என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    இந்திராகாந்தி மாதிரி மூக்கு இருப்பதால் பிரியங்காவால் வெற்றி பெற முடியாது என்று பாஜக மந்திரி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #BJP #LokSabhaElections2019 #LSPolls

    ஆமதாபாத்:

    குஜராத் மாநிலம் அனந்த் பகுதியில் மத்திய மந்திரி மன்சூக்மந்தவியா நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசும்போது காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்காவை மிக கடுமையாக தாக்கி பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

    இந்திராகாந்தி போன்று பிரியங்காவுக்கும் மூக்கு இருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் மிகவும் பெருமையாக சொல்லி கொள்கிறார்கள். இந்திராகாந்தி மாதிரி மூக்கு இருந்து விட்டால் போதுமா?

    அந்த மூக்கை வைத்துக் கொண்டு எப்படி வெற்றி பெற முடியும். பாட்டி மாதிரி ஒரே மாதிரி மூக்கு இருந்து விட்டால் அரசியலில் ஒரு போதும் வெற்றி பெற்று விட முடியாது. இதை பிரியங்கா உணர்ந்து கொள்ள வேண்டும்.


    சீனாவில் எல்லாரது முகமும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. அவர்கள் மூக்கும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. அதற்காக வீடு தோறும் சீனா ஜனாதிபதி இருக்கிறார் என்று சொல்லி விட முடியுமா?

    ஆகையால் ஒரே மாதிரி மூக்கு என்று சொல்லிக் கொண்டு ஆட்சி அதிகாரத்துக்கு வந்து விடலாம் என்று கனவு காணக்கூடாது. அரசியலில் மேன்மை பெற தனி தகுதி வேண்டும்.

    இவ்வாறு மத்திய மந்திரி மன்சூக்மந்தவியா பேசினார்.

    இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    கடந்த மாதம் பா.ஜனதா எம்.பி. ஹரிஸ்திவேதி பேசுகையில், “பிரியங்கா டெல்லியில் இருக்கும்போது ஜீன்ஸ் போட்டுக் கொள்கிறார். தேர்தல் பிரசாரத்துக்கு வந்தால் சேலை அணிகிறார். எதற்காக இந்த இரட்டை வேடம் போடுகிறார்” என்று கேட்டு இருந்தார். இந்த பேச்சும் கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. #BJP #LokSabhaElections2019 #LSPolls

    மோடியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டனர் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். #LSPolls #UdhayanidhiStalin #mkstalin

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பெள்ளாச்சியை அடுத்த வடசித்தூர், நெகமம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பொதுமக்களின் வங்கிக்கணக்கில் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் எனக்கூறிய மோடி மக்களுக்கு பட்டை நாமம் போட்டுவிட்டார். 500, 1000 நோட்டுகள் செல்லாது என பண மதிப்பிழப்பு செய்தார். புதிய இந்தியா உருவாகும் என்று கூறினார். ஆனால் ஏதும் நடக்கவில்லை. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. எழுச்சி காணப்படுகிறது.

    மோடியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டார்கள். தற்போது தமிழகத்தில் மோடி எதிர்ப்பு அலை மட்டுமல்ல மு.க.ஸ்டாலின் அலை வீசுகிறது. தி.மு.க. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து, ஏழை மாணவர்கள் கல்விக்கடன், விவசாயக்கடன் போன்றவை ரத்துசெய்யப்படும். மாணவர்களுக்கு இலவச ரெயில்சேவை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும்.


    அ.தி.மு.க.வை மிக மோசமாக விமர்சனம் செய்த பா.ம.க. வெட்கமில்லாமல் கூட்டணி வைத்து போட்டியிடுகிறது. உலகத்தரம் வாய்ந்த நெகமம் சேலைகளுக்கு நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி நீக்கப்படும். கைத்தறி பூங்கா அமைக்கப்படும். விவசாய பகுதி என்பதால் விவசாய பொருட்கள் வைக்க குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பொள்ளாச்சி நாலுமூலை சுங்கம் பகுதியில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது-

    நான் கருணாநிதி பேரனாகவும், மு.க.ஸ்டாலின் மகனாகவும் உங்களிடம் வந்து உதய சூரியன் சின்னத்தில் வாக்கு கேட்கிறேன். மத்தியில் நல்லாட்சி மலர உதய சூரியன் சின்னத்தில் வாக்களிப்பீர்.

