search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எந்த சின்னம் கிடைத்தாலும் வெற்றிபெறுவோம்- டிடிவி தினகரன்
    X

    எந்த சின்னம் கிடைத்தாலும் வெற்றிபெறுவோம்- டிடிவி தினகரன்

    பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் கோரும் சின்னத்தை அளித்தாலும் அல்லது தேர்தல் ஆணையமே சின்னத்தை அளித்தாலும் அதில் போட்டியிட்டு மாபெரும் வெற்றியை பெறுவோம் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார். #LokSabhaElections2019
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற-சட்டசபை இடைத்தேர்தல்களில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்களின் வெற்றி தமிழக மக்களின் ஆயுதங்களாக இருக்கும். சின்னம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு நீதி வழங்கி உள்ளது. எங்களுக்கு பொது சின்னம் கொடுக்க அறிவுறுத்தி உள்ளது.

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தை அளித்தனர். அதை அந்த தொகுதி வாக்காளர்கள் வெற்றிச்சின்னமாக்கினர். இந்த தேர்தலில் நாங்கள் கோரும் சின்னத்தை அளித்தாலும் அல்லது தேர்தல் ஆணையமே சின்னத்தை அளித்தாலும் அதில் போட்டியிடுவோம். மாபெரும் வெற்றியை பெறுவோம்.

    சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ள உத்தரவு தொடர்பான நகலை எங்களது வக்கீல்கள் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்துள்ளனர். தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யும் வகையில் சுயேச்சையாக மனுக்களை தயார் செய்து வைத்திருந்தோம். சின்னம் கோரும் இடத்தில் இப்போது சுப்ரீம்கோர்ட்டு உத்தரவை தெரிவித்துள்ளோம்.

    கட்சியை பதிவுசெய்ய தயாராக இருப்பதாக கோர்ட்டில் தெரிவித்திருந்தோம். எனவே கட்சியை பதிவு செய்வதற்கான பணிகளில் இறங்குவோம். சின்னம் தொடர்பான வழக்கில் ஐகோர்ட்டு எங்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியது. அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டு சென்றோம். வழக்கை விசாரித்த கோர்ட்டு தேர்தலில் போட்டியிட வேண்டுமென்பதால் அ.ம.மு.க.வை சேர்ந்த வேட்பாளர்களுக்கு பொதுச் சின்னம் கொடுக்குமாறு கூறியுள்ளது.

    இரட்டை இலை தொடர்பான வழக்கை தள்ளுபடி செய்துள்ளதால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து முடிவு எடுப்போம். குக்கர் சின்னத்தை எங்களுக்கு ஒதுக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையம் நினைக்கிறது. எதிரிகளையும், துரோகிகளையும் எங்கள் வேட்பாளர்கள் வீழ்த்துவார்கள். தேர்தலில் போட்டியிட அனைவரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

    எங்களுக்கு அனைத்து தொகுதிகளிலும் தனித்தனியாக சின்னங்களை கொடுத்தாலும் அந்த சின்னங்களுக்கு மக்கள் வாக்களிப்பார்கள். எனது பயணம் தொடரும். அ.தி.மு.க.வுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டே தெரிவித்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019
    Next Story
    ×