search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தல்- மேற்கு வங்கத்தில் முதன் முறையாக சிவசேனா தனித்துப் போட்டி
    X

    பாராளுமன்ற தேர்தல்- மேற்கு வங்கத்தில் முதன் முறையாக சிவசேனா தனித்துப் போட்டி

    பாராளுமன்ற தேர்தலில் சிவசேனா கட்சி முதன் முறையாக மேற்கு வங்கத்தில் தனித்துப் போட்டியிடுகிறது. வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். #Loksabhaelections2019 #SivasenaContestWestbengal
    கொல்கத்தா:

    பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சிவசேனா கட்சி, மேற்கு வங்கத்தில் தனித்துப் போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் போட்டியிடுவது இதுவே முதன்முறையாகும்.



    இது குறித்து சிவசேனா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அசோக் சர்கார் கூறுகையில்,  ‘மேற்கு வங்கத்தில் சிவசேனா சார்பில் போட்டியிடவிருக்கும் 15 வேட்பாளர்களில் 11 வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளோம். மீதமுள்ள 4 வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும்.

    மேற்கு வங்கத்தில் உள்ள பாஜக தலைமை, மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரசிடம் போட்டியிட முடியாததால் தான், இந்த தேர்தலில் சிவசேனா தனித்து களமிறங்கியிருக்கிறது. மேலும்  திரிணாமுல் காங்கிரசில் இருந்த ஊழல் கறைப்படிந்த தலைவர்கள் பாஜகவில் சமீபத்தில் இணைந்துள்ளனர்’ என்றார்.

    மேற்கு வங்கத்தின் தம்லுக், கந்தாய், மித்னாபூர், வடக்கு கொல்கத்தா, பராக்பூர், பங்குரா, பராசாத், பீஷ்னுபூர், வடக்கு மல்டா, ஜதாவ்பூர் ஆகிய தொகுதிகளில் இந்து வேட்பாளர்களை மட்டுமே நிறுத்தப்போவதாக சிவசேனா கூறியுள்ளது.

    மித்னாபூர் தொகுதியில், பாஜகவின் மாநில தலைவர் திலீப் கோஷ், மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மானஸ் புனியா ஆகியோரை எதிர்த்து அசோக் சர்கார் போட்டியிடுவதாக தெரிய வந்துள்ளது. #Loksabhaelections2019 #SivasenaContestWestbengal


    Next Story
    ×