என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • சாமானிய மனிதனாக இருப்பதையே பவராக பார்க்கிறேன்.
    • தமிழ்நாட்டில் மாற்றம் வேண்டும் என்று நினைக்கக்கூடியவன்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கோவிலில் சாமி தரிசனம் செய்த பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையிடம், தேசிய அளவில் புதிய பொறுப்பு கிடைக்க வாய்ப்புள்ளதா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, அவர் கூறுகையில்,

    பிரதமர் நரேந்திர மோடியின் இதயத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடம் உள்ளது.

    ஆடு மாட்டோட இருக்கேன். விவசாயம் பார்க்குறேன். நேரம் கிடைச்சா கோவிலுக்கு போறேன். தேவையில்லாத வேறு வேலையை பார்க்காமல் என்னுடைய பணியை சந்தோஷமாக செய்கிறேன்.

    புத்தகங்கள் படிக்க நிறைய நேரம் கிடைக்கிறது. வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கிறேன். இதிலேயே பயணிக்க வேண்டும் என விரும்புகிறேன். சாமானிய மனிதனாக இருப்பதையே பவராக பார்க்கிறேன். எதுக்கு என்னை கூண்டுக்கிளியாக நினைக்கிறீர்கள்.

    மக்கள் பணி இருக்கு. ஒரு தொண்டனாக நரேந்திர மோடிக்கு பணி செய்ய வேண்டும். என்னுடைய ஆசை பெரியது. தமிழ்நாட்டில் மாற்றம் வேண்டும் என்று நினைக்கக்கூடியவன். அதற்கான காலம் வரும். அதுவரை தொண்டனாக பணி செய்துக்கொண்டிருப்பேன் என்றார்.

    • தமிழக மக்களை சில அரசியல் கட்சியினர் குழப்பிக் கொண்டிருக்கின்றனர்.
    • தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணி வலுவாக உள்ளது.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சாமி தரிசனம் செய்தார்.

    இந்திய ஜனாதிபதி தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி உச்ச நீதிமன்றத்திற்கு சில கேள்விகளை கேட்டுள்ளார். தமிழக மக்களை சில அரசியல் கட்சியினர் குழப்பிக் கொண்டிருக்கின்றனர்.

    இந்திய ஜனாதிபதி எழுப்பிய 14 கேள்விகளில் எந்த தவறும் இல்லை என்பதை தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

    இதுவரை அரசியல் அமைப்பு சட்டம் 143 ஐ பயன்படுத்தி ஜனாதிபதிகள் 15 முறை உச்ச நீதிமன்றத்திற்கு கேள்வி எழுப்பி உள்ளனர். 1991-ம் ஆண்டு கர்நாடக அரசு தமிழகத்திற்கு 205 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டும் என காவிரி நீர் மேலாண்மை குழு தீர்ப்பளித்தது.

    அன்றைய கர்நாடக முதல்-மந்திரி பங்காரப்பா தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். அப்போது அரசியல் அமைப்பு சட்டம் 143 பயன்படுத்தப்பட்டு கர்நாடகா அரசின் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லாது என தீர்ப்பளிக்கப்பட்டது.

    இந்தியாவில் ஜனநாயகம் சிறப்பாக உள்ளது. தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணி வலுவாக உள்ளது. தி.மு.க. கூட்டணியில் உள்ளவர்கள் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள்.

    முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்திற்கு பாரத பிரதமர் இதயத்தில் தனி இடம் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கொங்கு பகுதியில் வீடு புகுந்து கொலை செய்கிறார்கள்.

    தென் தமிழ்நாட்டில் ஆணவ படுகொலை நடைபெறுகிறது. சென்னையில் கூலிப்படை தாக்குதல்கள் நடைபெறுகிறது.

    தமிழகம் கொலை காடாக மாறி உள்ளது. சட்டம் ஒழுங்கு அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது.

    சட்டம் ஒழுங்கு காரணமாக 2026-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியை தமிழக மக்கள் வீட்டிற்கு அனுப்புவார்கள்.

    இமாச்சல பிரதேசத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக அரசு நினைத்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நிலப்பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • ஆரணி தாலுகா போலீசில் தனித்தனியாக புகார் அளிக்கப்பட்டது.

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த அறியா பாடி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 36). அதே பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (64) இருவரும் உறவினர்கள்.

