என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலையொட்டி பாரதிய ஜனதா தவறுகளை விளக்கி தமிழக காங்கிரஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள தேர்தல் பிரசார கையேடு நாளை வெளியிடப்படுகிறது. #LSPolls #Congress #BJP
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரசார கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது.

    அலங்கோல ஆட்சிகளை அகற்றுவோம் என்ற தலைப்பில் 80 பக்கங்கள் கொண்டதாக இந்த புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    15 தலைப்புகளின் கீழ் பா.ஜனதா, அ.தி.மு.க. அரசின் தவறுகள் ஆதாரத்துடன் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

    குறிப்பாக ரபேல் போர் விமான விவகாரம், பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஆகியவற்றில் நடந்த முறைகேடுகள் மக்கள் அனுபவித்த கஷ்டங்கள் ஆகியவற்றை விளக்கமாக தெரிவித்துள்ளனர்.

    மேலும் சி.பி.ஐ., ரிசர்வ் வங்கி உள்ளிட்ட துறைகளில் மத்திய அரசின் தலையீடு, மோடியின் தேவையற்ற செலவுகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளனர்.

    அதே போல் மாநில அ.தி.மு.க. அரசில் நடந்துள்ள முறைகேடுகள், நிர்வாக சீர்கேடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை விளக்கி உள்ளனர்.

    இந்த பிரசார கையேட்டை நாளை (வெள்ளி) தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிடுகிறார். காங்கிரஸ் விளம்பர குழு தலைவர் தங்கபாலு, சஞ்சய்தத், தி.மு.க. சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன், கம்யூனிஸ்டு சார்பில் டி.கே.ரங்கராஜன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

    அதைத் தொடர்ந்து 40 தொகுதிகளுக்கும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள், பேச்சாளர்களுக்கு அனுப்பப்படுகிறது.

    தேர்தல் பிரசாரத்தில் மத்திய - மாநில அரசுகளை தோலுரிக்க இந்த கையேடு உதவும் என்று காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் கோபண்ணா தெரிவித்தார். #LSPolls #Congress #BJP
    உத்தரபிரதேசத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, ராகுல் காந்தியும், உ.பி. கிழக்கு பகுதி பொது செயலாளராக நியமிக்கப்பட்ட பிரியங்காவும் இணைந்து 18 பேரணிகளில் பங்கேற்கின்றனர் என அக்கட்சி அறிவித்துள்ளது. #LSpolls #Congress #RahulGandhi #PriyankaVadra
    லக்னோ:

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

    இதற்கிடையே, கட்சியின் அகில இந்திய தலைவர்கள், முக்கிய தலைவர்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, ராகுல் காந்தியும், பிரியங்காவும் இணைந்து 18 பேரணிகளில் பங்கேற்க உள்ளனர் என அக்கட்சி இன்று அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:



    பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக 45 நாட்கள் திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த தேர்தல் பிரசாரங்களில் கட்சியின் தலைவர் ராகுலும், பிரியங்காவும் 18 பேரணிகளில் ஒன்றாக பங்கேற்க உள்ளனர்.

    சஹரான்பூர், காஜியாபாத், மீரட், பெரெய்லி, பதேபூர் சிக்ரி, அலிகார், லக்னோ, பாரபங்கி, அலகாபாத், கோரக்பூர், கான்பூர், வாரணாசி உள்ளிட்ட 18 பகுதிகளில் பேரணிகள் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங்கும் பிலிபிட், கான்பூரில் நடக்கவுள்ள பேரணிகளில் கலந்து கொள்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #LSpolls #Congress #RahulGandhi #PriyankaVadra
    பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எம்பி ஹரிந்தர் சிங் கல்சா, இன்று பாஜகவில் இணைந்தார். #LokSabhaElections2019 #SAD #HarinderSinghKhalsa
    புதுடெல்லி:

    பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹரிந்தர் சிங் கல்சா. ஷிரோமணி அகாலி தளம் கட்சியில் இணைந்து அரசியல் வாழ்க்கையை தொடங்கிய கல்சா, அந்த கட்சி சார்பில் பதிண்டா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1996 முதல் 1998 வரை எம்பியாக இருந்தார். பின்னர் 2014ல் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த அவர், பதேகர் சாகிப் தொகுதியில் (தனி) இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2015ல் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

