என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவண்ணாமலை விபத்து"

    • ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி மூதாட்டி மீது மோதி கவிழ்ந்தது.
    • இந்த விபத்தால் திருவண்ணாமலை- திண்டிவனம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    திருவண்ணாமலை அருகே சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது மோதாமல் இருக்க லாரியை திருப்பியபோது, அதே லாரி மோதியதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    திருவண்ணாமலை- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும் சாலையாகும். இந்த நிலையில், சென்னையில் இருந்து கர்நாடகாவிற்கு 16ஆயிரம் லிட்டர் கொள்ளவு டீசல் லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது, திருவண்ணாமலை அடுத்த அரசம்பட்டில் லாரி வருவதை கவனிக்காத மூதாட்டி கனகாம்பரம் (70) என்பவர் சாலையை கடக்க முயன்றார்.

    மூதாட்டி மீது லாரியை மோதாமல் இருக்க திருப்பியபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி மூதாட்டி மீது மோதி கவிழ்ந்தது. இதில் மூதாட்டி கனகாம்பரம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்தில் லாரி கவிழ்ந்து டீசர் ஆறாக ஓடியதால், கிராம மக்கள் கேன், குடம் உள்ளிட்டவற்றில் டீசலை நிரப்பிச் சென்றனர். இந்த விபத்தால் திருவண்ணாமலை- திண்டிவனம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

    • கார் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து நிகழ்ந்திருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
    • விபத்து குறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் காட்டுக்குளம் பகுதி அருகே காரும், பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

    புதுச்சேரியில் இருந்து பெங்களூரு சென்று கொண்டிருந்த கார், திருவண்ணாமலையில் இருந்து சென்னை சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது மோதியது. கார் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து நிகழ்ந்திருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

    விபத்தில் உயிரிழந்த 4 பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து குறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பஸ் எதிர்பாராதவிதமாக சாலை ஓரத்தில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், தீயணைப்பு துறையினர் படுகாயம் அடைந்த பக்தர்களை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    வந்தவாசி,பிப்.2-

    திருவள்ளுவர் மாவட்டம் திருத்தணி அடுத்த கீழ்நெடுங்கள் கிராமத்தைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தனியார் பஸ் மூலம் மேல்மருவத்தூர் கோவிலுக்கு நேற்று நள்ளிரவு சென்று கொண்டிருந்தனர்.

    பஸ்சை டிரைவர் தினேஷ் ஓட்டிச் சென்றார். இந்த நிலையில் வந்தவாசி-மேல்மருவத்தூர் சாலையில் பிருதூர் கிராமம் அருகே பஸ் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது.

    அப்போது முன்னாள் சென்று கொண்டிருந்த அரசு பஸ்சை முந்த முயன்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பஸ் எதிர்பாராத விதமாக சாலை ஓரத்தில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 15-க்கும் மேற்பட்ட பக்தர்கள் படுகாயம் அடைந்தனர்.

    இது குறித்து அந்த வழியாக சென்றவர்கள் வந்தவாசி போலீசாருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், தீயணைப்பு துறையினர் படுகாயம் அடைந்த பக்தர்களை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேல் சிகிச்சைக்காக 4 பேரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சாலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு விபத்தில் நடந்து குறிப்பிடத்தக்கது. திண்டிவனம் ஆரணி, வேலூர், புறவழி சாலையில், சாலை போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அடிக்கடி விபத்து நடப்பதால் பொதுமக்கள் சாலை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியுள்ளனர்.* * *பஸ் கவிழ்ந்து கிடந்த காட்சி.

    • இடிபாடுகளுக்குள் சிக்கி காரில் பயணம் செய்த சக்திவேல், காமாட்சி இளையராஜா ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • விபத்து குறித்து திருவண்ணாமலை தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் அருகே உள்ள பெரியகல்லப்பாடிபுதூர் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 29). அதே பகுதியை சேர்ந்த துரை மனைவி சித்ரா (24), விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள கொடுக்கப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மனைவி இந்திரா (44) ஆகியோர் இவரது உறவினர்களாவர்.

    பெரியகல்லப்பாடியில் உள்ள இவர்களது உறவினர் இறந்ததையொட்டி துக்கம் விசாரிக்க இந்திரா வந்திருந்தார். அவரையும் சித்ராவையும் தனது மோட்டார்சைக்கிளில் ஏற்றிக்கொண்டு பெரிய கல்லப்பாடிக்கு விக்னேஷ் புறப்பட்டார்.

