என் மலர்
இந்தியா
- மதீனாவில் இந்தியர்கள் விபத்தில் சிக்கிய செய்தி அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன்.
- பஸ்சில் இருந்த 20 பெண்கள், 11 சிறுவர்கள் உள்பட 42 இந்தியர்கள் பலியானார்கள்.
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் சவுதி அரேபியாவுக்கு உம்ரா புனித பயணம் மேற்கொண்டனர்.
அவர்கள் மெக்காவில் தொழுகையை முடித்து விட்டு மதீனாவுக்கு பஸ்சில் சென்று கொண்டு இருந்தனர். ஜோரா என்ற இடத்தில் பஸ் சென்று கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக பஸ் மீது டீசல் லாரி மோதியது. இதில் பஸ் தீப்பிடித்து எரிந்தது.
இந்த கோர விபத்தில் பஸ்சில் இருந்த 20 பெண்கள், 11 சிறுவர்கள் உள்பட 42 இந்தியர்கள் பலியானார்கள். இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த 42 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
மதீனாவில் இந்தியர்கள் விபத்தில் சிக்கிய செய்தி அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினருடன் என் எண்ணங்கள் உள்ளன.
காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். ரியாத்தில் உள்ள நம் தூதரகம் மற்றும் ஜெட்டாவில் உள்ள துணைத் தூதரகம் அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றன.
நம் அதிகாரிகள் சவுதி அரேபிய அதிகாரிகளுடனும் நெருங்கிய தொடர்பில் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கார் பழுதாவது தொடர் கதையானது.
- வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில் நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியை சேர்ந்தவர் கணேஷ் சங்கடே. இவர் சமீபத்தில் புதிதாக ஒரு கார் வாங்கினார். ஆனால் அந்த காரில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் தான் கார் வாங்கிய ஷோரூம் நிறுவனத்தினரிடம் புகார் செய்தார். ஆனாலும் அவர்கள் உரிய முறையில் பதில் அளிக்கவில்லை.
எனவே கார் பழுதாவது தொடர் கதையானது. இதனால் ஆத்திரம் அடைந்த கணேஷ் சம்பவத்தன்று நூதன போராட்டத்தை நடத்த திட்டமிட்டார். அதன்படி தனது புது காரை மேள தாளங்கள் முழங்க கழுதைகளை வைத்து இழுத்து வந்து ஷோரூம் முன்பு நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதுகுறித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில் நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- பீகாரில் வெற்றி பெற்றதே 6 எம்.எல்.ஏ.க்கள் தான்.
- ஐக்கிய ஜனதாதளமும் காங்கிரசை துடைத்தெறிய வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது.
பீகார் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.-ஐக்கிய ஜனதாதளம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இமாலய வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தக்க வைத்துள்ளது.
இந்த கூட்டணியை எதிர்த்து போட்டியிட்ட ராஷ்டீரிய ஜனதாதளம்-காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. அதிலும் பாரம்பரியமிக்க தேசிய கட்சியான காங்கிரஸ் போட்டியிட்ட 61 தொகுதிகளில் வெறும் 6 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது. அக்கட்சிக்கு ஆறுதல் அளிப்பது போல இந்த ஒற்றை இலக்க வெற்றி அமைந்தது.
இத்தோல்வி காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்தியா கூட்டணிக்கே இது சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.
தொண்டர்கள் மட்டுமின்றி பீகாரில் வெற்றி பெற்ற 6 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் மனநிலையும் தற்போது சற்று மாறி இருப்பதாக கூறப்படுகிறது. இனியும் காங்கிரசில் பயணித்தால் தங்களுக்கு எதிர்காலம் இருக்குமா? இல்லையா? என்ற சந்தேகம் அவர்களுக்கு எழுந்துள்ளது.
