என் மலர்
தேர்தல் செய்திகள்
நாகர்கோவில்:
கன்னியாகுமரி பாராளு மன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் சுசீந்திரத்தில் இன்று பிரசாரத்தை தொடங்கினார். அப்போது வசந்தகுமார் பேசியதாவது:-
கூட்டணி கட்சியினரும், பொதுமக்களும் எனக்கு வெற்றி வாய்ப்பை பெற்றுத்தர வேண்டும். பொதுமக்கள் அனைவரும் கை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்வதுடன் ராகுல்காந்தி பிரதமராவதற்கு துணை நிற்க வேண்டும்.
குமரி மாவட்டத்தில் தொழிற்சாலைகளை கொண்டு வர வேண்டாம் என்று நான் கூறியதாக பாரதீய ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறி வருகிறார். நானும் ஒரு தொழில் செய்து வருபவன். தொழிற்சாலை இருந்தால்தான் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். பொன். ராதாகிருஷ்ணன் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.
கடந்த முறை தேர்தலில் போட்டியிட்ட பாரதீய ஜனதா வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் இந்து மாணவர்களுக்கு கல்வித் தொகை வழங்குவேன் என்று பொய்யான வாக்கு றுதிகளை கூறி வெற்றி பெற்றார். 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி கூறி இருந்தார். ஆனால் தற்போது இளைஞர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள்.
ஆனால் நான், சமீப காலத்தில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி 1,500 பேருக்கு வேலை கொடுத்துள்ளேன். மக்களுக்காகவே அரசாங்கம் இருக்க வேண்டும். ஆனால் மோடி அரசு மக்களை வஞ்சிக்கிறது. மோடி அரசை தூக்கி எறிய கை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
கற்காடு, மருங்கூர் பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று பிரசாரம் செய்தார். எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், தி.மு.க. நிர்வாகிகள் பார்த்த சாரதி, தாமரைபாரதி, மதியழகன், காங்கிரஸ் நிர்வாகிகள் அசோகன் சாலமன், கால பெருமாள் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். #Congress #pmmodi #vasanthakumar
இந்தியாவில் அதிகமுறை தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டவர் என்ற பெருமை சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த பத்மநாபனுக்கு உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் இதுவரை நடைபெற்ற 16-பாராளுமன்ற தேர்தலிலும் வாக்களித்தவர் என்ற பெருமை தமிழகத்தை சேர்ந்த 105 வயது தாத்தாவிற்கு கிடைத்துள்ளது.
தற்போது நடைபெற உள்ள தேர்தலோடு 17-வது பாராளுமன்ற தேர்தலில் வாக்களித்தவர் என்ற பெருமையையும் பெறப்போகிறார் இந்த 105 வயது தாத்தா.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதி அரிமளம் அருகே ராயவரம் என்ற குக்கிராமம் உள்ளது. இங்குதான் வசிக்கிறார் 105 வயதான பழனியப்பா தாத்தா. 1914-ம் வருடம் டிசம்பர் 19-ந்தேதி பிறந்த பழனியப்பா தாத்தா அந்த பகுதியில் அனைவராலும் அய்யா என்றும், தாத்தா என்றும் அழைக்கப்பட்டு வருகிறார்.

இப்போது 17-வது பாராளுமன்ற தேர்தலில் ஓட்டுப் போட தயாராகி வருகிறார் பழனியப்பா. இவர் வசிக்கும் ராயபுரம் கிராமம் சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்டது. அனைத்து தேர்தல்களிலும் தவறாமல் வாக்களித்துள்ள பழனியப்பா, இளைஞர்களை தவறாமல் வாக்களிக்கும்படி விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார்.
