என் மலர்tooltip icon

    இந்தியா

    • 41 வயதான அனீஸ் ஜார்ஜ் பையன்னூர் அரசு பள்ளியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
    • ஓய்வின்றி இரவு பகலாக படிவங்களை வழங்கும் பணியில் ஈடுபட்டார்.

    கேரளாவின் கண்ணூர் மாவட்டம் பையன்னூர் அருகே ஏவுனுக்கு கண்டி பகுதியை சேர்ந்த 41 வயதான அனீஸ் ஜார்ஜ் பையன்னூர் அரசு பள்ளியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

    அண்மையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தும் தொடங்கிய நிலையில் கணக்கீட்டு படிவங்களை வாக்காளர்களுக்கு வழங்கும் வாக்குச்சாவடி நிலை அலுவலராக அனீஸ் ராஜ் நியமிக்கப்பட்டார்.

    இதற்கிடையே நேற்று முன்தினத்துக்குள் அனைத்து வாக்காளர்களிடமும் கணக்கீட்டு படிவங்களை வழங்க வேண்டும் என்று அனீஸ் ஜார்ஜூக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் அவர் ஓய்வின்றி இரவு பகலாக படிவங்களை வழங்கும் பணியில் ஈடுபட்டார். இருப்பினும் கொடுத்த கால அவகாசத்துக்குள் அவரால் 200 கணக்கீட்டு படிவங்களை வாக்காளர்களிடம் வழங்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அனீஸ் ஜார்ஜ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    தகவலறிந்து போலீசார் அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    தனது மகன் நள்ளிரவு 2 மணி வரை வாக்காளர்களிடம் கணக்கீட்டு படிவங்களை வழங்கும் பணியில் ஈடுபட்டதாகவும், அதீத பணி அழுத்தத்தை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டதாகவும் ஜார்ஜ்ஜின் தந்தை தெரிவித்தார். இந்த ச,சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மாநில தேர்தல் ஆணையர் விளக்கம் கேட்டுள்ளார். 

    • மருமகளுடன் மாமனாருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
    • மகனுக்கு தெரியவந்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கொலை செய்துள்ளார்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் மருமகளுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததை, மகன் தட்டிக்கேட்டதால் மண்வெட்டியால் தாக்கி தந்தை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னோரில் உள்ள நங்கல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட திசோத்ரா கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷ். இவரது மகன் சவுரப் (வயது 30). சவுரப் மனைவிக்கும், சுபாஷுக்கும் இடையில் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. ஒருநாள் இருவரும் தனியாக இருப்பதை சவுரப் பார்த்துவிட்டார்.

    இது தொடர்பாக தனது தந்தையுடன் தகராறு செய்துள்ளார். இதனால் தனது மகளை தீர்த்துக்கட்ட சுபாஷ் முடிவு செய்துள்ளார். சவுரப் கடந்த 12-ந்தேதி வயல்வெளிக்கு சென்றபோது, பின்னால் சென்ற சுபாஷ் மண்வெட்டியால் தனது மகனை தாக்கி கொலை செய்துள்ளார். பின்னர் எதுவும் தெரியாது போன்று வீட்டிற்கு வந்துள்ளார்.

    மகனை அங்கும் இங்குமாக தேடுவது போன்று தேடியுள்ளார். பின்னர் 14-ந்தேதி போலீசில் தனது மகனை காணவில்லை என புகார் அளித்துள்ளார். அனறைய தினமே, வயல்வெளியில் தனது மகன் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது, காட்டு விலங்கு அடித்து கொலை செய்திருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார். போலீசார் உடலை கைப்பற்றி உடல்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் அறிக்கையில் உடல் மீது ஆயுதத்தால் தாக்கியதற்கான அடையாளங்கள் இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் சுபாஷிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, மகளை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். அதனைத் தொடர்நது போலீசார் அவரை கைது செய்தனர்.

    • 2014-ல் பாஜக எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 1035 ஆக இருந்தது.
    • தற்போது பீகார் தேர்தலுக்குப் பிறகு 1654 ஆக அதிகரித்துள்ளது.

    பீகார் சட்டசபையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 202 இடத்தில் வெற்றி பெற்றது. பாஜக 89 இடங்களிலும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 85 இடங்களிலும், சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) 19 இடங்களிலும் வெற்றி பெற்றன.

