search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை கலெக்டர் ரோகிணி ஆய்வு செய்த காட்சி.
    X
    பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை கலெக்டர் ரோகிணி ஆய்வு செய்த காட்சி.

    சேலத்தில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் 73 கிலோ தங்கம் - வெள்ளி பறிமுதல்

    சேலம் கொண்டலாம்பட்டியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் 73 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019
    சேலம்:

    சேலம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தலையொட்டி பறக்கும் படை அதிகாரிகள், நிலை கண்காணிப்பு குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர். உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம், நகைகள் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் இன்று காலை சேலம் கொண்டலாம்பட்டியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக டெம்போ டிராவல்ஸ் வேன் ஒன்று வந்தது.

    இந்த வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, பிளாஸ்டிக் பைகளில் 73 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவை இருந்தது.

    இதையடுத்து அதிகாரிகள் வேனில் இருந்தவர்களிடம் நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? இந்த நகையை எங்கு எடுத்து செல்கிறீர்கள்? இதற்கு உரிய ஆவணங்கள் ஏதேனும் இருக்கிறதா? என விசாரித்தனர்.

    அதற்கு அவர்கள் நாங்கள் நகைக்கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக மும்பையில் இருந்து வேனில் கொண்டு வருகின்றோம் என்று கூறி ஆவணங்களை கொடுத்தனர்.

    இந்த ஆவணத்தை பரிசோதித்தபோது, அதில் குறிப்பிட்டிருக்கும் எடையை காட்டிலும் அதிகமாக தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவை இருந்தது.

    இதனால் பறக்கும் படை அதிகாரிகள், வேனில் இருந்த தங்கம், வெள்ளியை பறிமுதல் செய்து தேர்தல் உதவி அதிகாரியிடம் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி, வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து கலெக்டர் ரோகிணி, உடனடியாக தேர்தல் உதவி அலுவலகத்திற்கு விரைந்து வந்து அங்கு பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்த தங்கம்- வெள்ளி ஆகியவற்றை பார்வையிட்டார். வேனில் நகையை கொண்டு வந்த நபர்களிடமும் விசாரணை நடத்தினார்.

    இதனை தொடர்ந்து நகைக்கான ஆவணங்கள் பற்றி விசாரிப்பதற்காக வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் உரிய வரி செலுத்தப்பட்டு இருக்கிறதா? என விசாரித்து வருகின்றனர். #LokSabhaElections2019

    Next Story
    ×