இதனால் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களில் சிலர் காங்கிரசில் இருந்து விலகி நிதிஷ்குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தில் இணையலாமா? என ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இது தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் ஐக்கிய ஜனதாதள முக்கிய தலைவரிடம் தொடர்பில் இருப்பதாக தெரிகிறது. இது காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளித்து இருக்கிறது. பீகாரில் வெற்றி பெற்றதே 6 எம்.எல்.ஏ.க்கள் தான். அவர்களும் ஒரு வேளை கட்சி தாவி விட்டால் ஒண்ணுமே இல்லாமல் போய் விடுமே என கட்சி மேலிடம் கருதுகிறது. அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியும் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
அதே சமயம் ஐக்கிய ஜனதாதளமும் காங்கிரசை துடைத்தெறிய வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது. இதனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுப்பதற்கான முயற்சியிலும் அக்கட்சி ஈடுபட்டு வருவதாக பரபரப்பாக பேசப்படுகிறது. இதற்காக திரைமறைவு பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இது பற்றி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யாரும் எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை. இதனால் எந்த நேரத்தில் எதுவும் நடக்கலாம் என்ற சஸ்பென்ஸ் பீகாரில் நீடித்து வருகிறது.
- தான் வழக்கமாக சூதாடும் இடத்திற்கு சென்ற அவரிடம் அன்று பணம் இல்லை.
- பணயமாக வைத்த மனைவியை கொண்டு சென்று தோற்றவர்களிடம் ஒப்படைத்தார்.
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்தவர் டேனிஷ். இவருக்கும் பாக்தாத் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.
டேனிஷ் குடிப்பழக்கத்திற்கும் சூதாட்டத்திற்கும் அடிமையாகி இருந்தார். எப்போதும் சூதாட்டம் ஆடிக் கொண்டுதான் இருப்பார். சூதாட்டத்தில் பணம், பொருட்களை நிறைய இழந்துள்ளார்.
இந்த நிலையில் தன் மனைவியிடம் அவரது வீட்டிற்கு சென்று நகை, பணம் வாங்கி வரச்சொல்லி கட்டாயப்படுத்தினார். அவர் வாங்கி வரவில்லை. தான் கேட்டும் நகை, பணம் வாங்கி வராததால் மனைவி மீது டேனிஷ் ஆத்திரத்தில் இருந்தார்.
தான் வழக்கமாக சூதாடும் இடத்திற்கு சென்ற அவரிடம் அன்று பணம் இல்லை. ஆனால் சூதாடாமல் அவரால் இருக்க முடியவில்லை. அப்போது என்ன செய்யலாம் என்று யோசித்த அவர் பணத்திற்கு பதிலாக தனது மனைவியை பணயமாக வைத்து சூதாடினார். துரதிர்ஷ்டவசமாக அன்று அவர் சூதாட்டத்தில் தோற்று போனார். இதனால் அவர் தனது மனைவியை இழக்க நேரிட்டது. பணயமாக வைத்த மனைவியை கொண்டு சென்று தோற்றவர்களிடம் ஒப்படைத்தார்.
சூதாட்டத்தில் வெற்றி பெற்ற 8 பேர் கும்பல் அவரது மனைவியை பாலியல் ரீதியாக துன்புறுத்த தொடங்கினர். இதனை கணவரிடம் கூறியும் அவர் செவி சாய்க்கவில்லை. இதையடுத்து அந்த 8 பேர் கும்பலும் அவரது மனைவியை கட்டாயப்படுத்தி மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்தனர். இதில் அந்த பெண் பலவீனம் அடைந்தாள்.
அந்த 8 பேர் கும்பலுடன் சேர்ந்து டேனிசும் அவரது மனைவியை துன்புறுத்தி அவரை ஆற்றில் தூக்கி வீசினார். நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த பெண்ணை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டனர்.
இதையடுத்து அவர் தனக்கு நடந்த கொடுமை குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அந்த புகாரில் தனது மாமனார் மற்றும் மேலும் 2 பேரும் தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார். மேலும் வரதட்சணை கேட்டு மாமியார் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பலியான அனைவரும் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
- தலைமைச் செயலகத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் சவுதி அரேபியாவுக்கு உம்ரா புனித பயணம் மேற்கொண்டனர்.
