என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    டி.டி.வி. தினகரனுக்கு குக்கர் சின்னம் தரமுடியாது என சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. #ElectionCommission #dinakaran #supremecourt
    புதுடெல்லி:

    தலைமை தேர்தல் கமிஷன் கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் 23-ந்தேதி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான அணியை அதிகாரப்பூர்வ அ.தி.மு.க.வாக அறிவித்து, அந்த அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியது.

    இதை எதிர்த்து டி.டி.வி.தினகரன் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு மீதான விசாரணை தற்போது டெல்லி ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

    இந்நிலையில் டி.டி.வி.தினகரன் இடைக்கால மனு ஒன்றை டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார். அதில், தான் ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை சுட்டிக்காட்டி, உள்ளாட்சி தேர்தலை சந்திக்கும் விதத்தில் இரட்டை இலை சின்னம் வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை தனக்கு பிரஷர் குக்கர் சின்னத்தை ஒதுக்கும் படியும், தனது அணிக்கான பெயரை தான் குறிப்பிட்டுள்ள 3 பெயர்களில் இருந்து ஒன்றை அனுமதிக்கும்படியும் தேர்தல் கமிஷனுக்கு கோர்ட்டு உத்தரவிடக்கோரி இருந்தார்.

    அவருடைய இந்த கோரிக்கையை டெல்லி ஐகோர்ட்டு ஏற்றுக்கொண்டு, பிரஷர் குக்கர் சின்னத்தை டி.டி.வி. தினகரனுக்கு ஒதுக்கீடு செய்யும்படி தேர்தல் கமிஷனுக்கு கடந்த ஆண்டு மார்ச் 9-ந்தேதி உத்தரவிட்டது.

    டெல்லி ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, மதுசூதனன் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதி ஏ.எம். கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் டி.டி.வி. தினகரனுக்கு பிரஷர் குக்கர் சின்னத்தை ஒதுக்க டெல்லி ஐகோர்ட்டு ஆணை பிறப்பித்தது தவறு என்று கூறி, அந்த உத்தரவுக்கு கடந்த ஆண்டு மார்ச் 28-ந்தேதி இடைக்கால தடை விதித்தது.

    அத்துடன், சுப்ரீம் கோர்ட்டில் இந்த பிரச்சினை மீது அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் வரை பிரஷர் குக்கர் சின்னத்தை டி.டி.வி. தினகரன் தலைமையிலான அணி பயன்படுத்தக்கூடாது என்றும் நீதிபதிகள் இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கட்சி பதிவு செய்யப்படாததால், டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க.வுக்கு பொதுச்சின்னமாக குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டில் இந்திய தேர்தல் ஆணையம் வாதம் செய்தது.  இதைத்தொடர்ந்து விசாரணை நாளை ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்நிலையில் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை தர முடியாது என உச்சநீதிமன்றத்தில் தலைமை தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அ.ம.மு.க. பதிவு செய்யப்படாத கட்சி என்பதால் பொது சின்னத்தை வழங்க முடியாது என தேர்தல் ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #ElectionCommission #dinakaran #supremecourt
    ஒரு மாநிலத்தின் கவர்னராக இருந்துகொண்டு பாஜகவுக்கு வாக்களித்து மோடியை மீண்டும் பிரதமராக்க வேண்டும் என பிரசாரம் செய்த கல்யான் சிங்கை பதவி நீக்கம் செய்ய காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. #Congressdemands #KalyanSingh #Governorpost
    புதுடெல்லி:

    உத்தரபிரதேசம் மாநில முதல் மந்திரியாக 1991-92 காலகட்டத்தில் பதவி வகித்தவர் கல்யாண் சிங். பாஜகவை சேர்ந்த இவர், மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பின்னர் ராஜஸ்தான் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார்.

    கடந்த 23-ம் தேதி அலிகர் நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற கவர்னர் கல்யாண் சிங், ‘நாம் அனைவருமே பாஜக தொண்டர்கள்தான். இந்த தேர்தலில் பாஜக மகத்தான வெற்றிபெற வேண்டும் என்பது நமது நோக்கமாக இருக்க வேண்டும். மீண்டும் ஒருமுறை மோடி பிரதமராக வர வேண்டும். இது நாட்டுக்கு மிகவும் முக்கியம்’ என்று பேசியதாக செய்திகள் வெளியாகின.