    வெறையூர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது வேலூரிலிருந்து திருவனந்தபுரத்துக்கு சென்ற அரசு விரைவு பஸ் இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் இந்திரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த சித்ரா, விக்னேஷ் ஆகிய இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே அவர்கள் இறந்துவிட்டனர். இது குறித்து வெறையூர் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் காமாட்சி (வயது 40). இரவது மகன் சக்திவேல் (15). சக்திவேலுக்கு உடல்நிலை சரியில்லாததால் திருவண்ணாமலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இன்று காலை ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டிற்கு திரும்பினார். காரில் சக்திவேல், காமாட்சி, செல்வம் (42), சஞ்சய் (13) ஆகியோர் சென்றனர்.

    காரை இளையராஜா (28) ஓட்டி சென்றார். கோளாப்பாடி அருகே கார் சென்ற போது கோயம்புத்தூரிலிருந்து சென்னை நோக்கி சென்ற லாரியும்-காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

    இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி காரில் பயணம் செய்த சக்திவேல், காமாட்சி இளையராஜா ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    செல்வம், சஞ்சய் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.

    அவர்கள் திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த விபத்து குறித்து திருவண்ணாமலை தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வந்தவாசி அடுத்த சாலவேடு கிராமம் அருகே சென்ற போது கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்தது.
    • போலீசார் இளவரசன் மற்றும் பிரவீன் ஆகியோர் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    வந்தவாசி:

    செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அடுத்த எலப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் இளவரசன் (வயது 38).

    திருப்போரூர் அரசு போக்குவரத்து பணிமனையில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மீனாட்சி, மகள் பிரசாந்தினி (5), மகன் பிரவீன் (3½).

    இவர்கள் அனைவரும் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த பொன்னூர் கிராமத்தில் உள்ள உறவினரின் பிறந்தநாள் விழாவில் கலந்த கொள்வதற்காக குடும்பத்துடன் காரில் சென்றனர்.

    விழா முடிந்து நேற்று இரவு வீடு திரும்பி கொண்டிருந்தனர். காரை இளவரசன் ஓட்டிச்சென்றார்.

    வந்தவாசி அடுத்த சாலவேடு கிராமம் அருகே சென்ற போது கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்தது.

    இதில் இளவரசனின் மகன் பிரவீன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.

    படுகாயம் அடைந்த இளவரசன் மற்றும் அவரது மகள் பிரசாந்தினியை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே இளவரசன் பரிதாபமாக இறந்தார்.

    பிரசாந்தினிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீனாட்சி சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். மகன், கணவர் இறந்ததால் மீனாட்சி கதறி அழுதார். இது பார்த்தவர்களின் கண்களை கலங்க வைத்தது.

    இதுகுறித்து கீழ்க்கொடுங்காலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் இளவரசன் மற்றும் பிரவீன் ஆகியோர் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு ஊர் திரும்பிய போது விபத்தில் தந்தை, மகன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலை நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது.
    • படுகாயம் அடைந்தவர்களை செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    திருவண்ணாமலை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த கௌமங்கலம் பகுதியில் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இதில் வடமாநில தொழிலாளர்கள் உள்பட ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர்.

    நேற்று ஆயுத பூஜை என்பதால் நிறுவனத்தில் பூஜைகளை முடித்தனர். தொடர்ந்து அசாம் மாநிலத்தை சேர்ந்த 9 பேர் உட்பட 11 பேர் ஆயுத பூஜை விடுமுறையை கழிக்க புதுச்சேரிக்கு காரில் இன்ப சுற்றுலா சென்றனர்.

    காரை தேன்கனிக்கோட்டை கெளமங்களம் பகுதியை சேர்ந்த புனித்குமார் (வயது23) என்பவர் ஓட்டினார். சுற்றுலா முடிந்து நேற்று இரவு திரும்பிக் கொண்டிருந்தனர்.

    இரவு சுமார் 9.15 மணியளவில் திருவண்ணாமலை மாவட்டம், மேல் செங்கம் பகுதியில் உள்ள கிருஷ்ணா நகர் கூட்டு சாலையில் கிருஷ்ணகிரி நோக்கி சென்றனர். அந்தநேரத்தில் பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலை நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது.