அவர்கள் மெக்காவில் தொழுகையை முடித்து விட்டு மதீனாவுக்கு பஸ்சில் சென்று கொண்டு இருந்தனர். ஜோரா என்ற இடத்தில் பஸ் சென்று கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக பஸ் மீது டீசல் லாரி மோதியது. இதில் பஸ் தீப்பிடித்து எரிந்தது.
இந்த கோர விபத்தில் பஸ்சில் இருந்த 20 பெண்கள், 11 சிறுவர்கள் உள்பட 42 பேர் பலியானார்கள். பஸ் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் அவர்கள் உடல் கருகிய நிலையில் கிடந்தன.
இதை தொடர்ந்து மீட்பு படையினர் விரைந்து சம்பவ இடத்துக்கு சென்றனர். பலியான அனைவரும் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
இச்சம்பவம் குறித்து அறிந்த தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, உயிரிழந்தவர்கள் குறித்து முழு விவரங்களை கண்டறியவேண்டும் என்றும் களத்தில் இறங்கி உரிய நிவாரண முயற்சிகளை வழங்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் தலைமைச் செயலகத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
இதனிடையே, பேருந்து விபத்தை அடுத்து ஜெட்டாவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாக இந்திய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு 8002440003 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- குடும்பப் பொறுப்புகள் மற்றும் வேலை அழுத்தங்கள் காரணமாக அவர் கடுமையான மன அழுத்தத்தை எதிர்கொண்டார்.
- தனது கணவர் அபிஷேக்குடன் திருமலைக்கு வந்த பூஜா, கோவிலில் முன் பகுதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள துனியைச் சேர்ந்தவர் நூத்தி பூஜா (வயது 24), ஐதராபாத்தில் உள்ள ஒரு ஐ.டி.நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவர் தற்போது வீட்டிலிருந்து வேலை செய்து வருகிறார்.
அவர் நள்ளிரவு வரை கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்ய வேண்டியிருந்தது. மறுபுறம், குடும்பப் பொறுப்புகள் மற்றும் வேலை அழுத்தங்கள் காரணமாக அவர் கடுமையான மன அழுத்தத்தை எதிர்கொண்டார்.
இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்த 'கோவிந்த கோடி' திட்டத்தைப் பற்றி அறிந்தார். பூஜா, ஏழுமலையானின் பெயர்களை எழுத முடிவு செய்தார். ஆரம்பத்தில் ஒரு லட்சம் பெயர்களை எழுத விரும்பினாலும், அதிலிருந்து கிடைத்த மகிழ்ச்சியுடன் அவர் தொடர்ந்து 10 லட்சம் தடவை எழுதி முடித்தார்.
மொத்தம் 10,01,116 கோவிந்த நாமங்களை எழுதியுள்ள அவருக்கு திருப்பதி கோவிலில் விஐபி பிரேக் தரிசனத்தை சிறப்பாக வழங்கியது.
தனது கணவர் அபிஷேக்குடன் திருமலைக்கு வந்த பூஜா, கோவிலில் முன் பகுதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
சுவாமியின் ஆசியுடன் முதல் கடபத்திலிருந்து அவரைத் தரிசனம் செய்யும் பாக்கியம் தனக்குக் கிடைத்ததில் மகிழ்ச்சி என தெரிவித்தார்.
- ஒன்றை மருந்து கடை உரிமையாளரிடம் சார்ஜ் போட கொடுக்கிறார்.
- 65-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் அவருடைய நடமாட்டம் பதிவாகி இருந்தது.
டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்திய உமர் முகமது நடமாட்டம் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவானது.
இதனை தொடர்ந்து அவர் கடைசி 36 மணி நேரங்களில் எவ்வாறு நடந்து கொண்டார் என்பது குறித்த தகவல்களை போலீசார் மற்றும் புலனாய்வுத்துறையினர் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்பு அரியானாவில் உள்ள ஒரு கேமராவில் உமர் முகமதுவின் நடமாட்டம் பதிவாகியிருந்தது.
