என் மலர்
தேர்தல் செய்திகள்
பாராளுமன்றத் தேர்தலில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 11-ம்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் நிஜாமாபாத் மக்களவைத் தொகுதியில் போட்டியிட 200க்கும் அதிகமான வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். மனுக்கள் பரிசீலனை முடிந்து மனுக்களை வாபஸ் பெறுவது நேற்று மாலை 4 மணியுடன் முடிவடைந்தது. அதன்பின்னர் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், 185 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த தொகுதியில் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா எம்பியாக உள்ளார். அவர் மீண்டும் போட்டியிடுகிறார். காங்கிரஸ் சார்பில் மது யாஷ்கி கவுடா, பாஜக சார்பில் தர்மபுரி அரவிந்த் ஆகியோர் களத்தில் உள்ளனர்.
இதற்கு முன்பு 1996ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது, நல்கொண்டா மாவட்டத்தில் புளோரைடால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படாததைக் கண்டித்து, 480 வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனர். இதனால், வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக, வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்பட்டது.
ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் அதிகபட்சமாக 16 வேட்பாளர்களின் பெயர்களை சேர்க்க முடியும். ஒரு கண்ட்ரோல் யூனிட்டுடன் 4 இயந்திரங்களை இணைக்கலாம். எனவே நோட்டாவுடன் சேர்த்து 64 வேட்பாளர்களின் பெயர்களை சேர்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #Nizamabad #BallotPaper
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் நாம்தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிடும் நடிகர் மன்சூர்அலிகான் மக்களை கவரும் வகையில் வாக்கு சேகரித்து வருகிறார். ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் அவரே தராசு பிடித்து பொதுமக்களுக்கு காய்கறி வழங்கினார். திண்டுக்கல் நகர் பகுதியில் தெருக்களை சுத்தம் செய்து கரும்பு விவசாயிக்கு ஓட்டு போடுங்க. மற்றவங்களுக்கு ஓட்டு போட்டா வேட்டு வச்சிருவாங்க என்று பிரசாரம் செய்தார்.
நேற்று கொடைக்கானல் பகுதியில் வாக்கு சேகரித்தார். ஏரிச்சாலை, கலையரங்கம் ஆகிய பகுதிகளில் வாகனத்தில் இருந்தவாரே பிரசாரம் செய்தார். அதன் பின்னர் இரு சக்கர வாகனத்தில் பஸ் நிலையம், செவன்ரோடு, கே.சி.எஸ். திடல் ஆகிய பகுதிகளில் ஓட்டு கேட்டார்.
டீக்கடைக்குள் சென்ற அவர் டீ தயாரித்து எனக்கு ஓட்டு போடுங்கள். இதை விட நல்ல டீயாக தருகிறேன் என்று தமாசாக பேசினார். அங்கு நின்றவர்கள் அனைவரும் வாய் விட்டு சிரித்தனர். மூஞ்சிக்கல் பகுதிக்கு சென்ற அவர் செருப்பு தைக்கும் கடைக்கு சென்று பொதுமக்களின் காலணிகளுக்கு பாலீஷ் போட்டு ஆதரவு கோரினார்.

டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்து விட்டது. அதற்கு பின்னர் பொதுவான சின்னம் தேர்வு செய்து கொள்ளலாம் என உத்தரவிட்டுள்ளது. அதன்படி டி.டி.வி. தினகரன் அணிக்கு பரிசு பெட்டகம் சின்னம் இன்று ஒதுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தேனி பாராளுமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனிடம் டெலிபோனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் கூறியதாவது:-

தற்போது பரிசு பெட்டகம் சின்னம் ஒதுக்கியது மகிழ்ச்சியளிக்கிறது. இதனை அனைத்து வாக்காளர்களிடமும் கொண்டு சென்று வெற்றி பெறுவோம். எங்களுக்குதான் மக்கள் செல்வாக்கு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #AMMK #ThangaTamilselvan #GiftPack

