என் மலர்
திருவண்ணாமலை
- அரசு டவுன் பஸ்சில் மகளிர் விடியல் பஸ் என ஸ்டிக்கர் ஒட்டியபடி நீல நிறத்தில் பஸ்கள் இயங்கி வருகிறது.
- இனிவரும் புதிய பஸ்களின் முன்பு பிங்க் நிறம் இருக்கும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சந்தவாசல்:
கிராமப்புறங்களில் இயக்கப்படும் தமிழக அரசின் டவுன் பஸ்களில் மகளிருக்கு கட்டணமில்லா பயண சீட்டு வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு மகளிர் விடியல் பஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.
சில பஸ்களில் மகளிர் பஸ் என உள்ளது. கிராமப்புறங்களை சேர்ந்த படிக்காத பெண்கள் பிங்க் நிற அரசு பஸ்களை அடையாளம் கண்டு கட்டண மில்லா பஸ் என தெரிந்து ஏறிச் செல்கின்றனர். இப்போது நீல நிறத்தில் விடப்பட்டுள்ள புத்தம் புதிய டவுன் பஸ்களை படிக்காத பெண்கள் அடையாளம் காண முடியவில்லை. எனவே இதில் பயணிப்பதை தவிர்த்து விடுகின்றனர்.
கண்ணமங்கலம் படவேடு அரசு டவுன் பஸ்சில் மகளிர் விடியல் பஸ் என ஸ்டிக்கர் ஒட்டியபடி நீல நிறத்தில் பஸ்கள் இயங்கி வருகிறது.
இது கட்டண மில்லா பஸ்சா, கட்டணம் உள்ள பஸ்சா என தெரியாத பெண்கள் குழம்பி இதில் ஏறுவதில்லை. அதேபோல் வேலூர் வாழியூர் அரசு டவுன் பஸ் புதியதாக விட்ட நீல நிற பஸ், இதில் மகளிர் விடியல் பஸ் ஸ்டிக்கர் இல்லாததால் கண்ணமங்கலம், வண்ணாங்குளம் பஸ் நிறுத்தங்களில் நிற்கும் படித்த, படிக்காத பெண்கள் இதில் கட்டணம் செலுத்த வேண்டுமா? வேண்டாமா? என புரியாமல் தவித்து குழப்பமடைந்து பஸ்சில் ஏறுவதை தவிர்த்து வருகின்றனர்.
எனவே இனிவரும் புதிய பஸ்களின் முன்பு பிங்க் நிறம் இருக்கும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அசைவ உணவை சாப்பிட்டு கொண்டு இருந்த நபர், நாங்கள் உள்ளூர் தான் என்று தெரிவித்தார்.
- அருணாசலேஸ்வரருக்கு அதிகாலை கலச பூஜைகள் நடைபெற்றன.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பலத்த சோதனைக்கு பிறகு பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில் ராஜகோபுரம் அருகில் உள்ள 5-ம் பிரகாரத்தில் நேற்று கணவன், மனைவியான இருவர் கோவிலின் புனிதத்தை கெடுக்கும் வகையில் அசைவ உணவான முட்டை குஸ்காவை மற்றும் சிக்கன் கிரேவி பார்சல் வாங்கி வந்து இருக்கையில் ஒய்யாரமாக அமர்ந்து சாப்பிட்டனர்.
அவ்வழியாக சென்றவர்கள் இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து அவர்கள் கோவில் ராஜகோபுரத்தில் பணியில் இருந்த போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த பெண் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த அசைவ உணவை சாப்பிட்டு கொண்டு இருந்த நபர், நாங்கள் உள்ளூர் தான். தினமும் தான் சாப்பாடு வாங்கி வந்து இங்கு சாப்பிடுவது எல்லாருக்கும் தான் தெரியும். தற்போது கையில் காசு இருந்ததால் முட்டை குஸ்கா வாங்கி வந்து சாப்பிட்டோம் என்று சாதாரணமாக பதில் அளித்தார்.