அவர் பணியாற்றிய பல்கலைக்கழகத்தில் இருந்து 800 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு மருந்து கடையில் உமர் முகமது 2 செல்போன்களை கைகளில் வைத்துள்ளார். ஒன்றை மருந்து கடை உரிமையாளரிடம் சார்ஜ் போட கொடுக்கிறார். மற்றொன்று கையில் வைத்துள்ளார்.
இந்த காட்சிகளை தொடர்ந்து அவருடைய நடமாட்டங்களை கண்காணிப்பு கேமரா மூலம் சேகரித்தனர். 65-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் அவருடைய நடமாட்டம் பதிவாகி இருந்தது.
குண்டுவெடிப்புக்கு முன்பு அவர் 3 மணி நேரத்திற்கு மேலாக செங்கோட்டை வாகன நிறுத்துமிடத்தில் தங்கி உள்ளார். அதில் அவர் பயன்படுத்திய செல்போன்கள் எதுவும் கையில் இல்லை.
மேலும் அங்குள்ள மசூதிக்குள் சென்று முகமூடியை கழற்றி விட்டு தனியாக 15 நிமிடங்கள் இருந்துள்ளார்.
அப்போதும் அவர் யாருடனும் தொடர்பு கொள்ளவில்லை. அவர் கையில் வேறு எதையும் வைத்திருக்கவில்லை. இதன் மூலம் தாக்குதலுக்கு முன்பு உமர் முகமது தான் பயன்படுத்திய 2 செல்போன்களையும் வேறு யாரிடமாவது கொடுத்து வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அவருடைய நெருங்கிய கூட்டாளியான டாக்டர் முசம்மில் ஷகீல் கனாய் கைது செய்யப்பட்ட அதே நாளில் தன்னுடைய செல்போன் எண்கள் இரண்டையும் உமர் முகமது செயலழிக்க வைத்துள்ளார்.
அதற்கு பிறகு அவர் புதிய சிம்கார்டுகளை பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது.
உமர் முகமது ஒரு செல்போனை தன்னுடைய சொந்த பயன்பாட்டுக்காகவும் மற்றொன்றை தாக்குதல் பற்றிய தீவிரவாத கும்பலுடன் தொடர்பு வைத்துக்கொள்ள பயன்படுத்தி இருக்கலாம்.
அந்த 2 செல்போன்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர். அந்த செல்போன் கண்டு பிடிக்கப்பட்டால் இந்த திட்டத்தில் உள்ள தீவிரவாத கும்பல் குறித்த தகவல்கள், உமர் முகமதுவுக்கு நிதி உதவி அளித்தவர்கள் யார் என்ற தகவல்களும் வெளிவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நியாயமான முறையில் மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
- வங்காளதேசம் ஜனநாயக நாடாக மாற வேண்டும்.
வங்காளதேசத்தில் இருந்து கடந்த ஆண்டு வெளியேறிய முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தற்போது இந்தியாவில் ரகசிய இடத்தில் தங்கி உள்ளார்.
இதுவரை மவுனம் காத்து வந்த அவர் முதல் முறையாக ஒரு செய்தி நிறுவனத்திற்கு மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார்.
அந்த பேட்டியில் அவர் கூறி இருப்பதாவது:-
வங்காளதேசத்தில் நடந்த நிகழ்வுகள் ஜனநாயகத்தின் துயரமான அழிவு ஆகும். நியாயமான முறையில் மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். ஆனால் மிரட்டல் மூலம் வன்முறையை தூண்டிவிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அகற்ற ஜனநாயக விரோத சக்திகள் சதி செய்தது.
நிலைமை மிகவும் மோசமாக இருந்ததால் எனது குடும்ப பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பதை தடுப்பதற்காகவும், நான் நாட்டைவிட்டு வெளியேறுவது தான் ஒரே வழி என நினைத்தேன். ஆனால் நாட்டை விட்டு நான் வெளியேறியது வேதனை அளிப்பதாக உள்ளது.