    தற்போது பாராளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், இன்று டெல்லியில் மத்திய மந்திரி அருண் ஜெட்லி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

    பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 மக்களவைத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக மே 19ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இங்கு பாஜக, ஷிரோமணி அகாலி தளம் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன. ஷிரோமணி அகாலி தளம் 10 தொகுதிகளிலும், பாஜக 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

    இதில், பதேகர் சாகிப் தொகுதியில் ஷிரோமணி அகாலி தளம் சார்பில், முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலின் முதன்மைச் செயலாளராக பணியாற்றிய, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தர்பரா சிங் குரு போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அகாலி தளம் இன்னும் தொகுதிகளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. #LokSabhaElections2019 #SAD #HarinderSinghKhalsa
    தேர்தல் பிரசாரத்திற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏப்ரல் 2வது வாரம் தமிழகம் வருகிறார். விரைவில் தேதி முடிவாகும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. #LokSabhaElections2019 #RahulGandhi #Congress
    சென்னை:

    தேர்தல் களம் சூடு பிடித்து வரும் நிலையில் அகில இந்திய தலைவர்களும் விரைவில் தமிழக பிரசாரத்துக்கு வர இருக்கிறார்கள்.

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக தமிழகத்தில் பிரசாரம் செய்ய உள்ளார்.

    இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் அகில இந்திய தலைமையிடம் தேதி கேட்டுள்ளனர். ஏப்ரல் 2-வது வாரம் அவரது பிரசாரம் இருக்கும். விரைவில் தேதி முடிவாகும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

    ராகுல் காந்தி சமீபத்தில் கன்னியாகுமரி சென்றார். அப்போது சென்னையில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    எனவே இனி வரும் போது மற்ற நகரங்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் பயண திட்டம் வகுக்கப்படும் என்று கூறப்படுகிறது.



    பிரியங்காவையும் தேர்தல் பிரசாரத்துக்கு வரும் படி அழைத்துள்ளனர். தென் மாநிலங்களில் ஒரு மாநிலத்துக்கு ஒரு இடம் என்ற அளவிலாவது அவர் பிரசாரத்துக்கு வர வேண்டும்.

    அவரது வருகை காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் உற்சாகத்தை கொடுக்கும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர். #LokSabhaElections2019 #RahulGandhi #Congress
    காங்கிரஸ் அமைத்திருப்பது ஊழல் கூட்டணி என்று பாராளுமன்ற தேர்தல் தமிழக பா.ஜ.க. பொறுப்பாளரும், ரெயில்வே அமைச்சருமான பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். #BJP #PiyushGoyal #Congress
    ராமநாதபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் தமிழக பா.ஜ.க. பொறுப்பாளரும், ரெயில்வே அமைச்சருமான பியூஸ் கோயல் ராமநாதபுரத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்திய மக்கள் 130 கோடி பேர் நலமுடன் வாழ வேண்டி ராமேஸ்வரம் கோவிலில் வேண்டிக்கொண்டேன்.


    தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட தி.மு.க. கூட்டணி வெற்றி பெறாது. 40 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். 2 ஜி ஸ்பெக்ட்ராம் ஊழல் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஆ.ராசா, கனிமொழி ஆகியோருக்கு தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி சார்பாக போட்டியிட சீட் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகள் காங்கிரஸ் ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை. காங்கிரஸ் ஊழல் கூட்டணி அமைத்துள்ளது.

    இவ்வாறு கூறினார். #BJP #PiyushGoyal #Congress
    உத்தர பிரதேசத்தை உத்தம பிரதேசமாக மாற்றுவதற்கு பாஜகவுக்கு மீண்டும் ஆதரவு அளிக்கும்படி பிரதமர் மோடி பிரசாரம் செய்தார். #ModiCampaign #LokSabhaElections2019
    மீரட்:

    உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று பிரசாரம் செய்தார். பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் இங்கு வந்து உங்கள் அன்பையும் ஆசீர்வாதத்தையும் கேட்டேன். என் மீது மிகுந்த அன்பு செலுத்தி ஆதரித்தீர்கள். இந்த அன்பையும் ஆசீர்வாதத்தையும் திரும்ப தருவதாக கூறினேன். நான் செய்த பணிகள் தொடர்பான அறிக்கையை உங்கள் முன் வைப்பதாகவும் கூறினேன்.

