக்கிறார்.
அவர்களுக்கு துப்பாக்கிகள் மற்றும் குண்டுகளை வழங்குகிறார். திரிணாமுல் தொண்டர்களை தாக்கச் சொல்கிறார். முதலில் இதை அவர் நிறுத்தட்டும். உங்களைப் போன்ற திறமையற்ற ஆளுநர், பாஜகவின் ஊழியர், தொடரும் வரை, மேற்கு வங்கத்தில் எந்த நல்லதும் நடக்கப்போவதில்லை" என்று கூறினார்.
ராஜ்பவனில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் இருப்பதாக கூறும் எம்.பி மாநில காவல்துறை மீது நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துகிறாரா, கல்யாண் பானர்ஜி, பொதுமக்கள் மற்றும் ஊடகங்களுக்கு ராஜ்பவன் திறந்திருக்கும். அனைவரும் வந்து பார்க்க வரவேற்கப்படுகிறார்கள் என்று ஆளுநர் ஆனந்தா போஸ் தெரிவித்தார்.
இதற்கிடையே ஆளுநர் மாளிகையில் துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் இருப்பதாக கல்யாண் பேனர்ஜி கூறியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆளுநர் மாளிகையான ராஜபவன் அறிக்கை வெளியிட்டுள்ளது.
- சிட்-அப்கள் செய்து முடித்த சிறிது நேரத்திலேயே கீழ் முதுகில் கடுமையான வலி ஏற்பட்டது.
- குழந்தையால் எழுந்திருக்க முடியவில்லை என்றும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள வசாய் தாலுகாவில் பள்ளிக்கு தாமதமாக வந்ததற்காக தண்டனையாக 100 முறை சிட்-அப் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதால் 13 வயது சிறுமி உயிரிழந்தார்.
கடந்த வாரம், ஸ்ரீ ஹனுமந்த் வித்யா மந்திர் உயர்நிலைப் பள்ளியின் மாணவி அன்ஷிகா கவுட்-க்கு, பள்ளிப் பையுடன் 100 முறை சிட்-அப்கள் செய்து முடித்த சிறிது நேரத்திலேயே கீழ் முதுகில் கடுமையான வலி ஏற்பட்டது.
மாலை வீடு திரும்பியபோது சிறுமியின் உடல்நிலை மோசமடைந்த நிலையில் பெற்றோர்கள் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
நிலைமை மேலும் மோசமடைந்து சிறுமி மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஒரு வாரமாக சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் பலனளிக்காமல் நேற்று முன் தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.
தண்டனைக்குப் பிறகு, தங்கள் மகளின் கழுத்து மற்றும் முதுகில் கடுமையான வலி ஏற்பட்டதாகவும், குழந்தையால் எழுந்திருக்க முடியவில்லை என்றும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக விபத்து மரணம் என வழக்குப் பதிவு செய்த காவல்துறை, பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின் மேற்கொண்டு விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
அன்ஷிகாவின் மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக வட்டார கல்வி அதிகாரி பாண்டுரங் கலங்கே தெரிவித்தார்.
- நாளைமுதல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜை, வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறும்.
- மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். மீண்டும் பிற்பகல் 3 மணிக்கு நடை திறக்கப்படும்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு 60 நாட்கள் நடை திறந்து சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி மாலை அணியும் ஐயப்ப பக்தர்கள் விரதத்தை கடைபிடிப்பார்கள். பிறகு இருமுடி கட்டியபடி சபரிமலைக்கு வந்து ஐயப்பனை பயபக்தியுடன் தரிசனம் செய்வார்கள்.
அந்த வகையில் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. பக்தர்கள் சரண கோஷங்கள் முழங்க தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார்.
நாளைமுதல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜை, வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறும். கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் புதிய மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி தலைமையில் தினசரி அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், தொடர்ந்து காலை 11.30 மணி வரை நெய் அபிஷேகம், உச்ச பூஜைக்கு பிறகு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும்.
மீண்டும் பிற்பகல் 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு மாலை 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனையும், இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகமும் நடைபெறும். அத்தாள பூஜைக்கு பிறகு இரவு 11 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படும்.
நடப்பு சீசனையொட்டி அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந் தேதி மண்டல பூஜையும், ஜனவரி 14-ந் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெறும்.
- அடர்ந்த காட்டில் பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.
- 2025 இல் மட்டும் 357 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் இன்று பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் மூன்று மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.
சுக்மா காவல் கண்காணிப்பாளர் கிரண் சவான், "மாவோயிஸ்டுகள் இருப்பது குறித்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்புப் படையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
அடர்ந்த காட்டில் பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. துப்பாக்கிச் சண்டையில் இதுவரை மூன்று மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். பாதுகாப்புப் படையினர் தங்கள் நடவடிக்கைகளைத் தொடர்கின்றனர்" என்றார்.
2025 இல் மட்டும் 357 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். மாவோயிஸ்டுகளை அழிக்க 2026 மார்ச் மாதத்தை இலக்காக த்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நிர்ணயித்துள்ளார்.
- இந்துக்களும் நக்சல்களாக உள்ளனர். பஞ்சாபில் பல இந்து பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- எந்த மத வேதமும் மற்றவர்களுக்கு தீங்கு விளைவிப்பதை ஊக்குவிக்கவில்லை.
டெல்லி கடந்த திங்கள்கிழமை நடந்த குண்டுவெடிப்புக்குப் பிறகு பரவிய வதந்திகளுக்கு மத்தியில், செவ்வாய்க்கிழமை உத்தரப் பிரதேச மாநிலம் தியோபந்த் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் நரேந்திர குமார் சர்மா ஒரு கூட்டத்தை கூட்டினார்.
கூட்டத்தில் பேசிய இன்ஸ்பெக்டர் நரேந்திர குமார் சர்மா, "மக்கள் நல்லிணக்கத்தைப் பேண வேண்டும் என்றார். சமூக ஊடகங்களில் பரவும் தவறான செய்திகளை மக்கள் நம்பக்கூடாது.
பயங்கரவாதத்திற்கும் பயங்கரவாதிகளுக்கும் மதம் இல்லை. முஸ்லிம்கள் மட்டுமே பயங்கரவாதிகள் என்று நினைப்பது தவறு. இதுபோன்றவர்கள் எல்லா மதங்களிலும் உள்ளனர்.
இந்து சமூகத்தை சேர்ந்தவர்களும் நக்சல்களாக உள்ளனர். கடற்படையில் பல பயங்கரவாதிகள் பிடிபட்டுள்ளனர். ராணுவத்திலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பஞ்சாபில் பல இந்து பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். முஸ்லிம்கள் மட்டுமே பயங்கரவாதிகள் என்று சொல்வது தவறு. எந்த மத வேதமும் மற்றவர்களுக்கு தீங்கு விளைவிப்பதை ஊக்குவிக்கவில்லை.
இந்த நாற்காலி எனக்கு தாய் போன்றது. நான் 34 ஆண்டுகளாக பாகுபாடு இல்லாமல் பணியாற்றி வருகிறேன்.
மாணவனாக இருந்தபோது நான் கண்டு வியந்த போலீஸ் அமைப்பை மேம்படுத்த வேண்டும் என்பதற்காகவே நான் காவல் துறையில் சேர்ந்தேன்." என்று பேசினார்.
மேலும் காவல் நிலையத்திற்குள் ஏழைகள் சுரண்டப்படும் போக்கு நிலவுவதாகவும் அவர் தெரிவித்தார்.
நரேந்திர குமார் இவ்வாறு பேசிய வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் அவர் களப் பணியில்(Field of duty) இருந்து நீக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.






