என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை முதல் 2 நாட்கள் பிரசாரம் செய்கிறார். #LSPolls
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை முதல் 2 நாட்கள் பிரசாரம் செய்கிறார்.

    ஆரணி மக்களவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து வந்தவாசியில் நாளை மாலை 4.45 மணிக்கு பிரசாரத்தை தொடங்குகிறார். பின்னர், செய்யாறில் மாலை 5.30 மணிக்கும், ஆரணியில் மாலை 6.30 மணிக்கும், போளூரில் இரவு 7.30 மணிக்கு பிரசாரம் செய்கிறார்.

    பின்னர், திருவண்ணாமலை மக்களவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து கலசப்பாக்கத்தில் இரவு 8 மணிக்கு பிரசாரம் செய்கிறார். இதையடுத்து, திருவண்ணாமலையில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்று முதல்-அமைச்சர் சிறப்புரையாற்றுகிறார். அதன் பிறகு, திருவண்ணாமலையில் முதல்-அமைச்சர் தங்குகிறார்.

    இதைத் தொடர்ந்து மறுநாள் 29-ந் தேதி காலை 8.30 மணிக்கு கீழ்பென்னாத்தூரில் பேசுகிறார்.

    பின்னர், திருவண்ணாமலை மாவட்டத்தில் தனது பிரசாரத்தை முடித்து கொண்டு விழுப்புரம் மாவட்டம் செல்கிறார்.

    முதல்-அமைச்சரின் பிரசாரம் நடைபெறும் இடம் மற்றும் அவர் செல்லும் வழித்தடம், பொதுக்கூட்டம் நடைபெற உள்ள பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். #LSPolls
    பாராளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனை டெபாசிட் இழக்க செய்யுங்கள் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியுள்ளார். #thirumavalavan #ramadoss #parliamentelection

    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் சார்பில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:-

    சிதம்பரம் தொகுதியில் நான் தான் போட்டியிடுகிறேன் என நினைத்து தேர்தல் பணியாற்றுங்கள். எதிரணியில் போட்டியிடும் திருமாவளவனை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். மதுரையில் இருந்தவரை நான்தான் அழைத்து வந்து அரசியலில் ஈடுபடுத்தினேன். அதற்காக இன்று என்னை பலரும் திட்டுகிறார்கள்.

    2013-ல் தருமபுரி கலவரத்திற்கு பின்னர் நான் ஒரு அறிக்கை வெளியிட்டேன். கட்ட பஞ்சாயத்து, வன்முறை கும்பல் அட்டகாசம் தாங்க முடியவில்லை என்று சொன்னேன்.

    தலித் மக்களுக்காக நான் செய்த சேவைகளை பாராட்டி அவர்தான் எனக்கு தமிழ் குடிதாங்கி என்று பட்டம் சூட்டினார். ஆனால் தற்போது அரசியலுக்காக கேவலமாக பேசுகிறார். நான் அவரிடம் ஏன் இப்படி பேசுகிறீர்கள்? என்று கேட்டதற்கு உங்களை பேசினால் தான் நான் அரசியலில் வளர முடியும் என்கிறார்.

    விவேகானந்தர் நூறு இளைஞர்களை கொடுங்கள் இந்தியாவை மாற்றி காட்டுகிறேன் என்றார். ஆனால் இவரிடம் செல்லும் இளைஞர்களை தவறாக வழி நடத்தி சமூகத்தை சீரழிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறார். ஆதலால் இனிமேல் இது போன்ற தவறை செய்ய மாட்டேன். இதனை எண்ணி வெட்கபடுகிறோம், வேதனை படுகிறோம். ஆகையால் இந்த தேர்தலில் நீங்கள் அவருக்கு கொடுக்கும் பரிசு அவர் இந்த தொகுதியில் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்.


    இந்தியாவிலேயே முதன் முறையாக ஒரே நாளில் 7 அம்பேத்கர் சிலைகளை 30 வருடங்களுக்கு முன்பாகவே திறந்தவர் மறைந்த காடுவெட்டி குரு. அதே போன்று அவரது காடு வெட்டி கிராமத்தில் இரட்டை குவளை முறையையும் ஒழித்தார். மேலும் பெரியாரே செய்ய துணியாத அழகாபுரம் கோவில் பிரச்சனையில் இரு சமூகத்தினரையும் மாலை அணிய வைத்து உள்ளே அழைத்து சென்றார்.

    ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்திற்காக நானும், குருவும் பல்வேறு போராட்டங்களை நடத்தி இருக்கிறோம். அரியலூர் மாவட்டத்தை நானும் காடுவெட்டி குருவும் போராடி பெற்று தந்தோம். ஆட்சிக்கு வராதபோதே பல்வேறு சாதனைகளை செய்து இருக்கிறோம். இது போன்று எவ்வளவோ சொல்லி பார்த்தோம், பேசி பார்த்தோம் நடக்கவில்லை. தற்போது நல்ல சூழ்நிலை வந்து உள்ளது.

    மீண்டும் இந்தியாவின் பிரதமராக மோடி தான் வரப்போகிறார். அப்போது சிதம்பரம் தொகுதியில் முக்கிய பிரச்சினைகளான ஜெயங்கொண்டம் நிலக்கரி திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுப்போம்.

    முந்திரி விவசாயிகள் பயனடையும் வகையில் முந்திரி தொழிற்சாலை அமைக்கப்படும். சிதம்பரம்-அரியலூர் தொடர்வண்டிப் பாதை திட்டத்தை செயல்படுத்தவும் நிலக்கரி திட்டத்திற்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு, வீட்டில் ஒருவருக்கு வேலை மற்றும் அந்த நிறுவனத்தில் அந்த விவசாயிகளை பங்குதாரர்களாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் விவசாயிகளுக்கு நிலத்தை திரும்ப வழங்க வேண்டும் என்று போராடி பெற்று தருவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #thirumavalavan #ramadoss #parliamentelection

    திருச்சி பாராளுமன்ற தொகுதியில் தே.மு.தி.க., காங்கிரஸ், அ.ம.மு.க., மக்கள் நீதிமய்யம் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட 31 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. #LSPolls
    திருச்சி:

    திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட 37 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்தநிலையில் இன்று திருச்சி தொகுதி தேர்தல் பார்வையாளர் அமித்குமார் மற்றும் திருச்சி மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான சிவராசு முன்னிலையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது.

    இதில் தே.மு.தி.க., காங்கிரஸ், அ.ம.மு.க., மக்கள் நீதிமய்யம் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட 31 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்திருந்த முருகானந்தம், மாயக்கண்ணன், ரமணி, சந்தோஷ்குமார், இளங்கோவன், ராஜேந்திர குமார் ஆகியோர் தேர்தல் விதிமுறைகளின்படி உரிய ஆவணங்களை பூர்த்தி செய்து கொடுக்காததால் 6 பேரின் வேட்பு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. #LSPolls
    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை ஆதரித்து பிரியங்கா காந்தி இன்று தேர்தல் பிரசாரம் செய்தார். #Priyankacampaigns #Amethicampaign
    லக்னோ:

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் நாட்டின் பிரதான கட்சிகளான காங்கிரசும் பாஜகவும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கிழக்கு பகுதி காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி, கங்கா யாத்திரை என்ற பெயரில் படகு மூலம் சென்று கங்கையாற்றின் கரையோரங்களில் வாழும் மக்களை சந்தித்து காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

    ராகுல் காந்தியின் பாராளுமன்ற தொகுதியாக அமேதியில் இன்று அவர் கட்சி பிரமுகர்களையும் வாக்காளர்களையும் சந்தித்தார். முசாபிர்கானா பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்திலும் பங்கேற்றார்.



    அமேதி நகரில் காரில் பேரணியாக சென்று ராகுல் காந்திக்கு ஆதரவு திரட்டிய பிரியங்கா, தேர்தல் பிரசார கூட்டங்களிலும் உரையாற்றினார். இன்றிரவு வரை அமேதியில் பிரசாரம் செய்யும் அவர், நாளை சோனியா காந்தியின் பாராளுமன்ற தொகுதியான ரேபரேலியில் தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.

