என் மலர்
தேர்தல் செய்திகள்
மதுரை:
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். மதுரை பாராளுமன்றத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் வெங்கடேசன் மற்றும் விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி வேட்பாளரை ஆதரித்து வண்டியூர், திருமங்கலத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார்.
அப்போது மோடி, எடப்பாடி அரசை கடுமையாக சாடினார். பிரசாரத்துக்கு பின்னர் மதுரையில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்தார்.
இன்று காலை மு.க.ஸ்டாலின் மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் நடந்து சென்றபடியே வியாபாரிகள், பொதுமக்களிடம் மதுரை பாராளுமன்றத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் வெங்கடேசனுக்கு ஆதரவாக வாக்கு கேட்டார்.

மு.க.ஸ்டாலினுடன் சென்ற வேட்பாளரை அறிமுகம் செய்து இவரை வெற்றி பெறச் செய்தால் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என்றார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, 14 வயதில் அரசியலுக்கு வந்த நான் எப்போதும் மக்களோடு மக்களாக இருந்து வருகிறேன்.
எம்.எல்.ஏ. மேயர், தி.மு.க. தலைவர் என எப்போதும் மக்களோடு இருந்து வருகிறேன். தேர்தலின் போது மட்டும் மக்களை சந்திப்பவர்கள் நாங்கள் அல்ல. ஆட்சியில் இருந்தாலும், இல்லா விட்டாலும் மக்களுக்கு சேவை செய்வோம் என்றார். #MKStalin #DMK
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார். தி.மு.க. வேட்பாளர் கனிமொழியை எதிர்த்து அவர் போட்டியிடுகிறார். வேட்பு மனு பரிசீலனையின்போது, தமிழிசையின் வேட்பு மனுவை ஏற்கக்கூடாது என தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பிரச்சினை ஏற்பட்டது. பின்னர் தமிழிசையின் மனு ஏற்கப்பட்டது.

பிரதமர் மோடி குறித்து தரம் தாழ்ந்து விமர்சித்து வரும் மு.க.ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்தார். ஸ்டாலினால் முதல்வராக முடியாது, அவர் பரிந்துரைக்கும் ராகுல் காந்தியாலும் பிரதமராக முடியாது எனவும் தமிழிசை கூறினார். #TamilisaiSoundararajan #LokSabhaElections2019
விழுப்புரம் (தனி) பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளரை ஆதரித்து விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
ஜனநாயகமா?, பாசிசமா? என்ற கேள்விக்கு விடைகாணும் தேர்தல் இந்த தேர்தல். ஜனநாயகத்தை பாதுகாக்க தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மதசார்பற்ற கூட்டணி அமைந்துள்ளது. எதிர்காலத்தில் ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாசாரம் என்ற ஒற்றைத்தன்மையை திணிப்பதற்கு கடந்த 5 ஆண்டுகாலத்தில் கேடு விளைவித்தது மத்திய அரசு.
மேலும் தமிழகத்தை வஞ்சித்த மத்திய அரசு, மேகதாதுவில் அணை கட்ட ஏற்பாடு செய்து கொடுத்து தமிழகத்தின் தஞ்சை தரணியை பஞ்சபிரதேசத்திற்கு கொண்டு செல்ல திட்டத்தை வகுத்து கொடுத்தது.
இதன் மூலம் கார்ப்பரேட் கம்பெனிகள் மீத்தேன், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட எரிவாயு திட்டங்களுக்காக நிலங்களை அபகரித்து வருகின்றனர். கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக செயல்படும் மத்திய அரசு, விவசாயிகளை நசுக்குகிறது. இப்படிப்பட்ட மத்திய அரசை தூக்கியெறிந்து ராகுல்காந்தியை பிரதமராக்க பாடுபட வேண்டும்.
ஜி.எஸ்.டி. வரி விதிப்பினால் வணிகர்களின் வாழ்க்கை நாசமாகி விட்டது. கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை ரூ.2 ஆயிரம் கோடி உள்ளது. அதனை விவசாயிகளுக்கு பெற்றுத்தர ஊழல் நிறைந்த அரசு தயாராக இல்லை. மத்திய அரசின் வஞ்சகத்தில் இருந்து தமிழகத்தை காக்க முடியாத அரசு உள்ளது. உச்சி முதல் உள்ளங்கால் வரை அவர்களுக்காக நடுங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
பருப்பு கொள்முதலில் ரூ.400 கோடி ஊழல், உள்ளாட்சி துறையில் டெண்டர் விடுவதில் ஊழல், நெடுஞ்சாலைத்துறையில் ஊழல், குட்கா ஊழல் இப்படி எங்கும் ஊழல் நிறைந்துள்ளது. இன்றைக்கு படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை.