    இதன்மூலம் இந்தியா முழுவதும் உள்ள மாநில சட்டசபைகளில் பாஜக-வுக்கு இதுவரை இல்லாத அளவிற்கு எம்.எல்.ஏ.-க்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பாஜக-வின் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மாளவியா தெரிவித்துள்ளார்.

    பீகார் தேர்தலுடன் மொத்த எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை 1654 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் இரண்டு வருடங்களில் இந்த எண்ணிக்கை 1,800 ஆக அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.

    2014-ல் இந்த எண்ணிக்கை 1035 ஆக இருந்தது என பாஜக ஐ.டி. தலைவர் தெரிவித்துள்ளார்.

    • 12 மாநிலங்களுக்கு அறிவிக்கப்படும்போது அசாம் மாநிலத்திற்கு மட்டும் அறிவிக்கப்படவில்லை.
    • தற்போது அசாமில் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளது.

    பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து அடுத்த வருடம் தேர்தல் நடைபெற இருக்கும் தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா உள்பட 12 மாநிலங்களில் SIR மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. ஒரு மாதத்திற்குள் வாக்காளர்கள் SIR படிவங்களை பூர்த்தி செய்து வழங்க வேண்டிய நிலை உள்ளது. இதற்கு பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    அதேவேளையில் அடுத்த வருடம் தேர்தல் நடைபெற இருக்கும் அசாம் மாநிலத்தில் ஏன் SIR பணி மேற்கொள்ள உத்தரவிடவில்லை என்று எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

    இந்த நிலையில் அசாம் மாநிலத்தில் சிறப்பு திருத்தம் (Special Revision) மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    வீடு வீடாக சென்று நவம்பர் 22-ந்தேதி முதல் டிசம்பர் 20-ந்தேதி வரை வாக்காளர்கள் பெயர் சரிபார்க்கப்படும். டிசம்பர் 27-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் 10-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளது.

    • பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 45 பேர் கருகி உயிரிழந்தனர்.
    • உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்கை சவுதியில் நடத்த ஏற்பாடு.

    சவுதி அரேபியாவில் உள்ள புனித மெக்கா நகருக்கு முஸ்லிம்கள் ஹஜ் பயணம் மேற்கொள்வது 5 கடமைகளில் ஒன்றாகும். இஸ்லாமியர்களின் கடைசி மாதமான துல்-ஹஜ் மாதத்தில் இந்த புனித பயணம் மேற்கொள்வார்கள். மற்ற காலக்கட்டத்தில் சவுதி அரேபியா சென்று உம்ரா பயணம் செய்வார்கள்.

    தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் கடந்த 9-ந்தேதி சவுதி அரேபியாவுக்கு உம்ரா புனித பயணம் மேற்கொண்டனர். அவர்கள் மெக்காவில் தங்கள் உம்ரா பணிகளை முடித்து விட்டு மதீனாவுக்கு பஸ்சில் சென்று கொண்டு இருந்தனர்.

    மதீனா அருகே உள்ள முப்ரிஹாத் என்ற இடத்தில் இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணியளவில் பஸ் சென்று கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக பஸ் மீது டீசல் டேங்கர் லாரி மோதியது. அதில் இருந்த யாத்ரிகர்கள் அனைவரும் தூங்கி கொண்டு இருந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டு பஸ் தீப்பிடித்து எரிந்தது.

    இந்த கோர விபத்தில் பஸ்சில் இருந்த 20 பெண்கள், 11 சிறுவர்கள் உள்பட 45 பேர் பலியானார்கள். பஸ் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் அவர்கள் உடல் கருகி இறந்தனர். பலியானவர்களில் பெரும்பாலானோர் ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

    இந்த கோர விபத்து பற்றி அறிந்ததும் மீட்பு குழு உடனடியாக சம்பவம் நடந்த பகுதிக்கு விரைந்தது. மீட்பு குழு சம்பவ இடத்தை அடைவதற்குள் பஸ் முழுவதும் எரிந்து நாசமானதாகவும், உடல்களை அடையாளம் காண்பது கடினம் என்றும் சவுதி மீட்பு படையை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

    இந்த விபத்தில் ஒருவர் மட்டுமே மீட்கப்பட்டு உள்ளார். அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மீட்பு குழுவினர் தெரிவித்தனர். அவரது நிலைமையும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த விபத்து தொடர்பாக சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகம் உதவி எண்களை அறிவித்து உள்ளது. விபத்து குறித்த தகவல் அறிவதற்கு, 8002440003 (கட்டணமில்லா தொலைபேசி எண்), 0096 6122614093, 00966126614276 00966556122301 (வாட்ஸ் அப்) எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகள் விபத்து தொடர்பான விவரங்களை கேட்டு அறிந்துள்ளனர்.