    வெள்ளிக்கிழமை அயோத்தி நகருக்கு செல்லும் பிரியங்கா, அங்குள்ள ஹனுமான்கர்ஹி கோவிலில் வழிபாடு செய்து தனது பிரசாரத்தை தொடங்கவுள்ளார். #Priyankacampaigns #Amethicampaign
    மத்திய அரசிடம் தமிழக அரசை குறைந்த விலையில் அ.தி.மு.க. அடகு வைத்து விட்டது. அதனை மீட்க வேண்டும் என்று கி. வீரமணி பேசியுள்ளார். #veeramani #tngovt #federalgovernment

    நாகப்பட்டினம்:

    மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நாகை அவரி திடலில் நேற்று பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    டெல்லியில் இருக்கக் கூடிய ஆட்சியை  காலி செய்ய நேரம் வந்துவிட்டது. மத்திய அரசிடம் தமிழக அரசை குறைந்த விலையில் அ.தி.மு.க. அடகு வைத்து விட்டது. தமிழ் நாட்டை மீட்கவும், இந்தியாவை காக்கவும் அனைத்து மக்களும் மதசார்பற்ற கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

    மோடி வித்தைக்கு முடிவு கட்டுவதற்குதான் இந்த தேர்தல் வந்துள்ளது. பா.ஜனதா ஆட்சியில் கடந்த 2017-2018 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் ரூ,4 கோடியே 70 லட்சம் பேர் வேலை இல்லாமல் திண்டாடி வருகிறார்கள். அ.தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் நடக்காது.

    வறட்சி உள்ளிட்ட பிரச்சினையால் இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டு 2015-ம் ஆண்டில் 12,602 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். 2016 - ம் ஆண்டு கணக்கெடுப்பில் 16,400 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இனி தேர்தல்கள் நடக்காது. இந்தியாவில் சர்வாதிகார ஆட்சி தான் நடக்கும் .

    இவ்வாறு அவர் கூறினார். #veeramani #tngovt #federalgovernment

    பாராளுமன்ற தேர்தலில் மோடி மீண்டும் பிரதமர் ஆவது உறுதி என்று அரியாங்குப்பத்தில் நடந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் இல.கணேசன் பேசியுள்ளார். #pmmodi #ilaganesan

    புதுச்சேரி:

    பா.ஜனதா கட்சியின் அரியாங்குப்பம் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் தவளக்குப்பத்தில் நடந்தது. கூட்டத்தில் பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றிபெறுவது உறுதி. எங்கள் ஆட்சியில் ஊழல் இல்லை. சிறைக்கு சென்றவர்கள், செல்லப்போகிறவர்கள் என இணைந்து கூட்டணி வைத்துள்ளனர்.

    சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்துள்ளார். வேட்பாளரை கைது செய்ய முடியாது. தேர்தல் வரை அவர்கள் வெளியில் இருக்கலாம். எந்த மாகாணத்திலும் எதிர் கட்சியில் உள்ளவர்கள் காங்கிரசுடன் கூட்டணி வைக்கவில்லை. அப்படியே சேர்ந்தாலும் ராகுல்தான் பிரதமர் என யாரும் கூற வில்லை.

    ஆனால், தமிழகத்தில் ஸ்டாலின் மட்டும் தான் ராகுல் காந்தி பிரதமர் என கூறுகிறார். விழிப்பாக இருந்து தப்பு செய்கிறவர்கள் யார் என்று பார்க்க வேண்டும். செல்லும் இடமெல்லால் மோடி, மோடி என்கின்றனர். மோடி மீண்டும் பிரதமர் ஆவது உறுதி.

    இவ்வாறு அவர் பேசினார். #pmmodi #ilaganesan

    பிரபல இந்திய நடிகை ஊர்மிளா இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து ராகுல் காந்தி வரவேற்றார். #LokSabhaElections2019 #Urmila #Congress
    புதுடெல்லி:

    பிரபல இந்தி நடிகை ஊர்மிளா மடோன்கர்(வயது 45). ‘ரங்கீலா’ படம் மூலம் புகழ் பெற்ற இவர் தமிழில் கமல்ஹாசனுடன் இணைந்து இந்தியன் படத்தில் நடித்துள்ளார். தற்போது பாராளுமன்றத் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியில் இணைய விரும்பிய நடிகை ஊர்மிளா, இது தொடர்பாக மும்பை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சஞ்சய் நிரூபத்தை சந்தித்து  உறுதி செய்தார்.

