search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்சென்னை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயவர்தன் விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்
    X

    தென்சென்னை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயவர்தன் விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்

    பாராளுமன்ற தேர்தலில் தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயவர்தன் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். #vijayakanth #admk #Jayavardhan

    சென்னை:

    தென்சென்னை பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தன் தீவிர பிரசாரம் செய்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகிறார்.

    அ.தி.மு.க. கூட்டணி கட்சியான தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் வேட்பாளர் ஜெயவர்தன் சந்தித்து வாழ்த்து பெற்றார். பிரேமலதா விஜயகாந்த்தும் ஜெயவர்தன் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.

    பின்னர் வேட்பாளர் ஜெயவர்தன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தென்சென்னை தொகுதி மக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் கடந்த 5 ஆண்டுகளில் செய்து கொடுத்துள்ளேன். தொகுதி மேம்பாடு நிதியிலும் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்துள்ளேன்.

    விருகம்பாக்கம் மற்றும் தி.நகர் தொகுதிக்கு உட்பட்ட வடபழனி பேருந்து நிலையத்தை மேம்படுத்தும் பொருட்டு நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.80 லட்சம் மூலம் வெள்ளத் தடுப்புபணிகள், உயர் கோபுர மின் விளக்கு, கழிப்பறை மற்றும் பயணியர்களுக்கு இருக்கை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது.

    ஒட்டியம்பாக்கம் ஊராட்சியை மேம்படுத்தும் விதமாக 1.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலைகள் மேம்படுத்துதல், தெரு மின் விளக்கு போன்ற வளர்ச்சி திட்டங்கள் செயல் படுத்தப்பட்டது.

    சோழிங்கநல்லூர் தொகுதியிலுள்ள கண்ணகி நகரில் கழிவுநீர் அடைப்பு அகற்றும் இயந்திரம் அமைப்பதற்கு ரூ.51.86 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வர உள்ளது.

    தொகுதி மக்களுக்காக அயராது பாடுபட்டு வரும் என்னை இந்த முறையும் அதிக வாக்கு வித்தியாசத்தில் மக்கள் வெற்றி பெற செய்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வேட்பாளர் ஜெயவர்தனுடன் மாவட்ட செயலாளர் விருகை வி.என்.ரவி எம்.எல்.ஏ. மற்றும் அ.தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சென்று இரட்டை இலைக்கு ஆதரவு திரட்டினர். #vijayakanth #admk #Jayavardhan

    Next Story
    ×