search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "GiftBox"

    பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு பரிசுப்பெட்டி சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #LokSabhaElections2019 #AMMK
    சென்னை:

    தமிழகம், புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதி நடைபெற உள்ளது.

    இந்ததேர்தலுடன் தமிழ்நாட்டில் காலியாக உள்ள 18 சட்டசபை தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் காலியாக உள்ள ஒரு சட்ட சபை தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் ஆகியவற்றுக்கும் இடையே 4 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. கமல்ஹாசனின் தனது கட்சியை தலைமை தேர்தல் ஆணையத்தில் முறைப்படி பதிவு செய்து இருப்பதால், அந்த கட்சியின் வேட்பாளர்களுக்கு பொதுவான சின்னமாக “டார்ச் லைட்” சின்னம் ஒதுக்கப்பட்டது.

    ஆனால் டி.டி.வி.தினகரன் தனது “அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்” கட்சியை தேர்தல் ஆணையத்தில் முறைப்படி இதுவரை பதிவு செய்யவில்லை. இதன் காரணமாக டி.டி. வி.தினகரன் கட்சி வேட்பாளர்கள் பொதுவான ஒரு சின்னத்தை பெறுவதில் சிக்கல் உருவானது.

    டி.டி.வி.தினகரன் தனது அ.ம.மு.க.வுடன் வேறு எந்த பெரிய கட்சியையும் கூட்டணி சேர்க்கவில்லை. எஸ்.டி.பி.ஐ. கட்சியை மட்டுமே கூட்டணியில் சேர்த்துள்ளது. எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு மத்திய சென்னை தொகுதியை தினகரன் கொடுத்துள்ளார்.

    மீதமுள்ள 39 பாராளுமன்ற தொகுதிகள், 19 சட்டசபை தொகுதிகளில் டி.டி.வி.தினகரன் தனித்துப் போட்டியிடுகிறார். இந்த 58 தொகுதிகளுக்கும் அவர் வேட்பாளர்களை அறிவித்துள்ளார். இந்த 58 வேட்பாளர்களுக்கும் தனது ராசியான சின்னமான குக்கர் சின்னத்தை ஒதுக்குமாறு டி.டி.வி.தினகரன் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது.

    ஆர்.கே.நகர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றதைத் தொடர்ந்து குக்கர் சின்னம் தமிழ்நாடு முழுவதும் பிரபலம் ஆகி இருந்ததால் அந்த சின்னம் கிடைத்தால் பிரசாரம் செய்ய எளிதாக இருக்கும் என்று தினகரன் நினைத்தார். இதற்காக அவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது.

    அப்போது, “பதிவு செய்யப்படாத கட்சிக்கு குறிப்பிட்ட ஒரு சின்னத்தை ஒதுக்க கோரும் உரிமை கிடையாது” என்று நீதிபதிகளிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கும்படி உத்தரவிட இயலாது என்று தீர்ப்பளித்தனர்.



    இதையடுத்து தங்களது வேட்பாளர்களுக்கு வேறு ஒரு பொதுச்சின்னத்தை வழங்க உத்தரவிட வேண்டும் என்று டி.டி.வி.தினகரனின் வக்கீல்கள் கோரிக்கை வைத்தனர். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், “தினகரன் கட்சிக்கு வேறு ஒரு பொதுச் சின்னம் வழங்க பரிசீலிக்கலாமே... அவர்கள் வெற்றி பெற்றால் சுயேச்சை எம்.எல்.ஏ.வாகத்தான் கருதப்படுவர்” என்று யோசனை தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்திடம் டி.டி.வி. தினகரன் தரப்பில் தனி மனு கொடுக்கப்பட்டது.

    அந்த மனு மீது தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர். சுயேச்சையாக கருதப்படும் வேட்பாளர்களுக்கு பொது சின்னம் வழங்கினால் அது தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்திவிடுமோ என்று சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்கள். இதனால் டி.டி.வி.தினகரன் கட்சிக்கு பொதுச்சின்னம் கிடைக்குமா? என்பதில் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் தலைமை தேர்தல் ஆணையத்திடம் டி.டி.வி.தினகரன் தரப்பில் நேற்று ஒரு மனு கொடுக்கப்பட்டது. அதில் அவர், “அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு பரிசுப் பெட்டி சின்னம் ஒதுக்கி தர வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

    இதை ஏற்றுக் கொண்ட இந்திய தேர்தல் ஆணையம், டி.வி.தினகரன் கட்சிக்கு பொதுவான சின்னமாக பரிசுப் பெட்டி சின்னத்தை ஒதுக்கி அறிவித்துள்ளது. தேர்தல் ஆணைய செயலாளர் பிரமோத்குமார் சர்மா இதற்கான அறிவிக்கையை வெளியிட்டுள்ளார்.  இந்த அறிவிக்கை நகல் தமிழக, புதுச்சேரி தேர்தல் அதிகாரிகளுக்கும், டி.டி.வி. தினகரனுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    தேர்தல் ஆணைய உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    சுப்ரீம்கோர்ட்டு 26-3-19 அன்று வழங்கிய அறிவுறுத்தலின் பேரிலும் மனு தாரர் (தினகரன்) பரிந்துரையின் பேரில் மனுதாரர் அமைத்துள்ள குழுவுக்கு “பரிசுப் பெட்டி” சின்னம் ஒதுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளிலும், இடைத்தேர்தல் நடக்கும் 18 தொகுதிகளிலும், புதுச்சேரியில் பாராளுமன்ற தொகுதியிலும், ஒரு சட்டசபை இடைத்தேர்தலிலும் பரிசுப் பெட்டி சின்னத்தை மனுதாரர் நிறுத்தியுள்ள வேட்பாளர்களுக்கு ஒதுக்கலாம்.

    இத்துடன் மனுதாரர் நிறுத்தியுள்ள வேட்பாளர்கள் பட்டியலை இணைத்துள்ளோம். அவர்களுக்கு பரிசுப் பெட்டி சின்னம் ஒதுக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக இன்று மாலை தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு சின்னம் ஒதுக்கப்படும்போது டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு பரிசுப் பெட்டி சின்னம் ஒதுக்கப்படும். #LokSabhaElections2019 #AMMK
    ×