    இதையடுத்து டெல்லியில் காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தியை சந்தித்து அவர் முன்னிலையில் கட்சியில் இணைந்தார். அவருக்கு ராகுல் காந்தி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மேலும், கட்சி வளர்ச்சிக்கு சிறப்பாக பணியாற்றும்படி வாழ்த்தினார். ராகுல் காந்தியுடனான இந்த சந்திப்பின்போது எடுத்த புகைப்படத்தை காங்கிரஸ் கட்சி டுவிட்டர் மூலம் வெளியிட்டு உறுதி செய்துள்ளது.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, காங்கிரஸ் கட்சியின் கொள்கையை பரப்பி, கட்சியை வலுப்படுத்தும் பணியில் நடிகை ஊர்மிளா ஈடுபடுவார் என்றார்.



    காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் மற்றும் நிலைப்பாட்டின் மீது நம்பிக்கை உள்ளதால் கட்சியில் இணைந்ததாகவும், தேர்தல்களுக்காக இணையவில்லை என்றும் ஊர்மிளா கூறினார்.

    ஊர்மிளா மும்பை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #LokSabhaElections2019  #Urmila #Congress
    தென் சென்னை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தனை ஆதரித்து சோழிங்கநல்லூர் தொகுதி கந்தன்சாவடி பகுதியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு திரட்டினார். #LSPolls #edappadipalaniswami
    சென்னை:

    அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் செய்து வருகிறார். தென் சென்னை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தனை ஆதரித்து சோழிங்கநல்லூர் தொகுதி கந்தன்சாவடி பகுதியில் இன்று காலை திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு திரட்டினார்.

    பிரசாரத்தின்போது முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ‘அம்மா அரசின் திட்டங்களால் பயன்பெற்ற மக்கள் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பார்கள். ஏழை மக்களின் நலன் காக்க தொடர்ந்து அரசு பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகிறது. இத்தொகுதி மக்களின் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவர் ஜெயவர்தன். அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியாக வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள்.’

    இவ்வாறு அவர் பேசினார். #LSPolls #ADMK #edappadipalaniswami
    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கும். பா.ஜ.க.வின் கூட்டணி கொள்கை பிடிக்கவில்லை என்று சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார். #subramanianswamy #bjp #parliamentelection

    அவனியாபுரம்:

    பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி, மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்டவேண்டும் என்று 2 முறை மத்திய அரசிடம் கூறினேன். 2001ல் சரத்யாதவ் அமைச்சராக இருந்த போது மத்திய அமைச்சரவை முடிவு எடுத்தது. அப்போது தமிழக அரசு ஒப்புதல் அளிக்கவில்லை.

    பிரபுல் படேல் விமான நிலைய திறப்பு விழாவில், முத்துராமலிங்க தேவரின் பெயரை கூற முயன்ற போது முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலவரம் வரும் என தடுத்தார்.

    தமிழக முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் இருந்த போது மதுரை விமான நிலையத்திற்கு முத்து ராமலிங்க தேவர் பெயர் சூட்ட அனுப்பிய திட்டத்தை நிராகரித்தவர் ஓ.பி.எஸ்.தான்.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கும். பா.ஜ.க.வின் கூட்டணி கொள்கை பிடிக்கவில்லை. தனிப்பட்ட முறையில் போட்டியிடத்தான் எனக்கு விருப்பம்.


    ராகுல்காந்தி தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி ஏழைகளுக்கு ரூ.72 ஆயிரத்தை எங்கிருந்து கொடுப்பார்? வங்கியில் இருந்தா கொடுப்பார்?