    மோடியையும், எடப்பாடியையும் வீட்டுக்கு அனுப்புவோம். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்.

    மேலும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாய நலன் கருதி ஆனைமலை-நல்லாறு திட்டம் கட்டாயம் செயல்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    உடுமலை அருகே உள்ள பெதப்பம் பட்டியில் உதயநிதி ஸ்டாலின் பேசும் போது, மோடி கருப்பு பணத்தை ஓழிப்பேன், பயங்கரவாதத்தை ஒழிப்பேன் என்றார். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பாக புல்வாமாவில் 44 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.  #LSPolls #UdhayanidhiStalin #mkstalin

    பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் முக்கிய கட்சிகள் சார்பில் 20 டாக்டர்கள் போட்டியிடுகிறார்கள். #LokSabhaElections2019
    சென்னை:

    அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ம.க. 7 தொகுதியில் போட்டியிடுகிறது. இதில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர்களில் அன்புமணி ராமதாஸ் (தர்மபுரி), வைத்திலிங்கம் (ஸ்ரீபெரும்புதூர்), கோவிந்த சாமி (கடலூர்) ஆகியோர் டாக்டர்கள் ஆவர்.

    தி.மு.க. 20 பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறது. இதில் கலாநிதி வீராசாமி (வட சென்னை), செந்தில்குமார் (தர்மபுரி), கவுதம்சிகாமணி (கள்ளக்குறிச்சி) ஆகியோர் டாக்டர்கள். இதேபோல் 20 தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களில் வேணுகோபால் (திருவள்ளூர்), ஜெயவர்தன் (தென்சென்னை) ஆகியோர் டாக்டர்கள்.

    அ.திமு.க. கூட்டணியில் உள்ள தே.மு.தி.க. 4 தொகுதியில் களம் காண்கிறது. இதில் அக்கட்சி வேட்பாளர் வி.இளங்கோவன், டாக்டர் ஆவார்.

    தூத்துக்குடியில் போட்டியிடும் பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், தென்காசியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, காங்கிரஸ் வேட்பாளர்களில் விஷ்ணு பிரசாத் (ஆரணி), செல்லகுமார் (கிருஷ்ணகிரி), மக்கள் நீதி மய்யம் கட்சியில் லோகரங்கன் (திருவள்ளூர்), சுதாகர் (திண்டுக்கல்), சுப்பிரமணியன் (புதுச்சேரி) ஆகியோர் டாக்டர்களாக உள்ளனர்.



    நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் கரூர் வேட்பாளர் கருப்பையா டாக்டர் ஆவார். ரமேஷ்பாபு (திருவண்ணாமலை), கார்த்திகேயன் (மத்திய சென்னை) ஆகியோர் பல் மருத்துவர்களாகவும், பாஸ்கர் (நாமக்கல்) கால்நடை மருத்துவராகவும் உள்ளார். #LokSabhaElections2019
     
    தமிழகத்தில் மட்டும் 80 லட்சம் பட்டதாரிகள் வேலை வாய்ப்பு இல்லாமல் திண்டாடுகின்றனர் என தேர்தல் பிரச்சார கூட்டத்தில் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். #Vaiko
    வேலூர்:

    ‘மோடி அரசை தூக்கி எறிய வேண்டும் என்று வேலூரில் வைகோ பேசினார்.

    வேலூர் பாராளுமன்ற தொகுதியின் தி.மு.க. வேட்பாளராக டி.எம்.கதிர்ஆனந்த் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வேலூர் மண்டி தெருவில் தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. ம.தி.மு.க. தலைவர் வைகோ கலந்து கொண்டு பேசினார்.

    சுதந்திர இந்தியாவின் முக்கிய காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம். எதிர்கால இந்தியா என்ன ஆகும், ஜனநாயகமாக இருக்குமா? ரத்தக்கறைகள் கொண்ட பாசிச அதிகாரமாக மாறுமா? என்ற கேள்வி எழுகிறது. இந்த தேர்தலில் வேலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கதிர்ஆனந்த் போட்டியிடுகிறார். இவர் ஆற்றல் மிகுந்தவர். ஆங்கில புலமை கொண்டவர்.