105 வயதிலும் தினமும் காலையில் எழுந்து வாக்கிங் செல்லும் பழனியப்பா வாக்குச்சாவடிக்கு நடந்தே சென்று வாக்களிக்கிறார். பழனியப்பா தான் இந்தியாவிலேயே மிக வயதான வாக்காளர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலேயர் காலத்தில் இருந்து இந்தியாவில் நடைபெற்று வரும் அரசியல், சமூக நிகழ்வுகளை பார்த்து வரும் இவர் சுதந்திர இந்தியாவிற்கு பிறகு ஒரு தேர்தலில் கூட வாக்களிக்க தவறியதில்லை. இது குறித்து பழனியப்பாவின் பேரன் அருணாசலம் (60) கூறியதாவது:-
எனது தாத்தா பழனியப்பனுக்கு 105 வயதாகிறது. தேர்தலில் வாக்களிப்பது அனைவரின் ஜனநாயக கடமை என்பதில் தாத்தா உறுதியாக இருப்பார். கடந்த 2016 சட்டமன்ற தேர்தலிலும் நடந்து சென்றே வாக்களித்தார். இப்போதும் நடந்து சென்று தான் வாக்களிக்க உள்ளார்
உடலை பராமரிப்பது, உணவு பழக்கம் கடைபிடிப்பது ஆகியவற்றில் இந்த பகுதி இளைஞர்களுக்கு தாத்தா பழனியப்பா முன்மாதிரியாக இருப்பது எங்களுக்கு பெருமையாக உள்ளது. இந்த வயதிலும் தினமும் காலையில் எழுந்து நடைபயிற்சிக்கு செல்வார். அவரது வேலையை இப்போதும் அவரே செய்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஒரு நூற்றாண்டை கடந்து விட்ட பழனியப்ப செட்டியாருக்கு கிரிக்கெட் என்றால் உயிர். அதுவும் டோனி என்றால் டி.வி. முன்பு இருந்து நகர மாட்டார். தற்போது நடைபெறும் ஐ.பி.எல். போட்டியை தினமும் இரவு பார்த்துவிட்டு தான் தூங்குகிறார் பழனியப்ப தாத்தா.
12-வது ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் வெற்றிபெறும் என்று கூறும் பழனியப்பா 17-வது பாராளுமன்ற தேர்தலில் யார் வெற்றிபெறுவார் என்பது மட்டும் ரகசியம் என்கிறார். முன்பு இருந்த வாக்குச்சீட்டு முறையைவிட எலக்ட்ரானிக் மெசின் வாக்குப்பதிவு செய்ய எளிதாக உள்ளது என்று நவீன முறைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
அனைவரும் வாக்களித்தால் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெறும். அப்போது தேர்வு செய்யப்படும் வேட்பாளர் தான் உண்மையிலேயே ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர் ஆவார். அதுதான் ஜனநாயகம். எனவே இளைஞர்கள் தவறாமல் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களியுங்கள். ஜனநாயக கடமையாற்றுங்கள் என தாத்தா பழனியப்ப செட்டியார் கூறுகிறார்.
வாக்களிப்பது மட்டுமல்ல சமூகப்பணியாற்றுவதும் ஒவ்வொரு இளைஞனின் கடமை என்று கூறும் பழனியப்ப செட்டியார். ஏலக்காய், தேயிலைத்தோட்டம் வைத்துள்ளார். பழைய மாணவர் சங்கம், பள்ளி பாலிடெக்னிக் கல்லூரி, திருக்கோவில் நிர்வாகத்தலைவர் என பல பொறுப்புகளை 105 வயதிலும் சுமக்கிறார். ரூ.2 கோடியில் பள்ளிக்கு சொந்த நிதியில் கட்டிடம் கட்டி கொடுத்தது, திருமயம் பஸ் நிலையத்தில் ரூ.2.05 லட்சம் செலவில் குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுத்தது என தன் வாழ்நாளில் உதவும் எண்ணத்தையும் வெளிப்படுத்தி உள்ளார். #LokSabhaElections2019
ஈரோடு:
ஈரோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளா கே.பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் கொடுமைகளை எதிர்த்து ஒட்டு மொத்த தமிழ் சமூகமும் கிளர்ந்து எழ வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஒரு பக்கம் காவல் துறையின் மெத்தனமும் தவறும் இருக்கிறது.