நமது பன்முக கலாச்சாரம் தாக்கப்பட்டதையும், பொருளாதார வளர்ச்சிக்காக நாங்கள் எடுத்த நடவடிக்கைகள் அர்த்தமற்ற முறையில் தலைகீழாக மாற்றப்பட்டதையும் பார்க்கும்போது கடினமாக இருக்கிறது.
வங்காளதேசம் ஜனநாயக நாடாக மாற வேண்டும் என்பது தான் அங்குள்ள மக்களின் விருப்பமாகும். எனது தந்தையின் வரலாற்று சிறப்புமிக்க இல்லத்தை அழித்தது ஒரு காட்டு மிராண்டி தனமான முயற்சி ஆகும்.
அதிகாரத்தில் இருப்பவர்கள் நமது விடுதலை போரின் உணர்வை அழிக்க விரும்புகிறார்கள். இது நமது எதிர்காலத்திற்காக தங்கள் உயிரை கொடுத்தவர்களின் நினைவுகளை அவமானப்படுத்துவது போன்றதாகும்.
வங்கதேச மக்கள் தங்கள் பாரம்பரியத்தை ஒரு போதும் மறக்க அனுமதிக்கமாட்டார்கள். முகமது யூனுஸ் ஆட்சிக்கு வந்ததில் இருந்து சிறுபான்மையினரை குறிவைத்து நடத்தப்பட்ட திட்டமிட்ட வன்முறை சம்பவங்களால் வேதனை அடைந்துள்ளேன்.
என்னை வரவேற்று தங்குவதற்கு அடைக்கலம் கொடுத்ததற்காக இந்திய மக்களுக்கு மிகவும் நன்றி உள்ளராக இருப்பேன்
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- காஷ்மீர் இளைஞர் அமீர் ரஷீத் அலியை தேசிய புலனாய்வு அமைப்பு செய்து விசாரணை
- காஷ்மீரில் இருந்து வந்த அமீர், டெல்லியில் தங்கி காரை வாங்கி, உமருக்குக் கொடுத்தார்
டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர் . இது தொடர்பான வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) விசாரித்து வருகிறது.
இந்நிலையில், டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிகுண்டு வெடிப்பு சம்பவம் தற்கொலைப் படை தாக்குதல் என்று தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
டெல்லி குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளி மருத்துவர் உமர் உன்-நபிக்கு உதவிய காஷ்மீர் இளைஞர் அமீர் ரஷீத் அலியை தேசிய புலனாய்வு அமைப்பு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
காஷ்மீரில் இருந்து வந்த அமீர், டெல்லியில் தங்கி காரை வாங்கி, உமருக்குக் கொடுத்தார் என்று என்ஐஏ தெரிவித்தது.
- கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை ஆகியவற்றுக்கான தரிசன டிக்கெட்டுகளை 21-ந்தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
- ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் 25-ந் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும்.
திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி மாதம் வழிபட ஆன்லைனில் பல்வேறு தரிசன டிக்கெட்டுகள், தங்குமிட அறைகள் ஒதுக்கீடு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி கோவிலில் உள்ள ஆர்ஜித சேவைகளான சுப்ர பாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதள பாத பத்மாராதனை போன்ற டிக்கெட்டுகள் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்படுகின்றன.
இந்த ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை 20-ந்தேதி காலை 10 மணி வரை மின்னணு டிப் செய்ய ஆன்லைனில் பதிவு செய்யலாம். 20-ந் தேதி முதல் 22-ந் தேதி மதியம் 12 மணிக்கு முன் பணம் செலுத்தியவர்களுக்கு இந்த டிக்கெட்டுகள் வழங்கப்படும்.
கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை ஆகியவற்றுக்கான தரிசன டிக்கெட்டுகளை 21-ந்தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
அங்கப்பிரதட்சண டோக்கன்களுக்கான ஒதுக்கீடு 24-ந்தேதி காலை 10 மணிக்கும், ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் காலை 11 மணிக்கும், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான டோக்கன்கள் மாலை 3 மணிக்கும் வெளியிடப்படும். ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் 25-ந் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும்.
