என் மலர்
தேர்தல் செய்திகள்
டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதேசமயம் வரும் தேர்தலில் அமமுக தரப்புக்கு பொது சின்னம் ஒதுக்குவது பற்றி பரிசீலிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
குக்கர் சின்னம் கிடைக்காதது டிடிவி தரப்புக்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது. அதேசமயம், உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலை ஏற்று வேறு பொது சின்னத்தை ஒதுக்குமாறு கூறியிருப்பதால் அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தேர்தல் ஆணையம் ஆராய்ந்து வருகிறது.

இந்நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பாராளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் தங்களுக்கு பொது சின்னம் ஒதுக்கக் கோரி டிடிவி தினகரன் சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #LSPolls #TTVDhinakaran #PressureCookerSymbol
தேனி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்பு மனுவோடு தனது சொத்து விவரங்களையும் தாக்கல் செய்தார். அதன் விவரம் வருமாறு:-
தனக்கு அசையும் சொத்துக்களாக ரூ.2 கோடியே 33 லட்சத்து 26 ஆயிரத்து 360-ம், அசையாத சொத்துக்களாக ரூ.13 கோடியே 25 லட்சம் என மொத்தம் ரூ.15 கோடியே 58 லட்சத்து 26 ஆயிரத்து 360 மதிப்பில் சொத்துக்கள் இருப்பதாக கூறியுள்ளார்.
அசையும் சொத்துக்களில் ரூ.24 லட்சத்து 33 ஆயிரத்து 325 மதிப்பில் ஒரு கார் இருப்பதாகவும், கையிருப்பில் ரொக்கமாக ரூ.7 லட்சத்து 46 ஆயிரத்து 661 இருப்பதாகவும் கூறியுள்ளார். அசையாத சொத்துக்களில், ரூ.10 கோடி மதிப்பில் பூர்வீக சொத்துக்களும், ரூ.3 கோடியே 25 லட்சம் மதிப்பில் சுயமாக வாங்கிய சொத்துக்கள் உள்ளதாகவும் கூறியுள்ளார். அத்துடன் அவர், அரசுக்கு செலுத்த வேண்டிய பாக்கித் தொகையாக ரூ.64 லட்சத்து 27 ஆயிரத்து 457 உள்ளதாக கூறியுள்ளார். அதற்கு, வருமான வரி நிலுவை சர்ச்சையில் உள்ளதால் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளதாக விளக்கமும் அளித்துள்ளார்.
அதேபோல், அவர் தனது மனைவி பெயரில் ரூ.39 லட்சத்து 49 ஆயிரத்து 618 மதிப்பில் அசையும் சொத்துக்களும், ரூ.4 கோடியே 13 லட்சம் மதிப்பில் அசையா சொத்துக்களும், கூட்டுக் குடும்ப பெயரில் ரூ.21 லட்சத்து 65 ஆயிரத்து 294 மதிப்பில் அசையும் சொத்துக்களும், ரூ.3 கோடியே 30 லட்சம் மதிப்பில் அசையா சொத்துக்களும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். #LokSabhaElections2019 #Elangovan

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக கனிமொழி எம்.பி.யும், பா.ஜனதா வேட்பாளராக தமிழிசை சவுந்தரராஜனும் போட்டியிடுகிறார்கள். இவர்கள் தங்கள் வேட்பு மனுக்களை தொகுதி தேர்தல் அலுவலரான கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் தாக்கல் செய்தனர். வேட்பு மனுக்களில் தமிழிசை சவுந்தரராஜன், கனிமொழி ஆகியோர் தங்களது சொத்து விவரங்களை வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தாக்கல் செய்துள்ள சொத்து பட்டியலில் தனக்கு ரூ. 1 கோடியே 50 லட்சத்து 7 ஆயிரத்து 600 மதிப்பில் அசையும் சொத்துகளும், ரூ. 50 லட்சம் மதிப்பில் அசையா சொத்துகளும் உள்ளதாகவும், தனது கணவர் சவுந்தரராஜன் பெயரில் ரூ. 2 கோடியே 11 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான அசையும் சொத்துகள் இருப்பதாகவும், தனக்கு வங்கியில் ரூ. 1 லட்சத்து 87 ஆயிரம் கடன் இருப்பதாகவும், தன் மீது குற்ற வழக்குகள் ஏதும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தி.மு.க. வேட்பாளர் கனிமொழி தாக்கல் செய்த சொத்து பட்டியலில் தனக்கு, ரூ. 21 கோடியே 16 லட்சத்து 57 ஆயிரத்து 370 மதிப்பில் அசையும் சொத்துகளும், ரூ. 8 கோடியே 92 லட்சத்து 20 ஆயிரத்து 200 மதிப்பிலான அசையா சொத்துகளும் உள்ளன.