    இந்த நிலையில் நிவாரண பணிக்காக தெலுங்கானா அரசு சவுதி அரேபியாவுக்கு குழு ஒன்றை அனுப்பி வைக்க இருக்கிறது. சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முகமது அசாருதீன் தலைமையில் இந்த குழு செல்கிறது. சவுதி அரேபியாவில் உயிரிழந்தவர்கள் மதத்தின்படி இறுதிச் சடங்கை நடத்தவும் தெலுங்கானா அரசு முடிவு செய்துள்ளது. அத்துடன் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கவும் முடிவு செய்துள்ளது.

    உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் இருந்து தலா இரண்டு பேரை அழைத்துச் செல்லவும் முடிவு செய்துள்ளது. அசாருதீன் உடன் ஒவைசி கட்சியை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ. மற்றும் மைனாரிட்டி நலத்துறை அதிகாரிகளும் செல்ல இருக்கிறார்கள்.

    • காங்கிரஸ் எதிர்காலத்தில் மற்றொரு பெரிய பிளவை சந்திக்க நேரிடும்- பிரதமர் மோடி.
    • பிரதமர் மோடி, தனது சொந்த வீட்டை ஒழுங்கமைக்க வேண்டும்- கெலாட் பதிலடி.

    பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இந்த கூட்டணி 202 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் பிரதமர் மோடி, பாஜக தொண்டர்களை சந்தித்து வெற்றியை அவர்களுடன் கொண்டாடினார். அப்போது அவர்கள் மத்தியில் பேசும்போது, "காங்கிரஸ் எதிர்காலத்தில் மற்றொரு பெரிய பிளவை சந்திக்க நேரிடும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கு அசோக் கெலாட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கெலாட் எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    காங்கிரஸ் கட்சி பிளவு படும் என பிரதமர் மோடி கனவு கண்டு கொண்டிருக்கிறார். அவருடைய கருத்து முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றவை. காங்கிரஸ் கட்சி பற்றி கருத்து கூறுவதற்கு முன், பிரதமர் மோடி, தனது சொந்த வீட்டை ஒழுங்கமைக்க வேண்டும். ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் கூட, பாஜக கட்சியால் அதன் புதிய தேசிய தலைவரை தேர்ந்தெடுக்க முடியாமல் உள்ளது. இதற்கு பாஜக- ஆர்எஸ்எஸ் இடையிலான மோதல்தான் காரணம்.

    காங்கிரஸ் கட்சி ஒற்றுமையாக உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் நாட்டிற்கு முன் உருவாக்கிய சவால்களை கட்சியின் மூத்த தலைவர்களும் இளம் தலைவர்களும் எதிர்கொள்ளும் திறன் கொண்டவர்களாக உள்ளனர்.

    இவ்வாறு கெலாட் தெரிவித்து்ளளார்.

    • சபரிமலைக்கு ஏராளமான பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க வருவார்கள்.
    • மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

    கேரளாவில் அமீபா மூளை காய்ச்சல் பாதிப்பால் இதுவரை 36 பேர் மரணம் அடைந்தனர். இதனால் உயிரிழப்புகள் கேரளாவில் அதிகரித்து வருகிறது.

    சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசன் 17-ந் தேதி தொடங்கிய நிலையில் ஏராளமான பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க வருவார்கள். அவர்களின் சுகாதார நலனை கருத்தில் கொண்டு, மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

    அதில் அவர்," சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் குளிக்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீரில் வாழும் ஒரு வகை அமீபாவால், மூளை காய்ச்சல் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இதனை மனதில் கொண்டு ஐயப்ப பக்தர்கள் ஆறுகள், குளங்களில் குளிக்கும்போது மூக்கு மற்றும் வாய் பகுதிகளை நன்றாக மூடியபடி குளிக்க வேண்டும்.