    இந்நிலையில், அவரது இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி இன்று கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது. 

    டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அக்கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, ‘மதிப்புக்குரிய ராஜஸ்தான் கவர்னர் கல்யாண் சிங் ஒரு அரசியல்வாதியைப்போல் பாஜகவுக்கு வாக்கு கேட்பது அரசியலமைப்பு சட்டத்தின் அனைத்து மரபுகளையும் அர்த்தமற்றதாக்கி விடும் வகையில் அமைந்துள்ளது. இதன்மூலம் கவர்னர் அலுவலகத்தின் தரத்தையே அவர் குறைத்து விட்டார்.

    நமது நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின்மீது சிறிதளவிலாவது மரியாதை இருந்தால் ஒருகனம் கூட தாமதிக்காமல் கவர்னர் பதவியில் இருந்து கல்யாண் சிங் விலக வேண்டும். இல்லாவிட்டால் அவரை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். #Congressdemands #KalyanSingh #Governorpost
    ஏழைகளின் வங்கி கணக்குகளில் ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் போடப்படும் என்ற காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதி எந்த காலத்திலும் நிறைவேறாது என பாஜக தெரிவித்துள்ளது. #Congressrecord #antipoor #RaviShankarPrasad
    புதுடெல்லி:

    டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால் நாட்டில் உள்ள 5 கோடி ஏழை குடும்பங்களுக்கு குறைந்தபட்ச வருமானமாக ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் (மாதம் 6 ஆயிரம் ரூபாய்) வங்கி கணக்கில் செலுத்தப்படும். இதன் மூலம் நாட்டின் மக்கள் தொகையில் 20 சதவீதமாக இருக்கும் ஏழை குடும்பங்களை சேர்ந்த 25 கோடி மக்கள் பலனடைவார்கள் என தெரிவித்துள்ளார்.

    இந்த பலனைப்பெற அதிகபட்ச குடும்ப வருமானத்துக்கான உச்சவரம்பு மாதம் 12 ஆயிரமாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

    இந்நிலையில், ராகுல் காந்தி அளித்துள்ள இந்த வாக்குறுதி எந்த காலத்திலும் நிறைவேறாது என பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, ‘அரசியல் ஆதாயத்துக்காக வறுமையை மையக்கருவாக காங்கிரஸ் பலமுறை பயன்படுத்தி வந்துள்ளது. இந்தியாவில் இருந்து வறுமையை விரட்டுவோம் என்ற முழக்கத்துடன் 1971-ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்ற முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வறுமையை ஒழிக்க ஒன்றுமே செய்யவில்லை. 

    உற்பத்தியை பெருக்க வேண்டும். பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற கோட்பாட்டில் அவருக்கும் நம்பிக்கை இல்லை. வறுமையை மீண்டும் பகிர்ந்தளிப்பதை மட்டுமே அவர் நம்பி இருந்தார். 

    இப்படி கடந்த 50 ஆண்டுகளாக இந்த நாட்டை காங்கிரஸ் கட்சி தவறான பாதையில் வழிநடத்தியது. வறுமையை விரட்டுவோம் என்று வாக்குறுதி அளித்து 50 ஆண்டுகளாகியும் இன்னும் நாட்டில் 20 சதவீதம் மக்கள் 12 ஆயிரம் ரூபாய் வருமானம்கூட கிடைக்காமல் வாழ்கிறார்கள் என்றால், அந்த அளவுக்கு இந்த நாட்டின் ஏழை மக்கள் வஞ்சிக்கப்பட்டதற்கான பழியையும், பொறுப்பையும் காங்கிரஸ் கட்சிதான் ஏற்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

    இதேபோல், மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், ’கடந்த 55 ஆண்டுகளாகவே காங்கிரஸ் ஆட்சி ஏழை மக்களுக்கு விரோதமான ஆட்சியாகவே இருந்து வந்துள்ளது. 1971-ம் ஆண்டு வறுமையை விரட்டுவோம் என்று இந்திரா காந்தி வாக்குறுதி அளித்தபோது நாட்டில் இனி வறுமையே இருக்காது என்று நாங்கள் எல்லாம் நினைத்தோம். ஆனால், என்ன நடந்தது. வறுமை ஒழிந்து விட்டதா?

