என் மலர்
தேர்தல் செய்திகள்
சேலம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தலையொட்டி பறக்கும் படை அதிகாரிகள், நிலை கண்காணிப்பு குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர். உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம், நகைகள் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இன்று காலை சேலம் கொண்டலாம்பட்டியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக டெம்போ டிராவல்ஸ் வேன் ஒன்று வந்தது.
இந்த வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, பிளாஸ்டிக் பைகளில் 73 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவை இருந்தது.
இதையடுத்து அதிகாரிகள் வேனில் இருந்தவர்களிடம் நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? இந்த நகையை எங்கு எடுத்து செல்கிறீர்கள்? இதற்கு உரிய ஆவணங்கள் ஏதேனும் இருக்கிறதா? என விசாரித்தனர்.
அதற்கு அவர்கள் நாங்கள் நகைக்கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக மும்பையில் இருந்து வேனில் கொண்டு வருகின்றோம் என்று கூறி ஆவணங்களை கொடுத்தனர்.
இந்த ஆவணத்தை பரிசோதித்தபோது, அதில் குறிப்பிட்டிருக்கும் எடையை காட்டிலும் அதிகமாக தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவை இருந்தது.
இதனால் பறக்கும் படை அதிகாரிகள், வேனில் இருந்த தங்கம், வெள்ளியை பறிமுதல் செய்து தேர்தல் உதவி அதிகாரியிடம் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி, வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து கலெக்டர் ரோகிணி, உடனடியாக தேர்தல் உதவி அலுவலகத்திற்கு விரைந்து வந்து அங்கு பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்த தங்கம்- வெள்ளி ஆகியவற்றை பார்வையிட்டார். வேனில் நகையை கொண்டு வந்த நபர்களிடமும் விசாரணை நடத்தினார்.
இதனை தொடர்ந்து நகைக்கான ஆவணங்கள் பற்றி விசாரிப்பதற்காக வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் உரிய வரி செலுத்தப்பட்டு இருக்கிறதா? என விசாரித்து வருகின்றனர். #LokSabhaElections2019
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து அரசியல் கட்சியினர் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் தி.மு.க. வேட்பாளர்களையும், கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் செய்து வருகிறார்.
கடந்த 23-ந் தேதி விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து கள்ளக்குறிச்சி 4 முனை சந்திப்பில் பிரசாரம் செய்தார். அப்போது அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
அதன்பேரில் உரிய அனுமதியின்றி பிரசாரம் செய்யததாகவும், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாகவும் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சங்கராபுரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. உதயசூரியன் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். #DMK #UdhayanidhiStalin
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பொன்னேரியில் தேர்தல் பிரசாரம் செய்தார்.
குக்கர் சின்னம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அனைத்து மக்களும் ஐ.பி.எல். விளையாட்டை பார்ப்பது போல ஆவலுடன் எதிர்பார்த்து செய்திகளை பார்த்தனர்.
குக்கர் சின்னம் எங்களுக்கு கிடைத்து விட்டால் பாராளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் அ.ம.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்று விடுவோம் என அஞ்சி ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் இருவரும் மோடியுடன் பேசி சின்னம் கிடைக்காதவாறு முடக்கியுள்ளனர்.
ஆர்.கே. நகரில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதை போல அனைத்து தொகுதியிலும் சுயேச்சை சின்னத்தில் வெற்றி பெறுவோம். எங்களுக்கு சின்னம் என்பது முக்கியமல்ல மக்களின் எண்ணம் தான் முக்கியம்.
ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் இருவரும் பதவி அளித்தவர்களுக்கு துரோகம் செய்தவர்கள், மக்களுக்கு துரோகம் செய்தவர்கள் ஜெயலலிதாவுக்கும் துரோகம் செய்தவர்கள்.
அ.தி.மு.க. கூட்டணி தேசிய கட்சிகளுக்கு தமிழகத்தில் செல்வாக்கு இல்லை. 1 தொகுதியில் கூட அவர்களால் ஜெயிக்க முடியாது என்பதால் தான் கர்நாடகா மாநில நலனில் மட்டுமே அவர்கள் அக்கறை செலுத்துகிறார்கள்.
