என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    18 தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்று தி.மு.க. ஆட்சி அமைப்பது உறுதி என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். #mutharasan

    திருவாரூர்:

    திருவாரூரில் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் நாகை பாராளுமன்ற தொகுதி மற்றும் திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கான செயல்வீரர்கள் கூட்டம் நடை பெற்றது.

    கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள கூட்டணி அமைப்பு ரீதியாக அமைந்துள்ள கூட்டணி. எந்த ஒரு கட்சியையும் தி.மு.க.விலை கொடுத்து வாங்கவில்லை. ஆனால் அ.தி.மு.க அமைத்துள்ள கூட்டணி பண பலத்தால் அமைந்துள்ளது.

     


    மத்தியில் ஆளும் மோடி அரசு ஜூன் 3-ம் தேதி சட்ட ரீதியாக முடிவுக்கு வருகிறது. மத்திய அரசின் ஊதுகுழலாக தமிழக அரசு உள்ளது.

    18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வாயிலாக தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி.  இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி போய் விடும். பிறகு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அரசியலமைப்புச் சட்டத்தின் படி சட்டரீதியாக  முதல்-அமைச்சராக பதவி ஏற்பார்.

    இவ்வாறு அவர் கூறினார். #mutharasan

    ஈரோட்டில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் கேரளா ஜவுளி வியாபாரிகளிடம் ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LSPolls

    ஈரோடு, மார்ச். 26-

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படையினர் ஈரோடு பகுதியில் பல்வேறு இடங்களில் வாகனங்களை நிறுத்தி அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா அருகே தேர்தல் பறக்கும் படையினர் அந்த பகுதியில் வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தினர்.

    அப்போது ஒரு காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அந்த காரில் கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாலக்குடியை சேர்ந்த பிரவீன் தாஸ் (50) என்ற ஜவுளி வியாபாரி வந்தார். அவரிடம் ரூ.2 லட்சம் உரிய ஆவணமின்றி இருந்ததாக தெரிகிறது.

    தான் ஜவுளி வாங்க வந்ததாக பிரவீன்தாஸ் கூறினார். ஆனால் உரிய ஆவணம் இல்லாததால் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

    இதே போல் வில்லரசம் பட்டி நால் ரோட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.

    அங்கு வந்த ஒரு காரை சோதனை நடத்திய போது காரில் வந்த கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரிடம் ஆவணமின்றி ரூ.1 லட்சம் இருந்தது. அவரும் ஜவுளி வாங்க இந்த பணத்தை கொண்டு வந்ததாக கூறினார்.

    அதே சமயம் அவரிடம் உரிய ஆவணம் இல்லாததால் அந்த பணத்தையும் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பிறகு அந்த பணம் தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. #LSPolls

    டிடிவி தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வேறு ஒரு பொது சின்னத்தை பரிசீலிக்கும்படி கூறியுள்ளது. #TTVDhinakaran #AMMK #ElectionCommission #PressureCooker
    புதுடெல்லி:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டு தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். ஆனால், அவரது கட்சிக்கு பொது சின்னம் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்தது.

    ஏற்கனவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட டிடிவி தினகரன், தேர்தல் ஆணையம் ஒதுக்கிய குக்கர்  சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால், அந்த சின்னத்தையே தனது கட்சிக்கு பொது சின்னமாக ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    இந்த விஷயத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் கைவிரித்துவிட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்து, தீர்ப்பு வெளியாவதற்கு முன்பாகவே, இடைக்கால சின்னமாக தங்கள் கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு நடைபெறுகிறது. நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை பொது சின்னமாக ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்து வாதிட்டது.



    குக்கர் சின்னம் வழங்க முடியாததற்கான காரணத்தையும் தெரிவித்தது. பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு மட்டும்தான் பொது சின்னம் கொடுக்க முடியும். அமமுக பதிவு செய்யப்படாத கட்சி என்பதால் குக்கர் சின்னத்தை பொது சின்னமாக கொடுக்க முடியாது, என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக கூறியது.