இது குறித்து சிவசேனா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அசோக் சர்கார் கூறுகையில், ‘மேற்கு வங்கத்தில் சிவசேனா சார்பில் போட்டியிடவிருக்கும் 15 வேட்பாளர்களில் 11 வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளோம். மீதமுள்ள 4 வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும்.
மேற்கு வங்கத்தில் உள்ள பாஜக தலைமை, மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரசிடம் போட்டியிட முடியாததால் தான், இந்த தேர்தலில் சிவசேனா தனித்து களமிறங்கியிருக்கிறது. மேலும் திரிணாமுல் காங்கிரசில் இருந்த ஊழல் கறைப்படிந்த தலைவர்கள் பாஜகவில் சமீபத்தில் இணைந்துள்ளனர்’ என்றார்.
மேற்கு வங்கத்தின் தம்லுக், கந்தாய், மித்னாபூர், வடக்கு கொல்கத்தா, பராக்பூர், பங்குரா, பராசாத், பீஷ்னுபூர், வடக்கு மல்டா, ஜதாவ்பூர் ஆகிய தொகுதிகளில் இந்து வேட்பாளர்களை மட்டுமே நிறுத்தப்போவதாக சிவசேனா கூறியுள்ளது.
மித்னாபூர் தொகுதியில், பாஜகவின் மாநில தலைவர் திலீப் கோஷ், மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மானஸ் புனியா ஆகியோரை எதிர்த்து அசோக் சர்கார் போட்டியிடுவதாக தெரிய வந்துள்ளது. #Loksabhaelections2019 #SivasenaContestWestbengal
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 18-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல்களுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ந்தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கலுக்கு கடந்த 26-ந்தேதி மாலை 3 மணி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. அந்த கால அவகாசத்துக்குள் தமிழகம் முழுவதும் 1,587 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக 518 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. வேட்புமனுக்கள் பரிசீலனை 27-ந்தேதி நடைபெற்றது. அதில் தகுதியில்லாத வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
அதன்படி, பாராளுமன்ற தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்டிருந்த 1,587 வேட்புமனுக்களில், 655 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட 518 வேட்புமனுக்களில் 213 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
அதை தொடர்ந்து வேட்புமனுக்களை திரும்ப பெற 2 நாட்கள் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுக்களை திரும்ப பெறுபவர்கள், 29-ந்தேதி (இன்று) மாலை 3 மணிக்குள் தங்கள் வேட்புமனுவை திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும். அதன் பின்னர், களத்தில் நிற்கப்போகும், இறுதி வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்படும்.
எந்தெந்த தொகுதிகளில் யார்-யார்? களத்தில் நிற்கின்றனர்? எத்தனை பேர் களத்தில் இருப்பார்கள்? என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இன்று மாலை 3 மணிக்கு மேல் தெரியவரும். இந்த இறுதி வேட்பாளர் பட்டியலை இணையதளத்தில் வெளியிட தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இன்று மாலை 3 மணிக்கு மேல் சுயேச்சை வேட்பாளர்கள் அழைக்கப்பட்டு அவர்களுக்கான தேர்தல் சின்னங்கள் ஒதுக்கும் பணியில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் ஈடுபடுவார்கள்.

அவர்கள் அனைவருக்கும், ஒரு பொதுவான சின்னத்தை ஒதுக்குவது பற்றி பரிசீலிக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இந்திய தேர்தல் ஆணையம், வழங்கும் அறிவுரையின் அடிப்படையில், அவர்களுக்கு சின்னம் வழங்குவது குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரிகள் முடிவு செய்வார்கள்.
சின்னங்கள் ஒதுக்கப்பட்ட பிறகு தேர்தல் களத்தில் பிரசாரம் இன்னும் சூடு பிடிக்கும். #LokSabhaElections2019 #SatyabrataSahoo
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களின் வெற்றிக்காக, காங்கிரஸ் கட்சியின் சார்பில் தொகுதி வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
அதேபோல், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் தலைமையில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள், மாவட்ட தலைவர்களுடன் இணைந்து தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்பாளர்கள்.
அதன்படி, திருவள்ளூர்-பி.தாமோதரன், வடசென்னை- டி.எல். சதாசிவலிங்கம், வி.எஸ்.ஜே.தினகரன், தென் சென்னை-ஆர். தாமோதரன், இல.பாஸ்கரன், தியாயராயநகர் ஸ்ரீராம், மத்திய சென்னை -ஜி.கே. தாஸ், எம்.எம்.டி.ஏ. கோபி, ஸ்ரீபெரும்புதூர்-நாசே ஆர்.ராஜேஷ், காஞ்சிபுரம்-கேசவபெருமாள் உள்பட 39 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் அவர் கூறியுள்ளார். #LokSabhaElections2019 #Congress
சென்னை சேப்பாக்கத்தில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