    அதே போல் குளிக்க பயன்படுத்திய துணியை நன்றாக உதறிய பிறகு தலை மற்றும் முகத்தை துடைக்க வேண்டும். சன்னிதானம், பம்பை ஆகிய இடங்களில் அவசர இதய சிகிச்சை மையம் செயல்படும். பந்தளம், அடூர், பத்தனம்திட்டா, வடசேரிக்கரா ஆகிய இடங்களில் சிறப்பு மருந்தகங்கள் செயல்படும். ஓட்டல்கள், உணவகங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு சுகாதார அட்டை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது" என குறிப்பிட்டிருந்தார்.

    கேரளாவில் மூளையைத் தின்னும் அமீபா நோய் வேகமாகப் பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் அச்சப்பட வேண்டாம் என்று தமிழ்நாடு பொதுச் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    இருப்பினும், கொரோனா தொற்று போல இந்த நோய் பரவாது, நீர் நிலையங்களில் பாதுகாப்பாகக் குளிக்க வேண்டுகோள் விடுத்துள்ளது.

    • பாஜக குற்றவாளிகளுக்கு ஆளுநர் அடைக்கலம் கொடுப்பதாக குற்றச்சாட்டு.
    • குற்றவாளிகள் வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிகளை வைத்துள்ளதாகவும் குற்றச்சாட்டு.

    திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி, நேற்று முன்தினம் மேற்கு வங்க மாநில ஆளுநர் ஆனந்தா போஸ், பாஜக குற்றவாளிகளுக்கு ராஜ் பவனில் அடைக்கலம் கொடுத்துள்ளார். அவர்களுடன் வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிகள் உள்ளன என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

    இது மேற்கு வங்க மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஆளுநர் மாளிகையில் மிகப்பெரிய அளவில் சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இன்று மதியம் அந்த சோதனை நடத்தப்படுகிறது.

    இதற்காக வடக்கு பெங்கால் சென்றிருந்த ஆளுநர், தனது பயணத்தை இடையில் முடித்துக் கொண்டு ஆளுநர் மாளிகை திரும்புகிறார்.

    ஆளுநர் மாளிகை முன்பு கொல்கத்தா போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் மத்திய பாதுகாப்புப்படை வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர். போலீசார் மற்றும் வீரர்கள் ஒன்றிணைந்து ஆளுநர் ஆனந்தா போஸ் தலைமையில் வெடிகுண்டுகள் மற்றும் வெடிப்பொருட்கள் உள்ளதா? என ஆளுநர் மாளிகை முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட உள்ளனர்.

    • ஒரு பஸ்சில் 90 சதவீத இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டால் மட்டுமே சிறப்புப் பஸ் இயக்கப்படும்.
    • இருக்கைகளை ஒரு பெரிய குழுவாகவோ அல்லது பல குழுக்கள் இணைந்தோ முன்பதிவு செய்யலாம்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மண்டல பூஜை யாத்திரை மேற்கொள்ளும் பக்தா்களுக்காக, 72 ஆன்மிக சுற்றுலாத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

    யாத்திரையின்போது வழியில் உள்ள முக்கியக் கோவில்களில் பக்தா்கள் தரிசனம் செய்யும் வகையில், கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் (கே.எஸ்.ஆர்.டி.சி.) இந்தப் புதிய திட்டத்தை முதல்முறையாகத் தொடங்கியுள்ளது.

    சபரிமலை கோவில் நடை, வருடாந்திர மண்டல-மகரவிளக்கு பூஜை யாத்திரைக்காக நேற்று திறக்கப்பட்டது.

    இந்நிலையில், திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்துடன் இணைந்து, யாத்திரையின் முதல் கட்டமாக இந்த 72 சிறப்பு ஆன்மிக சுற்றுலாத் தொகுப்புகள் (கே.எஸ்.ஆர்.டி.சி.) சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றின்கீழ் 1,600 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் கூடுதல் பயணங்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    வடக்கு மாவட்டங்களில் இருந்து தொடங்கும் பயணங்கள் பெரும்பாலும் இரண்டு நாள் சேவைகளாக இருக்கும். ஆலப்புழா, பத்தனம்திட்டா போன்ற சபரிமலைக்கு அருகில் உள்ள இடங்களிலிருந்து தொடங்கும் பயணங்கள் ஒரு நாள் சேவையாக இருக்கும்.