இவ்வாறு தினகரன் பேசினார். #TTVDhinakaran #EPS #OPS
தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தேனி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. பரிசீலனை முடிவடைந்த நிலையில் அ.ம.மு.க. வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் வேட்புமனு தாக்கலின் போது அளித்த சொத்து பட்டியலில் விஜயானந்த் நிறுவனத்தில் அவரும், அவரது சகோதரி கவிதாபானு, சகோதரர் ஜெயபிரதீப் ஆகியோர் இயக்குனர்களாக இருப்பதை மறைத்துள்ளார். மேலும் இந்நிறுவனத்தின் பெயரில் ரூ.24 லட்சம் மதிப்பிலான இடம் உள்ளதையும், இந்நிறுவனத்தின் சார்பில் ரூ.3.15 கோடி மதிப்பிலான காற்றாலை உள்ள தகவலையும் மறைத்துள்ளார். இது சட்டப்படி குற்றம்.
இதனை ஆதாரப்பூர்வமாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவித்தேன். ஆனால் அதிகாரி என்ன காரணத்தாலோ மனுவை ஏற்றுக் கொண்டுள்ளார். எங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம். நீதிமன்றத்தை அணுகி முறையீடு செய்ய உள்ளோம். எங்களுக்கு நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #LSPolls #Thangatamilselvan
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய தமிழகம் கட்சியின் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடந்தது. இதனை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வருகிற தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமர் ஆவார். உதயநிதி ஸ்டாலின் மோடியை வில்லன் என்று கூறி உள்ளார். அவருக்கு வேண்டுமானால் வில்லனாக தெரியலாம். ஆனால் இந்தியாவை பாதுகாக்கும் கதாநாயகன் மோடி. நாட்டுக்கு பிரச்சனை என்றால் அதை தீர்க்கும் ஸ்டண்ட் மாஸ்டர் அவர். சமூக விரோதிகளுக்கு தான் மோடி வில்லன்.
ராகுல்காந்தி வெளியிட்டு இருக்கும் தேர்தல் அறிக்கை மோசடியானது. கனிமொழியின் தாயார் தனது மகள் ஜெயிக்க வேண்டும் என்று கோவிலுக்கு சென்றிருப்பது பாராட்டுக்குரியது. மு.க.ஸ்டாலின் கவுன்சிலர் பதவிக்கு நிற்ககூட தகுதியில்லை என்று கூறியவர் வைகோ.
ஆனால் தற்போது மு.க.ஸ்டாலினுடன்தான் வைகோ கூட்டணி வைத்துள்ளார். தி.மு.க. போட்ட வழக்கில்தான் ஜெயலலிதா மனஉளைச்சல் அடைந்தார். அவரது இறப்புக்கு தி.மு.க.வும் காரணம்.
தினகரன் அனுதாபத்தால் ஓட்டு வாங்க முடியாது. அவர் சர்வாதிகாரிபோல் நடந்து கொள்கிறார். அ.தி.மு.க.வை யாரிடமும் அடகு வைக்கவில்லை. அ.தி.மு.க. தான் ஆளப்போகிறது. தி.மு.க. அதை பார்க்கப்போகிறது.
இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #RajendraBalaji #PMModi
பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் அனைத்து கட்சி தலைவர்களும் பொதுக்கூட்டங்கள், பிரசாரம், செய்தியாளர் சந்திப்பு என தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், கப்பல் மற்றும் நீர்வள ஆதாரங்கள் மற்றும் கங்கை தூய்மைபடுத்துதல் துறைகளின் மந்திரியான நிதின் கட்கரி நாக்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
நேற்று நாக்பூரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கட்கரி கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:

மேலும் பாஜகவினர் மக்களிடம் சென்று நம்பிக்கையுடனும், பணிவுடனும் வாக்குகளை சேகரிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் நம்பிக்கைக்கும், அத்துமீறிய செயல்களுக்கும் இடையே உள்ள வேற்றுமையை அறிய வேண்டும். மக்களிடையே கனிவான முறையில் நம் ஆட்சியின் சாதனைகளை எடுத்துரைத்து வாக்குகளை பெற வேண்டுமே தவிர, கடுமையாக நடந்துக் கொள்ளக் கூடாது.
நான் மக்களிடம் சென்று, பிற கட்சியினரின் பெயர்களை கூறி, அவதூறு பேசி வாக்கு சேகரிக்க விரும்பவில்லை. என்னால் என்னென்ன சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளதோ, அதை மட்டுமே கூறி பிரசாரம் மேற்கொள்வேன். கடந்த தேர்தலில் என்ன வாக்குறுதிகள் கொடுத்தோமோ அதனை நிறைவேற்றியுள்ளோம். நாங்கள் சொல்வதை தான் செய்வோம்.