    உங்களின் ஆதரவினால் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டோம். நாங்கள் செய்த பணிகளை மக்களுக்கு தெரிவிக்கிறோம். முந்தைய ஆட்சியாளர்கள் செய்ததையும், செய்யாதவற்றையும் எடுத்துக் கூறுகிறோம். நாங்கள் வளர்ச்சிகான பாதையில் செல்கிறோம். ஆனால், மற்றவர்களிடம் அதற்கான கொள்கை எதுவும் இல்லை.

    இதனை கணக்கில் கொண்டு, வரும் தேர்தலில் யாரை பிரதமராக தேர்வு செய்யவேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். மோடி அரசுதான் மீண்டும் வரப்போகிறது என மக்கள் நினைத்துவிட்டனர். இங்கு திரண்டிருக்கும் மக்களே அதற்கு சாட்சி.



    இரண்டாவது முறை எங்களுக்கு ஆதரவு கொடுங்கள். உத்தர பிரதேசத்தை உத்தம பிரதேசமாக மாற்ற எங்களுக்கு வாக்களியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். #ModiCampaign #LokSabhaElections2019
    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 932 மனுக்கள் தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. #LokSabhaElections2019 #NominationAccepted
    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பரிசீலனை முடிந்த நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக மொத்தம் 1587 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அவற்றில் 655 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 932 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்தவர்களில் 305 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. 213 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

    மக்களவைத் தேர்தலைப் பொருத்தவரை கரூர் தொகுதியில் அதிகபட்சமாக 43 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நீலகிரியில் குறைந்தபட்சமாக 10 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.



    தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக மொத்தம் 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முறைகேடுகளை தடுப்பதற்காக தேர்தல் பறக்கும் படையினர் மார்ச் 27ம் தேதி வரை நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.50.20 கோடி பணம், 223 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வேட்பு மனுக்களை திரும்ப பெற நினைப்பவர்கள் இன்றும் நாளையும் மனுக்களை திரும்ப பெறலாம். நாளை மறுநாள் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். #LokSabhaElections2019 #NominationAccepted
    மும்பையில் காங்கிரஸ் கட்சி சார்பாக நடிகை ஊர்மிளா போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் பிரசாரத்தில் கவர்ச்சியை பயன்படுத்த மாட்டேன் என அவர் உறுதியளித்துள்ளார். #ActressUrmila
    சென்னை:

    ரங்கீலா, இந்தியன் போன்ற படங்களில் நடித்த முன்னணி இந்தி நடிகை ஊர்மிளா மடோகர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ராகுல்காந்தியைச் சந்தித்த பிறகு இதை அறிவித்தார். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் டுவிட்டர் பக்கத்திலும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் கட்சியில் இணைந்தது பற்றி ஊர்மிளா பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது, ‘தற்போதுதான் அரசியலில் முதல் அடியை எடுத்துவைத்துள்ளேன். எங்கள் குடும்பத்தின் அரசியல் பார்வை, மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு மற்றும் சர்தார் வல்லபாய் படேலின் கொள்கைகளை சார்ந்ததாகும்.

    கல்வித்துறை சார்ந்த குடும்பத்திலிருந்து வந்த நான் திரைப்பட நடிகையானேன். அதேபோல அரசியலுக்கும் வந்துள்ளேன். எனது சிறுவயதில் இருந்தே சமூக விழிப்புணர்வு குறித்த ஆர்வம் உண்டு.

    பொதுவாக திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வருபவர்களை அவர்களது திரையுலக பிம்பத்தையும் கவர்ச்சியையும் பிரசாரத்துக்கு பயன்படுத்துவார்கள். ஆனால் என்னை அதில் இருந்து விலக்கி பார்க்க வேண்டும்.