மருத்துவமனைகளுக்கு சென்றால் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. நோயுடையவரின் ரத்தம் செலுத்தப்பட்ட கொடுமை நடந்துள்ளது. தற்போது ஓசூர் உள்ளிட்ட இடங்களில் ரத்தம் ஏற்றப்பட்ட 15 கர்ப்பிணிகள் உயிரிழந்திருக்கிறார்கள் என்ற செய்தி வந்துகொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வேலையில்லா திண்டாட்டத்தை போக்கி படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்படும், கல்விக்கடன், விவசாய கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #Vaiko
பிரபல இந்தி நடிகை ஊர்மிளா மடோன்கர்(வயது 45). ‘ரங்கீலா’ படம் மூலம் புகழ் பெற்ற இவர் தமிழில் கமல்ஹாசனுடன் இணைந்து இந்தியன் படத்தில் நடித்துள்ளார். பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியில் இணைய விரும்பிய நடிகை ஊர்மிளா, இது தொடர்பாக மும்பை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சஞ்சய் நிரூபத்தை சந்தித்து ஏற்கனவே உறுதி செய்தார்.

காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் மற்றும் நிலைப்பாட்டின் மீது நம்பிக்கை உள்ளதால் கட்சியில் இணைந்ததாகவும், தேர்தல்களுக்காக இணையவில்லை என்றும் ஊர்மிளா கூறியிருந்தார்.
இந்நிலையில் நடிகை ஊர்மிளா வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் மும்பை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுவார் என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அதிகாரப்பூர்வமான அறிக்கையை வெளியிட்டுள்ளது. #LokSabhaElections2019 #Urmila #Congress
பாராளுமன்ற தேர்தலையொட்டி கன்னியாகுமரி தொகுதியில் 54 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
பணப்பட்டுவாடாவை தடுக்க பறக்கும்படை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். நிலையான கண்காணிப்பு அதிகாரி சரஸ்வதி தலைமையிலான குழுவினர் இன்று காலை நாகர்கோவில் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது திருச்சியில் இருந்து நாகர்கோவில் வந்த அரசு பஸ் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையின்போது பஸ்சில் இருந்த 2 பேரிடம் லட்சக்கணக்கில் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பணம் வைத்திருந்தவர்கள் மதுரையை சேர்ந்த கனகராஜ், திண்டுக்கல்லை சேர்ந்த முகமது அனிபா என்பது தெரிய வந்தது.
அவர்கள் 2 பேரும் பணத்தை துணியில் கட்டி இடுப்பில் சுற்றி வைத்திருந்தனர். அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
கனகராஜிடம் இருந்து ரூ.22 லட்சத்து 50 ஆயிரமும், முகமது அனிபாவிடம் இருந்து ரூ.30 லட்சமும் சிக்கியது. பணத்திற்கான ஆவணங்கள் எதுவும் இருவரிடமும் இல்லை. அந்த பணம் எங்கிருந்து யாருக்கு கொண்டு வரப்பட்டது. ஹவாலா பணமா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பறிமுதல் செய்யப்பட்ட ரூ.52½ லட்சம் பணத்தை கண்காணிப்பு குழுவினர் அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அனில்குமாரிடம் ஒப்படைத்தனர்.
பத்மநாபபுரம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் பறக்கும்படை அதிகாரிகள் நேற்று நடத்திய சோதனையில் ரூ.28 லட்சத்து 66 ஆயிரத்து 855-ம், குளச்சல் தொகுதியில் ரூ.2 லட்சமும் சிக்கி உள்ளது.