    நான் டெல்லியில் இருந்து ஒரு ரூபாய் அனுப்பினால் விவசாயிகள் கையில் 15 பைசாதான் போய் சேருகிறது என முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கூறியதுபோல் தான் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் எப்போதுமே நிறைவேறியதில்லை. இனிமேல் நிறைவேறப் போவதுமில்லை’என்று குறிப்பிட்டார். #Congressrecord #antipoor #RaviShankarPrasad
    பாராளுமன்ற தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிடுவதற்காக சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்த ஒருவர் தனது டெபாசிட் தொகையை சில்லரை நாணயங்களாக கட்டினார். #KuppaljiDevadoss #independentcandidate #ChennaiSouth #electiondeposit #depositincoins
    சென்னை:

    ஒவ்வொரு தேர்தலின்போதும் சில சுயேட்சை வேட்பாளர்கள் ஏதாவது வித்தியாசமாக செய்து ஊடகங்களின் வாயிலாக மக்களின் கவனத்தை ஈர்ப்பது வழக்கம்.

    அவ்வகையில், இந்த பாராளுமன்ற தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிடுவதற்காக சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்த ஒருவர் தனது டெபாசிட் தொகையை சில்லரை நாணயங்களாக கட்டினார்.

    குப்பல்ஜி தேவதாஸ் என்னும் அந்த வேட்பாளர் தனது வேட்புமனுவுடன் செலுத்த வேண்டிய டெபாசிட் தொகையான 25 ஆயிரம் ரூபாயை 1,2,5 மற்றும் 10 ரூபாய் நாணயங்களாக கொண்டு வந்திருந்தார். #KuppaljiDevadoss #independentcandidate #ChennaiSouth #electiondeposit #depositincoins 
    மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவேகவுடா கர்நாடக மாநிலத்தில் உள்ள தும்கூர் பாராளுமன்ற தொகுதியில் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். #DeveGowda #TumkurLSpolls
    பெங்களூரு:

    கர்நாடகத்தில் மொத்தம் 28 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு இருகட்டமாக ஏப்ரல் 18, 23-ந்தேதிகளில் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலை காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி அமைத்து எதிர்கொள்கின்றன. 

    இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்பட்டு காங்கிரஸ் 20 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 8 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவேகவுடா கர்நாடக மாநிலத்தில் உள்ள தும்கூர் பாராளுமன்ற தொகுதியில் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

    இதே தொகுதியின் தற்போதைய எம்.பி.யாக பதவி வகிக்கும் முட்டாஹனுமேகவுடாவும் காங்கிரஸ் வேட்பாளராக இங்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

    முன்னர், ஹஸ்ஸன் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த தேவேகவுடா அந்த தொகுதியை தனது பேரன் பிரஜ்வால் ரேவன்னா போட்டியிடுவதற்காக விட்டுக் கொடுத்தார். 

    தொகுதி பங்கீட்டின்படி மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு காங்கிரஸ் கட்சியால் முன்னர் ஒதுக்கப்பட்ட வடக்கு பெங்களூரு தொகுதிக்கு பதிலாக அக்கட்சியின் டெல்லி தலைமையிடம் பேசி தும்கூர் தொகுதியை தேவேகவுடாவுக்கு ஒதுக்குமாறு துணை முதல் மந்திரி பரமேஸ்வரா மூலம் கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி ஏற்பாடு செய்தார்.

    இதனால், தேவேகவுடாவுக்கு முன்னர் ஒதுக்கப்பட்ட வடக்கு பெங்களூரு தொகுதியில் போட்டியிட முட்டாஹனுமேகவுடாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

    ஆனால், அவர் எனக்கு இந்த தொகுதியில்தான் செல்வாக்கு அதிகம் என்று கூறி வீம்பாக தும்கூரில் மீண்டும் காங்கிரஸ் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இவர்கள் இருவரில் யார் வேட்புமனுவை வாபஸ் பெறுவார்கள்? என்பது புரியாத நிலையில் தும்கூரு தொகுதி பாராளுமன்ற வேட்பாளராக பாஜக சார்பில் பசவராஜ் போட்டியிடுகிறார். #DeveGowda #TumkurLSpolls
    மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜியை இன்று சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அந்தமானில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்வதாக தெரிவித்தார். #KamalHaasan #KamalHaasancampaign #Andamancampaign #TMCcampaign #TMCcandidate
    கொல்கத்தா:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கொல்கத்தாவில் இன்று  திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும் மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜியை சந்தித்தார்.

