என் மலர்
திருவண்ணாமலை
- கார் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து நிகழ்ந்திருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
- விபத்து குறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் காட்டுக்குளம் பகுதி அருகே காரும், பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
புதுச்சேரியில் இருந்து பெங்களூரு சென்று கொண்டிருந்த கார், திருவண்ணாமலையில் இருந்து சென்னை சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது மோதியது. கார் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து நிகழ்ந்திருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
விபத்தில் உயிரிழந்த 4 பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து குறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாய்தகராறு முற்றி ஒருவரையொருவர் ஆபாசமான வார்த்தைகளால் திட்டிக்கொண்டு கொடூரமாக தாக்கிக்கொண்டனர்.
- இவர்களது சண்டையை அங்கிருந்தவர்கள் தடுக்க முயன்றும் அவர்கள் தொடர்ந்து தாக்கிக் கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பகுதியில் மாமியார்-மருமகள் ஆகியோர் சண்டையிட்ட வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
லாடவரம் மதுரா கொள்ளுமேடு பகுதியை சேர்ந்தவர்கள் சக்கரவர்த்தி- சின்னபாப்பா தம்பதி. இவர்களது 2 மகன்களுக்கும் திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சின்னபாப்பா தனது விளைநிலத்தில் அமர்ந்திருந்த நிலையில், மூத்த மருமகள் ராஜேஸ்வரியுடன் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வாய்தகராறு முற்றி ஒருவரையொருவர் ஆபாசமான வார்த்தைகளால் திட்டிக்கொண்டு கொடூரமாக தாக்கிக்கொண்டனர்.
இவர்களது சண்டையை அங்கிருந்தவர்கள் தடுக்க முயன்றும் அவர்கள் தொடர்ந்து தாக்கிக் கொண்டனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.
- கோவிலை சுத்தம் செய்யும் பணியில் 16 பெண் பணியாளர்கள் தற்காலிகமாக பணியாற்றி வருகின்றனர்.
- பெண் ஊழியர் ஒருவர் ஆடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பல்வேறு பணிகளில் 300-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
பொறியியல் துறையில் வரைவாளராக சதீஷ் என்பவர் பணியாற்றி வருகிறார். மேலும் இவர் பல்வேறு பொறுப்புகளில் உள்ளார்.
கோவிலை சுத்தம் செய்யும் பணியில் 16 பெண் பணியாளர்கள் தற்காலிகமாக பணியாற்றி வருகின்றனர். பெண் ஊழியர் ஒருவர் ஆடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
அதில் சதீஷ் பெண்களிடம் ஆபாசமாக பேசி மனரீதியாகவும் தொல்லை கொடுப்பதாக கூறியிருக்கிறார்.
மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலை உள்ளது என தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் விசாரணை நடத்தினர். அதனை தொடர்ந்து அதிகாரி சதீஷ் சஸ்பெண்டு செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- இங்குள்ள கட்சிகள் தேர்தல் நேரம் வரும் போதெல்லாம் புதிய நாடகங்களை அரங்கேற்றுகிறார்கள்.
- இவ்வளவு நாள் இருந்துவிட்டு கச்சத்தீவு மீட்க தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள்.
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ஆஜரானார்.
நீட் தேர்வு ஒழிப்பு சம்பந்தமாக நடத்தப்படும் அனைத்து கட்சி கூட்டம் திட்டமிட்டு ஏமாற்றும் வேலை. இது ஒரு நாடகம். நீட் கொண்டு வந்தது காங்கிரஸ். அவர்கள் கூட இருந்தது தி.மு.க.
அப்போதெல்லாம் எதிர்க்கவில்லை இப்போது தேர்தல் வரும் நேரத்தில் நீட் தேர்வை ஒழிக்க போவதாக நாடகமாடுகிறார்கள். நீட் தேர்வை ஒழிக்க முடியாது எனக் கூறியவர்களும் அவர்கள்தான். இது அவர்களுக்கு உறுதியாக தெரியும். இதற்கு மாற்று வழி தான் யோசிக்க வேண்டும்.
ஒரு தேர்வை கொண்டு வரும் போதே மாணவர்கள் பாதிக்கப்படுவார்களா? என யோசித்து இருக்க வேண்டும்.ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவு எரிந்து விடும். நாசமாகிவிடும் என்பது குறித்து எல்லாம் யோசித்திருக்க வேண்டும். வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் நம்முடைய மாநிலத்தில் அதிக மாணவ மாணவர்கள் நீட் தேர்வால் இறக்கிறார்கள்.