இதுவரை மாவட்டம் முழுவதும் நடந்த சோதனையில் கன்னியாகுமரி தொகுதியில் ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 190-ம், நாகர்கோவில் தொகுதியில் ரூ.39 லட்சத்து 8 ஆயிரமும், ஒரு கிலோ 300 கிராம் வெள்ளியும், 4 கார்களும், குளச்சல் தொகுதியில் ரூ.14 லட்சத்து 70 ஆயிரத்து 200, 288 கிராம் நகையும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
பத்மநாபபுரம் தொகுதியில் ரூ.59 லட்சத்து 22 ஆயிரத்து 561-ம், 39 கிராம் தங்கம், 11 வாகனங்களும், விளவங்கோடு தொகுதியில் ரூ.5 லட்சத்து 66 ஆயிரமும், கிள்ளியூர் தொகுதியில் ரூ.5 லட்சத்து 38 ஆயிரத்து 750 பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மொத்தத்தில் இன்று காலை வரை குமரி மாவட்டம் முழுவதும் ரூ.1 கோடியே 74 லட்சத்து 97 ஆயிரத்து 701 ரொக்கப்பணமும், 327 கிராம் தங்கமும், ஒரு கிலோ 300 கிராம் வெள்ளியும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. #LokSabhaElections2019
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
ஜனநாயக நாட்டில் மிகச்சாதாரணமாக மற்றவர்களுக்கு கிடைக்கிற உரிமைகளைக் கூட நாம் உச்சநீதிமன்றம் வரை சென்றுதான் பெற வேண்டிய நிலையை துரோகிகளும், தமிழ்நாட்டின் எதிரிகளும் உருவாக்கி இருக்கிறார்கள். இவ்வளவுக்கு பிறகும் நம்மை எப்படியாவது வீழ்த்திட வேண்டுமென கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதற்காக எந்த எல்லைக்கும் போவதற்கு அவர்கள் தயாராக இருக்கிறார்கள்.
பிரசாரத்திற்கும், நம்முடைய புதிய சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும் மிகக்குறைந்த கால அளவே இருக்கிறது. இப்போது நமக்கு ஒவ்வொரு மணித்துளிகளும் முக்கியம். நொடிப்பொழுதைக் கூட வீணடிக்காமல் தேர்தல் களத்தில் மட்டுமே கவனத்தை வைக்க வேண்டிய நேரம் இது. அதற்காக உங்களின் அன்பான முகங்களைத் தரிசிப்பதற்காகவும், மக்களைச் சந்தித்து நம்முடைய வரலாற்று வெற்றியை உறுதிப்படுத்துவதற்காகவும் மீண்டும் ஒரு முறை புறப்பட்டிருக்கிறேன்.
இந்த பிரச்சார பயணத்தின் போது பட்டாசு வெடிப்பதில், பொன்னாடைகள், பூங்கொத்துகள் கொடுப்பதில், புகைப்படம் எடுப்பதில் பொன்னைவிட மேலான நம்முடைய நேரத்தை நாமே விரயமாக்கிடக்கூடாது.
மேலும் தேர்தல் பிரசார பயணத்தில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் தோரணக் கொடிகளை முற்றிலுமாக தவிர்த்திடுங்கள். இதைப் போலவே நூற்றுக்கணக்கான வாகனங்களில் என்னைப் பின்தொடர்ந்து வரும் தங்களின் ஆர்வம் புரிகிறது.
ஆனால் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி மக்களுக்கு இடையூறு செய்யக்கூடாதல்லவா? அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு நம்மால் எந்தத் தொல்லையும் ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக இருங்கள். இன்னொரு பக்கம் பட்டாசுகள், வாகனங்கள் போன்றவற்றை நம்முடைய வேட்பாளர்களின் செலவுக்கணக்கில் சேர்த்துவிடுவார்கள் என்பதையும் மறந்துவிடக் கூடாது.
40 பாராளுமன்றத் தொகுதிகள், 19 சட்டப் பேரவைத் தொகுதிகள் ஆகியவற்றை மொத்தமாக வென்றெடுப்பதில் மட்டுமே உங்கள் ஒவ்வொருவரின் முழுக்கவனமும் இருக்க வேண்டும்.
நம்மை வீழ்த்தத் துடிக்கும் எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் மத்தியில் நம்முடைய ஒவ்வொரு மணித் துளியும் அந்த வெற்றிக்கு முக்கியம். உலகமே போற்றும் வெற்றியை நமதாக்கிடுவோம். நாம் புரட்சித்தலைவி அம்மாவின் பிள்ளைகள் என நாட்டுக்கு உரக்கச் சொல்லிடுவோம்.