    தேர்தல் ஆணையத்தின் இந்த வாதத்தால் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கடும் அதிருப்தி தெரிவித்தார். அத்துடன், விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தார். அதன்படி இன்று காலை இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு முடிவுக்கு வந்துவிட்டதால், பழைய சின்னத்தை வழங்க முடியாது என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குக்கர் சின்னம் வழங்க முடியாவிட்டால் வேறு ஒரு பொதுவான சின்னத்தை வழங்கும்படி டிடிவி தினகரன் தரப்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது.

    அமமுக பதிவு செய்யப்பட்ட கட்சியா? பதிவு செய்யப்படாத கட்சிக்கு எப்படி பொது சின்னத்தை கேட்கிறீர்கள்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    அமமுகவை கட்சியாக இன்றே பதிவு செய்ய தயாராக இருப்பதாகவும், ஆனால் அதற்கு இப்போது நேரம் இல்லை என்றும் தினகரன் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

    அப்போது குறுக்கிட்ட தேர்தல் ஆணைய வழக்கறிஞர், கட்சியை இன்றே பதிவு செய்தாலும், உடனடியாக குக்கர் சின்னம் தர முடியாது. கட்சியை பதிவு செய்த பின்னர், குக்கர் சின்னமோ அல்லது அவர்கள் கேட்கும் பொது சின்னத்தையோ ஒதுக்க 30 நாட்களுக்கு மேல் ஆகும் என வாதிட்டார்.

    அமமுகவுக்கு குக்கர் சின்னம் இல்லையெனில் வேறு ஒரு பொது சின்னத்தை வழங்க தேர்தல் ஆணையம் முயற்சிக்கலாமே? என்று தலைமை நீதிபதி கூறினார். ஒருவர் எவ்வளவு வலுவுள்ளவராக இருந்தாலும் சின்னம்தான் அவரது அடையாளம். ஒரே குழுவில் உள்ளவர்களுக்கு வேறுவேறு சின்னம் வழங்கினால், அவர்களின் அரசியல் வாழ்வு கேள்விக்குறியாகிவிடும். எனவே, வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் முடிந்தபிறகு பொது சின்னம் வழங்க முயற்சிக்கலாம் என்றும் தலைமை நீதிபதி ஆலோசனை வழங்கினார்.

    ஆனால், அமமுக வேட்பாளர்கள் சுயேட்சை வேட்பாளர்கள் என்பதால் அவர்களுக்கு தனித்தனியாகத்தான் சின்னம் ஒதுக்க முடியும் என தேர்தல் ஆணைய வழக்கறிஞர் திட்டவட்டமாக கூறினார்.

    அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததையடுத்து, தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்ற நீதிபதிகள், அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க மறுத்துவிட்டனர். குக்கர் சின்னத்தை ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என தீர்ப்பளித்தனர். அதேசமயம், பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்களுக்கு வேறு ஒரு பொது சின்னம் வழங்குவதற்கு பரிசீலிக்கவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். #TTVDhinakaran #AMMK #ElectionCommission #PressureCooker
    ஏப்ரல் 9-ந்தேதிக்கு பிறகு யாரும் கருத்து கணிப்பு வெளியிடக்கூடாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு உத்தரவிட்டுள்ளார். #LokSabhaElections2019 #SatyabrataSahoo
    சென்னை:

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்கள் முழுமையாக அமலில் இருக்கும் நிலையில், எந்தவித ஆவணமும் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.33.46 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அத்துடன் 209 கிலோ தங்கம், 317 கிலோ வெள்ளி மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.



    தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கு 40 பொது பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்து உள்ளது. இதில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கு மட்டும் 2 பொது பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதுதவிர 18 சட்டசபை இடைத்தேர்தலுக்கான பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாகவே ஊடகங்கள் தேர்தல் கருத்து கணிப்புகளை வெளியிடக்கூடாது. அந்த வகையில் ஏப்ரல் 11-ந்தேதி முதல் கட்ட தேர்தல் தொடங்குகிறது. எனவே ஏப்ரல் 9-ந்தேதிக்கு பிறகு எவரும் கருத்து கணிப்பு வெளியிடக்கூடாது.