தேர்தல் நேரத்தில் நீட் தேர்வை ஒழிக்கும் ரகசியம் எங்களுக்கு தெரியும். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ஒழித்து விடுவோம் என்றார்கள்.
4 வருடம் எந்த வித தீர்மானமும் கொண்டு வரவில்லை. தற்போது தேர்தல் நெருங்குவதால் நீட் தேர்வு குறித்து பேசுகிறார்கள். மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்திருப்போம் என்கிறார்கள். இஸ்லாமிய கைதிகள் விடுதலைக்கு ஆளுநர் கையெழுத்து போடவில்லை என்கிறார்கள்.
கடந்த தேர்தலின் போது குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்றார்கள். அதற்கு பிறகு தகுதி உடைய பெண்களுக்கு மட்டும்தான் வழங்கப்படும் என்று கூறி விட்டனர். தேர்தல் நேரத்திலேயே ஏன் இதனை கூறவில்லை.
தமிழகத்தில் பள்ளிகளில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. புதுக்கோட்டை அருகே பொன் நகரம் என்ற இடத்தில் 300 மாணவிகள் படித்து வரும் பள்ளியில் கழிவறை வசதி இல்லை. மரத்தடியில் படிக்கிறார்கள். அரசு பள்ளிகளை மேம்படுத்தாமல் ரூ.200 கோடி 300 கோடியில் நூலகம் கட்டி எந்த பயனும் இல்லை.
மதுரையில் உள்ள நூலகத்தில் காவலாளி தவிர வேறு யாரும் இல்லை. காதல் ஜோடிகள் அமர்ந்து பேசும் பாதுகாப்பான இடமாக அது மாறி உள்ளது.
தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர் சோகமாக உள்ளது. இதற்கு அழுவது புலம்புவது போராடுவதை தவிர வேறு வழியில்லை. உரிமை இழப்பது உயிரை இழப்பது தமிழர். இதில் நமக்கான ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தவில்லை. இதற்கான மாற்றம் வரத்தான் செய்யும்.
ஒருவன் தண்ணியடிப்பான், சலம்புவான். ஆடு, மாடுகளை திருடுவான். பெண்களை கையை பிடித்து இழுப்பான். திடீரென கோவிலில் திருவிழா வந்துவிட்டால் காப்பு கட்டிக் கொள்வான்.
அவனும் சாமி ஆடி நல்லவனாக நடந்து கொள்வான். அது போல தான் இங்குள்ள கட்சிகள் தேர்தல் நேரம் வரும் போதெல்லாம் புதிய நாடகங்களை அரங்கேற்றுகிறார்கள். இவ்வளவு நாள் இருந்துவிட்டு கச்சத்தீவு மீட்க தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள். இது திட்டமிட்ட நாடகம் என்பது அனைவருக்கும் தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மே மாதம் 15-ந்தேதிக்குள் மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் தமிழில் பெயர் பலகை இருக்க வேண்டும்.
- பிற மொழிகளில் பெயர் பலகைகள் இருந்தால் அபராதம் விதிக்கப்படும்.
திருவண்ணாமலை :
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பள்ளி - கல்லூரிகளில் உள்ள பெயர் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும்.
தமிழில் பெயர்ப்பலகை வைப்பவர்கள் ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளில் குறிப்பிடப்படும் வார்த்தைகளை தமிழ் எழுத்தை விட சிறிய அளவில் வைக்க வேண்டும்.
வருகின்ற மே மாதம் 15-ந்தேதிக்குள் மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் தமிழில் பெயர் பலகை இருக்க வேண்டும். பிற மொழிகளில் பெயர் பலகைகள் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
- தமிழக அரசியலில் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு விசிக துருப்புசீட்டாக உள்ளது.
- திமுக கூட்டணியை உடைப்பதற்கு சிலர் கூலி வாங்கிக்கொண்டு வேலை செய்து வருகிறார்கள்.
விசிக மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் தென்பள்ளிபட்டில் விசிக தேர்தல் அங்கீகார வெற்றி விழா நடைபெற்றது.