இதை கேட்டு ஆத்திரம் அடைந்த பெண் அசைவ சாப்பாடு இங்கு வந்து சாப்பிடலாமா என்று எச்சரித்தார். பின்னர் அவர்கள் கோவில் இணை ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டு கோவில் நிர்வாக அலுவலர்களால் விசாரணை நடத்தப்பட்டது. அதன் பின்னர் அவர்களை மேல் விசாரணைக்காக திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து கோவில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். தம்பதியை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து கோவில் வளாகத்தில் இன்று அதிகாலை பரிகார பூஜை செய்யப்பட்டது. அருணாசலேஸ்வரருக்கு அதிகாலை கலச பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து தம்பதி அசைவு உணவு சாப்பிட்ட இடம் உள்ளிட்ட கோவில் வளாகங்களில் புனித நீர் தெளிக்கப்பட்டது.
தம்பதியினர் கோவில் வளாகத்திற்குள் அமர்ந்து அசைவ உணவை சாப்பிடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது. இந்த சம்பவம் கோவிலில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
- பக்தர்கள் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்கின்றனர்.
- வைகாசி மாதத்தில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்கின்றனர். அதன்படி வைகாசி மாதத்தில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
வருகிற 10-ந்தேதி பகல் 12.32 மணிக்கு பவுர்ணமி தொடங்கி 11-ந்தேதி பகல் 1.52 மணி வரை நீடிக்கிறது. அந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- தென்பெண்ணை ஆற்றில் சீறிப்பாய்ந்த வெள்ளம் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீப்பத்துறை வழியாக சாத்தனூர் அணையில் பாய்ந்து வருகிறது.
- தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆற்றின் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
திருவண்ணாமலை:
கர்நாடகா மாநிலம், மைசூரு மாண்டியா உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து 2 நாட்களாக விடிய விடிய மழை பெய்தது. தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
மேலும் ஓசூர் பகுதியிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.
நேற்று அணைக்கு வினாடிக்கு 1275 கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது. இதனால் கிருஷ்ணகிரி அணைக்கு வெள்ளம் சீறிப் பாய்ந்து வருகிறது.
அணையின் பாதுகாப்பு கருதி நேற்று வினாடிக்கு 1449 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அணையில் இருந்து பாசன கால்வாய்கள், ஆற்றிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
அணையில் இருந்து ரசாயன நுரையுடன் தண்ணீர் வெளியேறியது. இதனால் கடும் துர்நாற்றம் வீசியது. இந்த நுரை அந்த பகுதியில் உள்ள தரைப்பாலம் தெரியாத அளவுக்கு மூடியது. இதனால் அப்பகுதி வழியாக கிராம பகுதிக்கு செல்லும் மக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.
தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து மேலும் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.
இதனால் கிருஷ்ணகிரி அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 51 அடியாக எட்டி உள்ளது.
இன்று காலை அணையில் இருந்து பாசன கால்வாய்கள், ஆற்றிலும் வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
அணையில் இருந்து சீறிப்பாய்ந்த வெள்ளம் அங்குள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. அணைக்கு செல்லும் பாதை தடுப்பு வைத்து அடைக்கப்பட்டது.
இதனால் பூங்கா, அணையை சுற்றிப் பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
தென்பெண்ணை ஆற்றில் சீறிப்பாய்ந்த வெள்ளம் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீப்பத்துறை வழியாக சாத்தனூர் அணையில் பாய்ந்து வருகிறது.
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக கிருஷ்ணகிரி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர் முழுவதும் அணையில் இருந்து வெளியேற்றப்படுகிறது.
இதன் காரணமாக தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆற்றின் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி அணையில் இருந்து சாத்தனூர் அணை வரை உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரை ஓரத்தில் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்.
பெரியமுத்தூர், திம்மாபுரம், சுண்டேகுப்பம், காவேரிப்பட்டிணம், கால்வேஹள்ளி, பெண்ணேஸ்வரமடம், சவுட்டஹள்ளி, தளிஹள்ளி திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீப்பத்துறை பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
119 கனஅடி கொண்ட சாத்தனூர் அணையில் தற்போது 87 அடி தண்ணீர் உள்ளது. இதனால் இந்த அணையில் இருந்து நீர் திறக்கவில்லை.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட மக்கள் அச்சப்பட தேவை இல்லை என தெரிவித்துள்ளனர்.
- சேவூர் பகுதியில் உள்ள ராமச்சந்திரன் இல்லம் மற்றும் அவரது மகன் இல்லத்திலும் சோதனை.
- 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் நடத்தி வருகின்றனர்.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சேவூரில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேவூர் பகுதியில் உள்ள ராமச்சந்திரன் இல்லம் மற்றும் அவரது மகன் இல்லத்தில் 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
- சாமானிய மனிதனாக இருப்பதையே பவராக பார்க்கிறேன்.