    சில மாதங்களுக்கு முன்பு உத்தரபிரதேசத்தில் மகாத்மா காந்தி உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்டு, கோட்சே வாழ்க என முழக்கமிட்டனர். இது மோடிக்கு கேட்கவில்லையா? அவருக்கு இதயம் இல்லையா? இரக்கம் இல்லையா?. இந்துத்துவா மதவெறி கொண்ட ஆர்.எஸ்.எஸ்.சின் திட்டங்களை நிறைவேற்றும் மோடி அரசு பாசிச அரசாகும். 5 ஆண்டுகாலத்தில் ஒருவருக்கு கூட வேலைவாய்ப்பு கொடுக்கவில்லை. இந்தியாவில் பட்டதாரி இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் தமிழகத்தில் தான் 6.5 சதவீதம் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.

    மோடி அரசை தூக்கி எறிய வேண்டும். தமிழகத்தை பாலைவனமாக்க மத்திய அரசு வஞ்சகம் செய்கிறது. அதை தட்டிக் கேட்காமல் கைகட்டி தமிழக அரசு உள்ளது.

    தமிழகத்தை தாரைவார்க்கும் அ.தி.மு.க. அரசையும் தூக்கி எறிய வேண்டும். தி.மு.க.வின் உதயசூரியன் சின்னம் வெற்றி சின்னமாகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ராணிப்பேட்டையில் அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து வைகோ பேசியதாவது:-

    2கோடி பேருக்கு வேலை தருவதாக கூறிய மோடி 2 ஆயிரம் பேருக்கு கூட வேலை தரவில்லை. ஜி.எஸ்.டி. வரி விதிப்பினால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    காவேரி, முல்லை பெரியாறு பிரச்சினைகளை தீர்க்கவில்லை, ஹைட்ரோ கார்பன் திட்டத்தினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நீட் தேர்வினால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.



    முதுகெலும்பு இல்லாத தமிழக அரசு இதற்கெல்லாம் உறுதுணையாக உள்ளது. தமிழகத்தில் 80லட்சம் பட்டதாரிகள் வேலை வாய்ப்பு இல்லாமல் திண்டாடுகின்றனர். ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #Vaiko
    பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் கோரும் சின்னத்தை அளித்தாலும் அல்லது தேர்தல் ஆணையமே சின்னத்தை அளித்தாலும் அதில் போட்டியிட்டு மாபெரும் வெற்றியை பெறுவோம் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார். #LokSabhaElections2019
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற-சட்டசபை இடைத்தேர்தல்களில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்களின் வெற்றி தமிழக மக்களின் ஆயுதங்களாக இருக்கும். சின்னம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு நீதி வழங்கி உள்ளது. எங்களுக்கு பொது சின்னம் கொடுக்க அறிவுறுத்தி உள்ளது.

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தை அளித்தனர். அதை அந்த தொகுதி வாக்காளர்கள் வெற்றிச்சின்னமாக்கினர். இந்த தேர்தலில் நாங்கள் கோரும் சின்னத்தை அளித்தாலும் அல்லது தேர்தல் ஆணையமே சின்னத்தை அளித்தாலும் அதில் போட்டியிடுவோம். மாபெரும் வெற்றியை பெறுவோம்.

    சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ள உத்தரவு தொடர்பான நகலை எங்களது வக்கீல்கள் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்துள்ளனர். தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யும் வகையில் சுயேச்சையாக மனுக்களை தயார் செய்து வைத்திருந்தோம். சின்னம் கோரும் இடத்தில் இப்போது சுப்ரீம்கோர்ட்டு உத்தரவை தெரிவித்துள்ளோம்.

    கட்சியை பதிவுசெய்ய தயாராக இருப்பதாக கோர்ட்டில் தெரிவித்திருந்தோம். எனவே கட்சியை பதிவு செய்வதற்கான பணிகளில் இறங்குவோம். சின்னம் தொடர்பான வழக்கில் ஐகோர்ட்டு எங்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியது. அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டு சென்றோம். வழக்கை விசாரித்த கோர்ட்டு தேர்தலில் போட்டியிட வேண்டுமென்பதால் அ.ம.மு.க.வை சேர்ந்த வேட்பாளர்களுக்கு பொதுச் சின்னம் கொடுக்குமாறு கூறியுள்ளது.