விழாவில் கவுதம புத்தர், அம்பேத்கர், அன்னை மீனாம்பாள், அன்னை சாவித்திரி பாய் பூலே, அன்னை ரமாபாய் ஆகியோரின் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
விசிக தேர்தல் அங்கீகார வெற்றி விழாவில் திருமாவளவன் கூறியதாவது:-
* திமுக கூட்டணியை உடைப்பதற்கு சிலர் கூலி வாங்கிக்கொண்டு வேலை செய்து வருகிறார்கள். அதற்கு நாம் ஒருபோதும் இடம்கொடுத்து விடக்கூடாது.
* தமிழ்நாட்டில் காலூன்ற நினைக்கும் பாஜக, முதலில் அதிமுகவை தான் பலவீனப்படுத்த நினைக்கும். தப்பித்தவறி பாஜகவுடன் கூட்டணி வைத்தால் எடப்பாடி பழனிச்சாமியின் கதை முடிந்துவிடும்.
* தமிழக அரசியலில் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு விசிக துருப்புசீட்டாக உள்ளது.
* விசிகவிற்கு எத்தனை சீட்டு கிடைக்கும். 6 சீட்டு 7, 8 ஆகுமா என்று கேட்கிறார்கள். 6 சீட்டு 10 சீட்டு ஆனாலும் 20 சீட்டு ஆனாலும் நாங்கள் ஆட்சியை பிடிக்க போவதில்லை. ஆனால் நாங்கள் இருக்கும் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு நாங்கள் வலுவான ஒரு சக்தி என்பதை வரும் தேர்தலிலும் நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துவோம்.
- பார்த்திபன் கனவு, கனா கண்டேன் போன்ற பல வெற்றி படங்களில் ஸ்ரீகாந்த் நடித்திருந்தார்.
- கோவிலில் இருந்த ரசிகர்கள் ஸ்ரீகாந்த் உடன் புகைப்படங்கள் எடுத்து கொண்டனர்.
ரோஜாக்கூட்டம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீகாந்த். இதை தொடர்ந்து பார்த்திபன் கனவு, கனா கண்டேன் போன்ற பல வெற்றி படங்களில் அவர் நடித்திருந்தார்.
அண்மையில் இவர் நடிப்பில் வெளியான 'கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்' என்ற திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகர் ஸ்ரீகாந்த் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்திருக்கிறார். பின்னர் கோவிலில் இருந்த ரசிகர்கள் அவருடன் புகைப்படங்கள் எடுத்து கொண்டனர்.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு சரண்ராஜ், பூஜா வீட்டை விட்டு வெளியேறினர்.
- வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
ஆரணி:
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் கணேஷ். இவருடைய மனைவி தமிழ் பிரியா. தம்பதியின் மகள் பூஜா (வயது 21). இவர் அங்குள்ள பள்ளியில் பிளஸ்-2 முடித்தார்.
இதனையடுத்து திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள நர்சிங் கல்லூரியில் சேர்ந்து நர்சிங் படித்தார். இதற்காக கஸ்தம்பாடியில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் உள்ள அவருடைய பெரியம்மா வீட்டில் தங்கி இருந்தார்.
அதே இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த சரண்ராஜ் (19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. சரண்ராஜ் பெயிண்டர் வேலை மற்றும் கூலி வேலைகளுக்கு சென்று வந்தார். தன்னைவிட 2 வயது குறைவான வாலிபராக இருந்தாலும் சரண்ராஜ் மீது பூஜாவுக்கு காதல் மலர்ந்தது.
அடிக்கடி தனிமையில் பேசி தங்களுடைய காதலை வளர்த்து வந்தனர். இந்த விவகாரம் பூஜாவின் பெற்றோருக்கு தெரிந்தது. தன்னுடைய மகள் படிப்பை கூட பார்க்காமல் பூஜாவை கும்மிடிப்பூண்டிக்கு அழைத்துச் சென்று விட்டனர். காதலனிடம் இருந்து தன்னை பிரித்து விட்டதால் பூஜா மனமுடைந்து காணப்பட்டார். எப்படியாவது காதலனை திருமணம் செய்ய வேண்டும் என முடிவு செய்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சரண்ராஜ், பூஜா வீட்டை விட்டு வெளியேறினர். மகள் காணாமல் போனதாக தமிழ் பிரியா கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பூஜாவை தேடி வந்தனர்.
வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். காதலனை கரம் பிடித்த மகிழ்ச்சியில் இனி தங்கள் காதலுக்கு எதிர்ப்பு ஏற்படாது என்ற நினைப்பில் இருவரும் கஸ்தம்பாடி இலங்கை தமிழர் மறுவாழ் முகாமுக்கு வந்தனர்.