    கருத்து கணிப்புகளை சேகரிக்கலாம், ஆனால் கடைசி கட்ட தேர்தல் நடக்கும் வரை வெளியிடக்கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019  #SatyabrataSahoo

    ஏப்ரல் 1-ந்தேதிக்கு பிறகு எல்லா மாநிலங்களிலும் காங்கிரசுக்கு ஆதரவாக தனது சுற்றுப்பயணத்தை தொடங்குவதாக நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #Congress #Kushboo
    சென்னை:

    காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு நட்சத்திர பேச்சாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

    ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மன்மோகன்சிங், அசாருதீன், சித்து, ஜோதிர் ஆதித்யா சிந்தியா, சச்சின் பைலட், குஷ்பு, நக்மா, விஜயசாந்தி, ராஜ்பப்பர் உள்பட 40 நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை காங்கிரஸ் நேற்று அறிவித்தது.


    காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக எப்போது தேர்தல் பிரசாரத்தை தொடங்கப் போகிறீர்கள் என்று நடிகை குஷ்புவிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

    வேட்புமனு தாக்கல் இன்றுதான் முடிகிறது. அதை தொடர்ந்து மனுக்கள் பரிசீலனை செய்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அதனால் எனது தேர்தல் சுற்றுப்பயணத்தை இன்னும் முடிவு செய்யவில்லை.

    நான் கன்வீனராகவும் இருப்பதால் தலைமையில் கேட்டுதான் முடிவு செய்ய வேண்டும்.

    மேலும் தமிழகத்தில் மட்டும் நான் தேர்தல் பிரசாரம் செய்யவில்லை. எல்லா மாநிலங்களிலும் காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய இருக்கிறேன். ஏப்ரல் 1-ந்தேதிக்கு பிறகு எனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #Congress #Kushboo
    மதுரையில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.7 லட்சத்து 34 ஆயிரத்து 330 சிக்கியது. #LSPolls

    மதுரை:

    வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஒவ்வொரு தொகுதியிலும் பல்வேறு பகுதிகளில் முகாமிட்டு உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

    மதுரை மாநகர பறக்கும் படை தாசில்தார் பிரபாகரன் தலைமையிலான குழுவினர் ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த வேனை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அதனை சோதனை செய்தபோது 10 பண்டல்களில் ரூ.7 லட்சத்து 34 ஆயிரத்து 330 இருந்தது தெரியவந்தது. அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் சுப்பிரமணியபுரத்தில் உள்ள பீடி கம்பெனி ஊழியர்களுக்கு சம்பள பட்டுவாடா செய்வதற்காக கொண்டு வரப்பட்ட பணம் என தெரியவந்தது. இருப்பினும் ஆவணங்களை சமர்ப்பிக்காததால் அந்த பணம் கலெக்டர் அலுவலகம் கொண்டு செல்லப்பட்டது. #LSPolls

    ஆந்திர மக்களுக்கு மோடி நம்பிக்கை துரோகம் செய்து விட்டார் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். #ChandrababuNaidu

    திருமலை:

    திருப்பதியில் சந்திரபாபு நாயுடு தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அப்போது அவர் பேசியதாவது:-

    திருப்பதி புனித தலம். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு வருகின்றனர். இங்கு, ஆன்மிக அரசியல் நடக்க வேண்டும். ரவுடி ராஜ்யம் நடக்க அனுமதிக்கக்கூடாது. திருப்பதியை சுற்றி ஏராளமான தொழிற்சாலைகளை தொடங்கி உள்ளேன்.

    திருப்பதி, நெல்லூர் ஆகிய பகுதிகளில் இன்னும் பல தொழிற்சாலைகளை தொடங்க உள்ளேன். திருப்பதி கல்வி நகரமாக திகழ நடவடிக்கை எடுக்கப்படும். திருப்பதியில் பல்கலைக்கழகம், மருத்துவக் கல்லூரி ஆகியவை புதிதாக தொடங்கப்படும். நான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன்.