இவ்வாறு தினகரன் கூறியுள்ளார். #LokSabhaElections2019 #AMMK #TTVDhinakaran
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான படம் ‘சர்கார்’.
அமெரிக்காவில் இருக்கும் விஜய் தேர்தலில் தன் வாக்கை செலுத்துவதற்காக இந்தியா வருவார். ஆனால் அவருடைய வாக்கை வேறு ஒருவர் செலுத்திவிட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ‘49 பி’ பிரிவைப் பயன்படுத்தி, தன் வாக்குரிமையைப் பெறுவார். பெரும்பாலானவர்களால் அறியப்படாத இந்த சட்டப்பிரிவு ‘சர்கார்’ படத்துக்கு பிறகு பரவலாக தெரியவந்தது. ‘நோட்டா’ வின் சட்டப்பிரிவான ‘49 ஓ’ போல, ‘49 பி’யும் மக்கள் கவனத்துக்கு வந்தது.
நடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தலுக்காக சர்கார் பட கதையை முன்வைத்து ‘49பி’ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது தேர்தல் ஆணையம். இந்த சட்டப்பிரிவு குறித்த சுவரொட்டி மூலம் இந்த விழிப்புணர்வுப் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது.
அதில், ‘உங்கள் வாக்கினை வேறு எவரும் பதிவு செய்துவிட்டால் கவலை வேண்டாம் 49பி பிரிவை பயன்படுத்தி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு ஆவணத்தை சமர்ப்பித்து வாக்குச் சீட்டின் மூலம் வாக்களிக்கலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும் இது தொடர்பான அறிவுரைகளை தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ஒருவர் தன்னுடைய வாக்கை செலுத்த வரும் போது அவர் வாக்கு ஏற்கனவே செலுத்தப்பட்டு விட்டதாக தெரிந்தால் முதலில் அவருடைய அடையாள ஆவணங்களை சரிபார்க்க வேண்டும். அதன் பின்னர் அவரிடம் இருந்து 2 ரூபாயை கட்டணமாக பெற்றுக்கொண்டு அவர் கூறுவது உண்மையா என்று விசாரணை நடத்த வேண்டும்.
விசாரணையில் அவர் வாக்கு கள்ள வாக்காக பதியப்பட்டு இருந்தால் அவரை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். அவர் கூறியது பொய் என்று தெரிந்தால் அவரது 2 ரூபாய் கட்டணத்தை திருப்பி அளித்துவிட்டு அவரை போலீசில் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு வாக்களிக்கும்போது அந்த வாக்கு தனியாக வாக்கு சீட்டில் தான் பதியப்பட வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவு செய்ய அனுமதிக்க கூடாது.’
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #49P #Sarkar #LokSabhaElections2019 #ElectionCommission
அதிமுகவின் கொள்கை விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது சட்ட விதிகளுக்கு புறம்பானது என்பதால் வேட்பாளர்களின் வேட்புமனுவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் கையெழுத்திட தடை விதிக்க கோரி முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், இவ்வழக்கில் இன்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். அப்போது மனுதாரர் கே.சி.பழனிசாமியின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். அதிமுக வேட்பு மனுவில் ஓபிஎஸ்,ஈபிஎஸ் கையெழுத்திட தடை விதிக்க முடியாது எனக் கூறி, மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்தனர். #DelhiHC #ADMK #KCPalanisami
கோபி:
பாராளுமன்ற தேர்தலையொட்டி ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு பகுதிகளில் சோதனை மேற் கொண்டு வருகிறார்கள்.
கோபி அருகே உள்ள கெட்டி செவியூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை பிரிவு அதிகாரி அசோக், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் குட்டியண்ணன், சுந்தர வடிவேல் மற்றும் போலீசார், அதிகாரிகள் வாகன சோதனை மேற் கொண்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.2 லட்சம் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடம் விசாரணை செய்யப்பட்டது.
கோபியில் இருந்து கேரளா மாநிலம் எர்ணாகுளம் சென்றதாகவும், கேராளாவுக்கு பழைய இரும்பு சாமான்கள் வாங்க செல்வதாகவும் தெரிய வந்தது. ஆனால் அந்த பணத்துக்கு உரிய ஆவணம் இல்லாததது தெரிய வந்தது.