இதற்கிடையே போலீசார் தன்னை தேடுவதை அறிந்த பூஜா காதலனுடன் பாதுகாப்பு கேட்டு ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைவதற்காக காரில் சென்று கொண்டிருந்தார்.
இது பற்றி தகவல் அறிந்த பூஜாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆரணிக்கு வந்தனர்.
அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு 10 மீட்டருக்கு முன்பாக உள்ள ஒரு கோவில் அருகே மடக்கினர்.
காரில் இருந்து காதல் ஜோடி இருவரையும் வெளியே இழுத்து வந்து அடித்து உதைத்தனர்.
சத்தம் கேட்டு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திலிருந்து போலீசார் வெளியே வந்தனர். அவர்கள் தடுக்காமல் வேடிக்கை பார்த்தனர். பூஜாவின் உறவினர்கள் சரண்ராஜை சரமாரியாக அடித்து உதைத்தனர். மேலும் பூஜாவின் தலைமுடியை பிடித்து தரதரவென இழுத்துச் சென்று அடித்தனர். அவருடைய தாய் தமிழ் பிரியா பூஜாவின் கழுத்தில் கிடந்த தாலியை அறுத்து வீசினார்.
போலீசார் கண்முன்னே சரண் ராஜை அடித்து தள்ளிவிட்டு பூஜாவை காரில் அழைத்து சென்றனர். காதல் மனைவியை மீட்க முடியாமல் சரண்ராஜ் அழுது துடித்தார். சினிமாவை மிஞ்சும் இந்த காட்சிகள் சில நிமிடங்களில் அரங்கேறி விட்டது.
பூஜாவை கஸ்தம்பாடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.
காதல் கணவனிடம் இருந்து பிரித்ததால் பூஜா மனம் உடைந்தார். வாழ்வில் விரக்தி அடைந்த அவர் உடல் முழுவதும் மண் எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவருடைய உடலில் தீப்பற்றி எரிந்தது. வலியால் அலறி துடித்தார். அவருடைய குடும்பத்தினர் தீயை அணைத்து அவரை வேலூர் பாகாயத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் 70 சதவீதத்திற்கு மேல் தீக்காயம் ஏற்பட்டதாக அங்குள்ள டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து வேலூர் சிஎம்சி ஆஸ்பத்திரிக்கு அவர் மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த பூஜாவின் உடல்நிலை முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அவரை கொண்டு போய் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பூஜா நேற்று பரிதாபமாக இறந்தார்.
பிரேத பரிசோதனைக்கு பிறகு பூஜாவின் உடல் கும்மிடிப்பூண்டியில் உள்ள அவருடைய பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து களம்பூர் போலீசார் மர்ம மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி அனைத்து மகளிர் போலீசார் கண்முன்னே இந்த கொடூரம் அரங்கேறி உள்ளது. இந்த காட்சிகளை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டுள்ளனர். நெஞ்சை பதற வைத்த இந்த காட்சிகள் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
சம்பவம் நடந்தது குறித்து ஆரணி டவுன் போலீசாருக்கு நாங்கள் தகவல் தெரிவித்துவிட்டோம் அவர்கள் வரவில்லை நாங்கள் என்ன செய்வது என அனைத்து மகளிர் போலீசார் தெரிவித்தனர். ஆனால் இந்த சம்பவம் குறித்து எந்தவிதமான தகவலும் தங்களுக்கு வரவில்லை என ஆரணி டவுன் போலீசார் தெரிவித்துள்ளனர்.
போலீசார் காதல் ஜோடி தாக்கப்படுவதை தடுத்து இருந்தால் இளம்பெண் உயிரிழப்பு நடந்திருக்காது இது கண்டிக்கத்தக்கது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
காதல் திருமணம் செய்த இளம்பெண் அணிந்து இருந்த தாலியை கழட்டி வீசிய காரணத்தால் அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆரணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரிக்கப்பட்ட காதலி தற்கொலை செய்து கொண்டதால் மனமுடைந்த சரண்ராஜ் விரக்தியில் உள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் விருதாம்பாள் உயிரிழந்துள்ளார்.