    இவர்களுக்கு ஏற்கனவே நிலப்பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மணிகண்டன் வீட்டின் அருகே வழி ஒன்று உள்ளது.

    அந்த வழியினை முள்வேலி போட்டு அடைத்தார். இதனால் அந்த வழியாக செல்பவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருவதாக தெரிகிறது. இதனால் விஸ்வநாதன் உள்பட சிலர் மணிகண்டனிடன் சென்று தகராறில் ஈடுபட்டனர். இருதரப்பு மோதலாக மாறியது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

    இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசில் தனித்தனியாக புகார் அளிக்கப்பட்டது. போலீசார் இருதரப்பையும் சேர்ந்த 19 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கழனிப்பாக்கத்தில் 100 நாள் பணியாளர்கள் ஆலமரத்தடியில் இளைப்பாறிக்கொண்டிருந்தனர்.
    • தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மரக்கிளையை அகற்றி பெண் தொழிலாளர்களின் உடல்களை மீட்டனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆலமரக்கிளை முறிந்து விழுந்து 2 பேர் உயிரிழந்தனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் கழனிப்பாக்கத்தில் 100 நாள் பணியாளர்கள் ஆலமரத்தடியில் இளைப்பாறிக்கொண்டிருந்தனர். அப்போது பலத்த காற்று வீசியதால் ஆலமரக்கிளை முறிந்து அங்கு அமர்ந்து இருந்தவர்கள் மீது விழுந்தது.

    ஆலமரக்கிளை முறிந்து விழுந்ததில் அன்னபூரணி, வேண்டா ஆகிய 2 பெண்கள் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மரக்கிளையை அகற்றி தொழிலாளர்களின் உடல்களை மீட்டனர். உடல்களை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருவண்ணாமலையில் ரத்ததானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • வீடியோ வெளியான நிலையில் அ.தி.மு.க. செயலாளர் ஜெயசுதா விளக்கம் அளித்துள்ளார்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி திருவண்ணாமலையில் ரத்ததானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மத்திய மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஜெயசுதா ரத்த தானம் செய்வது போல் கையை மட்டும் காண்பித்தபடி வீடியோ வெளியானது.

    ரத்த தானம் செய்து முகாமை தொடங்கி வைப்பார் என கூறப்பட்ட நிலையில் வீடியோவுக்காக மட்டும் போஸ் கொடுத்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    ரத்த தானம் செய்வது போன்ற வீடியோ வெளியான நிலையில் இதுதொடர்பாக அ.தி.மு.க. செயலாளர் ஜெயசுதா விளக்கம் அளித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

    ரத்த தானம் செய்வதற்காக தயார் செய்தார்கள். எனக்கு சர்க்கரை நோய் உள்ளது. சர்க்கரை அளவு எவ்வளவு என்று கேட்டார்கள். 210 என்று சொன்னதும் ரத்தம் கொடுக்கக்கூடாது என்று சொல்லி விட்டார்கள். இதில் ஒன்றும் இல்லை.

    நான் ரத்த தானம் கொடுத்ததாக பேட்டி கொடுத்தேனா? என விளக்கம் அளித்துள்ளார்.

    • இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமிக்கு 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    திருவண்ணாமலையில் மலையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

    இந்த ஆண்டிற்கான சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சித்ரா பவுர்ணமி நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8.53 மணிக்கு தொடங்கி மறுநாள் 12-ம் தேதி (திங்கட்கிழமை) இரவு 10.48 மணிக்கு நிறைவடைகிறது. இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமிக்கு 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.

    அதனால் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை அருணாசலேஸ்வரர் கோவில் மாட வீதியில் அடிப்படை வசதிகள் மேற்கொள்வது தொடர்பாக கலெக்டர் தர்ப்பகராஜ் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

    • 34 கோடி ரூபாய் செலவில் 4 தளங்களுடன் மினி டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது.
    • ஓராண்டில் இந்த மினி டைடல் பூங்காவின் கட்டுமான பணிகளை முடிக்க தமிழ்நாடு அரசின் தொழில்துறை திட்டமிட்டுள்ளது.

    திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசின் தொழில்துறை டெண்டர் கோரியுள்ளது.