சமூக வலைதளங்களில் ஏராளமான ஆபாச படங்கள் வருகின்றன. இது ஒட்டு மொத்த சமூகத்தையே பாழ்படுத்தி விடும் என்ற நிலையை ஏற்படுத்தி இருக்கிறது.
விவசாயிகளை கைது செய்வதற்கு போலீசார் காட்டும் ஆர்வத்தை பொள்ளாச்சி பாலியல் வழக்கில்ஆர்வம் காட்டாதது ஏன்?. பொள்ளாச்சி சம்பவம் நடந்து தமிழ்நாட்டில் உள்ள லட்சக்கணக்கான பெற்றோர்கள் மனதில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அது அடங்காத நிலையில் கோவையில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. ஆனால் அந்த வழக்கில் இன்னும் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வில்லை. பாலியல் வன்முறை, சமூக விரோத சக்திகளில் ஈடுபடும் குற்ற வாளிகளை அரசு பாதுகாக்கிறது.
ஜனநாயக உரிமைக்காக போராட கூடியமக்களையும் விவசாயிகளையும் தொழி லாளர்களையும் அடக்கு முறைகளை ஏவி அடக்குகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறேன். நியாயமான உரிமைக்காக போராட கூடிய விவசாயிகள் மீது வழக்குப் போடுகின்றனர்.
பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளுக்கும், 18 சட்ட மன்ற இடைத்தேர்தல் நடைபெறுகிறது. நாளை உச்ச நீதிமன்றத்தில் மீதமிருக்கும் 3 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்துவது சம்பந்தமாக வழக்கு விசாரணைக்கு வருகிறது. இதில் 4வது தொகுதியாக சூலூர் தொகுதியையும் சேர்த்து மே மாதம் 13-ந் தேதிக்குள் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்தை கேட்டு கொள்கிறேன்.
ஆளும் கட்சி சார்பில் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை வாக்காளர்களுக்கு ஊழியர் கூட்டம் என்ற பெயரில் வழங்க ஆரம்பித்து விட்டார்கள். பல இடங்களில் பணம் வினியோகிப்பதை வாட்ஸ்- அப் மூலமாக படம் வந்திருக்கிறது.
ஆனால் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்ன தான் ஆளுங் கட்சியினர் பண விநியோகம் செய்தாலும், வரம்பு மீறி சலுகைகள் அளித்தாலும் இந்த முறை வாக்காளர்களை பொறுத்தவரை பாஜக- அதிமுக கூட்டணியை தோற்கடிப்பது என்ற உறுதியான நிலைப்பாட்டை மக்கள் எடுத்திருக்கிறார்கள்.
முகிலன் காணாமல் போய் 1½ மாதங்கள் ஆகி இருக்கிறது. அவர் இருக்கிறாரா இல்லையா? என்பதே சந்தேகம் ஏற்பட்டு இருக்கிறது. உடனடியாக முகிலனை கண்டுபிடித்து காவல் துறையினர் அவரது குடும்பத்தினரிடம் ஒப்ப டைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். #admk #kbalakrishnan
பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலை முன்னிட்டு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
அவ்வகையில் கடந்த 23-ந்தேதி கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் தி.மு.க. வேட்பாளர் கௌதம் சிகாமணியை ஆதரித்து உதயநிதி பிரசாரம் மேற்கொண்டார்.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அ.தி.மு.க. வின் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி வேட்பாளரை ஆதரித்து நேற்று முன்தினம் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் இளைஞர்களை திருமாவளவன் தவறாக வழி நடத்துகிறார் என்பது உள்பட பல்வேறு கருத்துகளை கூறி திருமாவளவனை தாக்கி பேசினார்.
இந்த நிலையில் நேற்று சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தி.மு.க. கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று சிதம்பரத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு ராமதாஸ் தன் மீது கூறிய கருத்துகளுக்கு பதில் அளிக்கும் வகையில் பேசினார். அதில் அவர் கூறியதாவது:-
என்னை தைலாபுரம் தோட்டத்துக்கு அழைத்து வாழை இலையில் சாப்பாடு பறிமாறிய ராமதாஸ் தி.மு.க. ஒரு துரோக கட்சி, அது அழிந்துபோககூடியது. ஆகவே தி.மு.க. வில் இருந்து வெளியே வரவேண்டும் என்று என்னை வற்புறுத்தினார். அதை நான் ஏற்றுக் கொள்ள வில்லை.