பக்தர்கள் ஸ்ரீவாரி ஆர்ஜித சேவை மற்றும் தரிசன டிக்கெட்டுகள், தங்குமிட டிக்கெட்டுகள் ஆகியவற்றை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ttdevasthanams.ap.gov.in மூலம் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
- புல்லட் ரெயில் இயங்குவதற்கான தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
- பணிகளை மேற்கொண்டு வரும் புல்லட் ரெயில் இன்ஜினியர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.
அகமதாபாத்:
இந்தியாவின் முதல் புல்லட் ரெயில் சேவை திட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாதில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பை வரை தொடங்கப்பட உள்ளது. இதற்காக 508 கி.மீ. தொலைவுக்கு புல்லட் ரெயில் இயங்குவதற்கான தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அகமதாபாத், ஆனந்த், வதோதரா, பருச், சூரத், பிலிமோரா, வாபி, பொய்சார், விரார், தானே மற்றும் மும்பை என முக்கிய நகரங்கள் வழியாக இந்த புல்லட் ரெயில் இயக்கப்படவுள்ளது.
இந்நிலையில், சூரத்தில் பணிகளை மேற்கொண்டு வரும் புல்லட் ரெயில் இன்ஜினியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் கேட்டறிந்தார். அதன்பின் பிரதமர் மோடி பேசியதாவது:
மும்பை-அகமதாபாத் இடையிலான புல்லட் ரெயில் சேவை திட்டம் தொடர்பான அனுபவங்களை, இன்ஜினியர்கள் ஆவணப்படுத்தி வைக்க வேண்டும். எதிர்காலத்தில் இது போன்ற திட்டங்களை செயல்படுத்துவதற்கு அந்த அனுபவம் உதவியாக இருக்கும்.
நம் நாடு தொடர்ந்து சோதனை நடத்துவதிலேயே இருக்கக் கூடாது. பணிகளில் கிடைத்த அனுபவங்களை புதிய திட்டங்களில் பிரதிபலிக்க வைக்க வேண்டும். அனுபவங்களை ஆவணப்படுத்துவதன் மூலம் அடுத்து வரும் இளம் தலைமுறையினர் தேச கட்டுமானப் பணிகளில் சிறப்பான பங்களிப்பை தர முடியும். அர்ப்பணிப்பு உணர்வுடன் வாழ வேண்டும் என தெரிவித்தார்.
- அரியானாவின் அல்-பலா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பல மருத்துவர்களை தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) கைது செய்தது.
- டெல்லி சம்பவத்திற்கும் அவர்களுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்று NIA அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த திங்கள்கிழமை மாலை 13 பேர் உயிரிழந்த டெல்லி செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்புகளில் தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் பேரில் அரியானாவின் அல்-பலா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பல மருத்துவர்களை தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) கைது செய்தது.
கைதுசெய்யப்பட்ட மருத்துவர்கள் ரெஹான், முகமது மற்றும் முஸ்தகிம் ஆகிய மூவைரயும், உர வியாபாரி தினேஷ் சிங்கிளா என்பவரையும் 3 நாள் தொடர் விசாரணைக்குப் பிறகு இன்று NIA இறுதியாக விடுவித்தது.
டெல்லி குண்டுவெடிப்புகளுடன் எந்த குறிப்பிட்ட தொடர்பும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
டெல்லி குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளி மருத்துவர் உமர் உன்-நபியுடன் அவர்களுக்கு ஏதேனும் தொடர்பு இருந்ததா என்பதைக் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இருப்பினும், டெல்லி சம்பவத்திற்கும் அவர்களுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்று NIA அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர்கள் நீண்ட காலத்திற்கு முன்பு உமருடன் பழகியிருந்தாலும், சமீப காலங்களில் அவர்களுக்கு எந்த தொடர்பும் இருந்ததாகத் தெரியவில்லை. எனவே, அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் சில நாட்களுக்கு கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என்று NIA தெரிவித்துள்ளது.