    திருவண்ணாமலையில் 34 கோடி ரூபாய் செலவில் 4 தளங்களுடன் மினி டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது. ஓராண்டில் இந்த மினி டைடல் பூங்காவின் கட்டுமான பணிகளை முடிக்க தமிழ்நாடு அரசின் தொழில்துறை திட்டமிட்டுள்ளது.

    2-ம் நிலை நகரங்களில் தகவல் தொழில்நுட்ப வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் மினி டைடல் பூங்கா அமைக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

    • கார் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து நிகழ்ந்திருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
    • விபத்து குறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் காட்டுக்குளம் பகுதி அருகே காரும், பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

    புதுச்சேரியில் இருந்து பெங்களூரு சென்று கொண்டிருந்த கார், திருவண்ணாமலையில் இருந்து சென்னை சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது மோதியது. கார் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து நிகழ்ந்திருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

    விபத்தில் உயிரிழந்த 4 பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து குறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • வாய்தகராறு முற்றி ஒருவரையொருவர் ஆபாசமான வார்த்தைகளால் திட்டிக்கொண்டு கொடூரமாக தாக்கிக்கொண்டனர்.
    • இவர்களது சண்டையை அங்கிருந்தவர்கள் தடுக்க முயன்றும் அவர்கள் தொடர்ந்து தாக்கிக் கொண்டனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பகுதியில் மாமியார்-மருமகள் ஆகியோர் சண்டையிட்ட வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    லாடவரம் மதுரா கொள்ளுமேடு பகுதியை சேர்ந்தவர்கள் சக்கரவர்த்தி- சின்னபாப்பா தம்பதி. இவர்களது 2 மகன்களுக்கும் திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சின்னபாப்பா தனது விளைநிலத்தில் அமர்ந்திருந்த நிலையில், மூத்த மருமகள் ராஜேஸ்வரியுடன் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வாய்தகராறு முற்றி ஒருவரையொருவர் ஆபாசமான வார்த்தைகளால் திட்டிக்கொண்டு கொடூரமாக தாக்கிக்கொண்டனர்.

    இவர்களது சண்டையை அங்கிருந்தவர்கள் தடுக்க முயன்றும் அவர்கள் தொடர்ந்து தாக்கிக் கொண்டனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். 

    • கோவிலை சுத்தம் செய்யும் பணியில் 16 பெண் பணியாளர்கள் தற்காலிகமாக பணியாற்றி வருகின்றனர்.
    • பெண் ஊழியர் ஒருவர் ஆடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பல்வேறு பணிகளில் 300-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    பொறியியல் துறையில் வரைவாளராக சதீஷ் என்பவர் பணியாற்றி வருகிறார். மேலும் இவர் பல்வேறு பொறுப்புகளில் உள்ளார்.

    கோவிலை சுத்தம் செய்யும் பணியில் 16 பெண் பணியாளர்கள் தற்காலிகமாக பணியாற்றி வருகின்றனர். பெண் ஊழியர் ஒருவர் ஆடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

    அதில் சதீஷ் பெண்களிடம் ஆபாசமாக பேசி மனரீதியாகவும் தொல்லை கொடுப்பதாக கூறியிருக்கிறார்.

    மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலை உள்ளது என தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் விசாரணை நடத்தினர். அதனை தொடர்ந்து அதிகாரி சதீஷ் சஸ்பெண்டு செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • இங்குள்ள கட்சிகள் தேர்தல் நேரம் வரும் போதெல்லாம் புதிய நாடகங்களை அரங்கேற்றுகிறார்கள்.
    • இவ்வளவு நாள் இருந்துவிட்டு கச்சத்தீவு மீட்க தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள்.

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ஆஜரானார்.

    நீட் தேர்வு ஒழிப்பு சம்பந்தமாக நடத்தப்படும் அனைத்து கட்சி கூட்டம் திட்டமிட்டு ஏமாற்றும் வேலை. இது ஒரு நாடகம். நீட் கொண்டு வந்தது காங்கிரஸ். அவர்கள் கூட இருந்தது தி.மு.க.

    அப்போதெல்லாம் எதிர்க்கவில்லை இப்போது தேர்தல் வரும் நேரத்தில் நீட் தேர்வை ஒழிக்க போவதாக நாடகமாடுகிறார்கள். நீட் தேர்வை ஒழிக்க முடியாது எனக் கூறியவர்களும் அவர்கள்தான். இது அவர்களுக்கு உறுதியாக தெரியும். இதற்கு மாற்று வழி தான் யோசிக்க வேண்டும்.