    இவ்வாறு அவர் கூறினார். #subramanianswamy #bjp #parliamentelection

    தினகரன் கட்சிக்கு சின்னம் ஒதுக்கும் வரை சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்க வேண்டாம் என்று அலுவலர்களுக்கு தேர்தல் கமி‌ஷன் உத்தரவிட்டுள்ளது. #AMMK #TTVdhinakaran #ElectionCommission
    சென்னை:

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட சசிகலாவும், டி.டி.வி.தினகரனும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்கள்.

    இந்த கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலாவும், துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனும் உள்ளனர்.

    அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பெற வேண்டும் என்று அவர்கள் முயற்சி செய்தனர். ஆனால் அவர்களுக்கு அந்த சின்னம் கிடைக்கவில்லை.

    இதன் காரணமாக டி.டி.வி.தினகரன் சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் போது குக்கர் சின்னத்தில் நின்றார். அந்த குக்கர் சின்னம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி கொடுத்தது.

    இதன் காரணமாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு நிரந்தரமாக குக்கர் சின்னம் பெற முடிவு செய்யப்பட்டது. ஆனால் குக்கர் சின்னத்தை வழங்க தேர்தல் ஆணையம் சம்மதிக்கவில்லை.

    இதையடுத்து பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதி இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கக் கோரி சசிகலாவும், டி.டி.வி.தினகரனும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை கடந்த 2 தினங்களாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்பு நடந்தது.

    டி.டி.வி.தினகரன் சார்பில் மூத்த வக்கீல்கள் கபில்சிபல், அபிஷேக் மனுசிங்வி, ராஜா செந்தூர்பாண்டியன் ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள். தேர்தல் ஆணையம் சார்பில் அதன் வக்கீல் அமீர்சர்மா ஆஜராகி வாதாடினார். மேலும் தேர்தல் ஆணையத்தின் முதுநிலை முதன்மை செயலாளர் வில் பர்ட்டும் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

    அப்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பதிவு செய்யப்பட்ட கட்சி இல்லை என்பதால் சின்னத்தை ஒதுக்க இயலாது என்று தேர்தல் ஆணையம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதை சுப்ரீம்கோர்ட்டு நீதி பதிகள் ஏற்றுக் கொண்டனர்.

    நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், “மக்கள் பிரதிநிதித்துவம் சட்டத்தின்படி பிர‌ஷர் குக்கர் சின்னத்தை தங்களுக்கு பிரத்யேகமாக ஒதுக்கும்படி மனுதாரர்கள் கேட்பதை ஏற்க இயலாது” என்று அறிவித்தனர். இதனால் டி.டி.வி.தினகரனுக்கு குக்கர் சின்னம் கிடைக்காது என்பது உறுதியாகி இருக்கிறது.

    இதையடுத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்கள் அனைவருக்கும் வேறு ஏதாவது ஒரு சின்னத்தை ஒதுக்கி தர உத்தரவிட வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. இதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.

    இது தொடர்பாக நீதிபதிகள் கூறுகையில், “அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்கள் அனைவருக்கும் ஏதாவது ஒரு பொது சின்னம் ஒதுக்குவதற்கு தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும். பொது சின்னம் ஒதுக்குவதை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் முயற்சி செய்ய வேண்டும்” என்று அறிவுறுத்தினார்கள்.

    இதைத் தொடர்ந்து நேற்று மாலை டி.டி.வி. தினகரனின் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் தேர்தல் ஆணையத்துக்கு சென்றார். அங்கு அவர் அதிகாரிகளை சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.

    அந்த மனுவில், “சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு ஏற்ப அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு விரைவில் பொது சின்னம் ஒதுக்கி அறிவிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டு பரிசீலனை செய்தது.

    இது தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று மதியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், ‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சிக்கு சின்னம் ஒதுக்கும் வரை சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்க வேண்டாம்’ என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு பொது சின்னம் கொடுப்பது பற்றிய முடிவை தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்க உள்ளது. ஏற்கனவே அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்கள் தங்களது மனுக்களில் குக்கர் சின்னத்தை ஒதுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதற்கிடையே குக்கர் சின்னத்துக்கு ஏற்பட்டுள்ள மவுசு காரணமாக பல்வேறு தொகுதிகளில் சுயேட்சைகள் குக்கர் சின்னம் வேண்டும் என்று தங்களது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளனர். இதனால் குக்கர் சின்னம் யாருக்கு கிடைக்கும் என்பது நிச்சயமற்ற நிலையில் உள்ளது.