    இவ்வாறு ஊர்மிளா தெரிவித்தார்.

    ஊர்மிளா மும்பை தேர்தல் களத்தில், காங்கிரஸ் கட்சி சார்பாக வேட்பாளராக இறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #ActressUrmila
    மோடி அரசால் இந்தியா வளர்ச்சி அடையவில்லை என்றும் தளர்ச்சி அடைந்திருப்பதாகவும், மதுரை பிரசார பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கடுமையாக குற்றம்சாட்டினார். #MKStalin #DMK #LoksabhaElections2019
    மதுரை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

    இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரையில் உள்ள வண்டியூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு. வெங்கடேசனை ஆதரித்து பேசியதாவது:

    இந்தியா 45 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது. மோடி அரசால் இந்தியா வளர்ச்சி அடையவில்லை. தளர்ச்சிதான் அடைந்துள்ளது. வேலைவாய்ப்பின்மையை அதிகரித்தது தான் இந்த மோடி அரசின் சாதனை. இதனை நான் கூறவில்லை. ஆய்வு அறிக்கை ஒன்றில் இதுவரை இல்லாத அளவில் இந்தியாவில் 6.1% வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ளது என கூறப்பட்டுள்ளது.

    மத்தியில் மோடியின் ஆட்சியை ஒழிக்கவே நீங்களும் இங்கு திரண்டு உள்ளீர்கள். ஏற்கனவே சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் தேர்தல் அறிக்கை வெளியிடும் போது , இந்த தேர்தல் அறிக்கை கதாநாயகன் மட்டுமல்ல, கதாநாயகியும் இது தான் என கூறினேன். இதில் கீழடியிலே அகழாய்வு தொய்வில்லாமல் தொடங்கப்பட்டு முறையாக நடத்தப்படும் என வாக்குறுதியினை அளித்தோம்.

    இதனை  இங்கு சொல்ல காரணம், இந்த தொகுதியிலே பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சு. வெங்கடேசன் இதற்கு முக்கியமான காரணமாவார். தமிழக எழுத்தாளர்கள் நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும். தமிழர்களின் புகழ் ஓங்க வேண்டும். இவர் மதுரையை காப்பாற்ற துடித்துக் கொண்டிருக்கக்கூடிய ஒருவர் ஆவார். இவர்  பாராளுமன்றம் செல்வது எங்களுக்கு மட்டுமல்ல.  உங்களுக்கும் பெருமை ஆகும்.



    அண்மையில் கூட பிரதமர் மோடி, மதுரையில் எய்ம்ஸ் அமைக்க அடிக்கல் நாட்டிவிட்டுச் சென்றார்.  அந்த விழா வெறும் அடிக்கல் நாட்டு விழா தான். அடிக்கல் நாட்டினால் போதுமா? அதற்கு பணம் ஒதுக்க வேண்டாமா? மருத்துவமனை தானாக வந்து விடுமா? ஏற்கனவே அறிவித்திருந்தபடி, உத்தரபிரதேசத்திற்கே தராதவர், மதுரைக்கா தரப்போகிறார்?

    இந்தியாவில் 100 ஸ்மார்ட் சிட்டி உருவாக்கப்படும் என அறிவித்தார். ஆனால் இப்போது தமிழகத்தில் ஒன்று கூட இல்லை. ஆட்சிக்கு வந்தால் அதை செய்வேன் இதை செய்வேன் என கூறுகிறாரே தவிர, ஒன்று கூட செய்யவில்லை. கழக தலைவர் மு கருணாநிதி ஆட்சியிலே, விவசாயிகள் கடன் தள்ளுபடி, இலவச மின்சாரம், மினி பஸ்கள், என அனைத்தையும் தாய் உள்ளத்தோடு நடத்தினார். இன்று எடப்பாடி பேய் ஆட்சி நடத்துகிறார்.

    தேர்தல் நேரத்தில் மட்டும் தமிழகத்திற்கு வந்து செல்லும் மோடி அரசு , மதுரைக்கு என்ன செய்திருக்கிறது? என சிந்தித்து செயலாற்றுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். #MKStalin #DMK #LoksabhaElections2019

    காங்கிரஸ் தலைமை விரும்பி கேட்டுக் கொண்டால் நிச்சயம் தேர்தலில் போட்டியிடுவேன் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். #Congress #priyankagandhi #LSPolls
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.