இதையடுத்து உரிய ஆவணம் இல்லாமல் பணம் எடுத்து சென்றதாக கூறி 2 லட்சம் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். உரிய ஆவணத்தை காண்பித்து பணத்தை பெற்று கொள்ளலாம் என தெரிவித்தனர்.
பறிமுதல் செய்த பணத்தை கோபி ஆர்.டி.ஓ. அசோகனிடம் ஒப்படைக்கப்பட்டது. #LokSabhaElections2019 #LSpolls
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடந்த 13-ந்தேதி நாகர்கோவிலில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார்.
வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு பிரசாரம் சூடுபிடித்து வரும் நிலையில் மீண்டும் ராகுல் தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்துக்கு வர இருக்கிறார்.
தி.மு.க. கூட்டணியில் புதுவை உள்பட 10 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. எனவே புதுவை மற்றும் தமிழகத்துக்கு வசதியாக ஏதாவது ஒரு நகரத்தில் ராகுல் பிரசாரத்துக்கு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
அதன்படி திருச்சியை தேர்வு செய்துள்ளனர். விருதுநகர், சிவகங்கை, தேனி ஆகிய தொகுதிகளும் அருகில் இருப்பதால் திருச்சியில் ராகுல் பிரசாரம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் (ஏப்ரல்) 10-ந்தேதி ராகுல் பிரசாரத்துக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 9 மற்றும் 10 ஆகிய இரு தேதிகளையும் பரிசீலித்து வருவதாகவும் ராகுலின் மற்ற மாநில சுற்றுப்பயணத்தின் அடிப்படையில் இரண்டில் ஒரு தேதி முடிவாகும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ராகுல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் உள்பட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது. #LokSabhaElections2019 #RahulGandhi
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
பாராளுமன்றத்தில் திறமையானவரை பிரதமராக ஆக்க வேண்டும் என்பதற்காக இந்த தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் வலிமையான கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. மோடியை மீண்டும் பிரதமராக்க அனைவரும் பாடுபட வேண்டும்.
ஸ்டாலின், அ.தி.மு.க.வை விமர்சனம் செய்து வருகிறார். மேலும் நமது கூட்டணியில் உள்ள பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாசையும் விமர்சனம் செய்து வருகிறார். அவரை கொள்கை இல்லாதவர் என்று கூறுகிறார். பா.ம.க.வினர் கொள்கையுடன் செயல்படுபவர்கள். யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பது அவர்களது முடிவு. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியை படுதோல்வி அடைய செய்வோம்.
2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை கணக்கிட்டு பார்க்கும் போது அ.தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள இந்த கூட்டணி 40-க்கு 40 கண்டிப்பாக வெற்றிபெறும்.
தி.மு.க.வினர், எங்கள் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறுகின்றனர். அழகு நிலையத்திலும், பிரியாணி கடையிலும், செல்போன் கடையிலும் பெண்களை தாக்கியவர்கள் யார் என்று எல்லாம் உங்களுக்கு தெரியும்.
கோடநாடு கொலை வழக்கில் என் மீது பொய் குற்றச்சாட்டுகள் தி.மு.க.வினர் கூறினர். இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளேன். பொய் குற்றச்சாட்டுகள் கூறியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
திருவண்ணாமலையில் காலி இடம் இருந்தால் போதும் தி.மு.க.வினர் உடனே பட்டா போடுவதாக மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் புகார் சென்றது. உடனே ஜெயலலிதா நில அபகரிப்பு பிரிவு ஒன்றை தொடங்கி நிலங்களை அபகரித்தவர்களிடம் இருந்து அதனை மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது உள்ள வழக்கில் அவரை நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கி உள்ளது. இதனால் எங்களை பற்றி பேச தி.மு.க.வினருக்கு என்ன தகுதி உள்ளது.
ஊழல் நிறைந்த ஆட்சி நடைபெறுவதாக ஸ்டாலின் கூறி வருகிறார். இதுபற்றி நான் நேருக்கு நேர் பேச தயார், அவர் என்னிடம் மேடையில் விவாதித்து பதில் அளிக்க முடியுமா?. நேர்மையான ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி தி.மு.க.