- தமிழ்நாட்டில் மாற்றம் வேண்டும் என்று நினைக்கக்கூடியவன்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கோவிலில் சாமி தரிசனம் செய்த பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையிடம், தேசிய அளவில் புதிய பொறுப்பு கிடைக்க வாய்ப்புள்ளதா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, அவர் கூறுகையில்,
பிரதமர் நரேந்திர மோடியின் இதயத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடம் உள்ளது.
ஆடு மாட்டோட இருக்கேன். விவசாயம் பார்க்குறேன். நேரம் கிடைச்சா கோவிலுக்கு போறேன். தேவையில்லாத வேறு வேலையை பார்க்காமல் என்னுடைய பணியை சந்தோஷமாக செய்கிறேன்.
புத்தகங்கள் படிக்க நிறைய நேரம் கிடைக்கிறது. வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கிறேன். இதிலேயே பயணிக்க வேண்டும் என விரும்புகிறேன். சாமானிய மனிதனாக இருப்பதையே பவராக பார்க்கிறேன். எதுக்கு என்னை கூண்டுக்கிளியாக நினைக்கிறீர்கள்.
மக்கள் பணி இருக்கு. ஒரு தொண்டனாக நரேந்திர மோடிக்கு பணி செய்ய வேண்டும். என்னுடைய ஆசை பெரியது. தமிழ்நாட்டில் மாற்றம் வேண்டும் என்று நினைக்கக்கூடியவன். அதற்கான காலம் வரும். அதுவரை தொண்டனாக பணி செய்துக்கொண்டிருப்பேன் என்றார்.
- தமிழக மக்களை சில அரசியல் கட்சியினர் குழப்பிக் கொண்டிருக்கின்றனர்.
- தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணி வலுவாக உள்ளது.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சாமி தரிசனம் செய்தார்.
இந்திய ஜனாதிபதி தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி உச்ச நீதிமன்றத்திற்கு சில கேள்விகளை கேட்டுள்ளார். தமிழக மக்களை சில அரசியல் கட்சியினர் குழப்பிக் கொண்டிருக்கின்றனர்.
இந்திய ஜனாதிபதி எழுப்பிய 14 கேள்விகளில் எந்த தவறும் இல்லை என்பதை தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இதுவரை அரசியல் அமைப்பு சட்டம் 143 ஐ பயன்படுத்தி ஜனாதிபதிகள் 15 முறை உச்ச நீதிமன்றத்திற்கு கேள்வி எழுப்பி உள்ளனர். 1991-ம் ஆண்டு கர்நாடக அரசு தமிழகத்திற்கு 205 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டும் என காவிரி நீர் மேலாண்மை குழு தீர்ப்பளித்தது.
அன்றைய கர்நாடக முதல்-மந்திரி பங்காரப்பா தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். அப்போது அரசியல் அமைப்பு சட்டம் 143 பயன்படுத்தப்பட்டு கர்நாடகா அரசின் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லாது என தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்தியாவில் ஜனநாயகம் சிறப்பாக உள்ளது. தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணி வலுவாக உள்ளது. தி.மு.க. கூட்டணியில் உள்ளவர்கள் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள்.
முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்திற்கு பாரத பிரதமர் இதயத்தில் தனி இடம் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கொங்கு பகுதியில் வீடு புகுந்து கொலை செய்கிறார்கள்.
தென் தமிழ்நாட்டில் ஆணவ படுகொலை நடைபெறுகிறது. சென்னையில் கூலிப்படை தாக்குதல்கள் நடைபெறுகிறது.
தமிழகம் கொலை காடாக மாறி உள்ளது. சட்டம் ஒழுங்கு அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது.
சட்டம் ஒழுங்கு காரணமாக 2026-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியை தமிழக மக்கள் வீட்டிற்கு அனுப்புவார்கள்.
இமாச்சல பிரதேசத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக அரசு நினைத்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நிலப்பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
- ஆரணி தாலுகா போலீசில் தனித்தனியாக புகார் அளிக்கப்பட்டது.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த அறியா பாடி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 36). அதே பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (64) இருவரும் உறவினர்கள்.
இவர்களுக்கு ஏற்கனவே நிலப்பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மணிகண்டன் வீட்டின் அருகே வழி ஒன்று உள்ளது.