    ஏழை எளிய மக்களுக்கு திருப்பதியில் 9 ஆயிரம் வீடுகளை கட்டிக்கொடுத்துள்ளேன். இன்னும் வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது. திருப்பதி மருத்துவ நகரமாக மாற்றப்படும். சாமி தரிசனம் செய்ய திருப்பதிக்கு வரும் பக்தர்கள் இங்கேயே 3 நாட்கள் தங்கி மருத்துவச் சிகிச்சை பெறலாம். திருப்பதியில், ‘‘ஸ்மார்ட் சிட்டி’’ பணிகள் நடந்து வருகிறது. பூமிக்கு அடியில் மின்சார கேபிள் பதிக்கப்பட உள்ளது.

    பெண்களுக்காக, ‘‘பத்மாவதி’’ என்ற பெயரில் ஒரு தனித் தொழிற்சாலை தொடங்கப்பட உள்ளது. திருப்பதி, ‘நம்பர் ஒன்’ நகரமாக திகழ நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.


    இதைத் தொடர்ந்து காளஹஸ்திரியில் நடந்த பிரசாரத்தில் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:-

    சித்தூர் மாவட்டம் நான் பிறந்த தாய் வீடு. காளஹஸ்திக்கு நான் பலமுறை வந்துள்ளேன். சிவன் கோவிலுக்கு அடிக்கடி வந்து சாமி தரிசனம் செய்துள்ளேன். இந்தக் கோவில், தென் கயிலாயமாக திகழ்கிறது. இந்தக் கோவில் பிரசித்திப் பெற்ற ஆன்மிக தலமாக விளங்குகிறது. இதை, திருப்பதி ஏழுமலையான் கோவிலை போல், வளர்ச்சியடைய செய்வேன்.

    2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின் போது, திருப்பதி பிரசாரக் கூட்டத்தில் பேசிய நரேந்திரமோடி, ஏழு மலையான் சாட்சியாக ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக கூறினார். ஆனால் அவர், நம்பிக்கை துரோகம் செய்து விட்டார். தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் இருந்தபோது, ஐதராபாத்தை நன்கு வளர்ச்சியடைய செய்தோம். மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்ட போது, உடுத்திய உடையோடு வெளியேறினோம்.

    ஆந்திரா, நிதி பற்றாக்குறையால் இருந்தும் பொதுமக்களுக்காக எந்திரமாக உழைத்தேன். பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தினேன். விவசாயிகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்படும். ஸ்ரீகாளஹஸ்தி சொர்ணமுகி ஆற்றில் எப்போதும் தண்ணீர் ஓடி கொண்டே இருக்கும். தற்போது வறண்டு கிடக்கிறது. சொர்ணமுகி ஆற்றை தூர்வாரி சுத்தம் செய்வேன். எனது ஆட்சியில் 62 நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன். அதில் அந்திரி நீவா திட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தேன்.

    சித்தூர் மாவட்டத்தில் ஸ்ரீசிட்டி தொழிற்பேட்டையில் பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. அதில் செல்போன் நிறுவனங்களும் அடங்கும். வரும் காலத்தில் திருப்பதியில் 50 சதவீதத்தில் இருந்து 60 சதவீதம் வரை செல்போன்கள் தயாரிக்கும் நிறுவனங்களை தொடங்க ஏற்பாடு செய்வேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #ChandrababuNaidu

    திண்டுக்கல்லில் இன்று மாலை நடக்கும் பொது கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். #MKStalin #DMK

    திண்டுக்கல்:

    தமிழகம் முழுவதும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    மதுரையில் இருந்து கார் மூலம் மாலை 5.30 மணிக்கு திண்டுக்கல் செல்கிறார். மாவட்ட எல்லையான சின்னாளபட்டி பூஞ்சோலை பகுதியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அங்கு பொதுமக்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.