கடந்த 2 ஆண்டுகளில் அதிக போராட்டம் நடந்த மாநிலம் தமிழகம் தான். ஒரு பிரச்சினையை சமாதானம் செய்து வைத்தால் இன்னொரு பிரச்சினையை அவர்கள் தூண்டி விடுகின்றனர். ஏழை மக்களுக்கு ரூ.2 ஆயிரம் அ.தி.மு.க. அரசு வழங்கியது. தேர்தலை காரணம் காட்டி அதை தடுத்தி நிறுத்தியவர்கள் தி.மு.க.வினர். தேர்தலுக்கு பிறகு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். இந்த தேர்தலில் தி.மு.க. விற்கு மக்கள் மரண அடி கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக ஆரணி பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் செஞ்சி வி.ஏழுமலையை ஆதரித்து வந்தவாசி, செய்யாறு, ஆரணி மற்றும் போளூரில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார்.
பொய் சொல்வதற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால் அந்த பரிசை மு.க.ஸ்டாலினுக்கு தான் கொடுக்க வேண்டும். மேலும் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையும் மக்களை ஏமாற்றும் போலியான தேர்தல் அறிக்கையாகும்.
தி.மு.க.வில் கருணாநிதி, அவரது மகன் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி என்று குடும்ப அரசியல் செய்து வருகிறார்கள். 40, 50 ஆண்டுகாலமாக கட்சியில் கஷ்டப்பட்டாலும் தொண்டர்களுக்கு எந்தவித பதவியும் கிடைக்காது. ஆனால் அ.தி.மு.க. வில் சாதாரண தொண்டனுக்குகூட பெரிய பொறுப்புகள் வரும். ஏன், என்னை எடுத்து கொள்ளுங்கள் நான் ஒரு சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். ஒரு விவசாயி முதல்- அமைச்சராகிவிட்டான், நாம் ஆகவில்லையே என்ற ஆதங்கத்தில் ஸ்டாலின் பேசி வருகிறார்.
சாதாரண விவசாயியான நான் முதல்வரானது. ஸ்டாலினுக்கு பிடிக்கவில்லை. மண் வெட்டியை பிடித்து உழைக்கும் விவசாயி முதல்வராக கூடாதா?,
தமிழகத்தில் விவசாயிகள் 65 சதவீதம் பேர் உள்ளனர். விவசாயிகள் வாழ்க்கை செழிக்க, குடிமராமத்து பணிக்காக அ.தி.மு.க. ஆட்சியில் ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார். #MKStalin #EdappadiPalaniswami
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் பா.ம.க வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்து திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-
தென்மாவட்டத்தில் பா.ம.கவுக்கு முதல்முறையாக வெற்றி கிடைக்கவேண்டும் என்பதற்காக திண்டுக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ராகுல்காந்தி அறிவித்துள்ள மாதம் ரூ.6000, ஆண்டுக்கு ரூ.72,000 உதவித்தொகை திட்டமானது மாதவருமானம் ரூ.1000-க்கு கீழ் இருப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் பார்த்தால் தமிழகத்தில் இந்த திட்டத்தின் மூலம் யாரும் பயன்பெற முடியாது.
காங்கிரஸ் ஆட்சி செய்த 60 ஆண்டுகளில் வறுமை ஒழிப்பு திட்டத்தை ஏன் நிறைவேற்றவில்லை. அதேபோல் 18 ஆண்டுகாலம் மத்திய ஆட்சியில் அங்கம் வகித்த தி.மு.க இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் செய்வதாக கூறியுள்ள திட்டங்களை அப்போது ஏன் செயல்படுத்தவில்லை.
ஊழலில் கூட்டணி அமைத்த காங்கிரஸ், தி.மு.க பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றன. பதவி சுகம், வெற்றிக்கனவு ஆகிய அனைத்தும் தேர்தலுக்கு பின் தி.மு.க மறந்துவிட வேண்டிய நிலை ஏற்படும்.
அந்த ஆசை கருணாநிதியோடு முடிந்துவிட்டது. மு.க.ஸ்டாலினுக்கு கடமையும், கண்ணியமும் இல்லை, கட்டுப்பாடும் இல்லை. ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அ.தி.மு.க கூட்டணியை ஆதரித்தால் அவர்களது கோரிக்கைகள் நிறைவேறுவதற்கு பா.ம.க துணை நிற்கும்.
இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #PMK #Ramadoss #MKStalin