    தனது குறுகியகால அரசியல் பயணத்தில் மூன்றாவது முறையாக மம்தாவை சந்தித்த கமல், நாட்டுநடப்பு உள்பட பல்வேறு அரசியல் விவகாரங்கள் தொடர்பாக இன்று ஆலோசனை நடத்தினர்.

    இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், ’இன்றைய ஆலோசனை மகிழ்ச்சியளிக்கும் வகையில் அமைந்திருந்தது. அந்தமான் பாராளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சியும் இடம்பெற்றுள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நட்புறவு மேலும் பலப்பட வேண்டும் என விரும்புகிறேன்.



    அந்தமானில் போட்டியிடும் எங்கள் கூட்டணி வேட்பாளருக்காக நான் அங்கு சென்று பிரசாரம் செய்வேன்’ என்று குறிப்பிட்டார்.

    அந்தமான் நிக்கோபர் தீவில் உள்ள ஒரு பாராளுமன்ற தொகுதிக்கு ஏப்ரல் 11-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதியின் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினராக பாஜகவை சேர்ந்த பிஷ்னு படா ராய் பதவி வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #KamalHaasan #KamalHaasancampaign  #Andamancampaign #TMCcampaign  #TMCcandidate
    பாராளுமன்ற தொகுதி மற்றும் 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரஸ், பா.ஜனதா உள்ளிட்ட பல்வேறு கட்சி வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். #LSPolls #ADMK #DMK #congress
    சென்னை:

    பாராளுமன்ற தொகுதி மற்றும் 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரஸ், பா.ஜனதா உள்ளிட்ட பல்வேறு கட்சி வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

    தென்சென்னை தொகுதி தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் அடையாறு மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

    வடசென்னை தொகுதி தி.மு.க. வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமி பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள மாநகராட்சி வடக்கு வட்டார துணை கமி‌ஷனர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.



    தூத்துக்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி தூத்துக்குடி மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான சந்தீப் நந்தூரியிடம் மனுதாக்கல் செய்தார்.

    அரக்கோணம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகன் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபனிடம் மனுதாக்கல் செய்தார். வேலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் கலெக்டர் ராமனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    திருச்சி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் திருச்சி கலெக்டரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான சிவராசுவிடம் மனுதாக்கல் செய்தார். தேனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பல்லவி பல்தேவ்விடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

    கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி மணி கரூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரும் தேர்தல் அதிகாரியுமான அன்பழகனிடம் மனுதாக்கல் செய்தார்.

    கரூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரை கரூர் கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். காஞ்சிபுரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேல் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் மனுதாக்கல் செய்தார். மதுரை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ராஜ் சத்யன் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் மனுதாக்கல் செய்தார்.



    தூத்துக்குடி தொகுதி பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் மனுதாக்கல் செய்தார். சிவகங்கை தொகுதி பா.ஜனதா வேட்பாளர் எச்.ராஜா மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் மனுதாக்கல் செய்தார்.

    தென்காசி தொகுதி புதியதமிழகம் கட்சி வேட்பாளர் கிருஷ்ணசாமி தேர்தல் அதிகாரி முத்துராமலிங்கத்திடம் மனுதாக்கல் செய்தார். திருச்சி தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் இளங்கோவன் கலெக்டர் சிவராசுவிடம் மனுதாக்கல் செய்தார்.

    சிதம்பரம் (தனி) தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் திருமாவளவன் அரியலூர் கலெக்டர் விஜயலட்சுமியிடம் மனுதாக்கல் செய்தார்.

    ஈரோடு தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் கணேசமூர்த்தி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் மனுதாக்கல் செய்தார்.

    கோவை தொகுதி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் நடராஜன் மனுதாக்கல் செய்தார்.

    பெரம்பலூர் தொகுதி இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் பெரம்பலூர் கலெக்டர் சாந்தாவிடம் மனுதாக்கல் செய்தார்.

    திருப்பூர் தொகுதி இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சுப்பராயன் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் மனுதாக்கல் செய்தார்.

    அரூர் சட்டசபை தொகுதி தி.மு.க. வேட்பாளர் கிருஷ்ண குமார், மானாமதுரை சட்டசபை தொகுதி தி.மு.க. வேட்பாளர் இலக்கியதாசன் ஆகியோர் தேர்தல் அதிகாரியிடம் மனுதாக்கல் செய்தனர்.