வங்கிகளில் ரூ. 1 கோடியே 92 லட்சத்து 90 ஆயிரத்து 928 கடன் இருப்பதாகவும், தனது தாய் ராஜாத்தி பெயரில் ரூ.1 கோடியே 27 லட்சத்து 48 ஆயிரத்து 413 மதிப்பிலான சொத்து இருப்பதாகவும், தன் மீதான 6 குற்றவியல் வழக்குகளில் இரண்டு வழக்குகள் முடிந்துவிட்டதாகவும், 4 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். #LokSabhaElections2019 #BJP #DMK
கன்னியாகுமரி தொகுதியில் 3 கோடீஸ்வர வேட்பாளர்கள் உள்ளனர்.
பா.ஜனதா வேட்பாளர் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணனுக்கு மொத்தம் ரூ.7 கோடியே 49 லட்சத்து 96 ஆயிரத்து 453 சொத்து உள்ளது.
அசையும் சொத்தாக ரூ.50 லட்சத்து 56 ஆயிரத்து 298, அசையா சொத்தாக ரூ.6 கோடியே 99 லட்சத்து 40 ஆயிரத்து 155 உள்ளது என்றும் அவர், தனது வேட்பு மனுவில் கூறி உள்ளார். மேலும் கடன் எதுவும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாருக்கு மொத்தம் ரூ.417 கோடியே 49 லட்சத்து 30 ஆயிரத்து 444 சொத்து உள்ளது.
அசையும் சொத்துக்களாக அவரது பெயரில் ரூ.230 கோடியே 20 லட்சத்து 95 ஆயிரத்து 302-ம், அசையா சொத்துக்களாக ரூ.181 கோடி 95 லட்சம் மதிப்பில் சொத்துக்களும், பரம்பரை சொத்தாக ரூ.30 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாகவும் வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
வசந்தகுமாரின் மனைவி பெயரில் அசையும் சொத்தாக ரூ.28 லட்சத்து 35 ஆயிரத்து 142-ம், அசையா சொத்தாக ரூ.4 கோடி 75 லட்சமும் உள்ளது.

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் எபினேசர் ரூ.2 கோடி சொத்து உள்ளதாக தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #PonRadhakrishnan #HVasanthakumar
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது பல்வேறு வறுமை ஒழிப்பு திட்டங்களை நிறைவேற்றினார். 2004 முதல் 2014 வரை நடைபெற்ற மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத்திட்டங்களால் 15 கோடி மக்களை வறுமையின் பிடியிலிருந்து வெளியேற்றியதற்காக ஐ.நா. சபையே இந்தியாவிற்கு விருது வழங்கி சிறப்பித்திருக்கிறது. இதை அத்வானியே பாராட்டியிருக்கிறார்.
நரேந்திர மோடி அரசு வறுமை ஒழிப்பு முயற்சியில் மிகப்பெரிய தோல்வியை அடைந்துள்ளது. இதிலிருந்து இந்தியாவை மீட்க வேண்டிய பொறுப்பை உணர்ந்த காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி நேற்று குறைந்தபட்ச வருமான உறுதி திட்டத்தை நாட்டு மக்களுக்கு அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு இந்திய வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவையாகும்.
இந்த திட்டத்தின்படி மொத்த மக்கள் தொகையில் 20 சதவீதத்தினரான 5 கோடி குடும்பங்களைச் சேர்ந்த 25 கோடி மக்கள் பயனடைகிற வகையில் ஆண்டுக்கு ரூபாய் 72 ஆயிரம் வீதம் வங்கி கணக்கில் நேரிடையாக செலுத்தப்படும்.
இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கு மொத்தம் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் கோடி தேவை என்றும், முதல் ஆண்டில் ரூபாய் 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி தேவைப்படும் என ராகுல்காந்தி கூறியிருக்கிறார்.
நரேந்திர மோடி ஆட்சியில் 15 தொழிலதிபர்களுக்கு வங்கிகள் மூலமாக சலுகை அளிப்பதற்கு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி இருக்கிறார். நரேந்திர மோடி குறிப்பிட்ட முதலாளிகளுக்காக சலுகை வழங்கியிருக்கிறார்.