அதில் இருந்து என் மீது வீண் பழி சுமத்தி சேற்றைவாரி தூற்றி வருகிறார். நான் ஒளிவு மறைவு இன்றி திறந்த புத்தகமாக வாழ்ந்து வருகிறேன்.
தி.மு.க.வில் கூட்டணி சேர்ந்தால் சீட்டு மட்டும் தான் கிடைக்கும், நோட்டு கிடைக்காது என்று எண்ணி சாதி அடிப்படையில் வாக்கு சதவீதத்தை காட்டி, பேரம்பேசி கூட்டணி அமைத்துள்ளனர். அது வர்த்தக ரீதியான வியாபார கூட்டணி.
நம்மிடம் ஒரே குரல்தான் ஒழிக்க வேண்டும். மோடியை விரட்டி அடிக்க வேண்டும். ராகுலை பிரதமர் ஆக்க வேண்டும் என்பது தான்.
மோடி மறுபடியும் பிரதமராக வந்தால் இனிமேல் நாட்டில் தேர்தல் நடக்காது. மாநில கட்சிகளை ஒழிக்க பா.ஜ.க. அனைத்து வேலைகளையும் செய்துள்ளது. மோடியால் சிறு, குறு தொழில்கள் அழிந்து விட்டன.
விவசாயம், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கார்ப்ரேட்டுகளின் செல்லப் பிள்ளையாக மோடி திகழ்கிறார். அம்பானி, அதானிக்கு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட வெளி நாடு சென்றுவருகிறார். மொத்தத்தில் கார்ப்ரேட் பிரதமராகவே உள்ளார்.
இந்து சமூகத்தின் முதல் எதிரி மோடி. சாதி வாரியாக மக்களை பிரித்து மொத்த வியாபாரியாக செயல்படுகிறார். இந்த தேர்தலில் மதவாதமா? ஜனநாயகமா? என்று முடிவு செய்யவேண்டும். சாதி வெறி தூண்டல்களில் சிக்கவேண்டாம். எந்த காலத்திலும் சாதியவாதம், மதவாதம் உள்ள பா.ஜ.க. வுடன் விடுதலை சிறுத்தைகள் கூட்டணியில் இருக்காது. என்னை சாதியை சொல்லிமட்டுமே குற்றம் சுமத்த முடியும். வேறு எந்த குற்றமும் சொல்ல முடியாது.
இவ்வாறு அவர் பேசினார். #Thirumavalavan #Ramadoss
75 வயதை தாண்டிய பா.ஜனதா மூத்த தலைவர்களுக்கு மத்திய மந்திரி சபையில் வாய்ப்பு அளிக்கவில்லை. இந்த முறை தேர்தலில் போட்டியிடவும் தடை விதித்து வருகிறது.
தேர்தல் அறிவிப்புக்கு முன்பு வரை மூத்த தலைவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்க பா.ஜனதா முடிவு செய்திருந்தது.
புல்வாமா சம்பவத்தை தொடர்ந்து பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய பிறகு மக்கள் இடையே செல்வாக்கு அதிகரித்து இருப்பதாக பா.ஜனதா நம்புகிறது.

அத்வானியின் காந்திநகர் தொகுதி அமித்ஷாவுக்கும், முரளி மனோகர் ஜோஷியின் கான்பூர் தொகுதி சத்யதேவ் பச்சோரிக்கும் ஒதுக்கப்பட்டது.
இந்த வரிசையில் சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. இது தொடர்பாக மத்திய பிரதேச மாநில பா.ஜனதாவினர் அவரிடம் எடுத்து கூறி போட்டியில் இருந்து விலகுமாறு வலியுறுத்தி வருகிறார்கள்.