- சம்பவம் தொடர்பாக எல்லப்பன், கோபி கிருஷ்ணன், சுப்ரமணி, விவேக் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலையில் 3 சென்ட் இடத்திற்காக விருதம்பாள் என்கிற மூதாட்டி எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
படுகாயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் விருதாம்பாள் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக எல்லப்பன், கோபி கிருஷ்ணன், சுப்ரமணி, விவேக் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூதாட்டி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த எல்லப்பன் என்பவர் மற்றும் தரப்பினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
- மாசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. திருவண்ணாமலையில் மலையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். இதில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும் நாளிலும், சித்ரா பவுர்ணமி அன்றும் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
இந்த நிலையில் மாசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. பவுர்ணமி நாளை (வியாழக்கிழமை) காலை 11.40 மணிக்கு தொடங்கி மறுநாள் 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மதியம் 12.57 மணிக்கு நிறைவடைகிறது. நாளை இரவு பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரமாக கோவில் நிர்வாகத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- வேட்டவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் கொலை நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
வேங்கிக்கால்:
புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர் ஐயப்பன். பிரபல ரவுடி. இவர் நேற்று திருவண்ணாமலை அடுத்த நீலந்தாங்கல் கிராமத்தில் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து வேட்டவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை நடந்த இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. கூடுதல் போலீஸ் கொலை சம்பந்தமாக சுமார் புதுச்சேரி, விழுப்புரத்தை சேர்ந்த 15 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் கொலை நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கொலை சம்பவத்திற்கான காரணம் என்ன, கொலையாளிகள் யார், புதுச்சேரியை சேர்ந்த ரவுடி ஏன் திருவண்ணாமலை அருகில் உள்ள ஒரு கிராமத்திற்கு வந்தார் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முழுமையான விவரங்கள் விசாரணைக்கு பின்பு தெரிய வரும்.
இந்த கொலை சம்பவம் நடந்த ஏரி பகுதியில் இரவு நேரங்களில் சூதாட்டம் நடைபெறுவதாகவும், இந்த சூதாட்டத்தில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து வரும் நபர்கள் சூதாட்டத்தில் ஈடுபடுவதாகவும் அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.
- ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
- மத்திய அரசிடம் சண்டை போடுவதற்காக மக்கள் உங்களுக்கு ஆட்சியை கொடுத்தது போன்று செயல்படுவது எந்த வகையிலும் சரியில்லை.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று மாலை சசிகலா சாமி தரிசனம் செய்தார். கோவிலில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில் வழிபாடு செய்து விட்டு சாமி மற்றும் அம்பாள் சன்னதியில் நடைபெற்ற அபிஷேகத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்
பின்னர் கோவிலில் இருந்து வெளியே வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நிச்சயமாக அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும். தி.மு.க. அரசாங்கம் சரிவர செயல்படவில்லை என்பது ஒட்டுமொத்த மக்களும் அறிந்த ஒன்று. இதனை யாராலும் மறுக்க முடியாது. மீதம் உள்ள ஆட்சி காலத்தை நடத்துவதற்காக தி.மு.க. தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை கூட்டணி கட்சிக்காரர்களை வைத்துக்கொண்டு அனைத்து கட்சிக் கூட்டத்தை நடத்தி உள்ளது. மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்த இதனை பிரசார யுக்தியாக தி.மு.க.செய்து வருகிறது.
ஜெயலலிதா ஆட்சி காலத்தில் வெளிமாநிலங்களுக்கு மின்சாரம் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்பொழுது தி.மு.க.வினர் மின்சாரத்தை வெளிமாநிலத்தில் இருந்து விலைக்கு வாங்குகின்றனர். இதில் ஏதோ தவறு உள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
மேலும் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் நியமிக்கப்பட்ட டாக்டர்கள் மட்டும் தான் உள்ளனர். இவர்கள் ஆட்சிக்கு வந்தபின் 43 மாதங்களுக்கு பின்னர் தற்போது தான் 2 ஆயிரத்து 500 டாக்டர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். டாக்டர்களை மட்டும் நியமித்தால் போதாது. அங்கு செவிலியர்களையும் நியமிக்க வேண்டும். மத்திய அரசை எதிர்ப்பதையே தமிழக முதலமைச்சர் நோக்கமாக கொண்டுள்ளதால் தமிழக மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
மத்திய அரசிடம் சண்டை போடுவதற்காக மக்கள் உங்களுக்கு ஆட்சியை கொடுத்தது போன்று செயல்படுவது எந்த வகையிலும் சரியில்லை. வருகிற சட்டமன்றத் தேர்தலுக்கு முன் அ.தி.மு.க.வை ஒருங்கிணைப்போம், கட்சியை ஒருங்கிணைக்க நான் இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.