ஆனால் ராகுல்காந்தி விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ததோடு 25 கோடி மக்களுக்கு குறைந்தபட்ச வருமானத்தை உறுதி செய்து வறுமைக்கு எதிரான மிகப்பெரிய தாக்குதலை தொடுத்திருக்கிறார்.
வறுமை ஒழிப்பு முயற்சியில் ராகுல்காந்தி வெற்றி பெறுவதற்கு பாராளுமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் மிகப்பெரிய அளவில் ஆதரவு அளித்து ஒத்துழைப்பார்கள்.
இவ்வாறு கே.எஸ். அழகிரி கூறியுள்ளார். #LokSabhaElections2019 #KSAlagiri
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க.வின் மதசார்பற்ற கூட்டணி பாராளுமுன்ற தேர்தலில் வெற்றி பெறும். பிரசாரத்தின்போது அதை உணர முடிகிறது. சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மத்தியில் மட்டுமல்ல மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்திற்கான சூழல்தான் நிலவுகிறது.
சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் பாரபட்சத்தோடு செயல்படுகிறதா என்பதற்கு, தேர்தல் ஆணையம்தான் பதில் சொல்ல வேண்டும். பிரசாரத்தின்போது கடந்த தேர்தலில் பார்த்ததைவிட பல்லாயிரக்கணக்கான மக்கள் கூட்டம் அதிகமாகி உள்ளது.
இவ்வாறு வைகோ கூறினார். #LokSabhaElections2019 #Vaiko
சென்னை:
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நிருபர்களிடம் கூறியதாவது:-
தேர்தல் நடத்தை விதி முறைகளை மீறியதாக 1011 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் சென்னை, திருப்பூர், தேனி, மதுரை மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ளன.
பொதுமக்கள் தேர்தல் கமிஷனுக்கு புகார் அளிக்கக் கூடிய சி விஜில் செயலி (ஆப்) மூலம் 968 புகார்கள் வந்துள்ளன. அதில் 622 புகார்களுக்கு ஆதாரம் இல்லை. 314 புகார்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பணம் விநியோகம் சம்பந்தமாக 76 புகைப்பட ஆதாரங்கள் வந்துள்ளன. மதுபானங்கள் வழங்குவதாக 11 புகைப்படங்கள் வந்துள்ளன. இதுவரை வாகன சோதனையில் ரூ.38 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் செலவின சிறப்பு பார்வையாளர் மதுமகாஜன் நாளை சென்னை வருகிறார். ஓட்டுரிமை இருந்து வெளிநாட்டில் வசிப்பவர்கள் ஓட்டுபோட வேண்டுமானால் இங்கு வந்து தான் ஓட்டுபோட முடியும். வெளிநாட்டில் இருந்து கொண்டே ஓட்டு போட முடியாது.
இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #SatyabrataSahoo
பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். அப்போது, பாராளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார்.

‘முதல்வரை சந்தித்தபோது, சிறுபான்மையினருக்கு பாதுகாவலாக மத்திய அரசு இருக்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்தேன். மத்தியில் வலிமையான ஒரு அரசு வரவேண்டும், தொங்கு பாராளுமன்றம் அமைந்துவிடக்கூடாது என்பதற்காக அதிமுக கூட்டணியை ஆதரிக்கிறேன்’ என்றார் சரத்குமார். #LokSabhaElections2019 #Sarathkumar
முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுக்காக சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார்.
நேற்று வடசென்னை தொகுதி ராயபுரத்தில் திறந்த வேனில் பிரசாரத்தை தொடங்கினார். மத்திய சென்னை தொகுதியில் உள்ள வால்டாக்ஸ் சாலையில் பிரசாரத்தை முடித்தார்.
இன்று மத்திய சென்னை, தென்சென்னை தொகுதிகளில் திறந்த வேனில் சென்று பிரசாரம் செய்கிறார். திருவல்லிக்கேணியில் மதியம் 2 மணியளவில் பிரசாரத்தை தொடங்கும் அவர் கே.கே.நகரில் முடிக்கிறார்.