    ஓசூர் சட்டசபை தொகுதியில் அ.திமு.க. வேட்பாளராக பாலகிருஷ்ண ரெட்டியின் மனைவி ஜோதி போட்டியிடுகிறார். அவர் இன்று தேர்தல் அதிகாரியிடம் மனுதாக்கல் செய்தார். #LSPolls #ADMK #DMK #congress #BJP
    நாட்டிற்கு ஒப்பந்த பிரதமர் தேவையில்லை என்றும் சரியான நிரந்தரமான பிரதமரே தேவை என்றும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான முக்தார் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்.#BJP #MukhtarAbbasNaqvi #Congress
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் அனைத்து கட்சி தலைவர்களும் பொதுக்கூட்டங்கள், பிரச்சாரம், செய்தியாளர் சந்திப்பு என தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பாஜக மூத்த தலைவரும், மத்திய மந்திரியுமான முக்தார் அப்பாஸ் நக்வி இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    காங்கிரசுக்கு சொல்வதை தட்டாமல் செய்யும் ஒருவர் பிரதமராக வேண்டும். நாட்டிற்கு சுழற்சி முறையிலோ, மாற்று முறையிலோ வருடத்தின் முதல் 6 மாதத்திற்கு ஒரு பிரதமர், அடுத்த 6 மாதத்திற்கு வேறொரு பிரதமர் என தேவையில்லை. காங்கிரசுக்கு ஒப்பந்த அடிப்படையிலான பிரதமர் வேண்டும். ஆனால் நாட்டிற்கு நிரந்தர பிரதமர் தான் வேண்டும்.



    நாட்டின் வளம், பாதுகாப்பு, வளர்ச்சி என அனைத்திலும் சிறப்பாக செயலாற்றும் பிரதமர் மோடி தான் அந்த சரியான நிரந்தர பிரதமர் என நாட்டில் உள்ள மக்கள் அனைவருக்கும் தெரியும். காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் பிரியங்கா அரசியல் சுற்றுலா மேற்கொள்கிறார். கடந்த 5 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சிக்கு பிரதமர் மோடி திட்டப்பணிகளை செய்வது குறித்து தவறான வசைப்பாடும் கும்பலாக காங்கிரஸ் கட்சியினர் மாறி விட்டனர்.

    மேலும் பயங்கரவாதிகளுக்கு எதிரான மோடியின் நடவடிக்கைகளை காங்கிரசால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. இந்த செயல்களை கண்டு மனசோர்வடைந்த காங்கிரஸ் கட்சியினர் மோடிக்கு எதிரான மோசமான பாதையை தேர்ந்தெடுத்துள்ளனர்.  

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #MukhtarAbbasNaqvi #Congress

    பாராளுமன்ற தேர்தலில் தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயவர்தன் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். #vijayakanth #admk #Jayavardhan

    சென்னை:

    தென்சென்னை பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தன் தீவிர பிரசாரம் செய்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகிறார்.

    அ.தி.மு.க. கூட்டணி கட்சியான தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் வேட்பாளர் ஜெயவர்தன் சந்தித்து வாழ்த்து பெற்றார். பிரேமலதா விஜயகாந்த்தும் ஜெயவர்தன் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.

    பின்னர் வேட்பாளர் ஜெயவர்தன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தென்சென்னை தொகுதி மக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் கடந்த 5 ஆண்டுகளில் செய்து கொடுத்துள்ளேன். தொகுதி மேம்பாடு நிதியிலும் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்துள்ளேன்.

    விருகம்பாக்கம் மற்றும் தி.நகர் தொகுதிக்கு உட்பட்ட வடபழனி பேருந்து நிலையத்தை மேம்படுத்தும் பொருட்டு நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.80 லட்சம் மூலம் வெள்ளத் தடுப்புபணிகள், உயர் கோபுர மின் விளக்கு, கழிப்பறை மற்றும் பயணியர்களுக்கு இருக்கை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது.

    ஒட்டியம்பாக்கம் ஊராட்சியை மேம்படுத்தும் விதமாக 1.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலைகள் மேம்படுத்துதல், தெரு மின் விளக்கு போன்ற வளர்ச்சி திட்டங்கள் செயல் படுத்தப்பட்டது.