    தமிழகம்-புதுச்சேரியில் 40 பாராளுமன்ற தொகுதிகளிலும், 19 சட்டசபை இடைத்தேர்தல் தொகுதிகளிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. அவர்களுக்கு பொது சின்னம் கிடைக்காத பட்சத்தில் தனித்தனியே சுயேட்சைகளுக்குரிய 59 சின்னங்களில் போட்டியிட வேண்டிய நிலை ஏற்படும்.

    அப்படி இல்லாமல் பொது சின்னம் கிடைத்து விட்டால் 59 தொகுதிகளிலும் டி.டி.வி.தினகரனின் கட்சியினர் ஒரே சின்னத்தில் நிற்கும் வாய்ப்பை பெறுவார்கள்.

    மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாளான 29-ந் தேதி மாலை ஒவ்வொரு தொகுதியிலும் எத்தனை வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என்ற இறுதி பட்டியல் தெரியவரும். அதன் பிறகே அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கும், சுயேட்சை வேட்பாளர்களுக்கும் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும்.

    தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்து இருப்பதால் சுயேட்சைகளுக்கு உடனடியாக சின்னம் ஒதுக்கப்படுமா? என்று கேள்விக்குறி எழுந்துள்ளது. மேலும் டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்களுக்கு பொது சின்னம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

    29-ந் தேதி மதியத்துக்குள் தெளிவான முடிவு வந்து விட்டால் சின்னம் ஒதுக்கீடு சுமூகமாக முடியும். #AMMK #TTVdhinakaran #ElectionCommission
    மத்திய சென்னையில் இன்று மாலை நடைபெறும் காங்கிரஸ் பிரசார கூட்டத்தில் பேசும் கே.எஸ். அழகிரி, தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொள்கிறார். #LokSabhaElections2019 #KSAlagiri
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலை யொட்டி காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தேர்தல் பிரசார பொதுக் கூட்டங்களில் பேசுகிறார். அதன் விவரம் வருமாறு:-

    இன்று மாலை 6 மணி மத்திய சென்னை பாராளுமன்றத் தொகுதி, நாளை (28-ந்தேதி) காலை 11 மணி ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்றத் தொகுதி, மாலை 6 மணி திருவள்ளூர் பாராளுமன்றத் தொகுதி பிரசார பொதுக்கூட்டம்.

    29-ந்தேதி காலை 11 மணி தேர்தல் பிரசார கையேடு வெளியீடு, சத்தியமூர்த்தி பவன்.

    அடுத்த மாதம் 1-ந்தேதி காலை 11 மணி கடலூர் பாராளுமன்றத் தொகுதி, மாலை 6 மணி கடலூர் பாராளுமன்றத் தொகுதி பிரசார பொதுக் கூட்டம், 2-ந்தேதி காலை 11 மணி சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதி திருமுட்டம், மாலை 6 மணி பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி பிரசார பொதுக்கூட்டம்.

    3-ந்தேதி காலை 11 மணி கரூர் பாராளுமன்றத் தொகுதி, மாலை 6 மணி திருச்சி பாராளுமன்ற தொகுதி.

    4-ந்தேதி காலை 11 மணி மதுரை பாராளுமன்றத் தொகுதி, மாலை 6 மணி தேனி பாராளுமன்றத் தொகுதி.

    6-ந்தேதி காலை 11 மணி தென்காசி பாராளுமன்றத் தொகுதி, மாலை 6 மணி விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி.

    7-ந்தேதி காலை 11 மணி தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதி, மாலை 6 மணி கன்னியாகுமரி பாராளுமன்றத் தொகுதி.

