என் மலர்tooltip icon

    இந்தியா

    என் தாய் நாட்டை விட்டு வெளியேறியது மிகவும் வேதனை அளிக்கிறது- ஷேக் ஹசீனா உருக்கம்
    X

    என் தாய் நாட்டை விட்டு வெளியேறியது மிகவும் வேதனை அளிக்கிறது- ஷேக் ஹசீனா உருக்கம்

    • நியாயமான முறையில் மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
    • வங்காளதேசம் ஜனநாயக நாடாக மாற வேண்டும்.

    வங்காளதேசத்தில் இருந்து கடந்த ஆண்டு வெளியேறிய முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தற்போது இந்தியாவில் ரகசிய இடத்தில் தங்கி உள்ளார்.

    இதுவரை மவுனம் காத்து வந்த அவர் முதல் முறையாக ஒரு செய்தி நிறுவனத்திற்கு மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார்.

    அந்த பேட்டியில் அவர் கூறி இருப்பதாவது:-

    வங்காளதேசத்தில் நடந்த நிகழ்வுகள் ஜனநாயகத்தின் துயரமான அழிவு ஆகும். நியாயமான முறையில் மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். ஆனால் மிரட்டல் மூலம் வன்முறையை தூண்டிவிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அகற்ற ஜனநாயக விரோத சக்திகள் சதி செய்தது.

    நிலைமை மிகவும் மோசமாக இருந்ததால் எனது குடும்ப பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பதை தடுப்பதற்காகவும், நான் நாட்டைவிட்டு வெளியேறுவது தான் ஒரே வழி என நினைத்தேன். ஆனால் நாட்டை விட்டு நான் வெளியேறியது வேதனை அளிப்பதாக உள்ளது.

    நமது பன்முக கலாச்சாரம் தாக்கப்பட்டதையும், பொருளாதார வளர்ச்சிக்காக நாங்கள் எடுத்த நடவடிக்கைகள் அர்த்தமற்ற முறையில் தலைகீழாக மாற்றப்பட்டதையும் பார்க்கும்போது கடினமாக இருக்கிறது.

    வங்காளதேசம் ஜனநாயக நாடாக மாற வேண்டும் என்பது தான் அங்குள்ள மக்களின் விருப்பமாகும். எனது தந்தையின் வரலாற்று சிறப்புமிக்க இல்லத்தை அழித்தது ஒரு காட்டு மிராண்டி தனமான முயற்சி ஆகும்.

    அதிகாரத்தில் இருப்பவர்கள் நமது விடுதலை போரின் உணர்வை அழிக்க விரும்புகிறார்கள். இது நமது எதிர்காலத்திற்காக தங்கள் உயிரை கொடுத்தவர்களின் நினைவுகளை அவமானப்படுத்துவது போன்றதாகும்.

    வங்கதேச மக்கள் தங்கள் பாரம்பரியத்தை ஒரு போதும் மறக்க அனுமதிக்கமாட்டார்கள். முகமது யூனுஸ் ஆட்சிக்கு வந்ததில் இருந்து சிறுபான்மையினரை குறிவைத்து நடத்தப்பட்ட திட்டமிட்ட வன்முறை சம்பவங்களால் வேதனை அடைந்துள்ளேன்.

    என்னை வரவேற்று தங்குவதற்கு அடைக்கலம் கொடுத்ததற்காக இந்திய மக்களுக்கு மிகவும் நன்றி உள்ளராக இருப்பேன்

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×