    அதனைத் தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு திண்டுக்கல் மணிக்கூண்டில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் தி.மு.க. வேட்பாளர் வேலுச்சாமியை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். அப்போது கூட்டணி கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டு பேச உள்ளனர்.

     


    அதனைத் தொடர்ந்து வத்தலக்குண்டு காளியம்மன் கோவில் முன்பு நடக்கும் பிரசார கூட்டத்தில் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

    அதன் பின் தேனி மாவட்டத்திற்கு செல்லும் மு.க.ஸ்டாலின் நாளை அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். #MKStalin #DMK

    தூத்துக்குடி மக்களவை தொகுதியில் எந்த கட்சி வெற்றி பெறும் என்பது தொடர்பாக பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தந்தை குமரி அனந்தன் ருசிகரமாக பதில் அளித்தார். #KumariAnandan #ThoothukudiConstituency
    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18-ந்தேதி நடக்க உள்ளது. அனைத்துக்கட்சிகளுமே வேட்பாளர்களை அறிவித்து, பிரசாரத்தை முடுக்கி விட்டுள்ளது. குறிப்பாக 2 பெண் வேட்பாளர்கள், அதிலும் பிரபலமான பெண் தலைவர்கள் மோதும் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.



    காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் மகளும், தமிழக பா.ஜ.க. தலைவராக இருக்கக்கூடிய டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனும், மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகளும், தி.மு.க. மகளிர் அணி செயலாளருமான கனிமொழியும் எதிர் எதிர் முகாமில் இருந்து களம் காண்கின்றனர். தூத்துக்குடி தொகுதி மக்கள் யாருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்க போகிறார்கள் என்பது மே 23-ந்தேதி தேர்தல் முடிவு வெளியாகும் நேரத்தில் தான் தெரியவரும் என்றாலும், இப்போதே அவர்கள் இருவரையும் ஆதரித்து, இரு கட்சிகளின் சார்பிலும் தீவிர தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது.

    இதற்கிடையே சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு நேற்று வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனிடம், ‘தூத்துக்குடி தொகுதியில் உங்கள் கூட்டணி சார்பில் போட்டியிடும் கனிமொழியை ஆதரித்தும், பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் உங்கள் மகள் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனை எதிர்த்தும் பிரசாரம் செய்வீர்களா? என்றும், கனிமொழி தூத்துக்குடியில் வெற்றி பெறுவார் என்று நம்புகிறீர்களா? என்று நிருபர்கள் எடக்குமடக்காக கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். இருப்பினும் யார்? யார்? வெற்றி பெறுவார்கள் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள். மக்கள் தீர்ப்பே, மகேசன் தீர்ப்பு’ என்று பிடிகொடுக்காமல் பதில் அளித்தார். #KumariAnandan #ThoothukudiConstituency
    ஜெயலலிதாவிற்கும் விஜயகாந்திற்கும் மோதல் ஏற்பட்டது ஏன்? என்பது குறித்து தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா பேசினார். #LokSabhaElections2019 #Premalatha
    விருதுநகர்:

    விருதுநகரில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-

    விஜயகாந்தின் ரோல்மாடல் எம்.ஜி.ஆர். தான். நாங்கள் வீட்டில் படுக்கையறையில் மாட்டியிருப்பது எம்.ஜிஆர்., ஜானகி அம்மாள் உள்ள படம்தான். எங்கள் திருமணம் மதுரையில் நடந்ததை தொடர்ந்து சென்னையில் எங்கள் வீட்டிற்கு வந்த ஜானகிஅம்மாள் எம்.ஜி.ஆர். பெயர் பொறித்த மோதிரத்தை பரிசாக தந்தார். அதை நாங்கள் பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறோம். அதே போன்று ஜானகிஅம்மாள் விஜயகாந்திடம் யார் யாரோ வந்து எம்.ஜி.ஆரிடம் வேண்டியதை பெற்றுச்செல்கிறார்கள், நீ வந்தால் என்ன என்று கேட்டுவிட்டு எம்.ஜி.ஆர். பயன்படுத்திய வேனையும், உலகம் சுற்றும் வாலிபனில் பயன்படுத்திய பேன்ட் மற்றும் கோட்டையும் கொடுத்தார். அதையும் நாங்கள் பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறோம்.

    அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சை கேட்டால் மன அழுத்தம் மறந்து போய்விடும். அவர் பேசும்போது 2011-ல் அமைந்த அ.தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணி சாதனை கூட்டணி என்று குறிப்பிட்டார். அப்போது எதிர்க்கட்சி என்பதே இல்லாமல் போய்விட்டது. கூட்டணியில் போட்டியிட்ட நாங்கள் தான் எதிர்க்கட்சியாக இருந்தோம். பின்னர் ஏன் பிரிந்தீர்கள் என கேட்கலாம். நம்கட்சியில் இருந்த 3 துரோகிகளை தூண்டிவிட்டு விஜயகாந்திற்கும் ஜெயலலிதாவிற்கும் கோபம் வரச்செய்து மோதல் ஏற்படுத்தினார்கள் அதன் காரணமாக பிரியும் நிலை ஏற்பட்டது.



    ஜெயலலிதாவிற்கும், விஜயகாந்திற்கும் படங்களில்தான் நடிக்கதெரியுமே தவிர அரசியலில் நடிக்கத் தெரியாது. ஜெயலலிதா திறமையான பெண்மணி. அவருக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளித்திருந்தால் அவரை காப்பாற்றியிருக்கலாம் என நானும் விஜயகாந்தும் பேசிக்கொண்டிருந்தோம்.

    அதைத்தான் முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் எங்களை சந்திக்க வரும்போது குறிப்பிட்டோம்.

    தற்போது அமைந்துள்ள கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களிலும் வெற்றிபெறும். நாளை நமதே 40-ம் நமதே. தே.மு.தி.க., அ.தி.மு.க. கூட்டணி அடுத்துவரும் உள்ளாட்சி தேர்தலிலும் சட்டமன்ற தேர்தலிலும் இனி வருங்காலத்தில் நடைபெறும் அனைத்து தேர்தலிலும் உறுதியாக தொடரும் என்பதை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். சாமானியனை கூட அரசியலில் உயர்த்துபவர்கள் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் விஜயகாந்தும்தான். பிரசாரத்தின் போது தொண்டர்களோடு தொண்டராக அமர்ந்து விஜயகாந்த் சாப்பிடக்கூடியவர்.

    இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #Premalatha
    பாராளுமன்ற தேர்தலுக்காக இதுவரை 604 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019
    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்றம் மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ந் தேதி தொடங்கியது.

    அந்த வகையில் இதுவரை பாராளுமன்ற தேர்தலுக்காக 604 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதில் 2 திருநங்கைகளின் மனுக்களும் அடங்கும்.



    அதேபோல 18 சட்டசபை இடைத்தேர்தலுக்காக இதுவரை 230 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று (செவ்வாய்க்கிழமை) கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019

    உடல்நலக் குறைவு காரணமாக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இன்றைய காலை பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. #EdappadiPalaniswami #LokSabhaElections2019
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதான கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அந்த வகையில், அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல் அமைச்சர் பழனிசாமி, கடந்த சில தினங்களாக அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று சென்னையில் பல்வேறு இடங்களில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    சாம் பால்

    இன்று காலை மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் சாம் பாலுக்கு ஆதரவாக  காலை 8.30 மணியளவில் திருவல்லிக்கேணியில் இருந்து பிரசாரம் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    ஆனால் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டதால் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக முதல் அமைச்சர் பழனிசாமி காலை மேற்கொள்ளவிருந்த பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. முதல் அமைச்சர் பழனிசாமி இன்று மாலை பிரசாரம் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  தென்சென்னை தொகுதியில் முதல் அமைச்சர் பழனிசாமி பிரசாரம் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. #EdappadiPalaniswami #LokSabhaElections2019
    ×