    8-ந்தேதி காலை 11 மணி ராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுதி, மாலை 6 மணி சிவகங்கை பாராளுமன்றத் தொகுதி.  #LokSabhaElections2019 #KSAlagiri

    மோடி அரசை வீழ்த்த மக்கள் தயாராகி விட்டனர் என்று திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். #nanjilsampath #parliamentelection

    புதுச்சேரி:

    புதுவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து தி.மு.க. பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பிரச்சாரம் செய்தார்.

    தவளகுப்பம் நான்குமுனை சந்திப்பில் தொடங்கி அரியாங்குப்பம், முதலியார்பேட்டை ஆகிய பகுதியில் நாஞ்சில் சம்பத் பிரசாரம் செய்தார்.

    கட்சி அரசியலில் இருந்து விலகி கடந்த ஓராண்டாக இலக்கிய பணியில் ஈடுபட்டிருந்தேன். தற்போது பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அரசை வீழ்த்தும் களத்தில் இல்லையென்றால் உயிரோடு இருப்பதற்கு அர்த்தமில்லை என்பதற்காக மீண்டும் தேர்தல் களத்திற்கு வந்துள்ளேன்.

    ரபேல் போர் விமானங்கள் ஒப்பந்தத்தில் ரூ.30 ஆயிரம் கோடி மோடி ஊழல் செய்துள்ளார். மோடி இந்தியாவின் பன்முகத் தன்மையை பாழ்படுத்தி விட்டார். இந்தியாவின் மதச் சார்பின்மைக்கு மாரடைப்பு வந்துவிட்டது. மோடியின் ஆட்சியை எந்த தரப்பு மக்களும் விரும்பவில்லை. மோடி அரசை வீழ்த்துவதற்கு அனைத்து தரப்பு மக்களும் தயாராகிவிட்டனர்.

     


    புதுவையில் ஆளும் அரசின் செயல்பாடுகளை கிரண்பேடி தொடர்ந்து முடக்கி வருகிறார்.

    இவ்வாறு அவர் பிரச்சாரம் செய்தார்.

    பிரச்சாரத்தை தொடர்ந்து நாஞ்சில் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தமிழகத்தில் 2-ம் இடத்தையும், எடப்பாடியின் அதிமுக 3-ம் இடத்தையும் பெறும். நான் மட்டுமே கொள்கையுள்ள அரசியல் வாதி. நான் 32 ஆண்டுகளாக ஒரே கொள்கையை பேசி வருகிறேன். இடம் மாறினாலும், தடம் மாறாமல் பயணிக்கின்ற ஒரே நபர் நான்.

    காங்கிரஸ் தி.மு.க. கூட்டணி இயல்பான கூட்டணி, இயற்கையான கூட்டணி, ரத்தமும் சதையுமான கூட்டணி. பா.ஜனதா அ.தி.மு.க. கூட்டணி எண்ணையும் தண்ணீரும் போன்றது. காங்கிரஸ் தி.மு.க. கூட்டணிக்கு மக்களிடம் அமோக வரவேற்பு உள்ளது.

    நான் பேசும் பொருள் எப்போதும் கொள்கை சார்ந்ததுதான். நான் பெரியார், அண்ணாவின் கொள்கைகளை மட்டுமே பேசுவேன். நான் இடம் மாறினாலும் தடம் மாற மாட்டேன். கருத்துக்கணிப்பில் பா.ஜனதா வெற்றி பெறும் என்பது மாய பிரசாரம். மோடிக்கு யாரும் முக்கியத்துவம் கொடுத்துவிடக்கூடாது என ஊடகத்தை எச்சரிக்கும் பொறுப்பும் எனக்கு உள்ளது.

    பா.ஜனதா கோட்டை தோற்கடிக்கப்பட்டது என்பதை கடந்த சில தேர்தல்கள் தெரிவித்துள்ளது. பா.ஜனதாவின் அத்தியாயம் முடியப்போகின்றது என்பதையே 3 மாநில தேர்தல் அறிவித்துள்ளன. தற்போது நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுக்கு பின் காங்கிரஸ் வெற்றி பெற்று ராகுல் பிரதமர் ஆவார். மோடி நாட்டைவிட்டு தப்ப பார்ப்பார். அவரை தப்ப விடமாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #nanjilsampath #parliamentelection

    ×