    அவருக்கு ஆதரவாக, உ.பி. கிழக்கு பகுதி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று பிரசாரத்தை தொடங்கினார். அப்போது அமேதி தொகுதியில் வாக்குச் சாவடி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கான கூட்டம் நடந்தது.

    கட்சிப் பணியாற்ற வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்பம். கட்சியை வலுப்படுத்துவதற்காக செய்ய வேண்டிய காரியம் ஏராளமாக உள்ளன.

    காங்கிரஸ் தலைமை விரும்பி கேட்டுக் கொண்டால் நிச்சயம் தேர்தலில் போட்டியிடுவேன் என்றாலும் கட்சியை பலப்படுத்துவதே முக்கியமான பணி.

    பா.ஜனதா அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. வெற்றுப் பேச்சுகளை மட்டுமே பேசி வருகிறது. இந்த உண்மையை மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை என்றால் அதுபற்றி மக்கள் தெரிந்து கொள்ளாமல்தான் இருப்பார்கள்.

    நரேந்திரமோடி தலைமையிலான ஆட்சியின் தோல்விகள் பற்றி நாம் எடுத்துச் சொன்னால்தான் மக்களுக்கு மோடி அரசின் உண்மை முகம் தெரிய வரும். மோடி ஆட்சியில் உத்தரபிரதேச மாநில விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் விளைபொருளுக்கு உரிய விலை நிர்ணயிக்கப்படவில்லை.

    நாட்டு மக்கள் அனைவருடைய வங்கி கணக்கிலும் தலா ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வதாக பொய் பிரசாரம் செய்தார். ஆனால் காங்கிரஸ் செய்யக்கூடிய வாக்குறுதிகளை மட்டுமே சொல்லும். ராஜஸ்தானில் காங்கிரஸ் வாக்குறுதி அளித்தபடி ஆட்சி அமைந்தவுடன் விவசாய கடன்களை உடனே தள்ளுபடி செய்தோம்.

    ஏழை மக்கள் அனைவருக்கும் ஆண்டு தோறும் ரூ.72 ஆயிரம் குறைந்த பட்ச வருமானமாக வழங்கப்படும் என்று இப்போது காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது. பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் இந்த பணம் நிச்சயமாக வழங்கப்படும்.

    பா.ஜனதா சார்பில் இந்த தொகுதியில் போட்டியிடும் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி சுற்றிப்பார்ப்பதற்காக மட்டும் இங்கு வருகிறார். அவர் இங்கு போட்டியிடுவதால் காங்கிரஸ் கட்சிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

    இவ்வாறு பிரியங்கா காந்தி பேசினார். #Congress #priyankagandhi #LSPolls
    திராவிட கட்சிகள் ஓட்டுக்கு பணம் கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள் என வேலூரில் நடந்த பொதுகூட்டத்தில் சீமான் கூறியுள்ளார். #Seeman
    வேலூர்:

    வேலூரில் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் சீமான் கலந்து கொண்டு பேசியதாவது:-

    ஒவ்வொரு தேர்தலின் போதும் அனைத்து கட்சியினரும் ஆட்சி மாற்றம் குறித்து பேசுகிறார்கள். ஒரு சில கட்சிகள் எந்த கட்சியிடம் இருந்து ஆட்சி மாற்றம் வேண்டும் என்று கூறுகிறார்களோ, அவர்களுடனேயே தேர்தல் கூட்டணி வைக்கிறார்கள். அவர்களால் எப்படி மாற்றத்தை கொண்டு வரமுடியும். அது ஏமாற்றத்தில்தான் முடியும். மாற்றம் என்பது சொல் அல்ல. அது ஒரு செயல். நாம் தமிழர் கட்சி மாற்று அரசியல் புரட்சியை உருவாக்கும். ஊழல், லஞ்சம் அற்ற அரசியல், அனைவருக்கும் வேலை, வேலைக்கேற்ற ஊதியம். தரமான இலவச மருத்துவம், அனைவருக்கும் சரிசமமான கல்வி. இதுவே எங்கள் கட்சியின் முக்கிய கொள்கைகளாகும்.