    ஐயப்பனின் வாழ்க்கையோடு தொடா்புடைய, வரலாற்று மற்றும் புராண முக்கியத்துவம் வாய்ந்த குளத்துப்புழை, ஆரியங்காவு, அச்சன்கோவில், பந்தளம் வலிய கோய்க்கல் ஆகிய இடங்களில் உள்ள ஸ்ரீ தா்ம சாஸ்தா கோவில்கள் இந்தச் சுற்றுலாத் திட்டத்தில் சோ்க்கப்பட்டுள்ளன. வட மாவட்ட பக்தா்களுக்கான திட்டங்களில் குருவாயூா் கோவிலும், தென் மாவட்ட பக்தா்களுக்கு கொட்டாரக் கரை கணபதி கோவிலும் இடம்பெறும்.

    இந்தச் சுற்றுலாத் திட்டங்கள் சலுகை கட்டணத்தில் வழங்கப்படும். உதாரணமாக, திருச்சூா் போன்ற இடங்களில் இருந்து தொடங்கும் பயணங்களுக்கான கட்டணம் ஒரு நபருக்கு சுமாா் ரூ.500 முதல் 700 வரை நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஒரு பஸ்சில் 90 சதவீத இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டால் மட்டுமே சிறப்புப் பஸ் இயக்கப்படும். இருக்கைகளை ஒரு பெரிய குழுவாகவோ அல்லது பல குழுக்கள் இணைந்தோ முன்பதிவு செய்யலாம்.

    குழு முன்பதிவை ஊக்குவிக்க சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாள்களில் முன்பதிவு செய்தால் குழுத் தலைவருக்கு 3 சதவீதமும், வார நாள்களில் முன்பதிவு செய்தால் 2.5 சதவீமும் கமிஷன் வழங்கப்படும்.

    இந்தத் திட்டங்களில் பயணம் செய்வோருக்கு, பம்பை கேஎஸ்ஆா்டிசி பணிமனையில் கூடுதல் வசதிகள் செய்துதரப்படும். சந்நிதானத்தில் பக்தா்களுக்கு நேரடியாக உதவ (கே.எஸ்.ஆர்.டி.சி.) ஒருங்கிணைப்பாளா்கள் நியமிக்கப்படுவா். கூடுதல் தகவல்களுக்கு, பத்தனம் திட்டா(91889 38524), செங்கனூா்(91889 38525) கே.எஸ்.ஆர்.டி.சி. சுற்றுலாப் பிரிவு ஒருங்கிணைப்பாளா்களைத் தொடா்பு கொள்ளலாம்.

    • ஸ்மார்ட்போன் பார்ப்பதால் தான் அவரது கண்ணை சுற்றி அவ்வாறு கருப்பாக இருப்பதாக அந்த பெண் கூறுகிறார்.
    • இந்த வீடியோ ஆயிரக்கணக்கான லைக்குகளை பெற்றுள்ளது.

    முன்பெல்லாம் குழந்தைகள் கதை கேட்டு தூங்கிய காலம் போய், தற்போது செல்போன் பார்த்து விட்டு தான் தூங்கும் நிலை அதிகரித்து விட்டது. இந்நிலையில் அதிக நேரம் செல்போன் பார்க்கும் குழந்தைக்கு பாடம் புகட்ட தாய் ஒருவர் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில் சிறுமி ஒருவர் இருக்கிறார். அவரது கண்ணை சுற்றி அவரது தாய் கருப்பு மையை தடவி விட்டுள்ளார். ஸ்மார்ட்போன் பார்ப்பதால் தான் அவரது கண்ணை சுற்றி அவ்வாறு கருப்பாக இருப்பதாக அந்த பெண் கூறுகிறார். உடனடியாக அந்த குழந்தை கண்ணாடியை பார்த்து அழத் தொடங்குகிறது. இனிமேல் செல்போன் பார்ப்பியா? என தாய் கேட்கும் போது, குழந்தை அழுதபடி தலையசைத்து மறுக்கிறது. மேலும் குழந்தை எனது கண்கள் சிவப்பாகுமா? என கேட்கும் போது அவரது தாய், இல்லை… கருப்பாகும் என கூறுகிறர்.