    இரட்டை இலை தொடர்பான வழக்கை தள்ளுபடி செய்துள்ளதால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து முடிவு எடுப்போம். குக்கர் சின்னத்தை எங்களுக்கு ஒதுக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையம் நினைக்கிறது. எதிரிகளையும், துரோகிகளையும் எங்கள் வேட்பாளர்கள் வீழ்த்துவார்கள். தேர்தலில் போட்டியிட அனைவரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

    எங்களுக்கு அனைத்து தொகுதிகளிலும் தனித்தனியாக சின்னங்களை கொடுத்தாலும் அந்த சின்னங்களுக்கு மக்கள் வாக்களிப்பார்கள். எனது பயணம் தொடரும். அ.தி.மு.க.வுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டே தெரிவித்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019
    ஆத்தூர் அருகே பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.1.24 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டது. #LSPolls

    ஆத்தூர்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் உள்ளிட்டவைகள் பட்டுவாடா செய்யாமல் தடுப்பதற்கான நடவடிக்கையில் தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.இதற்காக சேலம் மாவட்டத்தில் 33 பறக்கும் படைகள், 33 நிலையான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு தீவிர வாகன தணிக்கை மற்றும் சந்தேக இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    இன்று அதிகாலை ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் கூட்ரோடு பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சேலத்தை நோக்கி வேன் ஒன்று வந்தது. இந்த வேனை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினார்கள். இதில் வேனுக்குள் 3 கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து வேனில் இருந்தவர்களிடம் நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? இந்த நகையை எங்கு கொண்டு செல்கிறீர்கள்? இதற்கு உரிய ஆவணங்கள் ஏதேனும் இருக்கிறதா? என அதிகாரிகள் விசாரித்தனர்.

    அதற்கு அவர்கள், தாங்கள் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து ஒரு தனியார் ஏஜென்சி நிறுவனம் மூலமாக வேனில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை எடுத்துக் கொண்டு சேலத்தில் உள்ள நகைக் கடைகளில் கொடுப்பதற்காக வருகிறோம் என தெரிவித்தனர். ஆனால், தங்கம் மற்றும் வெள்ளிக்கான உரிய ஆவணங்கள் தங்களிடம் இல்லை என கூறினர்.

    இதனால் தேர்தல் பறக்கும் படை 3 கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி ஆகியவற்றை பறிமுதல் செய்தது. இதன் மதிப்பு ரூ.1 கோடியே 24 லட்சத்து, 54 ஆயிரத்து 648 ஆகும்.

    இது குறித்து ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியரும், தேர்தல் உதவி அலுவலருமான அபுல்காசிமுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், அவரிடம் தங்கம்- வெள்ளி ஆகியவற்றை பறக்கும் படை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

    பின்னர் கோட்டாட்சியர் அபுல் காசிம் , பார்வையிட்டு ஆய்வு செய்கையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி நிர்ணயிக்கப்பட்ட மதிப்பை விட அதிகமாக இருந்ததால் தங்கம்-வெள்ளி ஆகியவற்றை அரசு கருவூலத்தில் ஒப்படைக்க வில்லை.

    இது குறித்து கோட்டாட்சியர் அபுல்காசிம் சேலம் மாவட்ட வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, தங்கம்- வெள்ளி ஆகியவற்றுக்கு உரிய வருமானவரி செலுத்தி இருக்கவில்லை என்றால் அதனை பறிமுதல் செய்து விடுவார்கள் என பறக்கும் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. #LSPolls

    தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் கனிமொழி, ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு பணத்தை வாரி வழங்குவதாக தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. #Kanimozhi #ADMK
    சென்னை:

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் அ.தி.மு.க. தேர்தல் பிரிவு துணை செயலாளர் இன்பதுரை எம்.எல்.ஏ. புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் கனிமொழி, ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு பணத்தை வாரி வழங்குகிறார். திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் அப்போது உடன் இருக்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    தேர்தல் விதிகளை மீறி இதுபோன்று பணம் கொடுப்பது குற்றமாகும். எனவே விதிமீறலில் ஈடுபட்ட கனிமொழியின் வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும்.

    இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும்.

    இந்த குற்றச்சாட்டு தொடர்பாக கனிமொழி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் பரிந்துரைக்க வேண்டும்.