    சோழிங்கநல்லூர் தொகுதியிலுள்ள கண்ணகி நகரில் கழிவுநீர் அடைப்பு அகற்றும் இயந்திரம் அமைப்பதற்கு ரூ.51.86 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வர உள்ளது.

    தொகுதி மக்களுக்காக அயராது பாடுபட்டு வரும் என்னை இந்த முறையும் அதிக வாக்கு வித்தியாசத்தில் மக்கள் வெற்றி பெற செய்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வேட்பாளர் ஜெயவர்தனுடன் மாவட்ட செயலாளர் விருகை வி.என்.ரவி எம்.எல்.ஏ. மற்றும் அ.தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சென்று இரட்டை இலைக்கு ஆதரவு திரட்டினர். #vijayakanth #admk #Jayavardhan

    பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைப்பது பற்றி காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல்காந்தி ஆலோசனை நடத்தினார். #rahulgandhi #parliamentelection #aap

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு மாநில கட்சிகளுடன் சுமூகமான கூட்டணி அமையவில்லை. காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளை கேட்டதுதான் கூட்டணி உடன்பாடு ஏற்படாமல் போனதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

    டெல்லியில் மொத்தம் 7 பாராளுமன்ற தொகுதிகள் இருக்கின்றன. அங்கு ஆளுங் கட்சியாக உள்ள ஆம்ஆத்மி கட்சியுடன் கூட்டணி சேர காங்கிரஸ் விரும்பியது. ஆனால் காங்கிரஸ் 4 தொகுதிகளை கேட்டதால் ஆம்ஆத்மி கூட்டணிக்கு சம்மதிக்க வில்லை.

    இதனால் தனித்து போட்டியிடும் நடவடிக்கைகளில் ஆம்ஆத்மி ஈடுபட்டுள்ளது. இதற்கிடையே ஆம் ஆத்மியுடன் சேர காங்கிரஸ் தலைவர்கள் சிலர் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள்.

    இதுபற்றி இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டெல்லியில் ஆலோசனை நடத்தினார். டெல்லி காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகளுடன் அவர் ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைப்பது பற்றி விவாதித்தார்.


    டெல்லி காங்கிரஸ் தலைவர்களில் ஒருசாரார் ஆம் ஆத்மிக்கு ஆதரவாகவும், மற்றொரு தரப்பினர் ஆம்ஆத்மிக்கு எதிராகவும் கருத்துக்களை தெரிவித்தனர். எனவே டெல்லியில் ஆம்ஆத்மியுடன் காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணி உடன்பாடு ஏற்படுமா? என்பது தொடர்ந்து இழுபறியிலே உள்ளது.

    காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுமைக்குமான பொதுவான தேர்தல் அறிக்கை வெளியிட திட்ட மிடப்பட்டுள்ளது. இதற்காக தனி குழு அமைக்கப்பட்டு இருந்தது.

    அவர்கள் அறிக்கை தயாரித்து கொடுத்துள்ளனர். வருகிற 2-ந்தேதி இந்த தேர்தல் அறிக்கை வெளியிடுவது பற்றியும் இன்று ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    இதற்கிடையே கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல்காந்தியை போட்டியிட செய்ய முயற்சி நடந்து வருகிறது. கேரள மாநில காங்கிரஸ் தலைவர்கள் இது தொடர்பாக ராகுல்காந்தியை வலியுறுத்தி வருகிறார்கள்.

    இது தொடர்பாகவும் இன்று ராகுல்காந்தி காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் விவாதித்தார். எனவே ராகுல்காந்தி வயநாட்டில் போட்டியிடுவாரா? என்பது இன்று மாலை தெரிந்து விடும். #rahulgandhi #parliamentelection #aap

    பாராளுமன்ற தேர்தலில் தென்சென்னை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக டாக்டர் ஜெயவர்தன் போட்டியிடுகிறார். அவர் இன்று வாக்கு சேகரிக்கும் பணியை தொடங்கினார். #ADMK

    சென்னை:

    மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் அருகே சாமி கும்பிட்டு விட்டு தனது பிரசார பயணத்தை தொடங்கினார். திறந்த ஜீப்பில் நின்றபடி வீதிவீதியாக சென்று அவர் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்காளர்களை பார்த்து கும்பிட்டபடி இரட்டை இலை சின்னத்துக்கு அவர் ஓட்டு கேட்டார்.