மக்கள் திறமையானவர்கள், அவர்களுக்கு எல்லாம் தெரியும். மக்களுக்கான பணிகளை செய்து அவர்களின் இதயங்களை வென்றுள்ளோம். இந்த முறையும் பாஜக வெற்றி பெறும் என்பது உறுதி.
இவ்வாறு அவர் பேசினார். #Loksabhaelections2019 #Nitingadkari #BJP #Congress
தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்காக மொத்தம் 1,601 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் 1,255 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்காக 519 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் தொடர்பாக இதுவரை ரூ.46.29 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், ரூ.69.03 கோடி மதிப்புள்ள 212.5 கிலோ தங்கம், 327.5 கிலோ வெள்ளி உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ரூ.21.23 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்களும் பிடிபட்டுள்ளன.
கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ரூ.25.05 கோடியும், ரூ.51.83 கோடி மதிப்புள்ள தங்கம் உள்ளிட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டு இருந்தன. 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ரூ.113 கோடி கைப்பற்றப்பட்டு இருந்தது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு ஷிப்டுக்கு தலா 702 பறக்கும்படை வீதம் மூன்று ஷிப்ட் பணியில் ஈடுபட்டு இருக்கும். அந்தவகையில் நாளொன்றுக்கு 2,106 பறக்கும்படை பணியில் ஈடுபடுகின்றன.
தமிழகத்தில் உரிமம் பெற்றுள்ள 21 ஆயிரத்து 999 துப்பாக்கிகளில் 19 ஆயிரத்து 607 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக பாதுகாப்புக்கு தேவைப்படுவதால் சில துப்பாக்கிகள் ஒப்படைக்கப்படவில்லை.
சி விஜில் செல்போன் செயலி மூலம் 1,106 புகார்கள் பெறப்பட்டன. அவற்றில் உண்மைத்தன்மையுள்ள 357 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இறுதி வாக்காளர் பட்டியல் தயாராகும் 29-ந் தேதி மாலை 3 மணிக்கு பிறகு தேர்தல் நடத்தும் அதிகாரிகளால் வேட்பாளர்கள் அழைக்கப்பட்டு, சின்னம் வழங்கப்படும். ஒரே சின்னத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் கேட்டிருந்தால் குலுக்கல் முறையில் அது ஒதுக்கப்படும்.
அ.ம.மு.க.வுக்கு பொதுவான சின்னம் வழங்குவது பற்றி பரிசீலிக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. எனவே இதுபற்றிய அறிவுரையை இந்திய தேர்தல் ஆணையத்திடம் கேட்டிருந்தோம்.
அதற்கு, தேர்தல் ஆணையத்தின் மறு உத்தரவு வரும் வரை காத்திருங்கள் என்று கூறியிருக்கின்றனர். இந்த தகவலை அனைத்து தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடமும் தெரிவித்து இருக்கிறோம். எனவே தேர்தல் ஆணையத்தின் மறு உத்தரவு வந்தவுடன் அதை செயல்படுத்தும்படி தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்குவோம்.

ஓட்டுக்காக பணம், பரிசுப்பொருட்கள் கொடுப்பதும் குற்றம், வாங்குவதும் குற்றம். எனவே இரண்டு குற்றமும் வழக்காக பதிவு செய்யப்படும்.
தமிழகத்தில் 3.5 லட்சம் ஊழியர்களுக்கு தேர்தல் பணிக்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட பயிற்சி அளிக்கப்படும் போது அந்த இடங்களில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டு இருக்கும். அதில் அவர்கள் தபால் ஓட்டுகளைப் போடுவார்கள். இரண்டாம் கட்ட பயிற்சிக்கான தேதியை அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரி முடிவு செய்வார். மூன்றாம் கட்ட பயிற்சி முடிந்ததும், அவர்கள் தங்களுக்கு பணி ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியின் முகவரியைப் பெற்றுக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் செல்வார்கள்.
கூட்டுறவு சங்க பணியாளர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது என்று புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கூட்டுறவுத்துறையிடம் இருந்து விளக்கம் கேட்போம்.
இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #SatyabrataSahoo
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள ஏழைகளுக்கும் மாதம் தோறும் 6 ஆயிரம் ரூபாய் வழங்கும் குறைந்தபட்ச ஊதிய உறுதித்திட்டத்தை அமல்படுத்துவோம் என்ற காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் திட்டத்தை தி.மு.க. சார்பில் மனமார வரவேற்கிறேன். பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான கடந்த 5 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியில் ஏழைகளின் வாழ்வாதாரம் தான் முதலில் பறிக்கப்பட்டது. விலைவாசி உயர்வு, சமையல் கியாஸ் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. சட்டம் போன்றவற்றால் பல லட்சக்கணக்கான சிறு தொழில்கள் நாடு முழுவதும் மூடப்பட்டன. வேலை வாய்ப்பின்மை 45 வருடங்களில் இல்லாத அளவிற்கு பா.ஜ.க. ஆட்சியில் ஏற்பட்டுவிட்டதாக அதிகாரபூர்வமான ஆய்வு முடிவுகளே வெளிப்படுத்தின.

சமூக நலத்திட்டங்கள் மூலம் ஏழைகளையும் உள்ளடக்கிய வளர்ச்சியே ஒரு நாட்டிற்குத் தேவையான முதுகெலும்பு என்று நிரூபித்துக் காட்டியவர் தமிழகத்தின் முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி. அதுபோல் இப்போது ராகுல்காந்தியால் அறிவிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கு நிதி வழங்கும் திட்டத்தால் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள ஏழைகளின் முகத்தில் 5 வருடம் கழித்து இப்போதுதான் சிரிப்பைக் காண முடிகிறது.
இந்த திட்டத்தை செயல்படுத்த முடியாது என்று பா.ஜ.க.வினர் விதண்டாவாதம் செய்கிறார்கள். ஏன் நிதி ஆயோக்கின் துணை தலைவராக இருக்கும் ராஜீவ்குமார் பா.ஜ.க. பிரசாரகராகவே மாறி செயல்படுத்த முடியாத திட்டம் என்று சொல்கிறார். இது எரிச்சலின் வெளிப்பாடே தவிர துளியும் உண்மை அல்ல. ஏழைகளுக்கான இந்த குறைந்தபட்ச ஊதிய உறுதித்திட்டத்திற்கான நிதி ஆதாரத்தை திரட்டி, தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியால் வெற்றிகரமாக நிறைவேற்றி காட்டிட முடியும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. முதன்முறையாக இந்தியாவில் கொண்டுவரப்படும் இந்தத் திட்டத்திற்கு தி.மு.க. இதயபூர்வமான ஆதரவினைத் தெரிவித்து, ஜூன் 3-ந் தேதிக்குப் பிறகு ஏழைகள் இந்த நாட்டின் எஜமானர்கள் என்ற நிலை தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியால் உருவாகும்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார். #LokSabhaElections2019 #MKStalin #RahulGandhi
தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று கோவை பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து பல்லடத்திலும், திருப்பூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தனை ஆதரித்து வெள்ளியங்காடு நால்ரோடு, எம்.எஸ்.நகரிலும் திறந்த வேனில் நின்றபடி பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
அதிமுக-தேமுதிக கூட்டணி இயற்கையான கூட்டணி. அதிமுக-தேமுதிக கூட்டணியை உடைக்க தி.மு.க. பல்வேறு சூழ்ச்சிகளுடன் கடுமையாக முயற்சி செய்தது. ஆனால் மக்கள் போற்றும் கூட்டணியாக அதிமுக தலைமையிலான கூட்டணி அமைந்துள்ளது. கருத்து கணிப்புகளில் இந்தியாவின் அடுத்த பிரதமராக மீண்டும் மோடி வருவார் என்று தெரிவிக்கிறது. நாட்டை காப்பதற்கு பிரதமர் மோடி வர வேண்டும். ஊழல்களின் மொத்த உருவமாக தி.மு.க.-காங்கிரஸ் கட்சிகள் இருந்ததை மக்கள் மறந்து விடவில்லை. மோடி ஊழல் இல்லாத ஆட்சியை கொடுத்துள்ளார்.
அதிமுக, தேமுதிக கட்சிகள் ராணுவ கட்டுப்பாடு கொண்டது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோர் திரையுலகில் இருந்து வந்தவர்கள். மக்களுக்கு நல்லதை செய்ய அரசியலுக்கு வந்தவர்கள். இந்த பாராளுமன்ற தேர்தலில் மட்டுமில்லாமல் வருகிற உள்ளாட்சி தேர்தல், வரும் சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக-தேமுதிக கூட்டணி உறுதியுடன் தொடரும்.