    அப்போது எதிர்பாராத விதமாக கார் மீது பஸ் நேருக்கு நேர் மோதியது. இதில் கார் நொறுங்கியது. இதனை கண்டு பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

    இந்த கோர விபத்தில் காரில் கார் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

    மேல் செங்கம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

    படுகாயம் அடைந்தவர்களை செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    படுகாயம் அடைந்த 4 பேர் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த கோர விபத்தில் பலியானவர்கள் விவரம் வருமாறு:-

    அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பஞ்சாராய், நாராயணன்,

    ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி மகன் காமராஜ், புனித்குமார் ஆகியோர் பரிதாபமாக பலியானார்கள்.

    விபத்தில் படுகாயம் அடைந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த சுப்பான், கிருஷ்ணப்பா, மிசோஸ்மிர்மி, எஸ்டிராபண்குரோ ஆகிய 4 பேரும் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    விபத்து குறித்து மேல் செங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உயிரிழந்த 7 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவான அரசு பஸ் டிரைவரை தேடி வருகின்றனர்.

    இந்த விபத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொக்லைன் எந்திரம் மூலம் கார்-பஸ்சை அப்புறப்படுத்தினர்.

    கடந்த 15-ந்தேதி இதே பகுதியில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு சென்றுவிட்டு பெங்களூருக்கு திருப்பிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலியானார்கள்.

    அந்த விபத்து நடந்த ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இந்த கோர விபத்து நடந்துள்ளது.

    செங்கம் பகுதியில் திருவண்ணாமலை, பெங்களூரு சாலையில் விபத்து எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும். சாலை நடுவில் தடுப்பு சுவர்கள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    தற்போது பனிமூட்டம் அதிகம் காணப்படுவதால் பெங்களூரு செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். 

    • ஆயுத பூஜை என்பதால் நிறுவன ஊழியர்கள் 11 பேர் காரில் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது விபத்தில் சிக்கி உள்ளனர்.
    • விபத்து தொடர்பாக கெலமங்கலம் போலீசார் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராயக்கோட்டை:

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அந்தனூர் பகுதியில் திருவண்ணாமலை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூரு நோக்கி சென்ற காரும், பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதியது.

    நேற்று முன்தினம் இரவு நடந்த இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 7 பேர் பலியானார்கள். அவர்கள் அனைவரும் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். பலியான கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா மாரம்பட்டியை சேர்ந்த கோவிந்தசாமியின் மகன் காமராஜ் (29) கார் டிரைவர் ஆவார்.

    அவர் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் அவரது அண்ணன் கிருஷ்ணன் என்பவரின் மனைவி செல்வி (37) மாரடைப்பால் உயிர் இழந்தார். அதே போல விபத்தில் பலியான புனித்குமார் (23), கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆவார். அவரும் டிரைவர் ஆவார்.

    இதே போல விபத்தில் பலியான ஒடிசா மாநிலத்தை சேர்ந்த நராயண் சேத்தி (35), அசாம் மாநிலத்தை சேர்ந்த குஞ்சா ராய் (24), நிக்லேஷ் (25), தாலு (26), விமல் (47) ஆகிய 5 பேரும் ஓசூர் அருகே அக்கொண்டப்பள்ளியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். அட்டை பெட்டிக்கு ஒட்டப்படும் பேஸ்ட் உற்பத்தி செய்ய கூடிய அந்த நிறுவனம் 20 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

    அங்கு 15 தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்த நிலையில் ஆயுத பூஜை என்பதால் நிறுவன ஊழியர்கள் 11 பேர் காரில் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது விபத்தில் சிக்கி உள்ளனர். இந்த விபத்து தொடர்பாக கெலமங்கலம் போலீசார் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவண்ணாமலை அருகே நடந்த விபத்தில் ஓசூர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிய கூடிய வட மாநில ஊழியர்கள் 5 பேர் உள்பட 7 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தீயணைப்பு துறையினர் உதவியுடன், இறந்தவர்கள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • விபத்து குறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான டிராக்டர் டிரைவரை தேடி வருகின்றனர்.

    வேங்கிக்கால்:

    ஆந்திராவைச் சேர்ந்த 4 பேர் காரில் இன்று அதிகாலை திருவண்ணாமலை நோக்கி வந்தனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் சோமாசிபாடி புதூர் அருகே சென்ற போது, முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் கார் முற்றிலுமாக நொறுங்கியது. அதில் இருந்த 4 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கினர். 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர். மேலும் ஒருவர் பலத்த காயமடைந்தார்.

    இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் ஓடிவந்தனர். படுகாயம் அடைந்தவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிறிது நேரத்தில் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கீழ்பென்னாத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    தீயணைப்பு துறையினர் உதவியுடன், இறந்தவர்கள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான டிராக்டர் டிரைவரை தேடி வருகின்றனர்.