    இவ்வாறுஅந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #Kanimozhi #ADMK
    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நாளை முதல் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். அவர் 19 நாட்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்கிறார். #LokSabhaElections2019 #MakkalNeedhiMaiam #KamalHaasan
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நாளை முதல் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

    அவரது கட்சி பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டசபை இடைத்தேர்தலிலும் போட்டியிடுகிறது. கமல்ஹாசன் நாளை தென் சென்னை தொகுதியில் தனது பிரசாரத்தை தொடங்குகிறார். 29-ந்தேதி மத்திய சென்னை, வட சென்னை பாராளுமன்ற தொகுதி மற்றும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    30-ந்தேதி ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், மத்திய சென்னை மற்றும் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி, 31-ந் தேதி காஞ்சிபுரம், விழுப்புரம், புதுச்சேரி மற்றும் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி,

    ஏப்ரல் 1-ந்தேதி புதுச்சேரி, கடலூர், 2-ந்தேதி நாகை, திருச்சி, மற்றும் திருவாரூர் சட்டமன்ற தொகுதி, 3-ந்தேதி திண்டுக்கல், பொள்ளாச்சி மற்றும் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி, 4-ந்தேதி பொள்ளாச்சி, திருப்பூர், 5-ந்தேதி கோவை, 7-ந்தேதி கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, 8-ந்தேதி தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் சாத்தூர், விளாத்திக்குளம், சட்டமன்ற தொகுதி,

    9-ந்தேதி ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, மற்றும் மானாமதுரை, பரமக்குடி, சட்டசபை தொகுதி, 10-ந்தேதி தேனி, கரூர், திருச்சி மற்றும் ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதி.

    11-ந்தேதி பெரம்பலூர், நாகை, 12-ந்தேதி சேலம், நாமக்கல், 13-ந்தேதி தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் அரூர், பாப்பிரெட்டிபட்டி, ஓசூர், 14-ந்தேதி வேலூர், ஆரணி, திருவண்ணாமலை மற்றும் குடியாத்தம், ஆம்பூர் சட்டமன்ற தொகுதி, 15-ந்தேதி கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், 16-ந்தேதி, வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார். கமல்ஹாசன் 19 நாட்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்கிறார். #LokSabhaElections2019 #MakkalNeedhiMaiam #KamalHaasan
    திண்டுக்கல் அண்ணாமலையார் பள்ளி செல்லும் சாலையில் துப்புரவு பணியாளர்கள் வைத்திருந்த துடைப்பத்தை எடுத்து குப்பைகளை அகற்றி மன்சூர் அலிகான் வாக்கு சேகரித்தார். #LokSabhaElections2019 #MansoorAliKhan
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார். கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கும் முன்பே கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மாவட்டத்தின் பல பகுதிகளில் சென்று வாக்கு சேகரித்தார்.

    குறிப்பாக விவசாய தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களையும், காய்கறி சந்தையில் உள்ள விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடம் வாக்கு கேட்டு வந்தார். வேட்புமனு தாக்கல் செய்த பிறகு தினந்தோறும் ஒவ்வொரு பகுதியாக நடந்தே சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.

    அதன்படி திண்டுக்கல் அண்ணாமலையார் பள்ளி செல்லும் சாலையில் துப்புரவு பணியாளர்கள் வைத்திருந்த துடைப்பத்தை எடுத்து குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தார். தெரு முழுவதும் இருந்த குப்பைகளை அள்ளி வண்டியில் கொட்டினார்.

    தாமதமாக வந்த துப்புரவு பணியாளர்களிடம் எத்தனை மணிக்கு பணிக்கு வருகிறீர்கள்? என கண்டித்தார். அதனை தொடர்ந்து தெருவோரம் இருந்த வியாபாரிகளிடம் தனக்கு வாக்களிக்குமாறு நகைச்சுவையுடன் கூறிச்சென்றார்.   #LokSabhaElections2019 #MansoorAliKhan
    உத்தரபிரதேச மாநிலம் மதுரா தொகுதியில் மீண்டும் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் ஹேமமாலினியின் சொத்து மதிப்பு ரூ.101 கோடி என தனது வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #HemaMalini
    மதுரா:

    உத்தரபிரதேச மாநிலம் மதுரா தொகுதியில் மீண்டும் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் ஹேமமாலினி தனது வேட்பு மனுவில் சொத்து மதிப்பு மொத்தம் ரூ.101 கோடி என தெரிவித்துள்ளார். இதில் பங்களாக்கள், நகைகள், பணம், பங்குகள், வைப்புத்தொகை என அனைத்தும் அடங்கும். 2014 தேர்தலின்போது அவர் தனது சொத்து மதிப்பு சுமார் ரூ.66 கோடி என தெரிவித்து இருந்தார். அவர் தாக்கல் செய்த விவரப்படி 5 ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு ரூ.34.46 கோடி அதிகரித்துள்ளது.