‘தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றால் ஜெயலலிதா மரணம் குறித்த உண்மையை கண்டுபிடிப்போம்’, என்று மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார். இது ஒரு மானங்கெட்ட செயல்.
எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்றபோது, ‘எம்.ஜி.ஆர். உயிருடன் வந்தால் ஆட்சியை அவரிடம் ஒப்படைத்துவிடுவோம்’, என்று கூறி கருணாநிதி மக்களிடம் ஓட்டு கேட்டார். அவரது நாடகத்தை புரிந்துகொண்டு மக்கள் அவருக்கு தோல்வியை பரிசாக அளித்தனர்.
தந்தை எடுத்த ஆயுதத்தை மகனும் தற்போது எடுத்திருக்கிறார். பிரசாரத்தின்போது எங்கள் தலைவியை பற்றி பேசி ஓட்டு கேட்க தி.மு.க.வுக்கு என்ன உரிமை இருக்கிறது? தி.மு.க. ஆட்சிக்கு வரப்போவதில்லை. ஆட்டத்திலேயே இல்லாத தி.மு.க. இப்படி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.
அரசியல் களத்தில் உண்மையான போட்டி அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் தான். அ.ம.மு.க. ஆட்டத்திலேயே கிடையாது. தமிழகத்தில் ஜெயலலிதாவின் அலை மட்டுமே வீசுகிறது. வேறு அலை கிடையாது. இந்த அலையில் சிக்கி எதிரிகள் மாண்டு போவார்கள்.
ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சமயம் அவரது உடலில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தது. இந்தளவு நிலைமை மோசமானதை அவரை வீட்டில் இருந்து பார்த்துக்கொண்ட சசிகலா குடும்பத்தினர் கண்டுகொள்ளாதது ஏன்?, அவர்கள் என்ன செய்தார்கள்? எனவே அந்த கேள்விக்கு பதில் சொல்லவேண்டிய கட்டாயம் அந்த குடும்பத்துக்கு உண்டு.
இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #MinisterJayakumar


கோவில்பட்டி:
கோவில்பட்டியில் நடந்த கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-
இதற்கு முன்பு நடந்த தேர்தல்களை விட இந்த தேர்தல் மிக முக்கியமானது. இதுவரை நாம் சந்தித்த தேர்தல், அரசியல் கட்சிகளை எதிர்த்து நின்று தேர்தல் களத்தில் களமாடிய தேர்தல். ஆனால் இன்று இந்தியா என்ற அமைப்பை பாதுகாக்க நாம் போராடிக்கொண்டிருக்கிற தேர்தல். ஒவ்வொருவரின் கருத்து சுதந்திரத்துக்காக போராடி வேண்டிய தேர்தல்.
இந்த நாட்டில் இந்தி மொழி மட்டும் தான் பேசப்பட வேண்டும், வேறு மொழிகள் அதன் அடையாளங்களை இழந்து விட வேண்டும், தமிழகத்தில் தமிழ் இருக்கக்கூடாது என்ற எண்ணம் கொண்டவர்கள் தான் மத்தியில் இருக்கக்கூடிய பாரதிய ஜனதாவினர். நாடு முழுவதும் ஒரே வரி என கூறி ஜி.எஸ்.டி. கொண்டு வந்தனர். அதில் ஆயிரம் குழப்பங்கள்.
இங்கே கோவில்பட்டியில் கடலைமிட்டாய் செய்யக்கூடியவர்கள் கூட கிட்டத்தட்ட 18 சதவீத ஜி.எஸ்.டி. வரியால் பாதிக்கப்பட்டு அந்த சின்ன தொழிற்சாலைகளை மூடிவிட்டு போகும் சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. அரசு ஒரு வரியை மக்கள் மீது திணித்து எல்லா சிறிய தொழில்களும், வியாபாரங்களும் நசிந்து போகும் நிலையை கொண்டு வந்திருக்கிறது.
பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை. பொள்ளாச்சியில் நடந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்களை காப்பாற்ற பயன்படாமல் இந்த ஆட்சி, குற்றவாளிகளை காப்பாற்ற துடித்து கொண்டிருக்கிறது. ஸ்டெர்லைட் பிரச்சினையில் அரசு துப்பாக்கி சூடு நடத்தி 13 பேரை சுட்டு கொல்கிறது. இப்படி மக்களுக்கு எதிராக உள்ள இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்து தமிழகத்தில் வாக்கு வாங்க முடியும் என நினைத்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழகத்தில் புயல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. அப்போதெல்லாம் பிரதமர் மோடி தமிழகத்துக்கு வரவில்லை. இப்போது தேர்தலுக்காக வருகிறார். இந்த தொகுதியில் அவர் சார்ந்த கட்சியை சேர்ந்தவர் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் அவர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்.
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக காட்டுவேன் என பிரதமர் வாக்குறுதி அளித்தார். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் 21 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு உயிரிழக்கக்கூடிய நிலையை பார்க்கிறோம்.
தீப்பெட்டி, பட்டாசு சந்தித்துக்கொண்டிருக்கிற பிரச்சினைகளை களைய, தி.மு.க.வும், பிரதமராக வரக்கூடிய ராகுல் காந்தி நிச்சயமாக தமிழ் மண்ணின் பிரச்சினையை புரிந்து கொண்டு செயல்படுவார்.
இவ்வாறு அவர் கூறினார். #kanimozhi #rahulgandhi #congress