    விபத்தில் பலியான 4 பேரும் 30 முதல் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர்கள். அவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை-பெங்களூரு சாலையில் அடிக்கடி விபத்து நடப்பதால், ஆங்காங்கே எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும். சாலை நடுவில் தடுப்பு சுவர்கள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    தற்போது பனிமூட்டம் அதிகம் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். கார் விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • டேங்கர் லாரியின் இருந்த கிளீனர் கீழே குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலையில் இருந்து சிமெண்டு கலவை ஏற்றி கொண்டு இன்று அதிகாலை டேங்கர் லாரி திருவண்ணாமலை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தர்மபுரி நோக்கி சென்று கொண்டிருந்தது.

    டேங்கர் லாரியை அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரகு என்பவர் ஓட்டிச் சென்றார்.

    பாச்சல் அருகே டேங்கர் லாரி சென்ற போது எதிரே வந்த மினி சரக்கு லாரி மீது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. மோதிய வேகத்தில் 2 வாகனங்களும் திடீரென தீப்பிடித்து எரிந்தன. மளமளவென தீ பரவியதால் 2 வாகனங்களும் தீயில் கருகின. வாகனங்களின் டயர்களும் வெடித்து சிதறின.

    இந்த கோர விபத்தில் மினி சரக்கு லாரியை ஓட்டி வந்த டிரைவர் பிரதாப் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். டேங்கர் லாரியின் இருந்த கிளீனர் கீழே குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    டேங்கர் லாரியை ஓட்டி வந்த ரகு தீயில் சிக்கி படுகாயம் அடைந்தார். இதுகுறித்து அந்தப்பகுதியில் சென்று கொண்டிருந்தவர்கள் பாய்ச்சல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தனிப்பிரிவு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் பார்த்திபன், சக்திவேல் ஆகியோர் தீயில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ரகுவை மீட்டனர்.

    பின்னர் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் பலியான பிரதாபின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    தகவல் அறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர் தீயில் எரிந்து கொண்டிருந்த 2 வாகனங்களையும் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மினி சரக்கு லாரி டிரைவர் தீயில் இருந்து தப்பிக்க தனது வாகனத்தின் வலது புற கதவை திறக்க முயன்றபோது கதவு திறக்க முடியாமல் போனதால் வாகனத்திலேயே உடல் கருகி பலியானது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இந்த விபத்தால் திருவண்ணாமலை-பெங்களூரு நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • ஆத்துவாம்பாடியிலிருந்து களம்பூர் நோக்கி வந்த டிராக்டர் அண்ணாமலை பைக் மீது மோதியது.
    • அண்ணாமலை பலத்த காயத்துடன் மயங்கிக்கீழே விழுந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த முக்குரும்பை ஊராட்சி மன்ற தலைவராக அண்ணாமலை (வயது 52) என்பவர் பதவி வகித்து வந்தார்.

    தி.மு.க. பிரமுகரான இவர் இன்று அதிகாலை களம்பூர் பகுதியிலிருந்து தனது வீட்டிற்கு முக்குரும்பை கிராமத்திற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது ஆத்துவாம்பாடியிலிருந்து களம்பூர் நோக்கி வந்த டிராக்டர் அண்ணாமலை பைக் மீது மோதியது.

    இதில் அண்ணாமலை பலத்த காயத்துடன் மயங்கிக்கீழே விழுந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    மருத்துவமனையில் அண்ணாமலையை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பிரேத பரிசோதனைக்காக அவரின் உடலை ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் குறித்து களம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முத்தனூர் அருகே சென்ற போது பின்னால் வந்த டிராக்டர் பைக் மீது மோதியது. இதில் 3பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.
    • குழந்தை துரைமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது.

    செங்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள தானகவுண்டம்புதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜதுரை (வயது 30).

    இவரது மனைவி மணிமேகலை (25) தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

    தம்பதிக்கு 1½ வயதில் துரைமணி என்ற குழந்தை இருந்தது. இன்று ராஜதுரை, மணிமேகலை குழந்தை துரைமணி ஆகிய 3 பேரும் பைக்கில் செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்காக சென்று கொண்டிருந்தனர்.

    முத்தனூர் அருகே சென்ற போது பின்னால் வந்த டிராக்டர் பைக் மீது மோதியது. இதில் 3பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். குழந்தை துரைமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது.

    பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய மணிமேகலையை மீட்டு ஆம்புலன்சில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    ராஜதுரை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து புதுப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×