    வேட்பாளர் ஜெயவர்தனுடன் மாவட்ட செயலாளர் வி.என்.ரவி, ஆர்.நட்ராஜ் எம்.எல்.ஏ. பா.ம.க. மாவட்ட செயலாளர் சிவகுமார், தே.மு.தி.க. ஆனந்தன், பா.ஜ.க டால்பின் ஸ்ரீதர், த.மா.கா கொட்டிவாக்கம் முருகன், அ.தி.மு.க. பகுதி செயலாளர் டி.ஜெயசந்தின், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கந்தன், அசோக், வட்ட செயலாளர் தங்கதுரை என்கிற பாபு உள்பட அ.தி.மு.க, பா.ம.க., தே.மு.தி.க, பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

    பிரசாரத்தின் போது வழி நெடுகிலும் பெண்கள் ஆரத்தி எடுத்தும், மாடியில் நின்று பூக்கள் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் அருகே தொடங்கிய பிரசாரம் சாந்தோம் நெடுஞ்சாலை வழியாக சென்று கலங்கரை விளக்கம் அருகே முடிவடைந்தது. பிரசாரத்தின் இடையே ஜெயவர்தன் மாலை மலர் நிருபரிடம் கூறியதாவது :-

    அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி மக்களுக்கு நன்மை செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட கூட்டணி. மயிலாப்பூர் தொகுதி மட்டுமல்ல 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவது நிச்சயம்.

    ஜெயலலிதா ஆட்சியில் மக்களுக்கு கிடைத்த பொன்னான நலத்திட்டங்கள் இன்றும் நினைவு கூறத்தக்கவையாக உள்ளது. தமிழகத்தில் மக்கள் நலத்திட்டங்களும், ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் எண்ணற்றவை நிறைவேற்றப்பட்டுள்ளன.

    எம்.பி. மேம்பாட்டு நிதி மூலம் தென்சென்னை தொகுதியில் ஏராளமான நலத்திட்டங்களை வளர்ச்சி பணிகளை நிறைவேற்றி உள்ளேன். ஜெயலலிதாவின் சாதனைகளை சொல்லி நாங்கள் மக்களிடம் வாக்குகளை சேகரித்து வருகிறோம். நிச்சயம் இந்த பாராளுமுன்ற தேர்தலில் வெற்றி பெற்று மாநில உரிமையை நிலைநாட்டுவோம்.

    இவ்வாறு வேட்பாளர் ஜெயவர்தன் கூறினார். #ADMK

    தேனி பாராளுமன்ற தொகுதியில் தான் யாரையும் போட்டியாக கருதவில்லை என்று காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்வோகன் தெரிவித்தார். #LSPolls #Congress #EVKSElangovan
    தேனி:

    தேனி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று மனுத்தாக்கல் செய்தார். அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேனி மாவட்ட மக்களின் அடிப்படை பிரச்சனைகளை அறிந்து அதனை நிறைவேற்ற பாடுபடுவேன். குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளாக மதுரை-போடி அகல ரெயில் பாதை திட்டப்பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனை மேற்கொண்ட 4 காண்டிராக்டர்கள் ஓடி விட்டனர்.

    கடைசியாக பணி செய்த ஆந்திராவைச் சேர்ந்த காண்டிராக்டர் ஒருவர் தன்னிடம் அதிக அளவு கமி‌ஷன் கேட்பதாக என்னிடம் கூறினார். தேனி மாவட்ட மக்களின் நீண்ட கால பிரச்சனையை கருத்தில் கொண்டு நான் வெற்றி பெற்ற 6 மாதத்தில் இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த பாடுபடுவேன்.


    தேனி தொகுதியில் நான் யாரையும் போட்டியாக கருதவில்லை. தற்போது பிஞ்சிலேயே பழுத்த பழம் நிறைய உள்ளது. நான் மரத்திலேயே பழுத்த பழம்.

    இந்த தொகுதிக்கு புது முகம் என்று என்னை கூறுகின்றனர். நடிகர் நடிகைகளில்தான் புதுமுகம் உண்டு. நான் அரசியலில் பல ஆண்டுகளாக பணி செய்துள்ளேன். நான் வெற்றி பெற்றால் தேனி மாவட்டத்தை சுற்றுலா தலமாக்குவேன். அதோடு மக்களை நேரடியாக சந்தித்து அவர்கள் குறைகளை நிவர்த்தி செய்வேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #LSPolls #Congress #EVKSElangovan
    ×