பல்லடம் பகுதியில் கைத்தறி, விசைத்தறி தொழில் அதிகம் உள்ளது. பா.ஜனதா வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதும் டெல்லி சென்று நெசவாளர்களின் பிரச்சினையை எடுத்துக்கூறி, ஜி.எஸ்.டி.யை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். காடா துணி தயாரிப்பு உலகத்தரத்தில் மேம்படுத்தப்படும்.
பின்னலாடை நகரான திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டம், 4-வது குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், அத்திக்கடவு-அவினாசி திட்டம் ஆகியவற்றை கொண்டு வந்த அரசு அதிமுக அரசு. அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வெற்றி பெற்றால், போக்குவரத்து நெரிசலை குறைக்க திருப்பூரில் மெட்ரோ ரெயில் திட்டம், சாயக்கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து அதில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் கொண்டு வர பிரதமரிடம் வலியுறுத்தப்படும்.
தென்னிந்திய நதிகளை இணைத்தால் நாடு வல்லரசாகும். தமிழக நதிகள் இணைப்பு திட்டத்தை உறுதியாக நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்தப்படும். ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறைப்படுத்தப்படும். வேற்றுமைகளை மறந்து தேனீக்கள் போல் சுறுசுறுப்பாக பணியாற்றி கொங்கு மண்டலம் அதிமுக வின் கோட்டை என்பதை நிரூபிப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கோவை:
மத்திய மந்திரி பியூஸ் கோயல் கோவையில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவரிடம், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்குவோம் என்று அறிவித்து உள்ளார்களே? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து பியூஸ் கோயல் கூறியதாவது:-
இந்தியாவில் ஏழை, எளிய மக்களுக்கு உணவுக்கு மானியம் வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
ஏழை மக்களுக்கு வழங்கப்படும் இந்த உதவிகளை காங்கிரஸ் பறித்து விட்டு ரூ.72 ஆயிரம் வழங்குமா? என்பதை தெளிவு படுத்த வேண்டும். மக்கள் ஒருபோதும் மானியம் வழங்குவதை நிறுத்துவதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மக்களை காங்கிரஸ் கட்சி முட்டாளாக்கப் பார்க்கிறது. இது இந்திய மக்களிடம் எடுபடாது.

இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, ஆலோசனை கூட்டத்தில் பியூஸ் கோயல் பேசியதாவது:-
மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் கட்சிகள் எந்த அளவுக்கான வளர்ச்சிப் பணிகளை செய்துள்ளனர் என்பதை தமிழக மக்கள் பார்த்து வருகின்றனர். எளிமையான தலைவனால் தான் அனைத்து தரப்பு மக்களின் நிலைமையை உணர முடியும். பிரதமர் மோடி மிகச் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர். எளிமையான குடும்பத்தில் இருந்து வந்ததால், தாய்மார்களின் கண்ணியத்தை காக்க கழிவறை கட்டும் தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் செயல்படுத்தினார். எல்லா வீடுகளுக்கும் மின்சாரம், ஆரோக்கியமான காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 6 மாதங்களில் தமிழகத்தில் மட்டும் 90 ஆயிரம் பேர் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் பலன் அடைந்துள்ளனர். மத்திய அரசின் சாதனைகளை சொல்லிக் கொண்டே போகலாம். மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுமானால் தமிழக வளர்ச்சி இரு மடங்காக உயரும் என்பதில் ஐயமில்லை.
தீவிரவாதத்துக்கு எதிராக செயல்படக் கூடிய வலிமையான திறமையான தலைவர் தேவை. எதிரி நாட்டின் எல்லையை கடந்து தாக்கி பயங்கரவாதத்திற்கே பதிலடி கொடுத்த ஒப்பற்ற தலைவர் நரேந்திர மோடி மட்டும் தான். வேகமாக, வளமான, பொருளாதார வளம் பெற்ற நாடாக இந்த நாடு வளர்ந்து வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு கொடுத்து பிரதமர் மோடியின் கரத்தை நாம் வலிமையாக்க வேண்டும்.
அதற்கான மெகா கூட்டணியை தமிழகத்தில் ஏற்படுத்தி உள்ளோம். 40 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி தோல்வியை தழுவுவதோடு, நாம் நாற்பதும் நாமதே என வெற்றி வாகை சூட வேண்டும். இந்தியா சூப்பர் பவராக மாற மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். #PiyushGoyal #congress #bjp







