வந்தவாசி அருகே கார் கவிழ்ந்து தந்தை-மகன் பலி

வந்தவாசி அடுத்த சாலவேடு கிராமம் அருகே சென்ற போது கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்தது.போலீசார் இளவரசன் மற்றும் பிரவீன் ஆகியோர் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வந்தவாசி அருகே கார் கவிழ்ந்து தந்தை-மகன் பலி
Published on

வந்தவாசி:

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அடுத்த எலப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் இளவரசன் (வயது 38).

திருப்போரூர் அரசு போக்குவரத்து பணிமனையில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மீனாட்சி, மகள் பிரசாந்தினி (5), மகன் பிரவீன் (3½).

இவர்கள் அனைவரும் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த பொன்னூர் கிராமத்தில் உள்ள உறவினரின் பிறந்தநாள் விழாவில் கலந்த கொள்வதற்காக குடும்பத்துடன் காரில் சென்றனர்.

விழா முடிந்து நேற்று இரவு வீடு திரும்பி கொண்டிருந்தனர். காரை இளவரசன் ஓட்டிச்சென்றார்.

வந்தவாசி அடுத்த சாலவேடு கிராமம் அருகே சென்ற போது கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்தது.

இதில் இளவரசனின் மகன் பிரவீன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.

படுகாயம் அடைந்த இளவரசன் மற்றும் அவரது மகள் பிரசாந்தினியை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே இளவரசன் பரிதாபமாக இறந்தார்.

பிரசாந்தினிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீனாட்சி சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். மகன், கணவர் இறந்ததால் மீனாட்சி கதறி அழுதார். இது பார்த்தவர்களின் கண்களை கலங்க வைத்தது.

இதுகுறித்து கீழ்க்கொடுங்காலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் இளவரசன் மற்றும் பிரவீன் ஆகியோர் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு ஊர் திரும்பிய போது விபத்தில் தந்தை, மகன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com