மத்திய பிரதேச மக்களால் ‘தாய்’ என்று அழைக்கப்படும் சுமித்ரா மகாஜனுக்கு வருகிற 12-ந்தேதி 76 வயது நிறைவடைகிறது. ஆனாலும் அவரது உண்மையான வயது 78 என்று கூறப்படுகிறது.
1989 முதல் பா.ஜனதாவின் கோட்டையாக இந்தூர் தொகுதி உள்ளது. இந்த தொகுதியில் சுமித்ரா மகாஜன் தொடர்ந்து 8 முறை வெற்றி பெற்றார். இந்த முறை இந்த தொகுதியில் அவருக்கு பதிலாக முக்கிய தலைவரான கைலாஷ் விஜய் வர்க்கியா நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவர் மேற்கு வங்காள மாநில பா.ஜனதா தேர்தல் பொறுப்பாளராகவும் இருக்கிறார். இந்தூரில் கடைசி கட்டமாக மே 19-ந்தேதி தேர்தல் நடக்கிறது. #LokSabhaElections2019 #BJP

இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கரடிவாவி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று மதியம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு வாகனத்தை சோதனையிட்டபோது அதில், கட்டுக்கட்டாக 10 கோடி ரூபாய் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுபற்றி அந்த வாகனத்தில் வந்தவர்களிடம் விசாரித்தபோது, அது வங்கிக்கு சொந்தமான பணம் என்றும், போத்தனூரில் இருந்து தூத்துக்குடியில் உள்ள வங்கிக்கு கொண்டு செல்வதாகவும் கூறியுள்ளனர். ஆனால், அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லை. எனவே, பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினர். வங்கி நிர்வாகிகள் உரிய ஆவணங்களை ஒப்படைத்தால், பணம் திரும்ப ஒப்படைக்கப்படும் என கூறியுள்ளனர். #ElectionFlyingSquad #LokSabhaElections2019
தூத்துக்குடி:
தூத்துக்குடி சிவன் கோவில் அருகே தமிழிசை சவுந்தரராஜன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தூத்துக்குடி தூய்மையாக இருக்க வேண்டும், தூத்துக்குடி வளர்ச்சி அடைய வேண்டும், வேலை வாய்ப்பு பெருக வேண்டும், இன்றைய வரைபடத்தில் வளர்ச்சி மிகுந்த நாடாளுமன்றம் என்ற பெயரை தூத்துக்குடிபெற வேண்டும் என்பதற்காகத்தான் இங்கு நாம் போட்டியிடுகிறோம். நான் தூத்துக்குடியை தேர்ந்தெடுத்து இருப்பது நிச்சயமாக தென்பகுதி இன்னும் வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காகத் தான்.
தூத்துக்குடியை பொறுத்த வரை யார் யாரெல்லாம் நம்மை எதிர்த்து நிற்கிறார்கள் என்பது தெரியும். ஊழல் கறை படியாத ஒரு தூத்துக்குடியை உருவாக்க வேண்டும். ஊழல் கறைபடிந்தவர்களை தூத்துக்குடி எந்தவிதத்திலும் ஒப்புக்கொள்ளாது. நேர்மையான வேட்பாளரைத்தான் ஒப்புக்கொள்ளும். இந்த மண்ணின் மகள் நான். எதிர் அணியில் உள்ளவர் இறக்குமதி செய்யப்பட்ட வேட்பாளர்தான். என்னை இறக்குமதி செய்யப்பட்டவர் என்று அவர்கள் சொன்னால் நிச்சயம் அது பொய்யாகத்தான் இருக்கும்.
இந்த மண்ணின் சொந்தக்காரி நான். உங்களில் ஒருத்தி நான். எவ்வளவோ சமூக வலைதளங்களில் என்னை கேலியும், கிண்டலும் செய்து என் நிறம் கருப்பு என்று குறிப்பிடுகிறார்கள். இந்த செம்மண் காடு, பனங்காட்டின் நிறம் கருப்பு. ஆகையால் இந்த பனங்காட்டு நரி எந்த சலசலப்புக்கும் அஞ்சாது. என் மீது எந்த குற்ற வழக்கும் கிடையாது.