    ஒரு தேர்வை கொண்டு வரும் போதே மாணவர்கள் பாதிக்கப்படுவார்களா? என யோசித்து இருக்க வேண்டும்.ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவு எரிந்து விடும். நாசமாகிவிடும் என்பது குறித்து எல்லாம் யோசித்திருக்க வேண்டும். வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் நம்முடைய மாநிலத்தில் அதிக மாணவ மாணவர்கள் நீட் தேர்வால் இறக்கிறார்கள்.

    தேர்தல் நேரத்தில் நீட் தேர்வை ஒழிக்கும் ரகசியம் எங்களுக்கு தெரியும். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ஒழித்து விடுவோம் என்றார்கள்.

    4 வருடம் எந்த வித தீர்மானமும் கொண்டு வரவில்லை. தற்போது தேர்தல் நெருங்குவதால் நீட் தேர்வு குறித்து பேசுகிறார்கள். மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்திருப்போம் என்கிறார்கள். இஸ்லாமிய கைதிகள் விடுதலைக்கு ஆளுநர் கையெழுத்து போடவில்லை என்கிறார்கள்.

    கடந்த தேர்தலின் போது குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்றார்கள். அதற்கு பிறகு தகுதி உடைய பெண்களுக்கு மட்டும்தான் வழங்கப்படும் என்று கூறி விட்டனர். தேர்தல் நேரத்திலேயே ஏன் இதனை கூறவில்லை.

    தமிழகத்தில் பள்ளிகளில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. புதுக்கோட்டை அருகே பொன் நகரம் என்ற இடத்தில் 300 மாணவிகள் படித்து வரும் பள்ளியில் கழிவறை வசதி இல்லை. மரத்தடியில் படிக்கிறார்கள். அரசு பள்ளிகளை மேம்படுத்தாமல் ரூ.200 கோடி 300 கோடியில் நூலகம் கட்டி எந்த பயனும் இல்லை.

    மதுரையில் உள்ள நூலகத்தில் காவலாளி தவிர வேறு யாரும் இல்லை. காதல் ஜோடிகள் அமர்ந்து பேசும் பாதுகாப்பான இடமாக அது மாறி உள்ளது.

    தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர் சோகமாக உள்ளது. இதற்கு அழுவது புலம்புவது போராடுவதை தவிர வேறு வழியில்லை. உரிமை இழப்பது உயிரை இழப்பது தமிழர். இதில் நமக்கான ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தவில்லை. இதற்கான மாற்றம் வரத்தான் செய்யும்.

    ஒருவன் தண்ணியடிப்பான், சலம்புவான். ஆடு, மாடுகளை திருடுவான். பெண்களை கையை பிடித்து இழுப்பான். திடீரென கோவிலில் திருவிழா வந்துவிட்டால் காப்பு கட்டிக் கொள்வான்.

    அவனும் சாமி ஆடி நல்லவனாக நடந்து கொள்வான். அது போல தான் இங்குள்ள கட்சிகள் தேர்தல் நேரம் வரும் போதெல்லாம் புதிய நாடகங்களை அரங்கேற்றுகிறார்கள். இவ்வளவு நாள் இருந்துவிட்டு கச்சத்தீவு மீட்க தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள். இது திட்டமிட்ட நாடகம் என்பது அனைவருக்கும் தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மே மாதம் 15-ந்தேதிக்குள் மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் தமிழில் பெயர் பலகை இருக்க வேண்டும்.
    • பிற மொழிகளில் பெயர் பலகைகள் இருந்தால் அபராதம் விதிக்கப்படும்.

    திருவண்ணாமலை :

    திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பள்ளி - கல்லூரிகளில் உள்ள பெயர் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும்.

    தமிழில் பெயர்ப்பலகை வைப்பவர்கள் ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளில் குறிப்பிடப்படும் வார்த்தைகளை தமிழ் எழுத்தை விட சிறிய அளவில் வைக்க வேண்டும்.

    வருகின்ற மே மாதம் 15-ந்தேதிக்குள் மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் தமிழில் பெயர் பலகை இருக்க வேண்டும். பிற மொழிகளில் பெயர் பலகைகள் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

    ×