இன்று 24 இடங்களில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார். அதன் விவரம் வருமாறு:-
பார்த்தசாரதி கோவில் பாரதியார் வீடு பின்புறம், சிந்தாதிரிப்பேட்டை மார்க்கெட் அருகில், சூளை போஸ்ட் ஆபீஸ், அயனாவரம், டி.பி. சத்திரம், சி.எம்.டி.ஏ. காலனி, புஷ்பா நகர், காமராஜர் காலனி நாகவள்ளியப்பன், கோவில், அசோக் நகர் 1-வது தெரு, அயோத்தியா மண்டபம், முத்துரங்கன் சாலை-தி.நகர், கோட்டூர்புரம் சாலை பொன்னியம்மன் கோவில் மார்க்கெட் அருகில், ரேஸ் கோர்ஸ் சாலை.
மத்திய கைலாஷ்- குருநானக் கல்லூரி வழியாக காந்தி சாலை, அம்பிகா தெரு, திருவான்மியூர், மேற்கு அவென்யு, அண்ணா தெரு, லட்சுமி காந்தி சாலை, சாஸ்திரிநகர் முதல் அவென்யு, ஆர்.கே.மடம், தெற்கு மாட வீதி வழியாக மாங்கொல்லை.
வடக்குமாட வீதி, லஸ்கார்னர், திருவள்ளூர் சாலை, எஸ்.ஐ.இ.டி. கல்லூரி, அரங்கநாதர் சப்வே, கரும்பாடி அம்மன் கோவில், விருகம்பாக்கம் ஏரிக்கரை, தசரதபுரம் சாலை சந்திப்பு, ஜாபர்கான்பேட்டை, காசி தியேட்டர், பாரதிநகர், பச்சையம்மன் கோவில் ஏரிக்கரை, ஆற்காடு சாலை, கே.கே.நகர் சாலை சந்திப்பு. #LokSabhaElections2019 #EdappadiPalaniswami
புதுடெல்லி:
டெல்லி விமான நிலையத்தில் சமீபத்தில் பயணிகளுக்கு ஏர் இந்தியா நிறுவனம் வழங்கிய விமான டிக்கெட்டில் பிரதமர் மோடி, குஜராத் முதல்- மந்திரி விஜய்ரூபானி ஆகியோரது படங்கள் அச்சிடப்பட்டு இருந்தன.
இது குறித்து பல்வேறு தரப்பினரும் சந்தேகம் எழுப்பி இருந்தனர். தேர்தல் ஆணையத்துக்கு புகார் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அந்த டிக்கெட்டுகள் திரும்ப பெறப்படுகின்றன.
இது தொடர்பாக ஏர் இந்தியா நிறுவன செய்தி தொடர்பாளர் கூறியதாவது:-
அந்த டிக்கெட்டுகள் ஜனவரியில் அச்சிடப்பட்டவை. அதில் உள்ள மோடி, விஜய் ரூபானியின் படங்கள் இடம் பெற்ற விளம்பரம் அப்போது குஜராத்தில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டுக்காக வெளியிடப்பட்டது. 3-வது நபர் அளித்த விளம்பரத்தின் அடிப்படையில் இந்த படங்கள் அச்சிடப்பட்டன.

இந்த டிக்கெட்டுகள் குஜராத்தில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் வினியோகிக்கப்பட்டன.
இந்த விவகாரத்தில் தேர்தல் நடத்தை விதி மீறல் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் ஏர் இந்தியா அந்த விமான டிக்கெட்டுகளை உடனடியாக திரும்ப பெறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார். #PMModi #airindia
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவடைய உள்ள நிலையில், டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதேசமயம் வரும் தேர்தலில் அமமுக தரப்புக்கு பொது சின்னம் ஒதுக்குவது பற்றி பரிசீலிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த தீர்ப்பு குறித்து டிடிவி தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறுகையில், “அமமுகவின் 59 வேட்பாளர்களையும் சுயேட்சைகளாக கருதி ஒரே பொது சின்னம் ஒதுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. பொது சின்னம் வழங்கும்படி உத்தரவிட்டிருப்பதன்மூலம், மகத்தான வெற்றியை பெற்றிருக்கிறோம். அமமுக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர் பட்டியல் தரப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி, பொது சின்னம் ஒதுக்க தலைமை தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிடக்கோரி தேர்தல் ஆணையத்தை அணுக உள்ளோம்” என்றார்.
எனவே, பொது சின்னம் தொடர்பாக நல்ல முடிவு வரும் என்ற நம்பிக்கையில் அமமுக தலைமை உள்ளது. அமமுக வேட்பாளர்கள் அனைவரும் இன்று பிற்பகல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய உள்ளனர். #LokSabhaElections2019 #LSPolls #TTVDhinakaran #PressureCookerSymbol