    அவரது கணவர் தர்மேந்திராவின் சொத்து மதிப்பையும் சேர்த்து மொத்தம் ரூ.123.85 கோடி என கூறப்பட்டுள்ளது. 2013-14ல் ஹேமமாலினியின் வருமானம் ரூ.15.93 லட்சம் என குறிப்பிட்டுள்ளார். 2017-18ல் வருமானம் ரூ.1.19 கோடி என தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #HemaMalini

    மத்தியில் மீண்டும் மோடி ஆட்சிதான் வரும் என்று பிரசார பொதுக்கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசினார். #LokSabhaElections2019 #Ramadoss
    சிதம்பரம்:

    அ.தி.மு.க. கூட்டணி சார்பில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரசேகரை ஆதரித்து நேற்று இரவு பிரசார பொதுக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் பல்வேறு சாதனைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். மக்களை பற்றி கவலைப்படுகிற ஆட்சியாக இருக்கிறது. நாங்களும் ஆலோசனைகளை கூறி வருகிறோம். முதல்-அமைச்சரும், நானும் விவசாயி. எனக்கு விவசாயத்தை பற்றி நன்றாக தெரியும். சிதம்பரம் தொகுதியில் 400 கோடி ரூபாயில் கொள்ளிடம் தடுப்பு அணை திட்டத்தை அமல்படுத்துவதாக அருண்மொழிதேவன் சொன்னார். அது ஜெயலலிதா கொண்டு வந்த திட்டம்.



    மத்தியில், மோடி ஆட்சி தான் மீண்டும் வரப்போகிறது. 40 தொகுதிகளிலும் நம்ம கூட்டணி தான் வெற்றி பெறப்போகிறது. மோடி ஆட்சிக்கு வந்ததும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களை கொண்டு வராதபடி நாம் அழுத்தம் கொடுப்போம். மீத்தேன் திட்டத்தை கொண்டு வந்ததே எதிர்க்கட்சி தலைவர் தான். அவர் என்னை பற்றி ஏதேதோ பேசி வருகிறார். கோபம் குடியை கெடுக்கும், நாம் மக்களை பற்றி சிந்திக்கிறோம்.

    நமது கூட்டணி வளர்ச்சிக்கான கூட்டணி. தமிழ்நாட்டின் வளர்ச்சி பற்றி தான் அக்கறை கொள்கிறோம். சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர் அதிக வாக்குகள் பெறுவார். அரியலூர் ஜெயங்கொண்டம் குன்னம் தொகுதிகளில் இதை விட அதிகமாக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார். 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.  #LokSabhaElections2019 #Ramadoss

    பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட தமிழ் பேரரசு கட்சி சார்பில் டைரக்டர் கவுதமன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். #LokSabhaElections2019
    தூத்துக்குடி:

    பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட போவதாக டைரக்டர் கவுதமன் அறிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து அவர் இன்று காலை தனது ஆதரவாளர்களுடன் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான சந்தீப் நந்தூரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    தூத்துக்குடி பகுதியில் ஏற்கனவே தி.மு.க. சார்பில் கனிமொழியும், பா.ஜனதா சார்பில் தமிழிசையும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் டைரக்டர் கவுதமனும் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட அவரது கட்சியான தமிழ் பேரரசு கட்சி சார்பில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    டைரக்டர் கவுதமன் ஜல்லிக்கட்டு, ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டம் என பல்வேறு பிரச்சனைகளுக்காக போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கிண்டி கத்திபாரா மேம்பாலத்தில் பூட்டு போட்டு போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியவர்.

    இதன் பிறகு அவர் தமிழ் பேரரசு என்ற பெயரில் அரசியல் கட்சி ஆரம்பித்து நடத்தி வருகிறார். ஏற்கனவே ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  #LokSabhaElections2019
    ×