அந்த வழியினை முள்வேலி போட்டு அடைத்தார். இதனால் அந்த வழியாக செல்பவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருவதாக தெரிகிறது. இதனால் விஸ்வநாதன் உள்பட சிலர் மணிகண்டனிடன் சென்று தகராறில் ஈடுபட்டனர். இருதரப்பு மோதலாக மாறியது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசில் தனித்தனியாக புகார் அளிக்கப்பட்டது. போலீசார் இருதரப்பையும் சேர்ந்த 19 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கழனிப்பாக்கத்தில் 100 நாள் பணியாளர்கள் ஆலமரத்தடியில் இளைப்பாறிக்கொண்டிருந்தனர்.
- தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மரக்கிளையை அகற்றி பெண் தொழிலாளர்களின் உடல்களை மீட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆலமரக்கிளை முறிந்து விழுந்து 2 பேர் உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கழனிப்பாக்கத்தில் 100 நாள் பணியாளர்கள் ஆலமரத்தடியில் இளைப்பாறிக்கொண்டிருந்தனர். அப்போது பலத்த காற்று வீசியதால் ஆலமரக்கிளை முறிந்து அங்கு அமர்ந்து இருந்தவர்கள் மீது விழுந்தது.
ஆலமரக்கிளை முறிந்து விழுந்ததில் அன்னபூரணி, வேண்டா ஆகிய 2 பெண்கள் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மரக்கிளையை அகற்றி தொழிலாளர்களின் உடல்களை மீட்டனர். உடல்களை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருவண்ணாமலையில் ரத்ததானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- வீடியோ வெளியான நிலையில் அ.தி.மு.க. செயலாளர் ஜெயசுதா விளக்கம் அளித்துள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி திருவண்ணாமலையில் ரத்ததானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மத்திய மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஜெயசுதா ரத்த தானம் செய்வது போல் கையை மட்டும் காண்பித்தபடி வீடியோ வெளியானது.
ரத்த தானம் செய்து முகாமை தொடங்கி வைப்பார் என கூறப்பட்ட நிலையில் வீடியோவுக்காக மட்டும் போஸ் கொடுத்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
ரத்த தானம் செய்வது போன்ற வீடியோ வெளியான நிலையில் இதுதொடர்பாக அ.தி.மு.க. செயலாளர் ஜெயசுதா விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
ரத்த தானம் செய்வதற்காக தயார் செய்தார்கள். எனக்கு சர்க்கரை நோய் உள்ளது. சர்க்கரை அளவு எவ்வளவு என்று கேட்டார்கள். 210 என்று சொன்னதும் ரத்தம் கொடுக்கக்கூடாது என்று சொல்லி விட்டார்கள். இதில் ஒன்றும் இல்லை.
நான் ரத்த தானம் கொடுத்ததாக பேட்டி கொடுத்தேனா? என விளக்கம் அளித்துள்ளார்.
- இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமிக்கு 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலையில் மலையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
இந்த ஆண்டிற்கான சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சித்ரா பவுர்ணமி நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8.53 மணிக்கு தொடங்கி மறுநாள் 12-ம் தேதி (திங்கட்கிழமை) இரவு 10.48 மணிக்கு நிறைவடைகிறது. இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமிக்கு 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை அருணாசலேஸ்வரர் கோவில் மாட வீதியில் அடிப்படை வசதிகள் மேற்கொள்வது தொடர்பாக கலெக்டர் தர்ப்பகராஜ் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
- 34 கோடி ரூபாய் செலவில் 4 தளங்களுடன் மினி டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது.
- ஓராண்டில் இந்த மினி டைடல் பூங்காவின் கட்டுமான பணிகளை முடிக்க தமிழ்நாடு அரசின் தொழில்துறை திட்டமிட்டுள்ளது.
திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசின் தொழில்துறை டெண்டர் கோரியுள்ளது.
திருவண்ணாமலையில் 34 கோடி ரூபாய் செலவில் 4 தளங்களுடன் மினி டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது. ஓராண்டில் இந்த மினி டைடல் பூங்காவின் கட்டுமான பணிகளை முடிக்க தமிழ்நாடு அரசின் தொழில்துறை திட்டமிட்டுள்ளது.
2-ம் நிலை நகரங்களில் தகவல் தொழில்நுட்ப வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் மினி டைடல் பூங்கா அமைக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.