மோடி பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு நாட்டு மக்களிடம் பேசும் போது ஒரு தலைவர் இருந்தால் என்னை பாராட்டி இருப்பார். அது குஜராத்தை சேர்ந்த தலைவர் அல்ல. தமிழ்நாட்டை சேர்ந்த காமராஜர் என்று கூறினார். ஆனால் அந்த காமராஜரை இழிவுபடுத்தியவர்கள் இன்று ஓட்டுக்காக உங்கள் முன்னால் நிற்கிறார்கள் என்பதை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.
நான் எதிரணிக்கு சொல்லிக் கொள்கிறேன் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயலாற்ற முடியும் என்றால் பா.ஜனதா, அ.தி.மு.க.வால் மட்டுமே முடியும். காங்கிரஸ், தி.மு.க.வால் முடியாது. ரத்தக்கறை படிந்த கரங்களோடு உங்களிடம் வாக்கு கேட்டு வருகிறார்கள். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். அப்போது இதே காங்கிரஸ், தி.மு.க.தான் ஆட்சியில் இருந்தது. இவர்கள் தடுத்து நிறுத்தவில்லை. மத்திய, மாநில அரசு இணைந்து செயல்பட்டால் நாட்டு மக்களுக்கு நல்லது கிடைக்கும்.
நான் இன்று கட்சியின் மாநில தலைவராக இருக்கிறேன். எனது அரசியல் வாழ்க்கை கரடு முரடானது. அந்த பாதையில் நடந்து உங்களிடம் வந்து உள்ளேன். என்னை வெற்றி பெறச் செய்யுங்கள். உங்கள் பலத்தோடு தூத்துக்குடியில் தாமரை மலர்ந்தே தீரும்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilisai #bjp
கும்மிடிப்பூண்டி பஜாரில் நேற்று இரவு அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வேனில் நின்று பிரச்சாரம் செய்ய கட்சியினர் ஏற்பாடு செய்து இருந்தனர். பெண்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்கு கூடியிருந்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்து விட்டு அவர் இரவு 9.57-க்கு கும்மிடிப்பூண்டி பஜாருக்கு வேனில் வந்தார். தினகரன் 10 மணியை தாண்டி பிரச்சாரம் செய்வாரா? தேர்தல் விதிமுறையை மீறுவாரா? என்பதை கண்காணிக்க அதிகாரிகளும் போலீசாரும் மறைமுகமாக காத்திருந்தனர்.
ஆனால் டி.டி.வி.தினகரன், வேட்பாளரின் பெயரைச் சொல்லி அவரை அறிமுகப்படுத்தினார். பின்னர் ‘‘நமக்கு எந்த சின்னம் கொடுக்கப்பட்டாலும் அது வெற்றியின் சின்னம்’’ என்று தனது கை கடிகாரத்தில் நேரத்தை பார்த்தவாறு சரியாக 3 நிமிடத்தில் தனது பேச்சை முடித்தார்.