    இந்த வீடியோ ஆயிரக்கணக்கான லைக்குகளை பெற்றுள்ளது. நெட்டிசன்கள் சிலர், இது சூப்பர் ஐடியா, எல்லா அம்மாவும் இதை முயற்சி செய்ய வேண்டும் என்று பாராட்டி பதிவிட்டனர்.

    • அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
    • ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க உத்தரவு

    டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை, ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து ஆவணங்கள் பறிமுதல் செய்தது.

    இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த சென்னை ஐகோர்ட், ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டதுடன், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் தடை விதித்திருந்தது.

    இதனையடுத்து உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவில் திருத்தம் கோரி உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்தது.

    இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட முடியாது என்று கூறி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

    மேலும், ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திருப்பி அளிக்க அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

    • புதிய அரசு அமைப்பதற்கான ஆலோசனைகள் இன்று தீவிரமடைந்தன.
    • ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட கவர்னர் புதிய ஆட்சி அமையும் வரை தற்காலிகமாக முதல்-மந்திரி பதவியை தொடருமாறு கேட்டுக்கொண்டார்.

    பீகார் சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 202 இடங்களைக் கைப்பற்றிய தேசிய ஜனநாயக கூட்டணி அசைக்க முடியாத பலத்துடன் ஆட்சியைக் தக்க வைத்துள்ளது.

    தோ்தலுக்கு முன்பு தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்-மந்திரி வேட்பாளராக நிதீஷ் குமாா் அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படவில்லை. அவரது தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி போட்டியிடுவதாக பா.ஜ.க. கூறியிருந்தது.

    இந்த நிலையில் சட்டசபைத் தோ்தலில் தொடா்ந்து 2-வது முறையாக ஐக்கிய ஜனதா தளத்தைவிட பா.ஜ.க. அதிக இடங்களில் வென்றுள்ளது. எனவே, முதல்-மந்திரி பதவியை பா.ஜ.க. விட்டுக் கொடுக்குமா? என்ற கேள்வி எழுந்தது.

    ஆனால் முதல்-மந்திரியாக நிதீஷ்குமாா் நீடிப்பாா் என்று கூட்டணிக் கட்சிகளான லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்), இந்துஸ்தானி அவாம் மோா்ச்சா ஆகியவை நம்பிக்கை தெரிவித்தன. இதைத் தொடர்ந்து பா.ஜ.க. தலைவர்களும், நிதிஷ்குமார் முதல்-மந்திரி பதவி ஏற்பார் என்று அறிவித்தனர்.

    தோ்தல் முடிவுகள் வெளியாகி 2 நாள்கள் ஆகியுள்ள நிலையில், புதிய அரசு அமைப்பதற்கான ஆலோசனைகள் இன்று தீவிரமடைந்தன.

    பாட்னாவில் முதல்-மந்திரி நிதீஷ் குமாரை கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்து பேசினார்கள். இதையடுத்து ஒருமித்த சுமூகமான முடிவுகள் எட்டப்பட்டன.

    இதன் தொடர்ச்சியாக பீகார் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் புதிய ஆட்சி அமைப்பதற்கு வசதியாக பதவிகளை ராஜினாமா செய்ய தீர்மானிக்கப்பட்டது.

    அதன்படி நிதிஷ்குமார் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அவர் மந்திரிகள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் கவர்னரை சந்தித்தார். தனது ராஜினாமா கடிதத்தை அவர் கவர்னரிடம் கொடுத்தார்.

    அந்த ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட கவர்னர் புதிய ஆட்சி அமையும் வரை தற்காலிகமாக முதல்-மந்திரி பதவியை தொடருமாறு கேட்டுக்கொண்டார்.

    பீகாா் சட்டசபையின் பதவிக் காலம் வருகிற 22-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. எனவே அதற்குள் புதிய அரசு பதவியேற்க வேண்டும்.

    நாளை தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்கிறது. அதில் நிதிஷ்குமார் புதிய முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்படுவார். இதைத் தொடர்ந்து புதிய அரசு அமைப்பதற்கான செயல் திட்டம் தயார் செய்யப்பட்டு வருகிறது.

    அதன்படி வருகிற 20-ந் தேதி நிதிஷ்குமார் மீண்டும் முதல்-மந்திரியாக பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி மற்றும் மந்திரிகள் பங்கேற்க உள்ளனர்.

    ×