    இந்த தேர்தலில் பெரிய கட்சிகள் என்று சொல்கின்ற திராவிட கட்சிகள் பல கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளன. ஆனால் நாங்கள் பொதுமக்களை நம்பி தேர்தலில் நிற்கிறோம். ஓட்டுக்கு பணம் கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள். இது ஜனநாயகத்தை பணநாயகமாக மாற்றுவதாகும். ஓட்டுக்கு பணம் கொடுப்பதுதான் ஊழல், லஞ்சத்தின் தொடக்கமாகும். ஓட்டுக்கு கொடுக்கும் பணத்தை அரசியல்வாதிகள் லஞ்சமாகவோ, ஊழல் செய்தோ எடுத்து கொள்கிறார்கள். ஓட்டுக்கு பணம் கொடுக்கும் முறை தடுக்கப்பட வேண்டும்.

    வேலூரில் சீமான் பேசிய காட்சி. அருகில் வேலூர் நாடாளுமன்ற தொகுதி, ஆம்பூர் மற்றும் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள்

    பணம் மதிப்பிழப்பால் கருப்பு பணம், பயங்கரவாதம் ஒழியும் என்று மோடி கூறினார். ஆனால் சாமானிய மக்கள் வங்கி வாசல் முன்பு நின்று உயிரிழந்ததும், வியாபாரிகள் தங்கள் தொழில்களை விட்டு சென்றதும் தான் நடந்தது. காவிரி, முல்லை பெரியார், கச்சத்தீவு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரின் விடுதலை போன்றவற்றில் மத்திய, மாநில அரசுகளின் நிலைப்பாடுகள் மாறுபட்டுள்ளது. தமிழகத்தை நாசமாக்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தபோது அதனை மாநில அரசுகள் தடுக்கவில்லை.

    மத்தியில் கூட்டாட்சியும், மாநிலத்தில் சுயாட்சியும் வேண்டும். மத்தியில் ஒற்றை கட்சி ஆட்சி முறையை ஒழிக்க வேண்டும். இது சர்வாதிகாரத்தை உருவாக்குகிறது. நாட்டின் பாதுகாவலர் என்று பிரதமர் மோடி கூறி வருகிறார். பிரதமர் மோடியிடம் இருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுக்காவிட்டால் பல கட்சிகள் தேர்தலில் வெற்றி பெறாது. ஓட்டுக்கு பணம் வாங்காமல் நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். #Seeman
    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலுடன் விடுபட்ட 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும்படி உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. #LSPolls #TNByelection #DMKCase
    புதுடெல்லி:

    தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் வரும் 18-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. அத்துடன், காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. ஆனால், தேர்தல் வழக்குகளை காரணம் காட்டி அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.

    தற்போது இந்த மூன்று தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்குகள் முடிவுக்கு வந்துவிட்டதால், தேர்தலை நடத்த எந்த தடையும் இல்லை. இதையடுத்து 3 தொகுதிகளிலும், ஏப்ரல் 18ம் தேதி இடைத்தேர்தல் நடத்தக்கோரி திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 3 தொகுதிகளில் ஏப்ரல் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடத்த முடியுமா? என தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் கருத்து கேட்டது. ஆனால், அவசர கதியில் தேர்தல் நடத்த முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.



    ஏப்ரல் 18ம் தேதிக்குப் பிறகு வேறு தேதிகளில் கூட இந்த 3 தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்தலாம் என திமுக தரப்பில் யோசனை தெரிவிக்கப்பட்டது. ஆனால், காலம் வரும்போதுதான் தேர்தலை நடத்த முடியும் என்றும், சரியான நேரம் வரும்போது தேர்தல் நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியது.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கு ஏப்ரல் 18ம்தேதி தேர்தல் நடத்தும்படி உத்தரவிட முடியாது என தெரிவித்தது. #LSPolls #TNByelection #DMKCase
    ×