பின்னர் சைகை மூலம் அவர் வாக்குகளை பொதுமக்களிடம் சேகரித்தார். தொண்டர் ஒருவர் கொடுத்த பூச்செண்டையும் அவர் வாங்க மறுத்து விட்டார். தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால் அதனை மீறக்கூடாது என அந்த தொண்டரிடம் எடுத்து கூறினார். #TTVDinakaran
கோவை வடவள்ளி தொண்டாமுத்தூர் ரோடு லட்சுமி நகரில் இன்று காலை வடக்கு சட்டமன்றத்தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராஜேஸ்வரி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஜோசப், ஏட்டுகள் ராஜேந்திர பிரசாத், ரங்கசாமி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு தனியார் செக்யூரிட்டி வேனில் 5 பேர் வந்தனர். வேனை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியபோது கணபதியில் இருந்து இருட்டுப்பள்ளத்துக்கு ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்ப செல்வதாக வேனில் இருந்தவர்கள் கூறினர். அவர்கள் கொண்டு வந்த ரூ.5 லட்சம் ரொக்கப்பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லை. மேலும் அவர்களிடம் 2 ஏர் ரைபிள் துப்பாக்கிகள் இருந்தன. அதற்கும் உரிய ஆவணங்கள் இல்லை. இதனையடுத்து ரூ.5 லட்சம் பணம் மற்றும் 2 துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் காரில் வந்தவர்கள் ராமநாதபுரத்தை சேர்ந்த பொன்னுசாமி (வயது 40), ஜம்முவை சேர்ந்த சவாதிகான் (22), பணப்பொறுப்பாளர் கங்காதரன், உதயகுமார் மற்றும் வேன் டிரைவர் நாகராஜ் ஆகியோர் என்பதும் இவர்கள் கோவை ராமநாதபுரத்தில் இயங்கி வரும் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் வைக்கும் தனியார் செக்யூரிட்டி கம்பெனியில் வேலை செய்வதும் தெரியவந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட ரூ.5 லட்சம் மற்றும் 2 துப்பாக்கிகளும் கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. #LokSabhaElections2019
அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் செய்து வருகிறார். தென்சென்னை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தனை ஆதரித்து சோழிங்கநல்லூர் தொகுதி கந்தன்சாவடி பகுதியில் திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு திரட்டினார். பிரசாரத்தின்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்,
காவிரி பிரச்சனைக்காக. பாராளுமன்றத்தை முடக்கியவர்கள் அ.தி.மு.க. எம்.பிக்கள். தி.மு.க. எம்.பிக்கள் எதற்கும் குரல் எழுப்பியதில்லை. ஸ்டாலின் தனது தந்தையை பயன்படுத்தி தி.மு.க.வின் தலைவர் ஆனவர். ஆனால் நான் படிப்படியாக உயர்ந்து முதல்வர் ஆனேன்.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட தி.மு.க. எந்த முயற்சியும் எடுக்கவில்லை. நாட்டு மக்களை பாதுகாக்க மீண்டும் மோடி ஆட்சிக்கு வர வேண்டும்.
தி.மு.க. ஆட்சியில், பாராளுமன்றத்தில் போதிய நிதி இருந்தும் மக்களுக்கு எந்த திட்டங்களும் செயல்படுத்தவில்லை. அதிகாரம் தான் அவர்கள் கண்ணுக்கு தெரிந்தது தவிர, மக்கள் கண்ணுக்கு தெரியவில்லை.
ஆனால் அதிமுக அரசு கிடைத்த உரிமையை முறையாக பயன் படுத்தியது. நாட்டில் உள்ள மக்களை பாதுகாக்க மீண்டும் மோடி ஆட்சிக்கு வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தில் மாவட்ட செயலாளர்கள் விருகை ரவி எம்.எல்.ஏ., சிட்லபாக்கம் ராஜேந்திரன், தி.நகர் சத்யா எம்.எல்.ஏ., மற்றும் ஆர்.நட்ராஜ் எம்.எல்.ஏ., ஆதிராஜாராம், கமலகண்ணன், பெரும்பாக்கம் ராஜசேகர், ஸ்ரீராமஜெயம், மூவேந்தர், பா.ஜனதா நிர்வாகிகள் காளிதாஸ், டால்பின் ஸ்ரீதர், மோகன்ராஜா, பா.ம.க. நிர்வாகிகள் சகாதேவன், விவேல், லோகநாதன், ராம்குமார், சிவகுமார், தே.மு.தி.க. வி.சி. ஆனந்தன், பிரபாகரன், தினகரன், முருகன்., த.மா.கா. மாவட்ட தலைவர் கொட்டிவாக்கம் முருகன், மனோகர், சத்தியநாராயணன், புதிய நீதி கட்சி துரைராஜ், ரமேஷ், ஜெகன், புரட்சி பாரதம் கட்சி ராஜி, ஆதிவேந்தன், மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். #LokSabhaElections2019 #EdappadiPalaniswami






