search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "17th LS Polls"

    இந்தியாவில் இதுவரை நடைபெற்ற 16-பாராளுமன்ற தேர்தலிலும் வாக்களித்தவர் என்ற பெருமை தமிழகத்தை சேர்ந்த 105 வயது தாத்தாவிற்கு கிடைத்துள்ளது. #LokSabhaElections2019
    திருச்சி:

    இந்தியாவில் அதிகமுறை தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டவர் என்ற பெருமை சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த பத்மநாபனுக்கு உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் இதுவரை நடைபெற்ற 16-பாராளுமன்ற தேர்தலிலும் வாக்களித்தவர் என்ற பெருமை தமிழகத்தை சேர்ந்த 105 வயது தாத்தாவிற்கு கிடைத்துள்ளது.

    தற்போது நடைபெற உள்ள தேர்தலோடு 17-வது பாராளுமன்ற தேர்தலில் வாக்களித்தவர் என்ற பெருமையையும் பெறப்போகிறார் இந்த 105 வயது தாத்தா.

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதி அரிமளம் அருகே ராயவரம் என்ற குக்கிராமம் உள்ளது. இங்குதான் வசிக்கிறார் 105 வயதான பழனியப்பா தாத்தா. 1914-ம் வருடம் டிசம்பர் 19-ந்தேதி பிறந்த பழனியப்பா தாத்தா அந்த பகுதியில் அனைவராலும் அய்யா என்றும், தாத்தா என்றும் அழைக்கப்பட்டு வருகிறார்.

    பழனியப்பா வருகிற ஏப்ரல் 18-ந்தேதி நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் ஆர்வமுடன் வாக்களிக்க தயாராகிறார். இந்தியா சுதந்திரமடைந்த பிறகு சந்தித்த 16 பாராளுமன்ற பொதுத்தேர்தல்களிலும், தமிழ்நாட்டில் நடைபெற்ற 15 சட்டமன்ற பொதுத்தேர்தலிலும் பழனியப்பா தாத்தா வாக்களித்துள்ளார்.



    இப்போது 17-வது பாராளுமன்ற தேர்தலில் ஓட்டுப் போட தயாராகி வருகிறார் பழனியப்பா. இவர் வசிக்கும் ராயபுரம் கிராமம் சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்டது. அனைத்து தேர்தல்களிலும் தவறாமல் வாக்களித்துள்ள பழனியப்பா, இளைஞர்களை தவறாமல் வாக்களிக்கும்படி விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார்.

    105 வயதிலும் தினமும் காலையில் எழுந்து வாக்கிங் செல்லும் பழனியப்பா வாக்குச்சாவடிக்கு நடந்தே சென்று வாக்களிக்கிறார். பழனியப்பா தான் இந்தியாவிலேயே மிக வயதான வாக்காளர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆங்கிலேயர் காலத்தில் இருந்து இந்தியாவில் நடைபெற்று வரும் அரசியல், சமூக நிகழ்வுகளை பார்த்து வரும் இவர் சுதந்திர இந்தியாவிற்கு பிறகு ஒரு தேர்தலில் கூட வாக்களிக்க தவறியதில்லை. இது குறித்து பழனியப்பாவின் பேரன் அருணாசலம் (60) கூறியதாவது:-

    எனது தாத்தா பழனியப்பனுக்கு 105 வயதாகிறது. தேர்தலில் வாக்களிப்பது அனைவரின் ஜனநாயக கடமை என்பதில் தாத்தா உறுதியாக இருப்பார். கடந்த 2016 சட்டமன்ற தேர்தலிலும் நடந்து சென்றே வாக்களித்தார். இப்போதும் நடந்து சென்று தான் வாக்களிக்க உள்ளார்

    உடலை பராமரிப்பது, உணவு பழக்கம் கடைபிடிப்பது ஆகியவற்றில் இந்த பகுதி இளைஞர்களுக்கு தாத்தா பழனியப்பா முன்மாதிரியாக இருப்பது எங்களுக்கு பெருமையாக உள்ளது. இந்த வயதிலும் தினமும் காலையில் எழுந்து நடைபயிற்சிக்கு செல்வார். அவரது வேலையை இப்போதும் அவரே செய்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஒரு நூற்றாண்டை கடந்து விட்ட பழனியப்ப செட்டியாருக்கு கிரிக்கெட் என்றால் உயிர். அதுவும் டோனி என்றால் டி.வி. முன்பு இருந்து நகர மாட்டார். தற்போது நடைபெறும் ஐ.பி.எல். போட்டியை தினமும் இரவு பார்த்துவிட்டு தான் தூங்குகிறார் பழனியப்ப தாத்தா.

    12-வது ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் வெற்றிபெறும் என்று கூறும் பழனியப்பா 17-வது பாராளுமன்ற தேர்தலில் யார் வெற்றிபெறுவார் என்பது மட்டும் ரகசியம் என்கிறார். முன்பு இருந்த வாக்குச்சீட்டு முறையைவிட எலக்ட்ரானிக் மெசின் வாக்குப்பதிவு செய்ய எளிதாக உள்ளது என்று நவீன முறைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

    அனைவரும் வாக்களித்தால் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெறும். அப்போது தேர்வு செய்யப்படும் வேட்பாளர் தான் உண்மையிலேயே ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர் ஆவார். அதுதான் ஜனநாயகம். எனவே இளைஞர்கள் தவறாமல் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களியுங்கள். ஜனநாயக கடமையாற்றுங்கள் என தாத்தா பழனியப்ப செட்டியார் கூறுகிறார்.

    வாக்களிப்பது மட்டுமல்ல சமூகப்பணியாற்றுவதும் ஒவ்வொரு இளைஞனின் கடமை என்று கூறும் பழனியப்ப செட்டியார். ஏலக்காய், தேயிலைத்தோட்டம் வைத்துள்ளார். பழைய மாணவர் சங்கம், பள்ளி பாலிடெக்னிக் கல்லூரி, திருக்கோவில் நிர்வாகத்தலைவர் என பல பொறுப்புகளை 105 வயதிலும் சுமக்கிறார். ரூ.2 கோடியில் பள்ளிக்கு சொந்த நிதியில் கட்டிடம் கட்டி கொடுத்தது, திருமயம் பஸ் நிலையத்தில் ரூ.2.05 லட்சம் செலவில் குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுத்தது என தன் வாழ்நாளில் உதவும் எண்ணத்தையும் வெளிப்படுத்தி உள்ளார். #LokSabhaElections2019
    ×