என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தண்ணி அடிப்பவன் திருவிழா வந்தால் நல்லவனாக நடிப்பது போல.. தேர்தல் நேரத்தில் திமுக நாடகமாடுகிறது- சீமான்
- இங்குள்ள கட்சிகள் தேர்தல் நேரம் வரும் போதெல்லாம் புதிய நாடகங்களை அரங்கேற்றுகிறார்கள்.
- இவ்வளவு நாள் இருந்துவிட்டு கச்சத்தீவு மீட்க தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள்.
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ஆஜரானார்.
நீட் தேர்வு ஒழிப்பு சம்பந்தமாக நடத்தப்படும் அனைத்து கட்சி கூட்டம் திட்டமிட்டு ஏமாற்றும் வேலை. இது ஒரு நாடகம். நீட் கொண்டு வந்தது காங்கிரஸ். அவர்கள் கூட இருந்தது தி.மு.க.
அப்போதெல்லாம் எதிர்க்கவில்லை இப்போது தேர்தல் வரும் நேரத்தில் நீட் தேர்வை ஒழிக்க போவதாக நாடகமாடுகிறார்கள். நீட் தேர்வை ஒழிக்க முடியாது எனக் கூறியவர்களும் அவர்கள்தான். இது அவர்களுக்கு உறுதியாக தெரியும். இதற்கு மாற்று வழி தான் யோசிக்க வேண்டும்.
ஒரு தேர்வை கொண்டு வரும் போதே மாணவர்கள் பாதிக்கப்படுவார்களா? என யோசித்து இருக்க வேண்டும்.ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவு எரிந்து விடும். நாசமாகிவிடும் என்பது குறித்து எல்லாம் யோசித்திருக்க வேண்டும். வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் நம்முடைய மாநிலத்தில் அதிக மாணவ மாணவர்கள் நீட் தேர்வால் இறக்கிறார்கள்.
தேர்தல் நேரத்தில் நீட் தேர்வை ஒழிக்கும் ரகசியம் எங்களுக்கு தெரியும். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ஒழித்து விடுவோம் என்றார்கள்.
4 வருடம் எந்த வித தீர்மானமும் கொண்டு வரவில்லை. தற்போது தேர்தல் நெருங்குவதால் நீட் தேர்வு குறித்து பேசுகிறார்கள். மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்திருப்போம் என்கிறார்கள். இஸ்லாமிய கைதிகள் விடுதலைக்கு ஆளுநர் கையெழுத்து போடவில்லை என்கிறார்கள்.
கடந்த தேர்தலின் போது குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்றார்கள். அதற்கு பிறகு தகுதி உடைய பெண்களுக்கு மட்டும்தான் வழங்கப்படும் என்று கூறி விட்டனர். தேர்தல் நேரத்திலேயே ஏன் இதனை கூறவில்லை.
தமிழகத்தில் பள்ளிகளில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. புதுக்கோட்டை அருகே பொன் நகரம் என்ற இடத்தில் 300 மாணவிகள் படித்து வரும் பள்ளியில் கழிவறை வசதி இல்லை. மரத்தடியில் படிக்கிறார்கள். அரசு பள்ளிகளை மேம்படுத்தாமல் ரூ.200 கோடி 300 கோடியில் நூலகம் கட்டி எந்த பயனும் இல்லை.
மதுரையில் உள்ள நூலகத்தில் காவலாளி தவிர வேறு யாரும் இல்லை. காதல் ஜோடிகள் அமர்ந்து பேசும் பாதுகாப்பான இடமாக அது மாறி உள்ளது.
தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர் சோகமாக உள்ளது. இதற்கு அழுவது புலம்புவது போராடுவதை தவிர வேறு வழியில்லை. உரிமை இழப்பது உயிரை இழப்பது தமிழர். இதில் நமக்கான ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தவில்லை. இதற்கான மாற்றம் வரத்தான் செய்யும்.
ஒருவன் தண்ணியடிப்பான், சலம்புவான். ஆடு, மாடுகளை திருடுவான். பெண்களை கையை பிடித்து இழுப்பான். திடீரென கோவிலில் திருவிழா வந்துவிட்டால் காப்பு கட்டிக் கொள்வான்.
அவனும் சாமி ஆடி நல்லவனாக நடந்து கொள்வான். அது போல தான் இங்குள்ள கட்சிகள் தேர்தல் நேரம் வரும் போதெல்லாம் புதிய நாடகங்களை அரங்கேற்றுகிறார்கள். இவ்வளவு நாள் இருந்துவிட்டு கச்சத்தீவு மீட்க தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள். இது திட்டமிட்ட நாடகம் என்பது அனைவருக்கும் தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.






